நமது தமிழ்த் திரைப்படங்களும் நம் காதல் மற்றும் கூடல் வாழ்க்கையை மேம்படுத்திக்கொள்ள நமக்காற்றிவரும் தொண்டைப்(?) பற்றி இங்கே கட்டாயம் பேசியாக வேண்டும்.
பொய்யான உச்சக்கட்டப் பிரச்னையைப் பற்றி எந்த தமிழ் சினிமாவும் தீவிரமாகப் பேசியதாக எனக்குத் தெரிந்து நான் பார்த்த ஞாபகமில்லை. கதாநாயகனையோ அல்லது வில்லனையோ மயக்கி(?) அவர்களிடமிருந்து ஆதாயம் தேடும் காட்சிகளில் வேண்டுமானால் கவர்ச்சி நடனமாடும் நடிகைகள் அவ்வாறு ‘ஆ…ஊ…’ என்று உதடுகளைச் செயற்கையாகக் கடித்துக்கொண்டு வேண்டுமென்றே நடிப்பதைப் போல் காட்டியிருக்கிறார்கள்.
அல்லது கதாநாயகிகள் நடிக்கும் முதலிரவுப் பாடல்களில் அவ்வாறு படம்பிடித்திருப்பார்கள். அதுகூட ஒரு ஆணை அவள் தூண்டும் விதத்திலும், அவனுக்குக் கிளர்ச்சியையும் மகிழ்ச்சியையும் ஊட்டும் விதத்திலும் அவள் அப்படி பொய்யாக வேண்டுமென்றே நடிப்பதைப் போல் காட்டப்பட்டிருக்குமேயொழிய, ஒரு பெண்ணின் உண்மையான ஏமாற்ற உணர்வுகளை எந்த விதத்திலும் வெளிப்படுத்துவதாகப் பதிவுசெய்யப்பட்டதில்லை.
ஒருவேளை அப்படிக் காட்டிவிட்டால் அதில் நடித்துள்ள நடிகரின் ‘ஆண்மை’ பற்றிய மதிப்பிற்கு பங்கம் ஏற்பட்டுவிடும் என்ற ஆணாதிக்க மனப்பான்மையில்கூட இயக்குநர்களும் நடிகர்களும் தவிர்த்திருந்திருக்கலாம். எந்த விதமான உண்மைத்தன்மையும் அந்தக் கவர்ச்சிப் பாடல் காட்சிகளில் கூட இருந்ததில்லை. பொய்யான உச்சக்கட்டப் பிரச்னை மட்டும்தான் என்றில்லை, காதல், காமம், கணவன் மனைவி உறவு எல்லாமே ஒருவிதப் பொய் பூசுதல்களுடன்தான் நமது தமிழ்த் திரைப்படங்களில் காட்டப்பட்டு வந்துள்ளன. அதிலும் ஒரு அன்பானவனோ, பெண்ணின் மன உணர்வுகளை மதிப்பவனோ, அவளைக் காதலுடன் தாங்குபவனோ எல்லாம் ஒரு நல்ல கதாநாயகனாகக் காட்டப்படமாட்டான்.
அப்படி ஒரு கதாபாத்திரம் இருந்தாலும் அவனைக் கதாநாயகி தன் பின்னால் சுற்றத்தான் வைப்பாள். அவ்வளவு சீக்கிரம் அவனது நல்ல குணநலன்களை மதித்தோ அல்லது பாராட்டியோ பேசி அவன் பின்னால் போய்விடமாட்டாள். அப்படி தனது காதலியையோ அல்லது மனைவியையோ மிகவும் மதிக்கும் ஒரு ஆணை நம் தமிழ் சினிமாவும், சமுதாயமும் கரித்துத்தான் கொட்டியிருக்கின்றன. ”ஆம்பளைங்கற கெத்து இல்லாம, பொம்பளை பின்னாடி எப்படி சுத்தறான் பாரு, பொண்டாட்டிதாசன்” என்றெல்லாம் அவனுக்கு பலவிதமான பட்டப்பெயர்களைக் கொடுத்து அவமானமும் அசிங்கமும்தான் படுத்துகின்றன.
எந்தப் படத்திலும் அவ்வாறு தன்னை ஏளனமாகப் பேசுபவர்களைப் பார்த்து, “என் பொண்டாட்டி, நான் அவ பின்னாடி சுத்தறேன்… உங்களுக்கென்ன வந்துச்சு…?” என்று எந்தக் கதாநாயகனும் கேட்பதில்லை. உண்மையிலும் அவ்வாறு எந்த ஆணும் கேள்வி கேட்பதில்லை. ஆனால், கடைந்தெடுத்த ஒரு அயோக்கியன், வேலை வெட்டி இல்லாமல் ஊர் சுற்றுபவன், பெற்றவர்களைக்கூட மதிக்காதவன், குறைந்தபட்சம் நான்கைந்து பெண்களையாவது வன்புண்ர்ந்தவன்தான் மிகச் சிறந்த கதாநாயகனாகக் காட்டப்பட்டிருப்பான். இத்தகைய சகல கல்யாண குணங்களையுமுடைய ஒரு ஆணின் பின்னால்தான் கதாநாயகி, ‘லோ…லோ…’ எனச் சுற்றுவாள்.
சமீபத்தில் ஒளிபரப்பான சில நிகழ்ச்சிகளில்கூட, “இந்த குணங்களுடன் இருக்கும் ஒருவனைத் திருமணம் செய்து கொண்டு நான் திருத்துவேன்…” என்று முட்டாள்தனமாகப் பெண்கள் பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட முரட்டுத்தனமான ஆண்களிடம்தான் தங்களுக்கு ‘கிக்’ இருக்கிறது என்று ஒரு கூட்டம் இன்னமும் உளறிக் கொட்டிக்கொண்டுதான் இருக்கிறது. நீங்கள் திருமணம் செய்துகொண்டு அமைதியாகவும், நிம்மதியாகவும் வாழ்வதற்கு ஆசைப்படுகிறீர்களா, அல்லது இப்படிப்பட்ட ஆணைத் திருமணம் செய்துகொண்டு அவனைத் திருத்துவதுதான் வேலை என்று திரியப் போகிறீர்களா?
“பெண்கள் திருமணம் செய்து கொள்வது குடும்பம் நடத்தத்தானேயொழிய மனநலக் காப்பகம் நடத்துவதற்காகயில்லை” என்று மற்றவர்களிடம் சொல்வதற்கு முன் நாம் அதை முதலில் தெளிவாகப் புரிந்து கொள்வதே நலம். இந்தப் ‘புதிய பாதை’ கதையெல்லாம் சினிமாவிலும், நாடகத்திலும் பார்ப்பதற்கும், புத்தகங்களில் கதைகளாகப் படிப்பதற்கும் வேண்டுமானால் நன்றாக இருக்குமேயொழிய உண்மை வாழ்க்கைக்கு ஒத்து வராது என்பதை நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். அப்படிப்பட்ட ஆண்களைத் திருமணம் செய்து கொண்ட பலர் அவனைத் திருத்துவதற்கு முன்னால் தங்கள் வாழ்க்கையையே தொலைத்து விடுகிறார்கள்.
ஆண், பெண் யாராகயிருந்தாலும் பதினைந்து வயதுக்குள்ளாகவே அவர்களது குணநலன்களில் 85%கும் மேல் வடிவமைக்கப்பட்டு விடுகிறது. வாழ்க்கை அவர்களுக்குக் கற்பிக்கும் பாடங்களிலிருந்து சில சிறிய சிறிய விஷயங்களில் தன்னை மேம்படுத்திக்கொள்ளலாமேயொழிய அப்படியே தன்னைத் தலைகீழாக யாராலும் மாற்றிக்கொள்ள முடியாது. திருமணம் என்ற நிகழ்வு நடந்தவுடனேயே உங்களுக்காக ஒரு நபர் தன்னை 100% மாற்றிக் கொண்டு விடுவார் என்ற மாயையான எண்ணத்திலிருந்து முதலில் வெளியே வாருங்கள்.
அடுத்தது, அத்தகைய முரட்டுத்தனமான ஆணால்தான் உடலுறவில் சிறப்பாகச் செயல்பட முடியும் என்ற கருத்தும் மிகவும் தவறான ஒன்றுதான். ஆண், பெண் இருவருக்கும் எந்த அளவு பரஸ்பர புரிதல், காதல், அன்பு, ஒருவரையொருவர் உடலளவிலும் மனதளவிலும் திருப்தி படுத்த வேண்டியது தங்களது கடமை என்ற பொறுப்புணர்வு போன்றவை இருக்கிறதோ அவற்றைச் சார்ந்துதான் அவர்களது உடலுறவில் மகிழ்ச்சியும் திருப்தியுமிருக்கும். எனவே, நமது தமிழ் சினிமா நமக்குக் காலம் காலமாகக் கற்றுக்கொடுத்துள்ள இத்தகைய தவறானப் படங்களைப் புறக்கணியுங்கள். ஒருவேளை பொழுதுபோக்குக்காக அவற்றைப் பார்த்தாலும் உங்கள் மனதிலிருந்து அவை விதைக்கும் எதார்த்தமற்ற, பொய்யான பிம்பங்களை முற்றிலுமாக அகற்றி, இந்தப் புத்தகத்தில் கூறப்பட்டுள்ள அறிவியல் மற்றும் உளவியல் பூர்வமான விஷயங்களை உள்வாங்கி செயல்படுத்துங்கள்.
