ஜீவா ஆஸ்பத்திரிக்கு பக்கத்து சந்தில் நான்கு பேர் சேர்ந்து ஒருவனை அடித்து உதைத்துக் கொண்டிருந்தனர்.
ரமணியும் அவள் அம்மையும் பஸ்சில் இருந்து மணிக்கூண்டருகே இறங்கி வீட்டை நோக்கி நடந்து வருகையில்தான் இந்தக் காட்சி கண்ணில் பட்டது. பொதுவாக குடித்து விட்டு இப்படி வம்பிழுத்துக் கொண்டு குளக்கரையில் ஆட்கள் உருளுவது வழக்கமாய் நடப்பதுதான் என்பதால், கடந்து போகிறவர்கள் யாரும் என்னவென நின்று கேட்கவில்லை. தரையில் அமர்ந்து அடிவாங்கிக் கொண்டிருந்தவன் மேல்சட்டை எதுவும் போட்டிருக்கவில்லை. ஒரு துண்டை மாராப்பு போல போட்டிருப்பதைக் காணும் பொழுதே ரமணிக்கு அவன் சின்னராசைப் போலத் தெரிந்தான்.
“அடிக்காதீய… அடிக்காதீய… நான் என்ன செஞ்சேன்னு என்ன போட்டு அடிக்கியோ நான் ஒன்னுஞ்செய்யல என்ன உட்ருங்க” எனக் கதறும் குரல் சின்னராசுக் குரல்தான் என்பது விளங்க, கவனியாமல் நடந்த அம்மையை நிறுத்தி இடப்பக்கம் பார்க்குமாறு சைகை செய்தாள் ரமணி. சட்டை செய்யாமல் நடந்துக் கொண்டிருந்தவள் மகள் கூறியபின் நின்று யாரென பார்த்தாள், பின் யோசிக்காமல் சடாரென சந்திற்குள் நுழைந்துவிட்டாள்.
“ஏ தம்பிகளா…வாயில்லா பூச்சி அவன்… அவனப் போட்டு இப்படி அடிக்கியளே. அய்யோ பாவம் விடுங்க” என்றாள் பாப்பா. அம்மை அவர்களுக்கிடையே இப்படி போவாள் என்று அறியாத ரமணி சாலையிலேயே நின்று வேடிக்கைப் பார்த்தாள். மெதுவாக சாலையை விட்டு கீழே இறங்கி உள்ளே நடப்பதா வேண்டாமா என்ற குழப்பத்தில் நின்றுகொண்டிருந்தாள்.
“ஏ பாப்பக்கா நீயே கேளு இந்த அநியாயத்த… நான் செவனேனுதான் குளத்த பாத்து போய்கிட்டு இருந்தேன். சும்மா பொல்லாப்பு சொல்லி என்ன அடிக்கானுவ.”
“முதல்ல எந்தி சின்ராசு… சின்னபயலுவ கிட்ட எல்லாம் செரைய இழுத்துக்கிட்டு…” என்றாள் பாப்பா.
“எக்கோ… இவன் செஞ்ச காரியம் தெரியாம என்னத்தையாது சொல்லாதீய, நான் சொன்னேனு வைங்க, நீங்களே நாலு மிதி மிதிப்பியோ, பேசாம போங்கக்கா. நாங்க பாத்துக்கிடுதோம்” என்றான் ஒருவன்.
அவர்கள் கூறும் முன்னே முந்திக்கொண்டு அவர்கள் காலைப் பிடித்தான் சின்னராசு. “எய்யா சாமி என்ன வுடுங்கோ. நான் களவெடுக்கல” என்றவன் ரமணியின் அம்மையை நோக்கி,
“யக்கா நான் வந்திருதேன் நீ போக்கா… என்னால இந்த போக்கத்த பயலுவகிட்ட வாய் கொடுக்காதே” என்றான். சின்னராசின் தர்மசங்கடம் உணர்ந்தவளாக,
“இங்கேருங்கடே… அவன் என்ன தப்பு செஞ்சிருந்தாலும் அவன் வீட்ல வந்து பேசுங்க, இப்படி சந்துக்குள்ள கைநீட்டாதீக. இங்கன மெயின்ரோட்டுக்கு வந்து பேசுங்க சொல்லிட்டேன். இன்னும் போட்டு அடிச்சீகன்னா, இன்னா… எல்லாத்தையும் சத்தம் போட்டு கூப்டுதேன், என்னனு கேட்போம்” என்றாள்.
ரமணிக்கு ஒருபுறம் பயமாகவும் இன்னொருபுறம் அம்மையின் தைரியம் ஆச்சரியமாகவும் இருந்தது. ‘பக்கத்து வீட்டு சின்னராசுக்காக அம்மா ஏன் இப்படி தெரியாத பயல்களிடம் சண்டைக்கு போகிறாள். இவன் என்ன காரியத்தை செய்து தொலைத்தானோ! அது தெரியாமல் அம்மா ஏன் வக்காலத்து வாங்குகிறாள்’, என்று எரிச்சலுடன் நின்றாள்.
இவர்கள் பேசிக்கொண்டிருக்கையிலேயே துண்டை உதறி மேலே அணிந்தவன் மெதுவாக பிரதான சாலையை நோக்கி நடக்கத் துவங்கினான்.
“நில்லுல… எங்க ஓடுத?” என்றபடி பிடிக்க முற்பட்டான் ஒருவன்.
“தம்பி அவன் என்ன செஞ்சான்னு இப்படி பண்ணுதிய? நடங்க ரோட்டுக்கு நாலுபேர கூப்புட்டு என்னனு கேட்போம்” என்றாள் பாப்பா.
