அனார்கலி 1955-ம் ஆண்டு வெளியான திரைப்படம். மிகச்சிறப்பான பாடல்களைக் கொண்ட திரைப்பட வரிசையில் இப்படத்திற்கும் ஓர் இடமுண்டு. அனார்கலி 1953-ம் ஆண்டு ஹிந்தியில் திரைப்படமாகி பெரும் வெற்றி பெற்று இருக்கிறது. தமிழிலும் தெலுங்கிலும் தயாரிக்கப் பட்ட இப்படம், மாபெரும் வெற்றியை இரு மொழிகளிலும் பெற்றது. இன்றும் ஒரு ஆடைக்கு அனார்கலி என்று பெயருண்டு.

அஞ்சலி பிலிம்ஸ் அளிக்கும் அனார்கலி தமிழ் எனத் திரைப்படத்தின் பெயர் போடும்போது அனார்கலியின் ‘ர்’ எழுத்தின் மேலே புள்ளிக்குப் பதில் பிறை வைத்து இருக்கிறார்கள். 

‘பாரம்பரியமாக நாட்டிலிருந்து வரும் அனார்கலி சலீம் காதல் கதையை ஆதாரமாக்கிக் கொண்டு சித்தரிக்கப் பட்டதே இப்படம். சரித்திரத்திற்கும் இதற்கும் சம்பந்தமில்லை’ எனப் போடுகிறார்கள். 

நடிகைகள் 

அஞ்சலி தேவி

கண்ணாம்பா 

எஸ்.பாலசரஸ்வதி 

C ஹேமலதா 

நடிகர்கள் 

நாகேஸ்வர ராவ்

எஸ்.வி. ரங்கா ராவ் 

வி. நாகய்யா

பேகட்டி 

VC காமராஜ் 

மற்றும் 

திலகம் 

கலாதேவி 

தாத்தாச்சாரி 

சுப்ரமணியம் 

நாகேஸ்வரராவ் 

காசி ரெட்டி 

ஜெக்கா ராவ் 

M வெங்கையா 

வசனம் உதயகுமார் 

பாடல்கள் தஞ்சை என். ராமையா தாஸ்.

சங்கீதம் P. ஆதிநாராயண ராவ் 

உதவி M ரங்காராவ் 

பாடியவர்கள் காண்டசாலா, ஜிக்கி, பி. சுசீலா 

தயாரிப்பு P. ஆதிநாராயண ராவ்

சினாரியோ டைரக்ஷன் வேதாந்தம் ராகவய்யா 

பாரசீகப் பெண்ணான நாதிரா, மற்றும் அவரது இனக்குழு ஆக்ராவிற்குக் குடிபெயருகிறது. நாதிராவிற்குப் பூக்கள், குறிப்பாக மாதுளைப் பூக்கள் மீது மிகவும் விருப்பம். ஒரு நாள், தோட்டத்தில் மாதுளை மலர்கள் பறிக்கும்போது முகலாய இளவரசர் சலீம் வருகிறார். அது அரண்மனைத் தோட்டம் என்பது நாதிராவிற்குத் தெரியாது. சலீம் தன்னை ஒரு சிப்பாய் என அறிமுகப்படுத்திக் கொள்கிறார், இருவரும் காதலிக்கிறார்கள். இருவரும், அந்த மாதுளைத் தோட்டத்தில் அடிக்கடி சந்திக்கிறார்கள். 

ஒருமுறை, தனது தோட்டத்தில் உலா வரும் போது, பேரரசர் அக்பர், நாதிராவின் பாடலால் ஈர்க்கப்படுகிறார். ‘அனார்கலி’ அதாவது ‘மாதுளை மலர்’ எனப் பட்டம் கொடுத்துவிட்டுப் போகிறார். அரசியிடமும் அந்தப் பாடல் குறித்துப் புகழ்கிறார்.

