16 செப் 2025 அன்று மெக்ஸிகோ தன் சுதந்திர தினத்தை கொண்டாடியது. இதில் சிறப்பு என்னவென்றால், மெக்ஸிகோ சுதந்திரம் அடைந்த இந்த 215 ஆண்டுகளில், முதன்முறையாக ஒரு பெண் பிரதமர் சுதந்திரதின கொண்டாட்டத்தை மேளம் முழங்க, தொடங்கிவைத்தார்.
முதல் பெண் மருத்துவர், முதல் பெண் விஞ்ஞானி, முதல் பெண் விமான ஓட்டுநர் என முதல் பெண் பட்டியல் நீண்டுகொண்டே போகும். எங்காவது முதல் ஆண் என்று கேள்விப்பட்டதுண்டா? முதல் மனிதன் என்று சொல்வதுண்டு. ஆனால் முதல் ஆண் என்று சொல்வது கிடையாது. அதே சமயம், முதல் கறுப்பினத்தவர், முதல் இந்த சாதியை சேர்ந்தவர், முதல் ஏழை என்று சொல்லக் கேட்டிருக்கலாம். இவை எல்லாமே இன, வர்க்க, பாலின அடுக்குமுறைகளே.
எந்த இனம், மொழி, தேசம், மதம், ஜாதியாக இருந்தாலும், அனைத்து ஒடுக்குமுறைக்கு உள்ளேயும் ஒடுக்குமுறைக்கு உள்ளாவது பெண்கள்தான். இங்கிலாந்து பேரரசு இந்தியாவை ஆண்ட பொழுது, இந்திய ஆண்களுக்கு வேண்டுமானால் வெள்ளைக்காரப் பெண்கள் மேலானவர்களாக இருந்திருக்கலாம். ஆனால் அவள் குடும்பத்தில் அவள் ஒடுக்கப்படுபவளாகவே இருந்திருக்கிறாள். இது எல்லா அடுக்குகளிலும் பொருந்தும்.
தங்கள் துறையில் வெற்றிபெற்ற பெண்களிடம் தவறாமல் கேட்கப்படும் ஒரு கேள்வி, ‘வீட்டை கவனித்துக் கொண்டே எப்படி உங்கள் துறையில் வெற்றி அடைந்தீர்கள்?’ என்பதே. ‘இதே கேள்வியை ஒரு ஆணிடம் ஏன் கேட்பதில்லை’ என்று பதில் கேள்வி பெண்ணிய புரிதலோடு இருக்கும் பெண்களால் கேட்கப்படுவதுண்டு.
சில சமயங்களில் அப்படி கேட்கப்படும் கேள்விகூடத் தவறில்லை எனலாம். இரண்டு காரணங்கள். முதலாவது, வீட்டு வேலை, பிள்ளைகளை பராமரிப்பது என்பது பெண்களுக்கான வேலை. எவ்வளவு பெரிய துறையில் பெரும் சாதனை படைத்திருந்தாலும், வீட்டில் வேளைக்கு ஆள் இருந்தாலும், அந்த ஆட்களை நிர்வகிப்பது பெண்களின் வேலை. இதுதான் எதார்த்தம். அந்த அடக்குமுறையில் இருந்துகொண்டே எப்படி சாதித்தார்கள் என்பதை அறிந்தால், அது மற்ற பெண்களுக்கும் ஒரு உந்துதலாக இருக்கும்.
