ஆட்சி பீடமேறிய புதிய ஜனாதிபதி அமீன் நாட்டின் சுதந்திரம் குறித்து அக்கறை கொண்டவராக இருந்தார். தன்னுடன் விருந்துக்கு அழைத்த பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் குழுவில் உரையாற்றிய போது, ​​அவர் அவர்களுக்கு உறுதியளித்தார், “பேராசிரியர்களாகிய நீங்கள் எங்களுடன் இருக்கலாம் அல்லது இல்லாமல் இருக்கலாம், ஆனால், நான் உயிருடன் இருக்கும் வரை எந்த ஒரு வெளிநாட்டுச் சக்தியும் நம் தாய்நாட்டில் ஆதிக்கம் செலுத்த அனுமதிக்க மாட்டேன்.”

இருப்பினும், அமீன் தனது சீர்திருத்தவாத முன்னோர்கள் அவருக்கு முன் எதிர்கொண்ட அதே அடிப்படைப் பிரச்னையை எதிர்கொண்டார். நாட்டின் சுதந்திரத்தை எவ்வாறு பாதுகாப்பது என்பதிலும் அதே நேரத்தில் மற்ற அரசாங்கங்கள் கணிசமாக உதவ விரும்பாதபோது சோவியத் யூனியனின் நிதிகள், தொழில்நுட்ப உதவியுடன் அதை வளர்ப்பது என்பதிலும் அவருக்கு தடுமாற்றம் இருந்தது. எவ்வாறாயினும், அனுபவக் குறைவும் கம்யூனிஸ்ட் தோழமை மீதான நம்பிக்கையும் சோவியத் யூனியன் ஊடுருவ அனுமதிக்கப்பட்டவுடன் சுதந்திரம் எவ்வாறு பராமரிக்கப்படும் என்று கேள்வி எழுப்புவதைத் தடுத்தது.

சோவியத் தலைவர்கள் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இணக்கமான ஆட்சியாளர்களை விரும்புகிறார்கள் என்பதை அவர் புரிந்துகொள்ளவில்லை. கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் ஆட்சியாளர்கள் மீதான அவர்களின் அணுகுமுறை அவருக்கு ஒரு பாடமாக இருந்திருக்க வேண்டும். ராஜதந்திரங்கள், அரசாங்கக் கலைகளில் அனுபவம் வாய்ந்த ஆப்கானிஸ்தானின் ஆலோசனையை இழந்து அவரும் மற்றவர்களும் தவறு செய்தனர்.

இந்த இக்கட்டான நிலை அனைத்து சீர்திருத்தவாத ஆப்கான் ஆட்சியாளர்களையும் குழப்பத்தில் ஆழ்த்திய ஒன்று. சுதந்திரத்தைப் பற்றி அக்கறை கொண்டிருந்தாலும், சோவியத் உதவியுடன் ஆப்கானிஸ்தானை அபிவிருத்தி செய்ய அமீன் விரும்பினார். சோவியத் யூனியனிடமிருந்து பரந்த பொருளாதார, ராணுவ உதவிகள் இல்லையென்றால், ஏகாதிபத்தியத்தின் ஆக்கிரமிப்புகளையும் சதித்திட்டங்களையும் எதிர்க்க முடியாது என நம்பினார். எல்லை நாடான சீனாவினதும் பிறநாடுகளினதும் ஆதிக்கத்திற்கு அகப்படாதிருப்பதற்கு சோவியத்தின் உதவி தேவை என்று அவர் விரும்பினாலும், சோசலிசத்தை நோக்கித் தமது நாட்டை நகர்த்த முடியாதென்பதையும் தெரிந்திருந்தார்.

