ஆகஸ்ட் மாதம், 2023

அண்ணா நகர் பாரதி காலனியின் பரபரப்பான தெருவின் ஒரு வீட்டின் முதல் மாடியில் கவிதாவும் ரமேஷும் குடிபுகுந்து மூன்று வருடங்கள் ஆகின்றன. திருமணம் முடிந்து இருவரும் சேர்ந்து வாழத் தொடங்கிய வீடு அது.

தெருவின் பரபரப்பு குறையத் தொடங்கிய நேரம். ஹாலில் இருந்த 32 இன்ச் டிவியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ஓடிக்கொண்டிருந்தது. இரண்டு வயது அவினாஷ் அவனுக்குப் பிடித்த பொம்மையுடன் விளையாடிக் கொண்டிருந்தான். சிறிய ரூமில் அவினாஷின் விளையாட்டுச் சாமான்கள் இறைந்து கிடந்தன. பெட்ரூமில் கட்டிலில் துணிகள் ஆங்காங்கே கிடந்தன.

கிச்சன் சிங்கில் பாதியை நிறைத்தபடி பாத்திரங்கள் கிடந்தன. ஸ்டவ்வின் இரண்டு பர்னருமே சீராக எரிந்து கொண்டிருந்தன. ரமேஷுக்கு மத்தி மீன் கொஞ்சமா கருகி இருந்தாதான் பிடிக்கும் என்பதால், வெந்த பின்னும் கல்லில் இருந்து எடுக்காமல், கரிய வைத்துக் கொண்டிருந்தாள் கவிதா.

புகையிலும் கருகிய வாசனையிலும் அவினாஷ் கண்களைக் கசக்கியபடி அழ ஆரம்பித்தான். ஸ்டவ்வை அணைத்துவிட்டு, வேகமாக கிச்சன் கதவைச் சாத்திவிட்டு, அவினாஷைத் தூக்கி மடியில் வைத்துக்கொண்டாள். அவினாஷை பாத்ரூம்க்கு அழைத்துப் போய் முகம் கழுவி, உடைமாற்றிக் கொண்டிருக்கையில் கவிதாவின் மனம் வேண்டிக் கொண்டதெல்லாம், “ஆண்டவா இன்னைக்கு அத்தான் குடிக்காம வரணும்” என்பதே.

ரசமும் சோறும் பிசைந்து ஊட்டியவுடன், அவினாஷின் கண்கள் சொருகுவதைக் கவனித்தவள், அவனைத் தோளில் போட்டு தூங்க வைத்தாள். மெல்லிய சத்தத்தில் தாலாட்டு பாடிக்கொண்டிருக்கையில், ரமேஷ் வீட்டின் உள்ளே நுழைந்தான்.

கையிலிருந்த லேப்டாப் பேக்கை சோபாவில் போட்டுவிட்டு, சாப்பிட உட்கார்ந்தான் ரமேஷ். பாத்திரம் ஒன்று கீழே தவறி விழுந்தது. விழுந்த பாத்திரத்தைக் காலால் மேஜைக்கு அடியில் ஒதுக்கி வைத்துவிட்டுச் சாப்பிட ஆரம்பித்தான்.

கட்டிலில் கிடத்திய அவினாஷின் தூக்கம் கலைந்து விடாதபடி, அமைதியாக, அவனருகே உட்கார்ந்து, தட்டிக் கொடுத்தாள் கவிதா.

பெட்ரூமின் உள்ளே நுழைந்த ரமேஷிடம் இருந்து மீனும் ஒருவித வாடையும் சேர்ந்து வந்ததில் கவிதாவுக்குக் குமட்டியது. கட்டிலில் இருந்து எழுந்து கொண்டாள். ரமேஷ் எதுவும் பேசாமல் அவினாஷுக்கு அடுத்ததாகப் படுத்துக் கொண்டான்.

அத்தான், “பையன ஸ்கூல்ல போடணும்” என்று தயங்கியபடி சொன்னாள் கவிதா.

“ரொம்ப டயர்டா இருக்கு … என்னைக் கொஞ்சம் தூங்க விடு… எல்லாம் நாளைக்குப் பேசிக்கலாம்” என்றான் ரமேஷ்.

பெருமூச்சுடன் லைட்டை அணைத்துவிட்டு, பெட்ரூமை விட்டு வெளியே வந்தாள். ரமேஷிடம் எதுவும் பேச முடிவதில்லை. இந்த மூன்று வருடங்களில், அவர்கள் இருவரும் கலந்தாலோசித்து செய்த காரியங்கள் என எதுவுமே இல்லை.

