ஊரில் திருவிழா என்றாலும், பண்டிகைகள் என்றாலும், வீட்டில் நடக்கும் திருமணம் முதல் இறப்பு வரை எந்தச் சிறப்பு நாட்களாக இருந்தாலும் அதனைச் சிறப்பாகச் செய்ய வேண்டிய கடமை பெண்களுக்கானது. இதில் குடும்ப கெளரவம், பாரம்பரியம், வழிவழியாகப் பின்பற்ற வேண்டிய அனைத்து சடங்குகளையும் பெண்கள்தாம்ன் கட்டிகாக்க வேண்டும் என்று மறைமுகமாகவும் நேரிடையாகவும் அழுத்தம் தரப்படுகிறது.
பண்டிகைகள், திருவிழாக்கள் கொண்டாட்டத்துக்கானதுதான். ஆனால், எது கொண்டாட்டம்? பெண்களால் வீட்டுக் கொண்டாட்டங்களில் முழுமையாகப் பங்கேற்க முடிகிறதா? ஒவ்வொரு கொண்டாட்டத்தின் பின்னாலும் பெண்களின் உழைப்பு எந்தளவு சுரண்டப்படுகிறது என்பதைக் குடும்பங்கள் உணர்ந்திருக்கின்றனவா?
வேலைக்குச் செல்லும் பெண், செல்லாத பெண் யாராக இருந்தாலும் பண்டிகைகள், கொண்டாட்டங்கள் அதற்குப் பின் இருக்கும் அவர்களின் உழைப்பு, மன உளைச்சல் குறித்துப் பெரிதாகப் பலரும் அலட்டிக்கொள்வதில்லை. சொல்லப்போனால் பெண்ணுக்கே அது குறித்த புரிதலில்லை. பாரம்பரியமும் குடும்பச் சடங்குகளும் பழக்கமும் வழிவழியாகக் கடைப்பிடிக்கபப்டும் நம்பிக்கைகளும் முதன்மையாக்கப்பட்டு, அவர்களின் உடல் நலம் பின்னுக்குத் தள்ளப்படுகிறது.
இன்றளவும் பண்டிகைகள் கொண்டாட்டங்களுக்கு மாத விலக்கு தள்ளிப்போடும் மாத்திரைகள் உபயோகிக்கும் பெண்கள், நாற்பதில் உடல் நலம் முற்றிலும் குலைந்து போகும் வரை அது குறித்து உணராமல்தான் வேலை செய்கிறார்கள்.
பண்டிகை நாட்கள், விசேஷ நாட்கள் என்பது விடுமுறை நாட்கள் என்றாலும் ஒய்வுக்கான நாள்கள் அல்ல. சாதாரண நாட்களைவிட பன்மடங்கு உழைப்பைக் கோரி நிற்கும் நாட்கள். வீடும் அடுப்படியும் மட்டுமே பெண்களின் உலகமாக இருந்த காலம் இப்போது இல்லை. பல வீடுகளில் பெண்கள் வேலைக்குச் செல்கிறார்கள். வேலைக்குச் செல்வதால் அவர்களின் வீட்டு வேலைகள் குறைந்துவிட்டதா என்றால் இல்லை. என்ன வேலைக்குச் சென்றாலும், சடங்குகள், மத நம்பிக்கைகளில் விருப்பம் இல்லாவிட்டாலும், வீட்டில் விஷேசங்கள், பண்டிகைகளைக் கொண்டாடியே ஆக வேண்டிய கட்டாயத்தில்தான் பல பெண்கள் இருக்கின்றனர்.
பண்டிகை என்பது அப்போதிலிருந்து இப்போது வரை பெண்கள் மீது கூடுதல் வேலை பளுவை திணித்துக்கொண்டு இருக்கிறது. ஆனால், அதைப் பெண்கள் உணர முடியாதளவு அவர்களுக்கு மதம், பக்தி, புனிதம் எனப் பலப்பல பெயர்களில் போதை ஊட்டப்படுகிறது. அந்தப் போதையில் அவர்கள் அனைத்துப் பொறுப்புகளையும் தங்கள் தலை மேல் ஏற்றிக்கொண்டு தங்களின் குடும்ப பழக்கத்தை விட்டுக்கொடுக்காமல் செய்கின்றனர். பண்டிகை நாட்களில் ஆண்களுக்கும்தான் சிரமம், அதெல்லாம் உங்களுக்கு என்ன தெரியும், சும்மா பெண்கள்தாம் வேலை செய்கிறார்கள் என வந்துவிடுகிறீர்கள். ஆண்களும்தாம் இப்போது வேலைகளைப் பகிர்ந்து செய்கிறார்கள் என வந்துவிடுவார்கள்.
