இளம்வயதில் வருடத்தில் ஒரு முறையேனும் கார்த்திகை மாதத்தில் மாதாந்திர உதிரப்போக்கு தள்ளிப்போவதற்காக மாத்திரைகளை நானோ சகோதரிகளோ அல்லது அம்மாவோ விழுங்கியதுண்டு. அப்பா சபரிமலைக்கு மாலை போட்டிருப்பார். இருமுடி கட்டும்போது நான்கு பேரில் யாருக்கும் உதிரப்போக்கு வந்துவிடக் கூடாது என்பதில் மிகுந்த அக்கறையோடு இருப்பார் அம்மா. அந்த மாத்திரைகளால் ஏற்படப்போகும் பின்விளைவுகளைப் பற்றிய புரிதல் அப்போது இல்லை. இப்போது நினைக்கும்போது மனம் பதைபதைக்கிறது.

நான் வளர்ந்து எனக்குக் குழந்தைகள் பிறந்தபின்னரும் இந்தச் சம்பவம் வேறொரு உருவத்தில் தொடரத்தான் செய்தது. ஒருநாள் இரவு பத்து மணி அளவில் அவசரமாக ஆட்டோ பிடித்து என் வீட்டிலிருந்து அம்மா வீட்டிற்கு மூன்று, ஏழு வயது பிள்ளைகளைத் தூக்கிக்கொண்டு சென்றேன். காரணம் கணவர் சபரிமலைக்கு மாலை போட்டிருந்தார். எனக்கு உதிரப்போக்கு தொடங்கியவுடன் மாலை போட்ட வீட்டில் இருக்கக் கூடாது என்பதற்காக அவசரமாக அம்மா வீட்டிற்கு வந்தேன். இதெல்லாம் பல வீடுகளில் அப்போது எழுதப்படாத விதி. இதையெல்லாம் இப்போது யோசித்துப் பார்க்கும்போது எனக்கே கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது.

உயர்நீதிமன்றம் எல்லா வயதுப் பெண்களும் சபரிமலைக்குச் செல்லலாம் என்று தீர்ப்பு வழங்கியும்கூட இன்னும் அடிப்படைவாதிகளால் மாறிடாத இந்நிலையை என்னவென்று சொல்வது?

ஏன் கட்டுப்பாடுகள் எல்லாம் பெண்களைச் சுற்றியே கட்டமைக்கப்பட்டிருக்கிறது என்ற கேள்வி எனக்குள் எப்போதும் எழும். தாய்வழிச் சமூகத்தில் ஆதிக்கம் பெற்ற பெண்கள் கலாச்சாரம் என்னும் வார்த்தையின் நெடி அடிக்காத அக்காலத்தில் மிகச் சுதந்திரமானவர்களாகத்தான் இருந்திருக்கிறார்கள். வால்கா முதல் கங்கை வரை புத்தகத்தைப் படிக்கும்போது ஆதிகுடிகளின் வாழ்வு நமக்கு ஓரளவு புலப்படுகிறது. ஆனால், தாய்வழிச் சமூகம் தந்தைவழிச் சமூகமாக மாறிய காலகட்டத்திலிருந்து இன்னமும்கூட ஆண், பெண் ஏற்றத் தாழ்வுகள் முழுமையாக மாறிவிடவில்லையே ஏன்? இந்த ஏற்றத் தாழ்வுகளுக்கு மிக முக்கியமான காரணமாக மதம் இருக்கிறது என்கிற துயரமான உண்மையை நாம் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்.

இந்து மதத்தின்படி வேதமும் ஸ்மிருதியும் கொடுத்திருக்கும் கட்டளைகள் ஒன்றுக்கொன்று முரணாக இருந்தாலும் அதற்குப் பகுத்தறிவின்படி தீர்வு காணக் கூடாது என்கிறது மனு சாஸ்திரம்.

முற்போக்குவாதம் பகுத்தறிவைத் தேடு என்கிறது. மதம் பகுத்தறிவு தீர்வு அல்ல என்கிறது. மதங்கள் என்னும் பெயரில் மூடநம்பிக்கைகளின் கூடாரங்களாக நாம் இருக்கிறோம். ‘சுமங்கலி’ என்ற வார்த்தை இச்சமுகத்தில் மாபெரும் பேறாகக் கருதப்படுகிறது. 1921 ல் பிரிட்டிஷ் கணக்கெடுப்பின்படி பெண் விதவைக் குழந்தைகளின் எண்ணிக்கை பின்வருமாறு:

1 வயது விதவைப் பெண் குழந்தைகள் – 612

1 -2 வயது விதவைப் பெண் குழந்தைகள் – 498

2 -3 வயது விதவைப் பெண் குழந்தைகள் – 1280

3 – 4 வயது விதவைப் பெண் குழந்தைகள் – 2863

5 -10 வயது விதவைப் பெண் குழந்தைகள் – 12016

இப்படி ஓர் அதிரவைக்கும் கணக்கெடுப்பை எளிமையாக நம்மால் கடந்துவிட இயலுமா? இல்லை, இக்குழந்தைகளெல்லாம் இந்து மத தர்மப்படி நற்பேறு கிட்டாதவர்களா? இச்சமூகம் பெண் குழந்தைகளுக்கு இழைக்கப்பட்ட அநீதியின் விளைவுகள் இவை.

