பணம் 1952ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம். இது சிவாஜி அவர்களின் இரண்டாவது திரைப்படம். பராசக்தியும், பணமும் ஒரே நேரத்தில் தான் திரைப்படமாகின. ஆனால், பணம் வெளியாவதற்கு முன்பே, பராசக்தி வெளியாகி விட்டது. பணம்தான் தனக்கு முதலில் கையில் பணம் தந்த திரைப்படம் என பிற்காலத்தில் சிவாஜி அவர்கள் குறிப்பிட்டு இருக்கிறார்கள். அதாவது முதலில் சம்பளம் என அவர் பெற்றது பணம் திரைப்படத்துக்காகத்தான்.
மதராஸ் பிக்சர்ஸ் தயாரித்த பணம்
திரைக்கதை வசனம் மு கருணாநிதி
மூலக்கதை என் வி பாபு
மியூசிக் எம். எஸ். விஸ்வநாதன் & ராமமூர்த்தி பார்ட்டி
புரொடக்ஷன் வி. நாராயணன்
நடிகைகள்
பத்மினி
டி. ஏ. மதுரம்
வி. சுசீலா
எஸ். டி. சுப்புலட்சுமி
சந்திரா * தனம்
டான்ஸ்
கிரிஜா
அம்புஜம்
மோகனா
நடிகர்கள்
வி சி கணேசன்
என்.எஸ். கிருஷ்ணன்
பி.ஆர். பந்துலு
எம்.ஆர். சாமிநாதன்
வி.கே. ராமசாமி
டி.கே. ராமச்சந்திரன்
சி.எஸ். பாண்டியன்
எஸ்.எஸ். ராஜேந்திரன்
கே.ஏ. தங்கவேலு
சி வி வி பந்துலு
ஜெயராம்
கே சந்திர சேகரன்
வி பி எஸ் மணி
கரிக்கோல் ராஜ்
முத்து
தாமோதரன்
ரங்கநாதன்
பின்னணி
C. S. ஜெயராமன்
M. L. வசந்தகுமாரி
குமாரி ரத்தினம்
ராதா ஜெயலட்சுமி
வெங்கடேசன்
டைரக்ஷன் என். எஸ். கிருஷ்ணன்
உமாபதி, ஜீவா இருவரும் புதிதாகத் திருமணம் ஆனவர்கள். மணமக்கள் மறுவீட்டுக்காக ஜீவாவின் வீட்டுக்குச் செல்கிறார்கள். செல்லும் இடத்தில் திருவிழா காணப் போகிறார்கள். போகும் இடம் மாமல்லபுரம். அங்கு இருக்கும் மண்டபத்தில் ஜீவா ஏறும்போது தடுமாறுகிறார். அப்போது அங்கு பணியிலிருந்த காவல் அதிகாரி ஈஸ்வரனுக்கு, ஜீவா மீது ஆசை ஏற்படுகிறது.
விருந்து முடிந்து திரும்பி வரும்போது, வரதட்சணைப் பணம் ஐயாயிரம் ரூபாயைக் கொண்டு வரவேண்டும் என உமாபதியின் அப்பா சொல்லி விட்டிருந்தார். ஜீவாவின் அப்பாவால் பணத்தைக் கொடுக்க முடியவில்லை. அதனால் ஜீவாவை உமாபதியின் அப்பா திருப்பி அனுப்பி விடுகிறார். மேலும் ஜீவாவின் நடத்தை மீது அபாண்டமாகக் குற்றம் சாட்டுகிறார்.
இன்னுமொரு குடும்பம். அது ஜமீன்தார் குடும்பம். அந்த வீட்டின் மகள் கோமதி. இவர், சுந்தரம் (எஸ்.எஸ். ராஜேந்திரன்) என்பவரைக் காதலிக்கிறார். சுந்தரம் ஏழை. இதனால் கோமதிக்கு வேறு மாப்பிள்ளை பார்க்கிறார்கள். உமாபதிக்குக் கோமதியை மறுமணம் செய்தும் வைக்கிறார்கள். கோமதி தனது காதல் குறித்துச் சொன்னதால், உமாபதி, அங்கிருந்து வெளியேறி, தன் இரு திருமண வாழ்க்கையும் இப்படி ஆகிவிட்டனவே எனத் தற்கொலைக்கு முயலுகிறார். சுந்தரம் அவரைக் காப்பாற்றுகிறார்.