ஒருவரையொருவர் சங்கேதமாக பார்த்துக்கொண்டவர்களில் சிறியவன், சின்னராசை நோக்கி,
“ஓடிரு பாத்துக்க. இங்கன கண்டேன்னா அம்புட்டுதான்” என்றான்.
“நல்லதுக்கு காலமில்லக்கா… என்ன பாத்தா சைக்கிளு திருடுதவன் மாதியா இருக்கு? என்ன பாத்தா இவனுங்களுக்கு எளக்காராமா இருக்கு…” என்று தலையை வெட்டிக்கொண்டு அங்கலாய்த்தான் சின்னராசு.
“சேரி விடு… வீட்டுக்குப் போய் செல்லம்மாவ ஒத்தணம் கொடுக்கச் சொல்லு. நீ வீட்டப்பாத்து போ… நான் பாய் கடைக்கு போயிட்டு வாரேன்” என்ற பாப்பா மகளையும் வீட்டிற்குப் போக சொல்லிவிட்டு தெருவை தாண்டி பெருமாள் கோவில் போகும் திருப்பத்தில் இருக்கும் கடையை நோக்கி நடந்தாள்.
கடைக்கு போய்விட்டு திரும்பி தெருவிற்குள் நுழையும் போதே கூட்டம் கூடி நிற்பது தெரிய என்ன இழவோ என்று எண்ணிக்கொண்டே நடையை எட்டிப் போட்டாள். அவள் வீட்டருகே நடுத்தெருவில் அமர்ந்து அழுதுகொண்டிருந்தான் சின்னராசு. அவன் வீட்டார் சுற்றி நிற்க, அவன் மனைவி செல்லம்மா கையில் ஒரு கம்போடு பத்திரகாளியைப் போல நின்றாள்.
“எந்த எடுபட்ட பய கைய நீட்டுனான்னு சொல்லுங்க, அவன் கைய முறிக்காம விடமாட்டேன் ஆமா…” என்று பெருமாறினாள்.
“ம்ம்… கும்… இவ அடங்க மாட்டா இன்னும். சும்மா கெடந்த சங்க ஊதிக்கெடுத்தானாம் ஆண்டி. ஏம்லே இங்கன உக்காந்து ஒப்பாரி வைக்கே. எந்திச்சு உள்ள வாலே பேசிக்கலாம்” என்று அவன் அக்கா மந்தாரை அவனிடம் மருகிக் கொண்டிருந்தாள்.
பாப்பாவை கண்டதும் சின்னராசின் ஓலம் அதிகமாகியது.
“யக்கா நீ கண்டேல்லா… சொல்லுக்கா என்ன எப்படி போட்டு அடிச்சானுவன்னு”
“சேரி விடு சின்ராசு. செத்த பயலுவ பேச்ச பேசிக்கிட்டு. செவனேன்னு எந்திச்சு உள்ள போ” என்று கொஞ்சம் நேரம் ஆறுதலாய் பேசிவிட்டு தன் வீட்டிற்குள் நுழைந்தாள் பாப்பா. ஜன்னல் வழியாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த ரமணி அம்மாவையும், சின்னராசையும் புரிந்து கொள்ள முடியாமல் விழித்தாள்.
மூன்று நாட்கள் கழித்து தெருக்குழாயின் அருகே குடத்துடன் நின்றுக்கொண்டிருந்தான் சின்னராசு. அவனை வம்பிழுத்த பெண்கள், “செல்லம்மா கொடுத்து வைச்சவ, அவள ஒரு வேல செய்யவிடாம எப்படி பாத்துக்கிடுதியண்ணே நீங்க”, “இன்னைக்கு சோலிக்கு போவலியா”, “என்ன சாப்பாடு… யாரு பொங்குனா”, “மக்கமாரு பள்ளிகூடம் போயாச்சா” என்று கேள்விகளை எழுப்பியவண்ணமிருந்தனர்.
எல்லா கேள்விகளுக்கும் பொறுமையாக பதிலளித்த சின்னராசு தன்னிச்சையாக மாராப்பு போல அணிந்திருந்த மேல்துண்டை சரிசெய்துக்கொண்டே இருந்தான்.
“ஏ வள்ளிமாச்சி கேட்டியா கதைய, கடைசி ஊட்டு பிள்ளைக்கு நோய் நொடியெல்லாம் இல்லையாம். பேய் புடிச்சிருக்குன்னு பேசிக்கிடுதாவ” என்று மூக்கின் மீது விரலை வைத்து ஆச்சரியமாகவும் ரகசியமாகவும் கதை பேச எத்தனித்தான். குடத்தை குழாயின் அடியில் வைக்க குனிந்தவனிடம்,
“சின்ராசண்ணே துண்ட புடிப்பியா கொடத்த புடிப்பியா” என்று கிண்டலடித்தாள் ஒருத்தி. வீட்டு வாசலுக்கு வந்து எட்டிப் பார்த்த செல்லம்மாள் அங்கிருந்தே சத்தம் கொடுத்தாள்.
“இன்னுமா தண்ணி புடிச்சாவுது? சட்டுனு வாங்கோ” என்றாள்.
“இன்னா அக்கா கூப்டுட்டாவோ இல்ல… வீட்டுல ஆயிரம் சோலி இருக்கும் போல” எனக் கண்ணடித்துச் சிரித்தாள் மற்றொருவள்.
