ஓர் அறிமுகம்

வரலாறு என்பது எப்போதும் அதிகாரத்தில் இருப்பவர்களின் கரங்கள் மூலமே எழுதப்படுகிறது. அதனால்தான் பெண்களைப் பற்றிய வரலாறுகள் நம்மிடம் அதிகம் இல்லை.  

புத்தர், இயேசுவைப் போன்ற போதனையாளர்களாக பெண்கள் இல்லை. பிளாட்டோ, அரிஸ்டாட்டில் போன்ற தத்துவஞானிகளாகப் பெண்கள் இல்லை. மார்க்ஸ், ஏங்கெல்ஸ் போன்ற சிந்தனையாளர்களாகப்  பெண்கள் இல்லை. லெனின், சே குவேரா போன்ற புரட்சியாளர்களாகப் பெண்கள் இல்லை… ஆனாலும், சமூகக் கட்டுப்பாடுகளை உடைத்துக் கொண்டு ஏராளமான பெண்கள் இப்புவியில் மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கிறார்கள். அத்தகைய பெண்களின் சிந்தனையாலும் உழைப்பாலும் செயல்களாலும்தாம் இன்றைய பெண்கள் இத்தகைய நிலையை அடைந்திருக்கிறார்கள்.  

2500 ஆண்டுகளுக்கு முன்பே ஆண் வேடம் பூண்டு ஆட்சி செய்த எகிப்து ராணி ஹட்ஷப்சட், நான்காம் நூற்றாண்டில் வானியலாளராகவும் கணித மேதையாகவும் திகழ்ந்த பேரறிவு கொண்ட ஹைபேஷா, பெண்ணுரிமைக்காகப் போராடிய க்ளாரா ஜெட்கின் எனப் பல்வேறு காலகட்டங்களைச் சேர்ந்த பெண்களின் வாழ்க்கை பிரமிப்பூட்டக்கூடியது. இவர்களைப் பற்றிய இந்த அறிமுகம், நம்மை இன்னும் நிறைய வாசிக்க வைக்கும்!

கடந்த சில நூறு ஆண்டுகளில் பெண்கள் குறிப்பிடத்தக்க
வகையில் என்ன செய்திருக்கிறார்கள்? இந்த ஆவலில் உருவானதுதான் இந்தத் தேடல்.

எதிர்பார்த்ததைவிட அதிகமாகவே பல துறைகளிலும் பெண்கள் சிறப்பாகப் பங்காற்றி இருக்கிறார்கள். இந்தப் பெண்கள் பல்துறை வித்தகர்களாக இருக்கிறார்கள். விஞ்ஞானியாக இருந்தாலும் சரி, நடிகையாக இருந்தாலும் சரி, ஓட்டப்பந்தய வீராங்கனையாக இருந்தாலும்
சரி… அவர்களிடம் சமூக முன்னேற்றத்துக்கான நோக்கமும் செயல்பாடுகளும் இருந்தன. சாதாரணமான பெண்கள்கூட, வாய்ப்பு
கிடைக்கும்போது சாதனையாளர்களாக மாறியிருக்கிறார்கள்.

உலகின் முதல் பெண் மருத்துவரும் பெண் கல்விக்காகப் பாடு
பட்டவருமான எலிஸபெத் ப்ளாக்வெல்… பெண் வரலாற்று ஆசிரியரும்
பெண்கள் வரலாற்றுத் துறையைத் தோற்றுவித்தவருமான கெர்டா லேர்னர்… ஒடுக்கப்பட்ட மக்களின் துயரங்களைத் தன் எழுத்து மூலம் வெளிப்படுத்தியவரும் நோபல் பரிசு பெற்றவருமான நதின் கார்டிமர்… சிறந்த நடிகையும் கண்டுபிடிப்பாளருமான ஹெடி லாமர்… உலகின் அதிவேகப் பெண்ணான வில்மா ருடால்ஃப்… 86 வயதில் ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனையாக மாறிய ஜுஹன்னா க்வாஸ்… இப்படி வரலாற்றில் புதிய தடம் பதித்த வித்தியாசமான பெண்களைப் பற்றிய அறிமுகமே இந்தப் பகுதி