ஆனால், உண்மையில் பண்டிகைகளில் இன்றைய மாடர்ன் ஆண்களின் பங்கு என்ன அதிகபட்சம் ஒட்டடை அடிப்பது, வீட்டைச் சுத்தம் செய்வது, சாமி படத்துக்குப் பொட்டு வைப்பது, கூடுதலாக இரண்டு முறை கடைக்குச் சென்று வருவதுதான் பெரும்பாலான ஆண்களின் வேலை. சிலர் காய் வெட்டி தருவது, தேங்காய் துருவுவது எனச் சமையலுக்கும் துணை புரியலாம். ஆனால், இதனைக்கூட எத்தனை ஆண்கள் செய்ய முன்வருகிறார்கள்?
கணவர், குழந்தைகள் என இருக்கும் பெண்கள் பெரும்பாலும் மாமியார் வீடுகளுக்குச் செல்ல வேண்டிய நிலைதான். அங்கு சாதாரணமாக கணவரிடம் இருந்து கிடைக்கும் சின்னச் சின்ன உதவிகள்கூட கிடைக்காது. பெண்களாகத்தான் செய்ய வேண்டும். இந்துக்களின் பண்டிகைக்கு முதல் நாளே வீடு சுத்தம், விளக்கு, பூஜை பாத்திரங்கள் தேய்ப்பதில் ஆரம்பித்து வேலை வேலை என முதுகுத் தண்டை நிமித்திவிடும். மறுநாள் விடிகாலை மாக்கோலம் போடுவது, கலர் கோலம் போடுவது என ஆரம்பித்து, பண்டிகைகளுக்கான சமையல், ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒவ்வொருவிதப் பலகாரம், பல வகை காய்கறிகள் சமைப்பது, பூஜை செய்வது என அத்தனை வேலைகளும் செய்து முடிக்கும் போது பல பெண்களுக்கு சாப்பிடும் ஆசைகூட இருக்காது.
இத்தனை வகை சமையலும் யாருக்கு? அதைச் சமைத்த பெண்ணுக்குச் சாப்பிடக்கூடத் தோன்றாது. வேலைகள் செய்த அலுப்பில் உறங்கினால் போதும் என்றிருக்கும். ஆனால், அந்தப் பெண்ணுக்கு அப்படி வேலை செய்து பண்டிகைக் கொண்டாடுவதுதான் சந்தோஷம் என்று நம்ப வைக்கப்பட்டிருப்பாள். நிஜத்தில் அவளுக்கு அது சந்தோஷம் தந்ததா என்று உணரக்கூடத் தலைப்பட மாட்டாள். ஏனென்றால் அவள் ‘நல்ல குடும்பப் பெண்’ இல்லையா? பண்டிகை கொண்டாடாத, விசேஷங்களில் குடும்பப் பழக்க வழக்கம் பின்பற்றாத பெண்ணை எல்லாம் குடும்பப் பெண்ணாக ஏற்றுக்கொள்வார்களா? நல்லப் பெண் பட்டம் பெற அந்தப் பெண் அத்தனையும் செய்தாக வேண்டும். அவள் செய்துகொள்ளும் சமாதானம் என் குடும்பத்துக்காக நான் விருப்பப்பட்டு செய்கிறேன் என்றுதான் கூறுவாள். ஏனென்றால் பல பெண்களுக்கே கடவுள், மதநம்பிக்கை இவற்றின் பெயரால், தான் எந்த அளவு சுரண்டப்படுகிறோம் என்ற விழிப்புணர்வு இல்லை.
குடும்பத்துக்காகச் செய்வது, பண்டிகைகள் கொண்டாடுவது சந்தோஷம்தான். ஆனால், அந்தச் சந்தோஷத்துக்கு குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து வேலைகளைப் பகிர வேண்டும் என்பது எத்தனை குடும்பங்களில் சொல்லித் தரப்படுகிறது? அல்லது கடைப்பிடிக்கப்படுகிறது?
வீட்டு வேலை செய்யும் பெண்கள்கூடப் பண்டிகை தினத்தில் விடுமுறை எடுத்துக்கொள்வார்கள். ஆனால், குடும்பப் பெண்களுக்குப் பண்டிகை விடுமுறை எல்லாம் கிடையாது. சொல்லப்போனால் ஓவர் டியூட்டி செய்ய வேண்டிய நாட்கள். அதிலும் வேலை செய்யும் இடங்களிலும் பண்டிகை என்றால், அந்த வேலைகளைப் பெண்கள்தாம் செய்ய வேண்டும். அலுவலகத்தில் கோலம் போடுவது, விளக்கு சுத்தம் செய்து தீபம் ஏற்றுவது, பிரசாதம் செய்து எடுத்து வருவது பெண்களாக இருக்கும். ஆண்களுக்குத் தேங்காய் உடைப்பது, கற்பூரத் தட்டைத் தூக்கிக் காட்டுவது என்பதாகத்தான் இருக்கும். ஊர் திருவிழாக்களில்கூட பரிவட்டம் கட்டுவதில் ஆரம்பித்து அனைத்து மரியாதைகளும் ஆணுக்கு நடக்க, பெண் திருவிழாவுக்காக வீட்டுக்கு வந்திருக்கும் உறவினர்களுக்குச் சமைத்துப் போட கூடுதல் வேலைகளைச் செய்து கொண்டிருப்பாள்.