ஈஸ்வரன் ஜீவாவை அடைத்து வைக்கிறார். ஐயாயிரத்துக்குப் பதில் பத்தாயிரம் நான் உங்களுக்குத் தருகிறேன் ஜீவாவை எனக்குத் திருமணம் செய்து வையுங்கள் என ஜீவாவின் அப்பாவிடம் கேட்க, அப்பா மறுக்கிறார். ஒரு காலகட்டத்தில் அப்பாவைக் கொலையும் செய்து விட, பழி உமாபதி மீது.
உமாபதி, பழி நீங்கி, ஜீவாவைத் தேடி வருகிறார். அங்கு மனம் மாறிய ஈஸ்வரன் கடிதம் எழுதி வைத்து விட்டு, தற்கொலை செய்து கிடக்கிறார். ஜீவா மயக்கமாகக் கிடக்கிறார். அருகில் பத்தாயிரம் ரூபாய் பணம். ஜீவாவின் நல்வாழ்விற்குக் கொடுக்க என ஈஸ்வரன் கொண்டு வந்த பணம். உமாபதியின் அப்பாவும் அங்கு வருகிறார். ஜீவா இறந்ததாக நம்பிய உமாபதி, பணத்தை அப்பா மீது வீசி ஏறிய, அப்பா திருந்துகிறார். ஜீவாவும் மயக்கம் தெளிந்து எழுப்புகிறார்.
ஜீவாவின் அப்பா மருத்துவர் என்பதால் அவர் நினைவாக ஒரு மருத்துவமனை உமாபதி குடும்பம் கட்டுவதாகத் திரைப்படம் நிறைவு பெறுகிறது.
மதராஸ் பிக்சர்ஸ் தயாரித்த பணம் எனத் தான் எடுத்த உடன் போடுகிறார்கள். புரொடக்ஷன் வி நாராயணன் எனத் திரைப்படத்தில் போடுகிறார்கள். கவியரசு கண்ணதாசனின் மூத்த சகோதரரான ஏ.எல். சீனிவாசன் 1951ஆம் ஆண்டு, ‘மதராஸ் பிக்சர்ஸ்’ என்ற நிறுவனத்தைத் தொடங்கினார்; அதன் முதல் படம் பணம் எனவும் இணையம் சொல்கிறது. ஏ.எல். சீனிவாசன் அவர்களுக்கு அழகம்மை என்பவரும் நடிகை எஸ். வரலட்சுமியும் மனைவிகள்.
சிவாஜி நடிப்பு குறித்துச் சொல்லத் தேவையில்லை. காதல், மனைவி மீதான அன்பு அபரிதமாக இருந்தாலும், அப்பா சொல்லைத் தட்ட முடியாமல் மனதுக்குள் புழுங்குவது, மனைவி மீது ஏற்படும் சந்தேகத்தால் குழம்புவது, இரண்டாவது மனைவியும் வேறு ஒருவரின் காதலி எனத் தெரிந்தபின் சோகத்தில் தற்கொலை வரை போவது என மனிதர் அப்படி நடித்து இருக்கிறார்.
அடுத்து வருபவர் பத்மினி. இந்த படத்தில் தான் நாயகிக்கான இடம் பத்மினி அவர்களுக்குக் கிடைத்துள்ளது. இதற்கு முன் வந்த திரைப்படங்கள் பலவற்றிலும் நடனம் பத்மினி எனப் போடுவார்கள். அல்லது இரண்டாவது, மூன்றாவது இடத்தில்தான் அவரின் பெயர் இடம் பெற்று இருந்தன. இதில் பெண்கள் வரிசையில் அவர் பெயர் முதலில் வருகிறது.
சிவாஜியும் என்.எஸ். கிருஷ்ணனும் இணைந்து பணியாற்றிய முதல் படம்; விஸ்வநாதன் – ராமமூர்த்தி இருவரும் இணைந்து இசையமைத்த முதல் திரைப்படம். இந்த இரட்டையர் பெயரில் தனது பெயரை முதலில் போடச்சொன்னவர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்கள்தான் என எம் எஸ் வி அவர்கள் ஒரு நேர்காணலில் குறிப்பிடுகிறார்கள்.
