தேவதாஸ் என்பது 1953ஆம் ஆண்டு வெளியான திரைப்படம். தேவதாஸ் வங்காள எழுத்தாளர் சரத் சந்திர சட்டோபாத்யா உருவாக்கிய ஒரு கதாபாத்திரம். 1917ஆம் ஆண்டு அவர் எழுதிய ‘தேவதாஸ்’ என்ற இந்தப்  புதினம் இவ்வளவு பிரபலமாகும் என அவரே நினைத்தாரா எனத் தெரியவில்லை. இந்தியா முழுவதுமே, தேவதாஸ் என்ற ஒரு மனிதன் வாழ்ந்தான் என்பது போலவே மக்கள் மனதில் பதிந்து விட்டது.

இந்தியாவில் அதிக மொழிகளில் திரைப்படமாக்கப்பட்ட புதினமாக இதுதான் இருக்க வேண்டும். பங்களாதேஷ், பாகிஸ்தான் நாடுகளிலும்கூட இந்தக்கதை படமாக்கப் பட்டுள்ளது. இந்தப் புதினம், தெலுங்கில் ஏற்கனவே 1937ஆம் ஆண்டு திரைப்படமாகி இருக்கிறது. 

ஆணின் காதல் தோல்வி என்பதற்கு அருஞ்சொற் பொருளே தேவதாஸ் என ஆகிவிட்டது. தாடி வளர்ப்பவரை தேவதாஸ் என்பது மிகவும் இயல்பான பேச்சு வழக்கு.  குடிகாரர் அருகில் நாய் இருந்தால் அவரை தேவதாஸ் என அழைப்பது வழக்கம். பிற்காலத்தில் பல திரைப்படங்களில் தேவதாசின் பாடல்கள், தேவதாஸ் பாத்திரத்தை உவமைப்படுத்திப் பேசுவது என திரையுலகம் மறக்காத திரைப்படம் இது.

எந்த திரைப்படம் என நினைவில்லை. ஒரு திரைப்படத்தில், தேவதாஸ் தெருக்கூத்து நடைபெறும். இருவரும் பிரிவதைப் பொறுத்துக் கொள்ள முடியாத ரசிகர் கத்த, ‘ஓ தேவதாஸ், ஓ பார்வதி’ என டூயட் பாடுவது போல முடிப்பார்கள். “நான்தாண்டா இப்போ தேவதாஸ்” என்ற தனிக்காட்டு ராஜா பாடல், ‘தேவதாசும் நானும் ஒரு சாதி தானடி’ என்ற ‘விதி’ திரைப்படப் பாடல், ‘அடி வான்மதி என் பார்வதி … தேடி வந்த தேவதாஸைக் காண’ என வரும் ‘சிவா’ திரைப்படப் பாடல் என, பல பாடல்களைச் சொல்லலாம். ‘முதன் முதலாக காதல் டூயட் பாட வந்தேனே’ பாடலில் ‘எழிலாள் சிற்பமாக என் எதிரில் நாணி மறைந்திடுவாள்’ என்ற தேவதாஸ் பாடலின் (சந்தோசம் தரும் சவாரி போவோம் சலோ சலோ) வரிகள் வசனம் போல வரும். ‘முத்து’ திரைப்படத்தில் வடிவேலு ‘கனவிதுதான் நிஜமிதுதான்’ பாடலைப் பாடுவார். இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். 

தேவதாஸ் திரைப்படத்தில் வரும் நடனப்பெண்ணின் பெயரான சந்திரமுகி பெயரில்கூட பிற்காலத்தில் திரைப்படம் வருமளவிற்கு பிரபலமான பெயர்தான். 

தேவதாஸ் திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் மிகவும் பிரபலமாக இருந்து இருக்க வேண்டும். என் அம்மாவிற்கு மிகவும் பிடித்த பாடல்கள் என்பதால், எப்படியும் வாரம் ஒருமுறையாவது கேட்பார்கள். அதனால் எனக்கும் மனப்பாடம். தேவதாஸ் கேசட் இல்லாமல் எங்கள் வீடு இருந்தது இல்லை. சேதமாகி விட்டாலும் உடனே அம்மா வாங்கி விடுவார்கள். இரண்டு கேஸட்டுகளில் பதிந்து வைத்த காலமும் உண்டு. அந்த அளவிற்கு என் அம்மாவின் முதல் தேர்வு ஆல்பமாக தேவதாஸ்  இருந்தது. 

