“டே, நீ இதைப் பண்ண இப்படி பயந்தாங்கொள்ளியா இருக்க… அப்போ பொட்டதான் நீயி…” என்றாள் சிந்து காட்டமாக.
“நீதான் பொட்டை, நான் ஆம்பளை” என்று உடனடி பதிலடியாக வந்தது ஜீவாவிடமிருந்து.
இந்த உரையாடல்களை வேறு எழுத்து வேலையாக இருந்தாலும் ஆசிரியர் தனலட்சுமி உற்றுக் கவனித்தே வந்தார்.
“ஏய் சிந்து, ஒரு பொண்ணே பொட்டைங்கிற வார்த்தைய இழிவா பயன்படுத்தலாமா? என்னபா இப்படி பண்ற? நம்மை நாமே இழிவுபடுத்திக்கறதா?” என்று கடிந்தாள் புஜ்ஜி.
அவளே தொடர்ந்து… ”டீச்சர் இவுங்க பேசறத கேட்டிங்களா! பொட்டன்னா பொண்ணுதான். சிந்துவே இப்படி இழிவாபயன்படுத்தறது வருத்தமா இருக்கு. ஏன் இந்த வார்த்தையை இப்படி இழிவா பயன்படுத்தறாங்க? அதன் உண்மையான பொருள் என்னான்னு தெரிஞ்சுக்கணும் டீச்சர்” என்று தன் விருப்பத்தைக் கூறினாள் புஜ்ஜி.
“நானும் இதைத்தான் நினைச்சேன். நீயே கேட்டுட்ட புஜ்ஜி, மிக்க மகிழ்ச்சி. இன்னிக்கி கடைசி பாடவேளைல உரையாடல் வைப்போம்ல… இதைப் பற்றி உரையாடலாம். வேறேதேனும் தலைப்பு நிலுவைல இருக்கா?” என்று வினவினார் ஆசிரியர் தனலட்சுமி.
” இல்லை டீச்சர்” என்றான் முகில்.
“சரி… இன்று இந்தத் தலைப்பிலேயே உரையாடிடுவோம்” என, சமூக அறிவியல் வகுப்புக்கான பாடத்தைத் தொடங்கினார்.
கடைசி பாடவேளைக்கு முந்தைய இடைவேளைக்கான மணி அடித்தவுடனே புஜ்ஜி, தனலட்சுமி ஓடிவந்தாள்.
“டீச்சர் டீச்சர்… வாங்க வகுப்புக்கு உரையாடல் நடத்தணும்னு சொன்னோம்ல” என்று பரபரத்தாள் புஜ்ஜி.
“புஜ்ஜி, இடைவேளை முடிந்து நீ வகுப்புக்குத் திரும்பும்போது நான் அங்கு இருப்பேன் சரியா” என்று ஆசிரியர் அனுப்பினார் புஜ்ஜியை.
“மா… லை வணக்கம் டீச்சர்” என்றனர், தனலட்சுமி ஆசிரியர் வகுப்புக்குள் நுழைந்ததும்.
“அனைவருக்கும் வணக்கம்… உரையாடலைத் தொடங்கலாமா?” என்றார் ஆசிரியர்.
“ம்… சரி… உரையாடலைத் தொடங்குவோம். புஜ்ஜி விரும்பிக் கேட்டதால பொட்டைங்கிற தலைப்புல உரையாடப் போறோம். பொட்டைங்கிற சொல்லின் பொருள் என்ன? இந்தச் சொல் எந்தப் பொருளில் பயன்படுத்தப்படுது? இதை எங்கெல்லாம் பயன்படுத்தி கேட்டிருக்கீங்க?” என ஆரம்பித்தார் ஆசிரியர்.
உரையாடும்போது வட்ட வடிவில் அனைவரும் அமர்வது வழக்கம். இன்றும் அப்படியே…
“ சரிங்க டீச்சர், நான் முதல்ல சொல்றேன். பொட்டன்னா பெண். எங்க வீதில சண்டை போடும்போது அடிக்கடி இந்தச் சொல் பயன்படுத்தக் கேட்டிருக்கேன். ஆண் துணிச்சலா ஒரு செயலைச் செய்யலைன்னா இப்படிச் சொல்லிப் பார்த்திருக்கேன்” என்றான் ஏழுமலை.
”சிறப்பு! அடுத்து பகலவன் சொல்லு” என்றார் தனலட்சுமி.
