பத்திருபது நாள்கள் முன்பு எங்கள் வாப்பாவின் போனில் எங்கள் வாப்புமாவின் புகைப்படம் ஒன்றைப் பார்த்தேன். ஓரத்தில் மெலிதான நீல நிற பார்டர் போட்ட வெள்ளை வாயில் சேலையில் இருந்தார் வாப்புமா. புகைப்படம் பிடிப்பதற்காக வேண்டிதான் அன்று அந்தச் சேலையை உடுத்தியிருந்தாரே தவிர அவருடைய அன்றாட உடை என்னவோ பூப்போட்ட சாரமும் (லுங்கி) முழங்கை வரையிலான வெள்ளைச் சட்டையும் பூப்போட்ட தாவணியும்தான்.

பூப் போட்ட தாவணி என்றதுமே, காலையில் எழுந்து பல் விளக்கி முகம் கழுவியதும் வாப்புமாவின் அந்தத் தாவணியிலேயே முகத்தைத் துடைத்துக் கொள்வதுதான் நினைவு வருகிறது. கூடவே “ஓதப்பள்ளிக்குத் தேரமாச்சே” என்ற வாப்புமாவின் குரலும்.

இஸ்லாமியர்களின் புனித நூலாகிய குர்ஆன் என்பதின் பொருள் ஓதுதல் அல்லது ஓதப்படுவது என்பதாகும். குர்ஆனை வாசித்தல் படித்தல் எனச் சொல்லாமல் ஓதுவது என்றே சொல்கிறோம்.‌ இன்னும் சொல்வதானால் நபி பெருமானாருக்கு அருளப்பட்ட முதல் இறை வாக்கே ‘இக்றஹ்’ – ‘ஓதுவீராக’ என்பதுதான். அரபி மொழியிலுள்ள குர்ஆனை ஓதுவதற்குக் கற்றுக் கொடுக்கும் பள்ளியை ஓதப்பள்ளிக்கூடம் என்போம். (இங்கு குர்ஆனைத் தடையின்றி வாசிக்க மட்டுமே கற்றுக் கொள்வோமே தவிர, அரபியை ஒரு மொழியாகப் பொருளுணர்ந்து கற்றுக் கொள்வதில்லை. பொருள் உணர்ந்து முழுமையாகக் கற்பதற்கு ஏழு வருட மதரஸாக் கல்வியும் கல்லூரிகளும் தனியாக உண்டு. இவற்றில் கற்று பட்டம் பெறுபவர்களைத்தான் ஆலிம்கள் என்போம்).

பெரும்பாலும் ஆறு வயதிற்குள் குழந்தைகளை ஓதப்பள்ளிக்கூடத்தில் சேர்த்து விடுவார்கள். தினமும் காலையில் பள்ளிக்கூடம் செல்வதற்கு முன்பே ஓதப்பள்ளிக்கூடம் சென்று வந்து விடுவார்கள் சிறுவர்கள்(ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம் என்ற ஔவை மொழியைக் கூடியமட்டிலும் கடைபிடித்தோமாக்கும்!).

அப்போது எங்கள் தெருப் பள்ளிவாசலின் அருகில் வசித்த லெப்பை அப்பா வீட்டிற்குத்தான் குட்டிப் பிள்ளைகளை ஓதுவதற்கு அனுப்புவார்கள். ஆரம்பப் பாடம் லெப்பப்பாவிடம் அவர் வீட்டுத் திண்ணையில் வைத்துத்தான் அரங்கேறும். அங்கே ஒரு பெரிய பலகையில் ‘அலிஃப் பே’ என்று அரபு எழுத்துகளை எழுதி வைத்திருப்பார் லெப்பப்பா. எழுத்துகளை அவர் ஒவ்வொன்றாக வாசிக்க வாசிக்க, அவர் பின்னால் பிள்ளைகள் எல்லாம் சேர்ந்து சத்தமாகச் சொல்வோம். அப்புறம் ‘லாஇலாஹா இல்லல்லாஹ் முஹம்மதுர் ரஸுலுல்லாஹ்’ என்ற முதலாவது கலிமாவையும் அதன் பொருளாகிய வணக்கத்துக்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை; முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அவனுடைய திருத்தூதராக இருக்கிறார்கள் என்ற அதன் பொருளையும் கற்றுத் தருவார். அதோடு சேர்த்து, ‘எங்கள் நயினார் முஹம்மது நபி; அவர் தாயார் பெயர் ஆமினா உம்மாள்; தகப்பனார் பெயர் அப்துல்லா; முஹம்மது நபி மக்காவில் பிறந்தார்; மதினாவில் அடக்கப்பட்டார்’ இப்படிச் சில வரிகளையும் சொல்லித் தருவார். அவற்றைப் பாட்டுப் பாடுவது போல உற்சாகமாகச் சொல்லிச் சொல்லிக் கற்றுக் கொள்வோம். இப்படியே இரண்டு மூன்று மாதங்கள் ஆனபிறகு பள்ளிவாசலுக்கு எதிரே இருந்த ஓதப் பள்ளிக்கூடத்துக்குச் சென்று ஆலிம்சாவிடம் ஓதத் தொடங்கி விடுவோம்.