This story relates to the period long before prohibition was put in force என தான் திரைப்படத்திற்கான எழுத்து போடுகிறார்கள். அதனால், இத்திரைப்படம் வெளிவந்த காலகட்டத்தில் மதுவிலக்கு இருந்தது எனக் கொள்ளலாம். விடுதலைக்குப் பின்னான முதல் தேர்தல் முடிந்து, ராஜாஜி, 1952 ஏப்ரல் 14 அன்று பதவியேற்றார். அவர் மதுவிலக்கை நடைமுறைப் படுத்தினார். இந்தத் திரைப்படம் 1953ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம்.

இந்தத் திரைப்படம் எடுத்துக் கொண்டிருக்கும் போதே, இதன் இசையமைப்பாளர் சி.ஆர். சுப்புராமன் இறந்துவிட்டதால், அவருக்கும் அஞ்சலி போடுகிறார்கள். 

பின் ‘வினோதாவின் காணிக்கை’ எனப் போடுகிறார்கள்.

தேவதாஸ் ஸ்ரீ சரத் பாபுவின் வங்காளி நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பு 

சந்திரசாட்டெர்ஜி 1917

என போட்டபின் நடிகர்களின் பெயர் போடுகிறார்கள்.

நடிகர்கள் 

நாகேஸ்வர ராவ் 

  சி எஸ் ஆர் 

    S. V. ரங்கா ராவ்

       நம்பியார் 

         துரைசுவாமி

           ஆரணி 

              சீதாராம் 

                 R நாகேஸ்வரராவ் 

                   வெங்கையா 

                      GVG கிருஷ்ணா 

                         டப்பாச்சாரி   

                           மாஸ்டர் சுதாகர்

நடிகைகள் 

  லலிதா

    சாவித்திரி

      சந்திரகுமாரி 

        சுரபி கமலாபாய்

          சீதா 

            அன்னபூர்ணா தேவி 

              விஜயலக்ஷ்மி 

                கமலா 

                   துர்காவர்மா 

                      பிரபாவதி 

பின்னணி பாடகர்கள் 

கண்டசாலா 

ராவ் பாலசரஸ்வதி தேவி (இவர்தான் முதல் தெலுங்கு திரைப்படப் பாடகி)

ராணி 

பின்னணி சங்கீதம்: விஸ்வநாதன்-ராமமூர்த்தி

சங்கீதம் காலஞ்சென்ற சி.ஆர்.சுப்புராமன்

வசனம் உதய குமார் 

பாடல்கள் உடுமலை நாராயண கவி, K. D. சந்தானம் 

புரொடக்ஷன்  டி.எல். நாராயணா

சீனாரியோ டைரக்ஷன் வேதாந்தம் ராகவய்யா 

என எழுத்து போடுகிறார்கள் 

கதை 

தேவதாஸ் ஒரு நிலப்பிரபுவின் மகன். குறும்புக்காரன். பார்வதி பக்கத்து வீட்டுப் பெண். இளமையிலிருந்தே இருவரும் ஒரே பள்ளியில் படிக்கிறார்கள். ஒன்றாகவே சுற்றுகிறார்கள். ஒரு காலகட்டத்தில் தேவதாஸ் நகரத்திற்கு மேற்படிப்பிற்காகச் செல்கிறார். படிப்பு முடித்து ஊர் வருகிறார். இருவரின் நட்பும், காதலாகத் தொடருகிறது. 

பார்வதியின் அப்பா, இவர்களின் திருமணம் தொடர்பாக தேவதாஸ் வீட்டில் போய்ப் பேசுகிறார். தேவதாசின் பெற்றோர் மறுத்து விடுகிறார்கள். “உங்களை விடப் பெரிய பணக்காரருக்கு என் மகளைத் திருமணம் செய்து கொடுக்கிறேன்” எனச் சபதம் இட்டு விட்டு அப்பா வருகிறார். வயதான ஜமீன்தாருடன் பார்வதியின் திருமணத்தை ஏற்பாடு செய்கிறார். இருப்பினும், பார்வதி தேவதாசை ரகசியமாகச் சந்தித்துத் தன்னை மனைவியாக ஏற்றுக்கொள்ளும்படிக் கேட்கிறார்.

