“The federal government doesn’t sign treaties with states… It signs treaties with other governments. The Treaty of 1868 recognised our sovereignty and set the foundation for the Navajo to become one of the strongest and most recognizable indigenous nations in the world.” – Russell Begaye, President of the Navajo Nation.
“அமெரிக்க அரசாங்கம், மாநிலங்களுடன் உடன்படிக்கைகளில் கையெழுத்திடுவதில்லை. அது பிற அரசாங்கங்களுடன் மட்டுமே உடன்படிக்கைகளைச் செய்கிறது. 1868-ஆம் ஆண்டின் உடன்படிக்கை, நமது இறையாண்மையை அங்கீகரித்தது. உலகின் மிக வலிமையான, எளிதில் அடையாளம் காணக்கூடிய பூர்வகுடித் நாடுகளில் ஒன்றாக நவாஹோ அமைவதற்கான அடித்தளத்தையும் அது அமைத்துக்கொடுத்தது.” — ரஸ்ஸல் பெகே, நவாஹோ நாட்டின் தலைவர்.
புழுதி பறக்கும் செம்மண் நிலம், ஆளரவமற்ற பாலைவனங்கள், சிதறாத தியானத்தில் ஆழ்ந்த செங்குத்து செம்மலைகள், அதில் காற்றின் கைவண்ணத்தால் சிற்பமாகிய வளைவுகள் முதலியவற்றை பழைய ஹாலிவுட் படங்களில் பார்த்திருக்கலாம். அந்நிலப்பரப்பில்தான் (இன்றைய நியூ மெக்சிகோ மாநிலத்தின் வடமேற்குப்பகுதியில்) கி.பி. 900-க்கும் கி.பி. 1525-க்கும் இடைப்பட்ட காலத்தில் தங்களின் பண்பாட்டு, கலாச்சாரக் கூறுகளுடன் நவாஹோ பூர்வகுடிகள் வளமாக வாழ்ந்துவந்தனர். அப்பகுதியில் வாழ்ந்த பிற பூர்வகுடிகளுடன் நல்லமுறையில் வணிகத் தொடர்புகளும் வைத்திருந்தனர். காலப்போக்கில் நடந்த இடப்பெயர்வுகளுக்குப் பின்னர் இன்றைய வரலாற்றுப் புகழ்மிக்க ‘ஃபோர் கார்னர்ஸ்’ (Four Corners) என்கிற இடத்தில் நிலைகொண்டனர். அமெரிக்காவின் கொலராடோ (Colorado), யூட்டா (Utah), அரிசோனா (Arizona), நியூ மெக்சிகோ (New Mexico) ஆகிய நான்கு மாநிலங்களின் எல்லைகள் சந்திக்குமிடம் இந்த ஃபோர் கார்னர்ஸ். அந்த வட்டாரத்தில் கண்ணுக்கெட்டிய தூரம்வரையிலுமுள்ள நிலம் அவர்களுக்குச் சொந்தமாக இருந்தது.



இன்றும் அமெரிக்காவில் வாழும் பூர்வகுடி இனங்களிலேயே அதிகமான மக்கள்தொகை கொண்டவர்களாக (2,50,000-க்கும் மேற்பட்டவர்கள்) நவாஹோக்கள் உள்ளனர். அதேபோல், அமெரிக்க அரசிடம் இழந்த நிலங்கள் போக, தங்கள்வசம் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பினை தக்க வைத்துக்கொண்ட பெருமையினையும் கொண்ட இனம் நவாஹோ. ஏனைய பூர்வகுடிகளைப்போலவே இவர்களும் ஆன்மீகத்தில் சிறந்து, இயற்கையோடு இயைந்து வாழ்ந்துவந்தனர்.