இந்துக்களின் முக்கியப் பண்டிகைகளான தீபாவளியும் பொங்கலும் பெண்களின் உழைப்பை மொத்தமாகச் சுரண்டி எடுப்பவை. தீபாவளிக்குச் சில நாட்கள் முன்பே பலகாரத்துக்கான ஆயத்தம் செய்வதில் ஆரம்பித்து தீபாவளி அன்று காலை வரை பெண்கள் அடுப்படியில் வேக வேண்டும். இதில் என் பெண்டாட்டி மைசூர் பாகை உடைக்க சுத்தியல் வேண்டும் என்கிற அரதப் பழைய ஜோக்குகளை மீம்களாகச் சுற்றவிட்டுக் கொண்டு, அதற்குச் சிரித்துக் கொண்டும் இருப்பவர்களைப் பார்க்கும் போது அதே சுத்தியலை வாங்கி மண்டையில் இரண்டு போடலாம் என்று தோன்றும்.
உங்க மனைவி செய்த மைசூர் பாகிற்கு உங்கள் பங்கு என்ன என்று சிரித்து வைக்கும் ஒருவரும் சிந்திக்கக்கூட மாட்டார்கள். இதில் எங்கள் வீட்டில் நாங்கள் வெளியே பலகாரம் எல்லாம் வாங்க மாட்டோம். வீட்டில்தான் செய்வோம் என்று பிரகடனம் வேறு நடக்கும்.
இந்தப் பண்டிகை கொணடாட்டங்கள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் திருமணத்துக்கு முன்னும் பின்னும் ஒரே மாதிரி இருக்கிறதா என்று பார்த்தால் இல்லை என்பதுதான் பெரும்பாலான பெண்களின் பதிலாக இருக்கும்.
சில பண்டிகைகள் கடவுளின் பெயரால் அவருக்காக நடத்தப்படுகின்றன என்றால், பல பண்டிகைகள் கணவரின் நலனுக்காக நடத்தப்படுவது. ஒரு கணவனின் உயிர், உடல்நலம், அனைத்தும் பெண்கள் கடைப்பிடிக்கும் விரதங்களால்தாம் காப்பாற்றப்படுகிறது. அவள் விரதம் இருக்கவில்லை என்றால் கணவன் உயிருக்கு ஆபத்து என்பதாகப் பெண்களின் ஆழ்மனதில் பதிய வைக்கப்பட்டு, அதைக் கொண்டாடாத பெண்கள் குற்ற உணர்வில் குமையும் சூழலை ஆணாதிக்க சமூகம் உருவாக்கி வைத்துள்ளது.
வரலட்சுமி விரதம், காரடையான் நோன்பு, கிருஷ்ண ஜெயந்தி எல்லாம் ஒரு குறிப்பிட்ட சமூகத்தால் தமிழ்நாட்டில் கொண்டாடப்பட்டு வந்தது. ஆனால், இப்போது டெக்னாலஜி மற்றும் பக்தி சக்தி பத்திரிக்கைகளின் பக்தி வளர்ப்பால் இந்தப் பண்டிகைகளைப் பரவலாக அனைத்துத் தரப்பினரும் கொண்டாடுகின்றனர். பிரதோஷத்தில் ஆரம்பித்து நவராத்திரி வரை பல விரத நாட்களும் இதில் அடக்கம்.
இந்தக் கணவரின் நலனுக்காக, அவரின் நீண்ட ஆயுளுக்காகத் தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியா முழுவதிலும் வேறு வேறு பெயரில் பல பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. அதில் ஒன்றான ‘கர்வா செளத்’ பண்டிகையில் கணவனின் நீண்ட ஆயுளுக்காக காலை முதல் மாலை வரை பட்டினி இருந்து, இரவு சல்லடை வழியாக நிலவை, கணவரைப் பார்த்து தண்ணீர் குடித்து விரதம் முடிக்கின்றனர்.
கணவரின் நலனுக்காக, அவனின் நீண்ட ஆயுளுக்காக விரதம், பண்டிகைகள் இவ்வளவு இருக்கிறதே, மனைவியின் நீண்ட ஆயுளுக்காக, அவள் நலனுக்காகப் பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றனவா? கணவர்கள் உண்ணா நோன்பிருந்து இறைவனை வேண்டி பண்டிகைகள் கொண்டாடுவார்களா? அப்படி ஒரு நிலை வந்தால் பண்டிகைகள் என்பது கொண்டாட்டத்துக்கானது, அதில் கூடவா இப்படிப் பிரித்துப் பார்க்கிறீர்கள் என்பவர்கள் சத்தமில்லாமல் பண்டிகைக் கொண்டாட்டங்களை நிறுத்தி விடுவார்கள்.
படைப்பாளர்:
கமலி பன்னீர்செல்வம். எழுத்தாளர். ‘கேட் சோபின் சிறுகதைகள்’ என்ற நூல் இவர் மொழிபெயர்ப்பில் வெளிவந்து, பாராட்டுகளைப் பெற்று வருகிறது.