சாப்பிட உட்கார்ந்தவள், சிறிதும் குறையாமல் இருந்த சோற்றிலிருந்து இரண்டு கரண்டி எடுத்து தட்டில் வைத்துக் கொண்டாள். மீன் வைத்திருந்த பாத்திரத்தைத் திறந்தவளுக்கு, அதில் மீன் முள்ளைத் தவிர வேறு எதுவுமே இல்லை எனப் புரிந்தது. தக்காளி ரசத்தையும் எலுமிச்சை ஊறுகாயையும் வைத்துச் சாப்பிட்டு முடித்தாள் கவிதா.

அடுத்த நாள், காலையில் 10 மணிக்கு ஆபீஸ் கிளம்ப வேண்டிய ரமேஷ் 9:30 மணி வரை தூங்கிக்கொண்டிருந்தான்.

“அத்தான் மணி ஒன்பதரை ஆயிடுச்சு” என மூன்றாவது முறையாக எழுப்பினாள்.

அவசர அவசரமாகக் கிளம்பி, இட்லியை உள்ளே தள்ளிக் கொண்டிருந்த ரமேஷிடம் கவிதா, “அத்தான், அவினாஷை பிளே ஸ்கூல்ல போடணும்” என்று சொன்னாள்.

“நான் சாயந்திரம் வந்து பேசுறேன். இப்ப டைம் ஆயிடுச்சு. 11 மணிக்கு மீட்டிங் இருக்கு… உடனே கிளம்பணும்…” என்று திரும்பிப் பார்க்காமல் பதில் சொன்ன ரமேஷிடம் இருந்து தூரமாக நின்றுகொண்டாள் கவிதா.

பொதுவாக, கவிதாவுக்கு ஆபிஸ் நேரத்தில் ரமேஷிடம் இருந்து போன் வருவதில்லை. ஆனால், அன்று அத்தான் காலிங் என்று போன் காட்டியதும் கொஞ்சம் புன்னகை வந்தது முகத்தில்.

“சாய்ந்தரம் நம்ம வீட்டுக்கு என்னோட பிரெண்ட் ஒருத்தன் வர்றான். சிக்கன் எடுத்துட்டு வந்து சமைச்சி, டின்னர் ரெடி பண்ணி வை.”

“ஓ… என்கிட்ட சிக்கன் வாங்குறதுக்கு காசு இல்லை” என்றாள்.

“ஏன் போன வாரம்தானே ஐநூறு ரூபாய் கொடுத்தேன்.”

“நீங்க கொடுத்து ஆறு நாள் ஆச்சு. நான் அவினாஷ் கூட்டிட்டு பார்க் வந்தேன். பக்கத்துல நிறைய பேர் இருக்காங்க” என்றபடி போனை துண்டித்தாள் கவிதா.

வீட்டை நோக்கி நடந்தவளுக்கு சும்மாவே எரிந்து விழுவாரு… இப்ப டின்னர் ரெடி பண்ணவில்லை என்றால் இன்னும் கோபம் வருமே என்றபடி சிந்தித்தாள். வீட்டுக்கு வரும் விருந்தினர்கள் அவினாஷுக்குக் கொடுத்து செல்லும் பணம், அம்மா வீட்டுக்குப் போகும் போது உறவினர்கள் கொடுக்கும் பணம் என அவள் சேர்த்து வைத்திருந்த பணத்தில் இருந்து சிக்கன் வாங்கிக்கொண்டாள்.

வீட்டுக்கு வந்து வெங்காயம் நறுக்கிக் கொண்டிருக்கையில் மீண்டும் ரமேஷிடம் இருந்து போன் வந்தது.

“டின்னருக்கு என்ன வைச்சிருக்க?”

“சிக்கன் கிரேவியும் சோறும்.”

“நாங்க ரெண்டு பேரும் இன்னும் 2 மணி நேரத்துல அங்க இருப்போம்” எனச் சொல்லி அழைப்பைத் துண்டித்தான் ரமேஷ்.

இதுதான் சந்திரன் என தனது நண்பனை அறிமுகப்படுத்தினான் ரமேஷ். இருவரும் பேசிக் கொண்டிருந்தனர்.

அவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருப்பது, சந்திரனின் கல்யாணத்தைக் குறித்து என்பதையும், பெண் பார்த்துவிட்டு வந்ததைப் பற்றி அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் அவர்களின் பேச்சில் இருந்து புரிந்துகொண்டாள்.

“கல்யாணம் மட்டும் நல்ல டௌரி வாங்கிக்கொண்டு செய்யணும்… இல்லைனா இப்படித்தான் என்ன மாதிரி உக்காந்து இருக்கணும்?” என்றான் ரமேஷ்.

“நீங்க அரேஞ்ச்ட் மேரேஜ்தானே?” என்றான் சந்திரன்.

“ஆமா…. எங்க அம்மா நீ இந்தப் பொண்ணதான் கல்யாணம் பண்ணிக்கணும்னு சொல்லிட்டு, சொந்த தம்பி மகளை என் தலைல கட்டி வச்சிட்டு, உலகத்தில இருந்தே எஸ்கேப் ஆயிடுச்சு” என்றான்.