‘டினே பிஸாட்’ (Diné Bizaad) மொழி பேசும் நவாஹோக்கள் அலாஸ்கா, கனடாவின் மேற்குப் பகுதியில் வசித்த அதபாஸ்கன் (Athabaskan) மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கக்கூடும் என மொழியியல் அறிஞர்கள் கூறுகின்றனர். இடப்பெயர்வுக்குப் பிறகு இறுதியாக ‘ஃ போர் கார்னர்ஸ்’ பகுதிக்கு வந்திருக்கலாமென அகழ்வாராய்ச்சிகளும் தெளிவுபடுத்துகின்றன. தொடக்கத்தில் வேட்டைச் சமூகமாக இருந்தவர்கள், தங்களின் அண்டை பூர்வகுடிகளான ‘பியூப்லோ’ (Pueblo) மக்களிடமிருந்து வேளாண்முறைகளைக் கற்று, வேளாண்சமூகமாக மாறினர். அத்துடன், வாழ்க்கைக்கான பல திறன்களையும் வழிபாட்டு முறைகளையும் அவர்களிடமிருந்தே கற்றறிந்தனர்.
பதினாறாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அப்பகுதிக்கு ஸ்பானிய பயணிகளின் (Spanish explorers) வரவு தொடங்கியது. ஸ்பானியர்களின் வரவால் நவாஹோ மக்களுக்கு ஆடுகளும் குதிரைகளும் அறிமுகமாயின. சூழலுக்குத் தகுந்தவாறு தங்களைத் தகவமைத்துக்கொள்ளும் திறன்மிக்க நவாஹோக்கள், விலங்குகளை மேய்ச்சலுக்கும் வேளாண்மைக்கும் பயன்படுத்தப் பழகிக்கொண்டனர். ‘சுர்ரோ’ (Churro) செம்மறி ஆடுகள், கம்பளி நெசவுக்கலை (Navajo weaving / Rugs) போன்றவை அவர்களுக்குப் பொருளாதார நிறைவைத்தந்தன. இவர்களின் ஆன்மிக நம்பிக்கைகளும், மணல் ஓவியங்கள், பானைச்சித்திரங்கள் முதலிய பாரம்பரியக் கலை வடிவங்களும்கூட இயற்கையை ஒட்டியே இருந்தன. நவாஹோ மக்களின் புலம்பெயர் பாரம்பரியமும் தகவமைப்புத்திறனும் அமெரிக்காவின் மிகப்பெரிய பூர்வகுடி இனமாக சிறந்து விளங்க உதவியுள்ளன என வரலாறு கூறுகிறது.
19-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நவாஹோ பூர்வகுடிகள் அமெரிக்காவின் தென்மேற்குப் பகுதியில் வலிமை பெற முனைந்தனர். பதினாறாம் நூற்றாண்டு முதல் ஓரளவு சீராக இருந்த ஸ்பானியர்களுடனான உறவுமுறையில் அப்பொழுது நேரடி உரசல்கள் வரத்தொடங்கின. ஸ்பானியர்கள், நவாஹோக்களுக்கு எதிராக அப்பகுதியில் இருந்த கோமன்ச்சி (Comanche), யூட் (Ute Native Indians) பூர்வகுடிகளைத் தங்கள் பக்கம் அணிதிரட்டிக்கொண்டனர். இந்த அரசியல் கூட்டணியால், பல நவாஹோ மக்கள் ஸ்பானியர்களின் அடிமை வர்த்தகத்தில் சிக்கி வணிகப்பொருளாகிப்போனார்கள். 1600-களின் ஆரம்பம்முதல், 1864ஆம் ஆண்டு அமெரிக்க இராணுவம் அவர்களை முழுமையாக முடக்கும்வரை, நவாஹோ பூர்வகுடிகள் தங்களின் எல்லைகளைப் பாதுகாக்க கடுமையான போராட்டங்களைச் சந்தித்தனர். ஒருபுறம், வலிமையான ஸ்பானியப் படைகளும், மெக்சிகப் படைகளும் அத்துமீறி நவாஹோ மக்களின் எல்லைப்பகுதிகளை அபகரிக்கமுயன்றன. மறுபக்கம், வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவதும், பகையாளிகளான பழங்குடியினரின் கொள்ளைகளுக்கு (Raids) எதிர்தாக்குதல் தொடுப்பதுமாக நாள்கள் பரபரப்பாக நகர்ந்தன.
