ஜொலிக்கும் விளக்குகள்

இந்தியா போன்ற பண்டிகைகளுக்குப் பஞ்சமில்லாத ஒரு நாட்டிலிருந்து வந்துவிட்டு கொண்டாட்டங்களைப் பற்றிப் பேச வேண்டாமா? என் கிளையண்ட் மேனேஜர் சென்னையைச் சேர்ந்தவர். பல ஆண்டுகள் கனடாவில் இருந்துவிட்டு, இப்போது அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். ”நீங்கள் கனடா வருவது சந்தோஷம். ஆனால், வந்த பிறகு நம் ஊர் கொண்டாட்டங்களை நிறைய மிஸ் பண்ணுவீங்க” என்றார். அதன் முழு அர்த்தம் அப்போது விளங்கவில்லை.

அக்டோபரில் முதல் பண்டிகை தீபாவளி. இந்தியாவிலிருந்து வரும்போதே தீபாவளி, பொங்கலுக்குப் புதுத் துணி வாங்கி வந்துவிட்டோம். முதல் நாள் இரவே தீபாவளி பரபரப்பு தொற்றிக்கொண்டது. காரணம், தமிழ்நாட்டில் தீபாவளி கொண்டாடிவிட்டார்கள். அந்தத் தகவல்களை எல்லாம் குடும்பத்தினரும் நண்பர்களும் உற்சாகமாகப் பகிர்ந்துகொண்டார்கள்.

நாங்களோ இங்கே கொண்டு வந்த மளிகைப் பொருட்களை வைத்து, தங்கும் விடுதியின் சிறிய சமையலறையில் சுமாராக ஏதோ ஒன்றைச் செய்து சாப்பிட்டுவிட்டு, ஒருவர் முகத்தை மற்றவர் பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தோம். அப்போதுதான் எங்களையும் அறியாமல் எதையோ இழந்துவிட்டது போன்ற உணர்வு ஏற்பட்டது.

விடிந்ததும் தீபாவளி நினைவுக்கு வரவில்லை, அலுவலகப் பரபரப்பு தொற்றிக்கொண்டது. வழக்கம்போல முடிந்ததைச் செய்து எடுத்துக்கொண்டு, அவசரமாகச் சாப்பிட்டுவிட்டு அலுவலகத்துக்கு ஓடினேன். அங்கே வின்டர் ஜாக்கெட்டுக்கு வெளியே எட்டிப்பார்த்த சில இந்தியர்களின் கலர்ஃபுல் உடை தவிர வேறு ஒன்றும் தீபாவளியை நினைவூட்டவில்லை. அலுவலகத்தில் இவ்வளவு இந்தியர்கள் இருக்கிறார்களே கொண்டாட மாட்டார்களா என்றால், அதற்கு முந்திய அல்லது பிந்திய வெள்ளிக்கிழமை இந்திய உணவு ஆர்டர் செய்து, மதிய உணவு நேரத்தில் எல்லாரும் சேர்ந்து ஒன்றாகச் சாப்பிடுவதுதான் கொண்டாட்டம் என்றார்கள். சில டீம்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் 1 மணிநேரம் நடக்குமாம். என்னத்தைச் சொல்வது?

Photo by Sushil Kumar on Unsplash

தீபாவளியின் சிறப்பம்சம் வெடிதானே! இங்கும் வெடிக்கலாம். அதற்காக அனுமதி வாங்கிய ஒரு பொது இடத்தில் ஒன்றாக எல்லோரும் கூடித்தான் வெடிக்க வேண்டும். ஒரு குழுவில் நீங்கள் இருந்தாலோ, இல்லை உங்கள் அடுக்குமாடிக்குடியிருப்பில் அதிக இந்தியர்கள் இருந்தாலோ தான் கொண்டாட முடியும். நண்பர் ஒருவர் அலுவலகம் முடிந்து கிளம்பும்போது, எல்லோருக்கும் ஸ்வீட்ஸ் கொடுத்துவிட்டுச் சென்றார். தீபாவளி முடிந்துவிட்டது.

