மார்ச் 2019, நான் ஃபேஸ்புக்கில் ஒரு நூலைக் குறித்த காட்டமான விமர்சனத்தைப் பதிவு செய்தேன். இணையத்தில் இயங்கும் குடும்ப நாவல் எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் பலரும் அந்தப் பதிவிற்குக் கீழ் தங்கள் ஆதரவைப் பதிவு செய்தார்கள்.
அச்சமயத்தில் என்னுடைய இரண்டு நாவல்கள் மட்டுமே புத்தகமாகப் பதிப்பிக்கப்பட்டு இருந்தது. மேலும் நான் எழுதிய ‘அவள் திரௌபதி அல்ல’ என்கிற நாவல் இணைய வாசகர்களிடையே அதிகம் பேசப்பட்டதினால் நானும் என் எழுத்தும் குடும்ப நாவல் உலகத்தில் ஓரளவு பரிட்சயமாகியும் இருந்தோம்.
அந்த நேரத்தில் நான் எழுதிய இந்தப் பதிவு பலரின் கவனத்தையும் என் பக்கம் திருப்பியது. ஆனால், இது எதுவும் திட்டமிட்டுச் செய்யப்பட்டத்தில்லை. அந்த நேரத்து எனது கோபம் மற்றும் ஆதங்கத்தை நான் அந்தப் பதிவில் வெளிப்படுத்தினேன்.
அன்றைய எனது கோபத்தையும் ஆதங்கத்தையும் புரிந்து கொள்ள வேண்டுமென்றால் கிண்டில் நடத்திய ‘பென் டூ பப்ளிஷ்’ போட்டி பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும்.
Short form – இரண்டாயிரம் முதல் பத்தாயிரம் வார்த்தைகளுக்கான நூல்கள் மற்றும் long form – பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட வார்த்தைகளைக் கொண்ட நூல்கள். போட்டியிலுள்ள இரண்டு பிரிவுகளிலும் கதை, கவிதை, கட்டுரை என்று எதை வேண்டுமானாலும் எழுதலாம்.
போட்டியின் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து மூன்று மாதக் கால அவகாசத்திற்குள் கிண்டில் செயலியில் பென் டூ பப்ளிஷ் என்கிற குறியீட்டு வார்த்தையை இணைத்து தங்கள் நூல்களைப் பதிப்பிக்க வேண்டும்.
இணையத்திலோ அல்லது அச்சுப் புத்தகமாகவோ அந்தப் போட்டியில் பதிப்பிக்கப்பட்ட நூல்கள் வெளியாகி இருக்கக் கூடாது. ஆரம்பத்தில் ஆங்கில மொழியில் மட்டுமே நடத்தப்பட்ட இந்தப் போட்டி 2018ஆம் வருடத்தில் இந்திய மொழிகளில் இந்தி மற்றும் தமிழிலும் கொண்டு வரப்பட்டது. பெரிய நூலுக்கு முதல் பரிசு ஐந்து லட்சம். சிறிய நூலுக்கு ஐம்பதாயிரம்.
இலக்கிய உலகம், குடும்ப நாவல் உலகம் என்று பாரபட்சம் இல்லாமல் பல எழுத்தாளர்களின் கைவண்ணத்தில் பல விதமான நூல்கள் இந்தப் போட்டிக்காக வென்று பதிப்பிக்கப்பட்டன.
2018ஆம் வருடம் நிகழ்த்தப்பட்ட பென் டூ பப்ளீஷ் போட்டியின் இறுதிச் சுற்றுக்கான தேர்வுகள் 2019இல் மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டது. அதாவது காலக்கெடு முடிந்து மூன்று மாதத்தில் பல நூறு நூல்களில் ஐந்து நூல்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டது. அதாவது அந்நூல்களுக்கு வந்த விற்பனை மற்றும் விமர்சனங்களின் அடிப்படையில். அவற்றை நீதிபதி குழு படித்து முதல் மூன்று பரிசிற்குத் தகுதியான நூல்களை அறிவிப்பார்கள்.