இந்தக் காலகட்டத்தில் காபூலில் கலகம் ஏற்படுகிறது. இதனால், அக்பர், சலீமைத் தலைமை தளபதியாக அனுப்புகிறார். அவருடன் ராஜா மான்சிங்கையும் அனுப்புகிறார். அனார்கலி ‘சிப்பாய் சிப்பாய்’ எனக் கத்திக் கொண்டே பின்னால் செல்கிறார். ஆனால் சலீமின் காதுகளில் விழவே இல்லை.

அனார்கலியின் குழு கூடாரம் அமைத்து இருக்கும் இடத்திற்கு அதிகாரிகள் வந்து, “உங்கள் நாட்டினர் கலவரம் செய்வதால் நீங்கள் இந்த இடத்தை விட்டு வெளியேறுங்கள்” என்கிறார்கள். இதனால் அனைவரும் மேற்கு நோக்கிப் போகிறார்கள். வழியில் திருடர்கள் அனார்கலியைப் பிடித்து, ஏலம் விடுகிறார்கள். சலீம் வாங்குகிறார். 

மான் சிங், வந்த வேலையைப் பாரும் என மன்னரின் பெயரால் கட்டளையிடுகிறார். சலீம் வேறு வழியின்றி அனார்கலியை விட்டுவிட்டுச் செல்கிறார். சென்றவர், போரில் படுகாயமடைகிறார். அதனால் அவரை ஆக்ராவிற்குக் கொண்டு வருகிறார்கள். அனார்கலியும் பின்தொடர்ந்து வருகிறார். மனமுடைந்த அக்பர், அனார்கலியை அரண்மனை நீதிமன்ற நடனக் கலைஞராக நியமிக்கிறார். அனார்கலி, சலீம் உறவு குறித்து அவருக்கு எதுவும் தெரியாது.

அனார்கலியின் பாடல் கேட்டு சலீம் கண்விழிக்கிறார். அப்போதுதான் சலீம் சிப்பாய் அல்ல இளவரசர் என்பது அனார்கலிக்குத் தெரியவருகிறது. இவர்களின் காதலும் அனைவருக்கும் தெரியவருகிறது. அக்பர் காதலை எதிர்க்கிறார். 

சலீம் கிளர்ச்சி செய்கிறார். இதனால் அவரைக் கொல்ல அக்பர் கட்டளையிடுகிறார். அதே நேரம், அனார்கலிக்கும் உயிரோடு சமாதி கட்ட ஆணையிடுகிறார். இறுதியில் ராஜா மான்சிங் தலையிட்டு, சலீமைத் தண்டனையிலிருந்து விடுவிக்கிறார். சலீம், அனார்கலியைத் தேடிச் செல்கிறார். ஏற்கனவே அவர் புதைக்கப் பட்டு விடுகிறார். சலீம் கல்லறையில் தலையை மோதி இறக்கிறார்.

அனார்கலி சலீம் கதை பிற்காலத்தில் பல திரைப்படங்களில் நாடகங்களாக இணைக்கப் பட்டுள்ளன. எடுத்துக்காட்டிற்குச் சொல்லவேண்டுமானால்,  ‘அனார்கலி சலீம்’ நாடகம் ஒன்று ‘இல்லற ஜோதி’ திரைப்படத்தில் வரும். உத்தமன் திரைப்படத்தில் வரும் ‘படகு படகு ஆசைப்படகு’ பாடலின் ஒரு பகுதி அனார்கலி சலீம் கதையே! 

