மாலை நேர மழை.

ஜன்னல் கண்ணாடியில் வழிந்த தண்ணீர்த் துளிகளைப் பார்த்துக்கொண்டே, மனிஷா திறன்பேசியை மீண்டும் திறந்தாள்

இரண்டு மெசேஜ், மூன்று தவறிய அழைப்புகள்

ஆனால் அவள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த  பிரஷாந்தின் மெசேஜ்  வரவே இல்லை. அவளை முழுதாக மறந்துவிட்டானா?

ஏதும் வேலையில் பிஸியாக இருப்பான் என்று சொல்ல வந்த மனதை ஆழ்ந்த பெரு மூச்செடுத்து அடக்கினாள். 

அவன் ஆன்லைனில் இருப்பதைத்தான் இவள் பார்த்துக் கொண்டே இருக்கிறாளே.

நாள் முழுவதும் ஆன்லைனில் இருக்கிறான். ஆனால், இவளுக்கு ஒரு ‘ஹாய்’ சொல்லக்கூடத் தோன்றவில்லையா? 

முன்பு அவளைச் சுற்றிச் சுற்றி வந்து காதல் சொன்னவன் இன்று கண்டுகொள்வதே இல்லை. 

மனிஷா பைத்தியம் போல வாட்ஸ்அப்பில் ஸ்டேடஸ் வைப்பாள். அதை அவன் பார்த்தானா என்று நொடிக்கொரு முறை பார்ப்பாள். பார்த்த பின்? எதற்குமே அவனிடம் இருந்து எந்தப் பதிலுமே இருக்காது.

இவளாக ஏதாவது கேட்டால் அதற்கு மட்டும் பட்டும் படாமலும் பதில் வரும். அவளை விட்டு விலகுகிறானா என்று சந்தேகம் துளிர் விட்டதும், மூச்சு விடுவதுகூடச் சிரமமாக இருந்தது. அவனில்லாத வாழ்வைக் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியவில்லை. அவனுக்கு முன்பும் தனக்கு ஒரு வாழ்க்கை இருந்ததே அவளுக்கு நினைவில் இல்லை. 

“என்ன ஆச்சு ? ஏன் இப்படி இருக்கே?” என்று கேட்கும் அம்மாவிடம் பொய்யாக புன்னகைத்துச் சமாளித்தாள்.

“எல்லாம் ஓகேதானேடா?” என்று கனிவாகக் கேட்கும் அண்ணனின் முகம் பார்த்துப் பேச முடியாமல் சிரித்துச் சமாளித்தாள்.

தலையைத் தடவியவாறே, “ என் குட்டிமாக்கு என்னாச்சு?” என்று கொஞ்சும் அப்பாவிடம் பொய்யான உற்சாகத்துடன் பதில் சொல்லிக் கொண்டிருந்தாள்.

அவள் கட்டுப்பாட்டில் இல்லாதவற்றை, கட்டுப்படுத்த முயன்று  சோர்வாகி போனதுதான் மிச்சம். பிரஷாந்த் மறுபடியும் அவளிடம் முன்பு போல பேசுவானென்ற நம்பிக்கை போய்விட்டது.

அன்று அலுவலகத்தில், அவள் தயாரித்த பிராஜக்ட்டை க்ளையன்ட் மறுபடியும் ரெவ்யூ செய்யச் சொன்னார்.

“இன்னும் பெட்டரா எதிர்பார்க்கிறேன்” என்கிற அவரின் பதில், முழு நாளையும் கெடுத்துவிட்டது.

வீட்டுக்கு வந்த பிறகும்,  எண்ணங்கள் அங்கேயே சுழன்றாடியது.

‘நான் போதுமானவள் இல்லையா? எவ்வளவு முயற்சி பண்ணாலும் ஏன் சரியாக வரல? ஏன் எனக்கு மட்டும் எதுவுமே சரியா நடக்க மாட்டேங்குது? ஏன் என் வாழ்க்கை என் கட்டுப்பாட்டில் இல்லை’ எனக் கேள்விகள் அவளைக் குடைந்தன.

தனிப்பட்ட வாழ்வில் பிரஷாந்த் விஷயத்தில் காயம் பட்ட மனம் சிறு தோல்வியைக்கூடத் தாங்க இயலாத அளவுக்குப் பலகீனமாக இருந்தது. 