தேவதாஸ், அவரின் அப்பாவுடன் பேசுகிறார். அவரோ துப்பாக்கியை வைத்துக் கொண்டு, தற்கொலை மிரட்டல் விடுகிறார். இதனால் தேவதாஸ் மீண்டும் நகரத்திற்குப் போய்விடுகிறார். பெற்றோரை மீற முடியாது என்று பார்வதிக்கு எழுதுகிறார். ஆனால் அவரின் நண்பர் அறிவுரையின்படி, மீண்டும் ஊர் வருகிறார். இங்கு, பார்வதிக்கு, திருமண ஏற்பாடு நடைபெறுகிறது.

ஊர் வந்த தேவதாஸ், தனது பெற்றோரைச் சமாதானப் படுத்துவதாகப் பார்வதியிடம்  சொல்கிறார். “உங்களுக்கு மட்டும்தான் பெற்றவர்கள் உண்டா? எனக்கு இல்லையா? நான் ஏன் திருமணத்தை நிறுத்த வேண்டும்?” எனப் பார்வதி கேட்கிறார். தேவதாஸ் வழக்கமான கோபத்துடன், கல்லை எடுத்து பார்வதி மீது வீசுகிறார். ரத்தம் வழிய “இப்பவும் பயமுறித்துறியா?” எனப் பார்வதி கேட்க, 

“உனக்கு என் மீது இருப்பது பயம் மட்டும் தானா?” என தேவதாஸ் கேட்கிறார்.

“உனக்கிருக்கும் அகங்காரம் எனக்கு இருக்கக் கூடாதா? உனக்கு நான் எந்த விதத்திலும் குறைந்தவளில்லை,” என்பதாகப் பதில் சொல்லி, பார்வதி அவ்விடத்தை விட்டு நகருகிறார்.

தேவதாஸால், திருமணத்தை நிறுத்த முடியவில்லை. மீண்டும் நகரம் போகிறார். குடிகாரனாக மாறுகிறார். மறுபக்கம் பார்வதி துர்காபுரத்தில் கணவனின் பிள்ளைகளைத் தன் பிள்ளைகளாக அரவணைத்து வாழத் தொடங்குகிறார். அனைவரின் நன்மதிப்பையும் சம்பாதிக்கிறார்.

குடிகாரனாக மாறிய தேவதாஸ் நண்பனால் மேலும் கெட்டுப்போக ஊக்குவிக்கப்படுகிறார். நண்பன், சந்திரமுகி என்ற நடனமாடும் பெண்ணை அறிமுகப்படுத்துகிறான். அங்கு சென்ற பின்னும் தேவதாஸ், பார்வதியின் நினைவாகவே இருப்பதைக் கண்டு, இப்படியும் ஒரு ஆணா? நாமும் ஏன் அவ்வாறு வாழக்கூடாது என நினைத்து, மனம் மாறிய சந்திரமுகி, வேறு ஆண்களுடன் பழகுவதையே நிறுத்திவிடுகிறார். 

தேவதாசின் அப்பா இறக்க, சந்திரமுகியின் ஆலோசனையின் பேரில், தேவதாஸ் தனது கிராமத்திற்குப் போகிறார். இந்த காலகட்டத்தில், பார்வதி பிறந்த வீடு வந்து இருக்கிறார். பார்வதி, தேவதாஸைச் சந்தித்து, குடிக்கக் கூடாது என அறிவுறுத்துகிறார். ஆனாலும் தேவதாஸ் ஏற்றுக் கொள்வதாக இல்லை. “ஒரு முறை என் வீடு வா” எனப் பார்வதி அழைக்க, “இறக்கும்முன் வருகிறேன்” என தேவதாஸ் பதில் கூறுகிறார். 

தேவதாஸ் மீண்டும் நகரம் வருகிறார். “யாரையாவது திருமணம் செய்து கொள்ளுங்கள். நான் உங்கள் வீட்டில் வேலைக்காரியாக இருந்து காலத்தை ஓட்டுகிறேன்”, என சந்திரமுகி சொல்ல, “பிடிவாதத்தில் பார்வதியும் நீயும் ஒன்றுதான். ஆனால் அவளைத் தெய்வமாகப் பூஜிப்பார்கள். உன்னைக் கேவலமாக மதிப்பார்கள். அடுத்த பிறவியில் உன்னைச் சந்திக்க நேர்ந்தால், உன்னை விட்டுப் பிரியவே மாட்டேன்”, எனச் சொல்லி, தேவதாஸ் போகிறார். அவர் நினைவாகவே சந்திரமுகி வாழ்கிறார். குடித்துக் குடித்து, இறக்கும் தருவாய் வரை சென்றதால், ஊருக்குச் செல்வது நல்லது என தேவதாஸிடம் மருத்துவர் சொல்கிறார்.

