சிங்கார மாமயில் ஆடுது பாடுது
திருச் செந்தூரதிலே
தேனாபிசேகக் கொண்டாட்டம்
தேவதாசி சதுராட்டம்
மான்விழி மாதர்கள் நடமாட்டம்
மாதாந்த சேர்வை மன்றாட்டம்
மச்சக்காவடி வெகுக்கூட்டம்
மாதகு முனிவரே தேஸ்டம்
வேல் வேலென சொல்லுங் கோஷ்டம்
வேதாந்தம் படிப்பவர் ஆட்டம் பாட்டம்
புலவர் முத்துக்கிருஷ்ணன் எழுதிய ‘வள்ளித் திருமணம் கதை’ என்னும் கதைப்பாடலில், திருச்செந்தூர் முருகன் கோவிலின் பெருமைகளாகச் சொல்லப்பட்ட, மேற்கண்ட வரிகளில் ‘தேவதாசி சதுராட்டம்’ என்னும் வரி, திருச்செந்தூர் முருகன் கோவிலில் தேவதாசிகள் இருந்ததை மேலும் உறுதி செய்கிறது. இக்கதைப்பாடல் சிவசுப்பிரமணியபுரம் ஊரைச் சேர்ந்த அ. அப்பாவு அவர்களிடமிருந்து தாள் சுவடியாகப் பெறப்பட்டு அச்சிலேற்றப்பட்ட கதைப்பாடலாகும்.1*
திருச்செந்தூர் மூலக் கருவறையில், நம்பூதிரி பிராமணர்களான போற்றிமார்களே இன்றும் பூசாரிகளாக உள்ளார்கள். கோவில் உருவானது முதலே முருகனுக்கு பூசை செய்யும் உரிமை பெற்றிருந்த முக்காணியர் அவ்வுரிமையை திரும்பப் பெறவில்லை. (ஆதாரத்துக்கு ந.கல்யாணசுந்தரம் எழுதிய திருச்செந்தூர் முருகன் கோவில் வரலாறு புத்தகத்தில் 189ஆம் பக்கத்தையும் 67ஆம் பக்கத்தையும் ஒப்பிட்டு நோக்குக)
‘காணிக்கை வேண்டாதுங்கோ கைக்கூலி கேளாதுங்கோ
மாணிக்கவல்லத்தான் வைகுண்டம் கண்டிருங்கோ
பூசையேராதிருங்கோ பலிதீபமேராதீங்கோ
விழுந்து நமஸ்காரம் வேண்டாம் என்று சொல்லிடுங்கோ
கூவென்று உரையாதுங்கோ கொக்கரித்து பேசாதுங்கோ
ஓவென்று உரையாதுங்கோ ஓமமுறை ஏறாதுங்கோ
தீவாரணை காணாதுங்கோ திருநாளை பாராதுங்கோ
எல்லாம் வெறுத்திருங்கோ2*’
என்றெல்லாம் வைகுண்டர் திருச்செந்தூர் முருகனிடம் சொன்னதாக அகிலத்திரட்டு கூறும் கட்டளைகள், இன்று வரை நிறைவேறவில்லை என்பது பெரிய ஆச்சரியம் இல்லை.
உதய மார்த்தாண்ட கட்டளை பூசைக்கு, திருவிதாங்கூர் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட உதவியை, 1940ஆம் ஆண்டிலேயே நிறுத்திவிட்ட பிறகும்கூட, இன்றும் திருச்செந்தூர் முருகன் கோவிலின் மூலவருக்கு காலை 6-7 மணியளவில் நடைபெறும் பூசையை செய்தித்தாள்கள் ‘உதய மார்த்தாண்ட அபிஷேகம்’ என்றே குறிப்பிடுகின்றன.3* இந்து அறநிலயத்துறையின் இணையதள பக்கத்தில் மேற்சொன்ன பூசையானது ‘திருக்காப்பு திறப்பு’ மற்றும் ‘திருக்காப்பு நிறைவு’ என்னும் பெயர்களில் உள்ளது.4*
‘பம்பை பரத்தை பகட்டு கைக்காட்டல் எல்லாம்
எம்பரனுக்கு ஏற்ற இயல்பல்ல’5* என்றுரைக்கிறார் அய்யா வைகுண்டர்.