’ராணுவ உதவி’ என்பதன் மூலம் அமீன் எதிர்பார்த்தது ராணுவ ஆயுதங்களைக் குறிக்கிறது. தாவூத் கான் அரசாங்கத்தை வீழ்த்தி கால்கிகள் (Khalqis) நிகழ்த்திய புரட்சியில் திரைக்குப் பின்னால் இருந்தவர் என்ற வகையில் அவருக்குச் சில நியாயமான கவனங்கள் இருந்தன. அவர் தனது நெருக்கமான வட்டங்களில் இந்தக் கவலையை அடிக்கடி வெளிப்படுத்தி வந்திருக்கிறார். இந்த நாட்டின் ஆட்சி அதிகாரம் சோவியத் யூனியனைச் சார்ந்துவிட்டது, அதன் தலைவர்கள் ஒரு நாள் தங்கள் சாம்ராஜ்ஜியத்தின் ஒரு பகுதியாக இந்நாட்டை ஆக்கிவிடலாம்! எனவே, இனியும் ஆப்கானிஸ்தானைப் பாதுகாப்பதற்கு சோவியத்தின் ராணுவ உதவி தேவையில்லை, நாமே நம் நாட்டைப் பாதுகாப்போம், எங்களுக்காகப் போராட சர்வதேச சகோதர்களுக்கு இந்தப் பிரச்னையை ஒருபோதும் விடமாட்டோம் என்று சொல்வதற்கு விரும்பினார். அப்படியோர் அறிவித்தலுக்கான களச்செயற்பாடுகளிலும் கவனத்தைக் குவித்திருந்தார்.

அரசாங்கம் அழுத்தத்தில் இருந்தபோதிலும், கட்சி பிளவுபட்டிருந்தாலும், எதிரிகளுடன் பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகளைத் தேடுவதற்கான ஞானமும் தைரியமும் அமீனுக்கு இருந்தது. (அந்த நேரத்தில் சோவியத் யூனியன் எதிர்த்தது, ஆனால், பத்து வருட போருக்குப் பிறகு ஆதரித்தது.)

காலனிய ஆக்கிரமிப்பின் போது பிரித்தானியர்கள் கோடு பிரித்த எல்லை நிர்ணயம் ’டுராண்ட்’ கோட்டை பாகிஸ்தான் அல்லது ஆப்கானிஸ்தான் மற்றவருக்கு எதிராக, சூழ்நிலைகளுக்கு ஏற்ப பயன்படுத்த முடியும் என்பதை அமீன் அறிந்திருந்தார். அமீன் ஆட்சி அதிகாரத்தை அபகரித்தபோது, அது பாகிஸ்தானின் முறை. அந்த நேரத்தில் கிட்டத்தட்ட 400,000 ஆப்கானியர்கள் பாகிஸ்தானுக்குத் தப்பிச் சென்றிருந்தனர். அவர்களில் இருந்தும் ஆப்கானிய இஸ்லாமிய அமைப்புகள் அரசாங்கத்திற்கு எதிராக போராட ஆட்களை நியமித்தன. ஆப்கானிஸ்தானை நிலையானதாக மாற்ற, அதன் அரசியல் ஸ்தீரணத்தைச் சீரமைக்க அமீனுக்குப் பாகிஸ்தானுடன் ஒரு புரிதல் அல்லது இணக்கப்பாடு தேவைப்பட்டது. டிசம்பர் தொடக்கத்தில், அமீன் பாகிஸ்தானின் ஜெனரல் ஜியா அல்-ஹக் உடன் ஒரு சந்திப்பை நாடினார். ஆனால், மூன்று முறைகள் திட்டமிட்டு ஒத்திவைக்கப்பட்ட அந்தச் சந்திப்புகள் இடம்பெற முடியவில்லை.

ஹபிசுல்லா அமீன்

அமீன், ஆப்கானில் சோசலிஸ ஆட்சிக்கு எதிராகப் போராடியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் சென்றார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முகமது அஸாம் சின்வாரே, இஸ்லாமியக் கட்சியின் பிரதிநிதிகள் (குல்புதீன் ஹெகமத்யார் தலைமையில்), அரசாங்கம் குனாரின் எல்லை மாகாணத்தில் சந்தித்தனர். அவர்களுக்கு இடையே கூட்டணி ஆட்சி அமைப்பதற்கான ஒப்பந்தம் எட்டப்பட்டதாக கூறப்படுகிறது. அப்படியொன்றும் நடக்கவில்லை.

