பொழுது சிறிது சிறிதாகப் புலர்ந்து கொண்டு வந்தது. தெரு விளக்குகள் அணைந்து கொண்டே வர வீதியின் பரபரப்பு கூடிக்கொண்டிருந்தது. ஆங்காங்கே பழக்கடைகள், பூக்கடைகள் போன்றவை புத்துயிர் பெற்று வியாபாரத்திற்குத் தங்களைத் தயார் படுத்திக்கொண்டிருந்தன. இது போன்ற கடைகளில் உள்ள பெண்கள் பெரும்பாலும் துடுக்காகவும் தைரியமாகவும் இருப்பர். அதே நேரம் கலகலப்பாகவும் கறாராகவும் இருப்பர். எந்த ஒரு தயக்கமும் காட்டாமல் ஒவ்வொரு நாளும் கடினமாக உழைத்துக்கொண்டிருப்பர். உண்மையில் அவர்கள் வெளியே போராடுவதைவிட, அவர்களின் பயத்தை மறைக்கப் போராடுவதே அதிகமாக இருக்கும். சிலர் சாமிக்கு மாலை போட்டிருப்பர். அது வழக்கமான ஒன்றாகத் தோன்றலாம். குறிப்பாக வருடம் முழுவதும் மாலை போட்டிருந்தால் சிறிது வித்தியாசம் தோன்றுமல்லவா?

சுந்தரி அக்காவும் வருடம் முழுவதும் சாமிக்கு மாலை போட்டிருப்பார். பூ வாங்கும்போது புன்சிரிப்புடன் இருப்பார். ஒரு முறை நேரடியாகவே ஏதாவது வேண்டுதலா அக்கா, தொடர்ந்து மாலை போட்டிருக்கிறீர்கள் என்று கேட்டேன்.

”என் வூட்டுக்காரர் உயிரோட இல்லம்மா. மாலை போட்டால் எவனும் வந்து நம்ம கிட்ட வம்பு வச்சுக்க மாட்டானுக. அதுக்காகத்தான் வருஷம் முழுசும் இப்படி மாலையைப் போட்டுக்கிட்டிருக்கேம்மா.”

“என்னக்கா சொல்றீங்க?”

”ஆம்பளை இல்லாத வீடுன்னா கண்டவனுங்களும் நெருங்கிடறாங்க. பூ வாங்கும்போது கையைப் பிடிப்பானுக. காசு கொடுக்கும்போது உரசுவானுக. மாலை போட்டிருக்கும்போது தள்ளிப் போயிடறாங்க.”

திருமணமான இரண்டு வருடங்களில் அவர் கணவர் விபத்தில் இறந்துவிட்டார்.பன்னிரண்டாம் வகுப்பு வரை படிக்கும்போதே படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு, திருமணம் செய்துகொடுத்துவிட்டார்கள். ஒரு பெண் குழந்தை.

“அக்கா, நீங்க ஏன் மறுமணம் செய்துக்கல?”

”புருஷன் போன உடனே விரக்திதான் வந்துச்சு. இன்னொரு கல்யாணம் பத்தியெல்லாம் யோசிக்கல. ஆனா, இப்போ கல்யாணம் பண்ணிருக்கலாமேன்னு தோணுது. மகளுக்குப் பதினொரு வயசு ஆயிருச்சு. இப்பப் போய் கல்யாணம் பண்ணினா நல்லா இருக்காதும்மா. பொறந்த வீட்டிலும் எனக்கு ஆதரவு இல்ல. இப்படியே வாழ்க்கையை ஓட்டிட வேண்டியதுதாம்மா.”

முதல் தடவை நான் சுந்தரி அக்காவைப் பார்க்கும்போது சாலையோரமாகக் கடை போட்டதில் பிரச்னை செய்த ஓர் ஆணோடு சரிக்குச் சமமாகச் சண்டை போட்டுக்கொண்டிருந்தார். மறுநாள் அதே இடத்தில் தைரியமாகக் கடை வைத்துக்கொண்டு கம்பீரமாக அமர்ந்திருந்ததைப் பார்த்தபோது, எனக்கு அவர் மீது மரியாதை வந்தது.

யாரோ ஒருவரான என்னிடம் இவ்வளவு மனம்விட்டுப் பேசும் அளவிற்குத் துயரங்களை அனுபவித்திருக்கிறார். பெண்ணைப் பொருளாகப் பாவிக்கும் பலரின் மத்தியில் பெண்கள் எது செய்தாலும் குற்றமே. மறுமணம் செய்தால் கணவன் இறந்த இவ்வளவு குறுகிய காலத்திலேயே வேறொருவனை மணந்துவிட்டாள் என்பர். திருமணம் செய்யாமலிருந்தால், அவளை இரையாகப் பார்ப்பர். மறுமணத்திற்குப் பெண்கள் தயங்குவதே இதற்காகத்தான்.

சங்ககால இலக்கியங்களை எழுதியவர்களின் பெயர்கூடத் தெரிந்து விட்டது. ஆனால், பெண்களின் வரம்புகள் எனக் கூறுபவை யாரிடமிருந்து பரவியது என்றுதான் இன்னும் தெரியவில்லை.

படைப்பாளர்

மஹா

தமிழ்ச்செல்வி என்கிற மஹா அரியலூரைச் சேர்ந்தவர். இரண்டாம் ஆண்டு முதுகலை ஆங்கில இலக்கியம் பயில்கிறார்.