குடியேற்றம்

கனடாவைப் பற்றி பேசும்போது, இங்கு குடியேறுவது குறித்து என் புரிதல்களைப் பகிர்ந்துகொள்வது அவசியம் என்று நினைக்கிறேன்.

வெளிநாட்டவரை வரவேற்கும் நாடுகளில் ஒன்று கனடா என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. வருபவர்கள் அதை வேலை வாய்ப்புகளுக்கான உத்தரவாதமாகக் கருதினால் மட்டுமே சிக்கல். அதனால் யதார்த்தமான நிலை புரிந்துகொண்டு வந்தால் சிறப்பு.

இங்கே படிப்பதற்காக, வேலை செய்வதற்காக தேவையான அனுமதியுடன் கூடிய தற்காலிகக் குடியுரிமையுடன் வந்து பின் PRஎனும் நிரந்தர குடியுரிமை பெறுவது அல்லது நிரந்தர குடியுரிமை பெற்று வருவது இரண்டுமே சாத்தியம்.

இரண்டு வழிகளிலுமே அமெரிக்கா போன்ற நாடுகளைப் போலல்லாமல், சரியான முறையில் நம் ஆவணங்கள் இருக்கும் பட்சத்தில் கண்டிப்பாகக் கொடுத்துவிடுவார்கள். அதிலும் தற்போதைய லிபரல் கட்சி ஆட்சியில், மேலும் பல புதிய வழிகளில் நிரந்தர குடியுரிமை பெறுபவர்களின் எண்ணிக்கையைக் கணிசமான அளவு உயர்த்த முயற்சி செய்கிறார்கள். அதற்கு காரணம், இங்கு இளைஞர்கள் விகிதம் குறைவு, பல வேலைகளுக்கான ஆட்கள் கிடைப்பதில்லை என்பது மட்டுமல்லாமல், இங்கு வந்து வேலை செய்யும் வெளிநாட்டவரின் வருமான வரியும் நாட்டின் பொருளாதாரத்தின் ஒரு முக்கிய அம்சமாகக் கருதப்படுகிறது.

படிப்பதற்காக இங்கு வருவதற்கு முக்கிய காரணங்கள் சிறந்த தரமான கல்வி, மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் குறைந்த செலவு, படிக்கும்போது பகுதி நேரத்தில் வேலை செய்ய அனுமதி, ஸ்காலர்ஷிப் பெற வாய்ப்பு. மேலும் அரசாங்கத்தில் மாணவர்களுக்கான வேலை வாய்ப்புகளும் ஏற்படுத்தப்படுகின்றன. ஆராய்ச்சியில் விருப்பம் உள்ள மாணவர்களுக்கு மிகவும் சிறந்த வாய்ப்புகள் உள்ளன. அரசாங்கம் ஆராய்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது. அதனால் நன்றாகப் படிக்கும் மாணவர்கள் இங்கு வருவது மட்டுமல்லாமல் கடுமையாக உழைக்கவும் தயாராக இருக்கும் பட்சத்தில் எதிர்காலம் மிகவும் சிறப்பாக இருக்கும். ஆம், நம் நாட்டு கல்விமுறைக்கும், வட அமெரிக்க, ஐரோப்பிய கல்விமுறைக்கும் உள்ள முக்கியமான வித்தியாசமாகக் கருதப்படுவது, இங்கு பள்ளிப் படிப்பு சுலபம், கல்லூரிப் படிப்பிற்கு மாணவர்கள் நன்றாக உழைக்க வேண்டும். அதற்கு மேலும் பொருளாதாரத்திற்காகப் பகுதி நேர வேலை செய்ய நேர்ந்தால் கேட்கவே வேண்டாம்.

படிப்பதற்கான அனுமதி எளிதில் கிடைக்கிறது என்பதற்காக அதை நிரந்தர குடியுரிமை பெற குறுக்கு வழியாக உபயோகிப்பவர்களும் உண்டு. அப்படிச் செய்பவர்கள் நல்ல வேலை கிடைக்காமல் சுமாரான வேலையில், குறைந்த சம்பளத்தில் கஷ்டப்படுவதையும் காணலாம்.