இருப்பினும், அமீனின் நகர்வுகள் சோவியத் யூனியனின் கண்களால் கண்காணிக்கப்பட்டன. 31 அக்டோபர் 1979 அன்று சோவியத் பொலிட்பீரோவில் இவ்வாறு குறிப்பிடப்பட்டது.

“பழமைவாத முஸ்லீம் எதிர்ப்பின் பிரதிநிதிகளுடனும் அரசாங்கத்திற்கு விரோதமான பழங்குடியினத் தலைவர்களுடனும் ஒப்பந்தங்கள் [தொடர்புகள்] செய்வதற்கான அமீனின் முயற்சிகள் குறித்து குழப்பமான சமிக்ஞைகள் வருகின்றன. நாட்டின் முற்போக்கு வளர்ச்சிக்கு தீங்கு விளைவிக்கும் சமரச நிபந்தனைகளுடனான போக்கில் அவர் இருக்கிறார். மேற்கத்தேயே சக்திகளுடனான உறவுகளில் சீரான கொள்கையை அவர் பின்பற்ற விரும்புகிறார். இது அமெரிக்காவுக்குச் சாதமான திசையில் ஆப்கானிஸ்தானின் அரசியல் பாதையை மாற்றம் முடியும்.”

அமீனை ’நேர்மையற்றவர், இரு முகம் கொண்டவர்’ என்று அழைத்த பொலிட் பீரோ, ’ஆட்சியில் அரசியல் நோக்குநிலையை மாற்றக்கூடிய ஒரு துரோக நபரை நாங்கள் கண்டோம்’ என்றும் அபிப்பிராயப்பட்டது.

அமீன் பற்றி இவ்வாறான கண்டுபிடிப்புகள் இருந்தபோதிலும், அவருடைய உண்மையான நோக்கங்கள் உறுதியாக வெளிப்படும்வரை அமீனுடன் வழக்கமான உத்தியோகபூர்வ செயற்பாடுகளில் ஈடுபடுவதைத் தொடருடம்படி சோவியத் யூனியன் ஆட்சியில் இருந்த சோவியத் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியது.

அமீனின் நோக்கங்களை உறுதிப்படுத்துவது அவர்களுக்குக் கடினமாக இல்லை. தாரகி தனது சோவியத் தோழர்களுக்கு, “நாங்கள் உங்களுக்கு நெருக்கமாக இருப்பது போல் வேறு எவருக்கும் நெருக்கமாக இருக்க மாட்டோம்” என்று உறுதியளித்தார். இதற்கு மாறாக, அமீன் ரஷ்ய எஜமானர்களின் வார்த்தைகளில், ’மிகவும் சீரான கொள்கையை’ பின்பற்றினார். ஆப்கானிய ஆட்சியாளர்கள் கடந்த காலங்களில் கடைப்பிடித்த பரந்த கொள்கையும் இதுதான்; ஆனால், ரஷ்ய ஆட்சியாளர்கள் இந்தக் கொள்கையை ஆப்கானிஸ்தானுக்கு ’தீங்கு விளைவிக்கும்’ என்று கருதினர். அவர்கள் ஆப்கானிஸ்தானின் ஆட்சியாளர்கள் அல்ல என்பது ஒரு தெளிவான உண்மை. ஆனாலும் அவர்கள் தங்களை அவ்வாறு நினைத்து விடாமல், மேலும் தவறான எண்ணத்தின் அடிப்படையில் செயல்படுவதில் உறுதியாக இருந்தனர்.

எனவே, 12 டிசம்பர் 1979 அன்று அவர்கள் அமீன் செல்ல வேண்டும் என்றும் பதிலாக தாரகி ஆட்சியில் ஆப்கானிஸ்தான் மக்கள் ஜனநாயகக் கட்சி (PDPA) பிளவுபட்டதில் கிளைத்த பர்ச்சம் (Parcham) தோழர்களுக்கு ஆட்சி அதிகாரத்தைக் கைமாற்றுவது என்றும் முடிவு செய்தார்கள்.