முழுக் குர்ஆனும் ஏறத்தாழ சமமான அளவுள்ள முப்பது ஜுஸ்வுகளாக அதாவது பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. நன்கு ஓதத் தெரிந்து கொண்டபின், சரளமாகவும் விரைவாகவும் ஓதக் கூடியவர்கள் தினமும் ஒரு ஜுஸ்வு என்ற கணக்கில் ஒரு மாதத்தில் முழுக் குர்ஆனையும் முடிப்பதற்கு ஏதுவாக இந்த ஏற்பாடு. தொடக்கத்தில் அரபு எழுத்துக்களின் குறில் நெடில் உச்சரிப்புகள், அகர இகர உகர உச்சரிப்புகள், எழுத்துகளை இரண்டிரண்டாக மும்மூன்றாகச் சேர்த்து சிறு சிறு வார்த்தைகளாக்கிய உச்சரிப்புகள் முதலியவற்றிற்காக யஸ்ஸர்னல் குர்ஆன் (குர்ஆனை ஓதக் கற்றல்) என்று சில பாடங்கள் உண்டு. இதை ஒன்றாம் ஜுஸ்வு என்றும் சொல்வோம். இதைத்தான் சிறுவர்களுக்கு முதலில் கற்றுக் கொடுப்பார்கள். ஓதப்பள்ளிக்குச் செல்லும்போது இந்த ஒன்னாஞ்ஜுஸுவோடும் தலையில் ஒரு முக்காட்டோடும்தான் செல்வார்கள் சிறுமிகள். இன்று சிறுமிகளுக்குத் தலையில் அணிவதற்குக் கிடைக்கும் விதவிதமான ஸ்கார்ஃபுகள், ஷால்கள், ஸ்டோல்கள் போன்றவற்றுக்குச் சிறிதும் தொடர்பில்லாதவை அன்று ஓதப்பள்ளிக்குச் சின்னஞ் சிறுசுகள் போட்டுச் சென்றவை. ம்மாவின் சேலை லாத்தாவின் தாவணிக்குக் கிழிக்கப்பட்டது போக, இன்னுமொரு துண்டு அல்லது மெல்லிதாகப் போன பழைய துவாலை அல்லது சில குட்டிகள் வாப்பா அப்பாவின் கைக்குட்டையையும் தலையில் போட்டுக்கொள்ளும்.

ஓதப்பள்ளியில் ஆலிம்சாவின் முன் அட்டணக்கால் போட்டு உட்கார்ந்து, மடியில் அந்த ஜுஸ்வை பயபத்திரமாக வைத்துக் கொண்டு, குனிந்து எழுத்தைப்பார்த்து எழுத்தில் கைவைத்து ஓதவேண்டியிருக்கும். தலையிலிருந்து நழுவி நெற்றிக்கு வந்து கண்ணை மறைக்கும் முக்காட்டை இழுத்து இழுத்து விட்டுக் கொண்டு, காலையிலேயே எழுந்து வந்திருப்பதால் சில நேரங்களில் ஒழுகும் மூக்கையும் உறிஞ்சிக்கொண்டு, சின்னஞ் சிறுமிகள் ஓதக் கற்பதே கண்காட்சிதான்.

ஓதத் தொடங்கியதும் அரபி எழுத்துகள் நன்கு பிடிபட்டு அடுத்தடுத்த பாடங்களுக்குச் சென்று விடுவார்கள் சிலர். அப்படியே ஒவ்வொரு பாகமாக முடித்து, குறைந்தது பத்துப் பன்னிரண்டு வயதிற்குள்ளாவது முதல் முறையாக குர்ஆனை முழுவதும் முடித்து விடுவார்கள். சிலருக்கோ அரபி ஓதுவது அவ்வளவு எளிதாகக் கைகூடுவதில்லை. அப்போதெல்லாம் பள்ளிக்கல்வி என்று பார்த்தால் கூட , தமிழோ கணிதமோ, வரலாறு, புவியியலோ நல்ல முறையில் படித்து மதிப்பெண் எடுத்தவர்கள் சிலருக்கும் இந்த ஆங்கிலப் பாடம் மட்டும் கொஞ்சம் ஆட்டங்காட்டி விடுமில்லையா? அப்படித்தான் அரபியும்.