பாலியல் கல்வியைப் புகட்டும் திரைபடங்களைப் பற்றிப் பார்ப்பதற்கு முன், அந்த சொல்லைப் பற்றி நம் மக்களுக்கிருக்கும் மனநிலையைப் பற்றியும் பேசியாக வேண்டும். ‘பாலியல் கல்வி’ என்று யாராவது சொன்னாலே பெற்றோருக்கு அந்த வார்த்தையைப் பற்றிய மிகப் பெரிய குழப்பம் ஏற்பட்டுவிடுகிறது. சொல் ஒன்றுதான். ஆனால், ‘அது யாருக்கு’ என்பதைப் பொறுத்து அதன் உள்ளடக்கத்தில் பெரும் வேறுபாடுகளிருக்கின்றன என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். எப்படி உடலுறவு கொள்வது, எந்தெந்த கோணங்களில் (Positions) செய்வது என்பதைக் கற்றுத் தருவது மட்டும்தான் ‘பாலியல் கல்வி’ என்ற சொல்லுக்கிருக்கும் ஒரே பொருள் என்று நம் மக்கள் மிகத் தவறாகப் புரிந்து வைத்துள்ளார்கள். அதனால்தான் அந்த சொல்லைக் கேட்டாலே, ‘ஐயோ, வேண்டாம்… எங்கள் குழந்தைகள் சிறு வயதிலேயே கெட்டுப் போய்விடுவார்கள். நமது கலாச்சாரம் என்ன, பண்பாடு என்ன…’ என்றெல்லாம் பொங்கியெழுந்துவிடுகிறார்கள். குழந்தைகளுக்குப் பாலியல் கல்வி வேண்டும் என்று ஒரு சாராரும் வேண்டவே வேண்டாம், நேரம் வரும்பொழுது அவர்களாகவே தெரிந்து கொள்ளட்டும் என இன்னொரு சாராரும் வாதாடி வருகின்றனர். இந்த விவாதம் நான் கைப்பிள்ளையாக இருந்த காலத்திலிருந்தே தொடர்ந்து நடந்து கொண்டுதானிருக்கிறது.
அதன் பிறகு கடந்த பதினைந்து ஆண்டுகளாக ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு குழந்தை பாலியல் வன்புணர்வுக்குள்ளாகும் போதெல்லாம் ஊடகங்களிலிருந்து கருத்து கேட்கவருவார்கள். ஆனால், அது ஒரு சம்பிரதாயமாகத்தான் இருந்ததேயொழிய சமுதாயத்தில் மாற்றமேற்படுத்தக்கூடிய அதிகாரம் வாய்ந்தவர்கள், இது போன்ற பேட்டிகளைப் பார்த்து எந்த ஒரு சிறு முயற்சியையும் இந்த விஷயம் தொடர்பாக எடுக்கவில்லை. விளக்கம் சொல்லி சொல்லி வெறுத்துப் போய் ஒரு கட்டத்தில் ‘சும்மா பேருக்கு, ஒரு பயனுமேற்படாத ஒரு விஷயத்துக்கு, எந்த முயற்சியையும் முன்னெடுக்க முன்வராத இந்த சமுதாயத்துக்கு கருத்து சொல்வதே வீண்’ என்று தவிர்க்கத் தொடங்கிவிட்டேன்.
ஏற்கெனவே பல தளங்களில், பலமுறை நான் பதிவு செய்திருந்த விஷயங்கள்தான் என்றாலும் இந்தப் புத்தகத்தைப் படிக்கும் வாசகர்கள் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டுமென்ற காரணத்துக்காக இங்கு மீண்டும் பதிவு செய்கிறேன். ஐந்து வயதுமுதல் பத்து வயதுவரையுள்ள குழந்தைகளுக்குக் கொடுக்கப்படும் பாலியல் கல்வி, ‘தன் உடலின் எந்த உறுப்புகளைப் பிறர் தொட அனுமதிக்கலாம், எதையெல்லாம் அனுமதிக்கக் கூடாது’ என்பது மட்டுமே. இதன் நோக்கம் அந்தக் குழந்தைகள் யாராலும் தவறாகப் பயன்படுத்தப்பட்டுவிடக்கூடாது என்பதற்காக மட்டுமே. வயதுக்கு வரக் கூடிய பருவத்தில், குறிப்பாக அவர்கள் உடலின் எந்த உறுப்பில், எதிர்பாலினரின் எந்த உறுப்பால் என்ன செய்யக்கூடாது, அவ்வாறு செய்து குழந்தை உருவாகிவிட்டால் அதனால் அந்தப் பெண்ணின் உயிருக்கும் உடலுக்கும் என்ன பாதிப்பு, அந்த ஆணுக்கு என்ன நெருக்கடிகள் என்பனவற்றையெல்லாம் இருபாலருக்கும் கற்றுத்தருவது மட்டுமே இங்கு நோக்கம்.
உடலுறவு கொண்டால் குழந்தை உண்டாகிவிடக் கூடிய உடல் தகுதியுடனிருக்கும் ஒரு ஆண் குழந்தைக்கும் பெண் குழந்தைக்கும் இந்த வயதில் இவற்றைக் கற்றுத்தாராவிட்டால், பிறகு எப்போது கற்றுத்தரப் போகிறீர்கள்? தயங்கித் தயங்கி, நீங்கள் தள்ளிப்போட்டுக் கொண்டேயிருப்பீர்கள். ஆனால், அவர்களது கைகளிலிருக்கும் ஊடகங்கள் எந்தவிதத் தயக்கங்களுமின்றி அவர்களின் உடல் உணர்ச்சிகளைத் தூண்டிவிடும் வேலைகளை மிகச் சரியாக, அவர்களின் சரியான வயதில் செய்துவிடும். உங்கள் குழந்தைகளின் உடலில் சுரக்க வேண்டிய ஹார்மோன்களும் எந்தத் தயக்கமுமின்றி சரியான வயதில் சுரந்துவிடும். நீங்கள் கற்றுத்தருவதற்குள் அந்தக் குழந்தை கர்ப்பமாகிவிட்டால், அதன் பின்விளைவுகளை சந்திக்க நீங்கள் தயாரா?
அந்தக் காலத்திலெல்லாம்… என்று பழைய கதையை ஆரம்பிக்காதீர்கள். அந்தக்காலத்தில் வயதுக்கு வரும் முன்பே திருமணம் செய்துவைத்துவிடுவார்கள். இது ஒருவிதத்தில் அந்தப் பெண் குழந்தையை வேறு யாரும் தவறாகப் பயன்படுத்திக் கொள்ளும் சூழலை தடுத்து அவளுக்குப் பாதுகாப்பளித்தது என்றாலும், மிகவும் மோசமான பின்விளைவுகளும் இருக்கத்தான் செய்தன. குடும்பக் கட்டுப்பாட்டு முறைகளைப் பயன்படுத்தாமல், சிறு வயதில் கருவுற்ற எத்தனைப் பெண்குழந்தைகள் பிரசவத்தின்போது இறந்திருக்கிறார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா? அப்போது வேறு விதத்தில் தவறிழைத்துக் கொண்டிருந்தோம். இப்போது இன்னொரு விதத்தில்.
இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பே நான் நேரடியாகப் பார்த்த ஒரு விஷயத்தை உங்களுடன் இப்போது பகிர்ந்து கொள்கிறேன். என் தந்தையின் வேலையில் இடமாற்றத்தின் காரணமாக ஒரு சில வருடங்கள் ஒரு சிறுநகரத்தில் வசித்தோம். சுற்றிலும் நிறைய கிராமங்கள் இருக்கும். எங்கள் வீட்டின் அருகிலிருக்கும் ஒரு பெண் மருத்துவரிடம் காய்ச்சல், கீழே விழுந்து காயமென்று ஏதாவதொரு காரணத்துக்காக நான் செல்லும்போதெல்லாம், அங்கு சிறு வயதில் கர்ப்பமாகிவிட்டு கைகளைப் பிசைந்து கொண்டிருக்கும் பெண்கள் ஒவ்வொரு முறையும் இருப்பார்கள். பெரும்பாலும் கொஞ்சம் பாவமான, ஏழ்மையான சூழலிலிருக்கும் பெண்கள். கொஞ்சம் நல்ல நிலையிலிருக்கும் பதின்வயது சிறுமிகளின் முகங்களை அவர்களுடன் வரும் தாய்மார்கள் துப்பட்டாவால் மறைத்துவிடுவார்கள்.
அந்த மருத்துவனைக்குள் ஒரு மோசமான வாடையடிக்கும், ஒரு பெண் உள்ளே நுழைந்துவிட்டால் அவ்வளவுதான். அவள் வெளியே வர மிக அதிக நேரமாகும். எங்களைக் காக்க வைப்பார்கள். இவையெல்லாம் எனக்கு மிகவும் எரிச்சலூட்டும். எனக்கு அப்போது காரணம் புரியவில்லை. ஒவ்வொரு பெண்ணும் அறைக்குள் நுழைந்தவுடன், அந்தப் பெண் மருத்துவர் “உங்களுக்கு எல்லாம் புத்தியே வராதா? உன் உயிருக்கே இதனால் ஆபத்து தெரியுமா இல்லையா…?” என்று இன்னும் அச்சிடமுடியாத சொற்களால் திட்டுவது தவறாமல் கேட்கும்.
ஒரு முறை நான் சாதாரண வயிற்றுவலிக்கு என் அம்மாவுடன் அங்கு சிகிச்சைக்குச் சென்றபோது, அந்த மருத்துவரின் உதவியாளர் எடுத்த எடுப்பில் “என்னம்மா… என்ன பண்ண? எத்தனை மாசமாச்சு..?’ என்று கடுகடுப்பாகக் கேட்டார். பிறகு என் தாய் மிக வேகமாக அந்த உதவியாளரைவிட இன்னும் கடுகடுப்பான குரலில் குறுக்கிட்டு, “இல்ல சாதாரண வயிற்றுவலிதான்” என்றார். எனக்கு அப்போது எதுவும் புரியவில்லை. பிறகுதான் அக்கம் பக்கத்திலிருக்கும் தோழிகளிடம் பேசியபோது விஷயம் புரிந்தது. எந்த அளவுக்கு அந்த மருத்துவரின் உதவியாளருக்கு அவரின் மனம் பழக்கப்பட்டு விட்டது பார்த்தீர்களா?