அனார்கலியாக வரும் அஞ்சலி தேவி, ஆட்டம் பாட்டம், நடிப்பு என அசத்தி இருக்கிறார். குறிப்பாகச் சிப்பாய் என்ற ஒரு சொல்லே அவரிடமிருந்து பல நேரங்களில் பல பரிணாமங்களில் வருகிறது. குறிப்பிடத்தக்க நடிப்பு எனப் பதிவு செய்யும்படியான நடிப்பைக் கொடுத்திருக்கிறார். குறிப்பாகப் பெண் பாத்திரத்திற்குப் பல பாடல்கள் வைத்திருப்பதும் அவற்றை எல்லாம் அஞ்சலி தேவி மெருகேற்றியிருப்பதும் திரைப்படத்தை உயர்நிலைக்கு எடுத்துச் செல்கிறது. திரையுலகின் தவிர்க்க இயலாதப்  படமாக இதை அவர் உருவாக்கியிருக்கிறார்.

நாகேஸ்வர ராவ், ஏற்கனவே லைலா மஜ்னு, தேவதாஸ், போன்ற காதல் தோல்விப் படங்களில் பாதி நேரம் தாடி மீசையுடன் சோகமாகவே வந்தார். ஆனால், இந்தத் திரைப்படத்தில் பெரும்பாலும் அழகான இளைஞராகவே வருகிறார். மிக இயல்பாக நடித்தும் இருக்கிறார்.   

அடுத்து உள்ளம் கவர்ந்தவர், ராஜா மான்சிங்காக வரும் நாகையா. மிகவும் கம்பீரமாக ஒரு தேர்ந்த படைத்தளபதி போன்று இருக்கிறார். 

அக்பர் என்றவுடன் இளம் வயதில் படித்த அக்பர் பீர்பால் நகைச்சுவைக் கதைகளில் வரும் அக்பர்தான் நினைவிற்கு வந்தார். அக்பர் உயரமானவர் அல்லர் என்றும் வாசித்து இருப்பதால், மிகவும் உயரமாக இருக்கும் ரங்காராவ், அக்பராக வந்தபோது சிறிது ஏமாற்றம்தான். ஓர் அரசர் என எடுத்துக் கொண்டால், நன்றாகவே இருந்தார். 

திரைப்படத்தை அஞ்சலிதேவி அவர்களின் P. ஆதிநாராயண ராவ் தயாரித்து இசையும் அமைத்து இருக்கிறார். பாடல்கள் காலம் கடந்தும் நிற்பவை. கேட்காதவர்கள் கேட்டுப் பாருங்கள். எத்தனை இனிமை!

ஹிந்தியின் Yeh Zindagi Usi Ki Hai – Lata Mangeshkar, Beena Roy, பாடல்தான், தமிழில் ‘ஜீவிதமே சபலமோ’ என ஆகியிருக்கிறது. தஞ்சை ராமையா தாஸ் எழுதிய இந்தப் பாடலைப் பாடியவர் ஜிக்கி. 

ஜீவிதமே சபலமோ ஜீவிதமே சபலமோ- என்

ஜீவிதமே சபலமோ தென்றல் சுகம் மலருமோ

ப்ரேமை என்றால் மதுரமோ?

ஆசையாய்த் தேடுதே ஆர்வமோடு பாடுதே

வண்டாக சூடும் காதல் மதுர மனமும் சுகமாய் மலர்ந்ததே

அனாரு பூவின் சோலையில் ஆசைக் கனவு காணுதே

வசந்த மதுர தேன்மலர் மன்றாடி ஏங்கும் வேளையே

காவின் தென்றல் வீசுதே யாவும் ப்ரேமை லீலையே

விண்ணோடு பேசும் உறவிலே கண்ணோடு பேசும் ஆவலால்

ஜிக்கி பாடிய பாடல் இது.

ஓ சிப்பாயி அன்பே நீ வாராயோ?

கண் முன் வாராயோ 

ஓ சிப்பாயி 

மலையசைந்தாலும் பெண்ணின் பாசம் 

மாறிடாது உண்மையே

நீ ஓடி வாராய்? 

என் வாழ்வினிலே இணைபிரியா காதலின் ஜோடி 

ஒரு ராஜனின் மனம் மகிழ மனதை திருப்பு சிப்பாயி 

மறையும் திருட்டு சிப்பாயி 

சோதனையா இது சோதனையா?

