“ரிசீவ்ட் பே டி எம் பேமெண்ட் ஆஃப் ருபீஸ்…” என்ற குரல், குறள்போல நம் எல்லாருக்கும் மனப்பாடம். அந்த அளவுக்கு ஜிபே, ஃபோன் பே போன்ற இணையவழிப் பணப்பரிவர்த்தனைகள் நொடிக்கு நொடி நிகழ்கின்றன.

இளைஞர்களும் நடுத்தர வயதினரும் மிகச் சாதாரணமாக மேற்குறிப்பிட்ட செயலிகளைப் பயன்படுத்துகிறோம்.

இதே காலத்தில்தான் ஐம்பது வயதை எட்டிய பெண்களுள் சிலர், “எங்கிட்ட ஜிபே எல்லாம் இல்லம்மா” என்கின்றனர். “அதெல்லாம் எங்க சாருக்குத்தான் தெரியும்”, ” டிக்கெட் எல்லாம் எங்க சார்தான் புக் பண்ணுவாரு”, “ஏதாவது ஆன்லைன்ல ஆர்டர் போடணும்னா என் பையன் போட்டுடுவான்” எனச் சொல்வதில் பெருமிதமும் கொள்கின்றனர் பெண்கள். மேலோட்டமாக இது பெருமிதக் குரலாகத் தெரிந்தாலும் உள்ளுக்குள் வெளிச்சொல்ல முடியாத வலி இருப்பதாகவே தெரிகிறது.

“உனக்கு இதெல்லாம் புரியாது”, “நீ பணத்தை ஏதாவது மாத்தி அனுப்பிடுவ” என அக்கறையாக  சொல்லப்படுகிறது. யாரை நோக்கிச் சொல்லப்படுகிறது? தன்னுடைய இருபதாவது வயதுக்குள் வேலைக்குச் சென்று, இன்று ஐம்பது வயதை எட்டியிருக்கிற கால்நூற்றாண்டு வெளியுலக அனுபவமுள்ள பெண்களிடம்தான் மேற்குறிப்பிட்டவாறு சொல்லப்படுகிறது.

ஆறு இலக்கங்களில் ஊதியம் பெறுபவராகவே அவர் இருப்பினும், சிற்சில இணைய வேலைகளுக்கும் அவர்கள் பிறரைச் சார்ந்து இருக்க வேண்டிய சூழல் உள்ளது.

‘யார் தடுக்கிறார்கள்? பெண்களும் கற்றுக்கொள்ளலாமே’ என்று தோன்றலாம். கொஞ்சம் சிந்தியுங்கள். வேலை இடத்திலிருந்து கயிறு கட்டியதுபோல வீட்டுக்கு நேராகத் திரும்புகிறார்கள் பெண்கள். நண்பன் ஒருவர் வீட்டில் கல்யாணம், காதுகுத்து தொடங்கி வெளியூர், வெளிநாட்டுப் பயணம் வரை திட்டமிட உடன்நிற்கிறார்கள் ஆண்கள். மிக இயல்பாகவே வெளிப்பழக்கமும் அதன்பொருட்டான கற்றலும் நாளுக்குநாள் ஆண்களுக்கு நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. பெண்களுக்கு அப்படி இல்லை. டீக்கடையில் நின்று டீ குடிப்பதே எங்களுக்கு இப்போதுதான் சாத்தியப்பட்டிருக்கிறது.

இன்னும் தனது ஏ.டி.எம் அட்டையின் பின் நம்பர்கூட கணவருக்கு மட்டும்தான் தெரியும் எனச் சொல்லும் பெண்களும் இருக்கிறார்கள். வங்கியில் கடன் அந்தப் பெண்ணின் பெயரில் இருப்பினும், அந்தக் கணக்கை நிர்வகிப்பவர் கணவராகவே இருக்கிறார். எத்தனை இடங்களில் ஊராட்சி மன்றத் தலைவர்களில் பெண்கள் பெயரளவில் தலைவர்களாக இருக்கிறார்கள் என்பது நாம் அறிந்ததே. பின்னொட்டாக கட்டாயமாக அவரது கணவர் பெயரும் லெட்டர் பேடில் இருக்கும். அவர்தாம் எல்லாவற்றையும் செய்பவராக இருப்பார். கோரிக்கை மனுக்கள்கூட தலைவரின் கணவர் பெயருக்கே எழுத வேண்டிய நிலை மாற வேண்டும்.

அன்புள்ள ஆண்களே! உங்கள் வீட்டுப் பெண்களுக்கு இணைய வேலைகளுக்குப் பழக்கிவிடுங்கள். தாமாகவே ஜிபே செய்யவும் தாமாகவே டிக்கெட் முன்பதிவு செய்யவும் அவர்களுக்கும் தெரியட்டும்.

அவர்கள் உழைத்துப் பெற்ற ஊதியத்தையோ ஓய்வூதியத்தையோ அவர்களே ஏ.டி.எம் இயந்திரத்தில் பணமாக எடுக்கிறபோது கிடைக்கிற மகிழ்வை அவர்களுக்குக் கொடுப்பது நம் கடமை.