“எனக்குப் பொருளெல்லாம் தெரியல. ஆனா, விளையாட்டுல நல்லா விளையாடலன்னாலும் தோத்துப்போகும்போதும் ஆண்களை அந்த வார்த்தையைச் சொல்லி, திட்டிக் கேட்டிருக்கேன்” என்றான் பகலவன்.
“சரியா சொன்ன பகலவா. பிறகு பாஷா நீ சொல்லு” என்றார் ஆசிரியர்.
“டீச்சர் அதனோட பொருள் பொட்டைக் கோழின்னா பெண் கோழியச் சொல்றோம்னு புரியுது. அங்க வீட்ல ஆண்கள் அழும்போது, ‘ஏன்பா பொட்டச்சி மாதிரி அழுவுற’ன்னு கேட்பாங்க… ஏன் டீச்சர் ஆண் துக்கத்துல அழுவாச்சி வரும்தான… ஏன் பெண்கள் மட்டும்தான் அழணுமா?” என்று அப்பாவியாகக் கேட்டான் பாஷா.
“சரியான கேள்வி… உரையாடலின் முடிவில் பேசுவோம். இப்போ கதிரவன் நீ சொல்லுப்பா” என்றார் ஆசிரியர்.
“பொட்டைன்னா பொண்ணுதான் டீச்சர். வீட்டுக்கு வெளில இருந்து யாராவது சண்டைக்கு வரும்போது எங்கப்பா அமைதியா அதை எதிர்க்காம உட்கார்ந்திருந்தா, ‘பொட்டச்சி நானே போயி சண்டை போடுவேன். நீங்க இப்படி சும்மா உக்கார்ந்துக்கிட்டு இருக்கிங்களே’னு அம்மா சொல்லுவாங்க” என்றான் கதிரவன்
”ஓ அம்மா சொல்வாங்களா? அடுத்து புஜ்ஜியோட முறை… சொல்லுமா” என்றார் ஆசிரியர்.
”பொட்டைன்னா பொண்ணுதான். ஆண்கள் இழிவா சொல்றதுக்கு இந்த வார்த்தையைப் பயன்படுத்தறாங்க. ஆனா, எனக்குச் சுத்தமா பிடிக்காது. நான் பயன்படுத்தமாட்டேன் டீச்சர். எங்க வீட்ல எங்க அண்ணன் வீட்டு வேலை எதாவது செஞ்சான்னா, ‘ஏன்பா பொட்டச்சி மாதிரி வீட்டுவேலை செய்யறே’னு கேட்பாங்க அப்பா” என்று நிதானித்துப் பேசினாள் புஜ்ஜி.
”புஜ்ஜியின் ஆதங்கம் அனைவருக்கும் புரிஞ்சிருக்கும்னு நெனக்கிறேன். சரி கார்த்தி நீ சொல்லுப்பா” என்றார் ஆசிரியர்.
”இல்ல டீச்சர். நான் இன்னும் கொஞ்சம் யோசிக்க நேரம் வேணும்… அதனால பிறகு பேசறேன்” என்றான் கார்த்தி.
அடுத்து அமர்ந்திருந்த திவ்யாவைப் பேசச் சொன்னார் ஆசிரியர்.
”பொட்டைன்னா பொண்ணுதான். நான் கல்லாங்காய் நவீனோடு விளையாண்டேன். உடனே நண்பன் யாகைய்யா வந்து, ‘ஏண்டா பொண்ணுங்க விளையாட்ட விளையாடற’னு கிண்டல்” என்று சொல்லி முடிக்கும்முன்னே, யாகைய்யா குறுக்கிட்டு, “நான் அப்படி சொல்லல” என்று சொன்னதும்…
ஆசிரியர் குறுக்கிட்டு, “யாகைய்யா உன் முறை வரும்போது காத்திருந்து நீ கருத்து சொல்லலாம்.இப்போ குறுக்கிடுவது தவறு“ என்றார் ஆசிரியர்.
“மன்னிக்கணும் டீச்சர். இருந்தாலும் என்னைப் பற்றிச் சொல்லும்போது எப்படி கேட்காமல் இருப்பது“ என ஆதங்கப்பட்டான் யாகைய்யா.
“ம்… அடுத்து நான்சியோட முறை… சொல்லுமா” என்றார் ஆசிரியர் தனலட்சுமி.
“பொட்டைன்னா பொண்ணுதான். ஆனா, ஆணைத் திட்டும்போது ஏன் பொட்டைன்னு திட்றாங்கன்னு தெரியல. இதெல்லாம் ஆணாலதான் முடியும்னு சமூகத்துல விதிமுறையாவே இருக்கு. அப்போ பெண்ணால துணிச்சலா வீரமா இருக்க முடியாதா?“ என்றாள் நான்சி.