“விவஸ்தைக்கெட்டவா…” என்று வெக்கப்பட்டுக்கொண்டே குடத்தை இடுப்பில் வைத்துக் கொண்டு அவன் போவதையே பார்த்துக் கொண்டிருந்தவர்கள், ‘அவன் நிஜமாக ஆணா, பெண்ணா,’ ‘இவனோடு செல்லம்மா இரண்டு பிள்ளைகளை எப்படித்தான் பெற்றாளோ,’ ‘பிள்ளைகளுக்கு அவன் ஜாடையும் விழுகிறதே, அவர்கள் சொந்தக்காரன் ஒருவன் அங்கனேயேதான் கிடக்கான், ஆனால் அவன் அவளுக்கு தம்பி மொறையாகிறதாம்’ என்று பலவாறாகப் பேச ஆரம்பித்தார்கள். இறுதியாக யாருக்குமே சின்னராசு ஆண்தான் என்பதை ஒத்துக்கொள்ள மனம் வரவில்லை.
பெண்களைப் போன்ற நளினத்துடன் அவன் பேசுவதும், பாவனைகள் செய்வதும், அவனது நடையும், இடுப்பில் வேட்டி உடுத்தினாலும், மேலுடம்பை மறைக்க பனியனுக்கு பதிலாக அவன் அணியும் மேல் துண்டும், அவனை முழுதாக ஆண் என்று ஒப்புக்கொள்ள அனுமதிக்கவில்லை. அதேசமயம் அவனை பெண் என்றும் ஒத்துக்கொள்ள முடியாமல் ரெண்டுங்கெட்டான் என்ற கணக்கிலேயே வைத்திருந்தனர். அவனைப் பற்றி பேசும்பொழுதும், குறிப்பிடும் பொழுதும் ‘அந்த பொண்டுவ பய, பொண்ணஞ்சட்டி’ என்றே அழைத்தனர்.
“இந்த பொண்ணஞ்சட்டி பய அன்னைக்கு அந்த ஆம்பிளைக கிட்ட என்னமும் வம்பிழுத்திருப்பான், சைக்கிள் களவெடுக்க நினைச்சான்னு அடிச்சாவோங்கறதெல்லாம் சும்மா” என்றாள் ஒருத்தி. “நாம ஒன்னும் தெரியாத வெள்ளந்தினு நெனைச்சு பேசுதோம், யாருக்கு தெரியும் எந்த புத்துல எந்த பாம்புன்னு”, “என்ன படுக்காளித்தனம் பண்ணுனானோ யாரு கண்டா” என்றபடிக்கு சின்னராசின் கதையை நீட்டிக்கொண்டே சென்றார்கள் தண்ணீர் பிடிக்கக் கூடியிருந்த பெண்கள். கல்லூரிக்குக் கிளம்பி வாசலுக்கு வந்து விட்டிருந்த ரமணியின் காதில் இவை யாவும் விழ, சின்னராசின் மீதான மற்றொரு பிம்பம் குளத்துப் பாசியைப்போல படர ஆரம்பித்தது.
பக்கத்து வீட்டுப் படியில் தண்ணீர் பிடிக்க அமர்ந்திருந்த வயதில் மூத்த வள்ளியாச்சி அவர்களை கண்டித்தாள்.
“வாய் புளிச்சதோ, மாங்கா புளிச்சதோன்னு கண்டதையும் பேசப்பிடாது. அவம் பொண்டாட்டி அவன புடிச்சு தானே வாழுதா. அவ காதுல கேட்டான்னா உங்க அம்புட்டு பேரையும் ஆஞ்சி போடுவா பாத்துக்கங்க. இந்த பேச்ச இந்தாக்குல உடுங்கட்டி. உங்க புருசன மொதல்ல ஒழுங்கா கெட்டி காப்பாத்துங்க. பொறவு ஊர் பொறனி பேசலாம். அடுத்த ஆம்பிளையக் கண்டு மயிலாடுவாளுவோ பொறவு தனக்கு ஒப்ப மத்தவள தரம்தாழ்த்திப் பேசவேண்டியது” என்றாள்.
சட்டென வாயை மூடிய பெண்களுக்கு வள்ளியாச்சியின் மீது ஆத்திரமாய் வந்தது. செல்லம்மாவை குறித்தும் அவள் நடத்தையைக் குறித்துமாக அவர்கள் பேசிய பேச்சிற்கு முற்றுப்புள்ளி வைத்தவள், தன் குடத்தை தூக்க எத்தனிக்கையில் அடுத்த குடத்தை தூக்க வந்தான் சின்னராசு.
“வள்ளியாச்சி நின்னு, உன் வீட்டு வாசல்ல கொண்டு வைக்கேன்” என அவள் குடத்தை தூக்கிக் கொண்டு அவளுடன் நடந்தான். முகத்தை வெட்டிய மரகதம், “இப்படி புளுக்கவேலை பாக்காம்லா… அதான் அந்த பொண்டுவ பயலுக்கு ஏண்டு புடிக்கா இந்த கெழவி” என்றாள்.
“ஏம்லே சின்ராசு மேல்சட்டையாது பனியனாது போட்டா என்ன? இப்படி பொம்பள கணக்கா மாராப்ப போட்டுக்கிட்டு அலையுதே” என்றாள் வள்ளியாச்சி.
