“…எனது மனைவி எனக்கு எல்லா விதங்களிலும் உறுதுணையாக இருக்கிறார். எனக்கு உடல் நிலை சரியில்லாத போதோ, அல்லது ஆபிசில் மீட்டிங் முடிந்து லேட்டாக வரும் போதோ எனக்குப் பிடித்ததைச் சமைத்து வைப்பது மட்டுமல்ல, அன்றாட வீட்டு வேலைகளிலும் முடிந்த வரை உதவி செய்கிறார். எனது மாமியார், மாமனாரும் என்னைச் சொந்த மகன்போல் பாசம் காட்டிப் பார்த்துக்கொள்வதால்தான் என்னால் நிம்மதியாக வேலையில் கவனம் செலுத்த முடிகிறது. எனது மேலாளருக்கும் சக பணியாளர்களுக்கும் எப்போதும் அன்பும் நன்றியும்!”

வருணின் அலுவலகத்தில் அவனது பத்தாண்டுகள் நிறைவு விழாவைக் கொண்டாடிக் கொண்டிருந்தார்கள். அவனுடன் சேர்த்து இன்னும் நான்கு பேருக்கு விழா. அனைவரும் பாராட்டிப் பேசி விருதளித்த பின் தனது நன்றியுரையில்தான் குடும்பத்தை ஏகத்துக்கும் புகழ்ந்து கொண்டிருந்தான் வருண்.

நிலா, வருணின் மாமனார், மாமியார், குழந்தைகள் எல்லாருமே விழாவுக்கு அழைக்கப்பட்டிருந்தனர். வருணைப் பாராட்டி அவனது சக பணியாளர்கள் பேசும்போது நிலாவுக்குப் பெருமையாகவே இருந்தது,. மேடையில் இருந்த வருணைப் பார்த்துக் கண்ணடித்தாள். வருண் பரவச நிலைக்கே சென்றுவிட்டான். வெகு நாட்களுக்குப் பிறகு தான் பட்ட இன்னல்களுக்கெல்லாம் அங்கீகாரம் கிடைத்ததுபோல் இருந்தது. நல்லவேளை எந்த இக்கட்டான சூழலிலும் வேலையை விடவில்லை என்று தன்னை நினைத்து அவனுக்கே பெருமிதமாக இருந்தது.

விழா முடிந்து டின்னரும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிலாவையும் மாமனார், மாமியாரையும் தன் நண்பர்கள் எல்லாருக்கும் அறிமுகம் செய்து வைத்தான். நண்பர்கள் வருணை வானளாவப் புகழ்ந்தனர். அவன் வேலையில் திறமையானவன் மட்டுமல்ல எவ்வளவு ஜாலி பேர்வழியாக அலுவலகத்தில் இருக்கிறான் என்பதை அவர்கள் பேச்சு காட்டிக் கொடுத்தது.

நிலா தன் வழக்கப்படி அனைவரிடமும் இன்முகத்துடன் பேசி வசீகரித்தாள். மாமனாரும் மாமியாரும் ஒப்புக்குச் சிரித்தனர். பின்பு ஓர் ஓரமாகச் சென்று அமர்ந்துகொண்டு கடிகாரத்தைப் பார்க்கத் தொடங்கினர்.

நிலா வருணின் காதில் கிசுகிசுத்தாள். “ரொம்ப நேரம் அரட்டையடிக்காதே, சீக்கிரம் கிளம்பணும். அப்பாவுக்கு இந்தச் சத்தம் தலைவலிக்குதாம். புரிஞ்சிக்கோ” என்று கடுமையாகவே சொல்லி முடித்தாள்.

வருணுக்குப் புரிந்துவிட்டது. The party is over. பேருக்குக் கொறித்துவிட்டு, ஓரிரு நண்பர்களிடம் மட்டும் சொல்லிவிட்டுக் கிளம்பலாம் என்றான்.

“என்ன வருண்! அதுக்குள்ள கிளம்பற? இனிமேதானே டான்ஸ் ப்ரோக்ரேம் இருக்கு?”

“இல்ல சுரேஷ், போகணும்!” சொல்வதற்குக் காரணம்கூடக் கிடைக்கவில்லை வருணுக்கு.

விழாவுக்கு அழைப்பு வந்த போது மாமனாரும் மாமியாரும் உடன் வருவதாகச் சொன்னபோது, உண்மையாகவே மனம் குளிர்ந்தான் வருண். தனக்கும் தனது திறமைக்கும் குடும்பத்திலும் அங்கீகாரம் கிடைப்பது ஓர் ஆணுக்கு எவ்வளவு பெரிய மகிழ்ச்சி. ஆகவே அவர்கள் இங்கே வந்ததில் அவனுக்குப் பெருமைதான். ஆனால், ஏதோ கப்பல் கவிழ்ந்ததுபோல் ஏன் முகத்தைத் தூக்கி வைத்திருக்கிறார்கள் என்றுதான் அவனுக்குப் புரியவே இல்லை. காரில் திரும்பும்போது மயான அமைதி. விழாவைப் பற்றி அத்தை, மாமா ஒன்றுமே சொல்லவில்லையே? எதுவும் பிடிக்கவில்லையா அவர்களுக்கு?

