‘உல்பாங்கே’ எனப்படும் அரசியின் குளியல் மண்டபத்தையும் அப்படியே இவ்விடத்தின் நெடிய வரலாறையும் பார்த்துவிட்டோம். இனி, கோயிலுக்குள்…
கோயில் உள்ளே செல்வதற்கான நுழைவுச் சீட்டுக் கட்டணம் ஒருவருக்கு ரூபாய் 1,500. கோயில் காலை 5.30 முதல் மாலை 8 மணிவரை திறந்திருக்கிறது. எங்களை ஒருவர் இடைமறித்தார். இந்திய ரூபாயில் ஐநூறோ ஆயிரமோ கூடுதலாக (சரியாக நினைவில்லை) கொடுத்தால், வரிசையில் நிற்காமல் பின்பக்கம் வழியாகக் கூட்டிச்செல்வதாகச் சொன்னார். நாங்கள் மறுத்துவிட்டோம். எளிமையாக நாமே சென்றுவிடலாம். சிரமமென எதுவுமில்லை. இதெல்லாம் ஏமாற்றுவேலைதான்.
கோவிலினுள் நுழையும் நேரம் மழை பிடித்துக்கொண்டது. வாசலில் நுழைவதற்கு முன் நம்மைப் பரிசோதனை செய்துதான் அனுப்புகிறார்கள். நாங்கள் அதன் எதிர்த்திசையில் நின்றுகொண்டிருந்தோம். அதனால் நனைந்துகொண்டே சென்றோம். அதுவும் இனிமையாகவே இருந்தது. வெய்யில் நம்மைச் சுட்டெரிக்கும்போது, மழையில் நனைவது என்பது இனிமைதானே! கண்டி என்பது மலைப்பகுதி என்பதால், சில நேரம் மேகம் சூழ்ந்து புகையினுள் கட்டடம் இருப்பதுபோன்றுள்ளத்தைச் சில புகைப்படங்களில் பார்த்திருக்கிறேன்.


கோவிலைச் சுற்றி அகழி, விளக்குகளை ஏற்றி வைப்பதற்காகத் துளைகள் கொண்ட சுற்றுச் சுவர், எண்கோண வடிவ முகப்புப் பகுதி, குனிந்தால் நிலவுக்கல், அதையடுத்து தெரியும் படிகள், இருபுறமும் இருக்கும் யானைகள், அவற்றைத் தாங்கி நிற்கும் உருவங்கள் என பார்க்கும் ஆர்வத்தை நுழைவாயில் ஏற்படுத்தியது. மாளிகையைச் சுற்றியுள்ள அகழியின் அருகே அமைந்துள்ள மதில், நீரலைச்சுவர் எனப்படுகிறது. இதில் தேங்காய் எண்ணெய் விளக்குகளை ஏற்றி வைப்பதற்காகவே தனித்துவமான துளைகள் செதுக்கப்பட்டுள்ளன. கண்டி கட்டிடக்கலையின் அடையாளமாகத் திகழும் இந்த எண்கோண வடிவ மண்டபம் ‘பத்திரிப்புவ’ (Paththirippuwa) என்றழைக்கப்படுகிறது.