அங்கிருந்துதான் இந்தப் பிரச்னையும் பற்றிக் கொண்டது. பெரிய நூல்களின் பிரிவில் தேர்வான ஐந்து நூல்களில் ஒன்றான ‘நீலச்சாயக்காரி’ என்கிற நூலைத்தான் நான் எனது ஃபேஸ்புக் பதிவில் விமர்சித்திருந்தேன்.
அதுவரை நான் படித்திராத மகா மட்டமான நூல் அதுவாகத்தான் இருக்கும். தத்து பித்து என்று பேச்சு வழக்கில் கிறுக்கப்பட்டிருந்த அந்த நூலில் தரமும் இல்லை. தமிழும் இல்லை. அந்த நாவலினைப் படிப்பவர்கள் முதல் இரண்டு பக்கங்களைத் தாண்டுவதே சிரமம்தான்.
இதை எல்லாம் ஒதுக்கிவிட்டு கதையில் ஏதாவது இருக்கிறதா என்று பார்த்தால்கூட அதிலும் ஒன்றும் இல்லை. இந்த லட்சணத்தில் இரட்டை அர்த்த வசனங்கள், ஆபாசமான மொழி மற்றும் காட்சி விவரிப்புகள். கண்களை மூடிக் கொண்டுகூட அந்தக் கதையை யாரும் ஒரு போட்டியின் இறுதிச் சுற்றுக்குத் தேர்வு செய்ய மாட்டார்கள்.
இருப்பினும் அந்த நூல் தேர்வாகி இருந்தது எனில் எந்த அடிப்படையில் அது தேர்வானது. அதிகம் விற்பனையான நூல் மற்றும் விமர்சனம் வந்த நூல் என்றால்கூட அது எப்படிச் சாத்தியமானது?
அந்தக் கதை தேர்வாகும் வரை எனக்கு அந்த எழுத்தாளரைப் பற்றியும் அவர் எழுத்தைப் பற்றியும் கொஞ்சமும் அறிமுகமில்லை. நான் அந்தப் போட்டியில் பங்கேற்கவும் இல்லை. இதில் எனக்குத் தனிப்பட்ட கோபம், காழ்ப்புணர்ச்சி என்று எதுவும் கிடையாது.
ஆனால் அந்த நீலச்சாயக்காரி எழுத்தாளர் குடும்ப நாவல் தளம் ஒன்றில் முன்பு எழுதி வந்திருக்கிறார். சில வாசகரிடமிருந்து அவரின் எழுத்திற்கு எதிர்ப்புகள் எழுந்த காரணத்தால் அவர் அத்தளத்தை விட்டு வெளியேறி, அவருக்கு என்று தனியாக இணையதளம் தொடங்கி நடத்தி வருகிறார். மேலும் தன்னுடைய நூல்களை அவரின் சொந்தப் பதிப்பகத்தில் பதிப்பித்தும் வந்துள்ளார். அதுவும் குடும்ப நாவல் என்ற பெயரில்.
அவர் தளங்களில் எழுதும் எழுத்தாளர்களையும் தன்னைப் போலவே எழுதவும் அவர் வலியுறுத்தி வந்திருக்கிறார். இதனால் அவருக்கு இணையதளத்திலும் கிண்டிலிலும் வருமானம் குவிகிறது. சொந்தமாக அவர் படம் ஒன்றைத் தயாரிக்கப் போவதாக அறிவிப்பு கொடுத்துள்ளார்.
அவருடைய ஆபாசமான எழுத்தைப் படிக்கவும் ஆதரிக்கவும் யூ ட்யூப், கிண்டில் மற்றும் இணையதளங்களில் வாசகர்கள் குவியும் போது இதெல்லாம் அவருக்குச் சர்வ சாதாரணம்தான்.
தனியாகத் தளம் வைத்திருப்பது, ஆபாசமான கதைகளை எழுதுவது, பதிப்பிப்பது எல்லாம் அவருடைய விருப்பம். ஆனால் போட்டி என்று வரும் போது எந்த வகையிலும் தகுதியே இல்லாத ஒரு நாவல் எப்படி இறுதிச் சுற்றுக்குத் தேர்வானது?