இந்த ராஜனுக்கும் ஏழைக்கும் தான் பெரிய லடாயி 

இந்த ராஜன் ஒரு பாதுஷாவாம் பாரு அப்பாவி 

என் உள்ளத்திலே மின்னல் போலெ மின்னிடும் ஜோதி 

ஒரு ராஜனின் …மறையும் திருட்டு சிப்பாயி 

மலர் மேவிடும் மணம் போலவும் மனதோர் மனதால் 

எழில் தாரகை தரும் அன்பும் ஒரு வான்மதியால் 

வளர் வான்மதியால்

மனதாவலினால் மகிழ்ந்திருந்த ஜோதி எங்கே?

உலகோர் வணங்கிட மனதை திருப்பு சிப்பாயி 

இளம் காதலினால் பழகும் ஜோடி 

புறவைப் போலும் 

என் காவியமே மனமகிழும் 

உன்னாலே எந்நாளும் 

வீணெங்கும் இந்நேரத்தில் நீ மறையக் கூடாது

இது சோதனையா 

ஜிக்கி பாடிய ‘நான் கண்ட சுகமா சுகமா’ பாடல், சாட்டையால் அடிவாங்கும் ஓர் அடிமைப் பெண் (அனார்கலி அடிமையாக இருக்கும்போது) பாடும் பாடல். ஆயிரத்தில் ஒருவன், சிவந்த மண் போன்ற, பல படங்களில் பிற்காலத்தில் இவ்வாறான பாடல்களை நாம் பார்த்து இருக்கிறோம். 

ஒ ப்ரியா ஜீவா வழிவிடுமா பிரேமா 

அந்தோ பிரிந்திடுமா 

நான் கண்ட சுகமா 

பெண் பழி விடுமா பிரேமா 

அந்தோ நிஜமா 

இடர் தீர இறைவா 

திறை மீட்கும் தியாகி வா 

இன்னாத காதல் வீணோ?

எனையே இழந்திடதேனோ 

இகம் மீதில் அநாதை நானோ 

இது தான் நீதி தானோ? அந்தோ 

விதியாலே எந்தன் வாழ்வு 

விலை போகும் காலம் தானோ 

மடிந்தாலும் நினைப்பதாரு 

காதல் மனம் மாறாது 

அசைந்தாடும் தென்றல் வானில் 

புயல் மேவும் பூவைப் போலே

பழிவாங்கும் ராணி முன்னே 

பாழான பாவி தானோ 

கண்டசாலா, ஜிக்கி இணைந்து பாடிய பாடல். கேட்க அவ்வளவு இனிமையாக இருக்கும்.  மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் பாடல்.

ராஜசேகரா என் மேல்மோடி செய்யலாகுமா

 ராஜ தந்த்ரி நீயடா

மனதில் உருவம் காணுதே

மமதை பார்வை மோதுதே

மதுவின் மலரை பாரடா

மௌனமாகுமா…

காதலாலே ஏங்குதே

கவர்ந்த கண்கள் தே..டுதே

ஆவல் தீர கேளடா

வீணில் ஜாலமேனாட

அருகில் வாடா

ஆசை ராஜா

கண்டசாலா,  ஜிக்கி இணைந்து பாடிய பாடல்

கனிந்த அல்லியோடு நிலவின் ஒளியே

காதல் யுவராஜன் அனார்கலி   நீ

காதல் மலர்மதுவின் மலர் மயங்கும் வண்டு போல

மகிழ்ந்து நாம் ஒன்றாய் கலந்துடுவோம்

காதல் ஒன்றே மதுவின் சுவையாலே

மறங்குமிது  மாலை உன்னால் 

உன்னை மணந்ததாலே உன்னால் நானே

ஆனந்தமே எந்நாளும் காணாத ஆனந்தமே 

இது காதலன்பினாலே மயங்கும் ஜோடி 

இது கனிந்த பருவத்தாலே மின்னும் ஜோதி 

நானும் குடித்தேன் என நினைக்கும் 

இந்த உலகமே -ஒன்றும் 

நினைக்காதீர் இது பிரேமை மயக்கம் 

மையல் விழி காணுது எழில் மோகன ரூபமே 

விரக பசியோடு ஏங்குது சந்தோஷமே 

நீ ராஜா நான் ராணி ஒய்யாரனே 

காவல் ஏனோ கர்வம் தானோ?

