கற்பனைக்கெட்டா கொடூரம். ஒரு வரி தலைப்புச் செய்தியைப் படிக்கும் போதே வாந்தியெடுக்கத் தோன்றும் அருவருப்பு. எந்த மாதிரியான உலகில் வாழ்கிறோம் என்கிற மன உளைச்சல். இதனை மீறி இச்செய்தியை எழுத ஜிஸெல் என்கிற பெண்மணியின் உறுதியே காரணம்.

தன் கணவனும் அவன் துணையுடன் எழுபதுக்கும் மேற்பட்டோரும், தன்னை வன்புணர்ந்த குற்றத்துக்கு நீதி கேட்கிறார் இந்த 72 வயதுப் பெண்மணி.

பிரான்ஸ் நாட்டு சிற்றூர் ஒன்றில் காவலாளி ஒருவர், பெண்களின் ஆடை விலகுவதை அவர்கள் அறியாமல் வீடியோ எடுத்த ஒருவனைக் கையும் களவுமாகப் பிடித்தார். 2020ஆம் ஆண்டு நடந்தது இது. அந்த முதிய ஆணின் டிஜிட்டல் கருவிகளில் நிறைய புகைப்படங்கள், வீடியோக்கள் இருந்தன. பாலியல் வல்லுறவுக் காட்சிகளும் இருந்தன. வீடியோவில் இருந்தது அவனுடைய மனைவி ஜிஸெல் என்பது விசாரணையில் தெரியவந்தது. டோமினிக் பெலிகாட் (Dominique Pelicot) செய்த குற்றம் இப்படித்தான் வெளியில் வந்தது.

பல்லாண்டு காலம் திருமண வாழ்வில் இணைந்து வாழ்ந்த தம்பதி இவர்கள். சண்டை சச்சரவுகள் இல்லாத நல்வாழ்வுதான். அதிகப் பணம் இல்லை என்றாலும், பெரிய குறைகளும் கிடையாது.

மூன்று குழந்தைகளைப் பெற்று வளர்த்துப் படிக்க வைத்து பணி ஓய்வுக்குப் பிறகு ஒதுக்குப்புறமான சிறிய ஊருக்குக் குடிபெயர்ந்துள்ளனர். சுமார் ஆறாயிரம் பேர் வசிக்கும் ஊர்.

டொமினிக் பெலிகாட்டின் கொடூரங்கள் அதன் பிறகே ஆரம்பித்தன. பிடிபடும் வரைக்கும், கிட்டத்தட்ட பத்தாண்டு காலம் தன் மனைவியை பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கியுள்ளான். நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்களை வரவழைத்து தினந்தோறும் தன் மனைவியை வன்புணரச் செய்திருக்கிறான். வீடியோவில் மட்டுமே எழுபதுக்கும் மேற்பட்டோர் உள்ளனர். ஜிஸலின் உணவில் தூக்க மாத்திரை, வலி நிவாரணிகள் அதிகளவில் கொடுத்து, அவரை மயக்க நிலையில் வைத்து இதையெல்லாம் செய்துள்ளான்.

ஜிஸெல், தன்னுடைய 55 வயதுக்கு மேல் இக்கொடுமையை அனுபவித்துள்ளார். அதுவும் பத்தாண்டுகளுக்குத் தொடர்ச்சியாக. இக்காலகட்டத்தில் பல்வேறு உடல்நலக் குறைபாட்டால் அவதிப்பட்டிருக்கிறார். சோர்வு, பாலியல் நோய்கள் போன்ற உடல் ரீதியான கோளாறுகளுக்குச் சிகிச்சை பெற்றிருக்கிறார். ஏன் இப்படி ஆகிறது என்பதை அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை.

அனைத்துக்கும் காரணமான கணவனோ, “நீ யாருடன் கள்ளத் தொடர்பு வைத்திருக்கிறாய்?” என்று சண்டையிட்டுக் கொண்டிருந்தான்.

எதையும் நினைவில் வைத்துக் கொள்ள முடியவில்லை, அதனால் உண்டாகும் மன அழுத்தம், குழப்பம் போன்றவற்றுக்காகவும் ஜிஸெல், மருத்துவர்களை நாடி இருக்கிறார்.

காவல்துறையினரிடம் வீடியோக்கள் சிக்கிய பிறகே அனைத்துக்கும் அவருக்குக் காரணம் விளங்கியிருக்கிறது. விவகாரம் நீதிமன்றத்துக்குச் சென்றது. இரண்டு வருட கால வீடியோ சான்றுகள் கிடைத்துள்ளன. இதிலிருந்து 72 பேரை காவல்துறை சந்தேகிக்கிறது. 50 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் 26 வயது முதல் 74 வயதுடையவர்கள். ஆன்லைன் மூலம் இவர்கள் தொடர்பு கொள்ளப்பட்டு, வீட்டுக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.

