1951 முதல் 1960 வரை

‘சினிமாவுக்கு வாரீகளா? – 2, 1951 முதல் 1960 வரையுள்ள திரைப்படங்கள்’ கட்டுரைகள் இந்தத் தொடரில் இடம்பெறுகின்றன.

வனசுந்தரி

வனசுந்தரி 1951 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம்.

கிருஷ்ணா பிக்சர்ஸ் அளிக்கும் வனசுந்தரி என [படப்பெயர் போட்டவுடன் நடிகர்கள் பெயர் போடுகிறார்கள்.

ஆண் நடிகர்கள்

பி.யு. சின்னப்பா

என்.எஸ். கிருஷ்ணன்

எம்.ஜி. சக்ரபாணி

டி.எஸ். பாலையா

பெண் நடிகர்கள்

டி.ஆர். ராஜகுமாரி

டி.ஏ. மதுரம்

எஸ். வரலட்சுமி

டி.வி. குமுதினி

சி.டி. ராஜகாந்தம்

லலிதா பத்மினி

சி.ஆர். ராஜகுமாரி

டி.ஏ. ஜெயலட்சுமி

பாடியவர்கள் 

டி.கே. பட்டம்மாள்

P. லீலா

P.A. பெரியநாயகி

T.R. ராஜகுமாரி 

K.V. ஜானகி 

எஸ். வரலட்சுமி

N.S. கிருஷ்ணன்  

T.A. மதுரம்

பாடல்கள் : உடுமலை நாராயணk கவி, கம்பதாசன்

கதை வசனம் : இளங்கோவன் 

இசை : எஸ்.வி. வெங்கட்ராமன் மற்றும் சி.ஆர். சுப்புராமன் 

தயாரிப்பு : லேனா 

திரைக்கதை இயக்கம் : T.R. ரகுநாத் 

திரைப்படத்தில்  எடுத்தவுடன்  வனசுந்தரியைக் காட்டுகிறார்கள். அவரது இறந்து போன வளர்ப்பு அப்பா மன்னர் கீர்த்தி வர்மன் ஆவியாக அவர் முன் வருகிறார். ஷேக்ஸ்பியரின் ‘ஹாம்லெட்’ நாடகத்தால் ஈர்க்கப்பட்டு இந்த பாத்திரம் படைக்கப்பட்டிருக்கலாம் என வரலாற்றாளர் ரண்டார் கய் சொல்கிறார்! “லீலாமிருதம், தனது பதவிக்காக அஷ்டாவக்கிரன் துணையை நாடியுள்ளாள். அவன், உன்னைத் தன் மகனுக்கு மணம் முடித்து நாட்டைக் கைப்பற்ற வேண்டும் என நினைத்துத் தம்பி கபளீகரன் உடன் இணைந்து என்னைக் கொன்றுவிட்டாள்” என்கிறார்.

மேலும் வனசுந்தரி தன் வளர்ப்பு மகள் அல்ல சொந்த மகள் என்றும் சொல்கிறார். தான் காட்டில் ஒரு பெண்ணை  சந்தித்ததாகவும் அவரைத் திருமணம் செய்ததாகவும் நாட்டில் ஏற்பட்ட குழப்பத்தால், அவரை காட்டில் அவரது சகோதரர் வீட்டில் விட்டு வந்ததாகவும் சொல்கிறார். அவ்வாறு காட்டிலிருந்த மனைவிக்குப் பிறந்தவர்தான் இந்த வனசுந்தரி. ஒரு பூகம்பத்தில் காடு சேதம் அடைகிறது. தற்செயலாக இவர் காட்டுக்குச் செல்கிறார்; அப்போது மகளை இவரிடம் ஒப்படைத்துவிட்டு மனைவி இறந்து விடுகிறார்.

“இதற்கான அனைத்து ஆவணங்களையும் நான் கட்டில் கீழே வைத்துள்ளேன். காட்டிலிருந்த முனிவர் ஒருவரிடம் நீ என் மகள்தான் என்பதற்கான ஆவணம் கொடுத்துள்ளேன். இவற்றை வைத்து நீ ஆட்சி செய், என்னைக்  கொன்றவர்களைப் பழிவாங்கு” எனச் சொல்லிவிட்டுச்  செல்கிறார். 

