–

தரையின் குளிர்ச்சியும் ஈரமும் அவள் உடுத்தியிருந்த ஆடையையும் மீறி பிருஷ்டத்தைச் சில்லிட வைத்தது. ‘எத்தனை நாட்களாகத்தான் இங்கே இருக்கிறோம்?’ அவள் விரல்களைப் பிரித்து அந்த அரையிருளில் எண்ணத் தொடங்கினாள். பசி வேறு கனத்த நண்டாக வயிற்றைக் கவ்வியது. நாக்கு வறண்டு கிடந்தது. அவ்வப்போது பணிப்பெண் பார்வதிக்குட்டி யாருக்கும் தெரியாமல் சன்னலின் வழியே தரும் மட்டரிசிக் கஞ்சியும் தண்ணீரும் அவள் உயிரைப் பிடித்து வைத்திருந்தன.

அப்போது சன்னலின் அருகே அரவம் கேட்டது. பார்வதிக்குட்டிதான். மெல்ல அழைத்தாள்.

“எடீ… இன்னிக்கும் நீ வாய் திறக்கலேன்னா, அறைக்குள்ளே பாம்பும் நட்டுவாக்காலியும் விடப் போறதா பேசிகிட்டிருக்காங்க.”

பார்வதிக்கு இதைச் சொல்வதற்குள் மூச்சு இரைத்தது. “சொல்லிரு மோளே. எல்லாத்தையும் சொல்லிரு. நமக்கு வேற வழியில்லா.”

அவள் மௌனமாகவே அமர்ந்திருந்தாள். அழக்கூடாதென்று தன்னையே அதட்டிக் கொண்டாள். முகத்தில் இறுக்கம் ஏறியது.

அவள்தான் எத்தனை அழகு! ஒரு தீச்சுடர் போல் பருவம் அவள் மேனியில் ஜ்வலித்தது. நிலவொளியின் குளுமை அவள் உடம்பில் படிந்திருந்தது. பனிக்கட்டியின் குளிர்ச்சி அவள் விரல்களின் தொடுகையில் இருந்தது. நடக்கையில் இறகைப் போல மிதப்பதாகவே தோன்றும். 

அவள் பிறந்த அன்று அவளது எதிர்காலத்தைக் கணித்த நிமித்திகன், “இவள் குலத்தை நாசம் பண்ணப் பிறந்தவள்” என்றான்.  அதிலிருந்து குடும்பத்துக்கு வேண்டாதவளாகிப் போனாள். தானாக வளரும் காட்டுச்செடியாக வளர்ந்தாள். பருவத்தில் மலர்ந்தாள். அன்றைய காலக் கட்டுப்பாடுகளையும் மீறி அவள் வாசிக்கப் போனாள். அவளின் அழகே அவளுக்கு வினையாகிப் போனது.

அது இருபதாம் நூற்றாண்டின் மிக ஆரம்ப காலம். தமிழகத்தில் ஒருவிதமான சாதி வெறியும் பெண்ணடிமைத்தனமும் இருந்த காலக்கட்டத்தில் கேரளாவில் வேறு மாதிரி பெண்ணடிமைத்தனம் இருந்தது. அதுவும் நம்பூதிரி சமுதாயத்தில். ஆண் வழிச் சமூகமான நம்பூதிரிகள் குடும்பத்தில் எத்தனை மக்கள் இருந்தாலும் மூத்த ஆண் வாரிசுக்குத்தான் அதே சமுதாயத்தில் மணம் புரியும் உரிமை இருந்தது. நம்பூதிரிப் பெண்கள் அந்தர்ஜனம் என்று அழைக்கப்பட்டார்கள். சாதாரண மக்களின் பேச்சில் அவர்கள் அகத்தம்மாக்கள். வீட்டின் பின்கட்டைத் தாண்டி அவர்கள் முன்புறத்தைத் தங்கள் வாழ்நாளில் கண்டிராதவர்களாக இருந்தார்கள். அதில் நிறைய பேர் திருமணம் செய்து கொள்ளாமலே கிருஷ்ணன் திருவடியை அடைந்தார்கள். நல்ல ஆடைகள், ருசியான உணவுகள், சூரிய வெளிச்சம்கூட மறுக்கப்பட்டது.