வெட்கத்தில் சிரித்தவன், “இப்படி துண்ட போடுதது தான் சுளுவா இருக்கு ஆச்சி” என்றுவிட்டு நகர்ந்தான். தண்ணீர் குடத்தை எதிர்பார்த்து வாங்குவதற்கு வாசலுக்கு வந்த செல்லம்மாவின் காதில் இந்த உரையாடல் விழாமல் இல்லை. எத்தனையோ முயன்றும் செல்லம்மாவினால் அவனை மாற்ற முடியவில்லை. நல்லது கெட்டது என்று போகும்போது மட்டுமே அவன் சட்டை அணிந்தான். செல்லம்மா வீட்டு ஆட்களும் சின்னராசை இளக்காரமாய் நடத்தும்போது அவள் மெளனமாய் உள்ளுக்குள் உடைந்துதான் போனாள். அவளை தாங்கு தாங்கென்று தாங்கும் உயிர் அவளுக்கு ரொம்பவும் பிடித்தது. அவன் குறைகளோடு அவனை ஏற்றுக்கொண்டாள்.
அன்று இரவு கஞ்சியைக் குடித்துக்கொண்டிருந்த சின்னராசு அருகில், அடுப்பில் சுட்டெடுத்த கருவாட்டைக் கொண்டு வந்து வைத்தாள் செல்லம்மா. அவனையே பாத்துக்கொண்டிருந்தவள், “ஏம்ங்க இப்படி எல்லாரு கிண்டலுக்கும் ஆளாவுதீங்க? இன்னைக்கு அந்த செத்த பய, டீச்சர் புருசன் உங்கள அக்கான்னு கூப்டான்னு சொன்னியோ. பொளேர்ன்னு ஒரு அறை குடுக்காம அப்படியே வந்திருக்கீக. ஆம்பிளையா லெட்சணமா உடுத்துதது இல்ல. சிணுங்காம பேசுதது இல்ல. இப்படி பயந்தாங்கொள்ளியா இருக்கலாமா சொல்லுங்க”
“அட அறியாம வாய்ல வந்திருக்கும் உடு. மத்தவுக கிண்டலடிக்காகன்னு நாம ஏன் செல்லம்மா கோவப்படணும். சொன்னா சொல்லிட்டு போறாக. என்ன நஷ்டம் சொல்லு”
“உங்களுக்கு ஒண்ணுமில்ல. எனக்கு காதுல கேட்கையில சங்கடமா இருக்கு”
“சட்டை பண்ணாதளா… என்னத்தையாது உன் வாயக் கிண்ட தான் நூக்காவோ புரியுதா. நீ ஒண்ணும் பேசுதேன்னு சண்டைக்கு போவாத. எல்லாரும் உன்ன பொல்லாதவா, அவா ஆம்பிளைன்னு சொல்லையில நான் என்னமும் சொல்லுதனா? அந்த வார்த்தையோட போயிருவாவோ, மேல மேல பேசுனா வம்புதான் வளரும்” என்றான்.
“எப்பப் பாத்தாலும் எனக்குதான் சொல்லுதீக… உங்ககூட பொறந்த எல்லாரும் நல்லாதானே இருக்காக. நீங்க மட்டும் ஏன்தான் இப்படி இருக்கீகளோ” என்று சடைத்த செல்லம்மாவை வைத்த விழி வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் சின்னராசு.
“நான் தப்பா சொல்லல. மத்த நாயுவோ உங்கள நக்கல் பண்ணையில சங்கடமா இருக்குல்லா. உங்கள ஆரும் எதும் சொன்னா எனக்கு தாங்காது” என்றாள்.
“இங்கன வாட்டி நீ… ஒரு வா என் கையால சாப்பிடு” என்று கருவாட்டை பிய்த்து சோற்றோடு சேர்த்து பிடித்து வாயில் ஊட்ட எட்டி வந்தான்.
கொஞ்சம் வெட்கத்தோடு வாங்கிக் கொண்டவள், “உங்கள தவிர யாராலயும் என்ன இம்புட்டு நல்லா வச்சிக்கிட முடியாது” என்றாள்.
சின்னராசை கட்டியிருக்காவிட்டால் நித்தம் நித்தம் தன் மானத்தைப் பாதுகாக்க சொந்த வீட்டிலேயே தன் மாமனோடு போராட வேண்டிய வாழ்க்கையில் இருந்து விடிவே கிட்டியிருக்காது செல்லம்மாவிற்கு. தகப்பன் இல்லாமல் மாமனை நம்பி இருக்கும் சூழ்நிலையில் பெற்ற தாயிடம்கூட அவளால் இதைப் பற்றி பேச முடியவில்லை. பிரசவத்திற்குகூட தாய்வீட்டிற்கு போக மறுத்து விட்டாள் செல்லம்மா. ‘நான் இல்லாட்டா என் புருஷன் சோத்துக்குத் திண்டாடுவாகம்மா’ என்று பட்டும் படாமலும் சொல்லி சமாளித்தாள். ‘தலைபிரசவம் தாய் வீட்லதான் நடக்கணும். இவன நாங்க பாத்துக்கிடுவோம்’ என்ற மந்தாரையிடமும், ‘அவுகளுக்கு நான் சமைச்சா தான் இஷ்டம்’ என்றாள். செல்லம்மாவின் பிரியத்தில் திக்குமுக்காடிப் போனான் சின்னராசு. ‘என் பொண்டாட்டி… என் புள்ள நானே பாத்துக்கிடுதேன்’ என்று தலையில் வைத்து தாங்கினான்.
நிலா முற்றத்தில் கயிற்றுக் கட்டிலில் ஒன்றிக்கொண்டு, முதல்மரியாதை படத்தின் வெட்டிவேரு வாசத்தில் திளைத்துக் கிடந்தார்கள் சின்னராசும் செல்லம்மாளும். அவர்களுடைய பெரும்பாலான இரவுகள் இப்படித்தான் ரம்மியமாகக் கழிந்தது. அந்தப் பெரிய வளாகத்தில் அவர்களுக்கான வீடு பின்பக்கமாய் இருப்பதால் புழங்குவதற்கு சுலபமாக இருந்தது. எல்லா பிள்ளைகளுக்கும் அதே வளாகத்திற்குள் தனித்தனியாக வீடு கட்டிக் கொடுத்திருந்தார் அவர்கள் அய்யன். ‘எல்லாருக்கும் முன்னாடி கொடுத்தாக…நமக்கு மட்டும் முன்வாசல் முத்தம் இல்லாம பின்கட்டுல இருக்கே’ என்று வருத்தப்பட்டவளுக்காக பின் சுவரை இடித்து வாசல் வைத்து, ‘இப்ப என்ன செல்லம்மா நாம பின் தெரு வழியா புழங்குவோம்’ என்றான் சின்னராசு. சின்னராசு வீட்டிற்கு பின்புற மதில் சற்று தள்ளி உயரமாக இருந்தது இன்னும் வசதியாக இருக்க, பலநேரம் இப்படி வெளியில் கயிற்றுக்கட்டிலில் படுத்து உறங்கினர். விடியுமுன் செல்லம்மாள் எழுந்து உள்ளே சென்று பிள்ளைகளோடு படுப்பாள். சாணம் கொண்டு வருவது, வாசல் தெளிப்பது, பெருக்குவது எல்லாம் சின்னராசேதான் செய்தான். விடிந்து கோலம் மட்டும் போடுவாள் செல்லம்மா. மாமியார் ஒன்றும் சொல்லாவிட்டாலும் அவள் நாத்தனார் மந்தாரை அவளை சடைக்காமலில்லை. “இவளா… பாவம் ? அவன எப்படி பம்பரமா சுத்த உடுதா, மேல்வலிச்சவ… ஒத்த வேல செய்யுதாளா? என் தம்பி அப்புராணி. அவள நீ கெடுவான்னு ஒண்ணும் சொல்ல மாட்டான். இவ யோகக்காரி” என்பாள்.
ஒருவகையில் மந்தாரை இப்படி பேசுவதே செல்லம்மாவை உசத்திப் பிடிக்கத்தான். அவளுக்கு எப்பொழுதும் செல்லம்மா அவனை விட்டு போய்விடக்கூடாது என்ற பயம் இருந்தது. ஆகையால் தான் செல்லம்மா வாயாடும் பொழுதெல்லாம் கண்டும் காணாமல் இருந்தாள். செல்லம்மா என்ன தான் சண்டைக்கு வந்தாலும் சரி சரி என்று போனாள். மந்தாரை இப்படி பேசும் பொழுதெல்லாம் தோன்றும் ஒரு பூரிப்பில் எதையும் காதில் வாங்காததுபோல போவாள் செல்லம்மா. அவர்கள் இருவரும் சேர்ந்து விளையாடும் விளையாட்டுபோல, அப்போதைக்கு இப்படியான பேச்சில் சிறிய வம்பும் சேரும். மாறி மாறி திட்டிக்கொள்பவர்களை மாமியாரோ மற்ற அண்ணன்மார்களோ ஒரு கட்டத்தில் வந்து சமாதானம் செய்வார்கள். கணவனை இழந்த மந்தாரை அங்கேயே தான் அவள் தாய் வீட்டில் இருந்தாள். எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டு செய்பவளை செல்லம்மா ஒருநாளும் வேலை வாங்க மாட்டாள். மற்ற மருமகள்கள் நைச்சியமாகப் பேசி வேலை வாங்கிக் கொள்வார்கள். செல்லம்மாள் காய்ச்சல் என்று படுத்துக் கிடந்தாளானால் சின்னராசு தான் பொங்கிப் போடுவான். “கூப்பிட்டா என்னலே… இங்கன தானே இருக்கேன்” என்று குழம்போடு வருவாள் மந்தாரை. பீடி சுத்தி சிறுவாடு சேர்த்து வைக்கும் செல்லம்மா எப்பொழுதாவது படம் பார்க்க மந்தாரையைத்தான் அழைத்துச் செல்வாள். “வாங்க மைனி எங்கிட்ட சில்லரை இருக்கு, கார்த்திக் தியேட்டர்ல எம் ஜி ஆர் படம் போட்ருக்கானாம். வாங்க சட்டுனு போயிட்டு வருவோம்” என்பாள். ஏர்லக்கிழங்கை அவித்து கண்ணாடி தாளில் சுத்தி மடியில் கட்டிக்கொண்டு கிளம்புவாள் மந்தாரை. மற்ற மருமகள்களோ “நாறச்சிறுக்கியோ எப்படி நடிக்காளுவோ பாரு, சாயந்திரம் ரெண்டாளும் சோடி போட்டுக்கிட்டு சினிமா பாக்க தியேட்டருக்கு போறாளுக, காலைல தானே சண்ட போட்டு நாறுனாளுவோ” என்பார்கள்.
சின்னராசின் மீது சிறு சிறு குறைகள் இருந்தாலும் அவனை அனுசரித்தே சென்றாள் செல்லம்மா. அவளை பொருத்தமட்டில் அவளை நரகத்திலிருந்து மீட்டெடுத்த தேவன் அவன். அவள் பின்னால் தான் எல்லோரும் அவனைப் பற்றி பேசினார்களே தவிர அவள் முன் யாருக்கும் கிண்டல் அடிக்க தைரியம் வரவில்லை. கெட்ட வார்த்தைகளால் எதிராளியைக் குளிப்பாட்டி விடுவாள் செல்லம்மா. அந்த தெருவில் அவர்கள் முன்பின் கேட்டிராத வகையில் எல்லாம் திட்டித் தீர்ப்பாள். ‘ஏ யப்பா என்னா பேச்சு பேசுதா’ என ஒதுங்கிக் கொள்வார்கள். ஆகையால் தான் அவர்கள் வீட்டுக் கதையை புள்ளபூச்சி போல இருக்கும் சின்னராசின் வாயிலாகக் கேட்டறிந்தார்கள்.