என்ன இருந்தாலும் வேற்று மொழி. உச்சரிப்பும் எழுத்துருவும் மனதில் படிவதற்குக் கொஞ்சமென்ன நிறையவே பாடுபட வேண்டியிருந்தது சிலருக்கு. அன்று பெரும்பாலும் பத்துப் பதினொரு வயதில் தாவணி வேறு போட்டு விடுவார்கள் பெண் குழந்தைகள். தாவணி போட்ட பிறகு ஓதப் பள்ளிக்குப் போகும் வழக்கம் இருந்ததில்லை. நன்கு ஓதத் தெரிந்துகொண்டவர்கள் வீட்டிலிருந்தே தினமும் ஓதி குர்ஆனை நிறைவு செய்து விடுவார்கள். அப்படி இல்லாதவர்களுக்கு மேற்கொண்டு தொடர்வதில் சிரமம்தான். வீட்டில் ம்மா, மூமா, வாப்புமா எவரேனும் ஓதக் கற்றிருந்தால், சிரமம் பாராமல் எப்படியாவது சொல்லித் தருவார்கள். இல்லையெனில் யாராவது ஓதத் தெரிந்த பெத்தாக்களிடம் போய் அவர்களின் மூச்சையும் ஆவியையும் தொலைக்கவேண்டும். வயதுக்கு வந்து விட்டாலோ, அதுவும் போச்சு. கொஞ்ச நாளைக்கு பெத்தாக்களும் பேத்திக்களும் அரபு மொழியோடு மல்லுக்கட்டிவிட்ட பிறகு விரைவிலேயே இருவரில் யாராவது ஒருவரோ அல்லது இருவருமேவோ களைப்படைவது உறுதி. ஆதலால், அத்தோடு அரபியில் ஓதுவது மூட்டைகட்டி வைக்கப்படும்.

அப்படி அரபி ஓத இயலாமல் போனவர்களுக்காகவே குர்ஆனின் சில முக்கியமான அத்தியாயங்கள், துஆக்கள் போன்றவை அரபு உச்சரிப்பில் தமிழிலேயே அச்சிடப்பட்டுக் கிடைக்கும். அவற்றைப் பயன்படுத்தித் தங்கள் வணக்க வழிபாடுகளைத் தொடர்வார்கள் பெண்கள். அன்றுதான் அப்படி. இன்றுள்ள நிலைமை முற்றிலும் வேறு. சிறு ஊர்களில்கூட பெண்களுக்கெனத் தனி மதரஸாவும் கற்றுக்கொடுக்கப் பெண் ஆலிமாக்களும் இருக்கிறார்கள். இது தவிர இணைய வழிகளிலும் ஆலிமா பட்டத்துக்குரிய கல்வி கற்கும் வசதிகள் உள்ளன. அதனால் குர்ஆன் ஓதக் கற்றுக் கொள்வது அவ்வளவு கடினமல்ல இன்று.

வாப்புமாவின் சேலையணிந்த படத்தைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தேனில்லையா? வயசுக்கு வந்த குமரிப்பிள்ளையைப் பார்க்க, பிள்ளை பெற்ற வீட்டுக்குச் சென்று தாயையும் பிள்ளையையும் பார்த்துவர என்று வீட்டிலிருந்து வெளியே செல்ல நேர்ந்தால்தான் அந்த வெள்ளைச் சேலைக்கு வாப்புமாவின் மேலேறும் பாக்கியம் கிட்டும். வாப்புமாவைச் சேலையில் பார்க்க இன்னும் இரண்டு வாய்ப்புகள் இருந்தன எங்களுக்கு.

