பங்குச் சந்தை பற்றித் தெரியாதவர்களுக்குக் கூட ஹர்ஷத் மேத்தாவைத் தெரிந்திருக்கும். அவர் பங்குச் சந்தை மோசடியில் ஈடுபட்டதை அறிந்திருப்பர். தொடர்ந்து பத்திரிகையில் எழுதி அந்த ஊழலை வெளிக்கொணர்ந்தவர் சுசேதா தலால் என்பது அனைவருக்கும் தெரிந்திருக்க நியாயம் இல்லை. இவர், டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் வணிகப் பத்திரிகையாளராகப் பணியாற்றிவர்.
சுசேதா தலால் பிறந்து வளர்ந்தது கர்நாடகாவில். புள்ளியியலும் சட்டமும் படித்து பார்சூன் இந்தியா பத்திரிகையில் வேலையில் சேர்ந்தார். முதலீட்டுப் பத்திரிகை அது. பிஸினஸ் ஸ்டான்டர்டு, எகனாமிக்ஸ் டைம்ஸில் வேலை பார்த்து ஆறு ஆண்டுகள் அனுபவத்துடன், டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் வணிகப் பத்திரிகையாளர் ஆனார். அங்குதான் இந்தியாவின் முதல் பெரிய பங்குச் சந்தை மோசடியைத் துப்பறியும் வாய்ப்பு கிடைத்தது.
ஹர்ஷத் மேத்தா குஜராத்தில் பிறந்து வளர்ந்தவர். ஆடைகள் விற்பனை செய்யும் சிறு வியாபாரம் செய்து கொண்டிருந்தார் அவருடைய அப்பா. வசதியற்ற பின்னணி. படிப்பும் சுமார்தான். பி.காம் படித்துவிட்டு மும்பைக்கு வேலை தேட வந்தார். எட்டாண்டுகள் ஏதேதோ வேலை பார்த்தார். எண்பதுகளில் பங்குச் சந்தை புரோகரேஜ் நிறுவனத்தில் வேலை கிடைத்தது. சூட்சுமம் புரிந்ததும் பங்குச் சந்தை புரோக்கராகப் பதிவு செய்துகொண்டு டிரேடிங்கில் ஈடுபட ஆரம்பித்தார். கிடுகிடு முன்னேற்றம். செய்திப் பத்திரிகைகளில் டிரேடிங் டிப்ஸ் கொடுத்து பொதுமக்களும் அறிந்த முகமானார். பங்குச் சந்தையின் அமிதாப் பச்சன் என்ற பட்டப்பெயரும் உண்டு.
சுசேதா டைம்ஸ் ஆஃப் இந்தியா வேலையில் சேர்ந்த அதே தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் ஹர்ஷத் மேத்தா அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் படுவேகத்தில் முன்னேறிக் கொண்டிருந்தார். பிக் புல், ரேஜிங் புல் என்றெல்லாம் தலைப்பிட்டு வணிகப் பத்திரிகைகளில், அவரைப் பற்றிச் சிறப்புக் கட்டுரைகளும் வெளியாகின. அப்படித்தான் இருவரின் பாதையும் ஒரு புள்ளியில் சந்தித்தன.
வணிகம் என்றாலே வாங்குவது, விற்பது. பங்குச்சந்தையிலும் அதுதான் நடக்கும். பொருளுக்கு பதில் நிறுவனத்தின் மதிப்பு விற்பனைப் பொருளாக இருக்கும். அதுதான் பங்குச் சந்தை. இந்த மதிப்பை ஏற்றி இறக்கி இதைக் கட்டுபடுத்துவோரை காளை, கரடி என்று இரண்டு குழுவாகப் பிரிப்பார்கள். நிறுவனப் பங்குகளின் சந்தை மதிப்பு ஏறுவதன் மூலம் லாபம் பார்ப்பவர்கள் காளைகள். இறங்குமுக வணிகத்தில் ஈடுபடுவோர் கரடிகள். இவர்கள் தங்களைப் போன்றோருடன் கூட்டணி வைத்து பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கங்களைத் தீர்மானிப்பார்கள். ஹர்ஷத் காளை வகையறா.
இந்த வணிகத்துக்கு வங்கிகள் கடன் கொடுக்கும். கடன் பத்திரம் வாங்க அடமானமாக எதையாவது கொடுக்க வேண்டும். வங்கி அதிகாரிகளை சரிகட்டி, அதிகளவு கடன் பத்திரங்கள் மூலம் பணம் பெற்றுச் சந்தையில் முதலீடு செய்து முறைகேடு செய்தார் என்பது ஹர்ஷத் செய்த குற்றம். அந்த காலகட்டத்தில் பலர் இந்த முறைகேட்டில் ஈடுபட்டிருந்தனர். சுசேதா தலால் மூலம் முதலில் வீழ்ந்தது ஹர்ஷத் மேத்தா. அடுத்தடுத்து பலர் இப்படி வெளிச்சத்துக்கு வந்து, அரசாங்கம் விதிகளைக் கடுமையாக்கி நடவடிக்கை எடுத்தது.