‘பள்ளிக்கூடத்துல படிச்சாதான் படிப்புங்களா அவன் தான் உலகத்தையே படிச்சிருக்கானே’ என சொல்லப்படும் நபராக, சட்டையில் எப்போதும் சிறு திருக்குறள் புத்தகத்தை வைத்து இருப்பவராக என்.எஸ். கிருஷ்ணன் (துரை) வருகிறார். திருக்குறள் முன்னேற்றக் கழகம், ‘கண்ணாடி முகத்தைக் காட்டும்; திருக்குறள் அகத்தைக் காட்டும்’, ‘நம் பார்வையைச் சரி செய்யும் கண்ணாடி திருக்குறள்’ எனத் திருக்குறளுக்கான மிகப்பெரிய பரப்புரையாகத் தன் பாத்திரத்தை வடிவமைத்துள்ளார். திரைப்படத்தின் இயக்குநரும் அவரே என்பதால், அவருக்கான வெளி என்பது எளிதாக அவருக்கு வாய்க்கப் பெற்றுள்ளது.
ஹிட்லர் கிராப்பு, பில்டர் மீசை என வருகிறார். குடை சரி செய்ய வந்தவரிடம் ‘வேலைக்கார பய துரைன்னு ஒருத்தன் இருக்கான். அவன் ஜிப்பாயத் தாரேன் கழுத்தையோ கையியோ வெட்டிப் போடு’ எனச் சொல்லுமளவுக்கு, அதாவது கருப்பு ஜிப்பா போடும் தி.க. காரராக அவரைத் திரைப்படம் முழுவதும் குறியீடுகள் சொல்கின்றன. திருக்குறள் முன்னேற்றக் கழகம், எனப் பெயர் வைத்துக் கொண்டு தினா முனா கனா என தி மு க கட்சிக்கான பரப்புரை போன்ற பாடல் ஒன்றையும் பாடியுள்ளார்.
ஒரே ஒரு முறை வாழ்க்கையில் தவறி இருக்கிறேன் எனத் துரை சொல்ல அதே போல மதுரமும் (நல்லம்மாவும்) சொல்லுகிறார். துரைக்குக் கோபம் வருகிறது. அப்போது அவர் பாடும் கவியரசு கண்ணதாசன் அவர்களின் பாடல் இதோ:-
‘ஆணுக்கோர் நீதி பெண்ணுக்கோர் நீதி
ஆகுமோ சொல்லையா நீ
ஆயிரமாயிரம் சாத்திரம் படித்தும் அறிவே இல்லையா? சற்றேனும்
கண்ட பெண்களைக் கொண்டவள் போலே
கருதுவான் ஆண் பிள்ளை
என்னும் கல்லானாலும் கணவன் என்றே
கலங்கணும் பெண்பிள்ளை எந்நாளும்
கலங்கணும் பெண்பிள்ளை
ஆடு மாடு போல பெண்கள்
அடங்கி நடக்கணும் பெண்கள்
அவரை அடித்து உதைத்து ஆண்களெல்லாம்
ஆட்டம் போடணும் ஆண்கள்
ஆட்டம் போடணும்
வேலை முடிந்த பின்னும்
அடைபட்டு இருக்கணும் பெண்கள்
நல்ல விலை கொடுத்து காதல் தேடி
வெளியே சுத்தணும் ஆண்கள்
வெளியே சுத்தணும்
மானத்தைக் காக்கணும் மாதர்கள் என்றால்
ஆண்களும் அது போலே
தன் மானத்தைக் காத்து ஒரு மனதோடு
வாழணும் புவி மேலே எந்நாளும்
வாழணும் புவி மேலே
படிச்ச மாப்பிள்ளைக்கு ஒரு பொண்ண குடுக்க பணம் கேட்கிறாங்கல்ல அதே போல படிச்ச பெண்ணுக்கு பணம் தரணும்’ எனக் கேட்கும் பாத்திரமாக அவரது பாத்திரம் இருக்கிறது. இந்த இணையில் மதுரம் படித்தவராக வருகிறார்.
அதே நேரம், நாயகி ஜீவாவின் பாத்திரமோ, “அடுப்பை மூட்டிக் கூட்டிப் பெருக்கி இடுப்பை வளைக்கணும்”, என்ற மணமகள் திரைப்படத்தின் உடுமலை நாராயண கவிராயர் பாடலுடன் குடும்பத்தின் விளக்கு என்ற பாடல் பாடுபவராக உள்ளது. இதுவும் கவியரசு கண்ணதாசன் எழுதிய பாடல் தான்.