வேலை செய்வதற்கான அனுமதி பெரும்பாலும் இரண்டு வகைப்படும். பிற நாடுகளில் இருக்கும் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களைத் தங்களின் கனடிய கிளையண்ட்டிடம் வேலை செய்வதற்காக அனுப்பவது. இந்த வகை வொர்க் பெர்மிட்டில் வருபவர்கள் இங்கு வந்த பிறகு வேறு வேலை தேடிச் செல்ல முடியாது. ஏதாவது மாயம் நிகழ்ந்தால்தான் நிரந்தர குடியுரிமை பெற முடியும், பெற்ற பின் வேலையை மாற்றிக் கொள்ளலாம். இந்த வகை பெர்மிட்டில் வருபவர்களைச் சார்ந்து வரும் கணவனோ மனைவியோ வேலை செய்ய அனுமதி பெற்றுக் கொள்ளலாம் அதில் இந்தக் கட்டுப்பாடுகள் கிடையாது. அதை ஓபன் வொர்க் பெர்மிட் என்று சொல்வார்கள், அதில் வருபவர்கள் எங்கு வேண்டுமானாலும் வேலை தேடிச் செய்யலாம். இந்த விசா பெறுவதற்கு நேர்முகத் தேர்வு கிடையாது.

வேலை தேட ஆரம்பிக்கும் போதுதான் அதிலுள்ள சிக்கல் தெரிய வரும். இதுதான், பெரும்பாலானோர் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான விஷயம். இங்கு பல வேலைகளும் தொழில்களும் ஒழுங்குபடுத்தப்பட்டவை. இதைச் செய்ய லைசென்ஸ் தேவை. அதாவது சம்பந்தப்பட்ட மாகாணத்தில் அங்கீகாரம் பெற்று மட்டுமே செய்ய முடியும். அது அவ்வளவு எளிதல்ல.

மருத்துவம், பொறியியல், எலெக்ட்ரீஷியன் , ஆசிரியப் பணி போன்றவை இங்கு ஒழுங்குபடுத்தப் பட்ட வேலைகள். அதனால், நம் ஊரில் படித்து விட்டு வந்தால் லைசென்ஸ் கொடுக்க மாட்டார்கள். மீண்டும் இங்கு வந்து படித்து, தேறி லைசென்ஸ் பெற்று மட்டுமே வேலை செய்ய முடியும். ஆனால், கஷ்டப்பட்டால் பலன் உண்டு, இந்த வகை வேலைகளில் சம்பளம் அதிகம்.

சரி, மற்ற துறைகளை எடுத்துக்கொண்டால், பெரும்பாலும் இங்கே பெறும் கல்வித் தகுதியை அங்கீகரித்து தான் பெரிய நிறுவனங்கள் வேலை தருகிறார்கள், அல்லது இங்கு வேலை செய்த அனுபவம் தேவை. அதைத் தவிர, விண்ணப்பிக்கும் போதே நிரந்தர குடியுரிமை பெற்றவரா என்றும் கேட்பார்கள். அங்கே தான் சிக்கல் ஏற்படும். அதனால் பெரும்பாலானோர் கிடைக்கும் ஏதாவது வேலைக்குச் சென்றுவிடுகிறார்கள். ஆனால், இங்கு எந்த வேலையும் குறைவானதாகக் கருதப்படுவதில்லை. வேலை செய்பவர்களிடம் வித்தியாசத்தைக் காண முடியாது. மற்ற நாடுகளில் மருத்துவத் துறைகளில் வேலை செய்தவர்கள்கூட இங்கே டாக்ஸி ஓட்டுவதைக் காண முடியும். குறைவான சம்பளத்திலும் வாழ்வதற்கு வழி உண்டு என்பது ஆறுதல், ஆனால், எல்லாவற்றையும் அனுசரித்துப் போக வேண்டியிருக்கும்.