வருணின் மனவோட்டத்தை அறிந்த நிலாவின் அப்பா, சடக்கென்று, ”வீட்ல மாவு இருக்காப்பா?” என்றார்.

ஒரு கணம் ஒன்றும் புரியவில்லை வருணுக்கு. இன்னும் விழா நினைவுகளில் ஜொலித்துக் கொண்டிருந்தவன் திடுதிப்பென்று தோசை மாவுக்குள் குதிக்க முடியாமல் திணறினான். “ஆங்! இருக்…இருக்கு மாமா. ஏன் மாமா, டின்னர்ல சாப்டலியா?”

”ஹும்! எங்கப்பா சாப்ட்டாரா இல்லியான்னுகூடக் கவனிக்கலைல்ல நீ? ஹும். நீங்க ஒரேயடியா மிதந்துக்கிட்டு இல்ல சார் இருந்தீங்க!” என்றாள் நிலா சிரித்துக்கொண்டே. அவள் விளையாடுகிறாளா நிஜமாகவே சொல்கிறாளா என்று சில நேரம் வருணால் கண்டுபிடிக்கவே முடியாது. அவனுக்கு நிலாவின் எல்லா விளையாட்டுப் பேச்சுகளும் பிடிக்கவும் பிடிக்காது. சொன்னாலும் மாற மாட்டாள்.

“ஐயோ நான் அப்படிச் சொல்லல. நாம எல்லாரும் ஒண்ணாதானே டின்னருக்குப் போனோம். மாமாக்கு நான்தான் எல்லாம் ப்ளேட்ல வெச்சுக் குடுத்தேன்.”

“ஹும்! ஒண்ணுமே நல்லால்ல. ஒரே மசாலா. அப்டியே வெச்சிட்டேன்.” முகத்தைச் சுளித்தார் மாமா.

“அடடா” வருணுக்கு உண்மையிலேயே தர்மசங்கடமாக இருந்தது. “சரிங்க மாமா வீட்டுக்குப் போய் தோசை சுட்டுத்தரேன்.”

மீண்டும் மயான அமைதி.

வருணுக்கோ மனதில் இன்னும் உற்சாகம் கொப்புளித்தபடி இருந்தது. கலகலப்பான சூழலில் இருந்து திடீரென்று மாறிய இந்த அமைதிச் சூழலை அவனால் தாங்கவே முடியவில்லை.

சரி, நாமே பேச்சை ஆரம்பிப்போம் என்று தொடங்கினான்.

“ம்ம்” என்றார்களே தவிர யாரும் வருணின் பேச்சைக் கவனிக்கவும் இல்லை, அதில் பெரிதாக ஆர்வம் காட்டவுமில்லை.

பிறகு சம்பந்தமே இல்லாமல் நிலாவின் அண்ணன் பள்ளியில் படிக்கும் போது எல்லாக் கோலப் போட்டிகளிலும் பரிசு வென்று வருவதை நினைவூட்டிப் பேச்சை எடுத்தார் மாமா. நிலாவும் அப்பாவுடன் சேர்ந்து கொண்டு அண்ணன் போட்ட கோலங்களை நினைவு வைத்துப் பாராட்டத் தொடங்கினாள்.

நிலாவின் அம்மாவுக்குக் கொஞ்சம் வருணைப் பார்த்துப் பாவமாக இருந்தது

“வருண், உனக்குத் தெரியுமாப்பா?” என்று அவனையும் வலுக்கட்டாயமாகப் பேச்சில் இழுத்தார்.

தன் மனதில் இருந்த எதையும் பேச முடியாமல், கேட்க விரும்பாமல் கதவுகளை இழுத்து அடைத்துக் கொண்ட அவர்களின் மனதை நன்கு புரிந்துகொண்டான் வருண். அடக்கமான மருமகனாக, பொய்யானதொரு சிரிப்பை முகத்தில் ஒட்ட வைத்துக்கொண்டு, பேச்சில் கலந்துகொள்ளத் தொடங்கினான். சொல்ல முடியாத ஒரு வெறுப்பும் கசப்பும் மனதில் படியத் தொடங்கியது.

படைப்பாளர்:

ஜெ.தீபலட்சுமி

பெண்ணிய செயற்பாட்டாளரும் எழுத்தாளருமான ஜெ.தீபலட்சுமி தொடர்ச்சியாக பெண்ணுரிமைக் குரலை எழுப்பி வருபவர். ‘இப்போதும் வசந்தி பேக்கரியில் பெண்கள் காணப்படுவதில்லை’ என்ற நூலை எழுதி இருக்கிறார். ஊடகங்களில் இவர் எழுதிய பெண்ணியக் கட்டுரைகள், ’குத்தமா சொல்லல, குணமாதான் சொல்றோம்’ என்கிற நூலாக ஹெர்ஸ்டோரீஸ் பதிப்பகத்தில் வெளிவந்திருக்கிறது. ஆங்கிலம், தமிழ் என இரு மொழிகளிலும் சரளமாக எழுதியும், பேசியும் வருகிறார். எழுத்தாளர் ஜெயகாந்தனின் சிறுகதைகள் சிலவற்றைத் தொகுத்து ‘The Heroine and other stories’ என்ற நூலாக மொழிபெயர்த்திருக்கிறார்.