தேவதாசி ஒழிப்புப் போராட்டம் 1868ஆம் ஆண்டிலேயே தொடங்கிவிட்டது என்று டாக்டர் முத்து லெட்சுமி அம்மையார் தனது துண்டு பிரசுரம் ஒன்றில் குறிப்பிடுகிறார்.6* ஆனால், அதற்கு முன்பாகவே தேவதாசி ஒழிப்பை வலியுறுத்தி அய்யா வைகுண்டர் பேசியிருக்கிறார் என்பதை சுட்டிக்காட்ட வேண்டிய அவசியம் உள்ளது என்று நினைக்கிறேன்.
டாக்டர் முத்துலட்சுமி அம்மையார், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார், பெரியார் போன்றோரின் நெடிய சட்டப் போராட்டத்தின் விளைவாக 1947ஆம் ஆண்டு தேவதாசி ஒழிப்புச் சட்டம் தமிழ்நாட்டில் அமுலுக்கு வந்தது. ஆனால் தேவதாசிகளைக் கொண்டு செய்யப்பட்ட சம்பிரதாயங்கள் யாவும், திருச்செந்தூர் முருகன் கோவிலில் இன்றளவிலும் தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு வருகின்றன என்பதே உண்மை.
1980ஆம் ஆண்டு வெளிவந்த ‘திருச்செந்தூர் முருகன் கோவில் வரலாறு’ என்ற புத்தகம், ‘தேவதாசி முறை’ சட்டத்தால் ஒழிக்கப்பட்ட பிறகும், தேவதாசிகளால் செய்யப்பட்ட வழக்கங்கள் ஆண்களைக் கொண்டு தொடரப்பட்டன என்பதை உறுதி செய்கிறது. இசையையும் நடனத்தையும் வளர்த்து வந்த முறைக்காரிகளின் ஒழுக்கம் தவறிய நடத்தையால் ‘பொட்டுக்கட்டும் வழக்கத்தை’ தமிழக அரசு தடை செய்துவிட்டது என்கிறார் ‘திருச்செந்தூர் முருகன் கோவில் வரலாறு’ புத்தகத்தின் ஆசிரியர் ந. கல்யாணசுந்தரம்.
அந்த ஒழுக்கம் தவறிய பெண்களுடன் சேர்ந்து தங்கள் ஒழுக்கத்தைத் தவற விட்ட ஆண்களைப் பற்றி அவர் சொல்லவில்லை. அவர் மட்டுமல்ல! ஆணாதிக்க சமூகத்தில் உழன்று ஊறிப் போன ஆண் எழுத்தாளர்கள் பலரும், பெண் எழுத்தாளர்கள் சிலரும்கூட ஒழுக்கம் தவறிய ஆண்களைப் பற்றி எழுதி அவர்களைக் காட்டிக் கொடுக்க விரும்புவதில்லை.
பொட்டுக்கட்டும் வழக்கத்தை அரசு தடை செய்த பிறகும், திருச்செந்தூர் கோவில் தேவதாசிகளின் கோவில் பணிகளை, ஆண்கள் தொடர்ந்து செய்தனர் என்பதை பார்த்தோம். அப்பணிகளை செய்த ஆண்கள் ‘முறைக்காரிகள்’ என்றே அழைக்கப்பட்டனர் என்ற தகவலையும் தருகிறார் ந. கல்யாணசுந்தரம். 7*
தேவதாசி முறை வழக்கொழிந்த பிறகும் திருச்செந்தூர் முருகன் கோவிலில் ‘நட்டுவன் தாளம்’ தொடர்ந்து இருந்துள்ளது. கோவில் திருவிழாக்களில் நட்டுவனார்கள், தேவதாசிகளுக்கு பதிலாக ஆடியுள்ளனர்.
