கள்வனின் காதலி 1955-ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம். வி. எஸ். ராகவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தின் கதை, கல்கி அவர்கள், 1937-ம் ஆண்டு முதல் ஆனந்த விகடனில் தொடராக எழுதிய தொடர். வரலாற்றுத் தொடர்களுக்குப் பெயர்பெற்ற கல்கி எழுதிய சில சமூகத் தொடர்களில் இதுவும் ஒன்று. அவர் எழுதிய முதல் தொடர்கதை இதுதான். கல்கி எழுதிய ‘தியாக பூமி’ ஏற்கனவே 1939-ம் ஆண்டில் திரைப்படமானது. இது அவரது கதைகளில் இரண்டாவது திரைப்படமான கதை. 

‘கல்கி’ என்ற புனைபெயருடன் ஆனந்தவிகடனில் எழுதி வந்த ‘கல்கி’ ரா.கிருஷ்ணமூர்த்தி அவர்கள், பின்னாளில் நண்பர் டி.சதாசிவம் அவர்களுடன் (எம்.எஸ்.சுப்புலட்சுமியின் கணவர்) இணைந்து கல்கி இதழைத் தொடங்கினார்.  

திரைக்கதையை  எஸ்.டி.சுந்தரம் எழுதியுள்ளார். இவர், சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூரில் 1921 ஜூலை 22ஆம் தேதி பிறந்தார். நவாப் இராஜ மாணிக்கம், நாடகக் குழுவிலிருந்தபோது இவருக்கிருந்த தமிழ்ப் புலமையைக் கண்டு, திருவையாறு அரசர் கல்லூரியில் சேர்த்தார். 

1942ஆம் ஆண்டு விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு, சிறை சென்றார்.

மனிதனும் மிருகமும் என ஒரு திரைப்படத்தில் கதை, வசனம் எழுதியிருக்கிறார். இந்தத் திரைப்படத்தின் காணொளி இணையத்தில் இல்லை. ஏற்கனவே, லைலா மஜ்னு திரைப் படம் தமிழில் மொழிமாற்றம் செய்யப் பட்ட போது, இவர் வசனம் எழுதியிருக்கிறார்.

1962 இல் இந்தியா சீனா போரின் போது 

‘சிங்க நாதம் கேட்குது, சீன நாகம் ஓடுது’ என்ற ஆவணப்படத்தைத் தனது செலவில் எடுத்து வெளியிட்டார். 

சிங்க நாதம் கேட்குது, சீன நாகம் ஓடுது

சுதந்திரத்தின் சக்தி வீர சங்கநாதம் கேட்குது!’

என்ற பாடலுடன் ஆவணம் தொடங்கியிருக்கிறது. ஜெமினி, சிவாஜி, தங்கவேலு போன்ற நடிகர்கள் ராணுவத்தில் சேர, நடிகைகள் சாவித்திரி, சரோஜாதேவி போன்றோர் தங்கள் நகைகளைக் கழற்றிக் கொடுப்பார்கள் என்பதாக அது இருந்திருக்கிறது. அனைவரும் இலவசமாக நடித்துக் கொடுத்திருக்கிறார்கள். இடைவேளை முடிந்து, இது காண்பிக்கப்பட்டுள்ளது.  நாட்டுத் தலைவர்கள் பலர் காண்பிக்கப்பட்டுள்ளனர். 

சுந்தரம், 1964 -1968 காலகட்டத்தில், தமிழ்நாடு சட்டமன்ற மேலவை உறுப்பினராக இருந்தார். 1968 -1976 தமிழ் நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் செயலாளராகப் பணியாற்றினார். விடுதலையின் இருபத்தைந்தாவது ஆண்டு விழாவில் பிரதமர் இந்திரா காந்தி கையால், தாமிர பத்திரம் பெற்றார். 1500க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த வி. எஸ். ராகவன் இயக்கிய சில திரைப்படங்களுள் இதுவும் ஒன்று.

1954 ஆம் ஆண்டில் வைரமாலை எனும் திரைப்படத்தில் முதன்முதலாக அறிமுகமாகி, நாடகம், திரைப்படம், தொலைக்காட்சி என நடிகராகக் கலக்கியவர். அவர் குரல் இளைய தலைமுறை வரை ஒருவித ஈர்ப்பைக் கொடுத்திருந்தது என்றால் அது மிகையாகாது. பலரும் மிமிக்கிரியில் அவரைப் போன்று பேசிக்காட்டுவதைப் பார்க்கலாம். 