இந்த விஷயத்தில் எப்படி அந்த சிறு பெண்களைக் குறை சொல்லமுடியும்? தகுந்த உடல்வளர்ச்சியடைவதற்கு முன்னால் கரு உண்டாகிவிட்டால் அதனால் இவ்வளவு பிரச்னைகள் வரும். உயிர் போகுமளவுக்கு வலியும், சமயத்தில் உயிரே போய்விடும் அபாயமுமிருக்கிறது என்பது தெரிந்திருந்தால் அந்தப் பெண்கள் நிச்சயமாக அதற்கு உடன்பட்டிருக்க மாட்டார்களில்லையா? அந்த வயதில் குழைந்தையை சுமப்பதும் பெற்றுக் கொள்வதும் கூட அவர்களின் உடலுக்கும் உயிருக்கும் ஆபத்துதான். அதன் பிறகு எப்படி வாழ்க்கையை நகர்த்துவார்கள்? இது ஒரு மிகப்பெரிய இடியாப்பச் சிக்கல் பிரச்னைதான் அந்தப் பெண்ணுக்கும், அவளது குடும்பத்துக்கும்.
நிச்சயமாய் அதில் பெரும்பாலான பெண்கள் உடலுறவு என்பதே என்னவென்று தெரியாமல் ஒரு உணர்ச்சி நிலைக்குத் தூண்டப்பட்டவர்களாகவோ அல்லது வன்புணர்வு செய்யப்பட்டவர்களாகவோதான் இருப்பார்கள். ஆனால், அதற்குக் காரணமான ஆண்கள் சீனுக்கே வருவதில்லை. அவர்களுக்கு அவமானம், உடல் வலிகள், உயிருக்கு ஆபத்து, அசிங்கமான வார்த்தைகளைக் கேட்கும் அவசியம் என எதுவுமே இல்லை. எந்தவித தண்டனையும்கூட கிடையாது. கேட்டால், வெளியே சொன்னால் பெண்ணின் மானம் போய்விடும் என்பார்கள். வன்புணர்வு செய்யப்பட்ட ஒரு பெண்ணைப் பார்த்து, அல்லது அச்செயல் என்னவென்றே தெரியாமல் ஒரு அறியாமையில் உடலுறவில் ஈடுபட்டு கர்ப்பமாகிவிட்ட ஒரு சிறுமியைப் பார்த்து, “இப்ப வலிக்குது, அப்ப செய்யறதுக்கு மட்டும் நல்லாருந்துச்சா..?” என்று கேட்கப்படும் கேள்வியை நான் ஆபாசத்தின் உச்சக்கட்டம், கொடூர மனப்பான்மையின் வெளிப்பாடு என்று நினைக்கிறேன்.
பெரும்பான்மையான மக்களின் மனநிலையைப் பற்றிப் பேசிப் பயனில்லை எனும்போது, குறைந்தபட்சம் உங்கள் குழந்தைகளுக்காவது இவ்விஷயங்களை எடுத்துச்சொல்லி, அவர்கள் உயிரையும் மனநலனையும் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
இப்போதிருக்கும் காலகட்டத்தில் இன்னும் உடல்ரீதியிலான ஈர்ப்பைத் தூண்டும் ஊடகங்களும் அவற்றைச் செயல்படுத்திப் பார்க்கக்கூடிய வசதியுமிருப்பதால், அந்தக் காலத்தைவிட இப்போதிருக்கும் குழந்தைகளுக்குத்தான் பாலியல் குறித்த விழிப்புணர்வு அவசியம். உணவுப் பழக்கம், வாழ்க்கைமுறை உள்ளிட்ட காரணத்தினால் தற்போதுள்ள பெண் குழந்தைகளின் உடல் வளர்ச்சி அபரிமிதமாயிருக்கிறது. அவர்கள் பூப்படைவதும் மிக விரைவாகவே நடந்து விடுகிறது. ‘எப்படி உடலுறவு வைத்துக்கொள்ள வேண்டும், எந்தெந்த கோணங்களில் செய்ய வேண்டும்’ என்று நீங்கள் அக்குழந்தைகளுக்குக் கற்றுத்தரப் போவதில்லை. என்ன செய்யக்கூடாது, அப்படி செய்தால் என்ன பின்விளைவுகள் அவர்களுக்கு ஏற்படும் என்பதைத்தான் நீங்கள் கற்றுக்கொடுக்கப் போகிறீர்கள். அதுவும் தினசரி அல்ல, சில மாதங்களுக்கொரு முறை ஞாபகப்படுத்தினாலே போதும்.
அடுத்தது, திருமணத்துக்குத் தயாராகயிருக்கும் வயதினருக்குக் கொடுக்கக் கூடிய பாலியல் கல்வி என்பது முற்றிலும் மாறுபட்டது… பாலியல் உறவு குறித்த சந்தேகங்களுக்கு பதில்களையும் ஒருவேளை அவர்கள் சிறு வயதில் வன்புணர்வுக்கு உள்ளாகியிருந்தால், அந்த பாதிப்புகளிலிருந்து வெளியே வந்து அவர்கள் எந்தவித அச்சமுமில்லாமல் திருமண உறவுக்குள் நுழைய வழிகாட்டுவதும்தான் இந்த வயதினருக்கானபாலியல் கல்வியின் பொருள். சொல்லப்போனால், பதின்வயதினருக்குக் கற்றுத்தரப்பட்டவற்றுக்கு நேர்மாறானது. உங்கள் துணைவருடன் உடலுறவு வைத்துக் கொள்ள பயப்படாதீர்கள். எந்தெந்த கோணங்களில் செய்யலாம். எப்படி சரியான முறையில் குழந்தைப் பிறப்பைத் தள்ளிப்போடுவது, ஒருவேளை நீங்கள் எதிர்பாராத நேரத்தில் திருமணத்துக்குப் பிறகு குழந்தை வந்துவிட்டால், அந்தக் கருவைக் கலைப்பது எவ்வளவு ஆபத்தானது போன்ற விஷயங்களைக் கற்றுத்தருவதுதான் அந்த வயதினருக்கான ‘பாலியல் கல்வி’.
உங்கள் கருவில் உருவாகிவிட்ட ஒரு குழந்தையை வேண்டாமென்று நீங்கள் நினைப்பதும் வெறுப்பதுமே அந்தக் குழந்தைக்கு என்ன விதமான பாதிப்புக்களை ஏற்படுத்தும், எப்படி அந்த சூழலைக் கையாளாலாம், உங்கள் கணவனின் மனநிலையை எப்படி புரிந்து கொள்வது, உங்கள் மனைவியை எப்படி உடலாலும், உணர்வுகளாலும் உச்சக்கட்டமடைய வைப்பது, வேலை, பொருளாதாரம் போன்றவை எப்படி உங்கள் இல்லற வாழ்க்கையின் மகிழ்ச்சிக்குக் காரணமாயிருக்கும் என்பன உள்ளிட்ட பல விஷயங்கள் அடங்கியதுதான் திருமணத்துக்கு முந்தைய ‘பாலியல் கல்வி’ (Premarital sex education or sex counselling).
திருமணமான தம்பதிகளுக்கு பொதுவான, பாலுறவு தொடர்பான விஷயங்களைக் கற்றுத்தருவதாயில்லாமல் பெரும்பாலும் அவர்களிருவருக்குமிடையேயான உடலுறவில் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்கான சரியான தீர்வுகளைக் கொடுப்பதுதான் அவர்களுக்கான ‘பாலியல் கல்வி’யின் நோக்கமாகயிருக்கும். குழந்தை உருவாவதில் தாமதம், கணவனின் விறைப்புத்தன்மையில் பிரச்னை, மனைவிக்கு உச்சக்கட்டம் ஏற்படாமை, உடலுறவை வெகுநேரம் நீட்டிக்கமுடியாமை, உடலுறவு கொள்வதில் கணவன், மனைவி இருவரில் யாருக்காவது வெறுப்பு, பயம் உள்ளிட்ட பிரச்னைகளுக்கான தீர்வுகளைத் தந்து வழிகாட்டுவதுதான் திருமணமான தம்பதிகளுக்கு வழங்கப்படும் ‘பாலியல் கல்வி’யிலிருக்கும் அம்சங்களாகயிருக்கும். ‘பாலியல் கல்வி’ என்ற சொல் ஒன்றுதான் என்பதற்காக இந்த அனைத்து வயதினருக்கும் கொடுக்கக்கூடிய பாலியல் கல்வியின் உள்ளடக்கமும் ஒன்றுதான் என்று புரிந்து கொள்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்? அந்த முட்டாள்தனத்தைத்தான் நாம் காலம்காலமாய் செய்துகொண்டிருக்கிறோம்.
திரைப்படம் என்பது எவ்வளவு பெரிய சக்திவாய்ந்த ஒரு ஊடகம்? அந்த ஊடகத்தில் இந்த ஒவ்வொரு வயதினருக்குமேற்றபடி அவர்கள் மட்டும் பார்க்கும்படியாக, அவர்களுக்குப் பயன்படும்படி பாலியல் கல்வியைக் கொடுத்தால் இந்த சமூகத்தில் எவ்வளவு பெரிய மாற்றம் ஏற்படும் தெரியுமா? பாலியல் உணர்வுகளைத் தாறூமாறாய் தூண்டிவிடும் வேலையை செய்யும் நம் தமிழ்த் திரைப்படங்கள், பாலியல் கல்வியைக் கொடுப்பதில்லை. மேற்கத்திய நாடுகளிலிருக்கும் குழந்தைகளுக்கு அவர்களது பெற்றோரே அந்த வேலையைச் செய்துவிடுகின்றனர். நம் சமூகத்தில் பெற்றோரும் அதைச் செய்வதில்லை, சொல்லப்போனால் அவர்களுக்கே பெரும்பாலான விஷயங்கள் தெரிவதில்லை.
