இயற்கையைக் குறை சொல்ல முடியாது. பூப்போல ‘பெய்யும்’ பனி என்று சொன்னால் பொருத்தமாக இருக்காது, பனிப் பொழியும்போதும், சாலையின் ஓரம் பூக்குவியல் போல் குவித்து வைத்திருக்கும்போதும், பொட்டல் வெளியில் சிறிய இடைவெளிகூட இல்லாமல் வெள்ளைப் போர்வை போர்த்தியிருக்கும்போதும், அதைக் கையில் அள்ளியெடுக்க ஆசை வராதவர் இருக்க முடியாது.

பனியைப் பந்து போல் உருண்டையாகச் செய்து ஒருவர் மீது ஒருவர் அடித்து விளையாடாதவரே இருக்க முடியாது. இரவில் விளக்கொளி தரையெங்கும் பரவிக்கிடக்கும் வெண்பனியின் மீது பட்டு எதிரொளிக்கும்போது, மின்னல் கொண்டு ஒளியூட்டப்பட்ட தேவலோகத்துக்கு வந்துவிட்டது போலத் தோன்றும். ஆனால், உணர்ச்சிவசப்பட்டு வெளியே சென்று உலா வர நினைத்தால் தாங்கமுடியாத குளிராக இருக்கும். அதற்கு ஏற்ற உடையை மாற்றிக்கொண்டு செல்வதற்கு அலுப்பாக இருக்கும். அதனால் ஜன்னல் வழியே பார்த்து ரசித்துப்பதுதான் சாலச் சிறந்தது.

இந்த உடையில் இருக்கும் சௌகரியத்தைப் பற்றியும் சொல்ல வேண்டும். வழியில் தெரிந்தவர் யாரையேனும் பார்த்துச் சிரிக்க மறந்துவிட்டால், அடையாளம் தெரியவில்லை என்று சமாளித்துவிடலாம். எல்லோரும் பார்ப்பதற்கு ஒரே மாதிரிதான் தெரிவார்கள். அவசரத்திற்கு இஸ்திரி போடாத துணியைக்கூட போட்டுக்கொண்டு சென்றுவிடலாம்.

குளிர் கால ஆடைகள்

நம் ஊரில் குளித்துவிட்டு துண்டால் துடைக்கக்கூட வேண்டாம், டிரஸ் மாட்டிக்கொண்டு, முகத்திற்கு மட்டும் லேசாக ஏதாவது கிரீமோ பவுடரோ போட்டுக்கொண்டு கிளம்பிவிடலாம். இங்கே அது பலிக்காது. குளிக்கும்போது சூடு அதிகமாக வைத்துக்கொண்டால் தோல் உலர்ந்து, வறண்டு போய்விடும். மிதமான சூட்டில் வைத்திருக்கும்போது திடீரென்று ஜில் தண்ணீரைக் கொட்டி ஷவர் கொடுக்கும் சோதனையைச் சமாளித்து குளித்து, சுத்தமாக துடைத்து, மாய்ஸ்ச்சரைசர் எடுத்து ஓர் இடம்கூட விடாமல் தேய்த்து, முகத்திற்குக் கூடுதலாக கிரீம், உதட்டுக்கு லிப்கார்டு, அதற்கு மேல் இன்னர்வியர், தெர்மல்வியர், நார்மல் டிரஸ், அதுக்கு மேலே ஸ்வெட்டர், ஜாக்கெட், கையுறை, காலுறை, ஷூ.. அப்பப்பா! கூடுதலாக அரைமணி நேரம் கண்டிப்பாகத் தேவை ஆபீஸ் கிளம்புவதற்கு. இந்த லட்சணத்தில் காலை 8 மணிக்கே ஆரம்பித்துவிடும் ஆபீஸ் கான்பரன்ஸ் கால்கள். ஆத்திரம் அவசரத்திற்கு அசட்டையாகப் போய்விட்டால் கஷ்டம்தான்!

பெரும்பாலும் மூடியே இருக்கும் வானம், குளிருக்கு வீட்டுக்குள்ளேயே அடைகாத்து இருக்கும் மனிதர்கள், அப்படியே வெளியே வந்தாலும் பாதி மட்டுமே முகம் காட்டி மற்றபடி அந்த மேகத்தை போலவே டல்லான நிறத்தில் ஜாக்கெட்டுகள், மொட்டையான மரங்கள், காய்ந்துபோன தரைகள், பனியில்லாதபோது ஊரே கட்டாந்தரையாக, பொட்டல் வெளியாக, வெறும் கட்டடங்களுடன் சோகமாகத் தெரியும்.