தற்கொலை செய்து கொண்டால் என்ன என்றுகூடத் தோன்றியது. ஒரு விநாடியில் அனைத்துத் துன்பமும் இல்லாமல் ஆகிவிடும். ஆனால் தான் ஏன் சாக வேண்டும் என்று அந்த எண்ணத்தைக் கைவிட்டாள். ஆனாலும் தன் வாழ்க்கையின் முடிவை எடுக்கும் உரிமை தனக்கு மறுக்கப்பட்டது போல உணர்ந்தாள். 

பல நாட்கள் சரியான உறக்கமின்றி உணவை ஒதுக்கி வைத்ததன் விளைவை உடல் காட்டியது. அன்று காலையில் எழும் போதே தலைச்சுற்றி சரிந்து படுக்கையிலேயே விழுந்தாள்.

கண் விழித்த போது மருத்துவமணையில் கண்ணீரோடு அமர்ந்திருந்த குடும்பத்தைப் பார்க்கவே குற்ற உணர்வாக இருந்தது. விஷயம் கேள்விப்பட்டு வந்த பிரஷாந்த் இவள் அட்டென்ஷன் சீக்கிங்கிற்காக  இப்படி உடம்பைக் கெடுத்து கொள்வதாக அவளையே குற்றம் சாட்டினான். அவளது மனம் படும்பாடு அவனுக்குப் புரியவில்லையா அல்லது கவலையில்லையா?

அவனது பேச்சில் அவளுக்கு உள்ளே ஏதோ உடைந்தது. தனக்காகப் பதற்றத்தோடு நிற்கும் தன் குடும்பத்தை விடவா இவன் முக்கியமென்று உடலைக் கொடுத்துக் கொண்டோமென்று மனம்  கூசியது.

இது தெரிந்தால் தன் குடும்பம் எப்படி வருத்தப்படும் என்று நினைத்தபோது இன்னும் வலித்தது. யார் முகத்தையும் பார்க்க முடியாமல் குறுகிப் போனாள்.

அன்று மாலை அண்ணனைத் தவிர, கூட யாரும் இல்லை. மெதுவாக அண்ணனிடம் அவள் உடல் நிலை மோசமான காரணத்தைக் கூறினாள்.

தலையைக் குனிந்தபடி அழுது கொண்டிருந்த மனிஷாவின் முகத்தை நிமிர்த்தியவன், “உன்னோட வலி எனக்குப் புரியுது. ஆனா, அதுக்காக உன்னையே வருத்திக்கிற அளவுக்கு எதுவும் முக்கியம் இல்லடா. நீ தனியா இல்ல. எந்தப் பிரச்னை வந்தாலும் உனக்குத் துணையா நாங்க இருக்கோம். எப்போ வேணும்னாலும் எங்ககிட்ட பேசலாம். அப்படியும் உனக்குச் சரியாகலைன்னா, நாம ஒரு கவுன்சிலரைப் பார்க்கலாம். உடம்புக்கு முடியலைன்னா டாக்டரைப் பார்க்கிற மாதிரிதான் இதுவும்.”

“இல்லண்ணா… “ அதற்கு மேல் பேச்சு வராமல் தேம்பினாள்.

அவளை ஆதரவாக அணைத்துக் கொண்டவன்,  ஜன்னலுக்கு வெளியே கை காட்டினான். 

மழை இன்னும் பலமாகப் பெய்துக்கொண்டிருந்தது.

“மழையை நிக்க வைக்க நம்மால முடியுமா?”

மனிஷா புரியாமல் பார்த்தாள். “எப்படி முடியும்?”

“ஆனா, மழை வரும்போது குடை எடுத்துக்கிட்டு போகலாம்ல?”

மனிஷா அமைதியாக பார்த்தாள்.

“வாழ்க்கையிலும் அப்படித்தான். சில விஷயங்கள் நம்ம கையில் இருக்காது. ஆனா, அதை எப்படி ஹேண்டில் பண்ணணும்னு மட்டும் நம்ம கையில் இருக்கும். உன் வாழ்க்கையை நீ கையில எடுத்துக்கோ. அப்போதான் உன்னோட சக்தி என்னன்னு உனக்கே புரியும்.“

அந்த  வார்த்தைகள்  அவள் மனதில் மாற்றத்தை உண்டாக்கின.

அன்று இரவு அவள் தனது டைரியில் கோடு போட்டு இரண்டு பிரிவாகப் பிரித்தாள்.

ஒன்றின் மேல், ’என் கட்டுப்பாட்டில் இல்லாதவை’. மற்றொன்றின் மேல், ’என் கட்டிப்பாட்டில் இருப்பவை.’