அல்லி, தாமரை, நீலோற்பவம், போன்ற நீர்மலர்கள் மட்டுமில்லாமல், மல்லிகை, அரளி இவ்வளவு ஏன், எருக்கம்பூகூட வைத்து வழிபடுகிறார்கள். அறைக்குள் அமைதியான நிலையில் அமர்ந்து பலரும் வணங்குகிறார்கள். பழமைவாய்ந்த கட்டிடங்கள், ஓவியங்கள், பெரிதும் சிறிதுமான தந்தங்கள் மட்டுமல்ல புனிதப் பல் கொண்டுவரப்பட்ட வரலாறு, பேரரசர் அசோகரின் தூது, அசோகரின் மகள் சங்கமித்தை இலங்கைக்குப் போதி மரத்தின் கிளையைக்கொண்டுவந்த வரலாற்று நிகழ்வு, ஜாதகக் கதைகள், வாழ்க்கை வரலாறுபோன்ற சுவர் ஓவியங்கள் மற்றும் கூரை ஓவியங்கள், தங்கம் மற்றும் சிவப்பு பின்னணியில் ஒளிர்கின்றன. இவை ‘கண்டிய கால ஓவியக் கலை’ (Kandyan Era Murals) மரபின் மிகச்சிறந்த எடுத்துக்காட்டுகள்.
கண்டிய கால ஓவியங்களின் ஒரு முக்கியமான தன்மை, அவற்றில் காணப்படும் எளிமையான கோட்டோவியம் மற்றும் தொடர்ச்சியான கதை சொல்லும் முறை. ஒரு பெரிய சுவரில் ஒரே நிகழ்வை மட்டும் வரைவதற்குப் பதிலாக, புத்தரின் வாழ்க்கை அல்லது ஜாதகக் கதையின் பல நிகழ்வுகள் அடுத்தடுத்து இடம்பெறும். இதனால் கோவிலின் சுவரே ஒரு பெரிய கதைப்புத்தகமாக மாறிவிடுகிறது. கண்டிய கால ஓவியங்களின் சிறப்பு இது.
மாளிகையின் மேல் தளத்தில் (Upper Floor) புனிதப் பல் வைக்கப்பட்டுள்ள முதன்மை அறை, ‘வதா சிட்டின மாளிகவா’ (Wada Sitina Maligawa) என்று அழைக்கப்படுகிறது. இந்த அறையின் நுழைவாயில் மிகவும் நேர்த்தியான யானைத் தந்தங்கள், தங்கம் மற்றும் வெள்ளி வேலைப்பாடுகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தூரத்திலிருந்து ஏழு அடுக்குத் தங்கக் கலசத்தின் (Main Casket) வெளிப்புற வடிவத்தைத்தான் மட்டுமே பார்க்கமுடியும். இந்தக் கலசம் முழுவதும் பல்வேறு மன்னர்களால் காணிக்கையாக அளிக்கப்பட்ட விலைமதிப்பற்ற வைரங்கள், மரகதங்கள், மற்றும் மன்னர் கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்கனால் வழங்கப்பட்ட நீலக்கல் மாலைகளால் மூடப்பட்டிருக்கிறது. புத்த பெருமான் இன்றும் உயிருடன் அங்கு வாழ்வதாகக் கருதி, ஒரு மன்னருக்குச் செய்யும் அனைத்து கடமைகளும் (காலை முகம் கழுவுதல், ஆடை மாற்றுதல், முக்கால உணவு படைத்தல், மாலை ஓய்வு) இந்தப் புனிதப் பல்லிற்குச் செய்யப்படுகின்றன.

1986-ல் பிரதமர் ரணசிங்க பிரேமதாச, கூரையில் ஏற்பட்ட நீர்க்கசிவை சரிசெய்வதாக உறுதியளித்தார். அதன்படி, 1987-ஆம் ஆண்டு புனிதப் பல் வைக்கப்பட்டுள்ள உள் கருவறைக்குமேல் பிரம்மாண்டமான தங்கக்கூரை அமைக்கப்பட்டது.
வாசல் படி நிலவுக்கற்கள், வட்ட சூரியக் கற்கள் அதன்மேல் படிகள், அவற்றைத் தாங்கி நிற்கும் மனிதர்கள் என எல்லா இடங்களும் நம்மை ஈர்க்கும் விதமாகவே உள்ளன.

வெளியில் வளாகத்தில், சாணக்கியர் போன்ற சிலையொன்று உள்ளது. அந்தச் சிலை, இலங்கையின் கண்டி அரசின் பிரதமர் (Maha Adikaram) கெப்பெட்டிபொல திசாவே (Keppetipola Disawe) என்பவரின் சிலையாகும். 1818ஆம் ஆண்டு ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக இலங்கையில் நடைபெற்ற ‘ஊவா புரட்சியை’ (Uva Rebellion) முன்னின்று நடத்திய மாவீரர் இவர். ஆங்கிலேயர்களால் கைது செய்யப்பட்ட இவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. தூக்கிலிடப்படுவதற்கு முன், கண்டி தலதா மாளிகையை நோக்கித் தன் கைகளைக் கூப்பி வணங்கிவிட்டு, எவ்வித பயமும் இன்றி தன் உயிரைவிட்டார். இவரது வீரத்தைப் போற்றும் வகையிலேயே தலதா மாளிகை வளாகத்தின் அருகே இவருக்கு இந்தச் சிலை நிறுவப்பட்டுள்ளது.

