‘பீரியட்ஸ்’ – தம்மைத் தாமே ஒதுக்கிக்கொண்டு வீட்டில் ஓரமாக அமர்ந்த காலம் ஓரளவு மாறியிருக்கிறது. இந்தத் தலைமுறை ஆண்கள் ஓரளவு புரிதலோடு பக்குவப்பட்டு இருக்கிறார்கள். நேப்கின் வாங்கித் தருவது, வீட்டு வேலைகளைப் பகிர்ந்துகொள்வது என வீட்டுச்சூழல் முன்னேறி இருக்கிறது.

பொருள்களை விற்கிற செயலிகள்கூட  மென்மையான சொல்லாடல்களோடு பீரியட்ஸ் குறித்த பொருள்களைக் காட்சிப்படுத்துகின்றன. இவை ஒருபுறம் இருக்க, பீரியட்ஸ் தொடங்கி மெனோபாஸ் நாள்கள் வரை அந்த நேரத்தில் தேவைப்படுகிற பொருள்கள் குறித்த சில தகவல்களைத் தெரிந்துகொள்ளலாம்.

பெண்களின் வாழ்வை அறிவியல் பல்வேறு வகைகளில் கைகொடுத்து உயர்த்தி இருக்கிறது. எல்லாவற்றுக்கும் துணியை வைத்துச் சமாளித்த காலத்திலிருந்து  ‘சுகாதாரமான பீரியட்ஸ்’ என்பது ஒவ்வொரு பெண்ணின் உரிமை என எண்ணுமளவுக்கு முன்னேறி இருக்கிறோம்.  பீரியட்ஸை ஓரளவு சௌகரியமாக எதிர்கொள்ள இன்று பல்வேறு பொருள்கள் கிடைக்கின்றன. பொருளாதாரச் சூழலைப் பொறுத்து அவற்றை வாங்கிப் பயன்படுத்தலாம்.

பீரியட்ஸ் தொடங்குவதற்கு ஓரிரு நாள்கள் முன்பாகவே எப்போது பீரியட்ஸ் வருமோ என்கிற தவிப்போடு ஒவ்வொரு முறையும் ஒப்பனை அறையைப் பயன்படுத்த வேண்டி இருக்கும். அதற்கெனவே இருக்கிறது Panty- liner. டிஷ்யூவின் அளவைவிடச் சிறியதாக இருக்கிற இதனைப் பையில் வைத்துக்கொள்வதும் எளிது. நாற்பது வயதை எட்டியதுமே பலருக்கும் மெனோபாஸ் தொடங்கிவிடுகிறது. எப்போது உதிரப்போக்கு வருமோ எனத் தெரியாமல் நாள்தோறும் நேப்கினைப் பயன்படுத்துவது பெரும் வேதனை. அந்த நேரத்தில் பீரியட்ஸ் வரும்முன் இச்சிறு லைனர் உதவும். பதின்களின் தொடக்கத்தில் இருக்கிற பெண்பிள்ளைகளுக்கும் இதனை அறிமுகப்படுத்தலாம்.

நேப்கின், கப் என அவரவர் தேவை மற்றும் சூழலைப் பொறுத்து வாங்குகிறோம். தற்போது பீரியட்ஸ் பேன்ட்டி என்று ஓர் அற்புத வரவு இருக்கிறது. எப்போதும் உலர்வாகவே உணர வைக்கிறது. ஐம்பதுகளில் மெனோபாஸை எதிர்கொள்ளத் தடுமாறும் அம்மாவுக்குப் பிள்ளை கொடுக்கும் மிகச்சிறந்த பரிசாக இது அமையக்கூடும். எரிச்சலோ, அரிப்போ, வலியோ, வெளியாகும் பயமோ இல்லாமல் பயணிக்கவும் படுத்து உறங்கவும் முடிகிறது.

பீரியட்ஸை நினைவூட்ட பல்வேறு செயலிகள் உள்ளன. அதனை உடனிருப்போருக்கு அறிமுகப்படுத்தலாம்.  வாழ்வின் ஓட்டத்தில் இந்தச் சின்னஞ்சிறு நாளையும் தேதியையும் நினைவில் வைத்துச் சிரமப்படாமல் இலகுவாக்க செயலிகள் பெறும் உதவியாக உள்ளன.

எல்லாம் சரிதான். இதையெல்லாம் ஆண்கள் ஏன் தெரிந்துகொள்ள வேண்டும்?  நமக்கு என்ன உணவு பிடிக்கும்;  எவ்வளவு உப்பு, காரம் சேர்க்கலாம்; குளியலறையில் சோப்பு தீரும்முன் மாற்றுவது என எல்லாவற்றையும் உடனிருக்கும் பெண்கள் தெரிந்து வைத்திருக்கிறார்கள். பதிலுக்கு நாம் எதைத் தரப்போகிறோம். இந்தச் சின்னஞ்சிறு அன்பைத் தவிர.