ஆனால் நம்பூதிரி ஆண் நான்கைந்து நம்பூதிரிப் பெண்கள், நான்கைந்து நாயர் சமூகப் பெண்கள் என்று மணம் செய்து கொண்டு வாழ விதித்திருந்தது. பலதார மணம் இயல்பாக இருந்தது. வறுமையைப் பயன்படுத்தி பெண்களின் வாழ்க்கை சுரண்டப்பட்டது. மூத்த மூசாம்பூதிரி மணம் செய்யும் தகுதி இல்லாதபோதுதான் இரண்டாம் வாரிசு நம்பூதிரிப் பெண்ணை மணக்கலாம். ஆனால், அந்தப் பெண்ணைச் சகோதரர்கள் யாவரும் ‘பயன்படுத்திக்’ கொள்ளலாம் என்று எழுதப்படாத சட்டம் உண்டாதலால் பாலியல் சுரண்டல் பரவலாக நடந்து கொண்டிருந்தது. பெண்ணை உயிராகப் பார்க்காமல் வெறும் சதையாகப் பார்க்கும் போக்கு நிலவிவந்தது.

இந்த அந்தர்ஜனங்கள் வீட்டைவிட்டு வெளியே போகவே கூடாது. கால் முதல் தலை வரை வெள்ளைத் துணியால் மூடியிருக்க வேண்டும். இறை தரிசனத்துக்கு என்று எப்போதாவது வெளியே சென்றாலும் கட்ஜன் எனப்படும் மறைகுடை கொண்டு முகத்தை மறைத்துக் கொண்டுதான் செல்ல வேண்டும். அதுவும் தனியே செல்லவே கூடாது. பணிப்பெண்ணான நாயர் பெண் முன்னால் சென்று ‘அந்தர்ஜனம் வருகிறாள்’ என்று அறிவிப்பது கட்டாயம். குளிக்கக்கூட அவர்கள் வெளியே செல்லக் கூடாதென்று வீட்டின் பின்புறம் குளங்கள் வெட்டப்பட்டிருந்தன. சமையலறை, குளக்கரை தவிர, வீட்டின் இதர பகுதிகளுக்கு வர அவர்களுக்குத் தடையும் விதிக்கப்பட்டிருந்தது.

அவள் அந்த வீட்டிற்குத் திருமணம் செய்து கொண்டு வரும்போது இரண்டாம் நம்பூதிரிக்குத்தான் மணமுடிக்கப்பட்டாள். ஆனால், முதலிரவன்று அவளுக்கு ஒரு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. சோபன அறையில் அவளுக்காகக் காத்திருந்தது கணவனின் அண்ணன். உடல்நலமின்றி திருமணத்துக்குத் தகுதியற்றவன் என்றிருந்த மூத்தவன் அன்றிரவு அவள் அனுமதியின்றி அவளை ஆக்கிரமித்தான். மறுதலிக்கும் உரிமை அவளுக்கு இல்லை. அவளது இதயம் சுக்குநூறாக நொறுங்கியது.

மறுநாள் இல்லத்தின் மற்ற அந்தர்ஜனங்கள் அவளுக்கு ஆறுதல் சொல்லி ‘இயல்பாக்க’ முயன்றார்கள்.

ஒருவாரம் கழிந்தது. அன்று அந்த வீடு பரபரப்பாக இருந்தது. இல்லத்தின்  மூத்த அந்தர்ஜனமான கல்யாணியம்மா இறந்து விட்டார். அவரது உடல் சந்தனம் பூசப்பட்டு ஒரு அறையில் கிடத்தப்பட்டிருந்தது.

அவள் கணவன் ராமன் பரபரப்பாக இருந்தான். யாரையோ பின்கட்டு வழியாக அழைத்து வந்தான். பெண்கள் எல்லோரையும் ஓர் அறைக்குள் இருக்கச் செய்தார்கள்.

“எல்லாரும் இங்கே இருந்தால் அங்கே காரியம் யார் செய்வார்கள்?” அவள் பக்கத்தில் இருந்த பார்வதியிடம் கிசுகிசுத்தாள்.

“உஷ்… இப்போள் ஒரு முக்கியமான சடங்கு நடக்கப் போகுது கேட்டியா? அதுக்கு ஆளு வருது. அவங்க கண்ணுல நாம படக் கூடாது” என்று பார்வதி பதிலிறுத்தாள்.