இது காதலோ?

அன்பரே உம் ப்ரேமையினால் நான் ஆவேசமே 

அதில் காணும் அநுராகம் தான் ஆனந்தமே!

நீ ராஜா …இது காதலோ?

உள்ளம் மாறாத புயலோடு மோதுதே 

மெள்ள சுவை காணும் தேனோடு உனை ஏங்குதே 

நீ ராணி நான் ராஜா …

உன்னால் நானே உயிரை மறந்தேன்

கனவான்கள் சொல் யாவும் கனவு போல் தானா?

கனல் மேவும் நிலையாகும் காதல் பொய் தானா?

உன்னால் நானே உயிரை மறந்தேன் 

உலகில் நம் பிரேமை பலி தானா?

அழகு நிலவும் நான் தானே 

கலையும் நிலையும் நேர்ந்ததாலே 

இசைந்த காதல் விதி இதானா?

ஏழை கண்ட பலன் இதுதானா?

கனவில் உனையே அந்தோ பாவி 

மறந்திடாது கவலையானேன் 

கண்கள் முன்னே கனிந்த பிரேமை 

புதையல் ஒன்றே இதய ஜோதி 

கானல் நீரை கண்ட மான் போல் 

கலைந்ததாலே அன்பே நாளும் 

போர்தனிலே முடிவு கண்டேன் என் விதி 

பேதை இந்த பிரேமை தான் நீசனாகி பார் – தனியே 

பெண்கள் என்றால் நேர்மையில்லா பேதையா?

ப்ரேமையுள்ளம் மறையுதே இது மார்க்கமோ?

பேதை இந்த பிரேமை தான் விதேசமாகி பார் – தனியே

இந்த முடிவு கண்டேன் என் விதி 

ஏழை எந்தன் வாழ்வில் அந்தோ மரணமா?

இரக்கமில்லா சுயநலம் தான் கலிப்பதா?

பேதை இந்த பிரேமை தான் விதேசமாகி பார் – தனியே

இந்த முடிவு கண்டேன் என் விதி 

ஜீவ ஒளி மறையுதன்றோ மரணமேன்?

இவ்வுலகில் நிலைப்பது போல் சோகமே!

விளையுமா? இது ஞாயமோ? 

மறு ஜென்மம் தான் கூடுமோ?

அன்பு பலிக்குமா? இன்பம் நிலைக்குமா?

மரணமா? பிரிய சீமான். 

தொடரும்…

படைப்பாளர்

பாரதி திலகர்

தீவிர வாசிப்பாளர், பயணக் காதலர்; தொன்மை மேல் பெரும் ஆர்வம் கொண்டவர். அயல்நாட்டில் வசித்து வந்தாலும் மண்ணின் வாசம் மறவாமல் கட்டுரைகள் எழுதிவருகிறார். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய கட்டுரைகள், ‘பூப்பறிக்க வருகிறோம்’, ‘சினிமாவுக்கு வாரீகளா?’ என்கிற புத்தகங்களாக, ஹெர் ஸ்டோரிஸில் வெளிவந்திருக்கிறதுதற்போது ‘சினிமாவுக்கு வாரீகளா – 3’ மற்றும் ‘சாதனை படைக்கும் சாமானியர்’ என்கிற இரண்டு தொடர்களை ஹெர் ஸ்டோரீஸ் வலைத்தளத்தில் எழுதிவருகிறார்.