ஹைபேஷா

இந்த 1,600 ஆண்டுகளில் வானவியலாளர், கணிதவியலாளர், தத்துவவியலாளர், பேராசிரியர், கண்டுபிடிப்பாளர், எழுத்தாளர் என்று பன்முகம் கொண்ட ஹைபேஷாவுக்கு இணையான இன்னொரு பெண் பிறக்கவேயில்லை!

பிளாட்டோ, அரிஸ்டாட்டில், சாக்ரடீஸ், கலிலியோ, நியூட்டன், கார்ல் மார்க்ஸ்… இப்படிச் சொல்கிற அறிஞர்கள் வரிசையில் ஒரு பெண்கூட இல்லையா? அல்லது நாம் அறியவில்லையா? ஆம்… எத்தனையோ ஒப்பற்ற மனிதர்கள் வரலாற்றின் பக்கங்களில் மறைக்கப்பட்டிருக்கிறார்கள்… மறக்கப்பட்டிருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களில் ஒரு மகத்தான பெண்மணி ஹைபேஷா!

கி.பி. நான்காம் நூற்றாண்டில் எகிப்தின் தலைநகராக இருந்த அலெக்ஸாண்ட்ரியா கல்வி, அறிவியல், அரசியலில் சிறப்பு பெற்றிருந்தது. ஐந்து லட்சம் புத்தகங்களைக் கொண்ட உலகின் மிகப்பெரிய நூலகமும் ஆராய்ச்சிக்கூடமும் அங்கு இருந்தன. நூலகத்தின் நிர்வாகியாகவும் பிரதான ஆசிரியராகவும் இருந்தவர் தியோன். கிரேக்க பகுத்தறிவு பாரம்பரியத்தைச் சேர்ந்தவர்.

தியோனின் அறிவு மகள் ஹைபேஷா. சிறுமியாக இருந்தபோதே தத்துவம், கணிதம், வானவியல், இலக்கியம் என பல்துறைகளில் விவாதிக்கும் திறன் பெற்றிருந்தார். பள்ளிப் படிப்பை முடித்தவுடன் கிரேக்கம், இத்தாலி, மத்தியதரைக்கடல் நாடுகளுக்கு உயர்கல்விக்காகச் சென்றார். பல நாட்டுக் கல்வி, பலவித மனிதர்கள் என்று ஏராள அனுபவங்களுடன் அலெக்ஸாண்ட்ரியா திரும்பினார். கிரேக்கத் தத்துவப் பள்ளியில் பிளாட்டோ, அரிஸ்டாட்டில் போன்ற ஞானிகளின் தத்துவங்களை போதித்தார். கணித ஆராய்ச்சியையும் தொடர்ந்தார்.

ஹைபேஷாவும் மாணவர்களும்
Robert Trewick Bone: Hypatia Teaching at Alexandria
Hypatia Teaching at Alexandria, watercolour and brown ink on paper by Robert Trewick Bone; in the Yale Center for British Art, New Haven, Connecticut.


தத்துவம், கணிதம், பகுத்தறிவு, இலக்கியம், அரசியல் துறைகளில் அவர் பெற்றிருந்த தேர்ந்த அறிவு காரணமாக, அலெக்ஸாண்ட்ரியா நகரின் முக்கியப் பெண்ணாக செல்வாக்குப் பெற்றிருந்தார் ஹைபேஷா. பல நாட்டு மன்னர்கள், அறிஞர்கள், செல்வந்தர்கள் தங்கள் குழந்தைகளை ஹைபேஷாவிடம் கல்வி கற்க அனுப்பினர்.


