பவன் பற்றிய தகவல் கேள்விப்பட்டவுடன், விமலை அவன் மயங்கிக் கிடந்த இடத்திற்குச் சென்று ஆய்வு செய்யுமாறு அனுப்பிவிட்டு ஜெய்யும் பரிமளாவும் அரசு மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தனர்.
அங்கே காவலுக்காக உதவி ஆய்வாளர் தனலட்சுமி மற்றும் இரு காவலரும் பணியமர்த்தப்பட்டிருந்தனர்.
“வணக்கம் மேடம், கேஸ் உங்க ஸ்டேஷன் லிமிட்லதான் வருதா” என விசாரித்தாள் பரிமளா.
“ஆமாம்ப்பா, ரோந்துல இருந்தப்ப நாந்தான் அவனைப் பார்த்தேன்” என அவர் சொல்லிக்கொண்டிருக்கும்போதே அங்கே வந்தான் ஜெய்.
தனலட்சுமியை ஜெய்க்கு அறிமுகம் செய்து வைத்தாள் பரிமளா. “இப்ப அவரோட கண்டிஷன் எப்படி இருக்கு? வாக்குமூலம் வாங்க முடியுமா?” என வினவினான்.
அவன் நரம்பியல் மருத்துவ தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டிருப்பதால் அதன் உள்ளே சென்று பார்க்க யாருக்குமே அனுமதி இல்லை என்பதைத் தெரிவித்தார் தனலட்சுமி. எனவே மருத்துவரைச் சந்திக்கச் சென்றனர்.
“பேஷண்ட்டுக்கு இன்னும் நினைவு திரும்பல. கோகைன் ஓவர் டோஸ், அதனால பாடி டெம்பரேச்சர் ரொம்ப அதிகமாயிருக்கு. இத ஃபீவர்னு சிம்பிளா சொல்லிட முடியாது. மெடிக்கல் டெர்ம்ல இந்த கண்டிஷன ஹைபர்தெர்மியான்னு சொல்லுவோம். கரெக்ட்டான நேரத்துல ட்ரீட்மெண்ட் ஸ்டார்ட் பண்ணதால ஆர்கன் பெயிலியர் ஆகாம காப்பாத்த முடிஞ்சுது” என ஜெய்யிடம் விளக்கினார் பவனுக்குச் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்.
“உடம்புல வேற ஏதாவது இஞ்ஜுரிஸ், லைக் யாராவது அட்டாக் பண்ண மாதிரி?”
“இல்ல சார், அந்த மாதிரி எதுவும் இல்ல.”
“ஓகே டாக்டர், தேங்ஸ்” என ஓர் அதிருப்தியுடன் இருவரும் வெளியில் வர அவர்களை நோக்கி ஓடிவந்தார் தனலட்சுமி.
தன் பேண்ட் பாக்கெட்டில் இருந்து அறுந்து போயிருந்த பென்டன்ட்டுடன் இணைந்த ஒரு செயினை எடுத்தவர், “கஸ்டடில எடுக்கும்போது இந்த செயின் அவரோட கையில இருந்தது சார்” என்று அதனைக் கொடுத்தார். பரிமளா அதை வாங்கித் தன் பேண்ட் பாக்கெட்டில் போட்டுக் கொண்டாள்.
அதற்குள் ஜெய்க்கு ஓர் அழைப்பு வர அங்கிருந்து நகர்ந்து போனான்.
“என்ன மேடம், எர்லி மார்னிங்கே டியூட்டி பிடிச்சுகிச்சு போல? ஏதாவது சாப்டீங்களா இல்லையா?” என்று வினவினாள் பரிமளா.
“எங்கிருந்துப்பா, டீ-லயே ஓடிட்டு இருக்கு” என்றார்.
“நான் வேணா இங்க இருக்கேன். நீங்க மூணுபேரும் போய்ச் சாப்டுட்டு வாங்க” எனப் பரிமளா சொல்ல, “நானும் இன்னும் எதுவும் சாப்பிடல, வாங்க மத்த டீடைல்ஸ டிஸ்கஸ் பண்ணிட்டே சாப்டுட்டு, பி.சிஸ் ரெண்டு பேருக்கும் வாங்கிட்டு வந்துடலாம்” என்றான் அவர்கள் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டபடி வந்த ஜெய்.