மெக்சிக-அமெரிக்கப் போரின்போது, 1846-ல் அமெரிக்கப் படைகள் நியூ மெக்சிகோவை ஆக்கிரமித்தன. 1848-ஆம் ஆண்டின் குவாடலூப் ஹிடால்கோ உடன்படிக்கை (Treaty of Guadalupe Hidalgo), நவஹோ மக்களின் நாடு உள்ளிட்ட பகுதிகளை அமெரிக்காவுக்கு மாற்றிக்கொடுத்தது. அந்த உடன்படிக்கை பற்றிய தகவல்கூட நவாஹோக்களுக்குத் தரப்படவில்லை. 1849-ஆம் ஆண்டில் இப்பழங்குடியினரைக் கட்டாய உடன்படிக்கைக்கு உட்படுத்த அமெரிக்க அரசாங்கம் ஒரு படையை அனுப்பியது. இப்பேச்சுவார்த்தை கலவரமாக வெடித்தது. அதில் அமைதிக்காக பாடுபட்டு வந்த நர்போனா (Narbona) என்கிற நவாஹோ தலைவரும் எண்பத்திற்கும் மேற்பட்ட பூர்வகுடிகளும் கொல்லப்பட்டனர். இப்படுகொலையால் சீர்குலைந்த இருதரப்பு உறவு, மீண்டும் சுமுகமாக மாறுவதற்குப் பல காலமானது.
1851-ஆம் ஆண்டில், அமெரிக்க ராணுவம் தற்போதைய விண்டோ ராக் (Window Rock) பகுதிக்கு அருகில், டினே (Diné) எனப்படும் நவஹோ நிலத்தின் மையப்பகுதியில் ‘ஃபோர்ட் டிஃபையன்ஸ்’ (Fort Defiance) என்கிற கோட்டையைக் கட்டியது. அதைத் தொடர்ந்து அமெரிக்க ராணுவத்தின் மேய்ச்சல் நில ஆக்கிரமிப்பு, பூர்வகுடிகளின் கால்நடைகளைச் சுட்டுக்கொல்வது போன்றவை தொடர்ந்தன. இப்பூர்வகுடிகளுக்கு ஆடுகளும் குதிரைகளும் வாழ்வாதாரத்தின் அடிப்படைத் தேவை என்பதைத்தாண்டி, ஆன்மீகத் தொடர்பு உடையதாக அவர்கள் கருதினர். ஆகையால் 1860-ஆம் ஆண்டில், மேனுவலிட்டோ (Manuelito), பார்போன்சிட்டோ (Barboncito) போன்ற வீரத்தலைவர்கள் பெரும்படையுடன் சென்று, அக்கோட்டையை அநேகமாக கைப்பற்றிவிட்டனர். 1861-ஆம் ஆண்டில் நியூ மெக்சிகோவிலுள்ள ஃபோர்ட் ஃபான்ட்லராய் (Fort Fauntleroy) கோட்டையில் நடைபெற்ற குதிரைப்பந்தயம் அமெரிக்க வீரர்களின் சூழ்ச்சியால் கலவரமாக வெடித்தது. இதில் ஏராளமான பழங்குடியினர் சுட்டுக் கொல்லப்பட்ட இந்தச் சம்பவத்தை, ‘ஃபோர்ட் ஃபான்ட்லராய் படுகொலை’ என வரலாறு குறித்துக்கொண்டது. இத்தகைய தொடர் மோதல்களையும் படுகொலைகளையும் தடுப்பதாகக்கூறி, நவாஹோ மக்களை அவர்களின் சொந்த நிலத்திலிருந்து முற்றிலும் அப்புறப்படுத்த அமெரிக்க ராணுவத் தலைவர்கள் முடிவுசெய்தனர்.
இதற்கிடையில் 1861-இல் அமெரிக்க அரசாங்கம் கடுமையான விளைவுகளோடு, உள்நாட்டுப் போரை (American Civil War) சந்திக்கத் தொடங்கியது. அடிமைத்தனத்தை ஆதரிக்கும் தென்மாநிலங்களின் பெரும்பண்ணை (Plantation) முதலாளிகள் (தெற்கு மாநிலங்களின் கூட்டமைப்பு – Confederates) ஒருபக்கம் அணிதிரண்டனர். அடிமைத்தனத்தை முழுமூச்சாக ஒழிக்க வடக்கு மாநிலங்கள் அமெரிக்க அரசாங்கத்தின் தலைமையில் ஒன்றிணைந்தன. தென்மேற்குப் பகுதியில் இருந்த நியூ மெக்சிகோ போன்ற பகுதிகள் தெற்கு மாநிலங்களின் கூட்டமைப்பின் கைகளுக்குப் போய்விடக்கூடாது என்பதில் அமெரிக்க அரசாங்கம் மிகுந்த கவனம் செலுத்தியது.