ரத்தம் தோய்ந்த மானுடத்தின் போர் என்ற பெயரில் மனிதர்களை வெட்டி வீழ்த்தியது ஒருபுறம் என்றால், மறுபுறம் அப்போர்களில்கூடக் கணவனை இழந்த பெண்கள், தோல்வியுற்ற ராஜ்ஜியத்திலிருந்த பெண்கள் என்று பெண்களின் நிலைமை மேலும் கவலைக்கிடமாகத்தான் இருந்திருக்கிறது.

Photo of surprised funny woman with colored face, palms and clothes, celebrates Holi festival, plays with colors, stretches hands at camera, isolated over purple background uses powdered dyes

பூனை குறுக்கே வந்தால் அபசகுனம், கணவனை இழந்த பெண் எதிரில் வந்தால் அபசகுனம், குழந்தை இல்லாத பெண் விழாக்களுக்கு வந்தால் அபசகுனம்… இப்படி எத்தனையோ அபசகுனங்களைக் கிராமப்புறங்களில் மட்டுமல்லாது நகர்ப்புறங்களிலும் காண்கிறோம்.

பெண்ணுடலில்தான் இந்த உலகமே சுழன்றுகொண்டிருப்பதாகவும் அல்லது பெண்ணுடலில்தான் மானம் மரியாதை ஒளிந்துகொண்டிருப்பது போன்ற பிம்பமும் வருத்தத்தை அளிக்கிறது. அத்தகைய பிம்பங்கள்தாம் இன்று தொடர்ந்து பெண் குழந்தைகள் பாலியல் சீண்டல்களுக்கு ஆளாகினாலும் அதை வெளியில் சொன்னால் குற்றமாகி விடுமோ என்று எண்ணுவதற்கு மிக முக்கியமான காரணமாக இருக்கிறது.

ஒரு பெண் தான் பாலியல் சீண்டலுக்கு உட்படுத்தப்பட்டேன் என்று சொல்வதைவிட, மரணம் மேல் என்று எண்ணுகிற எண்ணம் எவ்வளவு பயங்கரமானது? பெண்ணுடலைப் புனிதத்திற்குக் குத்தகைக்குக் கொடுத்துவிட்ட இச்சமூகம் அறியத் தருவோம், பெண்ணுடல் என்பது ஆணுடலைப் போல வெறும் உடல். காதல், காமம், கூச்சம், வெட்கம் என்ற எல்லாமும் ஆணைப் போலவே பெண்ணுக்கும் உண்டு. பெண்ணின் உடலை அவள் அனுமதியில்லாமல் காண்பதினாலோ, தொட்டு விடுவதினாலோ, பாலியல் வன்புணர்வு செய்வதினாலோ, புகைப்படம் எடுத்து விடுவதினாலோ அந்தப் பெண் எவ்விதத்திலும் தாழ்ந்து போய்விடவோ மானம் இழந்துவிடவோ மாட்டாள். அவளை அங்ஙனம் செய்யும் ஆணும், அப்பெண்களை மோசமாகப் பார்க்கும் இந்தச் சமூகத்தின் மனிதர்களும்தாம் தவறானவர்கள்.

இயக்குநர் மாரி செல்வராஜ் அவர்களின் சமீபத்திய பேச்சு ஒன்றைக் கேட்டேன். பாபநாசம் திரைப்படத்தில் தன் பெண் பிள்ளையைக் காப்பாற்றுவதற்காக போராடும் ஒரு தந்தையின் கதாபாத்திரத்தை கமல்ஹாசன் செய்திருப்பார். அவ்வளவு போராடும் அந்தத் தந்தை, எந்த நேரத்திலும் அந்தப் பெண்ணிடம் ‘உன் மேல் எந்தத் தவறும் இல்லை. உன்னைத் தவறாகப் படம்பிடித்தவன் மேல்தான் தவறு’ என்கின்ற விஷயத்தை ஏன் சொல்லவே இல்லை என்கிற முக்கியமான கேள்வியைக் கேட்டார். மேலும், ‘இதுதான் பிரச்னை. இந்தப் பயத்தைதான் இச்சமூகம் நம் மேல் காட்டிக்கொண்டே இருக்கிறது’ என்று கூறினார். நாம் சிந்திக்க வேண்டிய முக்கியமான கருத்தாக இது இருக்கிறது.

