‘நமக்குள் எழும் கனவுகளும் நம்பிக்கைகளும் நம்மைச் சுற்றி நடக்கும் உண்மையான உலகில் நசுக்கப்படுவது சில நேரத்தில் ஏற்றுக்கொள்ளக் கடினமானதாக இருக்கிறது. என்னுடைய எல்லா ஆசைகளையும் அவை நடைமுறைப்படுத்த வாய்ப்பேயில்லாத அபத்தமானவையாக இருந்தாலும் கைவிடவில்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது. நான் அவற்றைக் கைவிடாமல் வைத்திருப்பதற்கான காரணம், என்ன நடந்தாலும் மனிதர்கள் அவர்களுடைய மனதளவில் நல்லவர்கள் என்று நம்புகிறேன்.’ நான்கு சுவர்களுக்குள் அடைக்கப்பட்ட தலைமறைவு வாழ்க்கை நிலையில் ஆன் தன்னுடைய டைரியில் எழுதியது.
மனிதர்கள் மீது அவர் வைத்த நம்பிக்கை வீண் போகவில்லை. யூதர்களைக் காப்பாற்றுபவர்களுக்கு மரண தண்டனை அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் ஓட்டோவின் மிக நெருங்கிய நண்பர்கள் அவர்களுக்குத் தேவையானவற்றை எடுத்து வந்து கொடுத்தார்கள். அதில் செய்தித்தாள்களும் புத்தகங்களும் அடக்கம்.
ஜன்னலைக்கூடத் திறக்காமல் எட்டுப் பேர் அங்கே வசித்தனர். காலையில் எட்டு மணிக்குள் தங்கள் நடமாட்டத்தை அவர்கள் முடித்துக் கொள்ள வேண்டும். அதன் பின்னர் பாத்ரூம்கூட போகக் கூடாது. தண்ணீரை ப்ளஷ் செய்யும் சத்தம் கேட்டால் அவர்கள் மாட்டிக் கொள்ளக்கூடும். கீழே உள்ள அலுவலகத்தில் வேலை செய்தவர்களுக்கு மேல் தளத்தில் யாரும் இருப்பது தெரியக் கூடாது. தரையில் நடக்கும் போது மென்மையாக நடக்க வேண்டும்.
கனமான காலணி அணியக் கூடாது. மாலை ஆறு மணிக்குப் பிறகு, அலுவலகப் பணியாளர்கள் வெளியேறியதும், கிடைக்கும் சுதந்திரத்தில் சமையல் செய்ய, பாத்திரங்கள் கழுவ, பேச, சிரிக்க முடியும்.
பெரும்பாலும் பகல் நேரத்தில் செய்தித்தாள் படித்தனர். ஆனும் மார்க்கெட்டும் தங்கள் பள்ளிப்பாடங்களையும் பிரெஞ்சு, கிரேக்கம், லத்தீன் போன்ற மொழிகளையும் படித்தனர். சுருக்கெழுத்து கற்றனர். இரவு நேரத்தில் வானொலியில் செய்திகள் கேட்டனர். அவர்கள் எதிர்பார்த்த அந்த நல்ல செய்தி அந்த ரகசிய அறைக்குள் வாழ்ந்தவரை அவர்களை வந்து சேரவில்லை.
எட்டுப் பேர் மிகச் சிறிய இடத்தில் வசிக்கும்போது அவர்களுக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்படுவது சகஜம். அதிலும் பதின் பருவத்தில் இருந்த ஆன் ஓர் எரிச்சலூட்டும் குழந்தையாகப் பார்க்கப்படுகிறார். தன் தாயுடன் அவருக்கு மிகுந்த மனக்கசப்பு உண்டாகிறது. தன் அம்மாவைப் போன்று ஒரு சராசரி பெண்ணுக்கான வாழ்க்கையைத் தான் ஒருபோதும் வாழ விரும்பவில்லை என்று பதிவு செய்கிறார். மாறாக, அமைதியுடனும், பொறுமையுடனும், குற்றம் சாட்டாமல் ஆனைப் புரிந்துகொள்ள முயற்சிக்கும் தந்தையை மிகவும் நேசித்தார். ’என்னை உண்மையில் புரிந்து கொள்பவர் இவர் ஒருவர்தான்’ என்று கூறினார்.