கலிபோர்னியா தங்கவேட்டையிலிருந்து வரும் தங்கம் (California Gold Rush) தெற்கு கூட்டமைப்பு கைப்பற்றிவிடக் கூடாதென அமெரிக்க அரசு வலுவாக எண்ணியது. அடுத்ததாக, 1850-60-களில் நியூ மெக்சிகோவில் குடியேறிய வெள்ளையின மக்களுக்கு அந்நிலத்தின் கனிம வளங்களும் மேய்ச்சல் நிலங்களும் சென்றடைய வேண்டுமென்பதிலும் தீவிரமாக இருந்தது. அனைத்துக் காரணங்களையும் முன்னிறுத்தி, நவாஹோ மக்களின் நிலப்பரப்பில் அமெரிக்க ராணுவம் தனது நேரடி ஆதிக்கத்தை நிலைநிறுத்த முடிவு செய்து ஜெனரல் ஜேம்ஸ் எச். கார்ல்டன் தலைமையில் படைகளை அனுப்பியது. இந்நகர்வு நவாஹோ பூர்வகுடிகளின் வாழ்க்கையையே பறிக்கக்கூடிய திருப்புமுனையானது.
அமெரிக்க அரசாங்கம் நியூ மெக்சிக்கோவிலும் அரிஸோனாவிலும் இருந்த நவாஹோ (டினே) மக்களின் மூதாதையர்களின் நிலங்களை கைப்பற்றத்திட்டமிட்டது. கார்ல்டன் அப்பழங்குடியினரை நூற்றுக்கணக்கான மைல்களுக்கப்பால் இருந்த பாலைவனத்தில் பாஸ்க் ரெடாண்டோ (Bosque Redondo) ஒதுக்கீட்டுப் பகுதியில் (Reservation) அடைக்க முடிவெடுத்தார். 40 மைல் சதுர பரப்பளவில், கடுமையான கட்டுக்காவலுடன் திறந்தவெளி பாலைவனத்தில் அவர்களைக் குடியேற்றினால், பூர்வகுடிகளின் பண்பாட்டுக் கலாச்சாரக் கூறுகளை சிதைப்பது எளிதென கணித்தார். அவ்வாறு மாற்றப்பட்டால், விவசாயிகளாக அரசாங்கத்தைச் சார்ந்து வாழ்வார்கள் என்றும் கருதினார். பல்வேறு ராணுவ அதிகாரிகள் அப்பாலைவனம் வாழ்வதற்கு ஏற்றதல்ல என்று கூறியும் ஜெனரல் கார்ல்டன் பிடிவாதமாக அவர்களை அகற்றுவதில் ஈடுபட்டார்.


நவாஹோ தலைவர்கள் அனைவரும் 1863 ஜூலை 20-க்குள் நிபந்தனையின்றி சரணடைய வேண்டுமென்ற இறுதி எச்சரிக்கையை அனுப்பினார். அகற்றுதலைத் தீவிரமாக நடைமுறைப்படுத்தும் பொறுப்பை எல்லைப்புற குடியேறியான (Frontier) ‘கிட் கார்ஸனிடம்’ (Kit Carson) ஒப்படைத்தார். பழங்குடிகளை சரணடையச் செய்வதற்காக, கார்ஸன் ராணுவத்தினருடன் சேர்ந்து நவாஹோ கிராமங்களையும் பயிர்களையும் தீயிட்டுக்கொளுத்தினார் (scorched-earth campaign). கால்நடைகள் வெட்டிக்கொல்லப்பட்டன, நீர்நிலைகள் அழிக்கப்பட்டன.