இதனால் தேவதாஸ் புறப்படுகிறார். ரயிலில் செல்லும்  வழியில் துர்காபுரம் வருகிறது.  அவர் இறப்பதற்குமுன் பார்வதியிடம் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காகச் சட்டென்று இறங்கி துர்காபுரம் செல்கிறார். பார்வதி வீட்டின் முன் இறந்து விடுகிறார். கையிலிருந்த கடிதத்தில் ஊரின் முகவரி இருந்ததால், அவர் பார்வதியின் ஊரைச் சார்ந்தவர் எனத் தெரியவருகிறது. பார்வதியிடம், வேலைக்காரர்கள் இறந்தவர் உங்கள் ஊர் தேவதாஸ் என்கிறார்கள். பார்வதி வீட்டினுள் இருந்து, அவரைப் பார்க்கும் வேகத்தில், ஓடுகிறார். வாசல் அடைக்கப் படக் கதவில் முட்டி, இவர் மயங்கி விழுகிறார். 

பார்வதி இறந்தாரா இல்லை மயங்கினாரா எனக் காட்டவில்லை.

இந்தத் தளம் அவரும் இறந்துவிட்டார் என்கிறது. ஒருவேளை உயிருடன் இருந்தார் என்றால், அதற்குப் பின் பார்வதியின் வாழ்க்கை எவ்வாறு இருந்தது என யாராவது ஒரு கதை எழுதினால் சிறப்பாக இருக்கும் என நான் நினைத்ததுண்டு. ஏனென்றால், அதுவரை மிகவும் அன்பாக இருந்த கணவர், தேவதாஸைப் பார்க்க பார்வதி ஓடி வருகிறார் என்றதும், ‘கதவை மூடு’ எனக் கட்டளையிடுகிறார். அதன் பிறகு இறக்காமலிருந்து இருந்தால். அவரது வாழ்க்கை முன்போல இருந்து இருக்குமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறிதான்.

நாகேஸ்வர ராவ் இதற்கு முன் லைலா மஜ்னு திரைப்படத்தில், இவ்வாறு காதலனாகவும், பின் காதலில் தோல்வியுற்றவராகவும் நடித்தவர் தான் என்றாலும், அவரைப் புகழின் உச்சிக்குக் கொண்டு சென்ற திரைப்படம் தேவதாஸ்தான். குடிகாரனாகத் தெரியவேண்டும் என்பதற்காக இரவில் படப்பிடிப்புகளை நடத்தியதாகப் பின்னாள்களில் அவர் நினைவு கூர்ந்துள்ளார். இளமையில் குறும்பு ததும்பும் முகம், அப்பா திருமணத்திற்கு ஒத்துக் கொள்ளாததால் ஏற்படும் கோபம் ததும்பும் முகம், ‘அப்பாக்கள் அப்படித்தான் இருப்பார்கள். உன் வாழ்க்கை உன் கையில்’ என்பதாக நண்பன் சொன்னதும் குழப்பம் ததும்பும் முகம், சந்திரமுகியின் காதலை ஏற்கமுடியாமல் தவிக்கும் முகம் என நடிப்பில் கலக்கி இருக்கிறார். ஆனால் ஏனோ அவரது குடிகார நடிப்பு மட்டுமே இப்படத்தில் பேசப்படுகிறது.

சந்திரமுகியாக வரும் லலிதா அவர்களின் இயல்பான நடிப்பு திரைப்படத்தை இன்னொரு பரிணாமத்திற்கு எடுத்துச் செல்கிறது. திரைப்படத்தில் அவரின் பெயரைத்தான் பெண்கள் வரிசையில் முதலில் போடுகிறார்கள். 

பார்வதியாக வரும் சாவித்திரி அவர்களுக்கு இது மிகவும் தொடக்கக் காலத் திரைப்படம். ஆனால் நல்ல அனுபவம் பெற்ற நடிகை போன்று நடித்து இருக்கிறார்கள். 