நீலபுரியின் அரசன் மார்த்தாண்டன் மக்கள் மீது அக்கறை இல்லாமல் இருக்கிறார். இதை இளவரசர் குணசாகரன் எதிர்த்தால், நாட்டை விட்டு விரட்டப்படுகிறார். நாடு கடத்தப்பட்ட குணசேகரன் தன் நண்பன் அதிமேதாவியுடன் வனசுந்தரியின் நாட்டுக்கு வருகிறார். அங்கு கபளீகரன் மற்றும் லீலா இவர்களின் ஆட்சிதான் நடக்கிறது. வனசுந்தரி அவர்களின் காவலில்தான் இருக்கிறார். வனசுந்தரியை  குணசாகரன் காட்டில் சந்திக்கிறார். இருவரும் காதலிக்கிறார்கள். வனசுந்தரியை மீட்பதாக குணசாகரன் உறுதியளிக்கிறார், 

மேதாவி, வனசுந்தரியின் தோழி சந்திரிகாவிடம் ரத்தின கற்களை ஏமாற்றி எடுக்கிறார். இதனால் சிறையில் அடைக்கப்படுகிறார், அவரை மீட்க குணசாகரன் வர, அவரும் சிக்கிக் கொள்கிறார்.  அவர்களை மீட்க சந்திரிகா வருகிறார்.

இருவரும் காட்டில் ஒரு பெண்ணை சந்திக்கிறார்கள். அவர் ஒரு முத்துப் பதுமையைத் தான் பெற்றால் என்றும் இளமையுடன் வாழலாம் அதை எடுத்துத் தர அதற்கான சரியான ஆள் இந்த குணசாகரன்தான் என நினைத்து, அவரிடம் உண்மையைச் சொல்கிறார். நண்பர்கள் இணைந்து சென்று முத்துப் பதுமையைப்  பெறுகிறார்கள்.

அதைத் தொட்டதும் மோகினி வருகிறார். அவர் உதவியுடன் இவர்கள் அமராவதிக்கு வந்து வனசுந்தரியைச் சந்திக்கிறார்கள். மீண்டும் சிறைப்படுகிறார்கள். பதுமை அஷ்டாவக்கிரன் மகனிடம் சிக்கிக் கொள்கிறது. மேதாவி சிறையில் இருந்து தப்பித்து வெளியேறி பதுமையை வைத்திருப்பவரிடம் செல்கிறார். குணசாகரன் கைதியாக அமராவதியில் இருப்பது அவரது பெற்றோருக்குத் தெரிய வருகிறது. அவர்கள் அவரை மீட்க ஆள் அனுப்புகிறார்கள். கீர்த்தி வர்மனின் சொந்த மகள்தான் வனமோகினி என முனிவர் மூலம் நிரூபிக்கப்படுகிறது. வனசுந்தரி குணசாகரன் திருமணம் நடைபெறுகிறது.

 இப்படத்தின் நாயகனாக பி.யு. சின்னப்பா நடித்துள்ளார். 35 வயதில் இறந்த சின்னப்பா உயிருடன் இருக்கும்போது வெளிவந்த கடைசி திரைப்படம் இதுதான். அவரது கடைசி திரைப்படமான சுதர்சன், அவர் இறந்த பின்பே வெளிவந்தது.

அவருக்கு நண்பராக என்.எஸ். கிருஷ்ணன் வருகிறார். சொல்லப் போனால் அவர்தான் இவரைவிட கூடுதல் நேரம் வருவதுபோல தெரிகிறது. இவர் சிறைப்பட்ட நேரத்தில் அவர்தான் வெளியில் போய், அங்கிருந்து அனைத்து வேலைகளையும் செய்வதாகக் கதை நகர்கிறது. வனசுந்தரியாக டி.ஆர். ராஜகுமாரி நடித்துள்ளார். வழக்கம் போல நிறைவாகச் செய்துள்ளார். வில்லி லீலாவதியாக வரலட்சுமி நடித்துள்ளார். அந்த வேடத்துக்கும் அவர் நன்றாகவே  பொருந்துகிறார்.