நம் பண்டிகையை இங்குக் கொண்டாட முடியவில்லை என்று நினைப்பதில் என்ன நியாயம் இருக்க முடியும்? அதனால் இந்த ஊர் பண்டிகை, கொண்டாட்டங்களில் கலந்துகொண்டால் என்ன என்று நினைத்தது உண்டு. இங்கே கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்கள் வெகு சிறப்பாக இருக்கும். கிறிஸ்துமஸ் என்றால் அணிவகுப்பு, புத்தாண்டு என்றால் வாணவேடிக்கை இங்கு மிகவும் பிரசித்தம். எதுவாக இருந்தாலும், அது எங்கே நடக்கிறதோ அங்கே செல்ல வேண்டும், முன் கூட்டியே பதிவு செய்வது, டிக்கெட் வாங்குவது என்று திட்டமிட வேண்டும். வாணவேடிக்கையின்போது வானிலை மோசமாக இருந்தால் முடிந்தது கதை.

இந்த இடங்களைத் தவிர மற்ற இடங்களில் அமைதி நிலவும். ஆம், விடுமுறை நாட்கள் என்றால் போகிற, வருகிற வாகனங்களும் வெகுவாக குறைந்து சாலைகள் வெறிச்சோடிவிடும். கடைகள், மால்கள் அனைத்தும் விடுமுறைக்காக மூடப்பட்டபின் வாகனங்களுக்கும் விடுமுறைதானே? கான்செர்ட்கள் நடக்கும். விரும்பினால் செல்லலாம். மற்றபடி உறவினர்கள், நண்பர்களுடன் சேர்ந்து விருந்து உண்பதுதான் முக்கியமான கொண்டாட்டமாக இருக்கும்.

பொதுவாகக் குளிர்காலம் ஆரம்பித்துவிட்டாலே சாலைகள், வீடுகள், மால்கள், பொது இடங்களில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். அதை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. அவ்வளவு கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். இதுதான் இங்கே விழாக்கோலம்.

பிறகு ஏன் நம் மக்கள் மேற்கத்திய நாட்டு வாழ்க்கையை மிகவும் விரும்புகிறார்கள், நம் நாட்டைவிடக் கட்டமைப்பு வசதிகள் அதிகம் என்பதாலா? பணம் அதிகம் சம்பாதிக்க முடிகிறது என்பதாலா? எல்லாவற்றிற்கும் மேல் தனிமனித சுதந்திரமா? குடும்பம் என்று வரும்போது, தலையீடுகள் நம் நாட்டில் மிக அதிகம். இங்கு எந்தத் தலையீடும் கிடையாது. குறிப்பாகப் பெண்களுக்குச் சுதந்திரம் அதிகம். அந்தச் சுதந்திரத்தை நினைக்கும்போது பண்டிகைக் கொண்டாட்டம் எல்லாம் இரண்டாம் பட்சம்தான்.

தொடரும்…

படைப்பு:

பிருந்தா செந்தில்குமார்

பிருந்தா தமிழ்நாட்டில் பிறந்து, சென்னையில் படித்த இளங்கலை வணிகவியல் பட்டதாரி. ஐடி துறையில் சுமார் 20 வருட காலமாக பணிபுரிந்து வருகிறார். தற்போது வேலை நிமித்தமாக 21/2 வருடங்களாக கனடா மிசிசாகா என்னும் நகரத்தில் வசித்து வருகிறார்.

படிக்கும்போதும், வேலை செய்யும் இடத்திலும் தெளிவாக கருத்துகளை பகிர்ந்து கொள்வதாக கிடைத்த பாராட்டுகள் மற்றும் கோவிட் காலத்தில் உறவினர்கள் அளித்த ஊக்கத்தில், முதன்முதலாக தன் கனடா அனுபவத்தை எழுத்தில் பதிவிட்டிருக்கிறார்.