அன்புள்ள அண்ணா,

இதை எழுதுவதற்கே தயக்கமாக இருக்கிறது. எனக்கு 29 வயதாகிறது. படித்து முடித்து விட்டுத் திருமணத்துக்காகக் காத்துக்கொண்டிருக்கிறேன். பல பெண்கள் என்னைப் பிடிக்கவில்லை என்று சொல்லிவிட்டுப் போன நிலையில், போன மாதம்தான் தெய்வாதீனமாகத் திருமணம் நிச்சயமாகியுள்ளது. பெண் நல்ல வேலையில் கை நிறைய சம்பாதிக்கிறார். என்னை நல்லபடியாக வைத்துக் காப்பாற்றுவார் என்று நம்பிக்கை உள்ளது.

ஆனால், ஒரு சிக்கல். சில காலத்துக்கு முன்பு தற்காலிகமாக ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைக்குப் போனேன். அங்கேகூட வேலை பார்த்த பெண் ஒருவருடன் எனக்குத் தொடர்பு ஏற்பட்டது. தனக்குத் திருமணமானதையே மறைத்து எனக்குக் காதல் வலைவீசி என்னை ஏமாற்றி விட்டார். காதல் கண்ணை மறைத்து அவருடன் காரில் செல்வது, முத்தம் கொடுப்பது என்று என் கற்பையே தொலைத்துவிட்டேன். என்னை நிச்சயம் திருமணம் செய்துகொள்வார் என்று நம்பி இருந்தபோதுதான் நண்பர்கள் வாயிலாக அவர் ஏற்கெனவே திருமணமாகி இரு குழந்தைகளும் உள்ளவர் என்பதே தெரிந்தது. இந்த விஷயம் தெரிந்தவுடன் நான் அவரது தொடர்பைத் துண்டித்துவிட்டேன். இருந்தாலும் உள்ளே ஓர் அச்சமும் குற்றவுணர்வும் வாட்டிக்கொண்டே இருக்கிறது. தப்பு செய்ததை மறைத்துத் திருமணம் செய்ய மனம் இடங்கொடுக்கவில்லை. என் பெற்றோருக்குக்கூட இது தெரியாது. எனது வருங்கால மனைவியிடம் இது பற்றிச் சொல்லிவிடலாமா வேண்டாமா என்று குழம்புகிறேன்.

அன்புடன்

பெயர் வெளியிட விரும்பாத வாசகன்

அன்புள்ள …..

உங்கள் திருமணச் செய்திக்கு வாழ்த்து அளிக்கத் தயங்கும் வகையில் ஓர் இக்கட்டில் மாட்டியுள்ளீர்கள். வெண்ணெய் திரண்டு வரும் நேரம் தாழி உடையும் அபாயத்தில் உதவிக்குக் கரம் நீட்டி இருக்கிறீர்கள். ஆண்கள் அடக்க ஒடுக்கமாக, ஒழுக்கமாக இல்லாவிட்டால் இப்படித்தான் துன்பத்தில் துவள நேரும். இந்த விஷயம் வெளியே தெரிந்தால் உங்கள் பெற்றோருக்கு எத்தனை தலை குனிவு என்பதைச் சிந்தித்துப் பார்த்தீர்களா?

உங்கள் பிரச்னையைப் பல நிபுணர்களிடம் விவாதித்தேன். அனைவருமே ஒரு மனதாகச் சொல்வது இதுதான். உங்களுக்கு வரப்போகும் மனைவியிடம் இது குறித்து எதுவும் சொல்ல வேண்டாம். பெண்கள் ஆயிரம் ஆண்களிடம் பழகுவார்கள், இஷ்டம் போல் இருப்பார்கள். ஆனால், தனக்கு வரப்போகும் ஆண்மகன் அப்பழுக்கற்றுப் பத்தரை மாற்றுத் தங்கமாக இருக்க வேண்டுமென்று விரும்புவார்கள். உங்களின் சின்ன ஒழுக்க மீறலைக்கூட ஏற்றுக்கொள்ளப் பெண்களின் ஈகோ இடம் கொடுக்காது.

உங்கள் வருங்கால மனைவிக்கு ஏராளமான காதல்களும் உடல்ரீதியான தொடர்புகளும் இருந்திருக்கலாம். பெண்கள் அப்படித்தான் இருப்பார்கள்.