சக்தி ஊடல்
இது அனைத்து இந்துப் பெருங்கோவில் விழாக்களிலும் ஆறாம் நாள் நடைபெறும் ஓர் உற்சவமாகும். சுவாமி (ஆண் தெய்வம்) தேவதாசிகளின் வீட்டுக்கு செல்வதால், அம்பாள் (பெண் தெய்வம்) சுவாமியுடன் ஊடல் கொண்டாள் என்று சொல்லி அச்சம்பவத்தை, சுவாமி சிலை மற்றும் அம்பாள் சிலையைக் கொண்டு நடித்துக் காட்டுவதே சக்தி ஊடல் என்பதாகும்.
சிவன் தாரகாவனத்துக்கு முனிவர்களை அடக்கச் செல்லும்போது விஷ்ணுவின் அவதாரமான மோகினியை அழைத்துச் சென்றதால் சக்தி, சிவன் மீது ஊடல் கொண்டாளாம். இப்படி ஒரு புராணக் கதை! சிவன் முனிவர்களின் மனைவிகளை மயக்கி விட்டதால், சக்தி சிவன் மீது ஊடல் கொண்டாளாம். இப்படி இன்னொரு புராணக்கதை! நிஜமல்ல கதைதான்… இதையெல்லாம் ‘சக்தி ஊடல்’ நிகழ்த்துவதற்கான காரணங்களாகச் சொல்கிறார்கள்.
தேவரடியார்கள் சுவாமிக்கு சந்தனம் பூசி, மலர் தூவி கும்பிட்டதால் அம்பாள் ஊடல் கொண்டாள் என்றொரு நம்பிக்கையும் இருக்கிறது. சிவன் தாசி வீட்டுக்கு போனதால் சக்தி கோபித்துக் கொண்டாள் என்று சொல்வாரும் உள்ளனர்.
திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஆவணி, மாசி மாதங்களில் நடைபெறும் பெரிய திருவிழாக்களில் ‘சக்தி ஊடல்’ நடைபெறுகிறது. சுவாமி சிலை சிவன் கோயிலின் முன்புள்ள பந்தல் மண்டபத்துக்கு கொண்டு வரப்படும். அச்சிலைக்கு முன்பாக ‘உருத்திர கணிகையர்’ எனப்படும் தேவதாசியர் நடனமாடுவது பண்டைய வழக்கம். தேவதாசி ஒழிப்பிற்குப் பிறகு, நட்டுவனார்கள் உருத்திர கணிகையர் போல் வேடமிட்டு தேவதாசி நடனத்தை ஆடுகிறார்கள். இதைப் பார்த்த அம்மன் சுவாமியுடன் ஊடல் கொண்டு, சிவன் கோயிலின் கதவை மூடிக் கொண்டாள் என்று சொல்லி, பூசாரிகள் அக்கதவை மூடுகின்றனர்.
இதனைத் தொடர்ந்து சுந்தரர் (சிலை) அம்மனை சமாதானம் செய்ய தூது போகிறார். சுந்தரரின் அருகில் நின்று ஓதுவார் அம்மன் முன் ஒரு பாடலும், சுவாமியின் முன் ஒரு பாடலும் என்று மும்முறை பாடுவார். பிறகு அம்மனுக்கு தன் சொத்துகளை எழுதி கொடுப்பதாக ஒரு நிகழ்ச்சி நடைபெறும்.8* தேவதாசியர் பாடியும் ஆடியும் நிகழ்த்திய, இந்த ‘சக்தி ஊடல்’ நடைமுறை இன்றளவும் திருச்செந்தூர் கோவிலில் வழக்கத்தில் உள்ளது.9* (இதில் கொடுத்துள்ள இணையதள இணைப்பில், திருச்செந்தூர் முருகன் கோவில் மாசித்திருவிழா பத்திரிகையில், ஆறாவது நாளில் ஊடல் நிகழ்ச்சி குறிப்பிடப்பட்டிருப்பதைக் காணலாம்).
