உலகில் சமீப காலமாக மரண தண்டனை பற்றிய மறுபரிசீலனை நடந்து வருகிறது. பல நாடுகளில் மரண தண்டனை மனித உரிமைக்கு எதிரானது என்று விலக்கப்பட்டுள்ளது. மனிதனால் உருவாக்க முடியாத உயிரை எடுக்கக்கூடிய உரிமை அவனுக்கு இல்லை என்ற வாதமும் ஏற்புடையது. மனிதன் செய்த குற்றத்தின் தீவிரத் தன்மையை எண்ணும் போது கொலைத் தண்டனை சரியானது என்ற முடிவுக்கு வந்துவிடலாம். ஆனால் எங்கேயாவது தவறுதலாகச் சாட்சிகள் நிரபராதிக்கு எதிராகத் திரும்பும் வேளையில் மரண தண்டனை கொடுத்துத் தீர்ப்பு வழங்கிவிட்டால் அதற்கான பிராயசித்தம் உண்டா?
அண்ணல் மகாத்மா காந்தியடிகள் நூறு குற்றவாளிகள் தண்டிக்கப்படா விட்டாலும் ஒரு நிரபராதியும் தண்டிக்கப்பட்டுவிடக்கூடாது என்று கண்டிப்பாகச் சொன்னார். ஒருவேளை கொலைத் தண்டனை விதிக்கப்பட்டுத் தண்டனை நிறைவேற்றிய பின் கொல்லப்பட்டவர் நிரபராதி என்று தெரியவந்தால் என்ன நடக்கும் என்பதால் மரண தண்டனையே வேண்டாம் என்கின்றனர்.
முன்பு வரலாற்றில் நடந்த மிகப் பெரிய குற்றத்திற்காக நீதி கேட்டு வெகுண்டெழுந்த பெண்ணின் கண்ணீரை எப்படித் தீர்க்க முடியும். அவள் கோபக் கணலுக்கு இரையாகி விட்டது மதுரை மாநகரம். தொண்டில் சிறந்தவன் பரதனா – இலக்குவனா, நன்றியுணர்ச்சியில் சிறந்தவன் கர்ணனா – கும்பகர்ணனா, வாலி மீது மறைந்திருந்து அம்பு எய்திய இராமன் செயல் சரியானதா – பிழையானதா, கற்பில் சிறந்தவள் கண்ணகியா – மாதவியா என்ற வரிசையில் தன் கணவன் ஒற்றை உயிருக்காக ஒட்டுமொத்த மதுரை மாநகரத்தையே தீயில் இட்டு எரித்தது நியாயமா – அநியாயமா என்ற வாதமும் நடந்து வருகிறது.
கண்ணகி மதுரையை எரித்தது சரியான தீர்ப்பு என்றால் தான் சொன்ன தவறான நீதிக்காக உடனே உயிரைவிட்டு வளைந்த செங்கோலை நிமிர்த்திய செயல் பொருளிழந்து விடும். மனத்தளவில் மாசற்றவனாக இருப்பது அறம் என்று வலியுறுத்தினார் வள்ளுவர். அந்த வகையில் மனம் அறிந்து, வேண்டுமென்றே தவறான தீர்ப்பு சொல்லிவிடவில்லை பாண்டியன். உளவியல் ரீதியாக ஒருவன் தான் செய்த குற்றத்திற்காக வருந்தி மன்னிப்பு கேட்கும் போது அவன் மன்னிக்கப் படுகிறான்.
ஒருவேளை பாண்டியன் நெடுஞ்செழியன் நீதியை நிலைநாட்ட உயிரைத் துறந்த பின்னும் அவன் மன்னிக்கப்படவில்லை என்றால் மதுரையில் பாண்டி கோயில் என்ற ஒன்று தோன்றியிருக்குமா? செய்த குற்றத்தை எண்ணி அதற்குப் பொறுப்பேற்று உயிரைவிட்டவுடன் அவன் தெய்வமாக்கப்பட்டான். இறுதியில் கண்ணகியும் பாண்டியனைத் தன் தந்தை என்றே வஞ்சிக் காண்டத்தில் கூறுகிறாள். ஆனால் எரிந்து போன மதுரைக்கு என்ன பதில்?