எழுத்து போடும்போது, ரேவதி ப்ரொடக்ஷன் அளிக்கும் அமரர் கல்கியின் கள்வனின் காதலி எனப் போடுகிறார்கள். இந்தத் திரைப்படம் வருவதற்கு முந்திய ஆண்டு (1954 டிசம்பர் 5) இவர் இறந்திருக்கிறார்.

இதே பெயரில் 2006 இல் ஒரு திரைப்படம் வெளிவந்திருக்கிறது. கதை முற்றிலும் மாறுபட்டது. 

சிவாஜி கணேசன் பானுமதி

கே. சாரங்கபாணி

டி. ஆர். ராமச்சந்திரன்

டி. எஸ். துரைராஜ் 

டி. பாலசுப்ரமணியம்

எம் ஆர் சாமிநாதன் 

சி என் சிவதாணு 

பி டி சம்மந்தம் 

எம் ஆர் சந்தானம் 

பி எஸ் வெங்கடாச்சலம் 

குசலகுமாரி

கே. ஆர். செல்லம் 

எஸ். ஆர். ஜானகி 

ஸ்வர்ணம் ஜெயா 

பாடல்கள் 

மகாகவி பாரதியார் 

கவிமணி தேசிய விநாயகம் 

எஸ் டி சுந்தரம் 

சங்கீத டைரக்ஷன் (இசை) 

ஜி கோவிந்தராஜூலு 

கண்டசாலா 

பின்னணி பாடியவர்கள் 

எம் எல் வசந்தகுமாரி 

கான சரஸ்வதி 

சுசிலா 

கண்டசாலா 

திருச்சி லோகநாதன் 

சௌந்தர ராஜன்

சீர்காழி கோவிந்தராஜன் 

ஷண்முக சுந்தரம் 

சதாரம், திருடன், நாடக, ஆடல், பாடல் அமைப்பு எம் எஸ் முத்து கிருஷ்ணன் எனக் கள்வனின் காதலி எழுத்து போடும்போது போடுகிறார்கள். முத்தையா, கல்யாணி இருவரும் பூங்குளம் என்ற சிற்றூரில் வாழும் காதலர்கள். முத்தையாவிற்கு அபிராமி என ஒரு தங்கை இருக்கிறார். இவர்கள் காதலிப்பது கல்யாணியின் அப்பாவிற்குத் தெரிய வர, அவர் கல்யாணிக்குத் திருமண ஏற்பாடு செய்கிறார். மாப்பிள்ளைக்கு வயது அறுபதே தான்! கல்யாணியின் அப்பா முத்தையாவை அனாதை என்கிறார். அபிராமி, கல்யாணியை முறைப்பெண் என்கிறார். கல்யாணியும் அத்தான் என்று தான் கூப்பிடுகிறார். இதனால் அநாதை என்பதன் நோக்கம் புரியவில்லை.

கல்யாணி, தன்னுடன் வேறு ஊருக்கு வருமாறு அழைக்கிறார். முத்தையா, அபிராமியின் திருமணம் தடைப்படும். அவள் திருமணத்திற்கு முன் தான் திருமணம் செய்வதில்லை; அவளை விட்டு விட்டு வெளியூர் வரும் நோக்கமுமில்லை என்கிறார்.

கல்யாணியின் திருமணம் நடைபெறுகிறது; முத்தையாவும் தங்கையும் வேறு  ஊருக்குச் செல்கிறார்கள். அங்கு, முத்தையா வேலை தேடிச் செல்கிறார். அபிராமி மேல் ஒரு கண் வைத்த பணக்காரன், முத்தையாவைத் தன் கணக்கப்பிள்ளையாக வைத்துக் கொள்கிறான். கல்யாணி, தனக்கு விருப்பமில்லா திருமணம் எனக் கணவரிடம் சொல்ல, அவரோ நீ என் மகள் மாதிரி எனச் சொன்னது மட்டுமல்லாமல், சொத்தை கல்யாணியின் பெயரில் எழுதிவைத்து விட்டு இறக்கிறார். 

கமலபதி நாடகங்களில் பெண் வேடமிட்டு நடிக்கும் நடிகர். கமலபதி குடும்பம் இவர்களைப் பார்க்க வருகிறாரது. இரு குடும்பமும் ஏற்கனவே உறவினர். அதனால் வருகிறார்கள். கமலபதியின் அம்மாவை ஆச்சி என்றே அபிராமி அழைக்கிறார். 