தெருக் கந்தூரிக் கொடி ஏத்தியாச்சு

நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் என்ற இரண்டு பெருநாட்களையும் போல ஊரில் உற்சாகமாகக் கொண்டாடப்படும் இன்னொரு விழா தெருக் கந்தூரி என முன்பே சொல்லியிருக்கிறேன் அல்லவா? எங்கள் தெருப் பள்ளிவாசலில், புகழ் பெற்ற இறைநேசச்செல்வரான சுல்தானே ஆரிஃபீன் செய்யது அஹமது கபீர் ஆகிய ரிஃபாயி நாயகம் அவர்களின் பெயரால் கந்தூரி விழா எடுப்பார்கள். ரிஃபாயி நாயகத்தின் நினைவு தினமான ஜமாத்துல் அவ்வல் மாதம் இருபத்திரண்டாம் நாளன்று, பச்சை நிறத்துணியில் பிறையும் நட்சத்திரமும் பொறிக்கப்பட்ட பள்ளிவாசலின் கொடி, அலங்கரிக்கப்பட்ட யானைமேல் வைக்கப்பட்டு, மேளதாளத்துடன் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும். கந்தூரிக்கான அந்தக் குறிப்பிட்ட மாதம் பிறந்த முதல் தினத்தில், கந்தூரி வருவதன் அடையாளமாக பள்ளிவாசலின் முன்னுள்ள கொடி மரத்தில் கொடியேற்றி வைப்பார்கள்.

பெரிய தர்காக்களின் கொடியேற்றம் போல அவ்வளவு பிரம்மாண்டமாக நடத்த வாய்ப்பிருந்ததில்லை யெனினும் சிறிய ஜமாத்துகளையே அடக்கியுள்ள எங்கள் தெருப் பள்ளியிலும் அதனளவில் எளிமையாக, ஆனால் ஊர்மக்களின் குறைவில்லா உற்சாகத்துடன் கொடியேற்றம் நடந்தது. சிறுவர்கள் இருக்கும் வீடுகளில் சிறுசிறு கம்புகளில் கட்டப்பட்ட பச்சை நிறத் துணியிலான கொடிகளைப் பள்ளிவாசலிலிருந்து வாங்கி வந்து வைத்திருப்பார்கள். கொடியேற்றத்தன்று மாலை நான்கு மணி வாக்கில் இருப்பதில் நல்ல உடைகளை அணிந்து கொண்டு, சிறுவர்களும் பின்னலில் பூச்சூடிய சிறுமிகளும் பூச்சரம் சூட்டப்பட்ட கொடிகளைக் கையிலேந்தி அவரவர் வீடுகளிலிருந்து வந்து பள்ளிவாசலில் கூடி அங்கிருந்து தெருவில் ஊர்வலமாகச் செல்வார்கள். கைக் குழந்தைகள் இருக்கும் வீடுகளில் ஆண்கள் அந்தக் குழந்தைகளைத் தூக்கிக்கொண்டு கொடிபிடித்து வருவார்கள். எங்கள் பள்ளிவாசல் மூன்று தெருக்கள் அடங்கியது ஆதலால் அந்த மூன்று தெருக்களிலும் சுற்றி விட்டுச் சிறுவர்களின் கொடி ஊர்வலம் பள்ளி வாசலை அடையும். கையிலுள்ள சிறு கொடிகளை ஒப்படைத்தபின் எல்லோர் கவனமும் பள்ளிவாசலின் முன்னுள்ள கொடிமரத்தில் குவியும்.

நன்கு பருத்த மிகக் கனமான நீண்ட மரத்தடிதான் எங்கள் தெருவின் கொடிமரமாகும். உறுதியான உயர்ந்த கல் திண்டு ஒன்றின் நடுவில் கொடிமரத்தின் கனத்த அடிப்பாகம் பொருந்துமாறு அமைக்கப்பட்டிருக்கும். மற்ற நாள்களில் எப்போதுமே கொடிக்கம்பம் தரையில் சாய்த்துதான் வைக்கப்பட்டிருக்கும். தெருவின் நடுவிலிருக்கும் கல் திண்டிலிருந்து நீண்டு, ஐந்தாறு வீடுகளையும் தாண்டித் தரையில் நீளமாகக் கிடக்கும் அந்தத் தடியான மரக்கம்பம். தடியில் இரும்பு வளையங்கலிட்டு நீண்ட வட கயிறுகள் பிணைக்கப்பட்டிருக்கும். கொடியேற்றத்தன்று பலசாலிகளான ஆண்கள் கயிறுகளை இழுத்துத் தரையில் கிடக்கும் மரத்தினைத் தூக்கி நிமிர்த்துவதற்குத் தயாராக நிற்பார்கள். இப்போது ‘தீன் முஹம்மதோ தீன் அல்லாஹு அக்பர்’ என்று மாறி மாறி எழுப்பிய கோஷங்களுடன் முன்னின்றுச் சிலர் தம் பிடித்துக் கயிறினை இழுக்க, பின்னின்றுச் சிலர் மரத்தினைத் தூக்கித் தள்ள சிறிது சிறிதாகக் கொடிமரம் உயரும். அடிப்பாகம் கல்திண்டின் நடுவிலுள்ள குழியில் நன்றாகப் பொருந்தி நின்றவுடன் கயிறுகளைத் திண்டில் அடிக்கப்பட்டிருக்கும் இரும்பு வளையங்களில் பிணைத்து விடுவார்கள். அதன் பின் கொடியேற்றும் கயிறு வழியாக வெண்ணிறத்தில் பச்சைப்பிறை பொறித்த கொடியேற்றப்பட்டு அது கந்தூரி வரையிலும் அதற்குப்பின் அந்த மாத இறுதியில் கொடியை இறக்கும் வரையிலும் காற்றில் படபடத்துக் கொண்டிருக்கும்.