சிறுமி பார்வதியாக நடிகை சச்சு நடித்து இருக்கிறார். இவர் மயிலாப்பூரில் பிறந்தவர். தெலுங்கு திரைப்படமான ‘ராணி’க்கு  இயக்குநர் ASA சாமி திரைக்கதை எழுதியிருக்கிறார். அவர்தான்,  நடனமாட வந்த பெண்ணின் நான்கு வயது தங்கையை அந்தத் திரைப்படத்தில் நடிக்க வைத்து இருக்கிறார். அந்த குழந்தைதான் சச்சு அம்மா. பின் சொர்க்கவாசல் என்ற திரைப்படத்தில் நடித்ததாக இணையம் சொல்கிறது. அது 1954ஆம் ஆண்டுதான் வெளிவந்து இருக்கிறது. அதனால் சச்சு அம்மாவின் முதல் தமிழ்த் திரைப்படம் தேவதாஸ் எனலாம். கிச்சு கிச்சுத் தாம்பாளம் விளையாடி விட்டு, ‘ஓ தேவதாஸ்’ பாடல் பாடுவது, இறுதியில், ‘போ போ துடுக்கு தேவதாஸ்’ என சண்டை போட்டுப் போவது என அந்த துரு துரு முகத்தில் அவ்வளவு பாவனைகள். 

தேவதாசின் வேலைக்காரத் தாத்தாவாக வருபவரும் மிகவும் நன்றாகச் செய்து இருக்கிறார். அதே போலப் பார்வதியின் பாட்டியாக வரும், சுரபி கமலாபாய் நடிப்பும் பாத்திரப் படைப்பும் மிகவும் அருமை. ரங்காராவ் வழக்கமான பணக்கார அப்பாவாக வருகிறார். 

அடுத்து பாடல் ஆசிரியர்கள் குறித்துச் சொல்ல வேண்டும். பல பாடல்கள் திரைப்படத்தின் கதை ஓட்டத்தையே சொல்லி விடுகின்றன. 

‘ரெக்கையில்லாக் குஞ்சுகள் பிடித்தால் பாபமே பள்ளியில் படித்ததெல்லாம் வீணுக்குதானா?’ என சிறுமி பார்வதி கேட்க, ‘பயனில்லா படிப்பாலே மனம்தான் கோழையாய் மாறும், பார்வதி’, என்கிறான் படிப்பில் நாட்டமில்லாத தேவதாஸ்.

திருமணம் தடை பட்டதும் பார்வதி பாடும் பாடல் வரிகள் :

‘இணை பிரியாத சினேகம் மறந்தனையோ
உன்னை ஈன்றவர் சொல்லை மீறவும் பயந்தனையோ
என் ஏழ்மையினாலே பிரேமக் கபாடம்
தானே மூடியதோ விதிதான் விளையாடியதோ 

கனவிலும் மறவா காதல் நினைவுடனே
முன் கண்டறியாத ஒருவன் துணையுடனே
மன வேதனை என்னும் தீயதனால் நான்
வெந்தே மாள்வதா இது நன்றோ தேவதாஸ்’ 

பார்வதியின் திருமணத்தன்று தேவதாஸ் பாடும் பாடல்:

“சிறு போதுடனே வாழும் நறுமணம்
மலரானதும் வெகுதூரம் செல்வதுபோல்
காதலின் தன்மை விலகி போவதும் உண்மை” 

தேவதாஸை மறக்க முடியாமல், திருமணத்திற்குப் பின்னும் பார்வதி பாடும் பாடல்: 

“குளம் நிறைந்தால் ஜலம் வழிந்தே வேறே வழியேகும்
குமுறி புகையும் எரிமலையும் ஓர் நாள் அமைதியாகும்
மனதில் பொங்கும் துயர வெள்ளம்
வடியும் நாளேது ஒரு முடிவு தானேது”

எனத் திரைப்படத்தின் ஓட்டத்தை அப்படியே எடுத்துச் சொன்னதால்தான் பாடல்கள் மக்கள் மனதில் பதிந்தன என்பதில் துளியும் ஐயமில்லை. 