1863-64-ஆம் ஆண்டுகளின் பனிக்காலத்தில், வாழ்வாதார அழிப்பு உச்சத்தை அடைந்தது. பட்டினியாலும் பனிக்காலத்தில் தங்குவதற்கு வீடுகளின்றியும் ஆயிரக்கணக்கான நவாஹோ மக்கள் சரணடையத்தொடங்கினர். 1864-ஆம் ஆண்டு வரலாற்றுத் துயரம் தோய்ந்த ‘தி லாங்க் வாக்’ (The Long Walk) என்கிற நவாஹோ பூர்வகுடிகளின் ‘நீண்ட பயணம்’ தொடங்கியது. ராணுவ கெடுபிடியுடன் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பூர்வகுடிகள் ‘பாஸ்க் ரெடோண்டோ’ என்கிற இடத்தை அடைய ஏறத்தாழ 400 மைல் தூரம் நடந்தனர். நடக்க இயலாதவர்கள் ஆங்காங்கே கைவிடப்பட்டனர் அல்லது சுட்டுக்கொல்லப்பட்டனர். இக்கொடிய பயணத்தில் குறைந்தபட்சம் இருநூறு பேர் உயிரிழந்தனர். உயிர் தப்பியவர்கள், அரசாங்கம் ஒதுக்கிய நிலத்தில் இட நெருக்கடி, சுகாதாரமற்ற சூழல், உணவுப் பற்றாக்குறை என பலவிதத் துயரங்களை எதிர்கொண்டனர்.


1864 -1868 வரையிலான நான்கு வருட காலம் நவாஹோ மக்களின் வாழ்வு கிட்டத்தட்ட சிறைவாசம்போல அமைந்தது. அவர்கள் அவ்விடத்தை ‘ஹ்வீல்டி’ (Hwéeldi) என்றழைத்தனர். ‘துன்பங்கள்/அச்சம் நிறைந்த இடம்’ என்கிற பொருளில் அவ்வாறு அழைக்கப்பட்டது. ஆண்டுதோறும் அறுவடை பொய்த்தது. தரமற்ற தண்ணீர், விறகு தட்டுப்பாடென வாழ்க்கை மிகவும் சவால் மிகுந்ததாக மாறியது. இக்கொடுமைகளால் மரணத்தைத் தழுவிய ஆயிரக்கணக்கான நவாஹோ மக்கள் அடையாளமற்ற இடுகாடுகளில் புதைக்கப்பட்டனர். அப்பயணத்தின் கொடுமையான நினைவுகள் இன்றும் அம்மக்களிடையே அச்சத்தின் அதிர்வலைகளாக நிலவுகின்றன. அவர்களின் வரலாற்றில் இந்த பக்கங்கள் மறக்க முடியாத வலியாக வடிக்கப்பட்டுள்ளது.
மனிதர்கள் வாழத் தகுதியற்ற அச்சூழலில் பட்டினியாலும் உறைபனியாலும் நவாஹோக்கள் உழன்றது கடும் கண்டனங்களை எழுப்பியது. பொதுமக்களின் நெருக்குதலால் அமைக்கப்பட்ட ஆணையம், அங்கு நிலவிய சூழலைக் கண்டு அதிர்ச்சியடைந்தது. அதன் எதிரொலியாக அரசாங்கம் தங்களின் சோதனை முயற்சி தோல்வியடைந்துவிட்டதென ஒப்புக்கொண்டு ஜெனரல் கார்ல்டனை பதவிநீக்கம் செய்தது. அதன் விளைவாகத்தான், வரலாற்றுப் புகழ்பெற்ற 1868ஆம் ஆண்டு ஒப்பந்தம் (The Treaty of 1868) ஏற்பட்டது. அந்த ஒப்பந்தம் நவாஹோ பூர்வகுடிகளுக்கு தங்களின் பூர்வீக நிலங்களில் வாழும் மகத்தான உரிமையை மீட்டுத்தந்தது.


இதற்கிடையில், ஓக்லஹோமா ஒதுக்கீட்டுப் பகுதிகளுக்கு நவாஹோக்களை அனுப்பும் முயற்சிகள் நடந்தன. எனினும், பேச்சுவார்த்தைகளில் அவர்களின் பிரதிநிதியான தலைவர் பார்போன்சிட்டோ (Barboncito), தமது மக்கள் சொந்த மண்ணிற்குத் திரும்புவதைத்தவிர வேறொன்றையும் விரும்பவில்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.