பள்ளிவாசலின் அருகிலிருக்கும் வீடுகளின் திண்ணைகளிலும் வாசல்களிலும் பலர், கொடியேற்றத்தைக் காண கூடி நின்றிருப்பார்கள். எங்கள் வாப்புமாவைப் பளீரென்ற வெள்ளைச்சேலை வெள்ளைச் சட்டையில் காண முடிந்த மற்றுமொரு தருணம் எங்கள் தெருவின் இக் கொடியேற்றம்.

ரிஃபாயி நாயகம் , முஹையித்தீன் ஆண்டவர் , நாகூர் ஆண்டவர் முதலான புகழ்பெற்ற பல இறைநேசர்களின் முழுமையான வரலாறு , அவர்களிலிருந்து உருவான சிந்தனைப் பள்ளிகள், அவர்தம் சீடர்கள் குறித்தெல்லாம் எங்கள் வாப்புமா போன்றவர்கள் அறிந்திருக்கவில்லை. ஆனால் அந்த மகான்கள் தங்களைப் போன்ற சாதாரண மனிதர்களைவிட இறை பக்தியிலும் இறை ஞானத்திலும் பல மடங்கு உயர்வானவர்கள்; அதனால் போற்றுதலுக்குரியவர்கள் என்ற எளிமையுணர்வு அவர்களிடம் ஆழமாக வேரோடியிருந்தது.

அதனால் இத்தகைய மகான்களின் பெயரால் நிகழும் கொடியேற்றம் கந்தூரி போன்ற விழாக்களை மிகுந்த உணர்வு பூர்வமாகவும் மகிழ்வோடும் கொண்டாடுவார்கள். “தீன் கூறுங்கோ! மக்கொ(மக்களே)! தீன் கூறுங்கோ!” என்று சுற்றி நிற்பவர்களிடம் உரத்த குரலில் கேட்டுக் கொண்டும் கொடிமரம் நிமிர்வது வரை ‘அல்லா உன் தவக்கல்’ (அடைக்கலம்) என்று மரத்தைத் தூக்குபவர்களுக்காக வேண்டிக் கொண்டும் அங்கிருக்கும் வீட்டு வாசலில் வாப்புமா நின்ற காட்சி கம்பீரமானது. இப்போது நினைத்தாலும் மனதில் ஒரு குதூகலத்தை, ஒரு நல்லுணர்வை வரவழைப்பது.

சுன்னத் விட்டாச்சு

‘தீன் முஹம்மதோ தீன்’ என்ற கோஷம் ஒலிக்கும் இன்னொரு இடம் சுன்னத் வீடு. இஸ்லாமியர்கள் ஆண்குழந்தைகளுக்கு சுன்னத் என்ற விருத்த சேதனம் (ஆண்குறியின் முன்தோலை அகற்றுதல்) செய்வது குறித்து நாம் அறிந்திருப்போம். இப்போதெல்லாம் குழந்தை பிறந்த மூன்று மாதங்களுக்குள்ளாகவே மருத்துவ மனைகளில் மருத்துவரைக் கொண்டு சுன்னத் செய்து விடுகிறார்கள். அப்போது அப்படியில்லை. பொதுவாக ஐந்து வயது ஏழு வயது ஒன்பது வயது, அதிக பட்சமாக பதினோரு வயது என ஒற்றைப்படை வயதுகளில் வீட்டில் வைத்துதான் சுன்னத் சடங்கு நடக்கும்.