பாடல்களை, உடுமலை நாராயண கவி, K. D. சந்தானம் இருவரும் எழுதியுள்ளனர். படம் முழுமையடையும் முன்பே சி.ஆர். சுப்பராமன் இறந்து விட்டார், அதனால் பாடல்களை அவரது உதவியாளர்களான எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி இசையமைத்தனர். அனைத்துப் பாடல்களிலும் ஆண் குரல் கண்டசாலா அவர்களுடையது. பெண்குரல் என எடுத்துக் கொண்டால், சந்திரமுகிக்கு R பாலசரஸ்வதி தேவி அவர்களும், பார்வதிக்கு K ராணி அவர்களும் பாடியிருக்கிறார்கள். குழந்தைகள் பாடும் ‘ஓ தேவதாஸ் ஓ பார்வதி’ பாடலை ஜமுனா ராணி, உடுத்த சரோஜினி (Udutha Sarojini) இணைந்து பாடியிருக்கிறார்கள்.

R பாலசரஸ்வதி அவர்கள் 1936 ஆண்டிலிருந்தே குழந்தை நட்சத்திரமாகப் பாடி நடித்து வந்தவர் என்றாலும், தேவதாஸ் அவருக்குப் பெரும் புகழ் பெற்றுக் கொடுத்த திரைப்படம். ஆர். பாலசரஸ்வதி அனைத்திந்திய வானொலியில் முதன் முதலாக மெல்லிசைப் பாடல்களைப் பாடியவரும், தெலுங்குத் திரைப்படங்களில் முதன் முதலாக பின்னணி பாடியவரும் ஆவார் என்றும் சொல்லப்படுகிறது. பெஜவாடா ராஜரத்தினம்தான் தெலுங்கு திரைப்பட முதல் பின்னணி பாடகி எனவும் சொல்லப்படுகிறது. இவற்றில் எது சரி என கண்டறிய முடியவில்லை. 

பாடல்கள் 

ஓ தேவதாஸ் ஓ பார்வதி
படிப்பு இதானா வாத்தியாரு தூங்கிபோனா
ஓசைப் படாமே ஓட்டம் பிடிக்கிறே

கோண தென்ன மரத்திலே குருவிக் கூட்டிலே
குஞ்சு பொரிச்சிருக்கு பிடிக்கப் போறேனே
பள்ளிக்கூடம் இல்லையானால்
தினமும் இவ்வாறே மனம்போல் ஆடலாம்

ரெக்கையில்லாக் குஞ்சுகள் பிடித்தால் பாபமே
பள்ளியில் படித்ததெல்லாம் வீணுக்குதானா
பயனில்லா படிப்பாலே மனம்தான்
கோழையாய் மாறும் பார்வதி

நானறிவேன் உன் பிரதாபம்
ஏனறியேன் உன் முன் கோபம்
முன் கோபம் தான் என்னோடினி
ஒன்றாய் இனி சேராதே…..

ஹான்னாலும் ஹூன்னாலும்
அழுகை பிடிக்கிறே அசட்டு பெண்ணாட்டம்
வா வா கிறுக்கு பார்வதி..
போ போ துடுக்கு தேவதாஸ்

சந்தோஷம் தரும் சவாரி போவோம் சலோ சலோ
சல்தி போவோம் சலோ சலோ
அந்தி பொழுதே ஆகு முன்னே
அன்பை காணுவோம்

ஆசை வதனம் வாடும் – அதில்
ஆவல் ரேகை நெளிந்தோடும் – வெளி
வாசல் தன்னை நாடும் – மலர்
விழிகள் திண்டாடும் – அதை
நாமும் காணலாம்

எழிலார் சிற்பமாக – என்
எதிரில் நாணி மறைந்திடுவாள் 

கனி மொழியால்  வாவென்றழையாள்
இரு விழியால் பேசுவாள்
விரைவாகப் போவோம் நாம்.

ஓ…….ஓ…..தேவதாஸ்…..ஓ….ஓ..பார்வதி
படிப்பு இதானா வெள்ளைக்காரன் பிள்ளைப்போலே
வேஷம் வினோதம் ஆஹா…..பிரமாதம் 

நாகரீகம் தெரிந்ததா நாட்டுப் பெண்ணுக்கு
நாணம் நீங்கி பேசும் திறமை உண்டாச்சே
இளம் மொட்டு மலராகி எழில் மணம் வீசுதே
என் கண் கூசுதே…ஓ…ஓ……பார்வதி

இருந்த நிலைமை மாறினும் இடமும் மாறினும்
இன்னும் தாங்கள் மட்டும் சின்ன பாப்பாவோ
சிறு வயதின் நினைவெல்லாம் கனவே ஆகுமோ
கண் முன் காணுமோ….ஓ…ஓ..பார்வதி….