திருவிழாக்களின் ஆறாவது நாளில் நடைபெறும் தேவதாசியர் ஆட்டத்தை நட்டுவனார் ஆடுகின்றனர். தேவதாசியர் பாட வேண்டியப் பதிகங்களை ஓதுவார் பாடுகின்றனர். இவ்வாறாக இன்றளவிலும் தேவதாசியர் வழக்கத்தை கட்டிக் காத்து வருகின்றனர் திருச்செந்தூர் கோவில் பூசாரிகள்.
திருச்செந்தூர் பற்றி எனக்குத் தெரிந்த மேலும் ஒரு தகவலை இப்போது பகிர்ந்து கொள்வது அவசியம் என்று கருதுகிறேன்.
உலகம் முழுவதும் மனித மனிதிகளை அடிமைகளாக விற்று வாங்கிய வரலாறு உண்டு. அவ்வரலாறு தமிழகத்திலும் உண்டு. நாஞ்சில் நட்டில், அடிமைகளை விற்றவரும் வாங்கியவரும் ஒருவருக்கொருவர் எழுதிக் கொண்ட அடிமை ஓலை ஆவணங்கள் சிலவற்றில், அடிமைகளின் பெயர்களைச் சொல்லி, ‘விலை கொள்வாருளரோ கொள்வாருளரோ’ என்று ஏலம் விட்ட செய்தி காணக்கிடைக்கிறது. ‘மன்றினிறுத்தி நால்பேர் கூடி நடுவர் முன்பாக விலை நிற்செயித்த’ என்ற வாக்கியம் அந்த ஒப்பந்தங்களில் இடம்பெறுகின்றன. இதனால் நாஞ்சில் நாட்டில் அடிமை மனித மனிதிகளை விற்கும் போது, நால்வர் கூடும் இடத்தில் அடிமைகளை நிறுத்தி கொள்வாருளரோ கொள்வாருளரோ என்று கூவி கூவி ஏலம் போட்டு விற்கும் பழக்கம் இருந்துள்ளமை தெரிய வருகின்றது.10*
இவ்வாறு ஏலம் விட்டு மனித மனிதிகளை விற்ற பழக்கத்தின் எச்சம் ஒரு சடங்காக தமிழ் நாட்டின் சைவக் கோவில்களிலும் கிறிஸ்தவ தேவாலயங்களிலும் காணப்படுகிறது என்று எழுத்தாளர் ஆ. சிவசுப்பிரமணியன் தனது ‘தமிழகத்தில் அடிமை முறை’ நூலில் குறிப்பிடுகிறார். நெல்லை, தூத்துக்குடி மாவட்டக் கடற்கரைக் கிராமங்களிலுள்ள சில கத்தோலிக்க தேவாலயங்களில், இச்சடங்கு ‘விற்றுக் கொடுத்தல்’ என்னும் பெயரால் நிகழ்த்தப்படுகின்றது.11*
திருச்செந்தூர் முருகன் கோவிலில் இச்சடங்கு, நேர்ச்சைக்கடனுக்காகவும், தோஷ நிவர்த்திக்காகவும் ‘கிரயம் போட்டு எடுத்தல்’ என்னும் பெயரில் நிகழ்த்தப்படுகின்றது.