விவரம் தெரியாத சிறு பிள்ளை எனில் “ஐ நமக்கு சுன்னத் விடப் போறாங்க’ என்று பெருமையாய் அலைந்து கொண்டிருக்கும். அதுவே நண்பர்களுக்கு நடந்ததைப் பார்த்து ஓரளவு புரிந்து வைத்திருக்கும் பையன் எனில் , “ஆஹா இழுத்து வச்சு அறுக்கப் போறாங்களே தப்பிக்க முடியாதே” என்று திகிலோடு அலைந்து கொண்டிருப்பான்!

சுன்னத் சடங்கினை ஊர்கூட்டிச் சாப்பாடு போட்டுப் பெரிதாக நடத்தும் வழமை அன்று எங்கள் ஊரில் இல்லை. மாலை அஸருக்குப் பின் சொந்தக் காரர்கள் தெருவினர் எனப் பத்திருபது பேரை வீட்டுக்கு அழைப்பார்கள். லட்டு, முட்டாசி போன்ற இனிப்பில் ஏதாவது ஒன்று, காரத்துக்குக் கொஞ்சம் மிக்ச்சர், ஒரு வாழைப்பழம் இவை வந்தவர்களுக்கு வழங்கப்படும். அப்புறம் இஞ்சி ஏலக்காய் தட்டிப் போட்டு சர்க்கரை போட்டுக் கலந்த சாயாவும் கண்டிப்பாக உண்டு. வெல்லத்தைத்தான் எங்கள் பகுதிகளில் சர்க்கரை என்போம். அப்போதெல்லாம் காப்பிக்குக் கருப்பட்டியும் தேநீருக்குச் சர்க்கரையும் சேர்ப்பது ஊரில் வழக்கமாக இருந்தது (தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டுக் கலங்கலாக ஓடும்போதெல்லாம் என் கண்களுக்கு ஆறு நிறையச் சர்க்கரை போட்டச் சாயா ஓடுவதாகவே தோற்றமளித்தது).

இதற்குள் பையனுக்குப் புத்தாடை உடுத்துத் தலையில் தொப்பி கழுத்தில் பூமாலை அணிவித்து, ஒரு நாற்காலியில் உட்கார வைத்திருப்பார்கள்.‌ முகத்தில் அப்பிய பவுடரில் வாப்புமா, மூமா, மாமி, சாச்சி, பூமா எல்லோரும் வந்து, ‘எந்தங்க வாப்பா செல்ல வாப்பா’ என்று நெற்றியிலும் கன்னத்திலும் மோந்து மோந்து எடுத்தது போக மீந்தது பயத்தில் கரைய, வியர்த்துப் போய் உட்கார்ந்திருப்பான் பையன். அந்தவாரச் சந்தையில் ஏற்கனவே புத்தம் பதிய மண்பானை ஒன்றும் வாங்கி வரப்பட்டு வீட்டில் உட்கார்ந்திருக்கும் குடிமகனின் வரவை எதிர்பார்த்து…

அப்போது ஒவ்வொரு ஊரிலும் அந்தந்த தெருவுக்கு எனக் குடிமகன் என்று சொல்லப்படுபவர்கள் இருந்தார்கள். இன்றும் ஊர்களில் இருக்கத்தான் செய்கிறார்கள். இவர்கள்தான் அத் தெருவினருக்கு முடி வெட்டுதல், பையன்களுக்கு சுன்னத் செய்தல், மரணித்தவருக்குக் கபுர் என்ற குழி தோண்டுதல் போன்ற வேலைகளைச் செய்வார்கள். அவர்கள் வீட்டுப் பெண்கள் குடிமகள் என்று அழைக்கப் பட்டார்கள். பேறுகாலத்துக்கு மருத்துவமனை செல்லாத அந்தக் காலத்தில் தெருப் பெண்களுக்கு பிரசவம் பார்த்தது குடிமகள்கள்தான். இவர்கள், தெருவில் எங்களுக்கு இடையேதான் வசித்தனர். சேர்ந்து விளையாடுவதிலும் வீடுகளுக்கு வருவதிலும் போவதிலும் கல்யாணம் காட்சிகளில் கலந்து கொள்வதிலும் எங்களோடு ஒன்றாகத்தான் புழங்கினர். இன்றும் அப்படித்தான் வாழ்ந்தும் வருகின்றனர். ஆனாலும் அவர்கள் தனியான ஒரு குடும்பமாகத்தான் இன்றுவரை இருக்கிறார்கள் என்பதையும் இங்கு சொல்லித்தான் ஆக வேண்டும்.