கால் நூற்றாண்டு பணி அனுபவமுள்ள நம் அம்மாவுக்கோ அத்தைக்கோ இணையச்சேவையைப் பயன்படுத்தச் சொல்லித்தரும் முதல் அடியை நீங்கள் எடுத்துவையுங்கள். நாம் வெளியே இருக்கிற நேரத்தில் நம் உதவியின்றி நம்வீட்டுப் பெரியோர் தாமாகவே இயங்குவதைப் பார்க்கும்போது நமக்கு வாழ்வின் மீதான நம்பிக்கை கூடும். நாமே கூடுதல் பலம் பெற்றதாக உணர்வோம்.

கேட்கத் தயங்கிக்கொண்டு சாப்பிட நினைப்பதை சாப்பிடாமல் இருக்கிற அம்மாக்கள் நம் வீடுகளில் இருக்கிறார்கள். அப்பாக்களுக்கு வாக்கிங் மூலம் வெளிப்புழக்கம் வாய்த்துவிடுகிறது.

அம்மாக்களுக்கு அடுத்த தலைமுறையை வளர்த்தெடுக்கும் பொறுப்பு பாரமாகிக் கனக்கிறது.

வீட்டில் பணம் புழங்குகிற அத்தனை உறுப்பினர்களும் உங்கள் ஏ.டி.எம், ஜிபே எண்களை குடும்பத்தாரிடம் சொல்லி வையுங்கள். குறைந்தபட்சம் ஒரு குறிப்பேட்டில் குறித்து வையுங்கள். குடும்பத் தலைவராக ஆண் மட்டுமே நிர்வகிக்கிற வீடுகளில் எதிர்பாராமல் அவர் சற்றே நோய்வாய்ப்பட நேரும்போது, அவரது குடும்பம் அவர் உடல்நலனை நினைத்துக் கவலைப்படும் சூழல் அமைய வேண்டும். மாறாக, “அவரது பின் நம்பர் எதுவுமே எனக்குத் தெரியாதே” என அழுத கண்களோடு மருத்துவமனைக் கட்டணத்தைச் செலுத்தச் சிரமப்படும் மனைவிகளின் நிலைமை மோசமானது. குடும்பத் தலைவர் என்ற சொல்லைப் பொதுவில் வைத்து இருவருமாக கலந்தாலோசித்து வெளிப்படைத்தன்மையைக் கடைபிடிக்க முயற்சி செய்வோம்.

குடும்பத் தலைவிகளாக வீட்டை மட்டும் நிர்வகிக்கிற பெண்களுக்குக் கைசெலவுக்கென பணம் ஒதுக்குங்கள். அவர்களது நேப்கின், நகப்பூச்சு என சிற்சில செலவுகளுக்கெல்லாம் செலவுக் கணக்கு எழுதாதீர்கள். இது ஒருபுறமிருக்க, வேலைக்குச் செல்கிற பெண்களின்  தேவைகள் அவளிடம் பணம் புழங்குகிற ஒரே காரணத்தினால் கவனிக்கப்படாமல் விடுபடுவதும் நிகழ்கிறது.

கொஞ்சம் எண்ணிப் பாருங்கள். வேலைக்குப் போவதால் வீட்டு வேலைகளிலிருந்து பெண்கள் ஒருபோதும் தப்பி விலக விரும்புவதில்லை. குடும்ப உறுப்பினர்களின் தேவையை ஒட்டியே வீட்டின் சமையல் பெண்களால் திட்டமிடப்படுகிறது. குழந்தைக்காக நெய்யும் பருப்பும் இணையருக்காக எண்ணெய் குறைவாக எனக் கவனித்துச் சமைக்கிறார்கள்.

பதிலாக அங்கே புன்னகைகூட திரும்பக் கிடைப்பதில்லை.

குடும்ப அமைப்பிற்குள் இருக்கிற பெண்கள் வெளியே போகிற காரணத்தினாலேயே, “அவளை அவளே பார்த்துக்கொள்வாள்” எனப் புரிந்துகொள்ளப்படுகிறது. அவளால் அவளைப் பார்த்துக்கொள்ள முடியும்தான் எனினும் உங்களுக்கு என்ன வேண்டுமெனப் பார்த்துச் செய்கிற அவளிடம், அவளுக்கு என்ன வேண்டுமெனக் கேட்க மறக்காதீர்கள். வீட்டுக்கும் அலுவலகத்துக்குமான வேறுபாட்டை உணரவைக்க எங்கோ தவறவிடுவதாகவே தோன்றுகிறது. அதனைச் சரிசெய்ய முயற்சிப்போம்.

எல்லாரும் வாழத்தானே பிறந்தோம். மகிழ்ந்து வாழ்வோம்!

(தொடரும்)

படைப்பாளர்

பா. ப்ரீத்தி

தொடக்கப் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றுகிறார். தமிழ்நாடு அரசின் தமிழ்ப் பாடநூல் குழுவில் நூலாசிரியராகப் பணியாற்றியுள்ளார். பேறுகாலம் குறித்த இவரது அனுபவப் பகிர்வை ‘பிங்க் நிற இரண்டாம் கோடு’ என்கிற புத்தகமாக பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது.