சிபி வீட்டுக்குள் நுழையும் முன் போன் அடித்தது. ஆதிதான்.
“சொல்லு ஆதி.”
“ஹேய்! வீட்டுக்கு வந்தாச்சா? அரை மணி நேரத்துல ரெடியா இரு. ‘அலை தாவுதே’ படத்துக்கு ரெண்டு டிக்கெட் புக் பண்ணிருக்கேன். வந்து கூட்டிட்டுப் போறேன். பை” என்று பதிலை எதிர்பார்க்காமல் தொடர்பைத் துண்டித்துவிட்டாள்.
சிபிக்கு அயர்ச்சியாக இருந்தது. அலுவலகத்தில் வேலை முடிந்து அரக்கப் பரக்க ஓடிவந்திருந்தான்.
வீட்டு வேலையில் உதவிக்கு வரும் சேஷாத்ரி ஆவணி அவிட்டம், பூணூல் மாற்ற வேண்டுமென்று லீவு போட்டிருந்தான். அதனால் காலையில் சமைத்த பாத்திரங்கள் வேறு சிங்கில் அப்படியே கிடக்கின்றன. மாமாவும் அத்தையும் வீட்டில்தான் இருக்கிறார்கள் என்றாலும் மூட்டு வலி வந்தது முதல் மாமா எதுவும் செய்வதில்லை. குழந்தையைப் பார்த்துக்கொள்வதற்கே அலுத்துக்கொள்கிறார்.
வீக்கெண்ட் வீட்டில் விருந்தினர்கள் வந்திருந்தனர். மாவு அரைக்க நேரமில்லை என்று காலையில்தான் சிபி ஊறப் போட்டிருந்தான். அதை வேறு அரைத்து எடுக்க வேண்டும்.
தலை விண்விண்ணென்று வலித்தது. இன்று வேண்டாம், இன்னொரு நாள் படத்துக்குப் போகலாம் என்று சொல்லலாமா என்று யோசித்தான். மனம் வரவில்லை. ஆதியே அத்திப் பூத்தாற் போலத்தான் இவனுடன் வெளியில் வர உற்சாகம் காட்டுவாள்; மற்றபடி தோழிகள்தாம் அவளது உலகம், ஊர் சுற்றல் எல்லாம் அவர்களுடன்தான் பெரும்பாலும்.
ஒரு வலிநிவாரணி மாத்திரையை விழுங்கிவிட்டு வேலையில் முனைந்தான் சிபி. வீட்டை ஒழுங்கு செய்து, காயப் போட்டிருந்த துணிகளை எடுத்து வந்து (வெளியில் போயிருக்கும் போது மழை பெய்தால் என்ன செய்வது) பாத்திரங்களைத் தேய்த்து முடித்து டீ போட்டுக்கொண்டிருக்கும் போது காலிங் பெல் அடித்தது. ஆதிதான்.
வியர்த்து வழிந்துகொண்டிருந்த சிபியைப் பார்த்ததும் கடுகடுப்பானாள்.
“இன்னும் கிளம்பலியா நீ? நான் போன்ல என்ன சொன்னேன்?”
“ஐயோ… ஆதி, சேஷாத்ரி லீவு இன்னிக்கு. வேலையெல்லாம்…
முடிக்க விடவில்லை.”
“இதெல்லாம் ஒரு விஷயமா? அப்புறம் பார்த்துக்கக் கூடாதா? எவ்ளோ ஆசையா வந்தேன். சரி சீக்கிரம் கிளம்பு!”
அப்படியே சோபாவில் சரிந்து காலணிகளைக் கழற்றி வீசினாள். ரிமோட்டை எடுத்துட் டிவிக்குள் நொடியில் கரைந்து போனாள்.
“இப்பத்தான் பெருக்கினேன் என்று முணுமுணுத்தபடி காலணிகளை எடுத்து அதன் ராக்கில் வைத்துவிட்டு, அவளுக்கு டீ தந்தான்.
ஒரு வாய் குடிக்கும் முன், “நீ குடிச்சியா சிபி?”என்று கேட்டாள்.
“இல்ல ஆதி.”
“வா, முதல்ல நிதானமா உட்கார்ந்து டீ குடி” என்று அவன் கையைப் பிடித்து இழுத்தாள் ஆதி. இதுதான், இந்த அன்புதான் ஆதியிடம் சிபிக்கு மிகவும் பிடித்தது.
“ஆதி, நான் ரெடி. வா போலாம்.” பதற்றத்துடன் இரண்டு மூன்று முறை கத்திய பிறகே டிவியிலிருந்து கண்ணை எடுத்தாள் ஆதி. பளிச்சென்று இருந்த ஆதி லேசாகத் தலையை ஒதுக்கிவிட்டு அப்படியே கிளம்பினாள். “பார்த்தியா, நான் சட்னு ரெடியாகிட்டேன்!”
சிபி சிரித்தான். மனைவியுடன் வெளியில் போகும் பெருமிதம் அவன் முகத்தில் அப்பட்டமாய்த் தெரிந்தது.