முதலாளி, அபிராமி, தனியாக வீட்டிலிருக்கும்போது வந்து தகாத முறையில் நடந்துகொள்ள, முத்தையா அடிக்கப் போகிறார். விளைவு; முத்தையா மீது திருட்டுப் பட்டம் கட்டி சிறையில் தள்ளுகிறார், முதலாளி. இன்ஸ்பெக்டர் மனைவி உண்மை அறிந்து முத்தையா நிரபராதி எனச் சொல்கிறார். ஆனால் தங்கையைத் தகுந்த இடத்தில் ஒப்படைத்துவிட்டு, வரவேண்டும் என முத்தையா நினைக்கிறார். சிறையிலிருந்த இன்னொரு கைதி சொன்ன ஆலோசனையின்படி, முத்தையா தப்பிச் செல்கிறார். வீட்டிற்குப் போய்ப் பார்த்தால் தங்கை இல்லை. அபிராமியை கமலபதியின் குடும்பம் அழைத்துச் சென்றது முத்தையாவிற்குத் தெரியாது.  அபிராமியும் கமலபதியும் காதலிக்கிறார்கள். 

தலைமறைவு வாழ்வு வாழும் முத்தையாவிடம் ஒரு நாள் காட்டில் முதலாளி மாட்ட, இவர் உண்மையிலேயே திருடுகிறார். இதனால் ‘கள்வன்’ என ஊரே இவருக்கு முத்திரை குத்திவிடுகிறது. கள்வன் யாரெனத் தெரியாது, கல்யாணி பிடித்துக் கொடுக்கப் போவதாகச் சொல்கிறார். இப்போது அவர், இறந்த பெரியவரின் பெரும் சொத்துக்களின் உரிமையாளர்.

ஒரு பெண்’ உங்களைப் பிடித்துக் கொடுப்பதாகச் சொல்கிறார். நீங்கள் அந்தப் பெண் வீட்டில் கொள்ளையடிக்க வேண்டும் என முத்தையாவிடம் சொல்ல, முத்தையா செல்ல, அது கல்யாணியின் வீடு. 

முத்தையா, தங்கையை மாறு வேடத்தில் போய்ச் சந்திக்கிறார். காவல்துறை முத்தையனைத் தேடுகிறது. பெண் வேடத்தில் வந்து கமலபதி தான் காப்பாற்றுகிறார். ஒரு பெண் தான் அவரை காப்பாற்றுகிறார் என ஊரில் பேசிக் கொள்கிறார்கள். இப்போது கல்யாணிக்குச் சந்தேகம். முத்தையன் இப்போது கல்யாணி இருக்கும் ஊரின் காட்டிற்கு வந்து விட்டார். இருவரும் சந்திக்கிறார்கள். பின் கமலபதி பெண் வேடத்தில் வந்து முத்தயனை சந்திக்கிறார். சாப்பாடு கொண்டு வந்த கல்யாணிக்குத் தூரத்திலிருந்து மீண்டும் சந்தேகம். 

மாறுவேடத்தில் வந்த இன்ஸ்பெக்டரிடம் முத்தையன் இருக்குமிடத்தை உளறிக் கொட்டிவிட, முத்தையன் கொல்லப்படுகிறார்.

“நீங்கள் என் வாழ்வைக் கொலை செய்தீர்கள் அவர் மறுபிறப்பு கொடுத்தார். அவர் தான் என் தகப்பனார்.” என்பதாகட்டும், உயிலின் படி கிடைத்த சொத்தைத் தகுந்த முறையில் நிர்வகிப்பதாகட்டும், கல்யாணி என்ற பாத்திரம் மிகவும் வலுவாகப் படைக்கப் பட்டிருக்கிறது. துடுக்கான பெண் என்றால் பானுமதி எப்போதும் சிறப்பாகவே செய்வார். இதிலும் அப்படியே!

பொட்டு வைத்துக் கொள்ளவில்லை; ஆனாலும் வெள்ளை உடுத்தி வைக்கவில்லை. நகை அணிந்து தான் கல்யாணி வருகிறார். ‘தாலி கட்டிய கணவன்’ இப்படி எல்லாம் வசனம் ஒன்றும் அவர் பேசவில்லை. மாறாக, அவர் தான் தன் தந்தை என்கிறார். இவ்வளவு தெளிவான பாத்திரம், யாரோ முன்பின் தெரியாத ஒருவரிடம் உளறிக் கொட்டும் என்பதை ஏற்றுக் கொள்ள இயலவில்லை.  இதற்காகவே அவ்வப்போது, அவசரக்காரி’ என்ற சொல் திரைப்படத்தின் நடுநடுவே வந்தாலும், கதையின் முடிவு என்பது பொருத்தமாக எனக்குத் தோன்றவில்லை. சிவாஜியின் கள்ளர் பார்ட் ஆட்டம் என்பது அவரின் நடிப்பிற்கு ஒரு இலக்கணம். முறுக்கு மீசையுடன் ஒரு தோற்றம், அப்பாவி முரடனாக இன்னொரு தோற்றம் என வெளுத்து வாங்கியிருக்கிறார்.