“என்ன சடங்கு?” அவள் ஆர்வம் மேலிடக் கேட்டாள்.

“நீசக் காரியம்” பார்வதி மெல்லிய குரலில் சொன்னாள்.

“அப்படினா?” மலங்க விழித்தாள் அவள்.

“அச்சோ… இதுகூட அறியாதா?” பார்வதி அவளை அருகில் இழுத்து காதில் கிசுகிசுத்தாள். “இந்தக் கல்யாணியம்மா கன்னி கழியாதவங்க. அப்படியே அடக்கம் பண்ணா ஆன்மா சாந்தியடையாது கேட்டியா? அதனால அவங்க உடம்பு முழுக்க சந்தனம் பூசி, துளி வெளிச்சம்கூட இல்லாத அறையில், நீசன்  ஒருத்தனை வரவெச்சு, சாந்தி முகூர்த்தம் நடத்தி பின்னெ தானே அடக்கம் பண்ணும்.” அவளுக்குத் தூக்கிவாரிப் போட்டது. “எல்லாம் கழிஞ்சு அந்த நீசன் வெளியே போகும்போள் அவனுடம்பில் சந்தனம் இருக்கிறதை வெச்சு நடந்ததைத் தெரிஞ்சுக்குவாங்க.” அவளுக்கு அருவருப்பாக இருந்தது.

பெண்ணோட உடம்புக்கு அவ்வளவுதான் மரியாதையா? அது உயிர் தரித்திருந்த உணர்ச்சி மிகுந்த உடலா அல்லது வெறும் சதைப் பிண்டமா? செத்த பிறகும் அந்த உடம்பை இப்படி எல்லாம் அவமதிக்க இயலுமா? தொண்ணூற்றியாறு வயது கல்யாணியம்மாவுக்கு  இத்தனை வயதுக்கு ஒரு ஆடவனின் விரல்கூடத் தீண்டாத தேகம் என்பதை நினைக்கையில் யாரை என்று தெரியாமல் அவள்  தன்னையே நொந்து கொண்டாள். அந்த வற்றிச் சுருங்கிச் சுக்கான தேகத்தை இப்படியெல்லாம் கையாளுவதை அறிந்தால் அந்த ஆன்மா எப்படிக் கதறும்? கதறல் சத்தம் காதில் விழுந்தது போல இரண்டு காதுகளையும் பொத்திக்கொண்டாள். இப்படி வாழ வேண்டுமென்று பெண்களுக்கு விதித்து வைத்த இந்தச் சமூகத்தின் மேல் ஆத்திரம் எழுந்தது. 

இதன் பின்னர் பலநாட்கள் கழித்து பார்வதிகுட்டி விசித்துக் கொண்டே வந்தாள். 

“என்னாச்சு?” அவள் பூக்களைத் தொடுத்துக் கொண்டிருந்தாள். வெள்ளை வெளேரென்ற மல்லிகை மொக்குகள். சரமாக நீண்டு கிடந்தன.

“என்னன்னு சொல்லுவேன் கேட்டியா? என் பொண்ணு… பதிமூணு பிராயம்தான் ஆச்சு. இன்னிக்கு விடிகாலையில் ஆத்துக்கு போய் குளிச்சிட்டு வரும்போள், வேதம் படிக்க வந்த ஒரு கிழட்டு நம்பூதிரி” என்று குரலைத் தாழ்த்தினாள். “அவளை மோகிச்சு கையைப் பிடிச்சு இழுத்துட்டான். இவள் சத்தம் போட்டு, கூப்பாடு போட்டு கையில் வெச்சிருந்த குடத்தால் அவனை ரெண்டு சாத்தி விடுவிச்சிட்டா. அதுக்குள்ள ஆள்கள் கூடி பஞ்சாயத்து ஆயிடுச்சு. என்ன தீர்ப்பு தெரியுமா?” அவள் அழுகை கூடியது.

அவள் கேள்வியாக நிமிர்ந்து பார்த்தாள்.

“எண்டெ மகளுக்கு அபராதம் போட்டிருக்காங்க. அந்த நம்பூதிரியை ஈர்க்கிற மாதிரி ஏன் இருந்தாள்னு. லோகத்தில் இது போல் அநியாயம் உண்டோ?” கரைந்தாள். “ஆயாளை எதிர்த்தது தப்புன்னு இவளுக்குத் தண்டனை.” 