ஹர்ஷத் மேத்தாவின் மோசடி சோனி லைவ்-இல் வெப் தொடராக இருக்கிறது. பங்குச் சந்தை விவகாரமெல்லாம் தொழில்நுட்ப அறிவு தேவைப்படும் சங்கதிகள் போல இருக்கிறதே என்று யோசிக்கும் ஆளாக இருந்தாலும், ஸ்கேம்-1992 வெப் தொடரைப் பார்க்கலாம். சுசேதா தலால் துப்பறிந்து எப்படி இவர் இதைச் செய்கிறார் என்று தேடிச் செல்லும் காட்சிகளும் தான் கண்டறிந்ததை அவர் எடிட்டருக்கு விளக்கும் காட்சிகளும் எளிமையாக எல்லாருக்கும் புரியும்படிதான் இருக்கின்றன. ஸ்ரேயா தன்வந்திரி இந்தக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். தொடரில் சுசேதாவை விட ஹர்ஷத் மேத்தாவின் கதைதான் முதன்மையாக இருக்கும்.
அது நியாயமானதும் கூட. அவரின் கதையில் ஹீரோ, வில்லன், இரண்டுமே அவர்தான். எளிய பின்னணியில் இருந்து வந்து புகழ் ஏணியில் படு வேகமாக ஏறிக் கொண்டிருந்தார். புகழையும் பணத்தையும் முறைகேடான வழியில் சேர்த்ததுதான் தவறாகிப்போனது. ஆனால் அவர் மட்டும் அந்தத் தவறைச் செய்யவில்லை. அரசாங்க அமைப்பு, அதிகாரிகள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் எல்லாருக்கும் பங்குள்ளது. மாட்டிக் கொண்டதும் அவரை மட்டும் கெட்டவனாக்கி விட்டார்கள். எழுபதுக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிந்து அதில் நான்கில் குற்றவாளி என்று தீர்ப்பும் வந்தது. சிறை வாழ்வு, எதிர்மறை மீடியா வெளிச்சம், அதனால் ஏற்பட்ட அதிகப்படியான சட்ட கெடுபிடிகளால் அவரால் மீளவே முடியாமல் போனது. இதயக்கோளாறால் சிறையிலேயே இறந்துபோனார்.
தொடரைப் பார்க்கும்போது குற்றவாளி என்பதைத் தாண்டியும் பரிதாப உணர்வு தோன்றுகிறது. திரைக்கதை அமைக்கப்பட்ட விதத்துடன், ப்ரதிக் காந்தியின் நடிப்பையும் அதற்குக் காரணமாகச் சொல்லலாம். ஹர்ஷத் மேத்தாவாக வாழ்ந்திருக்கிறார் என்கிற கிளிஷே சொற்றொடர் நிச்சயம் பொருந்தும். இங்கே வீரப்பன் விவகாரத்தில் அவரைப் பிடிக்க வந்த காவல்துறையினர் வீரப்பனைவிட அதிக குற்றங்கள் புரிந்தனர். அவர்கள் தண்டனை ஏதுமின்றி பதவி உயர்வுதான் பெற்றார்கள். நிச்சயம் அது நியாயமில்லை. அதனால், வீரப்பன் செய்த குற்றங்கள் இல்லை என்றாகிவிடாது. அப்படித்தான் ஹர்ஷத் மேத்தா விவகாரமும்.
ஹர்ஷத் மேத்தா முறைகேடாக நடந்து கொண்டதும் அதை சுசேதா வெளிக் கொணர்ந்ததும் உண்மை. இதற்காக சுசேதா பங்குச் சந்தைக் கரடிக் கூட்டணிக்கு ஆதரவாகச் செயல்பட்டார் என்றும் சிலர் சொல்கிறார்கள். அந்தப் பக்கத்திலும் மனு மனேக் முந்த்ரா போன்ற பெரும்புள்ளிகள் கைது செய்யப்பட்டனர். ஹர்ஷத் ஏற்கனவே அடைந்திருந்த புகழால் மீடியாவும், காவல்துறையும் அவரை அதிகம் துரத்தின. இதை சுசேதாவின் தவறாகச் சொல்ல முடியாது.
இவ்விவகாரத்தில் தன் அனுபவத்தை, ‘மோசடி – யார் வென்றார்கள் யார் தப்பித்தார்கள்’ என்ற தலைப்பில் புத்தகமாகவும் வெளியிட்டார். ஸ்கேம் 1992 தொடர் இதன் அடிப்படையிலேயே உருவாக்கப்பட்டுள்ளது. மிகத் தரமான தவறவிடக்கூடாத தொடர். என்ரான் மோசடி, ஐடிபிஐ வங்கி மோசடி, கேதான் பர்கேஷ் மோசடி போன்றவை வெளிச்சத்துக்கு வந்ததிலும் சுசேதாவின் பங்கு இருக்கிறது.
