பெண் குழந்தைகளும் பெண்களும் தங்கள் உடலை வலுப்படுத்திக்கொள்ளும் நோக்கத்துடன் உடற்பயிற்சி செய்கிறார்களா என்று கேட்டால் 90 சதவீதம் இல்லை என்றுதான் பதில் வருகிறது. இதற்கு விளையாட்டு வீராங்கனைகள் விதிவிலக்கு. அவர்களை விட்டுவிடுவோம். சராசரி சூழலில் வளரும், பிற எளிய பெண்களைப் பற்றித்தான் இங்கு பேசப் போகிறோம்.
பெண் குழந்தைகளிலிருந்து ஆரம்பிப்போம். சிறு வயதில் பெண் குழந்தையும் ஆண் குழந்தைக்குச் சமமாக ஓடியாடி விளையாடுகிறது. கிட்டத்தட்ட பத்து வயதுவரை பெண் குழந்தைக்கு எந்தத் தடையும் இருக்காது. பெரிய அளவில் விழுந்து அடிபடாத வரை அம்மாவும் அப்பாவும் குடும்பத்தினரும் ஒன்றும் சொல்லமாட்டார்கள். பத்து வயதுக்கு மேல் கொஞ்சம் கொஞ்சமாகக் கட்டுப்படுத்த ஆரம்பிப்பார்கள். “வளர்ற பொண்ணு, எங்கயாவது விழுந்து, கையில கால்ல அடிபட்டுட்டா, நாளைக்கு யார் கட்டுவா?” “விளையாடும்போது, படாத இடத்துல பட்டுட்டா என்னாகிறது?” என்று ஆரம்பிக்கும் கட்டுப்பாடுகள், அவள் வயதுக்கு வந்தபின் உச்சகட்டத்தை எட்டும். “விளையாட்டெல்லாம் வேண்டாம், வீட்லயே பத்திரமா இரு” என்று முடக்கிவைப்பார்கள். எல்லாக் கட்டுப்பாடுகளும் அவள் கல்யாணம் வரை அவள் உடலை குறைபாடில்லாமல் பாதுகாக்க வேண்டும் என்பதை நோக்கியே இருக்கும்.
அதே நேரத்தில், உடலை அழகுபடுத்திக் கொள்ள குடும்பத்தினர் ஊக்குவிப்பார்கள். பெண் வயதுக்கு வந்த பின் புருவத்தைத் திருத்திக்கொள்ள, ஃபேஷியல் செய்துகொள்ள பியூட்டி பார்லர் போகலாம். மூக்கு குத்திக்கொள்ளலாம். முகத்திற்குப் பால் ஏடையும் கடலைமாவையும் அப்பிக் கொண்டு எப்படி பளபளப்பாக வைத்துக்கொள்ளலாம் என்று பாட்டி முதல் பக்கத்து வீட்டு அக்காவரை ஆலோசனைகளை அள்ளி வழங்குவார்கள்.
வயதுக்கு வந்த பையன்களோ குரல் உடைந்து, மீசை முளைவிடும் சமயத்தில், கபடி, வாலிபால், ஃபுட் பால், கிரிக்கெட் விளையாடப் போவார்கள். ஊறவைத்த சுண்டலைத் தின்றுவிட்டு, ஜிம் போய் உடற்பயிற்சி செய்வார்கள். உடலை ஏற்றுவதில், வலுப்படுத்துவதில் ஆர்வமாக இருப்பார்கள். ஏனென்றால், உடலை வலிமையாக வைத்திருப்பதுதான் ஆண்களுக்கு அழகு என்று பொதுப்புத்தி வரையறுத்து வைத்திருக்கிறது. பெண்களுக்கோ வெள்ளைத்தோலும் (கறுப்பாக இருந்தால் சிகப்பழகு கிரீம்கள் தடவி சரிப்படுத்த வேண்டும்) நீளமான முடியும், ஒல்லியான உடலும்தான் அழகு என்று சொல்கிறது. உடலை வலிமையாக வைத்திருப்பது தேவையில்லை என்று ஒதுக்குகிறது. வயதுக்கு வந்தபின் பெண்கள் கபடி, வாலிபால், ஃபுட் பால், கிரிக்கெட் விளையாடப் போவது மிகமிகக் குறைவு. வயதுப் பெண் ஜிம் போவதும் அரிதுதான். அப்படிச் செல்பவர்களும் உடலை வலுப்படுத்த போக மாட்டார்கள். பெரும்பாலும் உடல் இளைக்கத்தான் போவார்கள் (வயசுப்பெண் குண்டாக இருந்தால் மாப்பிள்ளைகள் தேடி வரமாட்டார்களே?).