சிவாஜியை விட பானுமதி வயதில் மூத்தவர். இன்றைய நாயக நடிகர்கள் இப்படி வயதில் மூத்த நடிகையுடன் நடிப்பார்களா எனத் தெரியவில்லை. படமும் நன்றாகத்தான் இருக்கிறது. எந்த குறையுமில்லை. இதை நாமும் கவனத்தில் கொள்ள வேண்டும். இன்றும் ஒரு வயது கணவனை விட மனைவிக்குக் கூடுதல் என்றாலும் அந்தப் பெண்கள் எவ்வளவு கூனிக் குறுகுகிறார்கள் என நாம் பார்க்கலாம். கணவனை விட மனைவி வயதில் குறைந்தவராகத்தான் இருக்க வேண்டும் என்பது சட்டமா? 

இன்ஸ்பெக்டர் ஆக வரும் அவரது மனைவி இருவரின் பாத்திரம், அவர்களின் உரையாடல் எல்லாம் சிறப்பாக உள்ளது. பொதுவாக நல்ல காவலர் என யாரையும் திரைப்படங்கள் காட்டுவதில்லை. அப்படி ஒருவர் எனக் காட்டியிருப்பதே நிறைவாக உள்ளது. தங்கையாக வரும் குசல குமாரி, கமலபதியாக வரும் TR ராமச்சந்திரன் போன்றவர்களும் நிறைவாகச் செய்திருக்கிறார்கள். கதையை நகர்த்துவதில் TR ராமச்சந்திரன் பங்கு மிகப்பெரியது.

 பாம்பாட்டிச் சித்தர், பாரதியார், கவிமணி தேசிக விநாயகம் எனப் பலரின் பாடல்களை எடுத்தாண்டிருக்கிறார்கள். ஆத்மநாதன் எழுதிய பாடல்என . பாட்டுப்புத்தகத்தில் ஒன்று உள்ளது.  திரைக்கதை எழுதியிருக்கும் S. D.சுந்தரம் சில பாடல்கள் மற்றும் திருடன் குறித்த ஒரு நாடகம் எழுதியிருக்கிறார்.

கண்டசாலாவும் பானுமதியும் பாடிய ‘வெயிற்கேற்ற நிழலுண்டு வீசும் தென்றல் காற்றுண்டு’ பாடல் பாரசீக மொழியில் உமர் கய்யாம் எழுதிய பாடலொன்றத் தழுவி கவிமணி தேசிக விநாயகம் எழுதிய பாடலாகும். இது மிகவும் பிரபலமான பாடல்.

கவிமணி தேசிக விநாயகம் குமரி மாவட்டத்திலுள்ள தேரூரைச் சார்ந்தவர். நாகர்கோவில் கோட்டாறு, பள்ளியில் ஆசிரியராகவும், திருவனந்தபுரம் பெண்கள் கல்லூரியில் பேராசிரியராகவும் பணி புரிந்தவர்.

1940-ல் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் உமாமகேஸ்வரனார் இவருக்கு ‘கவிமணி’ என பட்டம் வழங்கினார். கவிமணி, குழந்தைப் பாடல்கள் பல எழுதியவர். ‘மலரும் மாலையும்’, ‘ஆசிய ஜோதி’, ‘உமர்கய்யாம் பாடல்கள்’ போன்ற பல நூல்களை எழுதியவர்.

1940-ல் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் உமாமகேஸ்வரம் பிள்ளை இவருக்கு ‘கவிமணி’ பட்டம் வழங்கினார்.

இவர் பிறந்த ஊரில் நினைவு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்திய அரசு இவர் நினைவாக 2005-ல் தபால் தலை வெளியிட்டது.