Terrorist with gun fighting with soldiers

பல எழுச்சிகளை அடக்கியதால் அரசாங்கத்தை விட்டும் பொதுமக்கள் அந்நியப்படுத்தப்பட்டிருந்தனர். அதோடு ’சோசலிசம்’, ’புரட்சி’, ’முன்னேற்றம்’, ’ஆண்களும் பெண்களும் உழைப்பது’, ’பால்நிலை சமத்துவம்’ போன்ற எழுச்சிக் கோஷங்கள் அந்நாட்டு மக்களின் பாரம்பரிய நம்பிக்கைகளுக்கு எதிரான தீய செயற்பாடுகளாகவே பொதுச் சமூகத்தால் கருதப்பட்டது. பொதுச் சமூகத்தின் கருதுகோள்களைக் களைவதற்கான சிந்தனைப் போக்குகளை மேம்படுத்துவதற்கான மக்கள் இணைப்புச் செயற்பாடுகள் எதுவும் நிகழவில்லை. பொதுமக்களுக்கும் அரசாங்கத்திற்குமிடையில் பேரளவில் ஆயுதங்களும் ராணுவ பலமுமே பாலமாக இருந்தது. ஆனால், ஆட்சியாளர்கள் ’மனிதன் மனிதனை சுரண்டாத ஒரு சமுதாயத்தை’ உருவாக்குவதாக பிரஸ்தாபித்தார்கள். ​​சோவியத் ஆலோசகர்கள் கற்பனை செய்ததைவிட அவர்களின் சொற்பொழிவுகள் மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்ளப்பட்டன. மத நம்பிக்கையிலிருந்து மீட்டுக்கொள்வதற்கான சிந்தனை தொழில்பாட்டுக்கோ மக்கள் சக்தியை அரசியல் இயக்கமாக முன்னிறுத்துவதற்கோ எந்த வகையிலும் தயார்படுத்தப்படாத ஆப்கானியர்களில் பெருமளவானோர் சோசலிசத்தை வெறுத்ததுடன் அவர்களை மேலும் மதத்திற்குள் மூழ்கிப்போகவும் சோசலிசப் பிரச்சாரங்கள் தூண்டின.

உத்தியோகபூர்வமாக ஆட்சி அதிகாரத்தில் இருந்த கட்சி பிளவுபட்டதால் பெருங் குழப்பத்தில் இருந்தது. மேலும் எதிரிகள் யாரைச் சுற்றி வர முடியும் என்று அறியப்படாத எண்ணிக்கை இருந்ததால் சோவியத் தலைவர்கள் வெளிப்படையாக அமீனை நீக்கியவுடன் சோவியத் வல்லமையால் ஆதரிக்கப்பட்ட தோழர் கர்மல் என்பவரைக் கொண்டு அந்த வெற்றிடத்தை நிரப்புவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்தக் காலப்பகுதியில் இடம்பெற்ற கொந்தளிப்புகளும் அத்தகைய நடவடிக்கைக்கு உகந்ததாகத் தோன்றியது. 1977இல் ஆட்சிக்கு வந்த ஜெனரல் ஜியா அல்-ஹக் தலைமையிலான பாகிஸ்தானில் இருந்த ராணுவ ஆட்சியும், 1979இல் ஆட்சிக்கு வந்த அயதுல்லா கொமேனி தலைமையிலான ஈரானில் இருந்த மத ஆட்சியும் கடுமையான சவால்களில் சிக்கிக்கொண்டிருந்தன. சோவியத் யூனியனை எதிர்கொள்வதற்கு பிராந்தியத்தில் வெளிப்புற சக்தி இல்லை, குறிப்பாக அமெரிக்கா, இந்தியாவிலிருந்த பிரிட்டிஷ் கடந்த காலத்தில் ரஷ்யாவை எதிர்கொண்டது. 1950களில் தென்கிழக்கு ஆசிய ஒப்பந்த அமைப்பு (SEATO), மத்திய ஒப்பந்த அமைப்பு (CENTO) ஆகியவற்றின் ராணுவ ஒப்பந்தங்களை ஆதரவளிப்பதன் மூலம் சோவியத் யூனியனைக் கொண்டிருந்த அமெரிக்கா, இரண்டாம் உலகப் போரின் முடிவில் இருந்து ஈரானில் ஓர் இருப்பை வைத்திருந்தது. ஆனால், பின்வாங்கியிருந்தது. தவிர, நவம்பர் 1979இல் ஈரானால் பணயக்கைதிகளாகப் பிடிக்கப்பட்ட ராஜதந்திரிகளின் பிரச்னையில் கொமேனி ஆட்சியை அமெரிக்கா எதிர்கொண்டது. மிக முக்கியமாக, அமெரிக்க நிர்வாகங்கள் எப்போதும் ஆப்கானிஸ்தானை சோவியத் செல்வாக்கிற்குள் இருப்பதாகக் கருதின. அத்துடன் அமெரிக்கா அதனை விரும்பவில்லை. ஆயினும்கூட, சோவியத் யூனியன் ராணுவத்தை நகர்த்துவதற்கு முன் தனது துருப்புகளை அழைப்பதைப் பார்க்க விரும்பியது. இவ்விடத்தில் ஒரு கேள்வி எழுகிறது. சோவியத் துருப்புகள் அழைக்கப்பட்டனவா, அல்லது அழைப்பின்றி சோவியத் யூனியன் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்ததா?