அவள் முகம் கோபத்தில் சிவந்தது. கரத்தில் மல்லிகைச் சரம் துவண்டது.

இதுபோல் பெண்களை நாலாந்தர அடிமைகளாக நடத்துவது குறித்து அவ்வப்போது அவள் கேள்விப்பட்டுக் கொண்டே இருந்தாள்.

சில ஆண்டுகள் கழிந்தன. அந்தப் பகுதியில் புதிதாக வந்த ஒரு பெண் குறித்த பேச்சுகள் எழுந்தன. அவள் யாரென்று தெரியாது. அவளை நேரில் பார்க்கவும் முடியாது. ஆனால், ஆண்களிடையே அவள் மிகவும் பிரபலமாக இருந்தாள். அவளது அழகும் இளமையும், புத்திசாலித்தனமும் கலவியில் இணையைத் திருப்திப்படுத்தும் வேகமும் விதமும் வெகு சீக்கிரத்தில் அந்தப் பிரதேசமெங்கும் காட்டுத் தீ போலப் பரவியது.

ராமன் நம்பூதிரி அன்று இரவுப் பொழுதில் ஆவலோடு காத்திருந்தான். அவனுக்குக் கிடைத்த உத்தரவுப்படி அந்த அழகியிடம் அழைத்துப் போக ஆள் வரும். அவரிடம் எந்தப் பேச்சும் வைத்துக் கொள்ளக் கூடாது. பின்னாலேயே வந்து சொல்லும் இடத்தில் சந்திக்க வேண்டும். ராமன் சம்மதித்தான்.

நெடுநேரக் காத்திருப்புக்குப் பிறகு ஒரு பெண் நடந்து வருவது தெரிந்தது. அவள் முகத்தை அவனால் தெரிந்து கொள்ள இயலாதவாறு முட்டாக்குப் போட்டு மறைத்திருந்தாள். பின்னால் வருமாறு சைகை செய்தாள். தொடர்ந்தான். ஒரு சிறிய வீட்டுக்குள் நுழைந்ததும் அவள் சென்று விட்டாள்.

இந்த அனுபவம் அவனுக்குப் புதியதாக இருந்தது. நல்ல திருப்தியான கலவிக்குப் பின்னர் அவன் அவளிடம் தன்னை மணந்து கொள்ள கேட்டுக் கொண்டான். “உன்னிடம் கிடைத்த திருப்தி என் மனைவியிடம்கூடக் கிடைத்ததில்லை. நீ என்னை மணம் செய்து கொள்ளேன்” என்று கெஞ்சினான்.

அறையில் தணித்து வைத்திருந்த விளக்கை அவள் பிரகாசமாகத் தூண்டினாள். முகத்தை மூடியிருக்கும் துணியை உருவினாள். அவனைப் பார்த்துப் புன்னகை செய்தாள். ராமன் வாழ்வின் உச்சபட்ச அதிர்ச்சியை அடைந்தான். அவளோடு கலந்ததைவிட அது பலமடங்கு உச்சத்தை அவன் கபாலத்தில் ஏற்படுத்தியது. காரணம் அவள் அவனுடைய மனைவி. எழுந்து வேகமாக வெளியே ஓடினான் அவன்.

வீடு அல்லோலகல்லோலப்பட்டுக் கொண்டிருந்தது. தம்புரானிடம் வழக்குத் தொடுத்திருந்தான் ராமன். அதனை ஏற்று ஸ்மார்த்தவிசாரம் நடத்துவதென்று முடிவானது. பெண்ணின் கற்பைக் கேள்விக்குரியதாக்கும் போது இந்த விசாரணை அன்றைய காலக்கட்டத்தில் நடைமுறையில் இருந்தது. அரசன் நியமித்த அதிகாரி ‘ஸ்மார்த்தர்’ எனப்பட்டார். அவருக்கு கீழே நான்கைந்து பேர் கொண்ட ஒரு குழு விசாரணைக்கு வரும். இந்தக் குழுவினர் முறையாக விசாரிப்பதைவிட, அந்தப் பெண்ணைக் குற்றத்தை ஒப்புக்கொள்ள வைப்பதிலேயே குறியாக இருப்பர். அவர்களது விசாரணையின் நோக்கமும் அதுதான். அதனால் காது கூசக்கூடிய அளவு கொச்சையான கேள்விகளும், சந்தேகங்களும் அந்த பெண்ணிடம் எழுப்பப்படும். அவற்றுக்கு அவள் பதில் சொல்லியே தீர வேண்டும். அப்படி அந்த கேள்விகளுக்குப் பயந்து அவள் ஒப்புக் கொண்டுவிட்டால், அது அந்தக் குழுவின் வெற்றியாகக் கருதப்படும். அதுமட்டுமன்றி ஒவ்வொரு நாள் விசாரணை முடிவிலும் அந்தக் குழுவிற்குக் குற்றம் சாட்டப்பட்ட பெண்ணின் இல்லத்தில் இருந்து விருந்து உபசாரம் கட்டாயம் செய்து தர வேண்டும். இந்த விருந்து உபசாரங்களுக்காகவே விசாரணை நாளை நீட்டித்தவர்களும் உண்டு.