அவர் முதலிரவன்றேகூடத் தனது பழைய ‘உறவுகள்’ குறித்து உங்களிடம் வெளிப்படையாகப் பகிரலாம். ஆனால், எக்காரணம் கொண்டும், எந்தக் காலத்திலும்கூட உங்கள் கடந்த காலச் ‘சறுக்கல்’களைச் சொல்லிவிட வேண்டாம். என்ன செய்வது ஆண்களின் தலைவிதி அதுதான்.

நீங்கள் ‘வழிதவறி’ நடந்தாலும் உங்கள் பெற்றோர் செய்த புண்ணியம்தான் உங்களுக்கு ‘நல்ல வாழ்வு’ கிடைத்திருக்கிறது. உங்கள் தலையில் நீங்களே மண்ணள்ளிப் போட்டுக் கொள்ளாதீர்கள். ஆண்டவன் மீது பாரத்தைப் போட்டுவிட்டு இதனை ஒரு கெட்ட கனவாக எண்ணி மறந்து விடுங்கள். எதிர்காலத்தில் இதுபோல் நடக்காமல் கற்புடன் நடந்துகொள்ளுங்கள்.

பி.கு. கருப்பண்ணசாமி தெய்வத்துக்கு ஒரு மண்டல காலம் குவார்ட்டரும் கருவாடும் நைவேத்தியம் செய்து, 1008 முறை அங்கப்பிரதட்சணமும் செய்தால் திருமணத்துக்கு முன்பு மனைவிக்குச் செய்த துரோகத்தின் பாவம் கழியும்.


அன்புள்ள அண்ணா,

எனக்குத் திருமணமாகி ஆறு மாதங்களாகின்றன. என் மனைவி நிறைய படித்தவர், நல்ல வேலையில் இருக்கிறார். அவர் வேலையில் அடிக்கடி பணிமாற்றம் நடக்கும் என்பதால் நான் வேலையை விட்டுவிட்டு வீட்டில்தான் இருக்கிறேன். என் மீது மாமியார், மாமனாரும் அன்பைப் பொழிவதால் எனக்குப் பெரிதாக எந்தக் குறையும் இதுவரை இல்லை.

ஆனால், அண்மையில்தான் என் மனைவிக்குப் பல்வேறு கெட்ட பழக்கங்கள் இருப்பது தெரியவந்தது. அவரது சட்டை பாக்கெட்டில் சிகரெட் லைட்டர் இருந்தது. குடிப்பழக்கமும் இருப்பதாக ஐயமுறுகிறேன். வெள்ளிக்கிழமையானால் என்னைச் சாப்பிட்டுத் தூங்கச் சொல்லிவிட்டு, லேட்டாகத்தான் வருகிறார்.

போன மாதம் நான் என் அப்பா வீட்டுக்குச் சென்றிருந்த போது என் மாமியாரும் மனைவியும் சேர்ந்தே மொட்டை மாடியில் குடித்ததாகப் பக்கத்து வீட்டு அங்கிள் சொன்னார். நான் அவரிடம் சண்டை போட்டேன், என் மனைவியைப் பற்றிப் புறணி பேச வேண்டாம் என்று.

இதெல்லாம்கூடப் பரவாயில்லை. எப்படிச் சொல்வதென்றே தெரியவில்லை. அலுவலகத்தில் புதிதாக ஒரு செக்ரட்டரி சேர்ந்திருக்கிறான். அலுவலகத்தில் முன்பு எப்போது பார்ட்டி நடந்தாலும் என்னையும் அழைத்துச் செல்வார். கடந்த இரண்டு பார்ட்டிகளுக்கு, ‘நீ கஷ்டப்பட வேண்டாம், குமார் பார்த்துப்பான்’ என்று அவனுடனே சென்றுவிடுகிறார்.

பார்ட்டி முடிந்ததும் அவனை காரில் வீடுவரை கொண்டு விடுகிறார். சில நாள் காலையிலேயே லேப்டாப்புடன் அவன் வீட்டுக்கு வந்துவிடுகிறான். அவனுக்கு நான் காபி டிபன் கொடுக்க வேண்டும். பின்பு இருவரும் ஜாகிங் செல்வது பழக்கமாகிவிட்டது. கேட்டால் அலுவலகத்தின் சில முக்கியமான விஷயங்களைப் பேச அந்த நேரம்தான் சரியாக இருக்கிறது என்கிறார்.