பழக்கம் விடுவதை பொழுபோக்காக வைத்திருக்கும் அவனும், ‘இன்று என்ன குழம்பு , என்ன சண்டை, எங்கே வேலை’ என்று விலாவாரியாக கதை சொல்வான். அவனும் அதைப் போல உரிமையாக அவர்கள் வீட்டு விசயத்தைப் பேசுவான். சில பெண்கள் அவனிடம் தங்கள் மனக்குறையை புலம்பலாக கூறியும், அழுதும் தீர்ப்பார்கள். நல்ல நண்பனைப்போல அவர்களுக்கு ஆறுதல் தேறுதல் கூறுவான். தனக்கு தெரிந்தமட்டில் அறிவுரை கூறுவான். சொல்லப்போனால் தெரு பெண்களுக்கு பெரிய ஆசுவாசமாக இருந்தான் சின்னராசு.
அன்று வாசலில் நின்று பழக்கம் விட்டுக்கொண்டு வேப்பங்கொட்டை பொறுக்கிக் கொண்டிருந்தவன், வெளியே வந்த பாப்பாவை பார்த்துவிட்டான்.
“ஏ பாப்பக்கா… கேள்விப்பட்டேன் தம்பிக்கு கல்யாணமாமில்லா. பொண்ணு அசலா சொந்தமா? ஏங்கிட்ட ஒருவார்த்தை சொல்லலியேக்கா. தாயா பிள்ளையா பழகுதோம். சொன்னா என்ன” என பாப்பாவிடம் உரிமையாக கேட்டான். கல்யாணம் குறித்து பாப்பா ஒன்றும் வாய் திறக்கவில்லையென புழுங்கி கொண்டிருந்த தெரு பெண்கள் ஆர்வமாய் பாப்பா என்ன சொல்லப் போகிறாள் எனக் கவனித்தார்கள். எல்லார் வீட்டுக் கதையையும் சின்னராசின் வாயிலாகவே அவர்கள் அறிந்தார்கள்.
” அதில்லைய்யா திடீர்னு பாக்க வந்தவுக உறுதி பண்ணிட்டாக. உங்களுக்கு தெரியாமலா முடிச்சிடப் போறோம்” என்றாள் பாப்பா.
” என்னமோ போ. நல்லாருந்தா சரி. கல்யாண வேலை என்ன இருந்தாலும் சொல்லுக்கா… வெள்ளையடிக்க போவ சோலி ஒண்ணும் இல்ல. இங்கனதான் கல்லு உடைச்சிக்கிட்டு கிடப்பேன். கூப்பிடு… என்னக்கா” என்றவன் வேப்பமுத்து மூட்டையை கையில் எடுத்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தான்.
“சேரிய்யா சேரி சேரி…” என்ற பாப்பாவிடம் அவள் மகள் ரமணி கேட்டாள்,
“இந்த அண்ணனுக்கு எதுக்கும்மா பொம்பளைககிட்ட இப்படி வம்பளக்கனும், நோண்டி நோண்டி வீட்டு விசயத்த எல்லாம் கேட்டுக்கிட்டு. சொல்லணும்னா நாம சொல்லமாட்டமாங்கும். நம்ம தாத்தா வீட்டுக்கே தெரியாது. உடனே இங்க எழுதணுமாக்கும்”
” அக்கம் பக்கம் இருக்கறவுக தான் முதல் உறவு தெரிஞ்சிக்கோ ரமணி. அவன் ஒரு புள்ளபூச்சி, அவன சடைக்காதட்டி, பேசதுக்கு ஆசைப்பட்டு பொம்பளைககிட்ட கதை பேசுதான். ஆம்பிளைக கிட்டயும்தான் பேசுதான். இதெல்லாம் குத்தமா சொல்லு. பிறவியிலயோ, சேர்க்கையோ என்னமோ அவன் இப்படி இருக்கான். யாருக்கும் எதும் கேடு செய்யலல்லா அவன். தாத்தா வீட்டுக்கு உடனே சொல்லமுடில ஏம்னா நமக்கே அன்னைக்கு உறுதி பண்ணுவாவோன்னு தெரியாது, ஆனா இவ்வோ தொட்டடுத்த வீடுல்லா… அதான் கேட்கான்” என்றாள்.
