கங்காராமய்யாவில் (Gangaramaya Temple) நுழைந்ததும் ஒரு புத்த ஸ்தூபி உள்ளது. கதவின் மரப்பலகைகளுக்கு நடுவே பதிக்கப்பட்டுள்ள செப்பு அல்லது பித்தளைத் தகடுகளில் (Intricate Metal Embossing) அன்னப் பறவைகள், கொடிப் பின்னல்கள் மற்றும் சிங்க முக வடிவிலான கைப்பிடிகள் (Traditional Door Knockers) செதுக்கப்பட்டுள்ள நுணுக்கமான கலைத்திறனை இதில் மிக நெருக்கமாகக் காண முடிகிறது.

உள் பகுதியில் அமர்ந்திருக்கும் புத்தரின் சிலை மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிற ஆடைகளுடன் காட்சியளிக்கிறது. அவரது தலைக்கு பின்னால் உள்ள வட்ட வடிவ ஒளிவட்டம், அதன் விளிம்புகளில் மிக நுணுக்கமான வண்ண வேலைப்பாடுகள் மிகச்சிறப்பு! புத்தர் சிலைக்கு மேலே பின்னணியில், புத்தர் படுத்த நிலையில் படுத்திருக்கும் (Reclining Buddha) அவரது இறுதி மறைவான ‘பரிநிர்வாண’க் காட்சி வண்ணச் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது. அருகில் அவரது சீடர்கள் துயரத்துடன் இருக்கும் நிலையும் செதுக்கப்பட்டுள்ளது. 

பௌத்தர்களின் வழிபாடான தாமரை மலர்களை வைத்து மக்கள் வழிபாடு செய்கிறார்கள். இவையெல்லாம் இங்கு தான் முதலில் பார்க்கிறேன் என்பதால் வியப்பாக இருந்தது. ஆனால் அனைத்து விகாரைகளிலும் இது தான் வழக்கம் எனப் பிறகு தான் தெரிந்தது. அப்படியே கண்ணை சிறிது நகர்த்தினால் இவரைவிட பெரிய புத்தர் இருக்கிறார். இப்படி எங்கு பார்த்தாலும் புத்தர் புத்தர் புத்தர் தான். நம் தலைக்கு மேலே அந்தரத்தில் நிற்பது போன்று சுவரில் ஒரு புத்தர் நிற்கிறார்.

மேலும் சுற்றுப்புறம் முழுவதும் விதவிதமான வேலைப்பாடுகள்! ஜாதகக் கதைகள் (Jataka Tales) ஓவியமாக எங்கும் பரவலாக இருக்கின்றன. ஜாதகக் கதைகள் (Jataka Tales) என்பவை புத்தர் பிறப்பதற்கு முன்பாக, எடுத்த முந்தைய பல நூறு பிறவிகளைப் பற்றிய கதைகளின் தொகுப்பு.

சுவரின் கீழ் வரிசையில், புத்தரின் சமகாலத்தில் வாழ்ந்த அரசர்கள், இளவரசர்கள் மற்றும் முதன்மையானவர்கள் உருவங்கள் வரிசையாக வரையப்பட்டுள்ளன. பிம்பிசார மன்னர், சுத்தோதனர்…. அவர்கள் கைகளில் புத்தருக்கு கொடுக்க காணிக்கைப் பொருட்கள், மலர்கள் மற்றும் நறுமணப் பாத்திரங்களை ஏந்தி, பக்திப் பெருக்குடன் வரிசையாக நடந்து செல்வது போன்ற ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. இந்த ஓவியங்களில் உள்ள அரசர்களின் ஆடைகள், அவர்கள் அணிந்துள்ள நீளமான வேட்டிகள், இடுப்புக் கச்சுகள் மற்றும் தோள்களில் உள்ள ஆபரணங்கள் எல்லாம் வெகு சிறப்பு!