சமையல் அறையிலேயே ஆடைகளைக் கழற்றி வைக்க வேண்டும், சத்தம் எழுப்பக் கூடாது, இப்படிச் சில அடிப்படை விதிகளைச் சொல்லி இவர்களை வரவழைத்திருக்கிறான் கணவன். இவர்களில் பலர் இதற்கு முன்பு வேறெந்தக் குற்றப் பின்னணியும் இல்லாதவர்கள். வீடியோவில் உள்ள ஆண்களில் ஒருவரை மட்டும் ஜிஸெல் அறிந்திருந்தார். “பேக்கரியில் பார்த்தால் ஹாய் சொல்வேன். இவர் என் வீட்டுக்கு வந்து என்னை வன்புணர்ந்தார் என்பதை நான் ஒருபோதும் அறியவில்லை”, எனக் கூறியவர், வீடியோக்களில் தன்னையே தன்னால் அடையாளம் காண முடியவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

காவல்துறையினர் வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில் விசாரணையைத் தொடங்கி, ஜிஸலின் மருத்துவ அறிக்கைகளைப் பார்வையிட்டனர். அவரிடமும் பல மணி நேரம் பேசி என்ன நடந்திருக்கும் என்பதை விளக்கிய போது, “பிணம் போல உணர்ந்தேன்” என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார் ஜிஸல். 50 வருட வாழ்வு பொய்த்துப் போனதை அறிந்து இரண்டு சூட்கேஸ்களுடன் நடைப்பிணமாக அந்த வீட்டைவிட்டு வெளியேறினார். டிஜிட்டல் ஆதாரங்களில், டொமினிக் மகளின் படங்களும் இருந்தன. விசாரணை நடக்கும் போது இது பற்றிய கேள்விகள் வந்தன. கேட்கச் சகிக்காமல் வெளியில் வந்து வாந்தி எடுத்தார் மகள் கரோலின். பெற்றோருடன் உணவருந்த எப்போதேனும் வீட்டுக்கு வரும்போது, அம்மா டின்னர் டேபிளிலேயே தூங்கி விழுந்த நிகழ்வுகளுக்குப் பின்னால் இப்படிக் கேவலமான செயல்கள் இருக்கும் என்பதை கரோலினும் அவர் சகோதரர்களும் யூகிக்கவில்லை.

“தீயணைப்புப் படை வீரர், செய்தியாளர், மாணவர், டிரக் டிரைவர், சிறை அதிகாரி, செவிலியர், ஓய்வூதியம் வாங்கும் முதியவர், முனிசிபல் கவுன்சிலர், நமது நண்பர், சகோதரர் இப்படி எல்லாரும் இதில் இருக்கிறார்கள். ஏற்றுக்கொள்ளக் கடினமாக இருக்கும் உண்மை இது”, என்று உள்ளூர் செய்தியாளர் ஹெலன் எழுதியிருக்கிறார். “கொடூரங்களைச் செய்பவர்கள் நம் பக்கத்து வீட்டிலும் ஒளிந்து கொண்டு இருக்கிறார்கள் என்பதை இந்த சம்பவம் அடிக்கோடிட்டுச் சொல்கிறது” என மற்றொரு செய்தியாளர் டேனியல் குறிப்பிட்டுள்ளார். குற்றம்சாட்டப்பட்டவர்கள் ஒருவரைப் பற்றிய தகவலும் வெளியிடப்படவில்லை.

பாதிக்கப்பட்ட ஜிஸல், இதற்கு மாறாக இந்த வழக்கும் அதன் விவரங்களும் வெளிப்படையாக பொதுவெளியில் வைக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். “இந்த வயதில் வன்புணர்வா?”, “பத்து வருடங்கள் அதுகூடத் தெரியாமல் என்ன செய்தார்?” என்பதில் ஆரம்பித்துப் பல விதமான ஏச்சு பேச்சுக்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று அறிந்தே இருந்தார். எனினும் மக்கள் இதை அறிந்து கொள்ள வேண்டும், விழிப்புணர்வு பெற வேண்டும் என்ற காரணத்தினால் துணிந்து தன் அடையாளத்தை வெளிப்படுத்தினார். நிமிர்ந்த நடையோடு வந்து வழக்கு விசாரணைகளில் கலந்துகொண்டார்.

பெண்ணிய அமைப்புகள் அவருக்காகக் களமிறங்கி, “நீங்கள் தனியாக இல்லை. நாங்கள் துணையிருக்கிறோம்” என்றனர். பொதுமக்களும் இவருக்கு ஆதரவாக இணைந்தனர். நீதி கேட்டு ஆயிரக்கணக்கான போராட்டங்கள் நடத்தப்பட்டன.

குற்றவாளி டொமினிக் பெலிகாட்

கணவன் “I am a rapist” என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளான். குற்றம்சாட்டப்பட்ட மற்றவர்களும் என்னைப்போல வன்புணர்வுக் குற்றவாளிகள்தான் என்றும் கூறியிருக்கிறான். குறைந்தபட்ச 20 ஆண்டு கடுங்காவல் தண்டனையை இது உறுதி செய்துள்ளது.

