‘நாட்டு முறையைப் போலே காசியும்காணிக்கையும்
நான் வேண்டித் தின்னதுண்டோ சிவனே’1
‘கலியுகத்திலே நானும் வலியவர்களைப் போலே
காசுக்கு அலந்ததுண்டோ சிவனே
முக்காலுங்காணிக்கைகள் வாங்கி மடப்பள்ளிகள்
முடிக்கவும் சொன்னதுண்டோ சிவனே
நல்ல பிச்சைகள் வைத்தால் வேண்டி தனியே வைத்து
நான் தனி தின்றதுண்டோ சிவனே’2
மேற்கூறிய அய்யா வைகுண்டர் உபதேசித்த ‘அருள் நூலின்’ வரிகள், காணிக்கை வாங்குவதும், காசுக்காக ஆன்மீகத்தை வியாபாரம் செய்வதும் பெரும் குற்றம் என்று பகிரங்கமாக சாடுகின்றன. இதில்
‘முக்காலுங்காணிக்கைகள் வாங்கி மடப்பள்ளிகள்
முடிக்கவும் சொன்னதுண்டோ’ என்ற வாக்கியம் உற்று நோக்கத்தக்கது.
மடப்பள்ளி என்பது, பிராமணர்களின் வசமிருக்கும் இந்துத் திருக்கோயில்களில் உணவு சமைப்பதற்கான சமையலறையை குறிக்கும் சொல் ஆகும். மடைப்பள்ளி என்பதன் மருவல் சொல்லே மடப்பள்ளி என்றானது. அக்காலத்தில் பார்ப்பனர்களுக்கு உணவு அளிக்கும் மடப்பள்ளிகள் என்னும் சத்திரங்களை நாஞ்சில் நாட்டில் ‘ஊட்டுப்புரை’ என்று அழைத்தார்கள். அதையே அருள் நூல் குறிப்பிடுகிறது.
சைவ மற்றும் வைணவக் கோயில்களுக்கு மடப்பள்ளி அமைப்பதற்கு பொதுமக்கள் தானம் அளித்த செய்திகள் கல்வெட்டுகளில் காணக்கிடைக்கின்றன.3 மேலும், பார்ப்பனர்களுக்கு உணவு அளிப்பதற்காக பொது மக்கள் தானம் கொடுத்த செய்திகளைக் கொண்ட கல்வெட்டுகள் பலவும் கல்வெட்டு ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளன. பணம் மட்டுமின்றி பார்ப்பனர்களுக்கு உணவளிக்கவென்றே, கோயில்களுக்கு பொதுமக்கள் விளை நிலங்களைக்கூட தானமாக வழங்கிய கல்வெட்டுகளும் பல கிடைத்துள்ளன.4
பதினெட்டு மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டு காலங்களில் திருவிதாங்கூர் மன்னரின் ஆளுமைக்குட்பட்ட இந்துக்கோயில்களில், பொதுமக்களின் வரிப்பணத்தில் ஊட்டுப்புரைகள் என்ற உணவு சாலைகள் நிறுவப்பட்டு, அதில் பார்ப்பனருக்கு மட்டும் இருவேளை இலவசமாக அறுசுவை உணவு வழங்கப்பட்டது.5
‘முக்காலுங்காணிக்கைகள் வாங்கி மடப்பள்ளிகள்
முடிக்கவும் சொன்னதுண்டோ சிவனே,
நல்ல பிச்சைகள் வைத்தால் தனியே வைத்து
நான் தனி தின்றதுண்டோ’ ஆகிய மேற்சொன்ன வரிகள், பொது மக்களின் உழைப்பைச் சுரண்டி, மேல் வர்க்கங்கள் உண்டு கொழுத்த ஏகாதிபத்திய வரலாற்றை, உறுதி செய்வதாக உள்ளது. இவ்வாறாக உழைக்கும் மக்கள் சுரண்டப்பட்ட காலத்தில்தான், நிழல்தாங்கல்கள் மற்றும் பதிகளில், சாதி மத பேதமற்ற சமபந்தி உணவு உண்ணும் வழக்கத்தை ஏற்படுத்தினார் அய்யா வைகுண்டர்.