வெளியில் வந்தால் சாலை மிகவும் அழகாகத் தெரிந்தது. இது தான் கண்டி எசல பெரஹரா /ஊர்வலம் (Esala Perahera) ஊர்வலம் வரும் சாலை. ஜூலை- ஆகஸ்ட் மாதங்களில் நடைபெறும் உலகப்புகழ் பெற்ற இந்தத் திருவிழா, கிபி 4 ஆம் நூற்றாண்டில், புத்தரின் புனிதப் பல்லக்கு இந்தியாவிலிருந்து இலங்கைக்குக் கொண்டு வரப்பட்டபோதே தொடங்கப்பட்டதாக நம்பப்படுகிறது.
எந்தெந்த ஊரில் பல் இருந்ததோ அந்தந்த ஊரில் விழா எடுக்கப்பட்டிருக்கிறது என்பதை நாம் பொன்னியின் செல்வனில் அனுராதபுரத்தில் நடைபெற்ற விழா குறித்து கல்கி சொல்வதிலிருந்து புரிந்துகொள்ளலாம். அனுராதபுரத்தில் தொடங்கி, பொலன்னறுவை, யாப்பகூவா, கோட்டே எனப் பல் பயணித்த அனைத்துத் தலைநகரங்களின் வீதிகளையும் பார்த்த இந்தத் திருவிழா, இன்று கண்டியில் தன் இறுதி வடிவத்தை அடைந்திருக்கிறது.

கல்கியின் புதினத்தில் அனுராதபுரத்தில் (கண்டியில் அல்ல; இந்தப் பகுதிக்குப் பொருத்தமாக இருக்கும் என்று இணைத்துள்ளேன்) நடைபெற்ற ‘பெரஹராத் திருவிழா’ விவரிக்கப்படுகிறது. ‘சேரன் செங்குட்டுவன் கண்ணகி என்னும் பத்தினித் தெய்வத்துக்கு விழா நடத்தியபோது இலங்கை கஜபாகு மன்னன் அங்கே சென்றிருந்தான். மற்றத் திருவிழாக்களையும் கண்டு களித்தான். பின்னர் ஒருசமயம் சேரன் செங்குட்டுவன் இலங்கைக்கு வந்திருந்தபோது கஜபாகு மன்னன், தமிழகத்தின் தெய்வமாகிய சிவபெருமான், திருமால், கார்த்திகேயர், பத்தினித் தெய்வம் ஆகிய நான்கு தெய்வங்களுக்கும் ஒரே சமயத்தில் திருவிழா நடத்தினான். பின்னர் ஆண்டுதோறும் அந்த விழாக்களை நடத்தத்தீர்மானித்தான். புத்தர் பெருமானுக்கு அவ்விழாவில் முதல் இடம் கொடுத்து, மற்ற நான்கு தெய்வங்களையும் பின்னால் வரச்செய்து விழா நடத்தினான். அன்று முதல் அந்த விழா இலங்கையில் நிலைத்து நின்று, மிகப்பெரிய திருவிழாவாக ஆண்டு தோறும் விடாமல் நடந்துவருகிறது. முதலில் வந்த யானை மீதிருந்த பெட்டிக்குள்ளே புத்த பெருமானுடைய பல் ஒன்றை வைத்திருக்கிறார்கள். சிவன், விஷ்ணு, முருகன், கண்ணகி ஆகியவர்களின் பற்கள் கிடைக்கவில்லை! ஆகையால் அந்தந்தத் தேவாலயத்தின் தெய்வங்கள் அணியும் திரு ஆபரணங்களை அந்தப் பெட்டிகளில் பத்திரமாய் வைத்துக் கொண்டு பின்னால் வரும் பெட்டிகளுக்குள்ளே கொண்டு போகிறார்கள்.’ இப்படிச் சொல்கிறார், கல்கி!
தொடரும்…
படைப்பாளர்

பாரதி திலகர்
தீவிர வாசிப்பாளர், பயணக் காதலர்; தொன்மை மேல் பெரும் ஆர்வம் கொண்டவர். அயல்நாட்டில் வசித்து வந்தாலும் மண்ணின் வாசம் மறவாமல் கட்டுரைகள் எழுதிவருகிறார். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய கட்டுரைகள், ‘பூப்பறிக்க வருகிறோம்’, ‘சினிமாவுக்கு வாரீகளா ? – 1, 2 & 3’ என்கிற புத்தகங்களாக, ஹெர் ஸ்டோரிஸில் வெளிவந்திருக்கின்றன. இவை தவிர ‘தமிழர் பாரம்பரிய விளையாட்டுகள்’, ‘நகர்தல் என்றும் நன்று’, ‘கேட்டல் என்றும் நன்று’, ‘ஒரு தாய் மக்கள்’ ஆகிய நூல்களை எழுதியுள்ளார். தொடர்ந்து இந்து தமிழ் திசை உள்ளிட்ட நாளிதழ்களில் எழுதிவருகிறார். இவரது நூல்கள் கவிதை உறவு உள்ளிட்ட விருதுகளை வென்றுள்ளன. ‘சினிமாவுக்கு வாரீகளா – 4’ மற்றும் ‘சாதனை படைக்கும் சாமானியர்’ என்கிற இரண்டு தொடர்களை ஹெர் ஸ்டோரீஸ் வலைத்தளத்தில் எழுதியுள்ளார்.