“அதுக்கு இந்தண்ணன் இம்புட்டு உரிமை எடுக்கது எனக்கு புடிக்கலம்மா”
“ஏம்டி போன மாசம் முன்முத்தத்து ஓடைல இருந்து பூச்சி வீட்டுக்குள்ள ஏறுச்சே யாரு கம்ப தூக்கிட்டு ஓடியாந்தா? நல்ல பூச்சின்னு ஆரும் பயப்படுவாவோ. அவந்தானே வந்து அடிச்சி பால் ஊத்தி பொதைச்சான்”
” ஆமா நீ இப்படி என்னத்தையாது சொல்லு. யார் வீட்டுக்குன்னாலும் அப்படித்தான் ஓடும் சின்ராசண்ணன். அந்தண்ணன் பொம்பளை கெனக்கா நடந்துக்கிடுதது எனக்கு புடிக்கல. பாத்தாலே எரிச்சலா இருக்கு”
” இங்கேரு ரமணி ஆட்கள கழிக்கப்படாது. அவன் ஒரு அப்புராணி. நீயே சொல்லுத யாருக்குன்னாலும் உதவிக்கு ஓடுவான்னு. இப்படி யாரு இருப்பா இந்த காலத்துல. அவனுக்கு பழக்கம் உடப் புடிச்சிருக்கு. பொம்பளைககூட உட்காந்து கதை பேசுதான். அத தப்புன்னு ஒதுக்க முடியாதுல்லா. பரதநாட்டியம் ஆடுத மேல் ஊட்டு அய்யர் கூடத்தான் கொஞ்சம் பொம்பள சாயல்ல இருக்காரு, நடக்காரு. அத என்னைக்கும் நாம குத்தம் சொல்லலியே. சின்ராசு யாருக்கு என்ன தொந்திரவு கொடுத்தான் சொல்லு? சும்மா அவன பொம்பளைனுகிட்டு. கல்யாணம் முடிச்சி இரண்டு புள்ள பெத்திருக்கான். அவன் பொண்டாட்டி அவன்கூட சந்தோசமா இருக்கா. இதுக்குமேல என்ன?”
” அன்னைக்கு ஜீவா ஆஸ்பத்திரி முடுக்குல ஏன் அடி வாங்குனாவ அப்போ. என்ன தப்பு பண்ணினாகன்னு யாருக்கு தெரியும், அதும் ஆம்பிளைககிட்ட போயி கண்றாவி…”.
“ச்சைக் வாய மூடுட்டி. ரொம்ப தான் நீளுது உனக்கு. ஒருத்தனக் கண்டா கண்டுபிடிச்சிடலாம். அன்னைக்கு வேற என்னமோ கதை நடந்திருக்கு. இவன் திருட்டு கதை சொன்னது பொய்யின்னு எனக்கும் தெரியும். இருந்தாலும் கண்டும் காணாம இருந்தேன். சொல்லக்கூடியதுனா அவனே சொல்லிருப்பான். ஒருத்தன் வாழ்க்கை பூரா நடிக்க முடியுமா சொல்லு? அவன் பொண்டாட்டி ஏசுனாலும் அம்மை, அக்கா ஆரு ஏசினாலும் அவம் தம்மட இயல்புல இருக்கான். அது தப்பு கெடையாது. ஒவ்வொருத்தன் நல்லவன் கெனக்கா வேசம் போட்டுக்கிட்டு என்ன என்ன வேலையெல்லாம் பண்ணுதானுவோ. இளைச்சவனத் தான் எல்லாரும் போட்டு அடிப்பாவோ” என்றாள்.
“அடேங்கப்பா… எம்மா செல்லம்மாக்காகூட இம்புட்டு வக்காலத்து வாங்க மாட்டா. அவ்வோ சொந்த அக்காகூட இவ்வளவு ஏண்டு புடிக்க மாட்டா. நீ என்னா சப்போர்ட் பண்ணுதே. என்னமோ போ உன் பார்வைக்கு அவரு நல்லவருதான்” என்று விட்டு பதிலுக்கு காத்திராமல் சைக்கிளை எடுத்துக் கொண்டு கேட்டை நோக்கி நகர்ந்தாள் ரமணி.
எப்பொழுதும் சின்னராசை குறை சொல்வது ரமணிக்கும், தாங்கி பேசுவது அவள் அம்மைக்கும் வாடிக்கையான செயலாய் ஆனது. சில மாதங்கள் கழிந்த நிலையில் ரமணியின் தங்கை ஹேமா படபடப்புடன் சைக்கிளை கேட்டைத் தாண்டி உருட்டிக்கொண்டு வந்தாள். என்னவோ ஏதோ என பதறியவர்களிடம் நடந்த கதையை கூறினாள் ஹேமா.
சைக்கிளில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்த போது சித்ரா மண்டபம் அருகே சட்டென துப்பட்டா கழுத்தை இறுக்க, ப்ரேக்கை அழுத்தி கஷ்டப்பட்டு காலை தரையில் ஊன்றி நின்றிருக்கிறாள். பின்புறமாய் கட்டிய துப்பட்டா நழுவி வீலில் சுற்றியிருந்திருக்கிறது. சைக்கிளைப் பிடித்துக் கொண்டே இழுக்க முற்பட்டு முடியாமல் வேறு சில சிறுவர்களும் முயன்று துப்பட்டாவை எடுக்க இயலாமல் தவித்து நிற்கையில் ஹேமாவை காதலிப்பதாக சொல்லி பின்னால் சுற்றி திரியும் கோட்டூர் பையன் உதவுவதாக அருகில் வந்திருக்கிறான். என்ன செய்வதென்று அறியாமல் ஹேமாவிற்கு பதட்டம் கூடி அழுகை வர, அவனோ எதிர்புறம் இருந்து உதவாமல் அருகில் வந்து கால்மாட்டில் அமர தவித்து போயிருக்கிறாள் ஹேமா. பக்கத்தில் நாய் வேறு உறுமியபடி வர தன் துண்டால் நாயை விரட்டிக்கொண்டே வந்து சேர்ந்திருக்கிறார் சின்னராசு. ‘அவரைக் கண்டதும் கடவுளை கண்டது போல இருந்தது’ என ஹேமா கூறி நிறுத்தினாள்.