விகாரையின் ஒவ்வொரு மூலையிலும் இத்தனை கலைநயமிக்க சிற்பங்கள் ஒளிந்திருப்பது வியப்பில் வெகுவாக ஆழ்த்துகிறது.

அடுத்து முதன்மை கட்டிடத்திலிருக்கும் அருங்காட்சியகமெல்லாம் தனிச்சிறப்பு.

புத்தரின் சிலைகளே ஆயிரக்கணக்கில் இருக்கும். இந்திய, தாய்லாந்து, சீனா போன்ற நாடுகளில் புழக்கத்தில் உள்ள புத்தர்கள், நீலமும் பச்சையும் கலந்த நிறத்தில் இருக்கும் புத்தர், நல்ல கரும்பச்சை நிற புத்தர், வெண்ணிற புத்தர் என வகை வகையாக உள்ளன. 

பௌத்த வரலாற்றின்படி, சித்தார்த்த இளவரசர் லும்பினி நந்தவனத்தில் பிறந்தவுடன், தரையில் கால் பதித்து ஏழு அடிகள் நடந்து சென்றார். ஒவ்வொரு அடி வைக்கும் போதும் அவரது பாதங்களுக்குக் கீழே ஒரு தாமரை மலர் மலர்ந்தது. அவர் தனது வலது கையின் ஆள்காட்டி விரலை வானத்தை நோக்கி உயர்த்தி, இருக்கும் சிலை உள்ளது. 

கண்ணாடிப் பெட்டியின் உள்ளே, பேழைக்கு மேல் ஒரு பிரமாண்டமான வெள்ளை நிற முத்துக்கள் மற்றும் மணிகளால் ஆன அரச வழிபாட்டுக் குடை விரிந்து நிற்கிறது.

வெண்கலத்தால் ஆன பகோடா ஸ்தூபி மாதிரிகள்,  தாமரை இதழ் வடிவப் பித்தளை மலர்ச்சாடி, தந்தங்கள் சிறிதும் பெரிதுமாகப் பல உள்ளன. பிள்ளையார் சிலைகள் வெவ்வேறு வடிவங்களில் பல உள்ளன. நாட்டார் கடவுள்கள், பெண் போதிசத்துவார்கள், குறிப்பாக இசைக்கருவிகளை மீட்டும் போதிசத்துவார்கள், வழிபாட்டுப் பொருள்கள், விளக்குகள் பாத்திரங்கள், அணிகலன்கள், கடிகாரங்கள், பதப்படுத்தப்பட்ட மாபெரும் முதலையின் உடல், பழங்கால கடல் ஆமையின் ஓடு, இலங்கையின் பாரம்பரிய கலைநயமிக்க ஒரு பழங்கால வெண்கலக் குத்துவிளக்கு, அடுக்கு ஸ்தூபிகள் பொறிக்கப்பட்ட அரிய கற்சுவர் பலகை மற்றும் பாரம்பரியத் தீப அமைப்பு, பழைய வாகனங்கள் என எண்ணிலடங்காத பொருள்கள் உள்ளன. இளவட்டக்கல்கூட இருக்கிறது. 

மஞ்சள் நிறப் பட்டு வழிபாட்டுக் குடைகளின் முழு நீள மரக் கைப்பிடிகள் (Wooden Staffs) மற்றும் அவற்றின் உச்சிப் பகுதிகள், பட்டுத் துணியின் மேல் மிக நேர்த்தியான தங்க நிற நூல் வேலைப்பாடுகள், விளிம்புகளில் அழகான தொங்கட்டான் குஞ்சங்கள் இப்படி சிறிய ஒரு பொருளே பெரிய அழகைக் கொடுக்கிறது. 

கங்காராமய்யா கோவிலின் வெளிப்புற திறந்தவெளியில் உள்ள சிலை அடுக்கு மாடம்’ மற்றும் போரோபுதூர் பாணி கோபுரக் காட்சியைக் (The Iconic Statue Terraces and Stupa View) நமக்குக் காட்டுகிறது.