அமீன் ஆட்சியில் இருந்தபோது சோவியத் யூனியன் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்ததால், அதன் துருப்புகளுக்கான அழைப்பு அவரிடமிருந்து வந்திருக்க வேண்டும். பிரதமராகவும், பாதுகாப்பு அமைச்சராகவும், புரட்சிகர கவுன்சிலின் தலைவராகவும், கட்சியின் பொதுச் செயலாளராகவும் அமீன் முக்கிய நபராக இருந்தார். ஆப்கானிஸ்தான் தேசிய வாழ்க்கையின் முழு அம்சத்தையும் உள்ளடக்கிய இந்தக் கேள்வியை ஆராய்கையில் ஓரளவிற்கு அறியமுடிவது, அமீனோ அல்லது புரட்சிகர கவுன்சிலோ சோவியத் யூனியனை அதன் துருப்புகளை அனுப்பும்படி வாய்மொழியாகவோ அல்லது எழுத்துப்பூர்வமாகவோ கேட்கவில்லை. சோவியத் அதிகாரிகள் ஆப்கானிஸ்தானை நோக்கி ஒரு கற்பனையான ஆபத்தை பற்றிப் பயமுறுத்துவதற்கு விரிவான முயற்சிகளை மேற்கொண்டிருந்தாலும் அவ்வாறு நடக்கவில்லை. ஆனால், சோவியத் அரசாங்கமும், ஆட்சி அதிகாரத்தை அனுபவிக்க எதிர்பார்த்திருந்த கர்மலின் பர்ச்சம் கட்சியும் கூட்டாக இந்த முடிவுக்கு மாறாகக் கதைகளைப் புனைந்துள்ளன.

டிசம்பர் 1979இல் சோவியத் அதிகாரிகள் அமீனிடம் அமெரிக்காவில் இருந்து ஆபத்து வரவுள்ளது, பாரசீக வளைகுடாவில் பாரிய தாக்குதலைத் தொடங்கவுள்ளது என்ற கதையைச் சமைத்தார்கள். தாக்குதலைச் சந்திக்க ஆப்கானிஸ்தான் ராணுவ ரீதியாகத் தயாராக இருக்க வேண்டும். இதற்கென சோவியத் ராணுவ ஆயுதங்களைப் பெரிய அளவில் கோரினார் அமீன். அந்தக் கோரிக்கை உடன் ஏற்கப்பட்டது. ஆனால், சோவியத் அதிகாரிகள் பலவிதமான மேம்பட்ட ஆயுதங்களைப் பயன்படுத்த ஆப்கானிஸ்தானுக்குப் பயிற்சி அளிக்க சோவியத் ராணுவ வல்லுநர்கள், பயிற்றுவிப்பாளர்களின் இருப்பு தேவை என்பதை அறிவித்தனர்.