தினசரி செய்திகளில் தொடர்ந்து பெண் பிள்ளைகளின் மீதான பாலியல் வன்கொடுமைகள் குறித்த செய்திகளைப் பார்க்கிறோம். அதில் குற்றவாளிகள் எத்தனை பேர் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள்? அவர்கள் எந்தவிதமான தண்டனையை எவ்வளவு காலமாக அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற செய்தியை ஏன் எந்த ஊடகமும் ஒளிபரப்புவது இல்லை? அப்படி ஒளிபரப்பும் பட்சத்தில் குற்றம் செய்ய விழைவோருக்கு ஒரு வகையான பயத்தையும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு வகையான நம்பிக்கையையும் கொடுக்க இயலும் அல்லவா?

தொழில்நுட்ப வளர்ச்சியும் அறிவியலும் பெண்களுக்கு நல்ல முன்னேற்றப் பாதையைக் கொடுத்துக்கொண்டிருந்தாலும் மதம் என்ற பெயரில் பெண்கள் முகநூல் உபயோகிக்கக் கூடாது, படம் போடக் கூடாது, அப்படிச் செய்பவர்கள் எல்லாம் மோசமான பெண்கள், அவர்களுக்கு நரகம்தான் கிட்டும் என்று உளறும் மதவாதப் போலிகளும் அதை ஆதரிக்கும் அடிப்படைவாதிகளும் இருக்கத்தானே செய்கிறார்கள்.

சகுந்தலாதேவி திரைப்படத்தில் தன் மகள் திருமணத்திற்குப் பிறகு தன்னுடனேயே இருப்பாள். மாப்பிள்ளை எங்கள் வீட்டிற்கு வந்துவிட வேண்டும் என்று கூறுவார் சகுந்தலாதேவி. அதற்கு அந்த மாப்பிள்ளை, நீங்கள் உங்கள் பெண்ணை உங்கள் வீடு என்ற சிறையிலடைக்க முயற்சிக்கிறீர்கள் என்று குற்றம்சாட்டுவார். மாமியார் வீட்டிற்கு அனுப்பி வைத்தால் அது பெண்ணுக்குச் சிறையல்ல, என் வீடு சிறையா என்ற கேள்வியோடு அக்காட்சி தொடரும். பெண் திருமணத்திற்குப் பிறகு மாமியார் வீட்டிற்குச் செல்வது தானே இயற்கை என்று இயற்கையல்லாத ஒன்றை நாம் நம்பும்படியாக இந்த வாழ்க்கை நம்மை மாற்றி வைத்திருக்கிறது.

எது இயற்கை? எது செயற்கை? எது புனிதம்? எது அபுனிதம்? எது நம்பிக்கை? எது மூடநம்பிக்கை என்பதையெல்லாம் நம் சுற்றமும் நம் பழக்க வழக்கங்களும்தானே தீர்மானிக்கின்றன. அது சரியா தவறா என்பதை நாம் பகுத்தறிவைக் கொண்டுதானே தீர்மானிக்க இயலும்.

பெண்களுக்குக் கூடுதல் நேரம் கிடைக்க வேண்டுமென்றால் தலைமயிரைக் குட்டையாக வெட்டிக்கொள்ளுங்கள் என்றார் பெரியார். உண்மையில் எவ்வளவு நேரம் செலவழிக்கிறோம் இந்த தலைமயிரைப் பராமரிப்பதற்கு? கால் சட்டை அணிந்துகொண்டு தலைமயிரையும் சின்னதாக வெட்டிவிட்டால் உண்மையிலேயே நமக்கு நிறைய நேரம் கிடைக்கும்தானே!

ஒரு காலத்தில் மதம் என்ற பெயரில் பல வீடுகளில் குடும்பக் கட்டுப்பாட்டுக்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது நாம் அறிந்ததே. இப்போதும்கூடச் சில கிராமப்புறங்களில் குடும்பக் கட்டுப்பாடு என்பது கடவுளுக்கு எதிரான செயலாக நம்பப்படுகிறது. இக் கொரோனா காலகட்டத்தில் தடுப்பூசி குறித்த மூட நம்பிக்கைகள் எவ்வளவு மலிந்து காணப்படுகின்றன! சர்வதேச கால்பந்து விளையாட்டு அளவில்கூட ஒரு ஆக்டோபஸின், ஆமையின் அசைவைக் கொண்டு உலகக் கோப்பையின் வெற்றி சிலரால் முன்கூட்டியே அனுமானிக்கப்படுவதெல்லாம் அபத்தத்தின் உச்சமல்லவா? அதையும் பரபரப்பான செய்தியாக மாற்றும் ஊடக தர்மத்தை என்ன சொல்வது?