ஏனிதுபோல் வீண் சந்தேகம்
வாழ்விதுவே ஓர் பொய்யாகும்
பொய்யும் மெய்யும் நன்றாய் அறிந்த
அய்யா மஹா வேதாந்தி

இந்நாளும் அந்நாளும் இதுவே பாடமா
எதற்கும் கோபமா ஓ…ஓ..சினுக்கு பார்வதி
ஓ…ஓ…..துடுக்கு தேவதாஸ்..

சந்தோஷம் வேணுமென்றால் இங்கே
கொஞ்சம் என்னை பாரு கண்ணால்
கொஞ்சம் பாரு கண்ணால்
வண்டாட தேவன் மருவும் பூ மாங்கனி
பேசும் வனிதா மணி நேசம் பெறவே இனி
என்னை பாரு கண்ணால் கொஞ்சம் பாரு..(சந்தோசம்)

அன்பாலே நேர் தேடும் ஆனந்தமே கூடும்
பெண் போலே வந்தாடும் காட்சி
ஆணில் அனுராகமே பாட இனிதாகுமே
ஆவலாய் மேவலாம் காதல் பெறவே இனி
கொஞ்சம் பாரு கண்ணால்

உல்லாசமாய் இந்த உயிரோவியம் வாழ்வில்
உன்னோடு எந்நாளும் வாழும் இன்ப
சல்லாபமே நம்மில் சரி லாபமே
ஸ்வாமி நீ தாமதம் செய்யலாமா இனி
என்னைப் பாரு கண்ணால்
கொஞ்சம் பாரு கண்ணால்

கனவிதுதான் நிஜமிதுதான்
உலகினிலே என யார் சொல்லுவார்
விதி யார் வெல்லுவார்

இள வயதின் நினைவினிலே
ஏக்கமெனும் இருள் சூழ்ந்திடலாம்
ஒளி மாய்ந்திடலாம்.

மனம் ஓரிடமும் உடல் வேறிடமும்
இரு கூறானதும் விதி வசமே
சிறு போதுடனே வாழும் நறுமணம்
மலரானதும் வெகுதூரம் செல்வதுபோல்
காதலின் தன்மை விலகி போவதும் உண்மை 

நிறைவேறாத ஆசை வளர்வதும் ஏனோ
நிலை பெறாததும் ஏனோ வினை தானோ
எது நேரினும் அழியாதே
இரு மனம் ஒன்றாகிய மெய்க்காதல்
எந்நாளும் காணுமே இன்பம்….
பிரிந்தால் காதலே துன்பம்

எல்லாம் மாயைதானா பேதை
எண்ணம் யாவும் வீணா
ஏழை எந்தன் வாழ்வில் இனி
இன்பம் காண்பேனா.

இணை பிரியாத சினேகம் மறந்தனையோ
உன்னை ஈன்றவர் சொல்லை மீறவும் பயந்தனையோ
என் ஏழ்மையினாலே பிரேமக் கபாடம்
தானே மூடியதோ விதிதான் விளையாடியதோ 

கனவிலும் மறவா காதல் நினைவுடனே
முன் கண்டறியாத ஒருவன் துணையுடனே
மன வேதனை என்னும் தீயதனால் நான்
வெந்தே மாள்வதா இது நன்றோ தேவதாஸ் 

உறவுமில்லை பகையுமில்லை ஒன்றுமே இல்லை
உள்ளதெல்லாம் நீயே அல்லால் வேறே கதியில்லை
இனி யாரும் துணை இல்லை

எனது வாழ்வின் புனித ஜோதி
எங்கே சென்றாயோ
இதயம் குளிர சேவை செய்யும்
நினைவும் வீணானதே
என் கனவும் பாழானதே.

