கணவருக்கு மாற்றுச் சிறுநீரக அறுவை சிகிச்சை முடிந்த பிறகு வயிற்றுக்கு வெளியே பொருத்தப்பட்டிருந்த அந்த பிளாஸ்டிக் வடிகால் பை (surgical drain bag) முழுக்க ரத்தம் நிரம்பிவிட்டதென்று போன பதிவில் எழுதியிருந்தேன் அல்லவா? சிஸ்டர் பதற்றமடைந்து உடனே மருத்துவரை வரவழைத்தார். அவர் வயிற்றை ஸ்கேன் செய்து பார்த்துவிட்டுச் சிறுநீரகத்துக்குப் பாதிப்பில்லை என்றார். ஆனால் அதிகளவு ரத்தப்போக்கு ஏற்பட்டால் சிறுநீரகம் செயலிழந்துவிடும் என்பதால் உடனே 500 மி.லி ரத்தம் ஏற்றினார்கள்.

மாற்றுச் சிறுநீரக அறுவை சிகிச்சை முடிந்து இன்னும் சில நாட்களில் வீடு திரும்பலாமென்று நினைத்திருந்த எங்களுக்கு இந்தப் புதுப் பிரச்னை கவலையை ஏற்படுத்தியது. என் மகள் மருத்துவம் படித்து ஹவுஸ் சர்ஜனாக இருந்ததால் அவruடைய பேராசிரியர்களிடம் அந்தப் பிரச்னையைச் சொல்லி அவர்களுடைய கருத்தைக் கேட்டாr. அவர்கள் போலி அனியூரிசம் (Pseudo aneurysm) ஒரு காரணமாக இருக்கலாமென்றார்கள். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஏற்படக்கூடிய முக்கிய ரத்தக் குழாய் பிரச்னைகளில் இதுவும் ஒன்று என்றனர்.

அனியூரிசம் (Aneurysm) என்பது ரத்தக் குழாயின் சுவர் பலவீனமடைந்து அதில் ஏற்படும் பலூன் போன்ற வீக்கம் அல்லது புடைப்பு எனலாம். தமனியில் ரத்தம் பாயும் அழுத்தத்தின் காரணமாக அந்த பலூன் விரிவடையும் போது, சுவர் இன்னும் பலவீனமடைந்து ஒரு கட்டத்தில் ரத்தக்குழாய் வெடித்துவிடும். அப்போது அதிகளவில் ரத்தப் போக்கு ஏற்படும்.

போலி அனியூரிசம் (Pseudo aneurysm) என்பது ரத்தக்குழாய் சுவரில் ஏற்படும் காயம் அல்லது சிறு ஓட்டை வழியாக ரத்தம் கசிந்து வெளியேறும். சுற்றியுள்ள திசுக்கள் வெளியேறும் அந்த ரத்தத்தைச் சுற்றி அடைத்துக் கொண்டு தற்காலிகமாக ஒரு பை போன்ற அமைப்பு உருவாகும். தமனியில் பாயும் ரத்த அழுத்தத்தின் காரணமாகவோ கிருமித் தொற்றின் காரணமாகவோ அந்தப் பை கிழிந்தால் அதிலுள்ள ரத்தம் வெளியேறி ரத்தப்போக்கு ஏற்படும்.  

இரண்டுக்குமான வேறுபாடு என்னவென்றால், அனியூரிசத்தில் ரத்தக் குழாயின் சுவரே பலவீனமடைந்து பலூன் போல வீங்கும். இந்தப் போலி அனியூரிசத்தில் ரத்தக் குழாயின் துளை வழியாகக் கசிந்து வெளியேறும் ரத்தம் ஒரு பை போலத் தேங்கி வீக்கத்தை ஏற்படுத்தும்.

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையில் தானமாகப் பெறப்பட்ட சிறுநீரகத்தின் தமனியும், நோயாளியின் ரத்தக் குழாயும் இணைக்கப்பட்டுள்ள இடத்தில் இது ஏற்படலாம்; கிருமித் தொற்றும் ரத்தக் குழாயின் சுவரைப் பாதித்து, அதைப் பலவீனப்படுத்தலாம் என்பதால் மாற்று சிறுநீரக அறுவை சிகிச்சை செய்த மருத்துவரைச் சந்தித்து என் மகள் போலி அனியூரிசம் பற்றிச் சொன்னார். ஆனால் அவர் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனாலும் அவr தொடர்ந்து வலியுறுத்தியதால் ஆப்ரேஷன் தியேட்டருக்கு அழைத்துச் சென்று சோதனை செய்வதாகச் சொல்லி அதற்கு ஒரு நாள் குறித்தார்.