“அத்தை மாமா, போயிட்டு வரோம்.”
“ம்ம்… ”
“எல்லா சிவப்பும் உந்தன் கோபம்…”
நாயகனும் நாயகியும் குவிக்கப்பட்டிருக்கும் சிவப்பு மிளகாய்களினூடே ஆட்டம் போட்டுக்கொண்டிருந்தனர்.
சிபிக்கு எண்ணவோட்டம் எங்கோ போயிற்று.
“அடடா! குழம்பு மிளகாய்த் தூள் தீரப் போகிறதே… இந்த வாரம் வாங்கி அரைக்க வேண்டும்.”
நாயகனின் அழகு நெற்றியில் புரளும் கேசத்துடன் விளையாடிக் கொண்டிருந்தன நாயகியின் விரல்கள்.
முன் நெற்றியில் லேசாகப் பின் வாங்கத் தொடங்கி இருக்கும் தனது தலையை வருத்தத்துடன் தொட்டுப் பார்த்துக்கொண்டான் சிபி.
கல்லூரிக்குப் போகும் ஹீரோவைட் டீக்கடையில் சில பெண்கள் வம்புக்கு இழுத்து அசிங்கமாகப் பேசுகின்றனர். எங்கிருந்தோ பறந்து வந்த ஹீரோயின் ரவுடிப் பெண்களைப் பந்தாடுகிறார். சண்டை முடிந்ததும், ”ஏய், இங்கே வாடா… என்ன ட்ரஸ் இது?”
ஹீரோ குனிந்து பார்க்கிறான். ஷர்ட் பட்டன்கள் நெஞ்சு வரை திறந்து கிடக்கின்றன. அவசர அவசரமாகப் பட்டனைப் போடுகிறான்.
“இவ்ளோ செக்ஸியா இருந்துகிட்டு சட்டை பட்டனையும் ஒழுங்காகப் போடாம, பனியனும் போடாம இருந்தா பெண்கள் உசுப்பேறாம என்ன செய்வாங்க?” குறும்பாகக் கண்ணடித்தபடியே ஸ்டைலாகக் கூலிங்க்ளாஸை மாட்டிக்கொண்டு பைக்கில் பறந்தாள் ஹீரோயின்.
சுற்றி இருப்பவர்கள் எல்லாம் சிரிக்க, ஹீரோவுக்கு அவள் மீது காதல் பிறக்கிறது. கனவில் அவளுடன் ஆடிப் பாடத் தொடங்குகிறான்.
அக்கம்பக்கம் திரும்பி யாரும் பாக்கிறார்களா என்று பார்த்துக் கொண்டே குனிந்து தன் சட்டை பட்டன்களைச் சரி செய்து கொண்டான் சிபி.
ஆதி எந்தச் சலனமுமில்லாமல் திரையில் ஒன்றி இருந்தாள். அரங்கு முழுவதும் பெண்களே அதிகம் நிறைந்திருந்தனர். ஒன்றிரண்டு ஆண்கள் சிபியைப் போலப் பெண் துணையுடன் வந்திருந்தனர். சிபி அலுவலகம் தவிர, ஆதி இல்லாமல் எங்கும் வெளியில் செல்ல மாட்டான்.
ஆதியின் தோள் மீது சாய்ந்துகொண்டான். படத்திலிருந்து கவனத்தைத் திருப்பாமலே அவன் தலையைக் கோதினாள் ஆதி.
‘இவளுக்கு எந்தக் கவலையுமே இப்படி வராதா? நாம் மட்டும் ஏன் எப்போதும் எதையாவது நினைத்து மனம் புழுங்குகிறோம்? அதனால் தான் தன்னைக் கண்டாலே ஆதிக்கு எரிச்சலாக இருக்கிறது போலும்… யோகா பண்ண வேண்டும். மனதை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டும்.’ தீர்மானமாக முடிவெடுத்தான் சிபி.
“உனக்கு இன்னொரு சர்ப்ரைஸ் சிபி. வீட்டுக்குப் போய் ஒண்ணும் செய்ய வேண்டாம், டின்னர் முடிச்சிட்டுப் போயிடலாம்! ஹேப்பி தானே?”
சிபியின் உற்சாகச் சிரிப்பை எதிர்பார்த்துக் கேட்டாள் ஆதி.
மகிழ்ச்சியாக இருந்தாலும், “அத்தை, மாமாவுக்கு?” என்று இழுத்தான்.
ஆதி எரிச்சலடைந்தாள். “அதானே பார்த்தேன். அவங்ககிட்ட முன்னாடியே சொல்லலியா வெளிய போறோம், சாப்ட்டுதான் வருவோம்னு?”
“நீ படத்துக்குத் தானே போறோம்னு சொன்னே ஆதி?”
“எல்லாத்தையும் சொல்லணுமா உனக்கு? உனக்குன்னு ஒண்ணுமே புரியாதா? அப்புறம் நான் ரொமாண்டிக்கா இல்லன்னு குறை வேற பட்டுக்குவே…”
“கோச்சுக்காதே ஆதி. நான் போன் பண்ணிச் சொல்லிடறேன்.” மாமனாருக்கு போன் செய்தான் சிபி.