இரவுகளில் நடத்தப்படும் குண்டுவீச்சு தாக்குதல்கள் அவரை நிலைகுலையச் செய்தன. ட்ரோன்கள் பறக்கும் சத்தம் கேட்டு, தூக்கத்திலிருந்து எழுந்து பயந்து நடுங்கி பெற்றோரின் அணைப்பைத் தேடி ஓடுவார் ஆன்.
’ஞாயிற்றுக் கிழமை வடக்கு ஆம்ஸ்டர்டாமில் மிக மோசமான குண்டுவீச்சு தாக்குதல் நடத்தப்பட்டது. பெரும் அழிவு ஏற்பட்டதாகத் தெரிகிறது. முழு வீதிகளும் இடிந்து விழுந்துள்ளன, மேலும் அனைத்து உடல்களையும் தோண்டி எடுக்க அவர்களுக்குச் சிறிது நேரம் ஆகும். இதுவரை இருநூறு பேர் இறந்துள்ளனர், எண்ணற்றோர் காயமடைந்துள்ளனர்; மருத்துவமனைகள் வெடித்து சிதறி வருகின்றன. புகைந்து கொண்டிருக்கும் இடிபாடுகளில் இறந்த பெற்றோரைத் தேடி குழந்தைகள் ஏக்கத்துடன் தேடுவதாகக் கூறப்படுகிறது. நெருங்கி வரும் அழிவைக் குறிக்கும் தொலைதூர ட்ரோனை நினைக்கும் போது இன்னும் எனக்கு நடுக்கம் ஏற்படுகிறது.’
வார இறுதி நாட்களில் இவர்களைப் பார்க்க வரும் மீப் கீஸ் உடன் அதிக நேரம் பேசிக் கொண்டிருப்பார் ஆன். அவர் மூலமாக வெளியே என்ன நடக்கிறது என்று தெரிந்துகொள்வார். வானொலியிலும், செய்தித்தாள்களிலும் வரும் செய்திகளும், மீப் மூலம் அறிந்து கொள்ளும் செய்திகளும் ஆன் நம்பிக்கை இழக்கக் காரணமாக இருந்தன.

’வெளியில் பயங்கரமான விஷயங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இரவும் பகலும் எந்த நேரத்திலும், ஏழை ஆதரவற்ற மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே இழுக்கப்படுகிறார்கள். அவர்கள் ஒரு பையையும் சிறிது பணத்தையும் மட்டுமே எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள், அப்போதும்கூட, வழியில் இந்த உடைமைகள் அவர்களிடம் இருந்து திருடப்படுகின்றன. குடும்பங்கள் பிரிந்து கிடக்கின்றன; ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் பிரிக்கப்பட்டனர். குழந்தைகள் பள்ளியிலிருந்து வீட்டிற்கு வரும்போது தங்கள் பெற்றோர் காணாமல் போயிருப்பதைக் கண்டார்கள். ஷாப்பிங் முடிந்து திரும்பும் பெண்கள் தங்கள் வீடுகளுக்குச் சீல் வைக்கப்பட்டிருப்பதையும், அவர்களின் குடும்பங்கள் காணாமல் போனதையும் காண்கிறார்கள்.’
இவ்வளவு கொடூரமான வாழ்க்கை வெளியே இருக்க, தான் தலைமறைவு வாழ்க்கை வாழ்வதைக் குற்ற உணர்ச்சியுடன் பார்த்தார் ஆன்.
’எங்களைப் பொறுத்தவரை, நாங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள். மில்லியன் கணக்கான மக்களைவிட அதிர்ஷ்டசாலிகள். இங்கே அமைதியாகவும் பாதுகாப்பாகவும் இருக்கிறது, மேலும் நாங்கள் எங்கள் பணத்தை உணவு வாங்க பயன்படுத்துகிறோம். நாங்கள் மிகவும் சுயநலவாதிகள், ‘போருக்குப் பிறகு’ என்று பேசுகிறோம், புதிய உடைகள் மற்றும் காலணிகளை எதிர்நோக்குகிறோம், உண்மையில் போர் முடிந்ததும் மற்றவர்களுக்கு உதவவும், நம்மால் முடிந்ததைக் காப்பாற்றவும் ஒவ்வொரு பைசாவையும் சேமிக்க வேண்டும்.’