1868, ஜூன் 1ஆம் நாளன்று இராணுவ பேரேட்டின் தாளொன்றைக் கிழித்து அதில் 1868-ஆம் ஆண்டு ஒப்பந்தம் (The Treaty of 1868) எழுதப்பட்டது. அதில் நவாஹோ தலைவர்களும் அமெரிக்க அரசாங்க அதிகாரிகளும் கையெழுத்திட்டனர். அதை நவாஹோ மக்கள் தங்களின் மொழியில் ‘பழைய தாள்’ என்று பொருள்பட ‘ நால்ட்ஸ்யூஸ் சானி’ (Naaltsoos Sání) என்றழைத்து போற்றிவருகின்றனர். தங்கள் அடையாளத்தை மீட்டெடுத்த அந்த நாளை ஆண்டுதோறும் ‘ஒப்பந்த நாள்’ எனச் சிறப்பித்துக் கொண்டாடி வருகின்றனர். எந்த இடத்தில் வளமாக பரந்து விரிந்து வாழ்ந்தனரோ அங்கேயே இன்றும் அமெரிக்காவின் மிகப்பெரிய பூர்வகுடி இனமாக பெருமையுடன் வாழ்ந்து வருகின்றனர்.


தாய்மண் திரும்பிய நவாஹோக்கள் ஆடு வளர்ப்பு, கம்பளங்கள் (rugs), வெள்ளிப் பொருட்கள் தயாரிப்பு மூலம் பொருளாதாரத்தை மேம்படுத்தினர். 1950–60களில் கண்டறியப்பட்ட எண்ணெய், எரிவாயு வருவாயைத் தந்த அதேவேளை, நீரும் மேய்ச்சல் நிலமும் சேதமடைந்து கடுமையான சுற்றுச்சூழல் பாதிப்புகளையும் ஏற்படுத்தின. 1940-களில் தொடங்கிய யுரேனியம் அகழ்வாராய்ச்சி பணவரவைத் தந்தாலும், கதிரியக்கக் கசிவால் (radioactive contamination) மரணங்களையும் நோய்களையும் பரிசளித்தது. இதற்கிடையில் தலைவர்கள் கல்வியை வலியுறுத்த, கிறிஸ்தவப் பிரிவுகள் மதம் மாற்றும் முயற்சிகளைத் தொடர்ந்தன.
இப்பூர்வகுடியினரை ‘நாகரிகமாக’ மாற்ற பல முயற்சிகள் தொடர்ந்து மேற்கொண்டன. அதனால் நவாஹோக்களின் பாரம்பரிய வழிபாட்டு முறைகளைப் பின்பற்றுவதிலும் தடைகள் தொடர்ந்தன. நவாஹோ மக்களின் பிள்ளைகளை விடுதிப் பள்ளிகளில் (Boarding Schools) வலுக்கட்டாயமாக சேர்க்கும் திட்டத்தாலும் இடர்கள் இம்மக்களைத் தொடர்ந்தன. நவாஹோ பூர்வகுடி தங்களை நோக்கி வந்த அத்தனை தடைகளையும் தகர்த்து, புதிய சூழலுக்குத் தங்களைத் தகவமைத்துக்கொண்டு தலைநிமிர்ந்து வாழ்கின்றனர். இப்போதும் இங்குதான், இன்னும் அந்த நான்கு புனித மலைகளுக்கு மத்தியில்தான் வாழ்கிறார்கள்… நாளையும் வாழ்வார்கள்… என்றென்றும் வாழ்வார்கள்.