குழந்தையை பெற்றவர்கள் தங்கள் குழந்தையை பண்டாரத்திடம் கொடுப்பார்கள். பண்டாரம் “முருகன் குழந்தை ஒண்ணு எங்கிட்ட இருக்கு, நா ஏலம் விடப்போறேன். உங்களால என்ன கொடுக்க முடியுமோ, கொடுத்து குழந்தைய வாங்கிக்கங்க” என்று குழந்தையை ஏலம் விடுவார். குழந்தையின் தாய்மாமனோ, அல்லது மாமன் முறை உள்ளவர் யாராவதோ, குழந்தையை “நான் வாங்கிக்கிறேன்” என்று சொல்வார். அவ்வாறு சொல்வதே சம்பிரதாயம்.
“நீ என்ன கொண்டு வந்துருக்க?” என்று பண்டாரம் மாமனிடம் கேட்பார். மாமன், தன்னால் இயன்ற பணமும், தவிடு அல்லது வெல்லமும் கொண்டு வந்திருப்பதாக சொல்வார். பணத்தையும் தவிடு அல்லது வெல்லத்தையும் வாங்கிக் கொண்டு, பண்டாரம் குழந்தையை மாமனிடம் கொடுப்பார். மாமன் இல்லை என்றால், வேறு யாராவது மூன்றாவது நபர்கூட, இந்த சடங்கினை மாமனாக இருந்து செய்யலாம்.
மாமன் கொடுத்த பணமும், வெல்லமும் (அல்லது தவிடு)பண்டாரத்துக்கே சேரும். அதன் பிறகு “முருகன் குழந்தையை மாமன் வாங்கிட்டாரு, முருகன் குழந்தையை மாமன் வாங்கிட்டாரு, முருகன் குழந்தையை மாமன் வாங்கிட்டாரு” என்று பண்டாரம் மூன்று முறை சொல்வார். இப்போது குழந்தை மாமனின் குழந்தையாகி விட்டது. இப்போது பண்டாரம் மாமனிடம், “இந்த குழந்தையை உன்னால் வளர்க்க முடியுமா?” என்று கேட்பார்.
மாமன் தன் சகோதரியிடம் பேசி வைத்தபடி, “என்னால் குழந்தையை வளர்க்க முடியாது” என்று சொல்லி விடுவார்! சொல்ல வேண்டும் (சம்பிரதாயம் அப்படி). பிறகு பண்டாரம் பெற்றோரிடம் “குழந்தையை உங்களால வளர்க்க முடியுமா?” என்று கேட்பார். பெற்றோர் “வளர்க்க முடியும்” என்று சொல்வர், சொல்ல வேண்டும்.
“குழந்தையை அவங்ககிட்ட குடு” என்று பண்டாரம் மாமனிடம் சொல்லுவார். இப்போது மாமன், குழந்தையை பெற்றோரிடம் கொடுப்பார். பெற்றவர்கள் ‘முருகா முருகா முருகா’ என்று சொல்லிக் கொண்டேக் குழந்தையை வாங்கிக் கொள்வார்கள். பண்டாரம் “முருகன் குழந்தையை மாமனால வளர்க்க முடியாததால, அவங்ககிட்ட கொடுத்தாச்சு” என்று சொல்வார்.
இவ்வாறாக குழந்தையை ஏலம் விடுவதால், குழந்தை முருகனின் குழந்தையாகிவிடும் என்பதும், குழந்தையின் தோஷம் விலகிவிடும் என்பதும் மக்களின் நம்பிக்கை. திருச்செந்தூர் தூத்துக்குடி பகுதிகளில் ஜோதிடர்கள் இந்த வழக்கத்தை தோஷப் பரிகாரமாக சொல்வதுண்டு.12*
மனிதன் வணங்கும் தெய்வமே, மனிதனுக்கு தவறான உதாரணமாக விளங்கும், ‘சக்தி ஊடல்’ நிகழ்ச்சியை பூசாரிகள் கட்டிக் காத்து வருவதன் காரணம் என்ன? மீண்டும் தங்கள் இந்து ராஜ்ஜியம் அமைந்தால், இவர்கள் தேவதாசி வழக்கத்தை மீண்டும் கொண்டு வரத் துணிய மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்? இக்கேள்விகளுக்கான விடைகளை வாசகர்கள் சிந்தியுங்கள்.
