1960 -1962 

1960-ம் ஆண்டு, திருவள்ளுவர் (Thiruvalluvar) அஞ்சல் தலை வெளியிடப்பட்டது. 

திருவள்ளுவர் திருக்குறளை இயற்றியவர். இவர் பொ.ஆ .மு. 400- பொ.ஆ. 100 க்கு இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்தார் எனக் கருதப்படுகிறது. 1,330 குறள்களில் அறம் சொல்லிக் கொடுத்தவர். தமிழின் அடையாளமாகவே அவர் கருதப்படுகிறார். தமிழ் நாடு, ஜனவரி 15-ம் நாளைத் திருவள்ளுவர் நாளாகக் கொண்டாடுகிறது. 

1960-ம் ஆண்டு, பாரதியார் (Bharathi) அஞ்சல் தலை வெளியிடப்பட்டது. 

பாரதியார், 1882 டிசம்பர் 11 அன்று தமிழ்நாட்டின் எட்டயபுரத்தில் பிறந்த கவிஞர். சுப்ரமணியம் என்ற இயற்பெயர் கொண்ட அவர், தனது கவிதைப் புலமையால், பாரதி என்ற அடைமொழியைப் பெற்றார். அதுவே அவரது பெயராக நிலைத்து விட்டது.  செப்டம்பர் 11, 1921 தனது 38 வது வயதில் இறந்தது என்பது, தமிழர்களின் பேரிழப்பு என்று எண்ணுமளவிற்குத் தமிழர்களின் வாழ்வில் நிலைத்து நிற்பவர். மதம் கடந்தும் பாரதி என்ற பெயரைத் தமிழ் நாட்டில் பரவலாகப் பார்க்கலாம். அந்த அளவிற்கு மக்களின் உள்ளத்தில் என்றும் இருப்பவர்.

1960-ம் ஆண்டு, காளிதாசர் (Kalidas) இயற்றிய சாகுந்தலம் நாடகம்  குறித்து அஞ்சல் தலை வெளியிடப்பட்டது. 

காளிதாசர், நான்காம் நூற்றாண்டின் சமஸ்கிருத கவிஞர். உஜ்ஜைனிலும், மற்றும் தற்கால ஒடிசா, ஆந்திரா மாநிலங்களின் பகுதிகளில் இருந்த கலிங்க நாடு போன்ற பல்வேறு பகுதிகளில் வாழ்ந்ததாக அறிஞர்கள் சொல்கிறார்கள். 

1960-ம் ஆண்டு,  எம்.விஸ்வேஸ்வரய்யா (M.Visvesvaraya) நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது.

இவர் கர்நாடகத்தில் சிக்கபல்லபுரா மாவட்டத்திலுள்ள முட்டனஹள்ளி என்ற ஊரில் பிறந்த பொறியியலாளர். இவரது பிறந்த நாளான செப்டம்பர் 15, பொறியாளர் நாளாகக் கொண்டாடப்படுகிறது.

1960-ம் ஆண்டு, வி.என்.பத்கண்டே (V.N.Bhatkhande) அவர்களின், நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, அவரது படம் பொறித்த அஞ்சல் தலை வெளியிடப்பட்டது. மும்பையில் பிறந்த அவர், இந்துஸ்தானி இசை குறித்த முதல் நவீன ஆய்வுக் கட்டுரையை எழுதிய இசையமைப்பாளர்.

1960-ம் ஆண்டு, குழந்தைகள் தினம் முன்னிட்டு, அஞ்சல் தலை வெளியிடப்பட்டது. 

1960-ம் ஆண்டு, யுனிசெஃப் நாளை (UNICEF Day- Children greeting UN Emblem) முன்னிட்டு, குழந்தைகள் ஐ.நா. சின்னத்தை வாழ்த்தும் அஞ்சல் தலை வெளியிடப்பட்டது. 

1961 இந்தியா India

1961 -ம் ஆண்டு, தியாகராஜர் Thyagaraja அவர்களின் 114வது நினைவு நாளை முன்னிட்டு, அஞ்சல் தலை வெளியிடப்பட்டது.

தியாகராஜர் 1767-ம் ஆண்டு தமிழ்நாட்டின் திருவாரூரில் பிறந்த இசைக்கலைஞர். 

1961-ம் ஆண்டு, முதல் அதிகாரப்பூர்வ விமான அஞ்சல்துறை , அலகாபாத் – நைனி (Allahabad – Naini) இடையே தொடங்கியதன்  50வது ஆண்டு நிறைவை முன்னிட்டு அஞ்சல் தலைகள் வெளியிடப்பட்டன.