நாட்டார் தெய்வ பலி வழிபாட்டை எதிர்க்கும் அகிலத்திரட்டு
முத்துக்குட்டி திருச்செந்தூர் கடலுக்குள் திருமால் என்னும் நாராயணரிடம் விஞ்சை (இறையறிவு) பெற்றதை அகிலத்திரட்டு விரிவாக எடுத்துக்கூறுகிறது.
‘ஆயிரத்தெட்டு அதில் வாழும் தேவருக்கு
வாயிதமாய் அஞ்சாம் விஞ்சை வகுப்பேன் கேள் என் மகனே
நாட்டுக்குடைய நாராயணர்தானும்
ஆட்டுக்கொடைப் பூசை அணுப்போலும் வேண்டாம் என்று
சொல்லியே தர்மமுற்றுச் சிறையாகத் தானிருந்து
தொல்லுலகில் யார் ஏக்கார் பார்ப்போமென்று சொல்லிடு நீ’6
என்ற ஐந்தாவது விஞ்சை அதில் குறிப்பிடத்தக்கது. கொல்லம் 1008ஆம் ஆண்டில் (1832) வாழ்கின்ற தேவர்களுக்கு நாராயணர் வகுத்த விஞ்சை என்னவென்றால், ‘ஆடு வெட்டி பலி கொடுத்து கொடை விழா நடத்தும் பூசை அணுவளவு கூட வேண்டாம்’ என்பதாகும். இக்கருத்தை இந்த நாட்டு தேவர்களுக்கு சொல்லிச் சிறையிருக்கும்படி அய்யா வைகுண்டருக்கு (முத்துக்குட்டிக்கு) திருமால் கட்டளையிடுவதாக அகிலத்திரட்டு சொல்கிறது. யாராவது ஆடு பலி கொடுத்தால் அதை யார் ஏற்கிறார்? பார்ப்போமென்று சவால் விடுவது போல் அமைந்துள்ள அகிலத்திரட்டின் மேற்கூறிய அம்மானை வரிகளிலிருந்து, பலி பூசை செய்து நாட்டு தெய்வங்களை வழிபடுவதை அய்யா வைகுண்டர் முற்றிலுமாக மறுக்கிறார் என்பதை எளிதில் புரிந்து கொள்ள முடியும்.
‘தூறான பேய்களுக்கு சொல்லும் முறைகேளு
வாறான நாரணர் தான் வாய்த்த தர்மமே நினைத்து
கவிழ்ந்து சிறையிருக்குங் காரணத்தால் லோகமதில்
ஊர்ந்து திரியும் உயிர்ப்பிராணி யாதொன்றையும்
இரத்தவெறி தீபம் தூபம் இலை பட்டை முதல்
சற்றும் வெலிபாவம்தான் காண ஒட்டாதென
தர்மம் நினைத்து தவசிருக்க நாரணனும்
உற்பனமாய் அறிந்தோர் ஒதுங்கி இருங்கோயெனவே
வீணப் பசாசறிய விளம்பியிரு என்மகனே’7
என்ற வரிகளின் முக்கிய மையப்பொருள், ‘ஊர்ந்து திரியும் பிராணிகளை பலி கொடுத்து, ரத்த வெறி தீபாராதனை காட்டும் வெலி பூசை காண சகிக்க முடியாத குற்றம்’ என்ற அய்யா வைகுண்டரின் அறிவுரையே ஆகும். என்றாலும் இவ்வரிகளில் வரும் ‘பேய்’, ‘பசாசு’ போன்ற வார்த்தைகள் கூர்ந்து நோக்கி ஆராயத் தக்கதாகும்.