இருவரும் தயக்கத்துடன் அவனை ஏறிட, “அட, வாங்க போகலாம்” என நடக்கத் தொடங்கினான். அருகிலிருந்த ஓர் உணவகத்துக்கு வந்தனர் மூவரும்.
உணவை ஆர்டர் செய்துவிட்டுக் காத்திருக்க, “முதல்ல உங்களைப் பாராட்டணும் மேடம், ரொம்ப சிறப்பா செயல்பட்டு, சீனியர்ங்கறத ப்ரூவ் பண்ணியிருக்கீங்க” என தனலட்சுமியைப் புகழ்ந்தான் ஜெய். முகம் விகசிக்கப் புன்னகைத்தார் அவர்.
“ரோடுல ஒருத்தர் மயங்கி கிடக்கிறத பார்த்தோம், சார். உடனே போய் அட்டென்ட் செஞ்சோம். எங்க பிசி ஒருத்தர் தான் அவர பவன்னு அடையாளம் கண்டுபிடித்து சொன்னாரு. உடனே ஃபர்ஸ்ட் எய்ட் செஞ்சு நூத்தி எட்டுக்கு போன் செஞ்சோம்” என்றார்.
உணவு வரவும், சாப்பிட்டபடியே அவர்களின் பேச்சு தொடர, “என்ன மேடம் அந்த சுப்ரியா கேஸ் ஏதாவது முடிவுக்கு வந்துச்சா” என வினவினாள் பரிமளா.
“எங்க, ஒரு சின்ன க்ளூகூட கிடைக்கல” என அங்கலாய்த்தார்.
“அது என்ன கேஸ்? நம்ம ஜூரிலயா வருது?” என ஆர்வமுடன் கேட்டான் ஜெய்.
“ஆமாம் சார்” என அந்த வழக்கைப் பற்றிச் சொன்னார் தனம். மேலோட்டமாகக் கேட்பது போல் கேட்டுக் கொண்டாலும், அமுதாவின் வழக்கால் விரைவாகத் தீர்க்கப்பட வேண்டிய பல பிரச்னைகள் தேங்கிப்போய் அப்படியே நிற்பதாகத் தோன்றியது ஜெய்க்கு.
“ஆமாம், அந்த பவன ரெஸ்கியூ செஞ்சப்ப பக்கதுல யாரும் இருந்தாங்களா என்ன?” என வினவினான்.
“இல்லையே, சார்.”
“செயின் ஒண்ணு கொடுத்தீங்கல்ல, அப்ப அது எப்படி அவன் கைல வந்திருக்கும்?”
“இது போல நிறைய கேள்விகள் இருக்குங்க, சார். அவன் எப்படி அந்த இடத்துக்கு வந்தான்? யாராவது கொண்டுவந்து போட்டிருப்பாங்களா? இல்ல, துரத்திட்டு வந்து, இவன் மயங்கவும் விட்டுட்டு ஓடிட்டாங்களா? ஒண்ணும் புரியல. அந்த செயின பார்த்தாக்க, சும்மா ஆன்லைன்ல விக்கற சாதா சில்வர் பிளேட்டட் செயின் மாதிரி இருக்கு. யாரப் பார்த்தாலும் போட்டுட்டுத் திரியறாங்க. அத வெச்சு யாரன்னு கண்டுபிடிக்கறது” என்றார்.
“ரொம்ப யோசிச்சு மண்டைய ஒடச்சுக்காதிங்க. ஃப்ரீயா விடுங்க. அவன் கண்ணு முழிச்சா எல்லாம் தெரிஞ்சிடும்” என்று சாப்பிட்டு முடித்து மற்ற இருவருக்கும் பார்சல் வாங்கிக் கொண்டு அங்கிருந்து கிளம்பினர்.
மருத்துவமனை சென்று அங்கே சில நிமிடம் காத்திருந்து பார்த்தும் பவனுக்கு நினைவு திரும்பாமல் போக, அவனுக்கு சுய நினைவு திரும்பியவுடன் தெரியப்படுத்துமாறு தனலட்சுமியிடம் சொல்லிவிட்டு ஜெய்யும் பரிமளாவும் அங்கிருந்து கிளம்பினர்.