முதல் பட்டியல் சீக்கிரம் நிரம்பியது. மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள், யார்கூட இருக்கிறார்கள், யார் விட்டுச் செல்கிறார்கள், எதிர்காலம், மற்றவர்களின் அன்பு என நீண்டது.

நீண்ட நேரம் அந்தப் பட்டியலைப் பார்த்தாள் பார்த்தவள், பிறகு மெதுவாக இரண்டாவது பக்கத்தில் எழுத ஆரம்பித்தாள்.

நான் எப்படிப் பேசுகிறேன், எப்படி ஓய்வு எடுக்கிறேன், என்ன மாதிரி மனிதராக இருக்க விரும்புகிறேன், என்ன கற்றுக்கொள்கிறேன், யாரை மனசுக்குள் அனுமதிக்கிறேன், யார் எனக்கு எவ்வளவு முக்கியம்,  என் உடலை எப்படிக் கவனிக்கிறேன், என் நாளை எப்படி வாழ்கிறேன்.

அந்தப் பட்டியல் சிறியதாக இருந்தது. ஆனால், அதில் எழுதியவற்றைச் செயல்படுத்துவது அவளுக்குச் சவாலாகத் தோன்றியது. நன்றாகச் சாப்பிட்டு, உறங்கி, ஓய்வெடுத்து ஒரு வாரம் கழித்து அந்தப் பட்டியலை மீண்டும் பார்த்தபோது, அவள் மனம் கொஞ்சம் தெளிவாக இருந்தது. ஓய்வு, குடும்பத்தின் அரவணைப்பு, தான் தனியாக இல்லை என்கிற நம்பிக்கையால் தன்னைப் பற்றிய முடிவுகளைத் தன்னால் எடுக்க முடியும் என்கிற நம்பிக்கை அவளுக்குள் துளிர்விட்டது.


அதைப் பார்த்தபோதுதான், அவள் முழுமையாக பவர்லெஸ் இல்லை என்பதை உணர்ந்தாள். தன் வாழ்க்கையில் எல்லாவற்றையும் கட்டுப்படுத்த முடியாவிட்டாலும், தன்னால் முடிந்தவற்றைத் தேர்ந்தெடுக்கும் சக்தி தன்னிடம் இருப்பதை உணர்ந்தாள்.

அடுத்த நாள், பிரஷாந்த் எப்படி இருக்கிறாய் என்றுகூடக் கேட்கவில்லை. ஆனால் அவள் அதற்காக ஏங்கவில்லை.

க்ளையன்ட்  இன்னும் அதிகமாகக் கேட்பவராகத்தான் இருந்தார். ஆனால்… மனீஷா சோர்ந்து போகாமல் உழைக்கத் தயாராக இருந்தாள்.

திறன்பேசியைப் பார்த்துக் கொண்டிருப்பதை நிறுத்தினாள். அவள் தனது வேலையை அமைதியாகச் செய்ய ஆரம்பித்தாள்.

இரவு அதிகமாக யோசிக்காமல், தூங்குவதில் மட்டும் கவனம் செலுத்தினாள்.

அன்று இரவு அவளது டயரியில் ’எல்லாத்தையும் கட்டுப்படுத்த முயற்சித்ததால்தான் நான் சோர்ந்தேன். என்னால் முடிந்ததை மட்டும் கவனிக்க ஆரம்பித்தபோது மனம் கொஞ்சம் அமைதியானது.’

மழை நின்றிருந்தது, ஜன்னலைத் திறந்தாள். குளிர்ந்த காற்று முகத்தை தொட்டது.

’கண்ணாடி உடைந்தாலும்கூட
பிம்பங்கள் காட்டும் பார்க்கின்றேன்
புயல் போன பின்னும் புதுப் பூக்கள் பூக்கும்
இளவேனில் வரை நான் இருக்கின்றேன்!’

படைப்பாளர்:

யாமினி

வாழ்க்கைக் கல்வி மற்றும் மென்திறன் பயிற்சியாளர், இயற்கை விரும்பி, நெகிழி ஒழிப்பு ஆர்வலர், திடக் கழிவு மேலாண்மை பயிற்சியாளர். பயிலரங்குகள் நடத்துகிறார். உறவு மேலாண்மை தனிபட்ட ஆலோசகர். குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு விழிப்புணர்வை உருவாக்குவதின் மூலமே நாட்டின் நலம், இயற்கை வளம், சரிவிகித சமுதாயத்தை அடைய முடியுமென்று தீவிர நம்பிக்கை உள்ளவர். எல்லாச் சூழ்நிலைகளிலும் வாழ்தலைக் கொண்டாடுபவர்.