1961-ம் ஆண்டு, சத்ரபதி சிவாஜி (Chatrapati Shivaji) அஞ்சல் தலை வெளியிடப்பட்டது.

சிவாஜி 17-ம் நூற்றாண்டின் மராட்டிய மன்னர். மகாராஷ்டிராவில் உள்ள ஒவ்வொரு நகரத்திலும், சிவாஜியின் சிலை மற்றும் நினைவுச் சின்னங்கள் காணப்படுகின்றன. மும்பையில் உள்ள விமான நிலையம் மற்றும் ரயில்வே நிலையம் அவரது பெயரில் உள்ளன. மராட்டிய மாநிலத்தின் அடையாளமாகக் கருதப் படுகிறார்.

1961-ம் ஆண்டு, மோதிலால் நேரு அவர்களின், (Motilal Nehru) நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, அவரது படம் பொறித்த அஞ்சல் தலை வெளியிடப்பட்டது.

மோதிலால் நேரு, காஷ்மீரிலிருந்து, டெல்லி பின் ஆக்ரா எனக் குடிபெயர்ந்த குடும்பத்தைச் சார்ந்தவர். காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் சேர்ந்து, கைது செய்யப்பட்டு சிறை சென்றார். 1922-ம் ஆண்டு உத்தரப்பிரதேசத்தில் உள்ள சவுரி சௌராவில் காவலர் கொல்லப்பட்டதால் காந்தி, ஒத்துழையாமை இயக்கத்தை நிறுத்தி வைத்ததை முன்னிட்டு, மோதிலால் ஸ்வராஜ் கட்சியில் சேர்ந்தார். சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தியாவிற்கு முழுமையான டொமினியன் நிலையை உருவாக்கக் கோரினார். அந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால், அவரும் அவருடன் இணைந்து பணியாற்றியவர்களும்  தங்கள் சட்டமன்ற இடங்களை ராஜினாமா செய்து காங்கிரஸ் கட்சிக்குத் திரும்பினர். 1930-ம் ஆண்டு ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்று சிறையில் அடைக்கப்பட்டார். 

‘பண்டித மோதிலால் நேரை பறிகொடுத்தோமே’ என்ற சிறு பாடல் காட்சி ‘அந்த நாள்’ திரைப்படத்தில் வருகிறது. மோதிலால் நேருவிற்கு அவ்வளவு செல்வாக்கு இருந்ததா? என்ற வியப்பு வந்து இணையத்தில் தேடிப்பார்த்ததில், இந்திய முடிசூடா மன்னர், பண்டித மோதிலால் நேரு கிராமாபோன் சங்கீதம் என ஒரு பதினாறு பக்க நூலே இருந்திருக்கிறது. பாடல்களை மிஸ் K. B. சுந்தராம்பாள் , S. G. கிட்டப்பா , S. V. சுப்பையா பாகவதர், T. M. காதர் பாஷா பாடியிருக்கிறார்கள். கீழே இருக்கும் இணைய பக்கத்தில் புத்தகம் இருக்கிறது. புத்தகம் 1932 ஆம் ஆண்டு வெளிவந்து இருக்கிறது.

ஜவகர்லால் நேரு மட்டுமல்ல அவரது அப்பாவும் செல்வாக்குடன் இருந்திருக்கிறார் என்பதை இன்றைய தலைமுறைக்குச் சொல்லும் நூல் இது.

1961-ம் ஆண்டு, ரவீந்திரநாத் தாகூர் அவர்களின், (Rabindranath Tagore) நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, அவரது படம் பொறித்த அஞ்சல் தலை வெளியிடப்பட்டது.

1961 -ம் ஆண்டு, அகில இந்திய வானொலியின் வெள்ளி விழா அஞ்சல் தலைகள் வெளியிடப்பட்டன.

1961-ம் ஆண்டு, பிரஃபுல்ல சந்திர ரே அவர்களின், (Prafulla Chandra Ray) நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, அவரது படம் பொறித்த அஞ்சல் தலை வெளியிடப்பட்டது.

பிரஃபுல்ல சந்திர ரே, வங்காளதேசத்தின் (Bangladesh) ஜெஸ்ஸூரில் பிறந்த  சமூக சீர்திருத்தவாதி. அவர் இந்திய வேதியியல் ஆராய்ச்சி மற்றும் இந்திய வேதியியல் துறையின் நிறுவனர். பிரம்ம பெண்கள் பள்ளி மற்றும் இந்திய வேதியியல் சங்கத்தின் நலனுக்காகத்  தொடர்ந்து நன்கொடை வழங்கியவர்.

1961-ம் ஆண்டு, குழந்தைகள் தினம் முன்னிட்டு, அஞ்சல் தலை வெளியிடப்பட்டது. 