இத்தனைக்கும் அந்தப் போட்டியில் நிறையப் பெண் எழுத்தாளர்கள் வித்தியாசமான படைப்புகளை எழுதி பதிவேற்றம் செய்திருந்தார்கள். எனக்கு இருந்த அதே ஆதங்கமும் கோபமும் அந்தப் போட்டியில் பங்கு பெற்ற எழுத்தாளர்களுக்கும் இருந்ததினாலேயே என்னுடைய பதிவிற்கு ஆதரவுகள் குவிந்தன.
இந்த நிலையில் திடீரென்று இறுதிச் சுற்றிலிருந்து நீலச்சாயக்காரி நாவல் தகுதி நீக்கம் செய்யப்பட்டது. அது என்னுடைய பதிவினால் மட்டும் நிகழவில்லை. எனக்கு முன்பாகவே விமர்சகர் சிபி தி-ஸ்பார்ட்டன் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் இந்த நாவலின் தேர்விற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
மேலும் பி. கே என்கிற பெயரில் ஒருவர் அந்த நூலுக்கான தன்னுடைய எதிர்ப்பை ‘நீலசாயக்காரியின் வெற்றி’ என்று ஒரு நூலாகவே கிண்டிலில் பதிவேற்றம் செய்திருந்தார்.
இது போன்ற பலரின் எதிர்ப்புகள் அந்த நூலை நீக்கக் காரணமாக அமைந்திருக்கலாம். ஆனால், அந்த நீலச்சாயக்காரி எழுத்தாளரின் மொத்தக் கோபமும் என்னுடைய ஒற்றை பதிவின் மீது திரும்பிவிட்டது.
அதற்குக் காரணம் என்னுடைய பதிவிற்குக் கீழே நிறையக் குடும்ப நாவல் வாசகர்கள் மற்றும் எழுத்தாளர்கள் கருத்திட்டிருந்தார்கள். அந்த ஒட்டுமொத்தக் கூட்டத்திற்கு எதிரான தனது கோபத்தைக் காட்ட, அவர் என்னைக் குறி வைத்துத் தாக்கினார்.
அதுவரை நான் கேட்டிராத மிக மிக ஆபாசமான சொற்கள் அத்தனையையும் என்னுடைய பதிவின் கருத்துப் பெட்டிகளில் கொட்டினார். அவ்வளவு வன்மமும் வக்கிரமும் நிறைந்த வார்த்தைகள். எனக்கு அந்த நொடி என்ன செய்வதென்று புரியவில்லை. பதட்டத்தில் அவருடைய கருத்தை எல்லாம் நீக்கிக் கொண்டே வர, அவரும் நிறுத்தாமல் தொடர்ந்தார்.
அதுவும் தன்னுடைய சொந்தப் பதிப்பகத்தின் பெயரிலிருந்த ஐடியிலேயே தைரியமாக வந்து கருத்துப் பெட்டியில் என்னையும் என் பெயரையும் குறிப்பிட்டு அசிங்கமாக எழுதினார்.
உடனே சிபி, என் பதிவில் இருக்கும் அந்த ஆபாசமான கருத்துகளை எல்லாம் நீக்க வேண்டாமென்றும், அதனைச் சட்டப்படி அணுகலாம் என்றும் ஆலோசனை கூறினார். சிபியைப் போலவே மற்ற தோழமைகளும் இதனைச் சட்ட ரீதியாக அணுகச் சொன்னார்கள். அப்படிச் சொல்வது என்னவோ சுலபம்தான். ஆனால் அது எவ்வளவு தூரம் சாத்தியம். நடந்த பிரச்னையை வீட்டில் சொன்னால் அவர்கள் என்னைப் புரிந்து கொள்வார்களா?
அப்படியே புரிந்து கொண்டாலும் சட்டரீதியாகப் போகும் முடிவை அவர்கள் ஏற்பார்களா அல்லது ஆதரிப்பார்களா? இதில் அறிவுரை கூறும் நண்பர்கள் யாரும் நமக்காக வந்து காவல் நிலையத்தில் நிற்கவோ அல்லது பேசவோ போவதில்லை.