முடிவில்லாத துன்பமதிலும் இன்பம் வேறேது
கெடுதி செய்வார் தனிலும் மேலாம் நண்பர் வேறேது
அடைய முடியா பொருளின் மீது
ஆசை தீராது உறவு அபிமானம் மாறாது 

குளம் நிறைந்தால் ஜலம் வழிந்தே வேறே வழியேகும்
குமுறி புகையும் எரிமலையும் ஓர் நாள் அமைதியாகும்
மனதில் பொங்கும் துயர வெள்ளம்
வடியும் நாளேது ஒரு முடிவு தானேது

எனது வாழ்வின் புனித ஜோதி
எங்கே சென்றாயோ
உள்ளதெல்லாம் நீயே அல்லால்
வேறே கதியில்லை
இனி யாரும் துணை இல்லை.

துணிந்த பின் மனமே பாடல் :

துணிந்த பின் மனமே துயரம் கொள்ளாதே
சோகம் பொல்லாதே
அணையும் காற்றில் அகல் விளக்கேற்றி
மறைப்பதில் பயனுண்டோ – கையால்
மறைப்பதில் பயனுண்டோ – அதனால்
.

பாயும் ஆற்றில் நீ வீழ்ந்த பின்னால்
நீந்துவதால் பயனேது.
சீறும் புயலும் மழையும் சேர்ந்தால்
சின்னக் குடை தாங்காது.

காதல் தந்த துயர் தீர போதை
கடலில் மூழ்கிடலானாய்

சாவது நிஜமே நீ ஏன் வீணாய்
சஞ்சல பேய் வசம் ஆனாய்.

அன்பே பாவமா அதில் ஏதும் பேதமா

ஆவல் கொண்ட பேதை எந்தன்

காதல் பாவமா என் அன்பே பாவமா

பண்பே இல்லாத ஈன ஜன்மம் பாரினில் நானே

பணி ஏவும் சேவை செய்தும்

பயன் ஒன்றும் காணேனே

பல நாள் வீணில் இலவே காத்த

கிளி போல் ஆனேனே

என் மனதை நன்றாய் அறிந்த பின்னும்

என்னை இழிவாகவே மதித்தார்

ஏவல் செய்யும் அடிமையாய்

அவருடன் இருக்கவும் விட மறுத்தார்

நிறைவேறிடாத காதல்

நினைவே நீங்கவுமில்லை

உயர் நேசம் கொண்ட என்மேல்

மன சந்தோஷமில்லை

நேர்மையற்ற வாழ்வில் கண்ட லாபமேதுமில்லை

இருள் மூடி கிடந்த என் வாழ்விலே

கலங்கரை விளக்கமானார்

மருள் சேரும் மதுவினின்றும் அவரை மீட்கும்

திறனற்ற பாவியானேன்

குடியாலே மோகனாங்க வடிவம் குன்றிடலானார்

கொடு நோயின் வாதையாலே உடல் நலமும் இழந்தார்

குணமும் கொண்ட பொருளும்

கல்வி அறிவும் துறந்தார் என் 

உலகே மாயம் வாழ்வே மாயம்
நிலையேது நாம் காணும் சுகமே மாயம்
காணும் சுகமே மாயம்

அலையும் நீர் மேவும் குமிழாதல் போலே
ஆவதுப் பொய் ஆவதெல்லாம் ஆசையினாலே
அரச போகமும் வைபோகமும் தன்னாலே
அழியும் நாம் காணும் சுகமே மாயம்
காணும் சுகமே மாயம்

உறவும் ஊராரும் உற்றார் பெற்றாரும்
ஓடிடுவார் கூட வாரார் நாம் செல்லும் நேரம்
மறை நூல் ஓதுவதும் ஆகுமிதே சாரம்
மனதில் நாம் காணும் சுகமே மாயம்
காணும் சுகமே மாயம்

மொத்தத்தில் அனைவரும் இணைந்து ஒரு காவியத்தைப் படைத்துள்ளனர் என்றுதான் சொல்ல வேண்டும். 

படைப்பாளர்

பாரதி திலகர்

தீவிர வாசிப்பாளர், பயணக் காதலர்; தொன்மை மேல் பெரும் ஆர்வம் கொண்டவர். அயல்நாட்டில் வசித்து வந்தாலும் மண்ணின் வாசம் மறவாமல் கட்டுரைகள் எழுதிவருகிறார். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய கட்டுரைகள், ‘பூப்பறிக்க வருகிறோம்’ என்கிற புத்தகமாக, ஹெர் ஸ்டோரிஸில் வெளிவந்திருக்கிறது.