வெய்யிற்கேற்ற நிழலுண்டு வீசும் தென்றல் காற்றுண்டு

வெய்யிற்கேற்ற நிழலுண்டு

கையில் கம்பன் கவியுண்டு கையில் கம்பன் கவியுண்டு

கலசம் நிறை அமுதுண்டு கலசம் நிறை அமுதுண்டு அமுதுண்டு

தெய்வ கீதம் பலவுண்டு தெய்வ கீதம் பலவுண்டு

தெரிந்து பாட நீயுண்டு தெரிந்து பாட நீயுண்டு பாட நீயுண்டு

வையந்தரும் இவ்வனமன்றி வையந்தரும் இவ்வனமன்றி

வாழும் ஸ்வர்க்கம் வேறுண்டோ வாழும் ஸ்வர்க்கம் வேறுண்டோ

தமிழ் திரு நாடுதனைப் 

பெற்ற தாயெனக் கும்பிடடி பாப்பா 

துன்பம் நெருங்கி வந்த போதும்-நாம் 

சோர்ந்துவிட லாகாது பாப்பா!

அன்பு மிகுந்ததெய்வ முண்டு-துன்பம்

அத்தனையும் போக்கிவிடும் பாப்பா!

உயிர்க ளிடத்தில்அன்பு வேணும்;-தெய்வம்

உண்மையென்று தானறிதல் வேணும்;

வயிர முடையநெஞ்சு வேணும்;-இது

வாழும் முறைமையடி பாப்பா!”

என்ற பாரதியின் பாப்பா பாடலுடன் தான் திரைப்படம் தொடங்குகிறது. எம்.எல்.வசந்தகுமாரி, என்.எல்.ஞானசரஸ்வதி இருவரும் இணைந்து பாடுகிறார்கள்.

பாரதியாரின் பாடலை டி.எம்.சௌந்தரராஜன், பானுமதி பாடுகிறார்கள். 

மனதில்  உறுதி வேண்டும்,  

வாக்கினிலே இனிமை வேண்டும்;

நினைவு நல்லது வேண்டும்,

நெருங்கின பொருள் கைப்படவேண்டும்;

கனவு மெய்ப்படவேண்டும்,

கைவசமாவது விரைவில் வேண்டும்;

தனமும் இன்பமும் வேண்டும்,

தரணியிலே பெருமை வேண்டும்;

கண் திறந்திட வேண்டும்,

காரியத்தில் உறுதி வேண்டும்;

பெண் விடுதலை வேண்டும்,

பெரிய கடவுள் காக்க வேண்டும்;

மண் பயனுற வேண்டும்.

வானமிங்கு தென்பட வேண்டும்;

உண்மை நின்றிட வேண்டும்!

பாரதியாரின் புதிய கோணங்கி பாடலை டி.எம்.சௌந்தரராஜன் பாடுகிறார். 

காலம் வருகுது நல்ல காலம் வருகுது

சாதிகள் சேருது சண்டைகள் தொலையுது

சொல்லடி சொல்லடி,சக்தி -மாகாளீ

வேதபுரத் தாருக்கு நல்ல குறி சொல்லு

சாமிமார்க் கெல்லாம் தைரியம் வளருது

தொப்பை சுருங்குது,சுறுசுறுப்பு விளையுது

எட்டு லச்சுமியும் ஏறி வளருது

சாத்திரம் வளருது,சாதி குறையுது

தரித்திரம் போகுது;செல்வம் வருகுது

படிப்பு வளருது பாவம் தொலையுது

படிச்சவன் சூதும் பாவமும் பண்ணினால் -மெத்த 

படிச்சவன் சூதும் பாவமும் பண்ணினால் 

போவான் போவான் ஐயோவென்று போவான்

பயம் தொலையுது பாவம் தொலையுது 

சாத்திரம் வளருது, சாதி குறையுது,

வேத புரத்திலே வியாபாரம் பெருகுது;

தொழில் பெருகுது;தொழிலாளி வாழ்வான்.

சாத்திரம் வளருது;சூத்திரம் தெரியுது;

யந்திரம் பெருகுது;தந்திரம் வளருது;

மந்திர மெல்லாம் வளருது,வளருது;

நேத்திரம் திறக்குது, நியாயம் தெரியுது;

பழைய பயித்தியம் படீலென்று தெளியுது;

வீரம் வருகுது,மேன்மை கிடைக்குது;

சொல்லடி சக்தி,

பானுமதி பாடிய பாரதியாரின் பாடல். 

நல்லதோர் வீணை செய்தே – அதை

நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?

சொல்லடி சிவசக்தி – எனைச்

சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்,

வல்லமை தாராயோ – இந்த

மாநிலம் பயனுற வாழ்வதற்கே !

சொல்லடி சிவசக்தி – நிலச்

 சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ? 