அடுத்து நிரந்தர குடியுரிமை பெறுவது பற்றிப் பார்க்கலாம். வழிமுறை என்னவோ இங்கு வந்து விண்ணப்பித்தாலும், அல்லது வேறு நாட்டில் இருந்து வருமுன்னரே விண்ணப்பித்தாலும் ஒன்றுதான். ஆனால், சில காரணங்களுக்காகக் கொடுக்கப்படும் மதிப்பெண்களால் இங்கு விண்ணப்பிபவர்களுக்கு கூடுதல் அனுகூலம் உண்டு. இதற்கு குறைந்தபட்ச தகுதி என்றால் படிப்பு, ஆங்கிலத் தேர்வில் குறைந்தபட்ச மதிப்பெண் பெறுவது. இதற்கும் நாம் படித்த படிப்புக்கான சான்றிதழை அப்படியே ஒப்புக்கொள்வதில்லை, அதைச் சரிபார்த்து சான்றளிக்க அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் உண்டு. எல்லாம் நம் முன்னவர் செய்த தவறினால் விழைவது. அந்த நிறுவனங்கள்கூட, சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்கள் நேரடியாக அனுப்பினால் மட்டுமே ஒப்புக்கொள்வார்கள். ஒரு வழியாக இந்தச் சான்றிதழில் நம் படிப்புக்குச் சமமான தகுதியைக் குறிப்பிட்டு வாங்கிக்கொண்டால், 5 வருடங்களுக்கு அது செல்லும்.

அடுத்தது, ஆங்கிலம் அல்லது பிரெஞ்சு தேர்வு. ஆம், கனடாவில் இரு மொழிக் கொள்கை என்பதால் இரண்டுமே இங்கு செல்லும். இதையும் நம் ஊரில் சொன்னால் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் அதாவது நம் சான்றிதழ்களில் இருக்கும் மதிப்பெண்களை இங்கே மதிப்பதில்லை. IELTS அல்லது CELPIP என்ற இரண்டு தேர்வுகள். இதை அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் எல்லா நாடுகளிலும் நடத்துகிறார்கள். அதில் குறைந்தபட்ச தகுதி பெற்றுவிட்டால் போதும், நாம் நிரந்தர குடியுரிமைக்கு விண்ணப்பிக்கத் தயாராகி விடுவோம். இந்த வகை தேர்வுகளில், பேச்சு, எழுத்து, கவனிக்கும் மற்றும் வாசிக்கும் திறன் சோதிக்கப்படும். எல்லாவற்றிலும் தேற வேண்டும். முறையாகப் பயிற்சி எடுத்துக்கொண்டால் சுலபமே. இந்தச் சான்றிதழ் இரண்டு வருடத்திற்கு மட்டுமே செல்லும்.

இந்த இரண்டு தகுதியும் இருந்து விட்டால் நம்மால் விண்ணப்பிக்க முடியும் ஆனால், நிரந்தர குடியுரிமை கிடைப்பது என்பது நம் மதிப்பெண்ணைப் பொறுத்தது. ஆம், இங்கும் மதிப்பெண் தான். நிரந்த குடியுரிமை பலதரப்பட்ட வேலை செய்பவர்களுக்கும் கொடுக்கிறார்கள். தகவல் தொழில்நுட்பம், ஒழுங்குபடுத்தப்பட்ட துறை சார்ந்த வேலைகள், வீட்டு உதவிக்காகக் குழந்தைகள் மற்றும் வயதான, நோய்வாய்ப்பட்டவர்களைக் கவனித்துக்கொள்பவர்கள் போன்ற எல்லா வேலைகளுக்கும். இந்த வேலைகளைப் பொறுத்து பலவகை புரோகிராம்கள் உண்டு. எக்ஸ்பிரஸ் என்ட்ரி என்பது மிக முக்கியமான குடியேற்ற முறை கனடாவைப் பொறுத்தவரை , இதன் மூலமே வருடந்தோறும் பல லட்சம் பேருக்கு நிரந்தர குடியுரிமை வழங்குகிறார்கள். இதில் பெரும்பாலான புரோகிராம்களுக்கு கல்வி, மொழித் தேர்வு அவசியம். அதைத் தவிர உங்கள் வயதும் முக்கியம். ஆம், கனடா இளைஞர்களையே வரவேற்கிறது. இங்கு படித்துப் பட்டம் பெற்றிருத்தல், இங்கு வேலை செய்த அனுபவம் பெற்றிருத்தல், நிரந்தர குடியுரிமை பெற்ற உறவினர் இருத்தல், வேலை வாய்ப்புக்கான உத்தரவாதம் இவையெல்லாம் அதிக அனுகூலம் தரக்கூடிய அம்சம்.

உங்கள் துணைவரின் கல்வித்தகுதி, வேலை அனுபவம், மொழித் தகுதி இவற்றிற்கும் சிறிய அனுகூலம் உண்டு. இவற்றைப் பொறுத்து நமக்குக் கொடுக்கப்படும் மதிப்பெண்ணைப் பொறுத்து எக்ஸ்பிரஸ் என்ட்ரி புரோகிராமில் நமக்கு அழைப்பு அனுப்பப்படும். மதிப்பெண் குறைவாக இருக்கும் பொருட்டு அதிக காலம் பிடிக்கலாம். இதை தவிர, அந்தந்த மாகாணங்கள் அவர்களின் தேவைக்கு ஏற்ப இந்த எக்ஸ்பிரஸ் என்ட்ரியில் இருப்பவர்களுக்கு அழைப்பு விடுக்கும் பட்சத்தில், நமக்கு அதற்கான கூடுதல் மதிபெண்கள் அளிக்கப்பட்டு முன்னுரிமை கிடைக்கும். மாகாணங்கள் தனியாக சில புரோகிராம் நடத்துகிறார்கள்.

A high angle shot of the skyscrapers and buildings captured in Toronto, Canada

எந்த முறையில் விண்ணப்பித்து நமக்கு அழைப்பு வந்தாலும் இது பாதி கிணறு தான். நிரந்தர குடியுரிமை கிடைப்பது நாம் சரியான ஆவணங்களை வைத்திருப்பது, மருத்துவப் பரிசோதனை, காவல்துறை கொடுக்கும் சான்றிதழ், நம் biometric எந்த கிரிமினல் ரெகார்ட்டிலும் இல்லாமலிருப்பது இவற்றை பொறுத்தது தான்.

இன்னும் என்ன யோசிக்கிறீர்கள், இவையெல்லாம் சாதகமாக இருந்தால் கிளம்புங்கள் கனடாவுக்கு. இது போன்ற நட்பான, எல்லா கலாச்சார மக்களும் இணைந்து வாழக்கூடிய, பாதுகாப்பான, அகதிகள் உட்பட வெளிநாட்டவரை வரவேற்கும், நம் மக்கள் அதிகம் வசிக்கும், நம் ஊர் பொருட்கள் அனைத்தும் இறக்குமதி செய்யப்பட்டு கிடைக்கும் வேறு நாடு உங்களுக்கு கிடைப்பது அரிதுதானே! குளிரை மட்டும் மறந்துவிடவேண்டாம்.

(நிறைந்தது)

படைப்பாளர்:

பிருந்தா செந்தில்குமார்

பிருந்தா தமிழ்நாட்டில் பிறந்து, சென்னையில் படித்த இளங்கலை வணிகவியல் பட்டதாரி. ஐடி துறையில் சுமார் 20 வருட காலமாக பணிபுரிந்து வருகிறார். தற்போது வேலை நிமித்தமாக இரண்டரை வருடங்களாக கனடா மிசிசாகா என்னும் நகரத்தில் வசித்து வருகிறார்.

படிக்கும்போதும், வேலை செய்யும் இடத்திலும் தெளிவாகக் கருத்துகளைப் பகிர்ந்து கொள்வதாகக் கிடைத்த பாராட்டுகள் மற்றும் கோவிட் காலத்தில் உறவினர்கள் அளித்த ஊக்கத்தில், முதன்முதலாகத் தன் கனடா அனுபவத்தை எழுத்தில் பதிவிட்டிருக்கிறார்.