ஏனென்றால் பார்ப்பனரல்லாத, நாட்டு தெய்வங்களை (சிறு தெய்வங்கள்) வணங்கும் மக்கள், தாங்கள் வணங்கும் நாட்டுதெய்வங்களை பேய், பசாசு என்றெல்லாம் பேசுவதை விரும்பமாட்டார்கள். உண்மையில் நாட்டு தெய்வங்களை பேய், பிசாசு என்றெல்லாம் கூறினால் கோபம் கொள்வார்கள் என்பதே நடைமுறை நிதர்சனம். ஆனால் மேற்கூறிய வரிகளில் உயிர் பலியேற்று ரத்த வெறி தீபாராதனை செய்யப்படும் சிறு தெய்வங்களை அகிலத்திரட்டு ‘பேய்’, ‘பிசாசு’ என்று சொல்வதைக் காண முடிகிறது.
நடைமுறையில் இறந்து போன எல்லா மனிதர்களுக்கும் மக்கள் வெலி (பலி) பூசை செய்வதில்லை. பேய், பிசாசு என்று நம்புகின்ற ஒன்றை துரத்துவார்களேயன்றி, கண்டிப்பாக வெலி பூசை செய்வதில்லை. ஆனால் அய்யா வைகுண்டரின் மேற்கூறிய வரிகள், உயிர் பலியேற்று ரத்த வெறி தீபாராதனை ஏற்கும் தெய்வங்களை பேய் பிசாசு என்றெல்லாம் நிந்திக்கிறது. எனில் அய்யா வைகுண்டர் சொல்ல எழுதப்பட்ட அகிலத் திரட்டு, பேய், பிசாசு என்றெல்லாம் குறிப்பிடுவது நாட்டு தெய்வங்களையே என்று முடிவு செய்ய வேண்டியிருக்கிறது.
அய்யா வைகுண்டரின் அகிலத்திரட்டும் அருள் நூலும் பல புராணக்கதைகளையும், பல வாய்வழிக் கதைகளையும், பல வரலாற்று நிகழ்வுகளையும் தன்னகத்தேக் கொண்டுள்ளது. பறவைக்கு தொடைக்கறியை அரிந்து கொடுத்த சிபிச் சோழ மன்னனின் செவிவழிக்கதையும் அகிலத்திரட்டில் வருகின்றது. சிபிச் சோழ மன்னனின் காலத்தில் மக்கள் வாழ்ந்த முறையை சொல்லும்போது,
‘சேயினுட ஆட்டு கேட்டு இருப்பது அல்லால்
பேயினுட ஆட்டோர் பூதர் அறியாது இருந்தார்’8 என்ற வரிகளில் மக்கள் பேயாட்டம் பற்றி அறியாமல் வாழ்ந்தனர் என்று பெருமையாக உரைக்கிறது அகிலத்திரட்டு.
அகிலத்திரட்டின் ‘திருவாசகம் – 4’ ல் கீழ்க்கண்டவாறு குறிப்பிடப்படுகிறது.