விசாரணை ஆரம்பித்த உடனேயே அந்தப் பெண்ணை அஞ்சாம்புறை என்று அழைக்கப்படும் ஒரு தனிமையான, இருளடைந்த அறையில் அடைத்து விடுவார்கள். சோறு, தண்ணீர் எதுவும் கொடுக்க மாட்டார்கள். பாம்பு தேள் போன்ற விஷ ஜந்துகளை அறையில்விட்டு, அவள் கற்பின் திறனைச் சோதனை செய்வார்கள். அதில் அவளுக்கு ஏதும் ஆகவில்லை என்றால், குற்றமற்றவள் என்று சிறிது நம்பிக்கை வரும். பின்னரும் ஜமுக்காளத்தில் அவளைச் சுற்றி மாடியிலிருந்து தள்ளி விடுவார்கள். அடி ஏதும் படாமல் வந்தால் அவள் கற்புக்கரசி என்று நிரூபணம் ஆகும். இந்தச் சோதனைகளில் வென்றவர்கள் யாருமே இல்லை. அதனால் சுலபமாக அவள் குற்றவாளி என்று முத்திரை குத்திவிடுவார்கள். அதன் பின் அவள் வீட்டினரே அவளைத் தலைமுழுகி உயிரோடு இருக்கும்போதே பிண்டம் வைத்து ‘சாதனம்’ என்று பெயரிட்டு வெளியே தள்ளிவிடுவார்கள். அதன் பின் அவளை யார் வேண்டுமானாலும் ‘எடுத்துக்’ கொள்ளலாம். அவள் மனிதப் பிறவியிலிருந்து தள்ளி வைக்கப்பட்டவள் என்று பொருளாகும்.

முப்பத்தி ஒன்பது நாட்கள் வாய் திறவாமல் இருந்தவள் நாற்பதாவது நாள் மௌனம் கலைத்தாள்.

“எதுக்கு இந்த விசாரணை?”

“இதென்ன கேள்வி? சாதனம் பண்ணுன தப்புக்குத்தான்.”

“நான் செய்தது தப்பா இல்லையா என்பது இரண்டாம் பட்சம். என்னோடு ‘தப்பு’ செய்தவர்களுக்கும் தண்டனை உண்டா?” சபையைப் பார்த்துக் கேட்டாள்.

“குற்றத்தை ஒப்புக்கொள்ளும் சாதனத்துக்கு மட்டும்தான் தண்டனை.”

“அதெப்படி ஒரு பெண் தனியாக சோரம் போக முடியும்? கூட ஒரு ஆண் இருக்க வேண்டும் இல்லையா?” அவள் சத்தமாகக் கேட்டாள். “அப்போள் அந்த ஆண்களுக்கும் தண்டனை உண்டெங்கில் ஞான் பறையும். அல்லெங்கில்…” அவள் இகழ்ச்சியாகப் புன்னகைத்தாள்.

அதுவரை ஸ்மார்த்தவிசாரத்துக்கு வரும் பெண்கள் கூனிக் குறுகி வந்து நிற்பர். கேள்விக்கு வாய்கூடத் திறவாமல் தலையசைப்பிலேயே குற்றத்தை ஒப்புக் கொண்டு முகத்தை மூடிக் கொண்டு கதறி அழும் பெண்களை மட்டுமே பார்த்து வந்த அந்தச் சபைக்கு அவளின் நிமிர்ந்த நடையும், திமிரான பேச்சும், புஞ்சிரியும் மிகுந்த அதிர்ச்சியைத் தருவதாக இருந்தது.