பாம்பாட்டிச் சித்தரின் பாடல் ஒன்றை T. M. சௌந்தரராஜன் பாடுகிறார்.

வளைபுகும்போதே தலை வாங்கும் பாம்பே

மண்டலமிட்டுடல் வளை வண்ணப் பாம்பே

தளைக்கஞ்சி நின்றிடும் சத்தியப் பாம்பே

தலையெடுத்தே விளையாடு பாம்பே.

கண்டவர்கள் ஒருக்காலும் விண்டிடார்களே

விண்டவர்கள் ஒருக்காலும் கண்டிடார்களே

கொண்ட கோலமுள்ளவர்கள் கோனிலை காணார்

கூத்தாடிக்கூத் தாடியேநீ யாடாய் பாம்பே.

தந்திரஞ் சொல்லுவார் தம்மை யறியார்

தனிமந்திரஞ் சொல்லுவார் பொருளை யறியார்

மந்திரஞ் செபிப்பார்கள் வட்ட வீட்டினுள்

மதிலினைச் சுற்றுவார் வாயில் காணார்.

அந்தரஞ் சென்றுமே வேர் பிடுங்கி

அருளென்னும் ஞானத்தால் உண்டை சேர்த்தே

இந்த மருந்தினைத் தின்பீராகில்

இனிப்பிறப் பில்லையென்றாடாய் பாம்பே.

வளைபுகும் போது தலைவாங்கும் பாம்பே

மண்டலமிட்டுடல் வலை வண்ணப்பாம்பே. 

களை கண்டு நின்றிடும் சத்திய பாம்பே 

தலையெடுத்தே விளையாடு பாம்பே 

S. D. சுந்தரம் எழுதிய பாடலை பாடியிருப்பவர் கண்டசாலா. 

‘மண்ணுக்கீடு பொன் கேட்டால் 

வலியில் மனிதர் என் செய்வார்

கன்னி செய்த ஒப்பந்தம் 

கண்ணில் கண்டதொன்றுமில்லை  

திண்ணமா இவ் வழக்கு 

தீரா வழக்கே யாகுமப்பா -அப்பப்பா 

இனி முடிவு செய்திடுவார் யாவருள்ளார் 

எங்குள்ளார்?

S. D.சுந்தரம் எழுதிய பாடலை பானுமதி ஏ. பி. கோமலா & கே. ராணி குழுவினர் பாடியிருக்கின்றனர். 

அல்லி மலர் சோலை இள வல்லி இவள்தானே

மெல்ல வந்து சொல்லுவாளே 

நல்ல கதை சொல்லுவாளே 

வண்ண மயில் கண்மணியே வாணியே என் அன்னமே 

நல்ல கதை சொல்ல வேணும் -எங்களுக்கு 

தெள்ளு தமிழ் பாவை கண்ணகியைப் போலே 

தீரமாக வாழ்வோம்- பெண்கள் நாமே வீரமாக 

மோகினியைப் போலே மாதவி வந்தாலே – வன 

மோகினியைப் போலே மாதவி வந்தாலே – நீ 

என்ன செய்வாய் கண்ணகியே சொல்லு நீயே 

பாட்டில் சொல்லு நீயே

என்னை மணந்தே நல்லவை செய்யாமல்

வேறு கன்னியர் தம்மை 

கண்ணெடுத்தும் பார்த்திரானடீ 

சூர்னைகை வருவாள்  சூது பல செய்திடுவாள் 

சீதையே என்ன செய்வாய் வாதையே தந்திடும் 

ராவணனும் வந்து சேர்ந்தால் 

S. D.சுந்தரம் எழுதிய தெற்கத்தி கள்ளனாடா என்ற திருச்சி லோகநாதன், சீர்காழி கோவிந்தராஜன், சண்முகசுந்தரம் இணைந்து பாடும் நாடகம் ஒன்று உள்ளது. சதாரம் நாடகம் என இணையம் குறிப்பிடுகிறது. சதாரம் என்றால் நூறு முனைகளையுடைய வஜ்ஜிரப் படை அதாவது படைக்கலன் என்று கூகுள் கூறுகிறது. இதற்கும் இந்த நாடகத்திற்கும் தொடர்பு இருக்கிறதா எனத் தெரியவில்லை. இந்த நாடகத்தின் கதைப்படி, பிற்பகுதியில் இளவரசி தான் வருகிறார். அதனால் இருக்கலாம். வேறு ஏதாவது விளக்கம் கூட இருக்கலாம்.