இந்தச் சம்பவத்திற்குக் குடும்ப நாவல் எழுத்தாளர்கள் சிலர் ஃபேஸ்புக்கில் கண்டனப் பதிவுகள் போட்டார்கள் என்றாலும் அதில் பெரும்பாலானோர் வாயை மூடிக் கொண்டு வேடிக்கை மட்டும்தான் பார்த்தார்கள்.
அதுவும் இல்லாமல் யார்தான் பொதுவெளியில் இத்தகைய கீழ்த்தனமான வசைகளைக் கேட்க விரும்புவார்கள். மேலும் இந்தளவு தரம் தாழ்ந்து இறங்கிப் பேசுபவர்களிடம் சரிக்குச் சரியாகப் பேசி ஜெயிக்கவும் முடியாது. அதனால் ஏற்படுகிற மனவுளைச்சலை இங்கே உள்ள பல பெண்களால் தாங்கவும் முடியாது.
சமூக ஊடகங்களில் இதெல்லாம் இயல்புதான். முக்கியமாகப் பொதுவெளியில் வந்து சுதந்திரமாகக் கருத்துச் சொல்லும் பெண்களின் வாயை அடைக்க, அவர்கள் கையிலெடுக்கும் ஆயுதம் என்பது ஒழுக்கம்தான். அதனைக் கேள்விக்குட்படுத்திக் கூனிக் குறுகிப் போகச் செய்வது.
இந்தப் பயம்தான் அவர்களைப் போன்றோரின் ஆயுதம். தங்களை எதிர்த்து யாரும் வாயைத் திறக்கவிடக் கூடாது. ஆனால் அவருடைய நோக்கத்தை நானும் நிறைவேற்றினால் மீண்டும் மீண்டும் இதே ஆயுதத்தை அவர் தொடர்ந்து கையிலெடுப்பார். ஆதலால் எத்தனை சிக்கல்கள் வந்தாலும் பரவாயில்லை என்று நான் சட்டரீதியாக அணுகுவது என்று முடிவுக்கு வந்தேன்.
சட்டம் நமக்கு நியாயம் வழங்குமா, வழங்காத என்பதெல்லாம் அடுத்த விஷயம். இது போன்ற சட்டம் இருக்கிறது என்பதை அவருக்குத் தெளிவுபடுத்த வேண்டும். எல்லா நேரத்திலும் எல்லாரிடமும் இந்த ஆயுதம் செல்லுபடியாகாது என்பதையும் புரிய வைக்க வேண்டும்.
ஆதலால் கமிஷனர் அலுவலகத்திற்குச் சென்று சைபர் க்ரைமில் புகார் ஒன்றைப் பதிவு செய்தேன்.
பின்னர் இந்தப் புகாரின் அடிப்படையில் காவல் நிலையத்திலிருந்து அந்த எழுத்தாளருக்கு அழைத்து எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அந்தப் பெண் காவலர் இந்த விஷயத்தில் தொடர்ந்து வேறு ஏதாவது தொல்லைகள் வந்தால் தயங்காமல் அவரை அணுகச் சொல்லி என்னிடம் உரைத்தார்.
பல நேரம் பயந்து ஒடுங்கிப் போவதைம் விடவும் அதனைத் தைரியமாக எதிர்கொள்வதுதான் சில பிரச்னைகளுக்கான சரியான தீர்வாக இருக்க முடியும். இதற்கு மேலும்கூட இந்த விஷயத்தைக் கொண்டு சென்றிருக்க முடியும். ஆனாலும் இதனை வளரப்பதில் என்னுடைய நேரமும் சேர்ந்துதான் வீணாகும்.
இதில் என் வீட்டினர் எந்தக் கேள்வியும் கேட்காமல் எனக்கு ஆதரவாக நின்ற போதும் காவல் நிலையத்திலுள்ள அதிகாரிகள் சிலர், ‘உங்களுக்கு எதுக்கு இந்தத் தேவை இல்லாத வேலை மேடம்?’ என்று கேட்டார்கள். இந்தக் கேள்வி இன்று வரையிலும் என்னைத் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதற்கு என்ன பதில் சொல்வது?