வழக்கமாக பெண்கள் உடுத்தும் உடைகளை ஹைபேஷா அணியவில்லை. நீண்ட அங்கியையே அணிந்தார். ஆண் தேரோட்டியை அழைக்காமல் குதிரைகள் பூட்டிய தேரை தானே ஓட்டிச் சென்றார். அறிவு, துணிவு, தன்னம்பிக்கையின் அடையாளமாக வலம் வந்த ஹைபேஷாவை மக்கள் கொண்டாடினர்.

பாய்மங்களின் ஒப்பீட்டு அடர்த்தியைக் கண்டறிவதற்கான ஹைட்ரோமீட்டர் கருவியையும் நட்சத்திரங்களின் தன்மையைக் கண்டறியும் ஆஸ்ட்ரோலோப் கருவியையும் உருவாக்கினார் ஹைபேஷா. கணிதம், தத்துவம், அறிவியல் துறைகளில் பல நூல்களை எழுதினார்.  

ஹைபேஷா வாழ்ந்த நான்காம் நூற்றாண்டில் எகிப்து, ரோமப் பேரரசின் கீழ் இருந்தது. அப்போது மதத்தலைவர்களின் செல்வாக்கு அதிகரித்து, பகுத்தறிவு புறக்கணிக்கப்பட்டது.

எகிப்தின் ஆளுநராக இருந்த ஓரிஸ்டஸ், ஹைபேஷாவின் நல்ல நண்பர். இவ்விருவர் மீதும் அலெக்ஸாண்ட்ரியாவின் தலைமைக்குருவாக இருந்த பிஷப் ஸைரிலுக்கு வெறுப்பு ஏற்பட்டது. மத நம்பிக்கைகளுக்கு இவர்கள் முட்டுக்கட்டையாக இருப்பதாகக் கருதினார். ஓரிஸ்டஸின் பதவியைப் பறித்தார். அப்படியும் அவர் ஆத்திரம் அடங்கவில்லை. மதத்துறவிகளை ஏவி, ஓரிஸ்டஸைக் கொலை செய்தார். அசுரத்தனமான மத நம்பிக்கை புத்தியைச் செயலிழக்கச் செய்துவிடுமே… அடுத்து அவர் மனதில் தோன்றிய உருவம்  ஹைபேஷா…

கி.பி.415… மார்ச் மாதம். ஹைபேஷா மாணவர்களுக்காக சொற்பொழிவு ஆற்றிவிட்டு, தேரில் வந்துகொண்டிருந்தார். மதவாதக் கூட்டமொன்று ஆர்ப்பரித்து வழிமறித்தது. விஞ்ஞானமும் தத்துவமும் நிறைந்த அலெக்ஸாண்ட்ரியா மக்களை, மதநம்பிக்கை எவ்வளவு கீழ்த்தரமாக மாற்றிவிட்டது என்பதைக் கண்ட ஹைபேஷா மிகவும் துயருற்றார். தேரில் ஏறிய சிலர், ஹைபேஷாவைக் கீழே தள்ளி, சாலையில் இழுத்துச் சென்றனர். ஓர் ஆலயத்துக்குள் குற்றுயிரும் குலை உயிருமாகக் கொண்டு செல்லப்பட்டார் ஹைபேஷா. உடைகளைக் களைந்து, கரடுமுரடான சிப்பிகளாலும் ஓடுகளாலும் உடலைக் கீறினர். கால்கள் துண்டிக்கப்பட்டன. இறுதியில், ஹைபேஷாவின் எஞ்சிய உடலைத் தீயிட்டுக் கொளுத்தினர்.
நடமாடும் பல்கலைக்கழகமாகவும் அறிவுக்களஞ்சியமாகவும் இருந்த ஹைபேஷாவைக் கொன்ற செயலால், அறிவுலகமே இருண்டு போனது. இதன் பிறகு பல நூறு ஆண்டுகள் கழித்தே அறிவுலகத்தில் மறுமலர்ச்சி ஏற்பட்டது.  