ஒரு மனிதனின் வாழ்வில் நடக்கும் எல்லாப் பிரதான விஷயங்களிலும் உயர் வகுப்பாக நாம் நினைக்கக்கூடிய ஒரு நபரின் துணை நமக்கு அவசியமா? குழந்தை பிறந்து தீட்டு கழித்தால் அங்கு ஒரு பிராமணர் வேண்டுமா? முதலில் குழந்தை பிறந்ததற்குத் தீட்டு கழிக்க வேண்டுமா? பெண்பிள்ளை பெரியவளாகிவிட்டால், திருமண வைபவம் என்றால், ஒருவர் இறந்தபிறகு செய்யும் காரியத்தில் என்று இந்து முறைப்படி எல்லா வைபவங்களிலும் நாம் ஏன் ஒரு பிராமணரை முன்னிறுத்திச் செய்ய வேண்டும்? பிறப்பால் அனைவரும் சமமென்றால் அவரோதும் மந்திரங்கள் நமக்கெதற்கு? மனிதர்களைப் பிறப்பின் அடிப்படையில் மகான்களாக்கத் தேவையில்லை. மனிதர்களை மனிதர்களாகப் பார்த்தாலே போதுமானதுதானே.

என் மகளின் விளையாட்டு ஆசிரியர் ஒருவர் விளையாட்டு மைதானத்தில் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்த என் பிள்ளைக்கு எப்படி அமர வேண்டும் என்று வகுப்பெடுத்தாராம். சிரிப்பதா சீறுவதா என்று தெரியவில்லை. பெண்கள் எப்படி அமர வேண்டும், எவ்வளவு சிரிக்க வேண்டும், எப்படி இருக்க வேண்டும் என்ற பாடங்களை இனியாவது இச்சமூகம் நிறுத்திக்கொள்ளட்டும்.

கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள பாலுசேரி அரசுப் பள்ளியில் பாலினப் பாகுபாடற்ற சீருடை அதாவது, ஆண்களும் பெண்களும் படிக்கும் பள்ளியில் இருபாலர்களுக்கும் ஒரே மாதிரியான சீருடையை அப்பள்ளி இவ்வருடம் கொண்டுவந்துள்ளது. 2018இல் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள வலலயஞ்சிரங்காராவில் உள்ள ஒரு பள்ளியிலும் இதேபோன்ற மாற்றம் ஏற்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

எல்லா பள்ளிகளிலும் இதுபோன்ற பாலினப் பாகுபாடற்ற சீருடைகளைக் கொண்டுவர நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். பாலினப் பாகுபாட்டை முறியடிக்கும் மிக முக்கியமான தொடக்கமாக இவை அமையும்.

எந்த ஓர் ஒவ்வாத விஷயத்தையும் கடவுள், மதம், பக்தி, நம்பிக்கை, கலாச்சாரம், பாரம்பரியம், மரபு, குலவழக்கு, சாதிக் கட்டுப்பாடு, ஆச்சாரம், அனுஷ்டானம், இத்யாதி என்ற பெயரில் பெண்கள் மீது திணிக்கப்படும்போது அங்ஙனம் ஒவ்வாத ஒன்றை வெளிப்படையாக மறுப்பதற்கு கற்றுக்கொள்வோம். எல்லாவற்றிற்கும் அடிபணிய நாம் ஐந்தறிவு பிராணிகள் அல்ல. எந்தவிதத் திணிப்பிற்கும் திமிறி எழுவோம். மறுத்துப் பேசுவோம்.

அடிமைப்படுத்தப்பட்ட பெண் அடிமைச் சமூகத்தைதானே உருவாக்க இயலும்? ஆக பெண் விடுதலையே மானுட விடுதலை. பகுத்தறிவுப் பாதை என்பது வெறும் சொல் அல்ல. அது ஒரு நீண்ட நெடுவழிப்பயணம்.

பேசா பொருளையும் பேசுவோம். மூடநம்பிக்கைகளை ஏசுவோம்.

கதைப்போமா?

படைப்பாளர்

ஹேமலதா

சென்னையில் பிறந்தவர்; தற்போது கொச்சியில் வசித்துவருகிறார். கார்ப்பரேட் செக்ரட்டரிஷிப் பட்டதாரியானவர், யோகக் கலையில் எம்.ஃபில் பட்டம் பெற்றுள்ளார். சில நிறுவனங்களிலும், பள்ளிகளில் யோக ஆசிரியராகவும் பணியாற்றியிருக்கிறார். ‘முழுவல்’ என்ற கவிதை நூல் வெளியிட்டிருக்கிறார். பெண்ணியம் தொடர்பான நிகழ்வுகளில் தொடர்ந்து பங்கெடுத்துக் கொண்டிருக்கிறார்.