ஜெனோவா 1953ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம். இது மலையாளம் மற்றும் தமிழில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டது. மலையாளத் திரைப்படம் வெளியாகி இரண்டு மாதங்களுக்குப் பிறகு தமிழ்ப் படம் வெளியானது. தமிழில் வீரப்பா நடித்த கதாபாத்திரத்தில், மலையாளத்தில் ஆலப்புழா வின்சென்ட் நடித்து இருந்தார். எம் ஜி ஆர் அவர்கள் நடித்த முதல் மற்றும் ஒரே படம் மலையாளப் படம் ஜெனோவா. 

எம். ஜி. ராமச்சந்தர், பி. எஸ். சரோஜா நடித்த  

சந்திரா பிக்ச்சர்ஸ் (ஆலப்புழை) தயாரித்த ஜெனோவா 

நடிகர்கள் 

எம். ஜி. ராமச்சந்தர், எம். ஜி. சக்ரபாணி

பி. எஸ். வீரப்பா, பாலசுப்ரமணியம் 

TS துரைராஜ், MR சாமிநாதன் 

TV சேதுராமன், கொட்டாப்புளி ஜெயராமன் 

CV நாயகம், திருப்பதி 

நடிகைகள் 

பி. எஸ். சரோஜா 

ஜுனியர் கண்ணம்பா

V சரோஜா மேரி, ஜானகி 

ராஜாமணி 

மற்றும் உமா நடன கோஷ்டிப் பெண்கள் 

கதை சுவாமி பிரம்ம வரதன்

வசனம் சுரதா, இளங்கோவன், நெடுமாறன் 

பாட்டு சுரதா, ராஜாமணி ரமணி

சங்கீதம் எம்.எஸ். விஸ்வநாதன், எம்.எஸ். ஞானமணி, கல்யாணம் (எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களின் பெயர் போடும் முதல் படம் என நினைக்கிறேன்.)

பின்னணி பாட்டுகள்  பி. லீலா, ஏ.எம். ராஜா, ஏ.பி. கோமலா, வெங்கடேஷ்  லா பின்னணி பாடியுள்ளனர். 

டைரக்ஷன் F நாகூர் 

இளவரசி ஜெனோவா (பி. எஸ். சரோஜா) காட்டில் குதிரை வண்டியில் செல்லும்போது சக்கரம் கழன்று விட அருகாமை நாட்டின் மன்னர். சிப்ரசோ (எம். ஜி. ஆர்) காப்பாற்றுகிறார். சிப்ரசோ, ஜெனோவாவைத் திருமணம் செய்யும் எண்ணத்தில் தான் இந்த நாட்டிற்கு வந்துள்ளார். ஆனால் சிப்ரசோ, தான் அரசர் எனக் காட்டிக் கொள்ளவில்லை. இளவரசி ஜெனோவாவிடம் தான் அரசர் என்பதை மறைத்து ஒரு வீரன் என அறிமுகப்படுத்திக் கொள்கிறார். அரண்மனையிலும் சென்று ஜெனோவை சந்திக்கிறார். சிப்ரசோவின் அமைச்சர் கோலோவிற்கும் (பி.எஸ். வீரப்பா) ஜெனோவா மீது ஆசை வருகிறது.

மறுநாள் அரசவையில் மன்னராக எம்ஜிஆரைப் பார்க்கும் போது தான் உண்மை தெரிகிறது. ஜெனோவாவுக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சி. சிப்ரசோ, ஜெனோவா இருவருக்கும் திருமணம் நடைபெறுகிறது. மன்னர் சிப்ரசோ போருக்காகப் போகிறார். கோலோ, ஜெனோவாவை அணுகிறான். அவர் மறுக்கவே சிறையில் தள்ளுகிறான். மன்னர் வந்ததும் ஜெனோவாவின் நடத்தை குறித்து தவறாகச் சொல்கிறான். சந்தனக்குழம்பு சேற்றில் கலந்து விட்டது. ஜெனோவா, வேலைக்காரனுடன் சென்று விட்டார் என்கிறான். 

மன்னர் சிப்ரசோ, ஜெனோவாவை நாடு கடத்துகிறார். காட்டில் வாழும் ஜெனோவாவிற்கு தேவ மாதா காட்சி கொடுக்கிறார். 

கோலோ, மன்னருக்கு மூளை குழம்பி விட்டது எனக் கதை கட்டுகிறான். சிறையில் அடைகிறான். ஆனால் நல்லவர்கள் உதவியால் மன்னர் தப்பிக்கிறார். தீயவர்களை அழிக்கிறார். காட்டில் ஜெனோவாவை சந்திக்கிறார். மகிழ்ச்சியாக வாழ்வை இருவரும் தொடருகிறார்கள். 

வசனம் சுரதா, இளங்கோவன், நெடுமாறன் என மூவர் வசனம் எழுதி இருக்கிறார்கள். சுரதா, கவிஞர் எனத் தான் நினைத்து இருந்தேன். அவர் இவ்வாறு திரைப்படங்களில் பணியாற்றியது இப்போது தான் தெரிகிறது.

பாரதிதாசனாரின் மீது இருந்த அன்பால், பாரதி தாசனாரின் இயற்பெயரான கனக சுப்பு ரத்தினத்தின், சுப்பு ரத்தினம் என்ற இரு சொற்களுடன் தாசன் என இணைத்துத் தனது புனைப்பெயரை வைத்து இருக்கிறார். பின் அவற்றின் முதல் எழுத்துக்களை மட்டும் எடுத்து சுரதா ஆக்கி இருக்கிறார்.