கணவன், நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக் கொண்ட பிறகு தனக்கு ஆதரவாக இருந்த மக்களை நோக்கிக் கைகூப்பி வணங்கிய படி ஜிஸல் நடந்து வந்து நன்றி தெரிவிக்கும் காட்சி சிறிய ஆறுதலைக் கொடுக்கிறது.

மன உறுதியுடன் பொதுவெளியில் இவ்வழக்கு நடைபெற வழி செய்த ஜிஸல் பெலிகாடின் உறுதி, நமக்கெல்லாம் வழிகாட்டுகிறது. குற்றம் செய்தவர்கள் முகத்தை மறைத்துக் கொள்ளட்டும், நான் தலைநிமிர்ந்து நடப்பேன் என்பதைச் செயலில் காட்டியிருக்கிறார்.

குற்றவாளி டொமினிக்கின் இள வயதுப் படம்

“என் இளம் வயதில் பாலியல் வன்முறைக்குள்ளானேன். வளர்ப்பு சரியில்லை” என்பது போன்ற தகவல்கள் மூலம், தன்னையும் பாதிக்கப்பட்ட ஒருவராகக் கணவன் காட்டிக்கொள்ள விரும்புகிறான். சாட்சிகளும், ஆதாரங்களும் அதை உண்மையல்ல என்கின்றன.

1991ஆம் ஆண்டு பாரிஸில் நடந்த இன்னொரு பாலியல் வன்புணர்வு மற்றும் கொலைக் குற்றத்திலும் இவன் சம்பந்தப்பட்டிருப்பதாகக் காவல்துறை இப்போது சந்தேகிக்கிறது. இதெல்லாம் திட்டமிட்டுச் சுயவுணர்வுடன் செய்த குற்றங்கள் என்பதைப் பல்வேறு நிகழ்வுகள் வழியாகச் சுட்டிக்காட்டி விளக்கியுள்ளார் மகள் கரோலின். ‘நான் உன்னை அப்பா என்றழைப்பதை நிறுத்திவிட்டேன்’ என்ற பெயரில் அதைப் புத்தமாகவே எழுதியுள்ளார். உலகளாவிய ஊடக வெளிச்சமும் ஆதாரங்களும் டொமினிக்குக்கு அதிகபட்ச தண்டனையைப் பெற்றுத் தரும் என்று நம்பலாம்.

டொமினிக்கின் சாட் மெஸேஜ்கள், “என்னைப்போலவே நீங்களும் வன்புணர்வில் ஆர்வம் இருந்தால் வாருங்கள்” என்கிற வெளிப்படையான அழைப்பாகத்தான் உள்ளன. கணவனே அழைக்கிறான் என்கிற துணிச்சலில் மற்ற ஆண்களும் வந்திருக்கிறார்கள். சுயநினைவற்ற பெண்ணைப் புணர்வது பற்றிய எந்தக் குற்ற உணர்ச்சியும் அவர்களுக்கு இல்லை. கணவன் சம்மதம் இருந்ததால், இதை வன்புணர்வாகக் கொள்ளக் கூடாது என்கிற வாதம் அவர்கள் தரப்பில் வைக்கப்பட்டது. பெண்ணின் உடல் கணவனுக்குச் சொந்தம் என்கிற மனநிலையை எடுத்துக் காட்டுவதாக இதை உளவியல் வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

ஒரு பெண்ணின் உடல் மீது அந்தப் பெண்ணுக்கு மட்டுமே உரிமை இருக்கிறது. இந்த வழக்கின் விசாரணையும் அது தொடர்பான ஊடக அலசல்களும் அதை உணர்ந்து கொள்ள இன்னொரு வாய்ப்பைக் கொடுத்துள்ளன. இந்தப் பாடத்தை மற்றவர்கள் படிக்க, ஜிஸல் கொடுத்திருக்கும் விலை அதிகம்தான்.

படைப்பாளர்:

கோகிலா 

இளநிலை கணிப்பொறி அறிவியல் படித்தவர். சிறுவயதில் இருந்தே வாசிப்பில் ஆர்வம் உண்டு. புனைவுகளில் ஆரம்பித்த ஆர்வம் தற்போது பெரும்பாலும் பெண்ணியம், சமூகம், வரலாறு சார்ந்த அபுனைவு வகை புத்தகங்களின் பக்கம் திரும்பியிருக்கிறது. பயணம் செய்வது பிடிக்கும்.  கல்விசார்ந்த அரசுசாரா இயக்கங்களில் தன்னார்வலராகச் செயல்படுகிறார்.

ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய ‘தொழில்நுட்பம் அறிவோம்’ என்கிற தொடர், ‘இன்பாக்ஸ் இம்சைகளைச் சமாளிப்பது எப்படி?’ என்கிற புத்தகமாக ஹெர் ஸ்டோரிஸ் வெளியீடாக வெளிவந்திருக்கிறது. ‘உலரா ரத்தம்’ என்கிற அரசியல் வரலாறு நூல், சிறார்களுக்கு , ‘தரையை ஓங்கி மிதித்த பட்டாம்பூச்சி’ ஆகிய நூல்களும் இந்த ஆண்டு வெளிவந்துள்ளன.