நான் நிறுவ நினைப்பது ஒன்றுதான்! அய்யா வைகுண்டர் முருகனிடம் சொன்னதாக, அகிலத்திரட்டு கூறும் வைகுண்டரின் கட்டளைகள் எதுவும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை என்பதாகும்.
‘கள்ளியாட்டுக் காவடி கைக்கூலி தாம்முதலாய்
நிறுத்தல் செய்ய வேண்டியது எல்லாம் மிகநிறுத்திப்
பொறுத்து அரசு தர்மப்புவி ஆளப் போறேன்’
-அகிலத்திரட்டு அம்மானை
தொடரும்…
தரவுகள்
- கதைப்பாடல் சுவடித்திரட்டும் பதிப்பும், பாகம் 3, முனைவர்.சு.தாமரைப்பாண்டியன், முதற்பதிப்பு 2014, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியீடு, பக்கம் எண் 306.
2. அரிகோபால் சீடர் எழுதிய, தெட்சணத்துத் துவாரகாபதி தர்மயுக மக்கள் இயக்கம் வெளியிட்டுள்ள அகிலத்திரட்டு அம்மானை, வைகுண்டர் பதிப்பு 178, [2011] இரண்டாம் பதிப்பு, 2*- பக்கம் எண் 279, 5* – பக்கம் எண் 284.
3. பொ.முத்துக்குட்டி சாமியவர்களால் இயற்றப்பட்டு, தங்கையா அவர்களால் அச்சிலேற்றப்பட்ட அகிலத்திரட்டு அம்மானை, நான்காம் பதிப்பு, 1963 ஆம் ஆண்டு, 2* – பக்கம் எண் 222 & 223, 5* – பக்கம் எண் 227
5. https://tiruchendurmurugan.hrce.tn.gov.in/hrcehome/index_temple.php?tid=38271&action=pooja_info 4*
6. குடியரசு தலையங்கம் 23.03.1930
https://www.tamilheritage.org/old/text/ebook/periyar/THF1930-1part10.pdf 6*- பக்கம் எண் 105.
7. திருச்செந்தூர் முருகன் கோயில் வரலாறு, பேராசிரியர், டாக்டர். ந. கலியாண சுந்தரம், M.A, P.hd, தமிழ்த்துறை தலைவர், ஆதித்தனார் கல்லூரி, திருச்செந்தூர், முதல் பதிப்பு, ஆகஸ்டு, 1980, 7* – பக்கம் எண் 77, 8* – பக்கம் எண் 97.
9. தமிழகத்தின் அடிமை முறை, ஆ.சிவசுப்பிரமணியன், பன்னிரெண்டாம் பதிப்பு, காலச்சுவடு, 2023 10* – பக்கம் எண் 130, 131, 132, 133, 134, 135. 11* – பக்கம் எண் 167, 49.
10. திருச்செந்தூர் முருகன் கோவிலில் “கிரயம் போட்டு எடுத்தல்” சடங்கை நிகழ்த்திய பக்தை ஒருத்தியின் ஒலி வடிவப் பேட்டி. 12*
11. நா.விவேகானந்தன் எழுதிய ‘அகிலத்திரட்டு அம்மானை மூலமும் உரையும்’ பாகம் 1 & 2.
படைப்பாளர்
சக்தி மீனா
பட்டதாரி, தொழில் முனைவர். பெரியாரின் சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டவர். பொழுதுபோக்காக ஆரம்பித்த எழுத்து, பெரியாரின் வழிகாட்டுதலில், பொதுவுடைமை சித்தாந்தம் நோக்கி நகர்ந்தது. எதுவுமே செய்யவில்லையே என்ற தன் மனக்கவலையைக் களைய, படித்துக்கொண்டும் எழுதிக்கொண்டும் இருக்கிறார்.