குளிக்கும்போது ஒரு ஆண் குழந்தையின் ஆணுறுப்பிலுள்ள முன் தோலை பின்னுக்குக் கொஞ்சம் மெதுவாக நகர்த்தி அந்த இடத்தைத் தண்ணீரில் மென்மையாக அலசி சுத்தம் செய்யவேண்டுமென்றும், காலைக்கடனைக் கழித்தபிறகு பெண்ணுறுப்பை நோக்கிக் கழுவாமல், பின்னோக்கிக் கழுவி சுத்தம் செய்ய வேண்டும் என்ற அடிப்படை சுகாதாரத்தைக் கூடக் கற்றுக்கொடுக்காமல் இங்கு குழந்தை வளர்க்கும் பெற்றோர்தான் அதிகம்.
சரியான உள்ளாடைகளைத் தேர்ந்தெடுத்து அணியத் தெரியாமலும் மாதவிடாய் காலங்களில் எப்படி தங்கள் அந்தரங்க உறுப்புக்களைப் பரமாரிப்பது என்பது கூடவும் தெரியாமல்தான் நம் குழந்தைகள் வளர்கிறார்கள். திரைப்படம், குறும்படம், தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகள் இவை எதுவுமே பாலியல் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து எடுக்கப்படுவதில்லை. குறைந்தபட்சம் PSA என்று சொல்லப்படும் இரண்டு நிமிடங்களுக்குள் எடுக்கப்படும் சமூகநலனிற்காக வெளியிடப்படும் Public Service Awareness படங்களைக்கூட எடுக்க முடியாத அளவுக்கு நமது திரைப்படத்துறை அசிரத்தையாயிருக்கிறது.
தமிழில் வெளிவந்துள்ள ஒரு நல்ல பாலியல் வழிகாட்டித் திரைப்படம் என்று சுட்டிக்காட்டும்படியாக ஒன்று கூட இல்லை என்பதுதான் உண்மை. கண்களில் விளக்கெண்ணெயை ஊற்றிக்கொண்டு வலை வீசித் தேடிப்பார்த்ததில், ஹிந்தியிலிருந்து தமிழுக்கு மொழிமாற்றம் செய்யப்பட்டு 2013ல் வெளிவந்த ‘The Secrets of Sex’ என்ற திரைப்படம் குழந்தைகளுக்கு அளிக்கப்படவேண்டிய பாலியல் கல்வியைக் குறித்துப் பேசியிருக்கிறது என்றாலும் அந்தப் படத்தில் அது ஒரு பாகம்தான். முழுப் படத்தையும் குழந்தைகளோ அல்லது பதின்பருவத்தினரோ பார்க்கப் பரிந்துரை செய்ய முடியாது. வேண்டுமானால் பெற்றோர் பார்த்துவிட்டு, அதில் சில காட்சிகளை மட்டும் அவர்களது பிள்ளைகள் பார்க்கும்படி ‘எடிட்’ செய்து காட்டலாம்.
பள்ளி இறுதி வகுப்பில் படிக்கும் ஒரு பெண்ணும் அவளது நண்பனும் உடலுறவில் ஈடுபட்டுவிடுகிறார்கள். அந்தப் பெண் பள்ளி முடிந்து தினமும் வீட்டுக்கு தாமதமாக வருவதை ஒருநாள் தனது வீட்டில் வேலை செய்யும் பெண் மூலம் தெரிந்து கொள்கிறாள் அவளது அக்கா. “நீ என்னிடம் அந்தப் பையன் யாரென்று சொல்லத் தேவையில்லை. ஆனால், இந்த சி.டி.யைப் பார்” என்று அவளிடம் கொடுத்துவிட்டு நகர்கிறாள் பாலியல் நிபுணரான அந்தப் பெண்ணின் அக்கா. அந்த சி.டி.யில் ஆண், பெண் உடலுறவைப் பற்றியும் எப்படி குழந்தை பிறக்கிறது என்பதைப் பற்றியும் அறிவியல் பூர்வமாக ‘அனிமேஷன்’ மூலம் விளக்கப்பட்டிருக்கும். அதைப் பார்த்து பயந்துபோகும் அந்தப் பெண் அவளது ஆண் நண்பனிடம் அந்த சி.டி.யைப் பார்க்கச் சொல்வாள்.
‘ஒரே ஒரு விந்தணு போதுமானது ஒரு குழந்தை உருவாக’ என்று அவனுக்கும் அப்போதுதான் புரியவர, இருவருமே தாங்கள் தவறு செய்து விட்டதை உணர்ந்து பதறிப்போய்விடுவார்கள். ‘இந்த வயதில் படிப்புதான் முக்கியம். நாம் அவசரப்பட்டு விட்டோமே’ எனப் புலம்புவார்கள். தான் கர்ப்பமாகிவிடுவோமோ என்று அந்தப் பெண் அச்சமடைந்ததைப் போலவே கர்ப்பமாகிவிட, எப்படி அந்தக் கருவை அழிப்பது என்று போராடுவார்கள். அந்தப் பெண்ணுக்கு பதினெட்டு வயது ஆகாததால், வீட்டிலிருந்து யாராவது பெரியவர்களைக் கூட்டி வர வேண்டும் என மருத்துவர்கள் சொல்லி விட, தன் அக்காவிடம் சொல்லவும் பயப்படுவாள். மருந்துக் கடைகளிலும் கருவையழிக்கும் மாத்திரைகளைத் தரமாட்டார்கள். அந்தப் பையனுக்குத் தெரிந்த ஒரு நண்பன் மருத்துவ ஆய்வுக்கூடத்தில் வேலை பார்ப்பான். அவனிடம் கெஞ்சிக் கூத்தாடி அம்மருந்தை அந்தப் பெண்ணுக்கு வாங்கித் தருவான். அது அவளது உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடும்.
இன்னொரு கிளைக்கதை. அந்தப் பையனின் அண்ணனும், அந்தப் பெண்ணின் அக்காவான பாலியல் நிபுணரும் கல்லூரி கால நண்பர்கள். அவனும் ஒரு மருத்துவர்தான். அவனால் அவனது மனைவியுடன் சரியாக உடலுறவு கொள்ள முடியாது. அவனுக்கு உடலில் எந்தப் பிரச்னையுமிருக்காது. நன்றாகத் தூண்டப்படுவான். உறவில் ஈடுபடத் தொடங்குவான். ஆனால், ஒரு கட்டத்துக்கு மேல் அவனுக்கு ஆர்வமில்லாமலும் விறைப்புத்தன்மையில்லாமலும் போய்விடும். அதற்கான காரணத்தை அந்தப் பாலியல் நிபுணரால் பரிசோனைகளின் மூலம் கண்டறிய முடியாது. இன்னொரு ‘செக்ஸ் தெரபிஸ்ட்’ உதவியுடன் கண்டுபிடித்து சரி செய்யலாம் என்று அவள் பரிந்துரைக்க, அவனது மனைவி ஒப்புக் கொள்வாள். ஆனால் அவனோ, “நான் என் மனைவியைத் தவிர வேறு யாரிடமும் சிகிச்சைக்காகக்கூட நெருக்கமான பரிசோதனைகளுக்கு உட்பட மாட்டேன்” என்று மறுத்து விடுவான். எனவே அந்த பாலியல் நிபுணரான தோழி, “நீதான் உன் கனவனிடம் நெருக்கமாய் பேசிப் பழகி அவன் மனதில் என்ன காரணம் புதைந்திருக்கிறது என்று கண்டுபிடிக்க வேண்டும்” என்று சொல்லி விடுவாள்.
ஒருநாள் அவனுடன் அவன் மனைவி பேசிக்கொண்டிருக்கும் போது அவனின் சிறு வயதில் அவனது தந்தை நடு இரவில் குடித்து விட்டு தன் மனைவியைத் துன்புறுத்தியதையும், அவள் அழுது கொண்டே சப்தமெழுப்ப அவன் அப்படியே மிருகத்தனமாய் அவளைப் புணர்ந்ததையும் கூறி அழுவான். அவனது தாய் அனுபவித்த கொடுமைகள், அவளது அழுகை, அப்போதும் அவனது தந்தை அவளை வன்புணர்ந்தது, அவள் கதறியது எதையும் தன்னால் மறக்கவே முடியவில்லை என்று கூறி அழுவான்.
இதைப் பேச்சுவாக்கில் அந்தப் பெண் அந்தப் பாலியல் நிபுணரிடம் சொல்ல அவள், “அவனது பிரச்னைக்கான காரணம் தெரிந்துவிட்டது. உன்னுடன் உன் கணவன் உடலுறவு கொள்ளும்போது நீ ஓசை எழுப்பும் வரை அவன் இயல்பாக இயங்குகிறான். நீ ஓசையெழுப்பத் தொடங்கியவுடன் அவனுக்கு அவனது தந்தை தனது தாயைக் கொடுமைப்படுத்திப் புணர்ந்ததும் அவன் தாயின் கதறல்களும் நினைவுக்கு வந்துவிடுவதால் அவனால் உன்னுடன் உடலுறவைத் தொடரமுடியவில்லை. எனவே, அவன் உன்னுடன் உடலுறவு வைத்துக் கொள்ளும்போது, நீ ஓசை எழுப்பாமலிரு. உங்கள் உறவு முழுமையாக நடைபெறும், உன் பிரச்னைக்கு ஒரு தீர்வு கிடைத்துவிடும்”, என்பாள். இந்தப் பெண்ணும் அன்றிரவு அமைதியாக இருப்பாள். தன் கணவனைப் படுக்கச் சொல்லிவிட்டு அவன் மீது இவள் இயங்குவாள். அன்று அவர்களுக்குள் முழுமையான உடலுறவு நடைபெறும்.