7 ஜூலை 1979இல், விமானத் தொழில்நுட்ப வல்லுநர்களின் வேடமிட்ட ஒரு சோவியத் படை காபூலுக்கு வடக்கே, பக்ராம் விமானத்தளத்தில் தரையிறங்கியது. சோவியத் விமானம் தரையிறங்கிய விமானநிலையத்தைப் பாதுகாப்பதற்காகவும் ஆப்கானிஸ்தானுக்கு உதவுவதற்கும் சரக்குகளைக் கொண்டு வந்தது. நிலைமை மோசமாகிவிட்டால் சோவியத் வல்லுநர்களும் ஆலோசகர்களும் தங்கள் குடும்பங்களுடன் கூடியிருக்கக்கூடிய ஓர் அதியுயர் பாதுகாப்பகமாக அந்த இடம் விரைவில் மாறியது. டிசம்பர் 6க்குள் வெறும் சிலதாக இருந்த படை எண்ணிக்கை 2,500 ஆக அதிகரித்தது. புதிய சோவியத் தூதுவர் ஃபிக்ரத் ஏ. தபியேவிடம் அமீன் விளக்கம் கோரினார். எல்லையில் ஏகாதிபத்தியவாதிகளின் அதிகரித்த செயல்பாட்டிற்கு பதிலளிப்பதற்காக என்று தபியேவ் கூறினார். ஆப்கானியர்களுக்கு ஆயுதங்களைப் பயன்படுத்துவதில் பயிற்சி அளிக்க சோவியத் வல்லுநர்கள் அடித்தளத்தில் இருந்ததாகவும் தபியேவ் கூறினார். அமின் கவலைப்பட்டதாகத் தோன்றினாலும் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.

டிசம்பர் 18 அன்று, பாக்ராம் விமானத் தளத்தின் தளபதி ஏ. எச். ஹக்கீமி, 1968இல் செக்கோஸ்லோவாக்கியாவில் செய்ததைப் போல, சோவியத்துகள் ஏதோ செய்யப்போவது போல் தான் கருதுவதாக அமீனுக்குத் தெரிவித்தார். விரைவில் எல்லாம் சரியாகிவிடும் என்று அமீன் கூறினார். பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சர் ஆகா ஷாஹியுடனான தனது திட்டமிடப்பட்ட சந்திப்பின் முடிவு குறித்து அமீன் ஒருவேளை நம்பிக்கையுடன் இருந்தார். சந்திப்பு நடைபெறவில்லை. காபூல் பகுதியின் கட்டளை அதிகாரிகளுடன் ராணுவத்தில் உள்ள அரசியல் அதிகாரிகளைத் தேசிய பாதுகாப்பு அமைச்சகத்தின் தலைமையகத்திற்கு அழைக்க அமீன் திட்டமிட்டார். ஆப்கானிஸ்தான் மீதான சோவியத் அணுகுமுறை மாறிவிட்டது என்றும் அனைத்து முக்கியமான விஷயங்களிலும் அவர்கள் அவருடைய உத்தரவின் பேரில் மட்டுமே செயல்பட வேண்டும் என்றும் அவர் அவர்களிடம் சொல்ல விரும்பினார். ஆனால், திட்டமிடப்பட்ட சந்திப்புக்குச் சில மணிநேரத்துக்கு முன்பு, சோவியத் சமையல்காரரும் பணியாளர்களும் அமீனுக்கு விஷமூட்டிய உணவைக் கொடுத்தனர்.

ஆக்கிரமிப்புத் தொடங்கியது.

(தொடரும்)

கட்டுரையாளர்

ஸர்மிளா ஸெய்யித்

விதிவிலக்கான  துணிச்சலான சமூக செயற்பாட்டாளர்.  சமூக அநீதிகள் குறித்து அச்சமற்று விமர்சிக்கக்கூடியவர், எழுத்தாளர், கவிஞர். 
சிறகு முளைத்த பெண் (கவிதை 2012), 
உம்மத் (2014 நாவல்), 
ஓவ்வா ( கவிதை 2015), 
பணிக்கர் பேத்தி (நாவல் 2019), 
உயிர்த்த ஞாயிறு (2021 அனுபவம்) 
ஆகியன இவரது நூல்கள்.