சில நாட்கள் தானே தலைமறைவு வாழ்க்கை வாழப் போகிறோம் என்று நினைத்த அந்த எட்டுப் பேருக்குமே இது இரண்டு வருடங்கள் நீடிக்கும் என்று தெரியாது. அழுத்தம் தாங்க முடியாமல் சில நேரம் டைரியில் கீழே உள்ளவாறு எழுதி இருக்கிறார்.
’எனக்குக் கோபம் கொப்பளிக்கிறது, ஆனாலும் அதைக் காட்ட முடியவில்லை. நான் கத்த விரும்புகிறேன், என் கால்களை உதைக்க விரும்புகிறேன், அம்மாவை உலுக்க நினைக்கிறேன். அழ விரும்புகிறேன், இறுக்கமாகக் கட்டப்பட்ட வில்லின் அம்புகளைப் போல என்னைத் துளைக்கிறேன். அம்மா, மார்கெட், வான் டான்ஸ், டஸ்ஸல் மற்றும் அப்பாவையும் பார்த்து நான் கத்த விரும்புகிறேன். ‘என்னைத் தனியாக விடுங்கள், நான் அழாத ஒரு இரவையாவது எனக்குக் கொடுங்கள்.’
இந்தப் போர்க்கள மன நிலையிலும் ஆனின் நெஞ்சத்தில் காதல் பூ மலர்கிறது. வான் பெல்சின் மகனான பீட்டர் வான் பெல்ஸை ஆரம்பத்தில் சோம்பேறியாகவும் முட்டாளாகவும் பார்க்கிறார். பின்னர் அவர் பெற்றோரிடம் திட்டு வாங்கும் தருணத்தில் பச்சாதாபம் கொள்கிறார். இது பின்னர் காதலாக மாறுகிறது. இருவருமாக அந்த ரகசிய தங்குமிடத்தின் மேல் மாடியறையில் தங்கள் முத்தத்தைப் பகிர்ந்து கொண்டனர். சில நாட்களுக்குப் பின், ஆனின் சிந்தனைகளோடு பீட்டரின் சிந்தனைகள் வேறுபட்டு இருப்பதைப் புரிந்துகொள்ளும் ஆன், அவரிடமிருந்து விலக ஆரம்பிக்கிறார். பீட்டருடன் தனக்கு இருந்த காதலை ஒரு பதின் பருவ மோகமாகப் பார்த்தார்.

ரகசிய தங்குமிடத்தில் இருந்தவர்களை யாரோ காட்டிக் கொடுக்க 1944 ஆகஸ்ட் நான்காம் தேதி எட்டுப் பேரும் கைது செய்யப்பட்டனர். ஆனின் டைரி அன்றைய நாளுடன் முடிந்து போனது. முதலில் வெஸ்டெர்போக் என்னுமிடத்திற்குக் கொண்டு செல்லப்பட்டனர். ஆண்கள் பெண்கள் தனித்தனியே பிரிக்கப்பட்டு அவர்களுக்கு வேலைகள் கொடுக்கப்பட்டன. பின்னர் செப்டம்பர் மாதத்தில் அனைவரும் ரயிலில் அடைக்கப்பட்டு இரண்டு நாட்கள் பயணித்து போலந்தின் ஆஷ்விட்ஸ் நகரத்தை அடைகின்றனர். ஆண்கள், பெண்கள், உடற்தகுதி இல்லாதவர்கள் என்று பிரிக்கப்பட்டனர். வயதானவர்களும் குழந்தைகளும் நேரடியாக விஷ வாயு மையங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டு கொல்லப்பட்டனர். ஓட்டோ பிராங்க் தன் மனைவியையும் மகள்களையும் இங்குதான் கடைசியாகப் பார்த்தார்.
ஆனும் மார்க்கெட்டும் போலந்தின் ஆஷ்விட்ஸ்லிருந்து ஜெர்மனியின் பெர்கன்-பெல்சன் வதைமுகாமுக்கு 1944 இறுதியில் கொண்டுசெல்லப்பட்டனர். உடல் பலவீனத்தின் காரணமாக ஆனின் தாய் ஈடித் பிராங்க் அங்கு அனுப்பப்படவில்லை. ஆஷ்விட்ஸ்லேயே தங்கிவிட்ட ஈடித் பிராங்கின் உடல் வேகமாகப் பலவீனமடைந்தது. கடுமையான குளிர், கடும் பசி, உடல் சோர்வு காரணமாக ஜனவரி 1945ல் ஈடித் பிராங்க் மரணமடைந்தார்.