மூன்றாவது கதை. ஒரு சாதாரண ஏழை ஆட்டோ ஓட்டுநர். அவனது மனைவி அவனுடன் உடலுறவு வைத்துக் கொள்ளவேமாட்டாள். அவன் இவளருகே வந்த உடனேயே பயந்து கதறி அழத்தொடங்கி விடுவாள். அவளது கணவன் கடுப்பாகிவிடுவான். தினமும் இந்த விஷயத்தினால் அவளுடன் சண்டைபோட்டுக் கொண்டு அறையை விட்டு வெளியேறி விடுவான். இது ஒரு வாடிக்கையாகி விடும். அந்தப் பெண் தனது தோழியிடம் தனது பிரச்னையை சொல்லி அழுவாள். அவள் பாலியல் நிபுணரிடம் இந்தப் பெண்ணை அழைத்துக் கொண்டு வருவாள். எவ்வளவு கேட்டும் அந்தப் பெண் வெளிப்படையாக அந்த நிபுணரிடம் தனது பிரச்னைக்கான காரணத்தை சொல்ல மாட்டாள்.
“இந்தா இந்தப் பழத்தை சாப்பிடு” என்று ஒரு வாழைப் பழத்தை அந்தப் பெண்ணிடம் அந்த நிபுணர் நீட்ட, அவள் ஏதோ பேயைப் பார்த்தது போல் மிரண்டு போய் அழத் தொடங்கி விடுவாள். அடுத்த முறை, “நீ எங்களிடம் உண்மையை சொல்லாவிட்டால் எங்களால் உனக்கு உதவ முடியாது” என்று அந்தப் பாலியல் நிபுணரும், அவளது தோழியான ஒரு ஃபிஸியோதெரபிஸ்ட்டும் வற்புறுத்துவார்கள். அந்தப் பெண் தனது சிறு வயதில் தனது மாமாவினால் வன்புணர்வு செய்யப்பட்டதையும் அதை வெளியே யாரிடமாவது சொன்னால் அவளைக் கொன்று விடுவதாகக்கூறி அவன் மிரட்டியதையும் சொல்லிக் கதறுவாள். அதிலிருந்து ஆண்கள் அனைவருமே மிகவும் கெட்டவர்கள், கொடூரமானவர்கள் என்ற எண்ணம் தன் மனதில் ஆழமாகப் பதிந்து விட்டதாகவும் கூறி அழுவாள்.
“அடுத்த முறை உன் கணவனுடன் வா…” என்று சொல்லி அனுப்புவார்கள். அடுத்த முறை அவள் கணவன் வரும்போது, அவனிடம் அவர்கள் நடந்த உண்மையைக் கூற, “என் மனைவிக்கு இப்படி ஒரு பிரச்னை இருப்பதை அவள் என்னிடம் சொல்லவேயில்லை… எனக்குத்தெரியாது. ஒருவேளை தெரிந்திருந்தால் நான் அவளைத் திட்டி, கடுமையாக நடந்திருக்கமாட்டேன்” என்று கூறி அழுவான்.
“ஆண்கள் அனைவருமே கெட்டவர்கள் என்று உங்கள் மனைவியின் மனதில் மிக ஆழமாகப் பதிந்திருக்கும் எண்ணத்தை முதலில் நீங்கள் மாற்ற வேண்டும். வெளியூர் சென்று ஒரு இருபது நாட்கள் சந்தோஷமாக இருந்துவிட்டு வாருங்கள். அவளிடம் அன்பாக மட்டும் பேசுங்கள். ஆதரவாக நடந்து கொள்ளுங்கள். உடலுறவைப் பற்றி மட்டும் நீங்களாக பேசாதீர்கள். அவளைத் தொடாதீர்கள். உங்கள் மீது நம்பிக்கை வந்தவுடன் அவளாகவே உங்களை நெருங்குவாள்”, என்று சொல்லி அனுப்பிவைப்பார்கள்.
இந்த மூன்று கதைகளையும் நகர்த்திச் செல்லும்போது சில நெருக்கமான காட்சிகளையும் சேர்த்திருப்பார்கள். திருமணமானவர்கள் பார்க்கும்போது அது ஒன்றும் ஆபாசமானதாகவோ, அசாதாரணமானதாகவோ தோன்றாது. இயல்பாகத்தானிருக்கும். திருமணத்துக்குத் தயாராகிக் கொண்டிருப்பவர்களும் பார்க்கலாம். ஆனால், பதின்பருவத்தினர் பார்க்கும்போது அவர்களுக்கு அதில் சொல்லப்பட்டிருக்கும் பிரச்னைகளை விட, அதில் வரும் நெருக்கமான காட்சிகளால் அவர்கள் ஈர்க்கப்பட வாய்ப்புண்டு என்பதால் நான் அந்த வயதினர் பார்க்கலாம் எனப்பரிந்துரைக்க மாட்டேன்.
குழந்தைகளுக்கு நல்ல தொடுகை, கெட்ட தொடுகை Good touch, Bad touch என்று சொல்லித்தருகிறோமேயொழிய, எந்த இடத்தில் தொட்டால் கெட்ட தொடுகை என்று கூட சொல்லித் தருவதில்லை. அவர்களுக்கு நீங்கள் பேசுவது புரிய ஆரம்பிக்கும் வயதிலேயே, ”சிறுநீர் போகுமிடம், மலம் கழிக்குமிடம் மற்றும் மார்பு, இவற்றை யாரையும் தொட விடாதே. உன் உதடுகளில் முத்தம் கொடுக்க யாரையும் அனுமதிக்காதே” என்று நேரடியாக தெளிவாகவே சொல்லி விடுங்கள்.
அந்த வயதில் குழந்தைக்குப் புரியும்படி ஒரு பொதுவான விதியைத்தான் கற்றுத்தர முடியுமேயொழிய, யார் நல்லவர்கள், யார் கெட்ட எண்ணத்துடன் அணுகுகிறார்கள் என்றெல்லாம் பகுத்தாய்வு செய்வது எப்படி என்று உங்கள் குழந்தைக்குக் கற்றுத்தந்து அவர்களைக் குழப்ப முடியாது. அதனால் மேலே சொன்னபடி தெளிவாக, சுருக்கமாக அந்த மூன்று இடங்களை யாரையும் தொடவிடாதே. உதட்டில் முத்தம் தர அனுமதிக்காதே என்று மட்டும் சொல்லிக்கொடுங்கள். உங்கள் குழந்தைக்குப் பத்து வயதாகிவிடும்போதே “ஆண், பெண் அந்தரங்க உறுப்புக்களைத் தொட்டால் பெண்ணுக்குக் குழந்தை பிறந்துவிடும். அவ்வளவு சிறிய வயதில் ஒரு சிறுமிக்குக் குழந்தை பிறக்கக் கூடாது. அது அவளது உயிருக்கே ஆபத்து. அந்த சிறூவனுக்கும் தண்டனை கிடக்கும்” என்று மட்டும் சொல்லிக்கொடுங்கள். நிச்சயமாய் புரிந்து கொள்வார்கள்.
பெண் குழந்தைகள் வயதுக்கு வந்தவுடனேயே ஒரு ஆண் இப்படிச் செய்வதால் பெண்ணுக்குக் குழந்தை பிறந்துவிடும் என்று சொல்லிக்கொடுங்கள். பதின்மூன்றிலிருந்து பதினைந்து வயதுக்குள்ளேயே ஒரு ஆண்குழந்தைக்கும் இதே விஷயத்தை சொல்லிக்கொடுங்கள். கர்ப்பப்பை திடமாக இல்லாத அந்த வயதில் ஒரு பெண்ணுக்குக் கருவைத் தாங்கும் சக்தியிருக்காது என்றும், அதனால் அவளது உயிருக்கே ஆபத்து ஏற்படுமென்றும், கருக்கலைப்பிலிருக்கும் ஆபத்துக்களையும் சொல்லிப் புரிய வையுங்கள். ஆண், பெண் இருபாலருக்கும் இந்தப் புரிதல் மிக மிக அவசியம்.
அந்த வயதில் உடலுறவு கொள்வதால் தனக்கு எந்தவிதமான உடல்நல பாதிப்புகள் ஏற்படக்கூடும் என ஒரு வயதுக்கு வந்த ஒரு சிறுமிக்கும், தான் ஒரு பெண்ணுக்கு அப்படியொரு நிலையை உடருவாக்கினால் அது அவளுக்கு மட்டுமல்ல, தனக்கும்தான் பிரச்னைகளை உருவாக்கும் என ஒரு சிறுவனுக்கும் புரிந்துவிட்டால், கண்டிப்பாக அவர்கள் அந்த ஆபத்தான விளையாட்டில் ஈடுபடமட்டார்கள்.
ஒருவேளை உங்களுக்கு உங்கள் குழந்தைகளிடம் இவற்றைப்பற்றிப் பேசக் கூச்சமாயிருந்தால், பதின்மூன்று வயதில், பதினெட்டு வயதில், திருமணத்துக்குத் தாயாராகும் வயதில் என இந்த மூன்று நிலைகளிலும் ஒரு உறவு மேம்பாட்டு நல ஆலோசகரிடம் அழைத்துச் சென்று இவற்றைப் புரியவைக்கும்படி கேட்டுக்கொள்ளுங்கள். திருமணம் முடிவானதுமே, உறவுகள் மேம்பாட்டு நல நிபுணர் ஒருவரை சந்திக்க அந்தத் தம்பதியை அனுப்பி வையுங்கள். திருமணத்துக்கு முந்தைய உறவுகள் மேம்பாட்டு ஆலோசனை, திருமண உறவுக்கு அந்த ஆணும், பெண்ணும் தயாராகும் ‘திருமண முன்தயாரிப்பு பயிற்சி வகுப்புக்கள்’ (Marriage preparation course) கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மதம் தொடர்பாக இல்லாமல் உளவியல் ரீதியிலான தயாரிப்புப் பயிற்சி இது. இந்த வகுப்பை மாப்பிள்ளையும் பெண்ணும் ஒரே ஊரிலிருந்தால், சேர்ந்து வந்து பங்கேற்க வேண்டும். வெவ்வேறு ஊர்களிலிருந்தால் அவரவர் ஊர்களில் தனியாக சென்று பயிற்சியை முடித்து சான்றிதழ் வாங்கியாக வேண்டும். எந்த நாட்டில் அவர்கள் இருந்தாலும் சரி. அப்போதுதான் கிறிஸ்தவ முறைப்படி அவர்களால் திருமணம் செய்து கொள்ளமுடியும்.