“பொண்ணுன்னா அவ்வளவு கேவலமா இருக்கா உங்களுக்கு? பெண்ணை வீட்டுக்குள்ளேயே பூட்டி வைக்க எந்தச் சாஸ்திரம் சொல்லுச்சு? அதுலயும் சமையல்கட்டுலயே கிடந்து ஆக்கி அரிச்சுப் போடணும். உங்க பூஜை, விரதங்களுக்கு நாங்க சீரழியணும். வீட்டுக்குள்ளே போகவே ஏகப்பட்ட கட்டுப்பாடுகள். இதெல்லாம் அம்பலத்து தெய்வம் வந்து சொல்லுச்சா? உங்களை மாதிரி சுயநலம் பிடிச்ச ஆம்பளைங்க உண்டாக்கி வெச்சது. இதுக்கு நான் எதுக்குக் கட்டுப்படணும்?”

“கல்யாணியம்மா மாதிரி பாவப்பட்ட அந்தர்ஜனங்கள் இத்தனை வருஷத்துல எத்தனை கோடி பொண்ணுகள் இருந்திருப்பாங்க? அவங்க அடிப்படை உரிமையில் தலையிட உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது? நீங்க மட்டும் பலதாரமணம் பண்ணி சுகிக்கலாம். பெண்களுக்கு மாத்திரம் ஒரு கல்யாணம்கூடத் தடை. இதுல கற்பு பத்தின கேள்வி விசாரங்கள் வேறு. மிருக ஜென்மங்கள். ச்சீ…ச்சீ… மிருகங்கள்கூட இப்படி நடக்காது.” அவள் வெறுப்பை உமிழ்ந்தாள்.

“நாளைக்குக் குழிக்குப் போற நம்பூதிரிக்கு நேத்து சமைஞ்ச பொண்ணு மனையாட்டி. நல்லா இருக்கு உங்க கலாச்சாரம். எங்களோட உடல் பாவக்கறை படிஞ்சதுன்னு சொல்றீங்களே, பின்னெ கூடலுக்கு மட்டும் இந்தப் பிண்டம் வேணுமோ?” அவளுக்கு மூச்சு வாங்கியது. 

“இந்தச் சமுதாயத்தில் வாழணும்னா இதோட கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டுத்தான் வாழணும். மத்த பெண்டுகள் வாய் திறக்காமல் வாழலையா? உனக்கு மட்டும் என்னடி திமிர்?” ஸ்மார்த்தர் சீறினார்.

“மத்தவங்க எதிர்த்துப் பேச மட்டும்தான் செய்யலை. மனசுக்குள்ள வெச்சு புழுங்கிட்டுதான் இருக்காங்க. காலங்காலமாக வாய் திறக்காத அவங்க சார்பாகத்தான் நான் பேசுறேன்.” அவள் முறுவலித்தாள்.

“உனக்கு எத்தனை தைரியம்? இத்தனை ஆண்கள் இருக்குற சபையில்…” விசாரணைக் குழுவில் ஒருவர் சினந்தார்.

“ஆண்கள்னா தலையில் கொம்பு முளைச்சிருக்கா? அவனுகளும் எங்களை மாதிரி மனுஷப் பிறவிதானே?” சபை திகைத்தது.

“என் உடம்பு. என் இஷ்டம். அதைக் கேள்வி கேட்க எவனுக்கும் அருகதை இல்லை. எந்த உடம்பு உங்க கண்ணுக்கு உறுத்தலா இருக்கோ, அதுதான் என்னோட ஆயுதம். கும்பலா கூடி குற்றம் சாட்டும் நீங்கள் தனிச்சிருக்கையில் என்கிட்ட பேசினதெல்லாம் வேற மாதிரிதானே?” அவள் உதட்டைச் சுழித்தாள்.

ஸ்மார்த்தர் ஒருமுறை சபையைப் பார்த்தார். 

“அப்போ நீ ஒப்புக்கொள்ளுறீயா?”

“எங்களைப் பெண்டுகளாக நடத்தாத உங்களிடம் நான் எதுக்கு ஒப்புக்கொள்ளணும்? எதை ஒப்புக்கொள்ளணும்?” உரத்த குரலில் கேட்டாள். 

“விசாரணை, வழக்குங்கிறதெல்லாம் குடும்பப் பெண் என்கிற தகுதியை நிரூபிக்கத்தான். எப்போது இங்கே வரும் எங்களை தாசியாக நீங்களே முடிவு செஞ்சீங்களோ, ஒரு தாசியின் தகுதி இதுதான்னு தீர்மானிக்கிற அருகதை உங்க சபைக்கு எப்படி வரும்? தாசிக்கு ஏது தகுதி?” விசாரணைக் குழு அதிர்ந்தது. 

அங்கே நிலவிய கனத்த மௌனத்தைக் கலைக்கும் விதமாக தம்புரான் உள்ளே வந்தார்.

எல்லோரும் வணங்க தனது ஆசனத்தில் அமர்ந்தார். சுற்றும்முற்றும் நோக்கி, “விசாரம் முடிஞ்சுதா?” என்றார்.

அதுவரை நடந்த விசாரணையின் போக்கு தம்புரானுக்குத் தெரிவிக்கப்பட்டது. அவர் சற்று நேரம் யோசித்தார்.

“செரி… உன்னோட உறங்கியவங்க பேரைச் சொல்லு. அவங்களுக்கும் தண்டனை உண்டு. பகவதி சத்தியமா தண்டனை கிட்டும்.” தம்புரான் ஒரு செம்பில் சந்தனத்தைக் கரைத்து பூக்களை மிதக்கவிட்டுக் கொண்டுவரச் சொல்லி அதன்மீது கை வைத்து சத்தியம் செய்து கொடுத்தார்.

அவள் கண்களை மூடிக்கொண்டு பெயர்களைச் சொல்லத் தொடங்கினாள். அதில் எல்லா வயதினரும் இருந்தனர். 

“காவுங்ஙள் சங்கர பணிக்கர், காட்டலத்து மாதவன் நாயர், பனங்காவில் கோவிந்தன் நம்பியார், மேலங்காவில் கோபால மேனன்…” 

கிட்டத்தட்ட அறுபத்தி நான்கு பெயர்கள் சொல்லப்பட்டன. அதில் அவளுடைய உறவினர்கள், குடும்பத்துடன் நெருங்கிய தொடர்புள்ளவர்கள், அண்டை வீட்டவர்கள், கல்வி கற்பித்த குரு, இல்லத்துக்கு வந்துபோன இசைவாணர்கள், கதகளிக் கலைஞர்கள் என்று எல்லா முக்கிய ஆண்களும் அடங்கினர். உச்சபட்சமாக அவளுடைய தந்தையின் பெயரையும், சொந்த சகோதரனின் பெயரையும் பார்த்து அதிர்ச்சியின் உச்சத்துக்கே சென்றது விசார சபை.

“இதுக்கெல்லாம் ஆதாரம்? நீ வாய்ல வந்த பெயரையெல்லாம் சொன்னா நாங்க நம்ப முடியாது.” சபையின் குரலில் தடுமாற்றம் தெரிந்தது.

அவள் ஒரு புன்னகையை உதடுகளில் தவழ விட்டாள்.

“ஆதாரமில்லாமல் சொல்ல நானென்ன பித்தியா? இதோ எண்டெ பொன்னு மோனுங்க எனக்குக் கொடுத்த பரிசுகள்.” அவள் வரிசையாக அவர்கள் எழுதிய கடிதங்கள், கொடுத்த பரிசுகள் என்று எல்லாவற்றையும் கடை பரத்தினாள். ஒவ்வொருவருடனும் சுகித்திருக்கையில் அவள் கேட்டு வாங்கிக் கொண்ட பரிசுகள் அவை. போதாதற்கு மிக மிக அந்தரங்கமான அடையாளங்களையும் ஒவ்வொருவர் குறித்தும் சொன்னாள். சபை உறைந்து போய் உட்கார்ந்திருந்தது.

இறுதியாக ஒரு முத்திரை மோதிரத்தை எடுத்தாள். அதைப் பணிவாக தம்புரான் காலடியில் வைத்து, “இந்த முத்திரை மோதிரம் யாருதுன்னு நான் சொல்லட்டுமா?” என்று மெல்லிய ஆனால் உறுதியான குரலில் சொன்னாள்.