பின்னணியில் வானத்தை நோக்கி உயர்ந்து நிற்கும் வெள்ளை நிற அடுக்குக் கோபுரம், கோபுரத்தின் சிறிய மாதிரியாகும். ஒரு மலைச் சரிவில் அடுக்கப்பட்டது போல, படிகளாக ஏறும் வரிசைகளில் நூற்றுக்கணக்கான கற்சிலைகளும் வெண்கலச் சிலைகளும் அமர்ந்துள்ளன. தனிச்சிறப்பான அமைப்பு.

கொழும்பில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாத பௌர்ணமி அன்று (Navam Poya) நடைபெறும் உலகப் புகழ்பெற்ற ‘நவம் மகா பெரஹரா’ (Navam Maha Perahera) திருவிழாவில் கங்கா மிக முக்கியப் பங்கு வகித்தது. கங்கா யானை கோவிலின் தூணில் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருப்பதை ஆவணப்படுத்திய பல சர்வதேசப் பயணிகள் மற்றும் விலங்கு நல ஆர்வலர்கள், அதன் சுதந்திரம் குறித்துப் பெருமளவில் குரல் எழுப்பினர். இதன் விளைவாக, இலங்கையில் யானைகள் பாதுகாப்புச் சட்டங்கள் தீவிரமாக்கப்பட்டதன் பின்னணியிலும், கங்கா கோவிலில் பொதுமக்களின் பார்வையில் இருந்து மாற்றப்பட்டு, பின்னர் பாதுகாப்பான மாற்று இடத்திற்கு (Maharagama Temple) கொண்டு செல்லப்பட்டதாகத் தெரிகிறது. 

‘கங்கா’ என்ற இந்த யானையின் உண்மையான உடல் பாகங்களைக் கொண்டு பதப்படுத்தப்பட்ட வடிவம் இங்கு உள்ளது. அதன் தடிமனான தோல், காதுகளின் புள்ளிகள் தந்தங்கள் அனைத்தும் அதன் மறைவிற்குப் பிறகும் விகாரையின் ஒரு வரலாற்றுச் சான்றாக இங்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு நாம், கடந்த பகுதியில் வீதியில் பார்த்த இரும்புக்கழிவுகளால் ஆன யானைச் சிலைக்குப் பின்னால் இருக்கும் பின்னணி இங்கு வரலாறாக உள்ளது.

ஒரு பக்கம் புத்தர் சிலையும் அதனருகில் அரச மரமும் உள்ளன. அனைத்து புத்த கோவில்களிலும் அரச மரம் ஒன்றோ ஒன்றிற்கு மேற்பட்டோ உள்ளன. சில இடங்களில் தங்க நிறக் கம்பி வேலி போன்று அமைத்திருக்கிறார்கள். மக்கள் அரச மரத்தைச் சுற்றி வருகிறார்கள். தாமரை முதல் எருக்கம்பூ வரைப் பலவகைப் பூக்கள் கொண்டு வந்து வைத்து வணங்குகிறார்கள். பத்தியும் கொளுத்துகிறார்கள். இங்கு இருக்கும் அரச (போதி) மரம்  அநுராதபுரத்தில் உள்ள மரத்தின் கன்று. அநுராதபுர மரம் இந்தியாவின் போதி மரத்திலிருந்து கொண்டுவரப்பட்ட மரம்.

புத்த  சமய வகுப்புகளும் இங்கு நடைபெறுகின்றன. நாங்கள் சென்ற நேரம் சிறுவர்களுக்கான வகுப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தது. விடுமுறை நாள்களில் ‘தஹம் பாசல்’ (Daham Pasal) எனப்படும் இந்த மதக் கல்வி வகுப்புகள் நடைபெறும் பொதுவாகவே புத்த கோவிலுக்கு வரும்போது வெள்ளை நிறப் பருத்தி ஆடைகளையே அனைவரும் அணிகிறார்கள். சிறுவர்களும் தூய வெண்ணுடை வேந்தர்களாக இருந்தார்கள். குறிப்பாகப் பெண் குழந்தைகள் அவர்களின் உடையான பாவாடை மற்றும் கழுத்துப் பகுதியில் சுருக்குகள் வைத்துத் தைத்த சட்டையும் அணிந்திருந்தனர். வகுப்பு தானே எனச் சுற்றிப் பார்த்தால் அங்கும் நூற்றுக் கணக்கான புத்தர்கள். மொத்தத்தில் இவ்விடம் ஒரு கலைக்களஞ்சியம். 