”கார்த்தி இன்னும் கருத்து சொல்லல… சொல்லுப்பா” என்றார் ஆசிரியர்.
”ஆண் பயப்பட்டான்னா, அப்போ அந்த வார்த்தையால அவனை மலிவாச் சொல்வாங்க டீச்சர்” என்று நச்சென்று கருத்தை உதிர்த்தான் கார்த்தி.
”அனைவரும் தங்கள் கருத்துகளை வெளிப்படையாகவும் அருமையாகவும்சொல்லியிருந்தீங்க. இப்போ தொகுத்துச் சொல்வோம். அவங்கவங்க சிந்தித்து முடிவுக்கு வரட்டும்…”
சிறப்பான கட்டுரை. எந்த விதமான சங்கடமான தலைப்பையும் மாணவர்களோடு கலந்தரையாடி அந்த தலைப்பை ஆக்கப் பூர்வமான முறையில் புரிந்து கொள்ளச் செய்வது ஆசிரியர்களின் கையில் உள்ளது.
பொட்டை என்பதை திருநங்கையரையும் குறிக்கும் விதத்தில் பயன்படுத்தப் படுகிறது.
ஆம் தோழர். ஆண் பெண் தன்மையை உணர்வதால் அந்தப் பெயரில் அழைக்கப்படுகிறார்கள். . .
அப்போதும் இழிவாகவே பயன்படுத்தப்படுகிறதம்மா சொல் அதையும் குறிப்பிடுங்கள் பெண் தன்மையை உணருதல் தவறல்லவே
ஆம். திருநங்கை குறித்து தனித்த கட்டுரை எழுத உள்ளேன். அதில் விரிவாக பேசலாம் என இருக்கிறேன். ஒரு வரியில் இந்தக் கட்டுரையிலும் தொட்டுச் சென்றிருக்கலாம். பால் புதுமையினர் பற்றியும் கருத்து பரவலாக்கப்படணும். இணைந்து செய்வோம் அண்ணா
நீ ஒரு பொட்டச்சி என்று பெண்ணை சொல்லுவதும்
நீ ஒரு பொட்டையன் என்று ஆணை சொல்லுவதும் ஆண் வர்க்கத்தின் மீது கட்டமைக்கப்பட்டுள்ள பிம்பம்.
பெண்கள் உயிரியல் ரீதியாக வலிமை உள்ளவர்கள் என்பது நிஜம்.
மனித மனங்களில் படிந்துள்ள அழுக்கு நீக்கியாக இந்தக் கட்டுரை.
என் நேச மிகு தோழருக்கு வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி தோழர். இழிவான பொருளில் பயன்படுத்த மாட்டோம் என சமூகத்தில் மாற்றமே தேவை. .
அருமை.
உரையாடலே உண்மையை உணர்த்தும், நல் உறவை வளர்க்கும்.
நன்றி அண்ணா. உரையாடல் சமத்துவ சமூகத்தைக் கட்டமைக்கும்.
கட்டுரையின் தலைப்பே கட்டுரைக்கு வலிமை தான். அந்த விதத்தில் சீலா தேர்ந்தெடுத்த தலைப்பு அருமை. குழந்தைகளுக்குள் நடைபெறும் உரையாடல் தான் என்றாலும் இது சமூகத்தில் பலராலும் பயன்படுத்தும் சொல்லாகவே உள்ளது.இந்த சொல்லைக் கேட்கும்போது எனக்குள் ஒரு கோபம் வரும், ஆனால் சீலாவின்கட்டுரையை வாசித்த பிறகு அதற்கான விளக்கத்தை சொல்லி புரிய வைக்க முடியும் என்ற நம்பிக்கை பிறந்திருக்கிறது…ஆசிரியையாக நானும் மாற்றத்தை விதைக்கும் நிலமாக எங்கள் குழந்தைகளின் மனங்களையே தேர்ந்தெடுக்க நினைக்கிறேன்..வளரட்டும் சீலா உங்கள் கட்டுரைத் தொடர்…வாழ்த்துகள்
மிக்க மகிழ்ச்சி டீச்சர். உங்கள் போன்றோர் வார்த்தை நம்பிக்கை விதைக்கிறது. பேரன்பு
உரையாடல்கள் அவசியமானவை தங்காய் அதே போது சுற்று முறையில் என்றில்லாமல் ஒருங்கிணைக்கப்பட்ட உரையாடலாக இருந்தால் தானே தனிப்பட்ட ஐயங்களைக் கேட்கவும் அவற்றினையொட்டி உரையாடவும் முடியும் அவரவர் கருத்து இறுதியில் தொகுப்பது என்பதில் அனைவரும் புரிதலுக்குள்ளாக முடியுமா என்று ஐயம் ஏற்படுகிறது மேலும் இத்தகு விசயங்களைத் தயங்காமல் பேசுவதும் கைவரப் பெற்றிருக்க வேண்டும் அதற்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும் பேரன்பும்
உரையாடல் ஆரம்பக்கட்டத்தில் பழகும்பொருட்டு இந்த முறை யோசித்தேன். உரையாடலின் பல விதமான முறைகளை அறிமுகம் செய்வோம். கருத்துரைக்கு நன்றி அண்ணா
உரையாடலை ஆரம்ப கட்டத்தில் பழகும் பொருட்டு இந்த முறையை யோசித்தேன்.