எங்களுக்கு அடுத்த வீட்டில் வாழ்ந்து வந்த செய்யது அஹமது பெரியவாப்பாவின் மனைவியான சேலாமலி பூமா எங்கள் ம்மாவுக்கும் அவர்களின் மூத்த மகள் ஜீனத் எங்கள் லாத்தாவுக்கும் தோழிகள். நான் தூத்துக்குடியில் ஸ்பிக் நகரில் வசித்தபோது என் இளைய மகளுக்கு ஓரிரு வயதுவரை மொட்டை போட, முடி வெட்ட என்று ஆத்தூரிலிருந்து ஒருவர் வழமையாக வந்து செல்வார். பல வருடங்கள் கழித்து நாங்கள் சென்னைக்குக் குடிவந்த பிறகு ஜீனத் லாத்தாவின் மகள் திருமணத்தில் அந்த ஆத்தூர்க்காரரைச் சந்தித்தேன். “நீங்கள் எங்கே இப்படி? இவங்களை உங்களுக்குத் தெரியுமா?”, என்ற போது அவர் கூறினார் “நாங்க எல்லாம் வெவ்வேற ஊர்ல இருந்தாலும் ஒரே குடும்பந்தானே” என. ஒரே குடும்பம் என்பது தனிக் குடும்பமும்தான் என்பது சொல்லாமலே விளங்கக் கூடியது.

சுன்னத் செய்வதற்கெனக் குடிமகன் வந்து சாயாவெல்லாம் குடித்தானதும் வீட்டின் எதிரே தெரு முற்றத்தில் ஓலைப் பாயை விரித்து நடுவில் அந்தப் புது மண்பானையைக் கவிழ்த்து வைப்பார். பையனுக்கு இப்போது சட்டை டிரவுசர் தொப்பி பூமாலையெல்லாம் கழட்டி விட்டு, வெள்ளை வேட்டித் துண்டை மட்டும் உடுத்து அழைத்துப் போய் கவிழ்ந்திருக்கும் பானை மீது அவனை அமர்த்துவார். நாற்புறமும் ஆண்கள் சுற்றி நின்று வேட்டியை வைத்து மறைத்துப் பிடித்துக் கொள்வார்கள்.சிறுமிகளுக்கு அங்கு வேலையில்லை.‌ எனவே வீட்டுக்குள்ளிருந்து தம்பியோ, மாமா மாமி மகனோ, விளையாட்டுத் தோழனோ ஆன அந்தப் பையனை நினைத்து ஒரே சிரிப்புத்தான் அவர்களுக்கு. சுற்றி நிற்பவர்களின் “தீன் முஹம்மதோ தீன்” என்ற கோஷமும் பையனின் “ம்மா”வென்ற அலறலும், “சரி சரி அவ்ளந்தானே” என்ற சுன்னத் செய்பவரின் ஆறுதல் குரலும் ஒரே நேரத்தில் எழுந்து அடங்கும்.

இதற்கிடையில் சில நேரம் பையனின் அலறலைக் கேட்டு அவனுடைய ம்மா மூர்ச்சித்து விடுவதுமுண்டு. அப்போது “மூஞ்சில தண்ணி தெளி, காத்து வரட்டும்… தள்ளி நில்லு… வீசாறி எடுத்து வீசு” என்று அந்த அமளியைத் தணிக்கும் உரத்த குரல் அங்கு நின்றிருக்கும் எங்க வாப்புமாவுடையது எனச் சொல்ல வேண்டாம்தானே? பையனை உள்ளே தூக்கி வருவதற்குள், ம்மா மூர்ச்சை தெளிந்து எழுந்து விடுவார். பிறகு பையனைப் பாய் விரித்துப் படுக்க வைத்து உத்தரத்திலிருந்து தொங்கும் கயிற்றில் கட்டப் பட்டிருக்கும் பருத்தி வேட்டியால் பையனின் வயிற்றிலிருந்து கால்வரை மூடி வைப்பார்கள், ஈ கொசு மொய்த்துவிடாதிருக்க. அப்புறம் அந்தப் பையனுக்கு புண்ணெல்லாம் ஆறும் வரை, ஏழு நாள்களுக்கு மூமாவோ வாப்புமாவோ அருகிலிருந்து விசிறி விடுவதென்ன, பாலென்ன, முட்டையென்ன, இறைச்சியென்ன, ஆட்டெலும்பு சூப்பென்ன என்று ஒரே புதுமாப்பிள்ளை கணக்காக ஜோரான கவனிப்புதான்.