‘பின்னும் நாராயண வைகுண்டசுவாமி தாமே பேய், பல சீவ செந்து, ஊர்வன புற்பூண்டு, கல், காவேரி ஆகிய அறிய உபதேசித்தார். எப்படி என்றால் வல்லத்தான் வைகுண்டம் பிறந்து காணிக்கை, கைக்கூலி, காவடி, ஆடு, கிடா, கோழி, பன்றி, இரத்தவெறி, தீப தூபம், இலை, பட்டை இது முதலான எனக்கு அவசியமில்லை என்று தர்மம் நிச்சித்து, நாடு குற்றம் கேட்க நாராயணர் சிறையிருக்கும் போது, இனி யார் ஏற்கிறார் என்று பார்க்க, அதை அறிந்து பேய்களும் ஒதுங்கி இருங்கோவென்று உபதேசித்தார். உடனதுகளெல்லாம் அய்யா ஆணை நாங்களொன்றும் ஏற்க மாட்டோம் என்று சொல்லி போனாருடனே. வைகுண்டசாமி தானே ஓராண்டொண்டு ஒன்னரை ஆண்டு உகஞ்சோதித்து வரும் போது ‘பேய்’ செய்கிற அன்னீதம் பொறுக்காமல் மானிடர் வைகுண்டசாமியிடம் வந்து ஆவலாதி வைத்தார்.’9
(சீவ செந்து = ஜீவ ஜந்து, ஆவலாதி = குற்றச்சாட்டு)
‘ஆடு, கிடா, கோழி, பன்றி போன்றவற்றை வெலி பூசை வாங்குவது பேய்கள்’, என்று அய்யா வைகுண்டர் அகிலத்திரட்டில் கூறுகிறார்.
‘வாதை பேய் ஆனதெல்லாம்….
இன்று முதல் எங்களுக்கு ஏற்கும் வகை இல்லையேகாண்
கண்டு கொள்ளுங்கோ எனவே கண்காட்டிப் போய் மறைய’10 என்ற வரிகளில் வாதையை பேய் என்று பகிரங்கமாக குறிப்பிடுகிறது அகிலத்திரட்டு.
அத்தோடு பேய்களை அய்யா வைகுண்டர் அழித்து விட்டதாகவும், அதனைத் தொடர்ந்து மந்திர தந்திர பில்லி சூனியங்களையும் அய்யா வைகுண்டர் அழித்து விட்டதாகவும், அகிலத்திரட்டு சொல்கிறது.11
‘பொய்யில்லை பசாசில்லை பில்லியின் வினைகளில்லை
நொய்யில்லை நோவுமில்லை நொம்பலத் துன்பமில்லை’12 என்று பேய் முதலான மூடநம்பிக்கைகள் இல்லவே இல்லை என்றே சொல்லிவிட்டது அகிலத்திரட்டு.
பிஷப் கால்டுவெல் அவர்கள் திருநெல்வேலியில் வாழ்ந்த நாடாரின மக்களின் சிறு தெய்வ வழிபாட்டினை ‘பேய் வழிபாடு’ என்றே குறிப்பிடுகிறார்.13 மேலும் மிஷனரிகள் பலரும் வெறியாட்டு நடத்தி, ரத்த பலி பூசைகள் செய்கின்ற சிறுதெய்வ வழிபாட்டினை பேய் வழிபாடு (devil worship) என்றே குறிப்பிடுகின்றனர். ‘பேய் வழிபாடு’ என்ற சொல்லை மிஷனரிகள் பயன்படுத்துவதன் காரணத்தை கால்டுவெல் அவர்களே தன் நூலில் சொல்லியிருக்கிறார்.
‘திருநெல்வேலியில் பேய் வழிபாடு பரவி இருக்கிறது என்று மிஷனரிகள் குறிப்பிடுகிறபோது, பேய் என்னும் சொல் மக்கள் வணங்கும் கடவுளரைக் குறிப்பதாக நினைக்கிறோம்’. ஆனால் அது உண்மையல்ல என்கிறார் கால்டுவெல். ‘மெய்யான கடவுளை எதிர்ப்பதனாலேயே பேய் என்று பெயர் சூட்டியிருக்கிறோம், ஏனென்றால் உலகத்தில் (புற) சமயங்களைக் கண்டுபிடித்ததே வீழ்ச்சியுற்ற தேவதைகளால் (fallen angels) தான்’ என்று புறச் சமயத்தார் சிலர் சொல்லுகிறார்கள்’ என்கிறார் கால்டுவெல்.