தம்புரானின் முகம் வெளுத்தது. அருகில் இருந்த மந்திரிக்கு நடுக்கம் கண்டது. சபை ஆவலோடு காத்திருந்தது.

வறண்ட உதடுகளை நாவால் ஈரப்படுத்திக் கொண்டு தம்புரான், “தேவையில்லை… இதோடு இந்த விசாரம் முடிஞ்சுது. மேற்கொண்டு எதுவும் விஜாரிக்கத் தேவையில்லை. சாதனத்தோடு தொடர்பு கொண்ட எல்லோரையும் நாடு கடத்த உத்தரவு தரப்படுது. இந்தச் சாதனம் உட்பட… சபை கலையட்டும்.” மேல் துண்டால் வியர்த்த முகத்தைத் துடைத்துக் கொண்டு தம்புரான் தள்ளாட்டத்தோடு எழுந்து சென்றார்.

“நீங்கள் என்ன என்னை விலக்கி வைக்கிறது? ஞான் நிங்ஙெள் எல்லாரையும் விலக்கிப் போகும்.” அவள் அனைவரையும் உறுத்து விழித்தாள்.

“ஞான் ஒண்ணும் சாதனம் இல்லா. ரத்தமும் சதையுமான மனுஷி. எண்டெ பேரு…” அவள் அழுத்தம் திருத்தமாக அவளது பெயரை உச்சரித்தாள்.

“தா…த்…ரி…கு…ட்…டி…” 

சபை தலை கவிழ்ந்தது.

**

பின் குறிப்பு:

கேரளத்தின் மறுமலர்ச்சி சிந்தனையில் பெண் விடுதலை குறித்த விழிப்புணர்வைத் தூண்டி விட்டதில் குறியேடத்து தாத்ரி என்று அழைக்கப்பட்ட சாவித்ரிகுட்டியின் கலகத்துக்கும் பங்குண்டு. அந்த முகம் தெரியாத பெண், கேரளப் பெண்ணியக்கத்தின் முதல் போராளியாக வரலாற்றில் தனது பெயரைப் பதிவு செய்கிறார். அந்த அறுபத்தி ஐந்தாவது பெயரை அவர் வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை. அது கொச்சி மன்னர் அல்லது அவரது மந்திரி அல்லது நெருங்கிய உறவினராக இருக்க வேண்டும் என்று ஊகம் நிலவுகிறது. ஜூலை 13, 1905 அன்று அவருக்கு நாடு கடத்திய தீர்ப்பு வழங்கப்பட்டது. 

1907இல் நம்பூதிரி சமூகப் பழக்க வழக்கங்கள் மாற்றப்பட வேண்டும் என்கிற கோரிக்கையுடன் நம்பூதிரி யோகஷேம மகாசபா ஆரம்பிக்கப்பட்டது. கே.யு.நம்பூதிரிபாடு முதலிய இளைஞர்களால் தொடங்கப்படும் அந்த இயக்கம் நம்பூதிரிகளை 20ஆம் நூற்றாண்டுக்கு இழுத்து வந்தது. இந்தச் சங்கத்தின் மற்றொரு முக்கிய நபர் பின்னாளில் கேரளா முதல்வராக இருந்த இ.எம்.எஸ். நம்பூதிரிபாட். 

ஆதாரங்கள்:

https://share.google/dcDc4WWaeT0pJ1D6g

https://share.google/J8MPAxiHlh3kLsw21

https://share.google/cOcixYSDLus308Z0M

https://share.google/1mE3SGzxFSGSiafi7

https://share.google/pzwkoDVo1LyDwUhor

படைப்பாளர்

கனலி என்கிற சுப்பு

‘தேஜஸ்’ என்ற பெயரில் பிரதிலிபி தளத்தில் கதைகள் எழுதி வருகிறார். சர்ச்சைக்குரிய கருத்துகளை எழுதவே கனலி என்ற புனைபெயரைப் பயன்படுத்துகிறார். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய கட்டுரைகள், ‘பெருங்காமப் பெண்களுக்கு இங்கே இடமிருக்கிறதா?’ , ‘அவள் அவன் மேக்கப்’ , ’இளமை திரும்புதே’ ஆகிய நூல்களாக வெளிவந்திருக்கின்றன.