மேதாவி, பண்டிதர் வீட்டிற்கு போய்த் தன்னை கொங்கண நாட்டிலிருந்து வருவதாக சொல்கிறார். அப்படியானால் நீ கொங்கணன், “கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா” என பண்டிதர் சொல்லவும், வள்ளுவர் அதை சொன்னதாக உரையாடல் முடிவதெல்லாம், வள்ளுவரை எங்கெல்லாம் இழுக்கிறார்கள் என சிரிப்பு வந்தது.

‘ஆடு 15 புள்ளி மூணு இந்த ஆட்டம் ஆட அது வேணும் 

எது? 

மூளையது வேணும்’ என்பதாக ஒரு பாடல் வருகிறது. உடுமலை நாரயணக் கவி எழுதி டி.ஏ. மதுரம் பாடிய இந்தப் பாடல் மூலம் இந்த விளையாட்டு அப்போதே பிரபலம் என்பது தெரிய வருகிறது.

‘உன் கண் உன்னை ஏமாற்றினால்

என் மேல் கோபம் உண்டாவதேன்

டடடா டடடா டடடா’ என்ற 1949ஆம் ஆண்டு வெளிவந்த வாழ்க்கை திரைப்படத்தின் பாடல் மெட்டில் ,

‘கதவுக்கு பதிலாக கம்பியும் 

கையில கத்தியோட ஒரு தம்பியும் 

மனமும் கொண்டது மாளிகை தான் 

இதை மனிதன் மறப்பது வேடிக்கைதான் 

டடடா டடடா டாட்டாடடா’ 

என என்.எஸ். கிருஷ்ணன் சிறு பாடலைப் பாடுகிறார். இந்தப் படத்தில் பூக்காரி ஜக்கம்மா என்ற பாடல் இடம்பெறுகிறது. பூக்களை அழகாகப் பட்டியலிடுகிறது இந்தப் பாடல். ‘பூ பூவோ பூவு’ எனத் தொடங்கும் இந்தப் பாடலை எழுதியவர் உடுமலை நாராயணக் கவி, பாடியவர் P.A. பெரியநாயகி.

இதைவிட சுவாரஸ்யமான இன்னொரு பாடலும் உண்டு. உடுமலை நாராயணக் கவி இயற்றிய இந்தப் பாடலை என்.எஸ். கிருஷ்ணனும் டி.ஏ. மதுரமும் பாடியுள்ளனர். அந்தக் காலத்தில் ‘கற்பு’ என்பதைப் பெண்கள் எப்படிப் பார்த்தனர், ஆண்கள் ‘தொட்டால் என்ன தப்பு? உன் அப்பா, அண்ணன், மாமன் எல்லாம் தொடவில்லையா? ஆம்பளை தொட்டா பொண்ணு கெட்டுப் போகுமா?’ என கிருஷ்ணன் கேட்பது போலவும், பதிலுக்கு, ‘அண்ணன் தம்பி அப்பாவுக்கும் அடுத்தவங்க தொடுவதற்கும் எண்ணத்திலே பேதமுண்டு, புரிஞ்சுதா? இனி இப்படியெல்லாம் செய்யக்கூடாது தெரிஞ்சிதா?’ என மதுரம் மறுமொழியாகப் பாடுவதும் அழகு. அந்தக் காலத்தில் ஆண்-பெண் உடல் எல்லைகளை எப்படி வகுத்தனர், அதை எப்படி அறிவுரையாகப் பாடல்கள் மூலம் கடத்தினர் என்பதற்கு இந்தப் பாடலும் சிறந்த எடுத்துக்காட்டு!

தொடரும்…

படைப்பாளர்:

பாரதி திலகர்

தீவிர வாசிப்பாளர், பயணக் காதலர்; தொன்மை மேல் பெரும் ஆர்வம் கொண்டவர். அயல்நாட்டில் வசித்து வந்தாலும் மண்ணின் வாசம் மறவாமல் கட்டுரைகள் எழுதிவருகிறார். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய கட்டுரைகள், ‘பூப்பறிக்க வருகிறோம்’ என்கிற புத்தகமாக, ஹெர் ஸ்டோரிஸில் வெளிவந்திருக்கிறது.