‘இச்சொல்லை (பேய் வழிபாடு என்ற சொல்லை) முரண்பாடான பொருளில் நாம் பயன்படுத்துவதாக சொல்லப்படுகிறது. அப்படிப் பயன்படுத்துவது என்பது, சமயத்தின் மீது கோபம் கொள்ளவும் மக்களை உள்நோக்குடன் அவமதிக்கவும் செய்யும் செயல் என்று நினைக்கிறேன். ஆனால் அதில் உண்மை என்னவென்றால் பேய் வழிபாட்டினைக் கொண்ட சாணார்களின் சமயத்தில் உள்ள சாதகமான பகுதிகளை விளக்குகையில், பயன்படுத்தப்படும் அந்த சொல், நாம் அறியும்படி மிகமிகப் பொருத்தமானது மட்டுமல்ல, சாணார்களே பயன்படுத்தும் சொல்லோடு சரியாகப் பொருந்துகிறது என்பதுதான்.’
இதோ அய்யா வைகுண்டர் அதே சொல்லை பயன்படுத்தியிருப்பதை அகிலத்திரட்டில் காண முடிகிறது.
கால்டுவெல் அவர்கள் பிறந்து வளர்ந்த நாகரீகமான சூழலையும் அவரது தெய்வ வழிபாட்டு முறைகளையும் இந்தியாவில் காணப்படும் பலி பூசை முறைகளோடு ஒப்பிட்டுப் பார்த்தல் வேண்டும். அங்கு வாழ்ந்த கால்டுவெல், திடீரென்று இங்கு இவ்வாறான வழிப்பாட்டு முறைகளைக் காணும்போது அவருக்கு விசித்திரமானதாகவே தோன்றியிருக்கும். மற்ற மிஷனரிகளின் உளவியலும்கூட மேற்படியே என்பது எனது கருத்து.
அய்யா வைகுண்டர் ஏன் நாட்டு தெய்வங்களை பேய் வழிபாடு என்று குறிப்பிட்டார் என்ற கேள்விக்கான விடை ஆய்வுக்குரியது. அய்யாவழியின் அகிலத்திரட்டு எழுதப்பட்ட ஆண்டு 1841. கால்டுவெல் திருநெல்வேலி வந்தடைந்தது அதே ஆண்டில்; ‘திருநெல்வேலி சாணார்கள்’ புத்தகத்தை எழுதிய ஆண்டு 1849. அதாவது கால்டுவெல் அவர்களுக்கு முன்னதாகவே, அய்யா வைகுண்டர் நாட்டு தெய்வ வழிபாட்டை ‘பேய் வழிபாடு’ என்று சொல்லி விட்டார் என்பதும் இங்கு நோக்கத்தக்கது. அய்யா வைகுண்டரின் சொல்லாடலையே கால்டுவெல் மற்றும் கிறிஸ்தவ மிஷனரிகள் பயன்படுத்தினர் என்பதையும், இரு கருத்துகளும் ஒன்றாதலும் காண்க!
சமீபத்தில் நடந்த ஓர் சம்பவத்தை இங்கு குறிப்பிடுவது முக்கியம் என்று கருதுகிறேன்.
சாதிச் சான்றிதழில் ‘இந்து’ என்று அடையாளப்படுத்தப்பட்ட மனிதர் ஒருவர் முதுமை மற்றும் நோயின் காரணமாக இறந்து விட்டார். அவரது இறந்த உடலை சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்லும் வழியில் ஒரு கிறிஸ்தவ தேவாலயம் இருக்கின்றது. பொதுவாக இந்துக்களின் இறப்பு ஊர்வலம் நடைபெறும்போது, செல்லும் வழியில் கோவில்களோ, தேவாலயங்களோ, மசூதிகளோ, பிற வழிபாட்டுத்தலங்களோ இருந்தால், அவற்றை கடந்து செல்லும் போது, சங்கு ஊதுவதை நிறுத்திவிட்டு அமைதியாகச் செல்வதுதான் வழக்கம்.