சரியான விளக்கம் எனக்குத் தெரியவில்லை. கூத்து வகையான இந்த நாடகம் அவ்வளவு விறுவிறுப்பாக இருக்கிறது. இப்போது பழைய நாடகங்கள் குறித்து சில படங்கள் வருகின்றன. அவற்றை இயக்குபவர்கள் இதை ஒரு தகவலுக்காகப் பார்க்கலாம். அதற்காக தில்லானா மோகனாம்பாள் படத்தில் வரும் “பாண்டியன் நானிருக்க” பாடல் மாதிரி அப்பட்டமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. தில்லாதங்கு டாங்கு திருப்பிப் போட்டு வாங்கு (லாலாக்கு டோல் டப்பிமா) போன்று கொஞ்சம் எடுக்கலாம். இந்த நீண்ட நாட்டிய நாடகம் பல பிற்காலப் பாடல்களை நினைவு படுத்துகிறது.

தெற்கத்தி கள்ளனாடா – நான் 

தென்மதுரை பாண்டியண்டா 

வடக்கத்தி கள்ளர்களை -நான் 

வணங்க வைக்கும் குள்ளனாடா  

நல்ல தமிழ் நாடானடா -தில்லை 

நடராஜா ஆச்சாரியாடா 

புகழ் சொல்லுவேண்டா எந்தன் குரு 

சுரராக வீரனடா 

தில்லாங்கடி தில்லாங்கடி தில்லாங்குயிலே 

மயிலே தில்லாங்குயிலே

தில்லாங்கடி பாட்டு பாடி வந்தேன் சபையிலே ஷோக்கா 

வந்தேன் சபையிலே

வந்தனம் தந்தேன் 

கோட்டை கொத்தளம் மேலேறி 

கூசாமல் குதிப்பேன் -என்னை 

கூடி பிடிக்கப் போலீஸ் வந்தால் 

குருடராகிடுவேன் 

எதிர்த்தால் குடல் சரித்திடுவேன் -உடலை 

கூறு போட்டிடுவேன் 

பாத்துக்கோ சாமி கேட்டுக்கோ நைனா 

நான் அரண்மனையில திருடப்போறேன் 

அதுக்காக மனசுல ஒன்ன வேண்டுகிறேன் 

கத்தி கட்டாரி சூலம் 

கைகளில் ஏந்தி நின்று 

காவல் காக்கும் கருப்பா 

மூர்த்தியே சிவப்பா முருகன் தகப்பா 

காடு மலையினில் 

காத்திடும் கருணையப்பா 

ஏழை பங்காளன் என்று 

ஏமாற்றி பணம் சேர்த்த

இரும்பு பெட்டியை காட்டு 

கம்பியை போட்டு உடைப்பேன் பூட்டு 

கத்தை கத்தையா எடுப்பேன் 

கரன்சி நோட்டு 

மட்ட இன்னா மட்ட இது 

நான் வளர்த்த மட்ட ஏ 

ராணி ஏறி ஊர்வலமாக 

பவனி வரும் நாலு காலு 

டில்லி மட்டங்க 

பப்பள பளபளவென டாலடிக்குதே கழுத்தில் 

டாலடிக்குதே தாலி டாலடிக்குதே 

அது தாலியல்ல பந்தயத்தில் 

பரிசு பெற்ற டாலர் 

ஆண் பிள்ளை என்று சொன்னாயே

ஏனில்லை மீசை முகத்தில் 

ஏனில்லை மீசை

என் வயது சிறிசு ஆனதாலே 

வளரவில்லை மீசை 

மார்பகங்கள் நிமிர்ந்து எந்தன் மனதை மிரட்டுதே 

எனக்கு மயக்கமூட்டுதே 

தண்டால் பஸ்கி சிலம்பம் ஆடி 

முண்டா பெருத்ததே 

உடம்பு குண்டாய் தெரியுதே!

(வேடம் கலைய) 

கூந்தலை சும்மா விடுவேனோ 

உனக்கென சம்மத படுவேனோ?