இதை மற்ற மதங்களிலும் கட்டாய முறையாகக் கொண்டு வரலாம். திருமண உறவில் பிளவுகளைத் தடுக்கும் ஒரு முயற்சியை எந்த மதத்தினர் பின்பற்றினால் என்ன? நல்ல விஷயம் எங்கிருந்தாலும் நாம் அவற்றை எடுத்துக் கொண்டு பின்பற்றலாமே? இப்படி செய்தால் 100 சதவீதம் அவர்கள் திருமண உறவில் பிரச்னைகளே வராது என்ற உத்திரவாதமில்லையென்றாலும் ஒன்றும் தெரியாமல் ஒரு உறவில் நுழைவதை விட, ஓரளவுக்கு ஒரு புரிதலுடன் திருமண பந்தத்துக்குள் நுழைவார்கள். பிரச்னைகள் வந்தாலும் அந்த இருவரில் யாராவது ஒருவராவது அதைச் சரிசெய்ய முயல்வார்கள். குறைந்தபட்சம் அந்த வகுப்புக்களில் அவர்கள் சொல்லும் உண்மைக்கதைகளை கேட்கும்போது, குறைந்தபட்சம் திருமண வாழ்வென்பது கற்பனைகளிலும் கதைகளிலும் வருவதைப் போல மகிழ்ச்சி மட்டுமே நிறைந்ததல்ல, அதில் பிரச்னைகளும் வரக்கூடும் என்ற மனநிலையுடன் அந்த பந்தத்துக்குள் நுழைவார்கள்.
மணமகன், மணமகளின் பெற்றோரும் இப்போது தனித்துவமான ஆலோசனைப் பயிற்சி எடுத்துக்கொள்ள வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தங்கள் பிள்ளைகளின் திருமணத்துக்குப் பிறகு தாங்கள் எவ்வாறு அவர்களிடமும் அவர்கள் வாழ்க்கைத்துணையிடமும் நடந்து கொள்ளவேண்டும், அவர்களுக்குள் ஏதாவது பிரச்னைகளோ அல்லது கருத்து வேறுபாடுகளோ ஏற்பட்டால் அவற்றை எப்படிச் சரிசெய்வது, அந்தத் திருமண உறவைத் தக்கவைக்க அவர்களின் பங்கு என்ன என்பனவற்றையெல்லால் அவர்களுக்குப் புரியவைப்பார்கள்.
மீண்டும் பாலியல் கல்வியில் திரைப்படங்களின் பங்கு பற்றிய விஷயத்துக்கு வருவோம். நம் அனைவருக்கும் மிகவும் பரிச்சயமான, தீபா மேத்தா இயக்கத்தில் 1997ல் வெளியான ‘ஃபயர்’ (Fire) திரைப்படம் பட்ட பாடு நாமறிந்ததே. தங்களது மனைவிகளைக் கொஞ்சமும் கண்டுகொள்ளாத கணவர்கள்; அந்த மன அழுத்தத்தையும், உடலுறவு என்ற ஒரு விஷயத்தில் உச்சக்கட்டம் என்ன, ஆரம்பகட்டத்தைக்கூட காண இயலாத வேதனையையும் ஏமாற்றத்தையும் ஒரே வீட்டில் வாழும் ஷபனா ஆஷ்மியும், நந்திதாதாஸும் பகிர்ந்து கொள்வார்கள். இருவரும் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளும் அந்த பரஸ்பர ஆறுதல் நேர்பாலினச்சேர்க்கையில் (Lesbian Relationship) சென்று முடியும்.
இந்தப் படம் வெளிவந்ததும், நாடெங்கும் பல திரையரங்குகளில், ‘நம் கலாச்சாரமே சீரழிந்துவிட்டது’ எனக்கூறி ஒரு போர்க்களம் போல் கலவரம் செய்தார்கள். நான் வேறு சும்மா கிடக்காமல் ஒரு பிரபல பத்திரிக்கைக்கு அந்தப் படத்தை விமர்சனம் செய்யவும், பார்வையாளர்களிடம் அவர்களது கருத்தைக் கேட்கவும் ஒரு திரையரங்குக்குச் சென்றிருந்தேன்.
நந்திதா தாஸூம், ஷபனா ஆஸ்மியும் உறவில் ஈடுபடும் காட்சிகளில் ஆண்களிடமிருந்து அப்படி ஒரு சத்தம். கெட்ட வார்த்தைகள் சரமாரியாக என் காதுகளைக் கிழித்தன. நம் ஊரிலேயே இப்படியென்றால், சில மிகவும் பின்தங்கிய மாநிலங்களில் நிலவரம் எப்படி இருந்திருக்கும் என்று யோசித்துப்பாருங்கள். படம் முடிந்ததும் மிகவும் கௌரவமாக அச்சிலேற்றக்கூடிய வார்த்தைகளில் கருத்து சொன்ன ஆண்கள் மிகச்சிலரே. அத்திரைப்படத்தை நல்ல பெண்களெல்லாம் பார்க்கக்கூடாது(?) என்பதால் மிகச் சில பெண்களே திரையரங்குக்கு வந்திருந்தனர். அதில் பெரும்பான்மையான பெண்கள் சொன்ன கருத்து என்ன தெரியுமா?
“இந்தப் படம் ஆண்களின் ‘ஈகோ’வுக்கு மிகப் பெரிய சவுக்கடி” என்பதுதான்.
எனக்கு என்ன ஆச்சர்யம் என்றால், ‘திருமணம் செய்தும் ஒரு வேலைக்காரியாக மட்டும் பயன்படுத்தப்படும் அந்தப் பெண், ஒழுங்கான முத்தம்கூடத் தராத கணவனிடம், உடலுறவு என்பதே இல்லாமல் எப்படி குப்பை கொட்டுவாள்’ என்று அந்தப் படம் பார்த்த ஒரு ஆணுக்குக்கூட ஏன் தோன்றவில்லை? அந்தப் பெண்களே வலியச் சென்றாலும் அந்தக் கணவர்கள் அப்பெண்களிடம் நெருக்கமாக, அன்பாக நடந்து கொள்ளாதபோது ஏன் பார்வையாளர்களுக்கு அந்த ஆண்கள் மேல் கோபம் வரவில்லை? அந்தப் பெண்கள் உறவு வைத்துக் கொண்ட பிறகு கோபப்பட்டுக் கத்தும் பார்வையாளர்கள், அவர்கள் தங்கள் கணவர்களால் நிராகரிக்கப்படும்போது ஏன் அந்தப் பெண்கள் மீது பரிதாபப்படவில்லை? ஏன் அந்த ஆண்களைத் திட்டவில்லை? ஆக மொத்தம் மூன்று வேளை சாப்பாட்டுக்காகவும், ஆடைகளுக்காகவும், ஒதுங்குவதற்கு ஒரு கூரைக்காகவும்தான் பெண்கள் திருமணம் செய்து கொள்கிறார்களா? ஏன், அவளது பிறந்த வீட்டில் இவை எதுவுமே அவளுக்குக் கிடைக்கவில்லையா என்ன?
அன்று என் மனதில் எழுந்த இந்த எந்தக் கேள்விகளுக்கும் இன்றுவரை பதில்கள் கிடைக்கவேயில்லை. படம் வெளிவந்து இத்தனை ஆண்டுகளான பிறகும்கூட ஆண்களின் மனப்போக்கில் எந்த வித நல்ல மாற்றங்களுமேற்பட்டதாக எனக்குத் தெரியவில்லை. ஆனால் ஒன்று, அந்தப் படத்தைப் பார்த்து கத்திக் கதறிய ஆண்களும் தங்கள் மனைவிகளை அவ்வாறுதான் நடத்திக் கொண்டிருப்பார்கள் என்பது மட்டும் தெள்ளத் தெளிவாகப் புரிந்தது. இந்த ஆர்பாட்டங்களினால் தானோ என்னவோ அதன் பிறகு பெண்களின் இடுப்பிற்குக் கீழும் ஒரு பாகம் இருக்கிறது. மார்பகங்களுக்குள்ளும் ஒரு மனம் இருக்கிறது. இவையிரண்டையும் ஒரு கணவன் சரியாகக் கையாள வேண்டும் என்று ஆழமாகப் பேசக்கூடிய எந்தப் படமும் இதுவரை வெளிவரவில்லை.
நேர்பாலினச் சேர்க்கை, ஒருபாலினச் சேர்க்கையெல்லாம் சரியா, தவறா என்பதைப் பற்றியே நான் இங்கு பேசவில்லை. ஒருவேளை அந்தப் பெண்களிருவரும் தங்கள் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வெவ்வேறு இரு ஆண்களிடம் தங்கள் படுக்கையைப் பகிர்ந்திருந்தால், அந்தப் படத்துக்கு அவ்வளவு எதிர்ப்பு வந்திருக்குமா என்றும் தெரியவில்லை. அந்தப் படத்தில் அப்பெண்கள் தங்கள் உணர்ச்சிகளுக்கு வடிகாலாக யாரைத் தேடிப் போனார்கள் என்பதைக் குறித்து கேள்வி கேட்காமல், அதற்கு யார் காரணம் என்று யோசிப்பதுதானே சரி? அந்தப் பெண்களை எதற்காக அந்த ஆண்கள் திருமணம் செய்துகொண்டார்கள் என்ற அடிப்படைக் கேள்வியை ஆராய்வதுதானே சரியான மனநிலையாயிருக்கும்? அது ஒரு திரைப்படம் என்பதையும் தாண்டி, அத்தகைய சூழ்நிலைகளில் உண்மை வாழ்க்கையிலுமிருக்கும் பெண்களுக்கு என்னதான் தீர்வு என்பதை நாம் யோசிக்க முடியும்?