அப்புறம் என்ன ஆச்சு என பொறுமை இல்லாமல் கேட்டாள் ரமணி. துப்பட்டாவில் கைவைத்தவனை தடுத்த சின்னராசு, ‘நான் பாத்துக்கிடுதேன் தம்பி நீ போ’ என்றிருக்கிறான். கிடைத்த வாய்ப்பை கெடுக்கிறானே என்ற கோபம் தலைக்கு ஏற,
“வயசுபிள்ளைகன்னா வந்துருவீகளே. நாங்க உதவி பண்ணிக்கிடுதோம். நீங்க உங்க வேலைய பாத்துக்கிட்டு போங்க” என்றானாம் அவன்.
“அடக்கடவுளே இது எங்க அக்கா மவா. நல்லாத்தான் பேசுத லே, இந்த சோலி எல்லாம் இங்க இருக்கப்பிடாது. பேசாம போயிரு ” என்று சின்னராசு குரலை உயர்த்தி பேசுவதை ஹேமா ஆச்சரியமாய் பார்த்துக் கொண்டு நின்றிருக்கிறாள்.
எக்கி கொண்டு சண்டைக்கு வந்தவனை செவிலில் ஒன்று விட்டு அனுப்பி இருக்கிறார் சின்னராசு. வியர்த்துக்கொட்டியவண்ணம் வெயிலில் நின்றவளை ரோட்டில் இருந்து சைக்கிளை கையால் தூக்கிக் கொண்டே பக்கவாட்டிற்கு கூட்டிச் சென்று, பக்கத்து கடையில் இருந்து கத்தியை வாங்கி வந்து வீலில் சுற்றிய துப்பட்டாவை மெதுவாக அகற்றி, கையெல்லாம் மையாக, முகமெல்லாம் சிரிப்பாக வெள்ளந்தியாக ஹேமாவிடம்,’ பாத்து கவனமா போத்தா… நல்லா முடிச்சு போட்டுக்கோ’ என்று விட்டு, ‘சவத்த பயலுவ சுத்தி சுத்தி வாரானுவோ’ என்று சடைத்துக்கொண்டே கடையில் கை கழுவ தண்ணீர் கேட்க போனாராம். அதன் பின் தான் ஹேமா வீட்டிற்கு வந்து சேர்ந்திருக்கிறாள்.
எல்லா கதையையும் கேட்ட ரமணிக்கு அம்மா சின்னராசைப் பற்றி கூறியது எல்லாம் மனதில் விஸ்வரூபம் எடுத்தது. அவனை தப்பிதமாய் நினைத்தது தன்னைத் தானே அசிங்கமாய் உணர வைத்தது. நன்றியைக்கூட எதிர்பாராமல் வீட்டாளைப் போல நடந்துக்கொள்ளும் சின்னராசின் மீது பெரும் மதிப்பும் அளப்பரிய அன்பும் தோன்றியது.
பின் ஒருநாளில் பால்கனியில் அமர்ந்து படித்துக்கொண்டிருந்த ரமணி சின்னராசு வாசலைக் கடந்து போவதைப் பார்த்து எழுந்து நின்று அவர் கையில் என்ன கொண்டு போகிறார் என ஆர்வமாய் பார்த்தாள். எங்கிருந்தோ ஒரு நார்ப்பெட்டியை எடுத்து வந்திருப்பார் போல. ‘இந்த அண்ணன் வீணாக்கக் கூடாதென்று கண்டதையும் வீட்டிற்கு பின்னால் சேர்க்கிறது’ என்று நினைத்தவள், ஆனந்தி தன் வீட்டு வாசலுக்கு வருவதைக் கண்டாள். இது ஒரு ஊமைக்கோட்டான் என்று நினைத்தவள், அடுத்த நொடியே அதிசயித்து நின்றாள். பெண்களைக் கண்டால்கூட சிரிக்காமல் ஒதுங்கிப் போகும் ஆனந்தி, யாரிடமும் பேசாத ஆனந்தி, சின்னராசிடம் மட்டும் சிறு தலையசைப்பை கொடுத்துச் சென்றாள். அன்றிலிருந்துதான் ரமணி கவனித்தாள். ஆனந்தி எப்பொழுதுமே சின்னராசை அங்கீகரிக்கத் தவறியதே இல்லை. ரமணிக்குள் சின்னராசைப் பற்றிய வியப்பும் ஆச்சரியமும் கூடிக்கொண்டே சென்றது. அதன் பின் சின்னராசை எங்கு கண்டாலும் புன்னகைக்கவும் பேசவும் தவறுவதில்லை.
***
படைப்பாளர்

ராணி கணேஷ்
ராணி கணேஷ் திருநெல்வேலி மாவட்டத்தில் பிறந்து பப்புவா நியுகினியாவில் தற்போது வசித்து வருகிறார். பப்புவா நியு கினி தமிழ்சங்கத்தின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவர். பப்புவா நியுகினி இந்திய சங்கத்தின் துணைத்தலைவராவார். தமிழ்வெளி இலக்கிய இதழின் துணை ஆசிரியர்.
தமிழ் இலக்கியத்தில் தீராத ஆர்வம் கொண்ட இவர் தொடர்ந்து நூல்களை வாசிப்பதிலும் படைப்பு நுட்பங்களை, மொழியின் புதிய வண்ணங்களைக் கற்பதிலும் உற்சாகமாக ஈடுபடுகிறார். தற்போது கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள், திரை மற்றும் நூல் விமர்சனங்கள் என தொடர்ந்து இலக்கிய இதழ்களில் எழுதி வருகிறார். இவரது சிறுகதைகள் கிராமத்து மண்ணின் வாழ்வியலையும், தொலைந்துவிட்ட பால்யத்தின் நினைவுகளையும் மீட்டுருவாக்கம் செய்பவை.