துலிப் மலர் தோட்டம், கனடா

குளிர்காலம் முடிந்து வானம் கிளியர் ஆகி, மரங்கள், புல்வெளிகள் துளிர்க்க ஆரம்பிக்கும்போது, நம் மனங்களும் தானாக மலரும். அந்தப் பசும் பச்சை நிறத் துளிர், கொஞ்சம் கொஞ்சமாக வெவ்வேறு நிறங்களில் உருமாறி, பூத்து நம் எண்ணத்திரைகளில் வண்ணக்கோலங்கள் படைக்கும். வானம் கழுவி, சுத்தமாகத் துடைத்தது போல பளீர் என்ற வெளிர் நீல நிறத்தில் தெரியும். ஆமாம், வெயில் காலத்தில் மேகங்கள் அதிகம் தெரியாது. இவ்வளவு ரசனைக்காரியா நான் என்று வியக்க வேண்டாம். 20வது மாடியில் உட்கார்ந்து பார்த்தால் வானம் தான் முதலில் தெரியும், குனிந்து பார்த்தால் தான் பூமி.

அதிலும் எல்லா அபார்ட்மெண்ட்டிலும் ஹாலில் பால்கனியும், முழுவதும் கண்ணாடியாலான சுவர்தான் இருக்கும். பாதுகாப்பு அல்லது ப்ரைவசி பற்றிய எந்தப் பயமும் இல்லை. அத்துடன் இங்கே சிட்டியில்கூட, அவ்வளவு அழகான புல்வெளிகள், சாலையோரம் மரங்கள், பார்க் எல்லாம் தனியார் மற்றும் அரசாங்கம் மூலம் நேர்த்தியாகப் பராமரிப்பார்கள். 6 மாதம் காய்கிறவர்களுக்குத் தானே தெரியும் அதன் அருமை.

செர்ரி மரங்கள் சூழ் சாலை, கனடா

அப்போ வெயில் காலம் சுகம் தானே என்று பார்த்தால், திறந்த வாழ்க்கைக்கு அப்பொழுதும் வர முடியாது. வெயிலும் இங்கே கடுமை. வியர்க்காது ஆனால், சூட்டில் தோல் கறுத்துவிடும். சன்ஸ்க்ரீன் போடுமாறு நியூஸில்கூடச் சொல்வார்கள், சன்ஸ்ட்ரோக் வர வாய்ப்பு இருப்பதால். குளிர் காலம் என்றால் வீட்டுக்குள்ளே, வாகனங்களுக்குள்ளே எல்லா இடங்களிலும் ஹீட்டர். வெயில் காலம் வந்தால், எல்லா இடங்களும் குளிரூட்டப்பட்டிருக்கும்.

அப்பொழுது வீடில்லாதவர்கள்? ஆமாம், இங்கேயும் இருக்கிறார்கள். அரசாங்கம் குளிர்காலத்தில் அவர்களுக்கென்று இலவசமாக ஷெல்ட்டர் ஹோம் என்று கட்டி வைத்திருக்கும். இங்கே மின்சாரம் அத்தியாவசியம், இல்லாவிட்டால் உயிர் வாழ முடியாது. எல்லாவற்றிற்கும் எரிபொருள் தேவை இவ்வளவு இருப்பதால் தான் எரிபொருளைச் சுற்றி அத்தனை அரசியல்!

தண்ணீருக்கு மட்டும் பஞ்சமில்லை. கனடா உலகிலேயே அதிக நல்ல தண்ணீர் ஆதாரம் இருக்கின்ற நாடு. ஆனால், குளிரால் பாதி நாட்களுக்கு ஒன்றும் செய்ய முடியாது. ஒரு புல்பூண்டுகூட முளைக்காது. அதனால் ஃபிரிஜ்ட், பதப்படுத்தப்பட்ட உணவு தவிர்க்க முடியாது. நம் ஊரில் விளைகின்ற பொருட்களை இங்கே இறக்குமதி செய்து கொண்டு வந்து பயன்படுத்த வேண்டுமானால் பாதுகாத்து தானே ஆக வேண்டும்!

தொடரும்…

தொடரின் முந்தைய பகுதி

கட்டுரையாளர்

பிருந்தா செந்தில்குமார்

பிருந்தா தமிழ்நாட்டில் பிறந்து, சென்னையில் படித்த இளங்கலை வணிகவியல் பட்டதாரி. ஐடி துறையில் சுமார் 20 வருட காலமாக பணிபுரிந்து வருகிறார். தற்போது வேலை நிமித்தமாக 21/2 வருடங்களாக கனடா மிசிசாகா என்னும் நகரத்தில் வசித்து வருகிறார்.

படிக்கும்போதும், வேலை செய்யும் இடத்திலும் தெளிவாக கருத்துகளை பகிர்ந்து கொள்வதாக கிடைத்த பாராட்டுகள் மற்றும் கோவிட் காலத்தில் உறவினர்கள் அளித்த ஊக்கத்தில், முதன்முதலாக தன் கனடா அனுபவத்தை எழுத்தில் பதிவிட்டிருக்கிறார்.