1944 ஆம் ஆண்டு ‘மங்கையர்க்கரசி’ திரைப்படத்திற்கு முதன் முதலாக வசனம் எழுதியுள்ளார். அதைப் பாட்டுப் புத்தகம் போல வசனப் புத்தகமாக வெளியிட்டு இருக்கிறார்கள். அவ்வாறு வசனப் புத்தகம் வெளியான முதல் தமிழ்த் திரைப்படம் மங்கையர்க்கரசி தான்.

சுரதா, பல திரைப்படப் பாடல்களையும் எழுதியுள்ளார்.  பல விருதுகளைப் பெற்று இருக்கிறார். இவரது நூல்கள் அரசால் நாட்டுடமையாக்கப் பட்டுள்ளன. 

‘பர்மா ராணி’ திரைப்படத்தில் சிறிய வேடத்திலும் ‘ஓர் இரவு’ திரைப்படத்தில் இரண்டாவது நாயகியாகவும் மற்றும் சில படங்களில் துணை பாத்திரத்திலும் நடித்த பி. எஸ். சரோஜா தான் இப்படத்தில் நாயகி. முதல் அரை மணி நேரத்திலேயே அவரது வாழ்க்கை சோகமாகி விடுகிறது. இயல்பாகச் செய்து இருக்கிறார். 

மக்கள் திலகத்திற்கு வழக்கமான படம் தான். சொல்வதற்கு எதுவும் இல்லை. அதே போலத்தான் வீரப்பா, சக்கரபாணி போன்றோரின் நடிப்பும் உள்ளன. 

‘கண்ணுக்குள் மின்னல் காட்டும் காதல் ஜோதியே’ போன்ற இனிமையான பாடல்கள் உள்ளன.

‘துணை நீயே தேவ தாயே’, ‘பரிதாபம் இல்லையா’ போன்ற பாடல்கள் கிறிஸ்தவ மக்களிடம் பிரபலமாக இருந்தன.

வெள்ளுடை அணிந்துப்  பெண்கள் ஆடும் ஆட்டம் பிரபலமாக இருந்து இருக்கிறது. பார்க்கவும் நன்றாகவே இருக்கிறது.

ஜெனோவா என்பது இத்தாலியில் உள்ள ஒரு நகரத்தின் பெயர். அந்த பெயரை நாயகி தாங்கி வருகிறார். கிறிஸ்தவ பெயர்களைக் கதாபாத்திரங்களுக்குச் சூட்டியிருக்கிறார்கள். ஆனால் கதை அதன் ஓட்டம் பின்னணி என எதுவுமே பெரிய அளவில் கிறிஸ்தவ முறையில் இல்லாததால், கதை பெரிய அளவில் ஒட்டவில்லை. நாயகி காட்டிற்கு அனுப்பப் படுவது; மாதா காட்சி கொடுப்பது இப்படிப் பல காட்சிகள் ‘ஞான சவுந்தரி’ திரைப்படத்தை அப்படியே தழுவி எடுத்தது போலவே உள்ளது. இந்த இரு திரைப்படங்களையும் இயக்கி இருப்பவர் F நாகூர்.

ஞானசவுந்தரி என்பது சிற்றன்னை கொடுமையைச் சொல்லும் திரைப்படம். அது உலகம் முழுவதும் சிண்ட்ரெல்லா போன்று பரவலாக விரும்பப்படும் ஒரு கதை அமைப்பு. ஆனால் இதுவோ அப்படியல்ல; மன்னருக்கு மணம் முடித்த பெண்ணை இன்னொருவன் விரும்புகிறான். சந்தேகத்தால், கணவனே மனைவியைக் காட்டிற்கு அனுப்புகிறார் என்னும்போது, இதில் தீயவன் யார்? கணவனா? அடுத்தவன் மனைவியை விரும்புபவனா என்பதே நாயகனின் நம்பகத்தன்மையைக் கெடுத்து விடுகிறது. 

மேலும் ஞான சவுந்தரி திரைப்படத்தில் தெரியும் நேர்த்தி, இப்படத்தில் எனக்குத் தோன்றவில்லை. இத்தனைக்கும் வசனம் சுரதா, இளங்கோவன், நெடுமாறன் என மூவர் வசனம் எழுதி இருக்கிறார்கள். நெடுமாறன் யார் எனத் தெரியவில்லை. இளங்கோவன் வசனம் எழுதுவதில் கலைஞருக்கு முன்னிருந்தே புகழின் உச்சியில் இருந்தவர். பல திரைப்படங்களில் தன் முத்திரையைப் பதித்தவர். சுரதாவும் உவமைக் கவிஞர் எனப் பெயர் வாங்கியவர். இருந்தும் எதுவும் மனதில் ஒட்டவே இல்லை.

படைப்பாளர்

பாரதி திலகர்

தீவிர வாசிப்பாளர், பயணக் காதலர்; தொன்மை மேல் பெரும் ஆர்வம் கொண்டவர். அயல்நாட்டில் வசித்து வந்தாலும் மண்ணின் வாசம் மறவாமல் கட்டுரைகள் எழுதிவருகிறார். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய கட்டுரைகள், ‘பூப்பறிக்க வருகிறோம்’ என்கிற புத்தகமாக, ஹெர் ஸ்டோரிஸில் வெளிவந்திருக்கிறது. ஹெர் ஸ்டோரிஸில் இவர் தொடராக எழுதிய விளையாட்டு பற்றிய கட்டுரைகள் ‘தமிழர் பாரம்பரிய விளையாட்டுகள்’ என்ற பெயரில் நூலாகவும், சினிமா கட்டுரைகள் ‘சினிமாவுக்கு வாரீகளா?’ என்ற பெயரில் நூலாகவும் ஹெர் ஸ்டோரிஸ் வெளியிட்டுள்ளது.