ஆனால் அன்று, அந்த இந்து மனிதனின் மரண ஊர்வலம், அந்த தேவாலயத்தை கடந்து செல்லும் போது சங்கு ஊதுவதை நிறுத்தவில்லை. அதனால் தேவாலயத்தை சேர்ந்த நபர் ஒருவர், “சர்ச் இருக்கு சங்கு ஊதாம போங்க” என்று சொல்லவே, ஊர்வலத்தில் உருவாகியது குழப்பம்.
குழப்பம் கலவரமாகிக் விடக்கூடாது என்றுணர்ந்த பெரியவர்கள் சிலர் இளைஞர்களை மட்டுப்படுத்தவே, இறப்பு ஊர்வலம் அமைதியாக நடந்தேறிவிட்டது.
இந்த சம்பவம் குறித்த விவாதம் இரண்டு பெண்களுக்கிடையில் உருவானது. அவ்விரு பெண்களில் ஒரு பெண், தன்னை இந்து மதத்தின் அய்யா வழியை பின்பற்றுபவளாக அடையாளப்படுத்திக் கொள்பவள். இன்னொரு பெண் தன்னை கிறிஸ்தவ மதத்தினளாக அடையாளப்படுத்திக் கொள்பவள். இருவருக்கும் இடையில் மேற்கூறிய சம்பவம் பற்றி உருவான விவாதத்தில்,
“சர்ச் புனிதமான இடம், அதுக்கு மரியாதை கொடுக்க வேணாமா?” என்று கிறிஸ்தவப் பெண் கேட்க,
“உங்க ஆளுங்க மட்டும், எங்க சாமிகளை பேய்ன்னு சொல்லலாமா? அந்த ஏசு கூட உயிரோட வாழ்ந்து செத்த மனுஷந்தான். அதுக்காக ஏசுவை பேய்ன்னு சொல்ல முடியுமா?” என்று இந்துப் பெண் பதிலுக்கு கேட்க,
“காச்சல், தலைவலின்னு சாமியாடுறகவங்ககிட்ட குறி கேட்டா, யாக்கியம்ம தொந்தரவு, சொள்ள மாடனை ஏவல் செஞ்சு வச்சிருக்குன்னுதான சொல்லுகாவ. ஏசுவ ஏவல் பண்ணி வச்சிருக்குன்னு எங்கயாவது சொல்லி கேட்டுருக்கியா? இந்த மாதிரியெல்லாம், மனுஷங்களை இம்சைப்படுத்துறது சாமியா? பேய்தானே?” என்று கேட்டுவிட்டார் கிறிஸ்தவப் பெண். இந்துப் பெண் கோபமாக சென்று விட்டதில், அவர்களின் ஏழெட்டு வருட நட்பில் விரிசல் விழுந்ததுதான் மிச்சம்.
மேற்சொன்ன பெண்களின் விவாதத்தைப் பற்றி கிறிஸ்தவப்பெண் என்னிடம் சொல்லி, “நீயே நியாயத்தை சொல்லு, நான் சொன்னதுல என்ன தப்பு?” என்றாள். அவர்கள் இருவருமே என் தோழிகள்தான்!
நான் மாட்டிக் கொண்டேன்.
தொடரும்...
- ‘அய்யா வைகுண்டர் உபதேசித்த அருள் நூல்’, ஆசிரியர்: ரா.அரிகோபால சீசர், பதிப்பாசிரியர்: ரெ.ராஜப்பா சீசர், 1* பக்கம் எண்- 25, 2* பக்கம் எண்- 29, 15* பக்கம் எண் – 48.
- அரிகோபால் சீடர் எழுதிய, தெட்சணத்துத் துவாரகாபதி தர்மயுக மக்கள் இயக்கம் வெளியிட்டுள்ள அகிலத்திரட்டு அம்மானை, வைகுண்டர் பதிப்பு 178, [2011] இரண்டாம் பதிப்பு, 6* & 7* பக்கம் எண் – 249, 8* பக்கம் எண் – 19, 9* பக்கம் எண் – 302, 10* பக்கம் எண் 287,11* பக்கம் எண் – refer 303 to 314,12* பக்கம் எண் – 316 14* பக்கம் எண் -250, 16* பக்கம் எண் -294.