ஆண்களுக்கு இதனை அறிமுகப்படுத்துவதில் இன்னொரு காரணமும் இருக்கிறது. பெண்கள் தமக்கு வாங்கும் நேப்கின்களில் மலிவான விலையில் உள்ள ரகத்தையே பரவலாக வாங்குகின்றனர். தமக்குச் செய்யப்படுகிற செலவைக் குறைத்தால் குடும்பச் செலவுக்கு ஆகும் என எண்ணும் பெண்கள் உண்டு. அதனால் தரமான நேப்கின்களை அன்பளிப்பாக உங்கள் வீட்டுப் பெண்களுக்கு அளியுங்கள்.

மெனோபாஸ் எற்படும்போது மருத்துவப் பரிசோதனையும் சத்து மாத்திரைகளும் மருத்துவ ஆலோசனையும் எல்லாப் பெண்களுக்கும் தேவை. வேலைக்குச் செல்கிற பெண்களின் நிலை இதில் ஓரளவு பரவாயில்லை. வேலைக்குப் போக வேண்டும் என்பதற்காகவேனும் மருத்துவரை அணுகுகின்றனர். எளிய பொருளாதார நிலையிலோ குடும்பத்தை நிர்வகிக்கிற பெண்ணாக மட்டுமோ இருக்கிற சூழலில் அவர்களுக்கு இந்த மருத்துவ ஆலோசனைகள் வாய்க்கப் பெறுவது இல்லை. தமக்கு இந்தப் பரிசோதனைகள் வேண்டும் என்று சொல்ல இன்னும் சில பெண்கள் துணிவதில்லை.

“ஏன் டல்லா இருக்க?” “நல்லா டிரெஸ் பண்ணா என்ன?” எனக் கேட்கிற ஆண்கள் சற்றே முன்னேறி “பீரியட்ஸா… நான் சமைக்கிறேன்” எனச் சொல்லும் நன்னாள் எந்நாளோ?

ஏதோ ஒரு நேப்கினின் பின்புற லேபிளைப் பிரிக்கும்போது “யூ ஆர் பவர்ஃபுல்” என அச்சிட்டு இருந்ததைப் படித்துப் புன்னகைத்தது நினைவுக்கு வருகிறது. விற்பனைத் தந்திரம் எனச் சொன்னாலும் அந்த அன்பு உடனிருப்போர் தரவேண்டியது என்பதை மறுப்பதற்கில்லை.

ஒருமுறை, பல் பரிசோதனைக்காக மருத்துவமனை சென்றபோது, முக்கியமான அறுவை சிகிக்சை ஏதும் நிகழ்ந்துள்ளதா எனக் கேட்டார்கள். அப்படி ஏதும் இல்லை எனச் சொல்லிவிட்டு ‘சீசேரியன் மட்டும்’ எனச் சொன்னதும் மருத்துவர் சற்றே அதிருப்தியோடு, “சீசேரியன் உங்களுக்குச் சின்ன சர்ஜரியாமா? அதுல எவ்ளோ லேயர் ஓபன் பண்றாங்க தெரியுமா? எல்லாமே சாதாரணமா போச்சு” என்றார்.

சீசேரியனை, “சாதாரணமாக எல்லாருக்கும் நடப்பதுதானே” எனக் கடந்துபோகவும் “எல்லாருக்கும் வருகிற பீரியட்ஸ்தானே” எனப் பெண்களுக்கு வருகிற வலிகளை மட்டும் அலட்சியப்படுத்த பழக்கப்படுத்தப்பட்டு இருக்கிறோம்.

மழைநாள்கள் தொடங்கிவிட்டன. இருசக்கர வாகனத்தில் ரெயின்கோட் அணிந்தாலுமே பீரியட்ஸ் நாளில் பதற்றமின்றி செல்லத் துணிவு வருவதில்லை. உங்கள் உடனிருக்கும் பெண்களுக்கு உணவும் துணியும் பகட்டுப் பரிசுகளும் வாங்கித்தருவதைவிடச் சிறப்பானது அவர்களது வலிகளைப் புரிந்துகொள்வது. அன்றைய நாளில் அவளுக்கு ஆட்டோ புக் செய்து தருவதும் சமைத்தோ சமைத்த உணவை வாங்கித்தருவதோ காதல்மொழியன்றி வேறில்லை.

காதல் என்பது வலிகளை மதித்தலும் மீள உதவுதலும்! காதலிப்போம்!

படைப்பாளர்

பா. ப்ரீத்தி

தொடக்கப் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றுகிறார். தமிழ்நாடு அரசின் தமிழ்ப் பாடநூல் குழுவில் நூலாசிரியராகப் பணியாற்றியுள்ளார். பேறுகாலம் குறித்த இவரது அனுபவப் பகிர்வை ‘பிங்க் நிற இரண்டாம் கோடு’ என்கிற புத்தகமாக பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது.