மருத்துவமனையின் அந்த நீண்ட நடைபாதையில் நிர்மலா தனியாக அமர்ந்திருந்தாள்.

கையில் இருந்த காப்பி ஆறிப்போயிருந்தது. ஆனால் அவள் மனம் மட்டும் இன்னும் ஆறவில்லை.

அம்மாவின் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்திருந்தாலும், அடுத்தடுத்த சிகிச்சைக்கான செலவுகள்… வீட்டுக் கடன்… வேலையிலிருந்து எடுத்திருந்த விடுப்பு… எல்லாமே ஒன்றாக வந்து அவளை நெறித்துக் கொண்டிருந்தன.

“நான் இதையும் சமாளிச்சிடுவேன்…”

எப்போதும் போல மீண்டும் மீண்டும் மனதுக்குள் சொல்லிக்கொண்டாள்.

அவளது தோழி தீபிகா அவளைப் பார்க்க வந்தாள்.

“சாப்பிட்டியா நிம்மி ?”

“பசிக்கலை…”

“நிர்மலா, மூணு நாளா சரியா சாப்பிடலை… தூங்கலை. உடம்பு சோர்ந்து போயிடும். நீ ஏற்கெனவே ரொம்ப வீக்கா இருக்க.”

“எல்லாம் சரியாகிடும்…” கசப்பான புன்னகையோடு சொன்னாள் நிர்மலா.

தீபிகா அவளை நேராகப் பார்த்தாள்.

“நீ எல்லாத்தையும் தனியாதான் தாங்கணும்னு யார் சொன்னாங்க?”

அந்தக் கேள்வி நிர்மலாவைச் சுட்டது. ஆனால் அந்த வார்த்தைகளில் அவளுக்கு நம்பிக்கை வரவில்லை.

சிறுவயதிலிருந்தே அப்படித்தானே? அவள் வளர்ந்ததே அப்படித்தான்.

அழக் கூடாது. பலவீனமாகத் தெரியக் கூடாது. யாரிடமும் உதவி கேட்கக் கூடாது. மனிதர்களை நம்பக் கூடாது என எத்தனையோ கட்டளைகளைக் கேட்டே வளர்ந்தவள்.

அவளது அப்பா, மனைவியையும் இரண்டு குழந்தைகளையும் விட்டுவிட்டு ஓடிப்போன நாளிலிருந்து அம்மாவுக்கு மனிதர்கள்மேல் இருந்த நம்பிக்கை முற்றிலும் உடைந்துவிட்டது.

வைராக்கியமாக உழைத்து, அண்ணனையும் நிர்மலாவையும் நன்றாகப் படிக்க வைத்தார். ஆனால், மனிதர்கள் மேல் நம்பிக்கை இழந்த அந்தத் தாய், எப்போதும் பிள்ளைகளிடமும் கடுமையாகவே இருந்தார்.

ஒருவர் மீது மற்றொருவர் அன்பு காட்டுவது இயல்புதான் என்பதை உணராமலேயே அண்ணனும் நிர்மலாவும் வளர்ந்தனர்.

அவர்களுக்குள் பாசமும் பற்றும் அதிகமாக இருந்தாலும், அதை வெளிப்படுத்திப் பழக்கமில்லை. அதனால்தானோ என்னவோ, தன்னிடம் அன்பாகப் பழகிய பெண்ணிடம் அண்ணன் உடனே காதல் கொண்டான்.

அம்மா அந்தத் திருமணத்திற்குச் சம்மதிக்க மறுத்தார். அதற்கான காரணம் புரியாததால், ஒருநாள் அண்ணன் தான் காதலித்த பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு வந்தான்.

“நீயும் உன் அப்பனை மாதிரிதான்…” என்று சொல்லி, அவனை வீட்டுக்குள்ளேயே விடவில்லை அம்மா.

அம்மாவைச் சமாதானப்படுத்த அண்ணன் எவ்வளவோ முயன்றான். ஆனால் அம்மா மாறவில்லை.

இதே ஊரில்தான் அவன் வசித்துக் கொண்டிருந்தான். மனைவியுடன், நல்ல வாழ்க்கையும் வாழ்ந்து கொண்டிருந்தான்.

அண்ணனும் அண்ணியும் எங்காவது பார்த்தால் அத்தனை அன்பாகப் பேசுவார்கள். வீட்டுக்கு வரச் சொல்வார்கள். ஆனால், அம்மாவின் பிடிவாதம் நிர்மலாவுக்கும் ஒட்டிக்கொண்டதோ என்னவோ, அவள் ஒருபோதும் அவர்கள் வீட்டுக்குச் செல்லவில்லை.

எப்போதும் புன்னகையோடே இருக்கும் நிம்மி, உள்ளே பல வலிகளை வீம்புடன் தனியே சுமந்து கொண்டிருந்தாள்.

“நான் யாரிடமாவது உதவி கேட்டா… அவர்களுக்கு நான் சுமையா ஆயிடுவேன்…” நிர்மலா மெதுவாகச் சொன்னாள்.

தீபிகா சிரித்தாள்.

“நீயே யோசிச்சுப் பார்… நான் கஷ்டத்தில் இருந்தா நீ உதவ மாட்டியா?”

“கண்டிப்பா உதவுவேன் ஆனா அது வேற…”

“ஏன் வேற? உலகமே இப்படித்தான் ஒருத்தருக்கு ஒருத்தர் துணையா இருந்து இயங்குது. யாருடைய உதவியும் வேண்டாம்னு வாழுறது ஒரு தேவையில்லாத பிடிவாதம்.”

நிர்மலா அமைதியாக இருந்தாள்.

‘உண்மைதானோ? நாம்தான் வீம்பாக இருக்கிறோமோ?’ என்று முதல் முறையாகத் தோன்றியது.

அண்ணனை அழைத்துப் பார்க்கலாம் என்று தோன்றியது. ஆனாலும் இத்தனை நாட்களாக வளர்ந்த விதம் அவளை அத்தனை சுலபமாக முடிவெடுக்க விடவில்லை.

மிகுந்த தயக்கத்திற்குப் பிறகு அன்று இரவு, முதல்முறையாக அவள் தன் அண்ணனை அழைத்தாள்.

“அண்ணா…”

அவள் குரல் நடுங்கியது.

“என்னம்மா?”

“அம்மாவ ஆஸ்பிடல்ல சேர்த்து… ஆபரேஷனும் ஆச்சு. இங்க நான் தனியா இருக்கேன்… எனக்குப் பயமா இருக்கு…”

ஒருவழியாக வார்த்தைகளைக் கோத்துச் சொல்லி முடித்தாள். அதற்குப் பிறகு அவளால் பேச முடியவில்லை.

பல வருடங்களாக அடக்கி வைத்திருந்த கண்ணீர், வெடித்து அழுகையாக வந்தது.

“நீ ஒண்ணும் தனியா இல்லடா… உனக்கு நாங்க இருக்கோம்.”

அண்ணன் சொன்ன அந்த ஒரு வாக்கியம், அவள் மனதை உடைத்தது. இல்லை… உடைந்த மனதை மெதுவாக ஒட்ட ஆரம்பித்தது.

அடுத்த சில நாட்களில், அண்ணன் மருத்துவச் செலவுகளுக்கான உதவிகளை ஏற்பாடு செய்தான். அண்ணி வீட்டுப் பொறுப்புகளைக் கவனித்து, அவளுக்கு ஆறுதலாக உடனிருந்தாள்.

தீபிகாவும் அலுவலக நண்பர்களும் வேலை அழுத்தத்தைக் குறைக்க உதவினார்கள்.

நிர்மலாவுக்கு அதெல்லாம் புதிதாக இருந்தது.

உலகம் முழுக்க மோசமான மனிதர்கள் மட்டுமே இல்லை. மனிதம் இன்னும் உயிரோடு இருக்கிறது என்பதை அவள் மெதுவாகப் புரிந்துகொண்டாள்.

ஒரு மாலை, மருத்துவமனை அறையின் ஜன்னலருகே நின்றுகொண்டிருந்தபோது,

“என்னம்மா… நீ ரொம்ப கஷ்டப்பட்டுட்டியா?” என்று அம்மா பலவீனமான குரலில் கேட்டார்.

“இல்லம்மா… இந்தத் தடவை… நான் தனியா இல்லை” என்று நிர்மலா சிரித்தவாறே பதில் சொன்னாள்.

“யார் கிட்டயும் உதவி கேட்கக் கூடாதுன்ற வைராக்கியத்துல நீங்க நிறைய இழந்துட்டீங்கம்மா… உலகத்துல எதையும் எதிர்பார்க்காம அன்பு செலுத்துற மனுஷங்களும் இருக்காங்க…”

அம்மா அவளைப் பதற்றத்துடன் பார்த்தார்.

“யாரும்மா உதவி பண்ணாங்க? ஏதாச்சும் பின்னாடி பெருசா பிரச்னை வரப்போகுது. இதுக்கு நீ என்னைச் சாகவே விட்டிருக்கலாம் நிர்மலா…”

“அம்மா, கொஞ்சம் ரெஸ்ட் எடு. தேவையில்லாம யோசிக்காத. உதவிக்கு வந்தது அண்ணனும் அண்ணியும். அப்புறம் என் தோழி தீபிகா. நம்மளைச் சுத்தி மனுஷங்கதான்மா இருக்காங்க. நாம ஒண்ணும் வேற கிரகத்துல இல்லை…” என்று சற்றுக் கண்டிப்புடன் கூறினாள்.

அம்மாவால் உடனே மாற முடியாதுதான். இத்தனை வருடங்களாக வாழ்ந்த விதத்தை அவ்வளவு சீக்கிரம் மாற்றிக்கொள்ள முடியாது. ஆனாலும் ஒருநாள் புரிந்துகொள்வார் என்கிற நம்பிக்கை நிர்மலாவுக்கு இருந்தது.

அன்று இரவு, அவள் டயரியில் இவ்வாறு எழுதினாள்:

“உதவி கேட்பது தோல்வியை ஒப்புக்கொள்வது அல்ல. மனிதர்களை நம்பும் மனசு இன்னும் உயிரோடு இருக்கிறது என்பதற்கான அடையாளம்.”

சில நேரம், வாழ்க்கை நம்மைப் பலமாக்குவது எல்லாவற்றையும் தனியாகச் சுமக்க அல்ல…

சுமையைப் பகிர்ந்துகொள்ளலாம் என்று நமக்கு நினைவூட்டத்தான்.

நம்பினால் நாளை உண்டு… கைத்தாங்க ஜீவனுண்டு…

படைப்பாளர்:

யாமினி

வாழ்க்கைக் கல்வி மற்றும் மென்திறன் பயிற்சியாளர், இயற்கை விரும்பி, நெகிழி ஒழிப்பு ஆர்வலர், திடக் கழிவு மேலாண்மை பயிற்சியாளர். பயிலரங்குகள் நடத்துகிறார். உறவு மேலாண்மை தனிபட்ட ஆலோசகர். குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு விழிப்புணர்வை உருவாக்குவதின் மூலமே நாட்டின் நலம், இயற்கை வளம், சரிவிகித சமுதாயத்தை அடைய முடியுமென்று தீவிர நம்பிக்கை உள்ளவர். எல்லாச் சூழ்நிலைகளிலும் வாழ்தலைக் கொண்டாடுபவர்.