ஆனும் மார்க்கெட்டும் பிப்ரவரி மாதத்திலோ அல்லது மார்ச் மாதத்திலோ பெர்கன்-பெல்சன் வதை முகாமில் டைபஸ் நோயின் காரணமாக இறந்தனர். அக்கா மார்கெட்டின் மரணத்திற்குப் பிறகு சில நாட்களிலேயே ஆனும் இறந்துபோனார். அவர்களின் உடல்கள், ஆயிரக்கணக்கான பிற கைதிகளுடன், அடையாளமின்றி, பெரிய குழிகளில் புதைக்கப்பட்டன.
போர் முடிந்தபின் ஆம்ஸ்டர்டாம் திரும்பிய ஓட்டோ பிராங்கிடம், மீப் கீஸ் ஆனின் டைரியை ஒப்படைத்தார். இவர்கள் அனைவரும் கைது செய்து அழைத்துச் செல்லப்பட்ட பின்னர் அங்கு சென்ற மீப் கீஸ் ஆனின் டைரியை எடுத்துப் பத்திரப்படுத்தி வைத்திருந்தார். அந்த ரகசிய தங்குமிடத்தில் இருந்தவர்களில் உயிருடன் திரும்பி வந்தவர் ஓட்டோ மட்டுமே. மனைவியும் மகள்களும் மரணமடைந்ததைத் தெரிந்துகொள்ளும் ஓட்டோ தன் மகளின் டைரியைப் பிரித்துப் படித்தார். இது காலத்தால் பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷம் என்பதை உணர்ந்து அதைப் பதிப்பிக்க நினைத்தார். 1947 ஜூன் மாதத்தில் நெதர்லாந்தில் Het Achterhuis (தி சீக்ரெட் அன்னெக்ஸ்) என்கிற பெயருடன் ஆன் பிராங்கின் டைரி டச்சு மொழியில் வெளியானது. அதன் பின்னர் உலகிலேயே மிகவும் விரிவாக வாசிக்கப்பட்டு மொழிபெயர்க்கப்பட்ட நூல்களில் ஒன்றாகத் திகழ்கிறது. எழுபதுக்கும் மேற்பட்ட மொழிகளில் இன்றுவரை மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. பல நாடுகளின் கல்வித் திட்டத்தில் இடம்பிடித்திருக்கிறது. 2009இல், ஆன் பிராங்கின் டைரியின் மூலக் கையெழுத்துப் பிரதிகள், யுனெசுகோ மெமரி ஆப் வேர்ல்ட் ரிஜிஸ்டரில் சேர்க்கப்பட்டன. ஆம்ஸ்டர்டாமில் உள்ள ஆன் பிராங்க் ஹவுஸ் அருங்காட்சியகம் ஆண்டுக்கு ஒரு பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது.
எல்லையில்லாத கனவுகளுக்குச் சொந்தக்காரரான ஆன், சில நேரம் பத்திரிகையாளராக விரும்பினார். சில நேரம் எழுத்தாளராக அல்லது ஹாலிவுட் நடிகையாக. தனது டைரியில் தீர்க்கமாக எழுதி இருக்கிறார்.
’நான் பெரும்பாலானவர்கள்போல வீணாக வாழ விரும்பவில்லை. மக்களுக்கும் இதுவரை சந்தித்திராத மனிதர்களுக்கும் ஏதேனும் வகையில் பயன்பட வேண்டும்; அவர்களிடத்தில் மகிழ்ச்சியைக் கொண்டுவர வேண்டும் என்று விரும்புகிறேன். என் இறப்புக்குப் பிறகும் அப்படியே இருக்க விரும்புகிறேன்.’
(தொடரும்)
தரங்கிணி

எல்சீவியர் என்னும் தனியார் கம்பெனியில் பணியாற்றி வருகிறார். வாசிப்பில் நாட்டம் உடையவர். பெண்ணியம் சார்ந்த சமூக முன்னெடுப்புகளில் பங்களிப்பதில் ஆர்வம் உடையவர்.