நம் கண் முன்பாக ஒரு சாக்கடையின் மூடி திறந்திருந்தால் மூக்கைப் பொத்திக் கொண்டு கடந்து போய் விடுவோமா? அப்படிக் கடந்து போவதுதான் சுலபம் என்றாலும் கொஞ்சமே கொஞ்சம் சமூக அக்கறை இருந்தால் அதனை மூடுவதற்கான முயற்சியை எடுப்போமா இல்லையா?
சாக்கடைகளே இல்லாமல் ஆக்க முடியாதுதான். அதே நேரம் அது பாட்டுக்கு ஓர் ஓரமாக இருந்தால் யாருக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால் அதுவே நம் வசிப்பிடங்களைச் சுற்றிப் பாயும் போதும் ‘நமக்கு அது தேவை இல்லாத வேலை’ என்று சொல்லி ஒதுங்கிப் போவோமா?
அப்போதைக்கு நீலச்சாயக்காரி பிரச்னை முடிந்திருக்கலாம். ஆனால் உண்மையான பிரச்னை என்பது அது மட்டுமே இல்லை. அந்தப் போட்டியின் இறுதிச் சுற்றுத் தேர்வு.
கிண்டிலில் கட்டமைத்திற்கும் அல்காரிதத்தின்படி அந்த நூல் அதிகமாக விற்கப்பட்டதுதான் அது தேர்வாகக் காரணம். அடுத்தடுத்த போட்டிகளிலும் இது போன்ற மட்டமான தேர்வுகள் சில இடம்பெற்றன. அடுத்தடுத்த வருடங்களில் நடந்த இதே போட்டியில் அட்டைப் படம் தொடங்கி ஆபாசமான சொல்லாடல்கள் அதிகம் காணப்பட்ட பிறழ்வு எழுத்து ஒன்றுக்கு முதல் பரிசும் கிடைத்தது.
இங்கே Kindle content guidelinesஇல் உள்ள offensive content என்கிற வரிகளை நான் கோடிட்டுக் காட்ட விரும்புகிறேன்.
‘we don’t sell certain that we determine is hate speech, promotes the abuse of sexual exploitation of children, contains pornography, glorifies rape or pedophilia, advocates terrorism or other material we deem inappropriate or offensive.’
‘அதாவது வெறுக்கத்தக்கப் பேச்சு, பாலியல் ரீதியாகக் குழந்தைகளை முறை தவறி பயன்படுத்துவதை ஊக்குவித்தல், ஆபாசப் படங்கள், பலாத்காரம் அல்லது பீடோபிலியாவை உயர்த்திப் படித்தல், பயங்கரவாதத்தை ஆதரித்தல் போன்றவை அனைத்தையும் கிண்டில் ஆபத்தான மற்றும் புண்படுத்தக்கூடிய உள்ளடக்கமாகக் கருதுகிறது.’
இதெல்லாம் விதிமுறையில் இருக்கிறதே தவிர நடைமுறையில் இல்லை. சரி கிண்டில்தான் இப்படி என்றால் பிரதிலிபி பக்கம் போய்ப் பார்த்தால் விதிமுறை பட்டியல்கள் என்று அங்கு எதுவும் காணப்படவில்லை.
ஆனால் ஆபாசமான கதைகளைப் புகார் செய்யும் போது அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கிறார்கள். மேலும் அந்த எழுத்தாளர்களுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்படுகிறது. இருப்பினும் அங்கேயும் சப்ஸ்க்ரிப்பஷன்களில் உள்ள நூல்கள் எல்லாம் பெரும்பாலும் நீக்கப்படுவதில்லை.
இந்த கார்பரேட் செயலிகளின் குறிக்கோள் என்பது வெறும் வியாபாரம்தான். அந்த வியாபாரத்திற்காக நீலச்சாயக்காரி போலப் பல நூறு நீலச்சாயக்காரிகளை அவர்கள் ஊக்குவித்து வளர்த்தும் விடுவார்கள்.
ஆனால் இது போன்ற நூல்கள் அதிகரிப்பதால் தரமான நூல்கள் பின்னுக்குத் தள்ளப்படும். குடும்ப நாவல்களைத் தேடி வாசிக்கும் வாசகர்கள் தவறுதலாக இது போன்ற நூல்களை வாசிப்பார்கள். சிலருக்கு இது அருவருப்பை உண்டாக்கும். சிலரை இது போன்ற வாசிப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக அடிமைப்படுத்திவிடும்.