1961-ம் ஆண்டு, அறிவியல் வனவியல் (Scientific Forestry) நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, அஞ்சல் தலை வெளியிடப்பட்டது.

இந்திய தொல்பொருள் ஆய்வின் நூற்றாண்டு விழாவினை (Centenary of Archaeological Survey of India) முன்னிட்டு, அஞ்சல் தலைகள் வெளியிடப்பட்டன.

பிடல்கோர யக்ஷா (Pitalkhora Yaksha)

பிடல்கோர குகைகளின் பௌத்த தளம் மகாராஷ்டிராவிலுள்ள எல்லாரா (Ellora) கோயிலிலிருந்து 40 கி.மீ தொலைவில் உள்ளது. இந்த குகைகளில் உள்ள கல்வெட்டுகள் கிமு 250 நூற்றாண்டைச் சேர்ந்தவை. குகை வளாகத்தில் யக்சா உருவங்கள் போன்ற சிற்பங்கள் உள்ளன.

காளிபங்கன் முத்திரை (Kalibangan Seal)

ராஜஸ்தானில் உள்ள காளிபங்கனில் இருந்து பெறப்பட்ட முத்திரை, சிந்து சமவெளி நாகரிகத்தின் வரலாற்றுக்கு முந்தைய மற்றும் மௌரிய காலத்திற்கு முந்தைய தன்மையைக் காட்டுகிறது.

1961-ம் ஆண்டு, மதன் மோகன் மாளவியா அவர்களின், (Madan Mohan Malaviya) நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, அவரது படம் பொறித்த அஞ்சல் தலை வெளியிடப்பட்டது.

மதன் மோகன் மாளவியா, உத்தரபிரதேசத்தின் அலகாபாத்தில் பிறந்தவர். அன்னி பெசண்ட்டுடன் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தை நிறுவியவர். 

1961-ம் ஆண்டு, பிகாஜி காமா அவர்களின், (Bhikaji Cama) நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, அவரது படம் பொறித்த அஞ்சல் தலை வெளியிடப்பட்டது.

பிகாஜி காமா மும்பையில் பார்சி குடும்பத்தில் பிறந்தவர். மும்பையில், தனது பெரும்பாலான நேரத்தை சமூகப் பணிகளில் செலவிட்டவர்.

1896-ம் ஆண்டில், பிளேக் பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்ற முன்வந்து, நோயால் பாதிக்கப்பட்டார். சிகிச்சைக்காக ஐரோப்பா செல்ல, அங்கும்,  புரட்சிகர இலக்கியங்களை எழுதினார். வெளிநாட்டு மண்ணில் (ஜெர்மனியில் உள்ள ஸ்டட்கார்ட்டில்) இந்தியக் கொடியை ஏற்றிய முதல் நபர். பக்கவாதம் ஏற்பட்டு ஊர் திரும்ப அனுமதிக்குமாறு பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் மனு செய்தார். 33  ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா திரும்பி, மும்பையில் ஒன்பது மாதங்கள் வாழ்ந்து மறைந்தார். 

1962 இந்தியா India

1962 ஆம் ஆண்டு, குவஹாத்தி எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய திறப்பு விழாவினை ( Inauguration of Gauhati Oil Refinery) முன்னிட்டு, அஞ்சல் தலை வெளியிடப்பட்டது. 

1962-ம் ஆண்டு, சுவாமி தயானந்த சரஸ்வதி (Dayanand Saraswati) அஞ்சல் தலை வெளியிடப்பட்டது.

தயானந்த சரஸ்வதி குஜராத்தின் தங்காராவில் பிறந்தவர். ஆர்ய சமாஜ் இயக்கத்தை உருவாக்கியவர். 

1962-ம் ஆண்டு, கணேஷ் சங்கர் வித்யார்த்தி (Ganesh Shankar Vidyarthi) அவர்களின் அஞ்சல் தலை வெளியிடப்பட்டது.

கணேஷ் சங்கர் உத்தரபிரதேசத்தின் லக்னோவில் பிறந்தவர். பகத் சிங், ராஜ்குரு, சுக்தேவ் மூவரும் 1931 மார்ச் 23 அன்று தூக்கிலிடப்பட்டனர். தூக்கிலிடப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு, கான்பூரில்  கலவரம் ஏற்பட்டது.  40 வயதான வித்யார்த்தி, பல  மக்களின் உயிரைக் காப்பாற்றினார். அதில் அவர் கொல்லப்பட்டார். கான்பூர் விமான நிலையம் கணேஷ் சங்கர் வித்யார்த்தி விமான நிலையம் என்று அழைக்கப் படுகிறது. 