அதைக் கேட்ட கவிதாவுக்கு, மூச்சே நின்றுவிடும் போலிருந்தது. அவினாஷைத் தூங்க வைக்கப் போறேன் என்று பொதுவாகச் சொல்லிவிட்டு அறைக்குள் சென்று கதவைச் சாத்திக்கொண்டாள்.

ரமேஷ் தன்னிடம் அன்பாக இருப்பதில்லை. முகம்கொடுத்து பேசுவதுகூட இல்லை. ஆனால், இப்போது ரமேஷ் அடுத்த நபரிடம் கட்டிய பொண்டாட்டியை விட்டுக்கொடுத்து பேசுவான் எனவும் தெரிந்தது. ‘ஐயோ, இந்தாள நம்பியா நான் புள்ள பெத்துக்கிட்டேன்… கடவுளே’ என நினைக்கையிலே, மனமும் உடலும் வலித்தது.

சந்திரனை அனுப்பிவிட்டு வந்தவனிடம் கவிதா, “ஏங்க, ஏன் அப்படி உங்க பிரெண்ட் முன்னாடி என்னை விட்டுக்கொடுத்து பேசுறீங்க?”

“என்ன விட்டுக் கொடுத்துப் பேசினேன்? உண்மையைத்தான் சொன்னேன்.”

“உண்மையா?”

“ஆமா… இப்ப பாரு, எங்க அம்மா இல்லை, என் பையனைப் பாத்துக்கறதுக்கு… அதுனால ராத்திரில உன்னைக் கவனிக்க முடியல” எனச் சொல்லிக் கொண்டே, தன் பக்கமாக இழுத்தான் கவிதாவை.

அவளுக்கு துளியும் பிடிக்கவில்லை, அந்தத் தீண்டல் ஓர் அடிமையிடம், உன் எல்லைக் கோடு இதுவெனச் சொல்வது போல இருந்தது.

“இல்லை… நீங்க அப்படிச் சொன்னது, எனக்கு நிஜமாவே ரொம்ப கஷ்டமா இருந்துச்சு” என்றாள் அழுதுகொண்டே.

“என்னதான் உனக்கு? சும்மா அழுதுகிட்டு… உனக்கு இப்ப என்னதான் பிரச்னை? எப்பப் பாரு, ஏதோ தரித்திரம் மாதிரி இருக்கு. ஒரு நாள் கொஞ்சம் சந்தோஷமா இருக்கலாம்னு பார்த்தா, அழுது வடிஞ்சிட்டு… ச்சைக் … இந்தக் கல்யாணம் முடிஞ்சதிலிருந்து, என் சந்தோஷமே போச்சு…”

கவிதா அமைதியானாள். தனது கண்ணீர் அவனை எந்த விதத்திலும் பாதிக்காது எனப் புரிந்தது.

கவிதாவின் தோளை வருடியபடி பேச ஆரம்பித்தான்,

“உனக்கு வீட்டுக்குத் தேவையான மளிகை பொருள் எல்லாம் நான் வாங்கிப் போடுறேன். இதுக்கு மேல உனக்கு என்ன வேணும்? பக்கத்து வீட்ல அந்த சேகர பாரு பொண்டாட்டிய எவ்வளவு அடிக்கிறான்? நான் ஒன்னும் உன்னை அடிக்கறது இல்ல. ஆனாலும் நீ எதுக்கு அழுவுறன்னு எனக்குப் புரியவே இல்லை.”

அவளை முத்தமிட்டு, தனக்கான அந்த நேரத்தின் தேவையை முடித்துக் கொள்ள ஆயத்தமானான்.

அமிலமென்று தெரிந்தும் அதனுள்ளே அமிழ்ந்து போகத் தயாரானாள் கவிதா. எந்த எதிர்ப்பும் காட்டாமல், சலனமற்றிருந்தாள்.

இதயத்தைச் சுக்கு நூறாக உடைத்துவிட்டு இதம் தருவதாக நினைத்துக்கொள்வார். தனக்கென தனி நியாயங்களை வைத்திருப்பர். அடுத்தவர் குறித்துத் துளியும் மதிக்கமாட்டார். இவர்களிடம் அன்பிற்காக ஏங்கி நிற்கையில், இதயத்தின் வலியைவிட, என்ன செய்வதென்று தெரியாது, அதன் சூழ்நிலைக் கைதியாக நிற்பதுதான் பெரிய வலியாக இருக்கும்.

ஒரு மாத மளிகையில் தன்னை உத்தமனாகக் காட்டிக் கொள்ளும் இந்த ஆணிடம், அவள் என்ன சொல்லிப் புரிய வைக்க, தான் உணர்வும் அறிவும் உடலும் சேர்ந்த பெண்ணுயிர் என்பதை.

(தொடரும்)