“பெண் மெல்லிய உடலுடன் பலவீனமாகத்தான் இருப்பாள், எனவே, பாதுகாக்கப்பட வேண்டியவள். ஆண் தன் வலிமையால் அவளைப் பாதுகாக்க வேண்டும், அது அவன் பொறுப்பு” என்பது ஆணாதிக்கச் சமுதாயத்தின் எழுதப்படாத விதி.
இதன் வெளிப்பாடுதான்வெள்ளைத்தோலுடன், ஒல்லியாக, ஜீரோ-சைஸில் இருக்கும் பெண் ’மிஸ் மெட்ராஸ்’ ஆக தேர்ந்தெடுக்கப்படுவதும், முறுக்கேறிய தசைகளும் நிமிர்ந்த தோள்களும் விரிந்த மார்பும் வலுவான உடலும் உள்ள ஆண் (பயில்வான்) ’மிஸ்டர் மெட்ராஸ்’ ஆக தேர்ந்தெடுக்கப்படுவதும். பெண்கள், அழகியாகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு, தோல் நிறமும் அங்க அளவுகளும் தலைமுடியும் மதிப்பிடப்படுகின்றன. ஆண்கள் அழகனாகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு, உடல் வலிமை மட்டுமே மதிப்பிடப்படுகிறது. அவனின் தோல் நிறமும் தலைமுடியும் (இல்லாவிட்டாலும் பிரச்னையில்லை) பொருட்டேயில்லை. தசைகள் எவ்வளவு முறுக்கேறி இருக்கின்றன, மார்பு எவ்வளவு விரிகிறது, கைகள் கால்கள் வலுவாக இருக்கின்றனவா.. என்பதெல்லாம் தான் முக்கியம். சுருக்கமாகச் சொன்னால், பெண்ணுக்கு உடல்வனப்பையும் ஆணுக்கு உடல்வலிமையையும் பொதுப்புத்தி வலியுறுத்துகிறது.
கல்யாணச் சந்தையின் தேவைக்காக, கல்யாணம் வரை ஒல்லியாக இருக்க பெண்கள் நிர்பந்திக்கப்படுகிறார்கள். அதற்குப் பிறகு கர்ப்பம், பிரசவம், குழந்தை வளர்ப்பு, வீட்டுவேலைகள், வேலைபார்க்கும் பெண்ணென்றால் அலுவலக வேலைகள் என்று அதிகரிக்கும் சுமைகளால் பெண்களுக்குத் தமது உடலைக் கவனிக்கவும், அதற்கு நேரம் ஒதுக்கவும் முடிவதில்லை. அதற்கு முன்னுரிமை தருவதும் இல்லை. உடல் எடை கூடிவிட்டால், அதைக் கிண்டலடிக்கவும் குறை சொல்லவும் ஆணாதிக்கச் சமுதாயம் தயங்குவதே இல்லை. எத்தனை வேலைப்பளு இருந்தாலும் பெண் கொடியிடையுடன், ஒட்டிய வயிறுடன், ’சிக்’ என்று அழகாக இருக்க வேண்டும் என்றுதான் சமுதாயம் எதிர்பார்க்கிறது. பெண் உடல் எதிர்கொள்ளும் சிசேரியன், கர்ப்பப்பை கட்டிகள், ஹார்மோன் குளறுபடிகள், தைராய்டு சுரப்பியில் குறைபாடு என்று எதைப் பற்றியும் பொதுப்புத்திக்குக் கவலையில்லை. “என்ன இப்படி வெயிட் போட்டுட்டீங்க?” “தொப்பைப் பெரிசா இருக்கே, குறைக்கக் கூடாதா?” “உம் புருஷனுக்கு அக்கா மாதிரி இருக்கறே?” என்றெல்லாம் பெண்ணின் ஊதிய உடலை விமர்சிக்கிறார்களே, என்ன நோக்கமாக இருக்கும் என்று பார்த்தால், பெண் இளைத்து, ஒல்லியாக, பார்ப்பதற்கு அழகாக இருக்க வேண்டும் என்பதாகத்தான் இருக்கிறதே ஒழிய, அவள் ஆரோக்கியம் இரண்டாம்பட்சமாகத்தான் இருக்கிறது.