விகாரை, பகோகடா, அருங்காட்சியகம், நூலகம், கல்விக் கூடம் எனப் பெரிய இடமாக உள்ளது. விகாரை என்பது முதன்மையாகத் துறவிகள் வசிக்கும் இடம். பகோடா என்பது கோபுரம். இது இந்திய ஸ்தூபியின் வடிவத்திலிருந்து உருவானது. தேரர் எனப்படும் பல புகழ்பெற்ற அறிஞர்களின் வாழ்விடமாக இது உள்ளது.  

ஒரு வரலாற்றாளர், இங்கு இருக்கும் பொருள்கள் ஒவ்வொன்றையும் தனித்தனியாகப் பார்க்க வேண்டுமென்றால், குறைந்தது பத்து நாள்களாவது ஆகும். அவ்வளவு பொருள்கள் உள்ளன. ஆனால் எதையுமே சீராக வைக்கவில்லை. அடைந்து வைத்திருக்கிறார்கள். சீராக அடுக்கி, ஏதாவது ஒருவகையில் வகைப்படுத்தி வைத்தால் மிகவும் சிறப்பான கலைப்பொருள் தொகுப்பாக இது அமையும். இப்போது வைத்திருக்கும் இடத்தைப் போல் இருபது முப்பது மடங்கு இடம் தேவைப்படும். அவ்வளவு பொருள்கள் உள்ளன.

இப்படி அடைந்து வைத்திருக்கிறார்களே என்ற கவலை வந்தது. துருக்கியின் தலைநகர் இஸ்தான்புல்லில் இப்படி அனைத்துப் பொருள்களையும் வகைப்படுத்தி, பெயர் ஆண்டு போன்ற தகவல்களை வைத்துள்ளார்கள். இலங்கை அரசும் ஆவன செய்யலாம்.

தொடரும்

படைப்பாளர்

பாரதி திலகர்

தீவிர வாசிப்பாளர், பயணக் காதலர்; தொன்மை மேல் பெரும் ஆர்வம் கொண்டவர். அயல்நாட்டில் வசித்து வந்தாலும் மண்ணின் வாசம் மறவாமல் கட்டுரைகள் எழுதிவருகிறார். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய கட்டுரைகள், ‘பூப்பறிக்க வருகிறோம்’, ‘சினிமாவுக்கு வாரீகளா ? – 1, 2 & 3’ என்கிற புத்தகங்களாக, ஹெர் ஸ்டோரிஸில் வெளிவந்திருக்கின்றன. இவை தவிர ‘தமிழர் பாரம்பரிய விளையாட்டுகள்’, ‘நகர்தல் என்றும் நன்று’, ‘கேட்டல் என்றும் நன்று’, ‘ஒரு தாய் மக்கள்’ ஆகிய நூல்களை எழுதியுள்ளார். தொடர்ந்து இந்து தமிழ் திசை உள்ளிட்ட நாளிதழ்களில் எழுதிவருகிறார். இவரது நூல்கள் கவிதை உறவு உள்ளிட்ட விருதுகளை வென்றுள்ளன. ‘சினிமாவுக்கு வாரீகளா – 4’ மற்றும் ‘சாதனை படைக்கும் சாமானியர்’ என்கிற இரண்டு தொடர்களை ஹெர் ஸ்டோரீஸ் வலைத்தளத்தில் எழுதியுள்ளார்.