பெட்டிச் செய்தி:
இரண்டாம் உலகப் போரின் போது, பசிபிக் போர்க்களத்தில் அமெரிக்க கடற்படைப் பிரிவில் பணியாற்றிய நவாஹோ வீரர்கள், ஜப்பானிய எதிரிகளால் ஒருபோதும் உடைக்க முடியாத ஒரு நுட்பமான இரகசியக் குறியீட்டுத் தொடர்புமொழியை உருவாக்கினர் (Navajo Code Talkers). அத்திட்டத்திற்கு முதுகெலும்பாகத் திகழ்ந்தவர் பிலிப் ஜான்ஸ்டன் (Philip Johnston). அவர் அமெரிக்கக் கப்பற்படையில் கட்டுமான பொறியாளராக இருந்தார். அவருடைய தந்தை மதபோதகர் என்பதால் பிலிப், நவஹோ ரிசர்வேஷன் பகுதியில் வளரும் சூழலைப் பெற்றார். ‘ டினே’ எனப்படும் நவாஹோ மொழியில் நல்ல அறிமுகமும் கொண்டிருந்தார். அவரின் பரிந்துரையின் பேரில், எழுத்து வடிவே இல்லாத நவாஹோ (டினே) மொழியின் சிக்கலான இலக்கணத்தை அடிப்படையாகக்கொண்டு இந்தக் குறியீட்டுத்திட்டம் தொடங்கப்பட்டது. 1942-இல் கலிபோர்னியாவில் நடத்தப்பட்ட சோதனையில், வெறும் 20 வினாடிகளில் செய்திகளை இவர்கள் வெற்றிகரமாகப் பரிமாறி, அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினர். இந்த ரகசியக் குறியீடு இரண்டு முறைகளில் வடிவமைக்கப்பட்டது. ஒன்று ‘டினே’ மொழியின் நேரடி மொழிபெயர்ப்பு , எடுத்துகாட்டாக நீர்மூழ்கிக்கப்பல் என்பதை பேஷ்-லோ (இரும்பு மீன்) என பூர்வகுடி மொழியில் கூறுவது; மற்றொன்று அகரவரிசை ஒலிப்பு முறையில் மாற்றத்தின் மூலமாக செயல்படுத்தப்பட்டது (எ.கா: ‘A’ என்பதற்கு எறும்பு அல்லது ஆப்பிள்) இதனால் எதிரிகளின் உளவுத்துறை, குழப்பமான செய்திகளையேப் பெற்றது.
படைப்பாளர்

ராஜி வாஞ்சி ( ராஜஶ்ரீ வாஞ்சிநாதன்)
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம், ஹூஸ்டனில் வசிக்கும் ராஜி, கட்டுரையாளர், கவிஞர். இவரது ‘நீளிடைக் கங்குல்’ 2020ஆம் ஆண்டின் தமிழ்நாடு அரசின் தமிழ்வளர்ச்சித்துறை வழங்கும் சிறந்த நூலுக்கான விருது வென்றுள்ளது. கவிஞர் அமிர்தகணேசனுடன் இணைந்து, ‘ஏன் விரட்டினீர்கள், எங்களை?’ என்கிற அமெரிக்கப் பூர்வகுடிகள் பற்றிய வரலாற்றுக் கவிதை மற்றும் கட்டுரைத் தொகுப்பை எழுதியுள்ளார். ‘குறிஞ்சி பூத்த வேலி’, ‘ஜன்னல் உரசும் வண்ணத்துப்பூச்சி’ ஆகிய கவிதைத் தொகுப்புகளை எழுதியுள்ளார். குழுவாக இணைந்து பல படைப்புகளைத் தந்துள்ளார். இவரது பல படைப்புகள் தொகுப்பு நூல்களில் வெளியாகியுள்ளன. இவரது ஹைக்கூ, சிவகாசி அய்யாநாடார் ஜானகிஅம்மாள் கல்லூரி பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. வட அமெரிக்கப் பேரவையின் FeTNA கவியரங்கங்களில் இடம் பெற்றுள்ளார்; கவியரங்க ஒருங்கிணைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். மகாகவி ஈரோடு தமிழன்பன் 80 விருது, Women Achievement Award 2022 for exemplary service to the community, வெளிநாடு வாழ் பெண் கல்பனா சாவ்லா விருது உள்ளிட்ட பல விருதுகளையும் வென்றுள்ளார்.
ஹூஸ்டன் பாரதி கலை மன்றத்தின் இலக்கிய இயக்குநராகப் பணியாற்றியவர், அதன் ‘தமிழ்ச்சாரல்’ இதழ் ஆசிரியராகவும் செயல்பட்டுள்ளார். ஹூஸ்டன் பாரதி கலைமன்றத்தின் ‘நாளைய பாரதி’ என்கிற வடஅமெரிக்க அளவிலான, அனைத்து வயதினருக்குமான இலக்கியப் பேச்சுப் போட்டியின் ஒருங்கிணைப்பாளராகவும், நிகழ்ச்சி வடிவமைப்பில் முக்கிய பங்கும் வகித்துவருகிறார். இவரின் படைப்புகள் பல இதழ்களில் வெளியாகியுள்ளன.