அதற்கிடையில் கணவர் வயிற்றுக்குள் ஏற்பட்ட கடுமையான தொற்று (Peritonitis) காரணமாக ஏற்கெனவே பெரிடோனியல் டயலிசிஸ் செய்து கொண்டிருந்த கதீட்டரை நீக்கும்படியானது. மாற்று சிறுநீரகம் பொருத்தி அது வேலை செய்ய ஆரம்பித்த பிறகு, அந்தக் கதீட்டர் வழியே டயலிசிஸ் செய்ய அவசியமில்லாமல் போயிற்று. இனிமேல் அது தேவைப்படாதென்பதால் அதை நீக்கியது குறித்து நாங்களும் பெரிதாகக் கவலைப்படவில்லை.

ஒரு நாள் மாலை அந்த ரத்தப் போக்கு ஏற்பட்டதற்கான காரணத்தைக் கண்டறிய இவரை ஆப்ரேஷன் தியேட்டருக்கு அழைத்துச் சென்றார்கள். இரவு ஒன்பது மணியான பின்னும் இவரை வெளியே அழைத்து வரவில்லை. நானும் உறவினர்களும் கவலையுடன் ஆப்ரேஷன் தியேட்டர் வாசலில் காத்திருந்தோம். அரைமணி நேரம் கழித்து அறுவை சிகிச்சை மருத்துவர் வெளியே வந்தவுடன் அவரை நோக்கி ஓடினோம்.

“ஆப்ரேஷன் மேஜையிலேயே திடீரென்று அவருக்கு அதிகளவில் ரத்தப் போக்கு ஏற்பட்டுக் குளம் கட்டிவிட்டது. அந்த இக்கட்டான கணத்தில் உயிரா, சிறுநீரகமா என்று முடிவெடுக்க வேண்டிய கட்டாயம் எங்களுக்கு ஏற்பட்டது. எனவே வேறு வழியின்றி உயிரைக் காக்கச் சிறுநீரகத்தை நீக்க வேண்டியதாகிவிட்டது. ரத்தத்தைக் கட்டுப்படுத்த வலது காலுக்குப் போகும் பெரிய ரத்தக்குழாயையும் அடைக்கும்படி ஆகிவிட்டது. பெரிய பாதை அடைபடும் போது சிறிய ரத்தக் குழாய்கள் ஒன்றுடன் மற்றொன்று இணைந்து மாற்றுப் பாதையை உருவாக்கும். அப்படி இணைந்து போதுமான ரத்தம் அந்தக் காலுக்குப் போக வாய்ப்புண்டு. அப்படிச் சென்றால் பிரச்னையில்லை. இல்லாவிட்டால் அந்தக் காலை அகற்ற வேண்டிய நிலை ஏற்படலாம்” என்று சொல்லிவிட்டுத் தம் கடமை முடிந்துவிட்டதாக நினைத்து மருத்துவர் சென்றுவிட்டார்.

அவர் சொன்ன விஷயங்களைக் கிரகித்துக் கொள்ள எனக்குச் சில நிமிடங்களானது. அதிர்ச்சியில் அழக்கூடத் தோன்றாமல் அப்படியே திக்பிரமை பிடித்து நின்றேன். சுற்றி நின்ற உறவினர்கள் ஓவெனக் கதறியழுத போதுதான், எனக்கும் அழுகை பீரிட்டுக் கிளம்பியது.

‘சிறுநீரகம் செயலிழந்த பிறகு ஹீமோ டயலிசிஸ் ஆரம்பித்து ஃபிஸ்டுலா, கிராப்ட் அடுத்தடுத்துத் தோல்வியடைந்து, பெரிடோனியல் டயலிசிஸ் மாறி, இரண்டாண்டுகள் படாதபாடுபட்டு மாற்று சிறுநீரகம் எப்போது கிடைக்குமென்று எவ்வளவு ஏக்கத்தோடு காத்திருந்தோம்? சிறுநீரகம் பொருத்திய பிறகு தாம் விரும்பியதை எல்லாம் சாப்பிடலாமென்று அவர் எவ்வளவு ஆசைப்பட்டார்? விரும்பிய அளவு தண்ணீர் குடிக்கலாம் என்று மகிழ்ச்சியடைந்தாரே? அந்தச் சிறுநீரகம் போனதோடு நன்றாக இருந்த காலுக்கும் ஆபத்து வந்துவிட்டதே! அதற்குப் போதுமான ரத்தம் போகவில்லை என்றால் காலை நீக்க வேண்டியிருக்குமே… அந்த அதிர்ச்சியை அவர் எப்படித் தாங்குவார்? இந்த சிறுநீரகம் கிடைக்காமலே இருந்திருக்கக் கூடாதா?’ என்றெல்லாம் யோசித்து அழுது தீர்த்தேன்.