ஒரு திரைப்படம் பார்வையாளர்களின் உண்மை வாழ்க்கையில் அவர்களது மனதை அப்படியென்ன பாதித்துவிடுமா அல்லது மாற்றிவிடுமா என்று குழந்தைத்தனமாகக் கேட்காதீர்கள். மற்ற நாடுகளில் திரைப்படங்களையும் நிதர்சனத்தையும் பிரித்துப் பார்க்கக்கூடிய மனப் பக்குவம் பெரும்பான்மையான பார்வையாளர்களுக்கு இருக்கிறது. நம் ஊரில் அப்படியா? திரையில் வரும் கதாநாயகர்கள், அவர்களின் படங்களில் வெளிப்படுத்தும் குணாதிசயங்கள் எல்லாம் உண்மை என்று நம்பித்தானே நாம் காலங்காலமாய் நம்மை ஆள்பவர்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கிறோம்…? அவ்வளவு பெரிய விஷயத்தில் நாம் எடுக்கும் தீர்மானங்களையே திரைப்படங்கள் நிர்ணயிக்கும்போது, உண்மை வாழ்க்கையில் பெண்கள் நடத்தப்படும் விதத்தையும் காமம் குறித்தான ஆண்களின் பார்வைகளையும் நிர்ணயிக்கத்தானே செய்யும்?
பெண்கள் சந்திக்கக் கூடிய உணர்வியல் மற்றும் உடலியல் பிரச்னைகளை ஏன் பிரபல நடிகர், நடிகைகளின் படங்கள் தோலுரித்துக் காட்டுவதில்லை? தீர்வுகளை கொடுப்பதில்லை? எப்படி விதம் விதமாய் சிகெரெட் பிடிக்கலாம் என்று கற்றுக் கொடுத்த நம் தமிழ் சினிமா, எப்படி பெண்களின் அங்கங்களைக் கிண்டலடித்துப் பாட்டுப் பாடி கேலி செய்யலாம் என்று கற்றுக் கொடுத்த நம் தமிழ் சினிமா, ஏன் உன் ‘மனைவியின் உணர்வுகளை மதித்து நட’ என்று கற்றுத் தரவில்லை? குறைந்தபட்சம் “பொண்ணுனா அடக்கம் வேணும்…”, “ஆம்பளை சட்டையில்லாம வருவான், உன்னால முடியுமா…?” என்ற அபத்தங்களையாவது தவிர்க்கலாம் அல்லவா?
நம் தமிழ் சினிமா நாயகர்கள் எதிர்பார்க்குமளவுக்கு ‘அடக்கமான பெண்’ வேண்டுமென்றால், கல்லறைக்குச் சென்று அங்கே ‘அடக்கமாயிருக்கும் பெண்களைத்தான்’ தோண்டியெடுத்துக் கொண்டுவர வேண்டும். பெண்களின் குணநலன்களைப் படமாக்குவதிலேயே இவ்வளவு அர்த்தமற்ற, பின்தங்கிய சிந்தனைகள் இருக்கின்றன என்றால், அவர்களது காதல் உணர்வுகளையும் பாலியல் தேவைகளையும் குறித்து உண்மையைப் பேசும் தமிழ்ப்படங்கள் இந்த ஜென்மத்தில் வரப்போவதில்லை.
ஆங்கிலப் படங்களை அவற்றின் தன்மை சார்ந்து பிரித்துத்தான் (Genre) வெளியிடுகிறார்கள். அறிவியல் படத்தில் அறிவியல்தான் இருக்கும். (Science Fiction) நகைச்சுவைப் படங்களில் நகைச்சுவைதான் மேலோங்கியிருக்கும் (Comedy) இசை சார்ந்த படங்களில் இசைதான் அதிகமிருக்கும் (Musical genre). பெண்களின் உணர்வுகளைப் பேசும் படம் என்ற அடையாளத்துடன் வெளிவரும் படங்களில் உண்மையாகவே பெண்களின் அடக்கப்பட்ட உணர்வுகள் பேசப்பட்டிருக்கும்.
பெரும்பாலும் அயல் நாட்டுப் படங்களில் சரியோ, தவறோ அவர்களின் வாழ்க்கைமுறை அப்படியே உள்ளது உள்ளவாறு பதிவு செய்யப்பட்டிருக்கும். நாம் நேரடியாக அவர்களிடம் பேசிப் பழகும்போதுகூட அத்திரைப்படங்களுக்கும், அந்த மக்களின் சிந்தனைகள் மற்றும் வாழ்க்கை முறைக்கும் பெரிதாக வேறுபாடுகள் இருப்பதில்லை. நம் அண்டை மாநிலங்களின் திரைப்படங்கள்கூட பெரும்பாலும் அப்படியாகத்தானிருக்கின்றன.
நம் ஊர் திரைப்படங்களில்தான் முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைப்பதைப் போல எதார்த்த காதல் மற்றும் பாலியல் வாழ்வுக்கும், திரைப்படங்களில் காட்டப்படும் வாழ்வியல் மற்றும் உணர்வியலுக்கும் மிக மிகப் பெரிய இடைவெளி இருக்கிறது. எத்தனை பொழுதுபோக்குப் படங்களை வேண்டுமானாலும் வெளியிட்டுக் கொள்ளுங்கள். ஆனால், அவற்றில் காதல் என்ற பெயரில் உண்மைக்குப் புறம்பான விஷயங்களைச் சேர்க்காதீர்கள். கேட்டால், ‘மசாலா’ என்பார்கள். என்னத்தைச் சொல்ல?
வெளிநாட்டினர் யாராவது நம் திரைப்படங்களைப் பார்த்தால் இதில் நிமிடத்துக்கு நிமிடம் வரும் சண்டைக்காட்சிகளையும் பாடல் காட்சிகளையும் பார்த்து, ‘ஆஹா… தமிழ் நாட்டில் காதலும் வீரமும் மட்டும்தான் எப்போதும் இருக்கும் போல…’ எனப் புளகாங்கிதம் அடைந்துவிடுவார்கள். என்னிடம் இப்படிக் கேட்டே கேட்டிருக்கிறார்கள். ஆனால், நம் எதார்த்த வாழ்க்கை முறை அப்படியாயிருக்கிறது? வேறுநாட்டவர்கள் அப்படி நினைப்பதிலும் நம்புவதிலும் நமக்கு ஒன்றும் குறைந்து விடப்போவதில்லை. எந்தவித பாதிப்புக்களும் ஏற்படப்போவதில்லை. அப்படியே அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கட்டும்.
ஆனால், கொஞ்சம் கொஞ்சமாக இத்தகைய மூளைச் சலவைக்கு நாமே பழக்கப்பட்டுப் போகிறோமே அது எவ்வளவு ஆபத்தானதொரு விஷயம் என்று எப்போதாவது நினைத்துப் பார்த்திருக்கிறீர்களா? நாம் தொடர்ந்து சொல்லும் பொய்களை ஒரு கட்டத்தில் நாமே நம்பி புதை குழியில் விழுவதைப் போன்ற மனநிலைதான் இது. ஏன் விவாகரத்து செய்யப் போகிறீர்கள், என்ன பிரச்னை உங்கள் திருமண வாழ்வில் என்று நம் இளைய தலைமுறையினரிடம் கேட்டுப் பாருங்கள். பாலுறவு வாழ்க்கையில் அவர்களின் அதீத எதிர்பார்ப்புகளுக்கான அடிக்கல்லை நம் தமிழ் சினிமாக்கள்தான் நச்சென்று நங்கூரமாய் பாய்ச்சியிருக்கின்றன என்பது அப்பட்டமாய் புரியவரும். கணவன் மனைவி இருவருமே மாற்றி மாற்றி அப்படித்தான் சொல்கிறார்கள்.
“நான் நம்ம சினிமால வர்றது மாதிரி இவரு ரொமாண்டிக்கா இருப்பாருன்னு நினைச்சேன்… ஆனா, உண்மைல அப்படியில்ல…”
“நான் நம்ம படத்துல வர்ற ஹீரோயின் மாதிரி அன்பா, ஒரு அம்மா மாதிரி நடந்துப்பான்னு நினைச்சேன்…” என்று பட்டியல் நீள்கிறது.
“முதலில் அந்தப் படங்களில் நடித்துள்ள நடிகர், நடிகைகளே அவர்களது அந்தரங்க வாழ்க்கையில் அப்படியெல்லாம் இருக்கமாட்டார்கள்” என்று வேப்பிலை அடித்து இவர்களுக்குப் புரிய வைக்க வேண்டியிருக்கிறது.
ஏன், வெளி மாநில திரைப்படங்களில் அப்படி மிகைப்படுத்திக் காட்டப்படுவதில்லையா என்று நீங்கள் கேட்டால், “நாம் வாழும் வீட்டிலிருப்பவர்களைப் பற்றித்தான் நாம் பேசமுடியும். என் வீட்டிலிருப்பவர்களின் நலனுக்காக நீ ஒழுங்காயிரு” என்று பக்கத்து வீட்டுக்காரர்களிடம் போய் சொல்ல முடியாது. இன்னொரு விஷயம், என்னதான் நாம் பிற மாநிலப் படங்களைப் பார்த்தாலும் ஒரு உணர்வுரீதியிலான தொடர்பு மற்றும் பற்றுதல் நமது இளைஞர்களுக்கு நமது திரைப்படங்கள் மீதும் நமது நாயகர்கள் மேலும்தானிருக்கிறது. அனைத்து இடங்களிலுமே அப்படித்தான். வெளிமாநில அல்லது வெளிநாட்டு நடிகர் நடிகைகளிடம் பெரிதாக உணர்வுரீதியிலான ஒரு பிணைப்பு இருக்காது. அப்படியிருக்க, எவ்வளவு பொறுப்புணர்வுடன் தங்கள் உயிரினும் மேலான ரசிகர்களின் உண்மையான உணர்வுகளை மேம்படுத்த உதவும் திரைப்படங்களில் நடிக்க நம் அபிமான நடிகர், நடிகைகள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்?