எல்லாம் சரியாகி அவன் ஓடியாடி விளையாடத் தொடங்கி பழையபடி ம்மா சொல் கேளாமல் சேட்டையில் இறங்கினால், “ஒழுங்கு மரியாதயா சொல்பேச்சு கேளு இல்லன்னா இன்னொரு மட்டம் சுன்னத் உடச் சொல்லிருவேன்” என மிரட்டுவதும் நடக்கும். கொஞ்ச நாளைக்கு பயல் வெருவிப்போய் அடங்கியிருப்பான். அப்புறம் அவனுக்கு இது வெற்று மிரட்டல்தான் எனப் புரிபட்டு விடும். ஆனாலும் பயல்கள் வெகு நாட்களுக்கு வெட்கி ஓடுவது எந்தப் பெத்தாவாவது, “எல வாப்பா ஒனக்கு நாந்தான்ல கிட்ட இருந்து ஈ வெரட்டுனேன் புண்ணுலாம் நல்ல ஆறிட்டா” என்று எந்த இடத்தில் கண்டாலும் உரக்கக் கேட்டு மானத்தை வாங்கி விடக் கூடாதே என்றுதான்.

ஏரலுக்குப் பக்கத்து ஊரான ஆத்தூரில் நடந்த ஒரு கல்யாணத்துக்குப் போயிருந்தேன் வாப்புமாவுடன். வாப்புமாவுக்கு முழங்கால்களை மடக்கி உட்கார இயலாத நிலையிருந்ததால், எப்போதுமே தரையில் இரு கால்களையும் நீட்டித்தான் அமர்வார். அதனால் ஸஹன் சாப்பாட்டுக்கும் சேர்ந்து அமர்ந்து உண்ண முடியாமல், கல்யாண வீட்டின் அடுப்படியில் தனியாக இருந்து உண்டு கொள்வார். அன்றும் அப்படியே என்னை ஊரிலிருந்து வந்தவர்களோடு சேர்ந்து உண்ண அனுப்பிவிட்டு, அவர் இருந்து கொண்டார். நான் சாப்பிடாமல், கூட வந்திருந்த தோழிகளோடு கல்யாண வீட்டின் பந்தலுக்கு அந்தப்பக்கமும் இந்தப்பக்கமும் சுற்றிவிட்டு வாப்புமாவைத் தேடி அடுப்படிக்குச் சென்றேன். அங்கிருந்து அப்போதுதான் உண்ணத் தொடங்கியிருந்தவர், என்னைக் கண்டதும் ஒரு வாய்ச் சோற்றைக் கையில் எடுத்து வாய்க்குக் கொண்டு போனவாறே, “சோறு உண்டியா தங்கம்?” என்றார் என்னுடைய ஆமாம் என்ற பதிலை எதிர்பார்த்தவராக. நான் சிரித்துக்கொண்டே, “இல்ல வாப்புமா இன்னா போவப்போறேன்”, என்றேன் மிகச் சாதாரணமாக. அதை எதிர்பார்த்திருக்கவில்லை அவர்.

“எங்கொலையே! நீ இன்னுமா உண்ணல…” என்று கையில் அள்ளிய சோற்றை அப்படியே தட்டில் போட்டு விட்டு அதே கையை நெஞ்சில் வைத்தபடிப் பதறிய எங்க வாப்புமாவின் தோற்றம்… சோற்றுக்கை பதிந்த அந்த வெள்ளைச் சேலை! வாப்பா வைத்திருந்த புகைப்படத்திலும் அதே வெள்ளைச்சீலையைத்தான் உடுத்தி அமர்ந்திருந்தார்கள் எங்க மெய்ம்பாத்து வாப்புமா.

படைப்பாளர்

ஜமீலா

54 வயதாகும் ஜமீலா, தூத்துக்குடி மாவட்டம் ஏரலைச் சேர்ந்தவர். சுற்றி நடக்கும் வாழ்வைக் கவனிப்பதில் ஆர்வம் கொண்டவர். கவனித்தவற்றையும் மனதில் படிந்தவற்றையும் அவ்வப்போது எழுதியும் பார்ப்பவர். ஹீனா பாத்திமாவின் முக்கிய கட்டுரை ஒன்றை அருஞ்சொல் இணைய இதழுக்காக மொழிபெயர்ப்பு செய்துள்ளார். தீக்கதிர் இதழிலும் இவருடைய மொழிபெயர்ப்பு கட்டுரைகள் சில வெளியாகியுள்ளன.