எங்களுக்குத் தெரிந்து எத்தனையோ பேர் அந்த அறுவை சிகிச்சை செய்து கொண்டு நார்மலாக வாழ்வதைப் பார்த்துத்தான் நாங்களும் அதற்கு ஆசைப்பட்டோம். ஆனால் ஏற்கெனவே இருந்ததை விட படுமோசமான நிலைக்கு எங்களைக் கொண்டு வந்து நிறுத்திவிட்டது, அந்த மாற்று அறுவை சிகிச்சை! 17/01/2013இல் பொருத்தப்பட்ட சிறுநீரகம், ஒரு மாதத்துக்குள்ளாகவே 15/02/2013இல் நீக்கப்பட்டது. கடைசி நாள் வரை அது நன்றாகச் செயல்பட்டது.

“வெளிப்புற இலியாக் தமனியில் (External Iliac Artery) ஏற்பட்ட அனியூரிசம் வெடித்ததால், மாற்றுச்சிறுநீரகம் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது (Graft nephrectomy due to external iliac artery aneurysmal rupture)” என்று மருத்துவமனை அதற்கு விளக்கம் தந்தது. இடுப்புப் பகுதியிலுள்ள முக்கிய தமனியான அந்த இலியாக்தான், காலுக்கு ரத்தம் செலுத்துவதில் முக்கியப் பங்களிக்கிறது.

சிறுநீரகம் அகற்றப்பட்ட அறுவை சிகிச்சை முடிந்து அவரைத் தீவிர சிகிச்சைப் பிரிவுக்குக் கொண்டு சென்றார்கள். எனவே மருத்துவமனையில் யாரும் துணைக்குத் தங்க முடியாதென்பதால் தம்பியை மட்டும் காத்திருப்போர் பகுதியில் இருக்கச் சொல்லிவிட்டு வீட்டுக்குத் திரும்பினோம். விடிய விடிய தூக்கமின்றிப் புலம்பிக் கொண்டிருந்தபோது அதிகாலை நான்கு மணிக்குத் தம்பியிடமிருந்து போன் வந்தது.

“அதிக ரத்தம் வெளியேறிவிட்டதால் ரத்த அழுத்தம் மிகவும் குறைவாக இருக்கிறது; நிலைமை சீரியஸ் என்பதால் நெருங்கியச் சொந்தங்களுக்குத் தெரிவிக்கச் சொன்னார்கள்” என்று பதற்றத்துடன் தம்பி சொன்னான். ‘கிட்னி போய், கால் போய் இப்போது உயிரே போகப் போகிறதா?’ என்று நாங்கள் பதறித் துடித்தபடி கிளம்பினோம். ஆனால் அந்த நேரத்தில் மருத்துவமனை செல்ல ஒரு ஆட்டோகூட கிடைக்கவில்லை. அப்போது ஓலா, ஊபர் வசதியில்லை. நடந்து நடந்து ஒவ்வொரு ஆட்டோ நிறுத்தமாகச் சென்று ஆட்டோ பிடித்து ஒருவழியாக மருத்துவமனை அடைவதற்குள் காலை ஆறு மணியாகி விட்டது.

நானும் மகளும் பயந்தபடி அவரைப் பார்க்க உள்ளே சென்ற போது, அவர் எழுந்து உட்கார்ந்திருந்தார்! எங்கள் கண்களை எங்களாலேயே நம்ப முடியவில்லை. சிறுநீரகம் அகற்றப்பட்ட விஷயம் அவருக்குத் தெரியவில்லை. எனவே உள்ளே அழுது கொண்டு, வெளியே சிரித்தபடி அவருடன் உரையாட வேண்டியிருந்தது. அந்தக் காலுக்கு ரத்த ஓட்டம் செல்கிறதா என்பதைச் சோதனை செய்ய என் மகள் முழங்காலுக்குக் கீழேயும், உள்ளங்காலிலும் கிள்ளிப் பார்த்த போது அவர் காலை இழுத்துக் கொண்டார். ‘நல்லவேளை, உணர்ச்சியிருக்கிறது; காலுக்கு ரத்த ஓட்டம் செல்கிறது,’ என்று நாங்கள் நிம்மதியடைந்தோம். மகள் ஏன் அப்படிச் செய்கிறாரென்று அவருக்குப் புரியவில்லை. அங்கே இருந்த சிஸ்டரைத் தனியே அழைத்துச் சென்று சிறுநீரகம் நீக்கப்பட்டதை அவருக்கு உடனே தெரிவிக்கவேண்டாமென்று கெஞ்சிக் கேட்டுக் கொண்டோம்.