பெண்களைப் பற்றிய படம் அல்லது அவர்களின் உணர்வுகளைப் பேசும் படம் என்ற அடையாளத்துடன் வெளிவந்த பல படங்கள் கூட வியாபாரக் கூறுகளுக்காக (Commercial aspects) நீர்த்துப் போய்தான் வெளிவந்திருக்கின்றன. ஒருவேளை அந்தக் கதாநாகியோ அல்லது கதாநாயகனோ இயல்பாக சித்தரிக்கப்பட்டிருந்தால்கூட, மற்ற கதாபாத்திரங்களும் வலியப் புகுத்தப்பட்டிருக்கும் பாடல்களும் அந்த இயல்பான போக்கைத் திசைதிருப்புபவையாக அமைந்துவிடுகின்றன. படம் பார்த்துவிட்டு திரையரங்கை விட்டு வெளியே வரும்போது அந்த செயற்கையான காட்சிகள்தான் பார்வையாளர்கள் மனதில் ஆழமாய் பதிந்திருக்கின்றன. தொடர்ந்து பத்து பதினைந்து படங்கள் நம் உணர்வுகளின் எதார்த்தத்தைப் பேசுபவையாக மட்டுமே எடுக்கும்போது வேறு வழியில்லாமலாவது மக்கள் அவற்றைப் பார்க்கத் தொடங்குவார்கள்.
அப்படிப் பார்த்துப் பழகிய பிறகு எப்படி ஈரானிய படங்கள் நமக்குப் பிடிக்க ஆரம்பித்தனவோ அதே போன்று தமிழ்ப்படங்களில் நல்ல படங்கள் மீது மட்டும் நமது ரசனை மாறிவிடும். நம் மனம் தானாகவே குப்பைப் படங்களைப் புறக்கணிக்கத் தொடங்கிவிடும். ஆபாசம் சார்ந்த விஷயங்களில் மட்டும் இரட்டை அர்த்தம் பொதிந்த பல வார்த்தைகள் இடம்பெற்றிருக்கும் நமது தமிழ்த் திரைப்படங்களில், மனம் மற்றும் உணர்வுகள் சார்ந்த எந்த விஷயமும் நுணுக்கமாக வெளிப்படுத்தப்படுவதில்லை. அதனால் இன்றைய தலைமுறையினருக்கே, மென்மையான, வெளிப்படையாக சொல்லப்படாத பிறரது உணர்வுகளைப்புரிந்து கொள்வதில் மிகப் பெரிய சிக்கலிருக்கிறது. உண்மை வாழ்க்கையில் இது வெளிப்படும்போது அந்த உறவே சுவாரஸ்யமற்றதாகவும், நெருக்கமான புரிதலில்லாமலும் ஆகிவிடுகிறது. காரணம், அத்தகைய புரிந்து கொள்ளுதலுக்கு நாம் அவர்களைப் பழக்கப்படுத்தவில்லை. பிறகு எப்படி திடீரென திருமண உறவுக்குள் நுழைந்தவுடன் மட்டும் ஒருவன் அல்லது ஒருத்தி தன் துணையின் உணர்வுகளை அவர்கள் சொல்லாமலேயே புரிந்துகொண்டு செயல்பட முடியும்?
திரைப்படங்களும் புத்தகங்களும் உண்மையான காதல், அன்பு, காமம் மற்றும் பாச உணர்வுகளைப் பதிவு செய்யத் தொடங்கினால், மக்களின் உண்மையான பிரச்னைகளுக்குத் தீர்வுகளைத் தரத் தொடங்கினால், அவர்கள் நீலப் படங்களை நோக்கி படையெடுக்க வேண்டிய அவசியமிருக்காது. மனநல ஆலோசனைக்காக நிபுணர்களைத் தேடியும் விவாகரத்துக்காக நீதிமன்றங்களுக்கு படையெடுக்கவும் வேண்டிய தேவையிருக்காது. பொய்யான உச்சக்கட்டத்தைப் பற்றி வெளிப்படையான கருத்துக்களை ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி காட்சிப்படுத்தியிருக்கிறது.
செயின்ஃபெல்ட் (Seinfeld) என்ற அமெரிக்கத் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் முக்கிய கதாபாத்திரங்களான ‘எலைன் மற்றும் க்ரேமெர்’ (Elaine and Kramer) அதில் ‘பெண்களின் பொய்யான உச்சக்கட்டத்தை’ “ஆம்…உண்மைதான்…” என்று ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். ஜெர்ரியின் பெண்தோழி அவனது நட்பைத் தக்க வைத்துக் கொள்வதற்காக ஒவ்வொரு முறையும் அவனுடனிருக்கும்போது பொய்யாக உச்சக்கட்டம் அடைவதைப்போலக் காட்டிக்கொள்வதாக ஒப்புக் கொள்வதும் இத்தொடரில் காட்டப்பட்டுள்ளது. அடுத்தது பெண்களின் பொய்யான உச்சக்கட்டத்தை அப்பட்டமாக வெளிப்படுத்தி ‘அப்ளாஸ்’ வாங்கிய பிரபலமான திரைப்படம் ‘When Harry met Sally’. ஹாரியாக பில்லி கிறிஸ்டலும் சாலியாக மெக் ரயனும் நடித்திருப்பார்கள். கதாநாயகனுக்கும் கதாநாயகிக்குமிடையேயிருக்கும் நட்பு, காதல் இவற்றை வெளிப்படுத்தும் படம்.
ஆணுக்கும் பெண்ணுக்குமிடையே காமமில்லாத நட்பு (Platonic friendship) மட்டும் இருக்க முடியுமா என்பதைப்பற்றிப் பேசும் இந்தப் படத்தில் ‘பெண்களின் பொய்யான உச்சக்கட்டத்தை’ப் பற்றிய விவாதம் கதாநாயகனுக்கும் நாயகிக்கும் எழும். பார்ட்டி நடந்து கொண்டிருக்கும் ஒரு உணவகத்தில் அந்த விவாதம் எழும்போது, “அதெப்படி பொய்யான உச்சக்கட்டம் சாத்தியப்படும்? எப்படி அவ்வாறு ஒரு பெண்ணால் நடிக்க முடியும்?” எனக் கதாநாயகன் மறுத்துக் கேள்வியெழுப்ப, “இப்படித்தான்…” என்று கதாநாயகி உடலுறவின் உச்சக்கட்டத்தில் பெண்கள் எழுப்பும் ஒலிகளையும் உணர்ச்சிகளுடன் கூடிய ஓசைகளையும் எழுப்புவாள். அவள் அப்படி நடிப்பதைப் பார்த்து கதாநாயகன் அதிர்ச்சியின் உச்சத்தில் வாயடைத்துப்போய் அவளைப் பார்ப்பான். அங்கிருக்கும் அனைவரும் என்ன நடக்கிறது என்ற ஆர்வத்துடனும் கூச்சத்துடனும் அவளையே குறுகுறுவெனப் பார்த்துக் கொண்டிருக்க கதாநாயகன் வெட்கத்துடன் நெளிவான்.
பெண்களால் பொய்யான உச்சக்கட்டத்தை வெகு இயல்பாக நடிக்க முடியும் என பகிரங்கமாக நிரூபித்த திரைப்படக் காட்சி இது. கதாநாயகி அப்படி நடிக்கும்போது, கதாநாயகனின் முகத்தில் படியும் அதிர்ச்சிதான், அந்தப் படத்தைப் பார்த்த ஆண்கள் அனைவருக்கும் தோன்றியிருக்கும். ‘நம்ம பொண்டாட்டியும் இப்படித்தான் தினமும் நடிச்சிட்டிருக்காளோ…?’ என்று சில கணங்கள் ஆடித்தான் போயிருப்பார்கள்.
இன்னும் பேசுவோம்…
படைப்பு:
செலின் ராய்
காட்சித்தகவலியல் (Visual communication) துறையில் இளங்கலையும், இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் (Mass communication & Journalism) உளவியல் (Psychology) இவையிரண்டிலும் முதுகலைப் பட்டமும் அழகியலில் (Advance Diploma in Beautician) அட்வான்ஸ்டு டிப்ளமோ பட்டமும் பெற்றவர். விரிவுரையாளருக்கான தேர்வில் தேர்ச்சி பெற்று (UGC – NET) பல கல்லூரிகளில் துறைத்தலைவராகப் பணியாற்றியவர்.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு விடுமுறையில் எழுதத் தொடங்கி, தமிழில் பல முன்னணி இதழ்களில் எழுதியவர். புத்தகங்கள், மொழிபெயர்ப்பு நூல்கள் எழுதியுள்ளார். பிரபல பெண்கள் பத்திரிக்கைக்கு 21 வயதிலேயே ஆசிரியரான போது, ‘ The Youngest Editor of Tamilnadu’ என ‘The Hindu’ பத்திரிக்கை செய்தி வெளியிட்டது. 53 ஆடியோ மற்றும் வீடியோ சிடிக்களை பல தலைப்புகளிலும் வெளிட்டுள்ள இவர் எழுதுவதுடன் உறவுச் சிக்கல்களைத் தீர்ப்பதற்கான பல பயிலரங்குகளை தமிழகமெங்கும் நடத்தி வருகிறார். இவருக்கு மனித உரிமைக் கழகம் மனித நேயத்துக்கான விருது வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.