உரையாடலின் பல்வேறு வடிவங்கள் பற்றி முன்வைப்போம் அடுத்தடுத்த கட்டுரைகளில். தங்கள் கருத்துரைக்குப் பேரன்பும் மகிழ்வும் அண்ணா.
அருமையான விளக்கம். பள்ளி மாணவர்களுக்கான எளிய மொழி நடை.
அனைவரும் வாசிக்கத்தக்க மொழிநடையே யோசித்தேன். குழந்தைகளுக்கெனில் இன்னும் எளிமைப்படுத்த வேண்டும் என நினைக்கிறேன். குழந்தைகளுக்கும் எழுதணும் இது போன்ற தலைப்புகளில்.
கருத்துரைக்கு மகிழ்வும் அன்பும். . .
அருமை தோழரே. பள்ளி மாணவர்களுக்கான எளிய ம்மொழி நடை.
Good
மாணவர்கள் மாணவிகள் தெளிவு பெற வேண்டிய கருத்து. வகுப்பறை உரையாடல் வடிவத்தில் அளிப்பது மிக சாதுர்யமான உத்தி. தொடருங்கள் தோழர்,
கூடுதல் தகவல நான் பணியாற்றிய அண்டை நாடான பூடானில் தாய் வழி சொத்து மகளுக்கு தான் அளிக்கப்படுகிறது. மகன்களுக்கு கிடையாது. அதனால் அஙகுள்ள கிராமப்புறங்களில் ஆண்களுக்கு சரியான மரியாதை கிடையாது. அதுவும் தவறு
ஆண் ஒரு பாலினம் பெண் பாலினம் இருவருக்கும் பலமும் உண்டு பலவீனமும் என்ற கருத்தையும் கொண்டு சேர்க்கவேண்டியது நம் கடமை.
சிறப்பு வாழ்த்துகள்
சிலா அருமையான கட்டுரை இந்த வார்த்தையை நானும் பல இடத்துல கேட்டு இருக்கேன் கேட்கும்போது மனசு வலிக்கும் .அது ஒரு வருத்தத்தை தரக்கூடிய சொல்லா ,கேட்கும் நபருக்கு வருத்தத்தை தரக்கூடிய சொல். இந்த கட்டுரை பெரும்பாலும் நிறைய பேர் படித்த பிறகு இனி அந்த சொல்ல வைத்து யாராவது கோபத்தில் பேசினால் அந்த சொல் ஒரு இழிவான சொல் கிடையாது அந்த சொல்லுக்கு பின்னாடி எவ்ளோ பெரிய பலமான ஒரு மனநிலை இருக்கு. அந்த சொல்லின் பொருள் ஒரு பெண்ணாய் இருந்தால் அந்த பெண்ணினுடைய துணிவு, வீரம் , எதிர்க்கும் தைரியம், அவளுடைய மனோபலம் அவளுடைய பலம் , இதெல்லாம் நமக்கு வந்து அவமானத்தை தராது அதுக்கு பதிலா நமக்கு ஒரு பெரிய தன்னம்பிக்கைதான் தரும் என புரியும் சிறப்பான கட்டுரையை இருந்தது…வாழ்த்துகள் 💐
அருமையான கட்டுரை. ஒரு சின்ன வேண்டுகோள். குழந்தைகளிடம் உள்ள கற்றல் குறைபாடுகள் (dyslexia) பற்றி ஒரு கட்டுரை போடுங்க.உங்கள் அணுகுமுறை பற்றி அறிய ஆவலாக உள்ளது.