Hypatia of Alexandria: murder
Artist’s impression of the murder of Hypatia of Alexandria at the hands of followers of Cyril, patriarch of Alexandria.

ஆண்கள் கோலோச்சிய அறிவுத்துறையில் 1,600 ஆண்டுகளுக்கு முன் ஒரு பெண், சமூகத்துக்குப் பயன்படும் பல துறைகளிலும் ஒப்பற்றவராகத் திகழ்ந்தார். ”ஹைபேஷா வாழ்ந்த காலத்தில் அவருக்கு இணையான அறிஞர்கள் யாருமே இல்லை” என்கிறார் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த சாக்ரடீஸ் ஸ்கொலாஸ்டிகஸ் என்ற வரலாற்றுப் பேராசிரியர்!

அரபு படையெடுப்பால் அலெக்ஸாண்ட்ரியாவில் இருந்த நூலகமும் ஆராய்ச்சிக்கூடமும் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. அதில் ஹைபேஷாவின் ஏராளமான நூல்கள் கருகிப்போயின. எஞ்சிய சில நூல்கள் பிற்காலத்தில் அரபு, லத்தீன் மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டன. ஹைபேஷாவின் இந்நூல்களே நியூட்டன், டெக்கார்டே போன்ற பிற்கால அறிவியல் அறிஞர்களின் கண்டுபிடிப்புகளுக்கு முன் ஆதாரமாகத் திகழ்ந்தன. ஹைபேஷாவிடம் பயின்ற மாணவர்கள் தங்கள் அறிவால் மிகப்பெரிய பதவிகளை வகித்தனர். இம்மாணவர்கள் மூலமே ஹைபேஷா வெளியுலகுக்கு அறியப்பட்டார்.

இன்று பெண்கள் விண்வெளி வீராங்கனையாக, விஞ்ஞானியாக, மருத்துவராக, ஆராய்ச்சியாளராக, தொழில்நுட்பவியலாளராக, பேராசிரியராக சகல துறைகளிலும் கால் பதித்து சாதனை சரித்திரம் படைக்கின்றனர். இருப்பினும், இந்த 1,600 ஆண்டுகளில் வானவியலாளர், கணிதவியலாளர், தத்துவவியலாளர், பேராசிரியர், கண்டுபிடிப்பாளர், எழுத்தாளர் என்று பன்முகம் கொண்ட ஹைபேஷாவுக்கு இணையான இன்னொரு பெண் பிறக்கவேயில்லை!        


ஹைபேஷா சொல்கிறார்…
”கதைகளைக் கதைகளாகவே சொல்லிக் கொடுங்கள். புராணங்களை புராணங்களாகவே கூறுங்கள். மூடநம்பிக்கைகளை உண்மையைப் போல ஒருபோதும் குழந்தைகளுக்குச் சொல்லித் தராதீர்கள். மூடநம்பிக்கைகள் உண்மையை ஒழித்து விடும்!”

கட்டுரையாளர்:

சஹானா… பெண்கள், பெண்கள் பிரச்னைகள் குறித்துப் படிப்பதிலும் எழுதுவதிலும் ஆர்வம் உள்ளவர். கடந்த 15 ஆண்டுகளாக எழுதி வருகிறார். குங்கும் தோழியில் ‘உலகை மாற்றிய தோழிகள்’, ‘தடம் பதித்த தாரகைகள்’ ஆகிய தலைப்புகளில் தொடர் கட்டுரைகளை எழுதியிருக்கிறார். வாசகர்களிடம் பெரிதும் வரவேற்பைப் பெற்ற இந்தத் தொடர்கள் சூரியன் பதிப்பக நூல்களாக வெளிவந்துள்ளன.  ‘வினு விமல் வித்யா’ உள்பட பேசும் பெண் கேரக்டர்களை உருவாக்கி பெண் உலகம் சார்ந்து எழுதி வருகிறார்.