*
தேநீர் கப்புகளுடன் பரிமளாவின் பணி அறைக்குள் நுழைந்தாள் சிந்து.
“என்ன ஐயா, இன்னைக்கு மொத்த வெயிலும் உங்க தொப்பிக்கு மேல தான் போல” என்று கேட்டபடி ஒரு கப்பை அவளுக்கு அருகில் வைத்து விட்டு, எதிரில் அமர்ந்து தன்னுடையதைப் பருகத் தொடங்கினாள்.
“என்ன கொழுப்பா? இந்த பவனை அட்மிட் பண்ணி இருக்கிற ஆஸ்பத்திரியில் டியூட்டி போடச் சொல்றேன், போறீயா?” என்று பரிமளா சொன்ன விதத்தில் மூன்று சிரிப்பினால் அவளுக்குப் புரையேறியது.
“அடேய், பார்த்து! டியூட்டிக்குப் போகறதுக்குப் பதிலா நீயே போய் அட்மிட் ஆகிட போற” என்று பரிமளா மேலும் அவளை வாற, “விட்றுங்க தெய்வமே” என சரணடைந்தாள். அப்பொழுது அவளின் பார்வை மேசைமீது கிடந்த செயினில் பதிய, “ஐ… போட்டோ பென்டென்ட்டு… யாருது மேடம் இது?” எனக் கேட்டாள்.
“என்னாது, போட்டோ பெண்டென்ட்டா?” என வியந்தாள் பரிமளா.
“ஆமா… இதெல்லாம் ஆன்லைன்லதான் கிடைக்குதே. இந்த டாலருக்குள்ள நம்ம கேட்கிற போட்டோவை வச்சு கஸ்டமைஸ் செஞ்சு கொடுப்பாங்க. கிஃப்ட் கொடுக்க சூப்பரான ஐட்டம். எனக்கும்கூட என்னோட பாய் ஃப்ரெண்டுக்கு இது மாதிரி ஒண்ணு வாங்கிக் கொடுக்கணும்னு ஆச. ஆனால் ஆயிரம் இரண்டாயிரத்துக்கு இப்ப பட்ஜெட் இல்ல” என்றாள் சிந்து.
“என்ன, இதுக்குள்ள போட்டோ இருக்குமா! அத எப்படிப் பார்க்கறது?”
‘நமக்கு நம்ம கவல, இவங்களுக்கு இவங்க கவல’ என மனதிற்குள் புலம்பியபடி அந்த செயினைக் கையில் எடுத்து, “இப்படிப் பார்க்கணும்” என அந்தப் பென்டன்டைத் தன் கண்ணுக்கு அருகில் வைத்துப் பார்த்தவள், “ஐயோ, அந்தச் செத்துப்போன பொண்ணு” என அலறினாள். அவளின் கையில் இருந்த செயின் நழுவிக் கீழே விழுந்தது.
ஒன்றுமே புரியவில்லை பரிமளாவுக்கு. “என்ன, அமுதாவா?” என்றபடி ஓடிவந்து அந்த செயினைக் கையில் எடுத்தாள். அந்த பெண்டண்டில் பதித்திருக்கும் சாதாரணக் கல் என நினைத்தது, இப்போது ஒரு லென்ஸ் பொன்று தோன்றியது. சிந்து செய்தது போலவே கண்ணுக்கு அருகில் அதை வைத்துப் பார்க்க அதிலிருந்த உருவம் அவளுக்குத் தெளிவாகத் தெரியவில்லை.
“என்ன ஓண்ணுமே தெரியல” என்றாள்.
“இப்படி வெளிச்சத்துக்கு நேரா வெச்சுப் பாருங்க, தெரியும்” எனச் சிந்து அவளுக்கு உதவ, படம் தெளிவாகத் தெரிந்தது. ஆம்… அதிலிருந்தது அமுதாவேதான். அவளுடன் கூடவே மிக நெருக்கமாக நின்றிருந்தான் ஒருவன். இருவரின் முகத்திலும் மகிழ்ச்சியும் பூரிப்பும் மின்னியது.