இது போன்ற கதைகளைத் திரும்பத் திரும்ப வாசிக்கத் தூண்டும். பான் அடிக்ஷன் (Porn addiction) ஆபாசக் காணொலிகள் பார்ப்பது மட்டும் இல்லை. இது போன்ற கதைகளை வாசிப்பதுதான்.
எல்லாவற்றிற்கும் மேல் குடும்ப நாவல் என்கிற சாயம் பூசி உலா வருவது குடும்ப நாவல் எழுத்தாளர்களைப் பெருமளவில் பாதிக்கிறது. இந்த நூல்களுக்குக் கிடைக்கும் முன்னுரிமைகளால் எழுதுவதற்கான ஊக்கத்தை அவர்கள் இழக்கிறார்கள்.
சிலர் வாசகர்களை ஈர்க்கத் தங்கள் நாவல்களில் வரம்பு மீறலான காட்சிகளை அவசியமே இல்லாமல் சொருகுகிறார்கள். இதனால் ரொமான்ஸ் குறைந்து எராடிக்கா (Erotica) அதிகமாக எட்டிப் பார்க்கிறது.
ரொமான்ஸிற்கும் எராடிக்காவிற்கும் என்ன பெரிய வித்தியாசம் என்று கேட்பவர்களுக்கு ரொமான்ஸ் என்பது எல்லாரும் ரசித்து வாசிக்கக் கூடிய வகை. முகம் சுழிக்க வைக்கும் காட்சிகள் எதுவும் அதில் இடம்பெறாது. மெல்லிய காதல் உணர்வுகளை மட்டுமே அவை பேசும்.
ஆனால், எராடிக்காவில் ரசனை என்பது குறைவாக இருக்கும். காமக் காட்சிகளை உணர்வுகளைத் தூண்டும் வகையில் விவரித்து எழுதுவார்கள். இது பதினெட்டு வயதிற்குக் கீழ் உள்ளவர்கள் வாசிக்க உகந்தது அல்ல (adult fiction).
வெறும் பொழுது போக்கு வாசிப்பில் என்ன தரம் வேண்டி இருக்கிறது என்று பலருக்கும் தோன்றலாம். ஆனால் பெரும்பாலான வாசகியர் குடும்ப நாவலிலிருந்துதான் தங்கள் வாசிப்பு பயணங்களைத் தொடங்கி இருக்கிறார்கள். அவர்களைப் போன்றோரை அடுத்தடுத்த நிலை வாசிப்பிற்கு இட்டுச் செல்வது தரமான வெகுஜன வாசிப்புதான்.
நிறைய பதின்மக் குழந்தைகளை ரொமான்ஸ் நாவல்கள் ஈர்க்கின்றன. கல்லூரிப் பெண்களும் இணையத்தில் இது போன்ற கதைகளைத் தேடி வாசிக்கிறார்கள். இனி அவர்களுக்கு எல்லாம் ரொமான்ஸ்களுக்குப் பதிலாக எராடிக்காதான் அதிகம் கிடைக்கும்.
குடும்ப நாவல் எழுத்தில் பிரித்துப் பார்க்க முடியாதளவுக்கு நீலச்சாயங்கள் கலந்து போவதில் இருக்கும் மிகப் பெரிய ஆபத்தும் இதுதான்.
(தொடரும்)
படைப்பாளர்:
மோனிஷா. தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றவர். தீவிர வாசிப்பாளர் மற்றும் எழுத்தாளர். இன்று வரையில் இணையத்தில் 27 நாவல்களை எழுதி முடித்திருக்கிறார். அவற்றில் இருபது நாவல்கள் புத்தகமாகப் பதிப்பிக்கப் பெற்றுள்ளன.
பெண்ணியம் சார்ந்த கருத்துகளும் சூழலியல் சார்ந்த விழிப்புணர்வுகளும் இவரது பெரும்பாலான நாவல்களின் மையக் கருத்தாக அமைந்துள்ளன.