செபி என்றழைக்கப்படும் ஒழுங்குமுறைக் கூட்டமைப்பு, உருவானதற்கு சுசேதாவின் எழுத்தும் ஒரு காரணம் என்பதை யாரும் மறுக்க இயலாது. அதன் தலைவரே அதானி பங்குகள் விவகாரத்தில் குற்றச்சாட்டுக்கு ஆளானார் என்பது தனிக்கதை.
கடினமாக உழைத்துப் பொருள் சேர்த்து அதைக் கொண்டு போய் பங்குச் சந்தையில் இழக்கும் பலர் இன்றும் இருக்கின்றனர். பங்குச் சந்தை எல்லாம் யாருக்கோ என்று ஒதுங்கி இருப்போர் எண்ணிக்கைதான் அதிகம். ஒதுங்கி இருந்தாலும் நாம் சேர்த்து வைக்கும் பணம், வங்கி, எல்ஐசி, மியூசுவல் பண்ட் வழியாகப் பங்குச் சந்தைக்குத்தான் போகிறது. பணம் சேர்த்து வைக்காத நபர் என்றாலும், தினசரி பயன்பாட்டில் உள்ள பொருள்களின் விலையை மறைமுகமாக நிர்ணயிக்கும் வல்லமை பங்குச்சந்தைக்கு உண்டு. இந்தியாவில், நன்றாகப் படித்து வேலையில் சேர்ந்து உயர் பதவியில் இருப்போருக்கும் பொருளாதார அறிவு குறைவுதான்.
பணம் நமக்காக உழைக்க வேண்டும் என்பது இக்காலகட்டத்தில் புகழ்வீச்சுடைய தத்துவம். இந்தியர்களின் பொருளாதாரக் கல்விக் குறைபாட்டைத் தீர்க்கும் வகையில் லாப நோக்கமற்ற அமைப்பு ஒன்றை நடத்துகிறார் சுசேதா தலால். மணிலைஃப் இணைய இதழைக் கணவருடன் இணைந்து நடத்துகிறார். கணவர் தேபஷிஸ் பாசு சார்டட் அக்கவுன்டன்ட் பணியில் முப்பதாண்டுகள் அனுபவம் உடையவர். சுசேதாவுடன் இணைந்து சில நூல்களை எழுதியிருக்கிறார். சமேலி தேவி விருது, ஃபெமினா விருது உள்படப் பல விருதுகளை வென்றுள்ளார். இந்தியாவின் உயரிய அங்கீகாரமான பத்மஸ்ரீ கொடுத்து இந்திய அரசு இவரைக் கெளரவித்துள்ளது.
முறைகேடுகளைத் தடுக்க விதவிதமான முயற்சிகள் மேற்கொண்டாலும் வெவ்வேறு வடிவத்தில் தொடர்கின்றன என்பதே உண்மை. தேசிய பங்குச் சந்தை தொடங்கப்பட்டதன் நோக்கமே முறைகேடுகளற்ற சந்தை என்பதை முன்வைத்துதான். ஆனால் அங்கும் எப்படியெல்லாம் விதிமீறல்கள் நடக்கின்றன என்பதை சுசேதாவின் நூல் சுட்டிக்காட்டுகிறது. சென்னையைச் சேர்ந்த சித்ரா ராமகிருஷ்ணா கைதுக்குப் பிறகு ஓடிடி தளங்கள் இவர் கதையையும் படமாக்கப் போகிறார்களாம். அதற்கடுத்த கதைக்கு அதானி விவகாரமும் இருக்கிறது. தொடர்ந்து இவற்றைப் பற்றிப் பேசும் நபராக சுசேதா இருக்கிறார்.
இந்தியர்களின் பொருளாதாரக் கல்வி விழிப்புணர்வுக்கும் விதிகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்வதற்கும், சுசேதா தலால் செய்யும் பணிகள் குறிப்பிடத்தக்கவை.
Scam 1992 – The Harshad Mehta Story தொடர் SonyLIV தளத்தில் இருக்கிறது.
டிரைலர் இங்கே:
படைப்பாளர்
கோகிலா
இளநிலை கணிப்பொறி அறிவியல் படித்தவர். சிறுவயதில் இருந்தே வாசிப்பில் ஆர்வம் உண்டு. புனைவுகளில் ஆரம்பித்த ஆர்வம் தற்போது பெரும்பாலும் பெண்ணியம், சமூகம், வரலாறு சார்ந்த அபுனைவு வகை புத்தகங்களின் பக்கம் திரும்பியிருக்கிறது. பயணம் செய்வது பிடிக்கும். கல்விசார்ந்த அரசுசாரா இயக்கங்களில் தன்னார்வலராகச் செயல்படுகிறார்.
ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய ‘தொழில்நுட்பம் அறிவோம்’ என்கிற தொடர், ‘இணையத் தொழில்நுட்பம் அறிவோம்’ என்கிற புத்தகமாக ஹெர் ஸ்டோரிஸ் மூலம் வெளிவந்திருக்கிறது. இது தவிர ‘உலரா உதிரம்’ என்கிற அரசியல் வரலாறு நூல் மற்றும் ‘தரையை ஓங்கி மிதித்த பட்டாம்பூச்சி’ என்கிற சிறார் நூலையும் எழுதியுள்ளார்.