1962-ம் ஆண்டு, மலேரியா ஒழிப்பு அவர்களின் அஞ்சல் தலை வெளியிடப்பட்டது.

1962-ம் ஆண்டு, ராஜேந்திர பிரசாத் (Rajendra Prasad) அஞ்சல் தலை வெளியிடப்பட்டது. ராஜேந்திர பிரசாத் பீகாரில் சப்ராவில் பிறந்தார். இவர், சுதந்திர இந்தியாவின் முதல் ஜனாதிபதி.  

இந்திய உயர் நீதிமன்றங்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, அஞ்சல் தலைகள் வெளியிடப்பட்டன. 

சென்னை உயர் நீதிமன்றம்

2 மும்பை உயர் நீதிமன்றம்

3 கொல்கத்தா உயர் நீதிமன்றம்

1962-ம் ஆண்டு, குழந்தைகள் தினம் முன்னிட்டு, அஞ்சல் தலை வெளியிடப்பட்டது. 

1962-ம் ஆண்டு, ரமாபாய் ரானடே அவர்களின், (Ramabai Ranade) நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, அவரது படம் பொறித்த அஞ்சல் தலை வெளியிடப்பட்டது.

ரமாபாய் ரானடே மகாராஷ்டிராவின் சாங்லியில் பிறந்தார். சீர்திருத்தச் சிந்தனை கொண்ட நீதிபதி மகாதேவ் கோவிந்த் ரானடே ரமாபாயை மணந்தார். திருமணத்திற்குப் பிறகு, ரமாபாய் தனது கணவரின் ஊக்கத்தால் படிக்கவும் எழுதவும் கற்றுக் கொண்டார். தனது கணவர் மற்றும் பிற சக ஊழியர்களுடன் 1886-ம் ஆண்டு புனேயில் முதல் பெண்கள் உயர்நிலைப் பள்ளியான ஹுசுர்பாகாவை (Huzurpaga) நிறுவினார்.

1962 ம் ஆண்டு, வனவிலங்கு வார விழாவினை முன்னிட்டு, இந்திய காண்டாமிருகம் அஞ்சல் தலை வெளியிடப்பட்டது. 

புது டில்லியில் நடைபெற்ற  19வது சர்வதேச கண் மருத்துவ மாநாடு (Ophthalmology Conference) விழாவினை முன்னிட்டு, அஞ்சல் தலை வெளியிடப்பட்டது. 

1962 ஆம் ஆண்டு, ஸ்ரீனிவாச ராமானுஜரின் (Srinivasa Ramanujar) 75வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு, அஞ்சல் தலை வெளியிடப்பட்டது. 

ஸ்ரீனிவாச ராமானுஜர், ஈரோட்டில் பிறந்து கும்பகோணத்தில் வசித்து வந்தார். பிரிட்டிஷ் கணிதவியலாளர் காட்ஃப்ரே எச். ஹார்டியுடன் (Godfrey H. Hardy) ஏற்பட்ட தொடர்பு, கேம்பிரிட்ஜில் உள்ள டிரினிட்டி கல்லூரியின் சிறப்பு மானியத்தைப் பெற வழிவகுத்தது. காசநோயால் பாதிக்கப்பட்டு இந்தியாவுக்குத் திரும்பி, 32 வயதில் இறந்தார் என்பது கணித உலகின் பேரிழப்பு. ராமானுஜரின் பிறந்த நாள், கணித நாளாகக் கொண்டாடுகிறது.

1962-ம் ஆண்டு காங்கோவில் இந்திய ஐ.நா. படைகள் பணிபுரிந்ததை முன்னிட்டு இந்திய வரைபட அஞ்சல்தலைகள் overprint செய்யப்பட்டு வெளியிடப்பட்டன. வழக்கமான அஞ்சல்தலைகளுடன் இவை ஒட்டப்படும். இந்தப் பணம், குறிப்பிட்ட செலவிற்கென பயன்படுத்தப் படும். 

காங்கோ, ஜூன் 30, 1960 பிரான்ஸிடமிருந்து விடுதலை அடைந்தது. காங்கோவில் ஐக்கிய நாடுகள் சபையின் செயல்பாடு (The United Nations Operation in the Congo) ஜூலை 1960 இல் நிறுவப்பட்டது. இந்தியாவும் அதனுடன் இணைந்து கொண்டது. 1962 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், காங்கோவில் சுமார் 2,400 அதிகாரிகள் மற்றும் வீரர்களை இந்தியா திரும்பப் பெற்றுக் கொண்டது. காங்கோவிற்கு கூட இந்தியா உதவியிருக்கிறது என்பதெல்லாம் இந்த அஞ்சல்தலைகள் மூலம் தான் நான் அறிந்து கொண்டேன்.