“குடும்பத்தின் விளக்கு நல்ல
நூலைப் போல சேலை தாயைப் போலவே பெண்ணு
என நாலு பேர்கள் பேச நாட்டில்
வாழ்பவள் கண்ணு
வேலையாட்கள் இருந்தும் வீட்டு வேலை பண்ணும்
புய தேவை விருந்தோம்பலுடனும் இருப்பவள் எவளோ அவளே
அடுத்த வீடு சென்று அரட்டை அடிக்கப் படாது
எவரானாலும் வீணாக கெடுக்கப் படாது
குடித்தனமுறை ஒழுக்கம் எதுவும் குறையப்படாது
பெறும் குழந்தை குட்டியைப் பெயர் கெடாது வளர்ப்பவள் எவளோ அவளே
மாமி மெச்சும் மருமகளாய் பேரேடுக்கோணும்
நாட்டில் மணவாளன் மக்கள் மனம் மகிழ வைக்கோணும்
மாமன் மச்சான் வந்தால் எழுந்து மதிப்பு கொடுக்கணும்
குலமானம் குணத்தில் சிறந்து காணும் மங்கை எவளோ
மேலும் ‘எங்கே தேடுவேன் பணத்தை எங்கே தேடுவேன்’, ‘தினா முனா கனா’ போன்ற பாடல்களும் உள்ளன.
“நாடகம் நடத்துறாங்களாம் நாடகம். எனக்குன்னு எழுதுன மாதிரி இல்லா இருக்குது கத. நஞ்சைல கரும்பு போட்டதனால தான் நாட்டில உணவு கஷ்டம் வந்துடிச்சி; ஆமா கரும்பு இல்லாம காபி எப்படி சாப்பிடுவீங்க? படுக்கையில இருந்து எழுந்தவுடனே காபி சாப்பிட பழகியாச்சி”
“புகையிலையை வெத்தலையிலே சாப்பிடறான்; பொடியா உபயோகப் படுத்துறான் சுருட்டா குடிக்கிறான்; சிகரெட்டா உதித் தள்ளுறான்; ஆனா புகையில பயிரிடக்கூடாதாம்”
இப்படித் திரைப்படம் தொடங்குவது முதல், கலைஞர் ஆங்காங்கே பொடி வைத்துக் கொண்டே இருக்கிறார்.
“படிச்ச பொண்ணுங்களுக்கு தான் சுதந்தரம் அதிகமாச்சே!”
கதை வரதட்சணைக் கொடுமை பற்றியதாக இருந்தும், திருமணமான நாயகனுக்கு வேறு திருமணம் நடத்துவது, திருமணமான நாயகியை வேறு ஒருவர் மணமுடிக்க நினைப்பது என எங்கெங்கோ போகிறது.
‘படிச்ச மாப்பிள்ளைக்கு ஒரு பொண்ண குடுக்க பணம் கேட்கிறாங்கல்ல? அதே போல படிச்ச பெண்ணுக்கு பணம் தரணும்’ எனக் கேட்கும் பாத்திரமாக மதுரம் அவர்களின் பாத்திரம் இருக்கிறது என்றால், நாயகி ஜீவாவின் பாத்திரமோ பணத்துக்காக அப்பாவுடன் சேர்ந்து கொண்ட, இரண்டாவது திருமணமும் செய்து கொண்ட, அந்தப்பெண்ணாலும் நிராகரிக்கப் பட்டதால் தற்கொலை வரை சென்ற கணவனை அப்படியே ஏற்றுக் கொள்பவராக இருக்கிறார். ஒரு கோபம் இல்லை; சண்டை இல்லை. பெண்கள் குறித்து என்ன கருத்துச் சொல்ல வருகிறார்கள் என்பதே புரியவில்லை. கணவன் என்ன செய்தாலும் அவர் திரும்பி வந்தால் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதைச் சொல்லாமல் சொல்லும் திரைப்படம் இது.
படைப்பாளர்
பாரதி திலகர்
தீவிர வாசிப்பாளர், பயணக் காதலர்; தொன்மை மேல் பெரும் ஆர்வம் கொண்டவர். அயல்நாட்டில் வசித்து வந்தாலும் மண்ணின் வாசம் மறவாமல் கட்டுரைகள் எழுதிவருகிறார். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய கட்டுரைகள், ‘பூப்பறிக்க வருகிறோம்’ என்கிற புத்தகமாக, ஹெர் ஸ்டோரிஸில் வெளிவந்திருக்கிறது. ஹெர் ஸ்டோரிஸில் இவர் தொடராக எழுதிய விளையாட்டு பற்றிய கட்டுரைகள் ‘தமிழர் பாரம்பரிய விளையாட்டுகள்’ என்ற பெயரில் நூலாகவும், சினிமா கட்டுரைகள் ‘சினிமாவுக்கு வாரீகளா?’ என்ற பெயரில் நூலாகவும் ஹெர் ஸ்டோரிஸ் வெளியிட்டுள்ளது.