கண்ணகியும் கோவலனும் மதுரை நகரை அடைந்தபின் அங்கே மாதரி வீட்டில் இரவு தங்கியிருந்தனர். காலையில் கண்ணகி சமைத்த உணவை உண்ட அளவில் சிலம்பை விற்க கோவலன் புறப்படுகிறான். அன்று மாலையே கள்வன் என்ற பழி சுமத்தப்பட்டுக் கொலை செய்யப்படுகிறான். செய்தி உடனே கண்ணகிக்குத் தெரியாததால் கணவன் வராமல் இருப்பதற்கு என்ன காரணம் என்று குழப்பத்துடன் அன்றைய நாளின் இரவைக் கழிக்கிறாள். மறுநாள் கணவன் கொலையுண்டான் என்ற செய்தி கேட்டு,
“காய்கதிர்ச் செல்வனே கள்வனோ என் கணவன்”
என்று கதிரவனை நோக்கித் தன் கணவன் கள்வனா என்று வினவுகிறாள்.
கண்ணகி கோவலனின் பிணத்தைப் பார்க்க மறுநாள் மாலையாகி விடுகிறது. வழியெல்லாம் அழுது புலம்பியவாறு சென்ற அவள் கணவனின் உயிரற்ற உடலைப் பார்த்து அரற்றுகிறாள். வீண் பழி சுமத்தப்பட்டுக் கொல்லப்பட்ட தன் கணவனுக்கான நீதி கேட்டுப் போராடினாள் கண்ணகி. அங்கே தவறு இழைக்கக் காரணமாக இருந்தவர்களைத்தான் கண்ணகி எரித்துத் தண்டனை கொடுத்திருக்கிறாள். திருந்திய உள்ளம் படைத்தவரை நெருப்பு ஒன்றும் செய்யவில்லை என்பது இலக்கியம் காட்டும் செய்தி.
சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த மதுரை எரியூட்டப்படும் என்ற செய்தி பரவலாகக் காணப்படுகிறது. கண்ணகிக்குத் தோன்றிய தீய கனவின் மூலமும், மதுரை மாநகருக்குக் கிடைத்த சாபம் வழியும் மதுரை அழியவிருக்கிறது என்று குறிப்பாக விளக்குகிறார் புலவர். ஆனால் எல்லா இடங்களிலும் தவறு நடக்கும் பட்சத்தில் தீயிட்டு எரிக்கலாம் என்று வழிவிடவில்லை இலக்கியம். அதற்கு முட்டுக்கட்டையான செய்திகளையும் பேசுகிறது.
மதுரை நகரம் பெற்ற சாபத்தால் அதனை எரியூட்டுவது சாத்தியப்பட்டது என்றும், நெருப்புத் தெய்வம் யாரையெல்லாம் அழிக்க வேண்டும் என்று கண்ணகியின் ஆணைக்குக் கட்டுப்பட்டு நடந்தது என்றும், கண்ணகி தீப்பந்தத்தை வைத்து மதுரையை எரித்ததாகச் சொல்லாமல் அவள் தன் மார்பைத் தூக்கி எறிந்து எரியூட்டனாள் என்றும் கூறுவதன் மூலம் நாட்டில் வன்மம் தொடராமல் இருக்க முற்றுப்புள்ளி வைத்தார்.
கட்டுரையாளர்:
முனைவர் மஞ்சுளா
சென்னை சமூகப்பணிக் கல்லூரியில் தமிழ்த்துறைப் பேராசிரியராகப் பணியாற்றி வரும் முனைவர் சி.ஆர்.மஞ்சுளா, தமிழ்ச்சூழலில் குறிப்பிடத்தகுந்த எழுத்தாளராகவும், பேச்சாளராகவுமறியப்பட்டவர். பல்வேறு இதழ்களில் வெளியான இவரது கட்டுரைகளும், கவிதைகளும் தொகுப்புகளாக வெளிவந்து நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.
சென்னை சமூகப் பணிக் கல்லூரியில் ‘முத்தமிழ்ப் பேரவை’ என்ற தமிழ் மன்றத்தை நிறுவி, அதன் வழி ‘தகளி’ என்ற இதழை வெளியிட்டு மாணவர்களிடையே தமிழார்வத்தை வளர்க்கும் இவர், ‘இலக்கியச் சாரல்’ என்ற பதிவு பெற்ற இளைஞர் அமைப்பின் நிர்வாகியாகப் பணியாற்றி இளைஞர்களை நல்வழிப்படுத்திவருகிறார்.