“மாமா…”
“ம்ம்… எப்ப வரீங்க வீட்டுக்கு? குழந்தை வேற உன்னைக் கேட்டு அழறா.”
“இல்ல மாமா, படம் முடிஞ்சுடுச்சு. வீட்டுக்கு வர லேட்டாயிடும். நானும் ஆதியும் வெளில சாப்டுட்டு வரோம். ஃப்ரிட்ஜ்ல கொஞ்சம் மாவு இருக்கு. தோசை சுட்டுக்கிறீங்களா?” என்று தயங்கித் தயங்கிக் கேட்டான் சிபி.
“……..”
“மாமா?”
”முதல்லயே சொல்றதில்ல…” எரிச்சலுடன் முணுமுணுத்தார் மாமா.
“சரி, தோசைக்குத் தொட்டுக்க என்ன இருக்கு?” குரலில் அப்பட்டமாக எரிச்சல் தொனித்தது. மகளுடன் ஜாலியாக சினிமாவுக்குப் போயிருக்கும் மருமகனிடம் பேச எந்த மாமாவுக்குத்தான் பிடிக்கும்? அதுவும் சிபி, அந்த வீட்டுக்கு வந்தது முதல் சுத்தமாகச் சமையலறை பக்கமே வருவதில்லை அவர்.
“காலைல அரைச்ச மிளகா சட்னி ஃப்ரிட்ஜ்ல இருக்கு மாமா… சாரி மாமா…”
டொக். பதில் பேசாமல் தொடர்பு துண்டிக்கப்பட்டது.
சஞ்சலத்துடன் போனை வைத்தான் சிபி. இருந்த கொஞ்ச நஞ்ச மகிழ்ச்சியும் வடிந்த மாதிரி இருந்தது. நிச்சயம் ஏதாவது பிரச்னை செய்வார். தங்கள் மகள்தான் காரணம் என்று சொன்னால் நம்பப் போவதில்லை. அதை மறைத்துவிட்டு மனைவியிடம் இன்முகம் காட்டினான் சிபி.
“வா ஆதி, சாப்டப் போலாம்.”
வீட்டுக்குள் நுழைந்த மறுகணம் பெட்ரூமுக்குள் நுழைந்து உடை மாற்றிப் படுக்கையில் வீழ்ந்தாள் ஆதி. ”அம்மா!” என்று குழந்தை அவள் கழுத்தைக் கட்டிக் கொண்டது. வாரி அணைத்துக் கொண்டு உறங்கிப் போனாள்.
தாய்மையின் அழகை ரசித்தபடி தன்னை மறந்து கொஞ்ச நேரம் நின்றிருந்தான் சிபி. பின்பு பெருமூச்சு விட்டபடி கிச்சனுக்குள் சென்று லைட்டைப் போட்டான். காலையில் ஊற வைத்திருந்த அரிசி, உளுந்து அப்படியே இருந்தது. இப்போது அரைக்கா விட்டால் ரொம்பவும் புளித்து விடும். மாலையில் டீ போட்டு மீதமிருந்த பாலைத் தயிருக்கு உறை ஊற்றி வைத்தான்.
சிங்கில் மீண்டும் பாத்திரங்கள் சேர்ந்திருந்தன. அப்படியே விட்டால் கரப்பான் விளையாடும். கிரைண்டரை ஓட விட்டுப் பாத்திரங்களைத் தேய்க்கலானான். பாத்திரம் தேய்க்கும் லிக்விட் தீரப் போகிறதா. இப்போது தானே புதிய பாட்டில் கொடுத்தேன். சேஷாத்ரி அநியாயத்துக்கு வீண் செலவு பண்ணுகிறான். சொல்லி வைக்க வேண்டும். அய்யோ நாளையாவது வருவானா?
மாத்திரையால் இத்தனை நேரம் ஒளிந்து கொண்டிருந்த தலைவலி மீண்டும் துணைக்கு வந்து அமர்ந்து கொண்டது.
(ஆண்கள் நலம் தொடரும்)
படைப்பாளர்:
ஜெ.தீபலட்சுமி
பெண்ணிய செயற்பாட்டாளரும் எழுத்தாளருமான ஜெ.தீபலட்சுமி தொடர்ச்சியாக பெண்ணுரிமைக் குரலை எழுப்பி வருபவர். ‘இப்போதும் வசந்தி பேக்கரியில் பெண்கள் காணப்படுவதில்லை’ என்ற நூலை எழுதி இருக்கிறார். ஊடகங்களில் பெண்ணியக் கட்டுரைகள் எழுதிவருகிறார். ஆங்கிலம், தமிழ் என இரு மொழிகளிலும் சரளமாக எழுதியும், பேசியும் வருகிறார். எழுத்தாளர் ஜெயகாந்தனின் சிறுகதைகள் சிலவற்றைத் தொகுத்து ‘The Heroine and other stories’ என்ற நூலாக மொழிபெயர்த்திருக்கிறார்.