- பொ.முத்துக்குட்டி சாமியவர்களால் இயற்றப்பட்டு, தங்கையா அவர்களால் அச்சிலேற்றப்பட்ட அகிலத்திரட்டு அம்மானை, நான்காம் பதிப்பு, 1963 ஆம் ஆண்டு, 6* & 7* பக்கம் எண் – 198, 8* பக்கம் எண் – 10, 9* பக்கம் எண் – 242, 10* பக்கம் எண் 229, 11* பக்கம் எண் – refer 247 to 251,12* பக்கம் எண் – 252, 14* பக்கம் எண் -198, 16* பக்கம் எண் – 235. குறிப்பு: I- 6* ஏக்கார் = ஏற்கிறார் [நாஞ்சில் நாட்டின் வட்டார வழக்குச் சொல்]
4. திருநெல்வேலி சாணார்கள், மறைத்திரு கால்டுவெல் அவர்கள் [1849], தமிழாக்கம் – கோவேத சாமிநாதன், இரண்டாம் பதிப்பு, 2020 13* பக்கம் எண் – 26 மற்றும் பல,.. 17* பக்கம் எண் – 51.
5. கீழடி, வைகை நதிக்கரையில் சங்ககால நகர நாகரீகம், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, 28.04.2016, 18* .
6. கன்னியாகுமரி மாவட்டக் கல்வெட்டுகள், தொகுதி 6, தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வெளியீடு, 2018, 3* – பக்கம் எண் – 91, தொடர் எண் -500/2004.
7. கன்னியாகுமரிக் கல்வெட்டுகள், தொகுதி 4, தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத்துறை வெளியீடு, பதிப்பாசிரியர் – டாக்டர். இரா. நாகசாமி,1979, 3* – பக்கம் எண் – 71, தொடர் எண் -1969/39 மற்றும் பல.
8. கன்னியாகுமரிக் கல்வெட்டுகள், பதிப்பாசிரியர் – நடன காசிநாதன், தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத்துறை, 1972, 4*.
9. நாடார் வரலாறு கருப்பா காவியா, தி.லஜபதி ராய், ஐந்தாம் பதிப்பு, 2021, 5* பக்கம் எண் – 55.
10.நா.விவேகானந்தன் எழுதிய ‘அகிலத்திரட்டு அம்மானை மூலமும் உரையும்’ பாகம் 1 & 2.
11. அய்யா வைகுண்டர் நற்பணி மன்றம், அம்பலபதி’, வெளியிட்டுள்ள ‘திருஏடு என்னும் அகிலத்திரட்டு அம்மானை’ நான்காம் பதிப்பு, 2020. பதிப்பித்தவர், ஆ.அரிசுந்தரமணி.
12. பொ.மு.ச.பா.த.பா. சங்குமன்னன் அவர்களால் அச்சிலியற்றப்பட்ட, அகிலத்திரட்டு அம்மானை, பதின்மூன்றாம் பதிப்பு.
13. சங்கு மன்னன் பதித்த பகவான் வைகுண்டர் அருள்நூல்.
படைப்பாளர்
சக்தி மீனா
பட்டதாரி, தொழில் முனைவர். பெரியாரின் சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டவர். பொழுதுபோக்காக ஆரம்பித்த எழுத்து, பெரியாரின் வழிகாட்டுதலில், பொதுவுடைமை சித்தாந்தம் நோக்கி நகர்ந்தது. எதுவுமே செய்யவில்லையே என்ற தன் மனக்கவலையைக் களைய, படித்துக்கொண்டும் எழுதிக்கொண்டும் இருக்கிறார்.