சே! நாம்தான் ரொம்பச் சின்னத்தனமாக யோசிக்கிறோம். இப்படியெல்லாம் சந்தேகப்படுவது தவறு என்று என்னை நானே கடிந்துகொண்டாலும் மனவேதனை அதிகமாகவே உள்ளது. என் துன்பத்தைப் போக்க அட்வைஸ் ப்ளீஸ்!

கண்ணீருடன்

கார்த்திக்

அன்புள்ள கார்த்திக்,

உங்கள் ஹாபி என்ன? உங்களுக்கு நிறைய ஓய்வு நேரம் இருக்கிறதென்று கணிக்கிறேன், சரிதானே? வீட்டில் சும்மா இருக்கும் ஆண்களுக்கான பொதுப் பிரச்னைதான் உங்களுக்கும். செய்வதற்கு வேலை இல்லையென்றால் எதையாவது தேவையில்லாமல் மனதில் போட்டுக் குழப்பிக் கொண்டே இருப்பது.

நீங்கள் சொல்வதை வைத்துப் பார்த்தால் உங்கள் மனைவி வேலையில் மிகவும் திறமையானவரும் குடும்பத்துக்காகக் கடுமையாக உழைப்பவருமாகத்தான் தெரிகிறார். உங்களை வேலைக்குப் போக விடாமல் ராஜா மாதிரி பார்த்துக் கொள்வதற்காக நீங்கள் நன்றியுடன் இருக்க வேண்டும்.

பெரிய பதவியில் இருப்பவர்களுக்கு அழகான செக்ரட்டரி இருப்பதும் ஸ்ட்ரெஸ் குறைவதற்காக அவர்களுடன் நேரம் செலவிடுவதும் சாதாரணமான விஷயம். கட்டுப்பெட்டித்தனமாக இதையெல்லாம் பெரிது படுத்தாதீர்கள்.

முடிந்தால் அந்த செக்ரட்டரியைப்போல் அழகாக உங்களை ஆக்கிக்கொள்ளுங்கள். பார்லருக்குப் போய் முடி, தாடி எல்லாம் அழகாகத் திருத்திக்கொள்ளுங்கள். மனைவி வீட்டுக்கு வரும்போது அழுக்கு லுங்கியும் வியர்வை வடிந்த முகமுமாக இல்லாமல் பளிச்சென்று உடையணிந்து டியோடரண்ட் மணத்துடன் திகழவும்.

சிகரெட் பிடிக்கும் பழக்கத்தை எல்லாம் மெதுவாக அன்பாகச் சொல்லித் திருத்துவது உங்கள் கையில்தான் உள்ளது. மாமியார் விஷயத்தில் நீங்கள் நேரடியாகத் தலையிடுவது மரியாதை இல்லை. அவர்கள் வீட்டுக்கு நீங்கள் வாழப் போயிருக்கிறீர்கள். மனைவியைக் கையில் போட்டுக் கொண்டு அங்கே ஆதிக்கம் செலுத்த நினைப்பதோ குடும்பத்தைப் பிரிக்க நினைப்பதோ உங்கள் வாழ்வுக்கே கேடாக முடியும். எச்சரிக்கை தம்பி.

(ஆண்கள் நலம் தொடரும்)


படைப்பாளர்:

ஜெ.தீபலட்சுமி

பெண்ணிய செயற்பாட்டாளரும் எழுத்தாளருமான ஜெ.தீபலட்சுமி தொடர்ச்சியாக பெண்ணுரிமைக் குரலை எழுப்பி வருபவர். ‘இப்போதும் வசந்தி பேக்கரியில் பெண்கள் காணப்படுவதில்லை’ என்ற நூலை எழுதி இருக்கிறார். ஊடகங்களில் இவர் எழுதிய பெண்ணியக் கட்டுரைகள், ’குத்தமா சொல்லல, குணமாதான் சொல்றோம்’ என்கிற நூலாக ஹெர்ஸ்டோரீஸ் பதிப்பகத்தில் வெளிவந்திருக்கிறது. ஆங்கிலம், தமிழ் என இரு மொழிகளிலும் சரளமாக எழுதியும், பேசியும் வருகிறார். எழுத்தாளர் ஜெயகாந்தனின் சிறுகதைகள் சிலவற்றைத் தொகுத்து ‘The Heroine and other stories’ என்ற நூலாக மொழிபெயர்த்திருக்கிறார்.