அன்று காலை வந்த மயக்கமருந்து மருத்துவர், இவர் பிழைத்துவிட்டதைப் பார்த்து வியப்படைந்தார். “இன்று காலையில் இவருக்கு மரண அறிக்கை தயார் செய்து எழுத வேண்டுமென்று நினைத்து வந்தேன். இரவில் இவர் இருந்த நிலைமைக்குப் பிழைப்பாரென்று நான் நினைக்கவேயில்லை. இவர் உயிர் பிழைத்தது உண்மையிலேயே பெரிய அதிசயம்” என்றார் என் மகளிடம். மாற்று சிறுநீரகம் கிடைத்துப் பழையபடி வாழ வேண்டுமென்ற இவர் ஆசை, மரணத்தின் பிடியிலிருந்து இவரை மீட்டுக் கொண்டு வந்திருந்தது.

இவரைத் தீவிரச் சிகிச்சை பிரிவில் வைத்திருந்ததால் மருத்துவமனை செலவு எகிற ஆரம்பித்தது. அப்போது ஒரு நாள் அறை வாடகையே இருபத்தைந்தாயிரம் ரூபாய். மாற்றுச் சிறுநீரக அறுவை சிகிச்சைக்கு ஏழரை லட்சம் தயார் செய்யச் சொல்லியிருந்தார்கள். நான் பத்து லட்சம் எடுத்துவந்தேன். எதிர்பாராமல் அடுத்தடுத்த அறுவை சிகிச்சை செய்ய வேண்டி வந்ததாலும், தீவிரச் சிகிச்சைப் பிரிவில் வைத்ததாலும் அவர்கள் சொன்னதை விட மூன்று மடங்கு அதிகம் செலவானது.

மருத்துவமனை பில் பிரிவிலிருந்து “பணம் கட்டுங்கள்,” என்று தொடர்ச்சியாக போன் வந்தபடியிருந்தது. “இப்போதுதான் ஒரு லட்ச ரூபாய் கட்டிவிட்டு வருகிறேன்,” என்றால், “அது முந்தா நாள் பில். இது நேற்று பில்,” என்றார்கள். என் உடன் பிறந்தோரும் தந்தையும் எனக்குப் பக்கபலமாக இருந்தார்கள். அவர்களுடைய கிரெடிட், ஏடிஎம் கார்டுகளை பின் நம்பருடன் என்னிடம் கொடுத்துவிட்டார்கள். நான் அவற்றை வைத்துக் கொண்டு தொடர்ச்சியாகச் செலவு செய்தேன். காலத்தினால் அவர்கள் செய்த உதவியால் செலவு குறித்து நான் கவலைப்படாமலிருக்க முடிந்தது.

‘இப்போது சிறுநீரகம் இல்லை. மீண்டும் டயலிசிஸ் செய்தாக வேண்டும். கிருமித்தொற்று காரணமாக வயிற்றிலிருந்த பெரிடோனியல் டயலிசிஸ் கதீட்டரையும் நீக்கிவிட்டார்கள். இனி என்ன செய்வது?’ என்கிற கேள்வி எங்கள் முன் விஸ்வரூபமெடுத்து நின்றது!    

(தொடரும்)

படைப்பாளர்:

ஞா.கலையரசி

புதுச்சேரியைச் சேர்ந்தவர். ஸ்டேட்பாங்க் ஆஃப் இந்தியாவில்  வேலை செய்து ஓய்வு பெற்றுள்ளார். தற்போது சென்னையில் வசிக்கிறார். சிறார்களுக்காக இதுவரை 20 நூல்களை எழுதியிருக்கிறார். வானம், பாரதி புத்தகாலயம், நிவேதிதா, தமிழ்நாடு பாடநூல் கழகம் வாயிலாக நூல்கள் வெளிவந்துள்ளன. வானதி பதிப்பகம் வரலாற்று நாவலை வெளியிட்டுள்ளது. குழந்தைகளின் வாசிப்பை ஊக்குவிக்க ‘சுட்டி உலகம்’ எனும் வலைத்தளத்தை நடத்துகிறார். ‘பூஞ்சிட்டு’ எனும் குழந்தைகள் இணைய இதழின் ஆசிரியர் குழுவில் இருக்கிறார்.