ஆரோக்கியத்தைப் பொருத்தவரை, உடலை நோயின்றி வைத்துக்கொள்ள, “யோகா செய், வாக்கிங் போ” என்பதுதான் சமுதாயத்தின் அதிகபட்ச அட்வைஸாக இருக்கிறது. “என் உடலை நான் வலுவாக வைத்திருக்க வேண்டும். தினமும் ஜிம் போகப் போகிறேன். ஷட்டில், டென்னிஸ் விளையாடப் போகிறேன். கிரவுண்டுக்கு போய் வாலிபால் விளையாடப் போகிறேன். மாரத்தான் ஓடப் போகிறேன். மலையேறப் போகிறேன்” என்று, கல்யாணமாகி குழந்தைகள் இருக்கும் பெண் சொன்னால் எத்தனை குடும்பத்தில் அதை ஒத்துக்கொள்வார்கள்? பெரும்பாலான குடும்பங்களில் எதிர்ப்பு வரும். “வீட்டு வேலையைப் பார்க்காம, குழந்தைகளை, புருஷனைக் கவனிக்காம இதெல்லாம் தேவையா?” என்று விமர்சிப்பார்கள். எல்லா வேலைகளையும் செய்து முடித்துவிட்டுத்தான், விளையாடப் போகிறேன், ஓடப்போகிறேன் என்றால், “இந்த வயசுல உனக்கு இது தேவையா?” என்பார்கள். முடிந்த வரை பெண்ணை வீட்டுக்குள்ளேயே வைத்திருக்க பெரும்முயற்சி செய்வார்கள்.
தோழர்களே, பெண் தன் உடலை ஆரோக்கியமாக மட்டுமல்ல வலுவாகவும் வைத்திருப்பதும் அவசியம். தான் விரும்பும் வேலைகளைச் செய்வதற்கும், இந்த உலகில் தன் விருப்பம் போல் வாழ்வதற்குமான ஆயுதம்தான் இந்த உடல். பெண்கள் உடலளவில் பலவீனமானவர்கள் என்பது ஆணாதிக்கத்தின் கற்பிதமே. முறையாகப் பயிற்சி செய்தால் அபாரவலிமை கிடைக்கும் என்பதற்குப் பளுத்தூக்கும் வீராங்கனைகளே சாட்சி. உடல்வலிமை என்பது பெண்ணுக்கு அற்புதமான தற்சார்பு. வலிமையான உடல், ’எல்லாத்தையும் ஒருகை பாத்துடலாம்’ என்கிற தன்னம்பிக்கையைத் தரும். தனது பாதுகாப்புக்காக மட்டுமல்ல, மொத்த வாழ்க்கையை ரசித்து வாழ்வதற்கும் இதுதான் அடித்தளம். உடலை வலுப்படுத்தும் முயற்சியில் ஈடுபடும்போது, பெண்கள் வீடு என்ற தளத்திலிருந்தும், உடல்ரீதியான தயக்கங்களைத் தகர்த்தும், பொதுவெளிக்குள் வருகிறார்கள். வரவேற்போம் நம் பெண்களை !
படைப்பாளர்:
கீதா இளங்கோவன்
‘மாதவிடாய்’, ‘ஜாதிகள் இருக்கேடி பாப்பா’ போன்ற பெண்களின் களத்தில் ஆழ அகலத்தை வெளிக்கொணரும் ஆவணப் படங்களை இயக்கியிருக்கிறார். சமூக செயற்பாட்டாளர்; சிறந்த பெண்ணிய சிந்தனையாளர். அரசுப் பணியிலிருக்கும் தோழர் கீதா, சமூக வலைதளங்களிலும் தன் காத்திரமான ஆக்கப்பூர்வமான எழுத்தால் சீர்திருத்த சிந்தனைகளைத் தொடர்ந்து விதைத்து வருகிறார்.