பெண்கள் தந்திரம் அறிவேனே 

பேயனைப் போல் பேசுகிறாய் போக்கிரியாய் ஆடுகிறாய் 

மன்மதன் எனக்கு ரதி தேவி 

மடமோ கூடா மூதேவி 

கொண்டா நதியின் ஓடையிலே 

கொண்டுவைப்பேன் பாடையிலே கொடுத்துடுவேன் தாடையிலே 

உன்னைவிட்டுப் பிரியவில்லை 

ஒருவர் முகம் பார்க்கவில்லை 

என்னை விட்டு நீ பிரிந்தால் 

இடுவேன் நான் கைவிலங்கு 

தில்லா டாங்கு டாங்கு 

தெரிஞ்சு போச்சே பாங்கு 

கைவிலங்கு போட்டு என்னை 

கடுஞ் சிறையில் இட்டாயானால்,  

மெய்விளங்கும் காசி தனில் 

மேன்மை மிக்க லிங்கமாவேன் 

எதிர் பாட்டு பாடு 

இல்லாவிட்டால் ஓடு 

காசிதனில் லிங்கமாகி 

காட்சியும் நீ கொடுத்தாயானால் 

கனபாடி பட்டாராகி 

காலை மாலை பூஜை செய்வேன் 

தில்லா டாங்கு டாங்கு 

தெரிஞ்சு போச்சே பாங்கு 

பட்டரைப் போல் வந்து நீயும் 

பக்தியுடன் பூஜை செய்தால் 

புத்தி கொடுக்க மாட்டேன் 

போகமே நீ போகாதேடா 

எதிர் பாட்டு பாடு 

இல்லையேல் வாயை மூடு 

அடே மொரடா என் கையை விடடா 

என் ராஜா உன்னைக் கண்டால் 

உன் கையைத் துண்டித்து விடுவார்.

உன் ராஜா தான் கூஜாவாகி மூலையில் தூங்கிறானே 

இப்போ நான்  தான் உனக்கு ராஜா

வா மயிலே மையலானேன் மெத்த வாடி 

ஏனோ எந்தன் மீதில் வீணாய் மோசமானாய் 

நாயகி நீயே 

நடடா பேயே 

தாரா குயிலே 

போடா பயலே 

ஆத்மநாதன் எழுதிய பாடல் இது. பாட்டுப்புத்தகத்தில் உள்ளது. பாடலைப் பாடியவர்கள் யார் எனத் தெரியவில்லை. 

வானம்பாடிகள் போலே- பிரேம 

கானம் பாடி மகிழ்வோம் – நாமே 

நாணர்கானிலே தென்றல் உலாவ 

காதல் பிறந்திடுதே- ஜீவ 

காதல் பிறந்திடுதே

வானிலே முகில் கூடிடவே 

மாமயில் ஆடிடுதே- நடனம் 

மாமயில் ஆடிடுதே- நாமே 

மெல்லலை துள்ளும் கொள்ளிடப் பெண்ணாள் 

வீணையை மீட்டுகிறாள்- இதய 

வீணையை மீட்டுகிறாள்

அன்னை காவிரி செல்வியிவள் 

அன்பினை வாழ்த்துகிறாள்- நமது 

அன்பினை வாழ்த்துகிறாள் – நாமே 

இன்னொரு பாடலும் இருக்கிறது. தங்கை அபிராமி பாடும் பாடல். பின்னணி பாடியவர் யார் எனத் தெரியவில்லை.

வாழ்ந்திட வேண்டும் அம்மா- உனது திரு 

மாமலரடி மறவாமல், நான் தினமும் 

ஆழ்கடல் சூழ்புவி மீதினிலே -பகைவருக்கும் 

அன்பு செய்யும் உயர்ந்த பண்புடனே என்றும் 

ஓயா விசாரத்தினால் உடல் நலியாமல் 

உண்மையன்றி பொய்க்கேன் 

உயிர் நிலையாமல் 

மாயா விகாரம் பட்டு மதியலையாமல் 

மடப்பூவையர்  மோகத்தால் வாழ்வு கெடாமல் 

படைப்பாளர்

பாரதி திலகர்

தீவிர வாசிப்பாளர், பயணக் காதலர்; தொன்மை மேல் பெரும் ஆர்வம் கொண்டவர். அயல்நாட்டில் வசித்து வந்தாலும் மண்ணின் வாசம் மறவாமல் கட்டுரைகள் எழுதிவருகிறார். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய கட்டுரைகள், ‘பூப்பறிக்க வருகிறோம்’, ‘சினிமாவுக்கு வாரீகளா?’ என்கிற புத்தகங்களாக, ஹெர் ஸ்டோரிஸில் வெளிவந்திருக்கிறதுதற்போது ‘சினிமாவுக்கு வாரீகளா – 3’ மற்றும் ‘சாதனை படைக்கும் சாமானியர்’ என்கிற இரண்டு தொடர்களை ஹெர் ஸ்டோரீஸ் வலைத்தளத்தில் எழுதிவருகிறார்.