சிந்து பிந்தொடர அதை எடுத்துக்கொண்டு ஜெய்யை நோக்கி ஓடினாள். “பார்றா, டெக்னாலஜி… இதெல்லாம் நமக்குப் புரியல பாருஙக, கலக்கறீங்க சிந்து” என அவளைப் பாராட்டினான். அதில் மேலும் உற்சாகமாகிப் போனவள், “சார், இத போன்ல போட்டோ எடுத்து, இமேஜ் சர்ச் செஞ்சா, எந்த வெப்சைட்ல இருந்து வாங்கி இருக்காங்கன்னு தெரிஞ்சிரும்” என்றாள்.
‘லவ் ஜுவெல்’ என்கிற இணையதளத்தில் வாங்கி இருப்பது தெரிந்தது. அவர்களுடைய தொழில்நுட்பப் பிரிவின் மூலம், அமுதாவின் புகைப்படத்தை வைத்து மேலும் விசாரித்ததில், அதை ஆர்டர் செய்தது அமுதாதான் என்பது ஊர்ஜிதமானது. மேலும் அந்த செயின் டெலிவரி செய்யப்பட்ட விலாசமும் கிடைத்தது.
பரிமளா, சிந்து மற்றும் தாமு மூவரும் அங்கே சென்றனர். அக்கம்பக்கம் விசாரித்து வீட்டைக் கண்டறிந்தனர். ஒரு பெரிய பங்களாவின் ஒதுக்குப் புறமாக அமைந்திருக்கும் அவுட்ஹவுஸ் அது. சிந்து சென்று கதவைத் தட்ட, திறந்தவன் அந்த பெண்டண்ட் போட்டோவில் அமுதாவுடன் இருந்தவனேதான், கஜபதி.
அவர்களைப் பார்த்ததும் பதற்றமானவன், ஓர் எட்டுக்கூட எடுத்துவைக்க முடியாமல் வசமாகச் சிக்கிக் கொண்டான்.
அதே நேரம், ‘மாயா லா அஸோஸியேட்ஸ்’ அலுவலகத்தின் காத்திருப்போருக்கான இருக்கையில் அமர்ந்திருந்தாள் அமுதா, முள்ளின் மீது அமர்ந்திருப்பவள் போல.
மாதினியின் அலுவலக அறையிலிருந்து வெளிப்பட்டான் மனோகர்.
“உள்ள போய் மாதினி மேடம்ம பாருங்க” என்று அவன் சொல்ல, கதவைத் தள்ளிக்கொண்டு உள்ளே செல்வதற்குள் அவளுடைய கால்களே துவண்டுபோனது.
மாதினியை நேர்கொண்டு பார்க்கப் பயம் தடுத்தது. சமாளித்து, “வணக்கம் மேடம்” என்றாள்.
சிறு புன்னகையுடன், அமருமாறு இருக்கையை நோக்கிக் கை காண்பித்தாள் மாதினி.
எளிமையான தோற்றம். தன்னம்பிக்கையைப் பறைசாற்றும் தெளிவான முகம். இதயம் வரை ஊடுருவும் லேசர் கண்கள். பார்வையில் கனிவு. மொத்ததில் கம்பீரம். ‘ஆரா பத்துக்குப் பத்து’ என்றுதான் அமுதாவுக்குத் தோன்றியது.
அனிச்சையாக அவளின் பார்வை மாதினிக்குப் பின்னால் இருந்த கண்ணாடிக் கூண்டுக்குள் சென்றது. அங்கே அசைவற்று, சிலையாக நின்றிருந்த யாமினியைப் பார்த்ததும் அவளுக்கு மயக்கமே வந்துவிட்டது.
(தொடரும்)
படைப்பாளர்

எழுத்தாளர் கிருஷ்ணப்பிரியா நாராயணன். தமிழ் நாவலாசிரியர் மற்றும் பதிப்பாளர். சென்னையில் வசிக்கிறார். சென்னை வானொலி நிலைய நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்தவர். இவரது பதினாறு நாவல்கள் புத்தகங்களாக வெளிவந்திருக்கின்றன. ஹெர் ஸ்டோரிஸ் வலைதளத்தில் பெண்ணியக் கட்டுரைகள் எழுதி வருகிறார். சிறாருக்கும்
நூல்களும் எழுதி வருகிறார்.