இரண்டாவதாக, இன்னொரு கேள்வி பெண்களிடம் கேட்டகப்படுவதுண்டு. ‘நீ இங்கு வந்துவிட்டாயே. வீட்டில் யார் சமைப்பார்கள், குழந்தைகளை யார் பார்த்து கொள்வார்கள்? வரும் பொழுதே சமைத்து வைத்துவிட்டு வந்தாயா?’ என்பதுதான். முதலில் கேட்கப்படும் கேள்விகூட ஒடுக்குமுறைக்கு ஆளான பெண்கள் சாதனையை பறைசாற்றுவதாகக்கூட எடுத்து கொள்ளலாம். இரண்டாவதாகக் கேட்கப்படும் கேள்விதான் ‘நீ உன் கணவனுக்கு கீழ்’ என்பதை நினைவூட்டும் கேள்வி. இது போன்ற தங்கள் துறையில் சிறந்து விளங்கும் பெண்களிடம் கேட்கப்படும் சில கேள்விகளை ஆண்களிடம் கேட்டபொழுது, அவர்கள் நெளிந்ததிலேயே தெரிந்தது அவை எல்லாம் எவ்வளவு அநாகரீக கேள்விகள் என்று.
அப்படி கேட்கப்பட்ட சில கேள்விகள் ‘நீங்கள் ஆண் என்பதால் இந்த வாய்ப்பு உங்களுக்கு கிடைத்ததா?’, ‘உங்கள் காலணி மிக அழகாக இருக்கிறது, எங்கே வாங்கினீர்கள்?’, ‘நீங்கள் ஒன்றும் பேச வேண்டாம், சிரித்துக்கொண்டு அருகில் நின்றால் போதும்.’
இந்தியா என்றில்லை. உலகெங்கிலும் ஆண்களுக்குத் தாழ்ந்தவராகவும், திறமை குறைந்தவர்களாகவும், அறிவு குறைந்தவர்களாகவும்தான் பெண்கள் பார்க்கப்படுகிறார்கள். 1976-ல்தான் அயர்லாந்து பெண்களுக்கு வீடு வாங்கும் உரிமை கிடைத்தது. 1978-ம் ஆண்டுதான் அமெரிக்காவில், பெண்கள் கர்ப்பமானால் பணியிடை நீக்கம் செய்யக்கூடாது என்ற சட்டம் பிறந்தது. 1981-ல்தான் ஆஸ்திரேலியாவில் பெண்களின் விருப்பமின்றி கணவன் உறவு கொள்ளத் தடை பிறப்பிக்கப்பட்டது. 2018-ல்தான் சவூதி அரேபியாவில் பெண்கள் வாகன ஓட்டும் உரிமை வழங்கப்பட்டது. 2019-ல்தான் வியட்னாம் பெண்கள், தாங்கள் பணி செய்யத் தடை செய்யப்பட்ட 77 வேலைகளில் பணியமர்த்தப்பட்டார்கள். 2024ல்தான் உலக நாடுகளில் முதன்முறையாக பிரான்ஸ் கருக்கலைப்பு உரிமையை தங்கள் அரசியமைப்பில் கொண்டுவந்தார்கள். உலகில் பல நாடுகளில் பெண்களுக்கு ஓட்டுரிமை கிடைத்தைதே பெரும் போராட்டங்களுக்கு பின்னர்தான்.
இன்றளவும் ஆஸ்திரேலியாவின் பல நிறுவனங்களில் பெண்கள் ஆண்களுக்குச் சரி பாதியாக இருக்கவேண்டும் என்ற கொள்கையை வகுத்துள்ளது, முன்னேறியதாக சொல்லப்படும் நாடுகளில் பெண்களின் நிலையைக் காட்டுகிறது. ஆஸ்திரேலியா ஒன்றிய அரசுப் பணிகளில் இருக்கும் ஆண் பெண் விகிதாசாரம், ஒவ்வொரு ஆண்டும் கணக்கெடுக்கப்படுகிறது. அதில் நுழைவு நிலையில் 60%க்கும் மேல் பெண்களே இருக்கிறார்கள். பணிநிலை மேலே உயர உயர , பெண்களின் சதவிகிதம் குறைந்துகொண்டே செல்கிறது. மேல்நிலைப் பணிகளில் பெண்களின் விகிதாச்சாரம் வெறும் 30% தான் இருக்கிறது. இது தரும் செய்தி, பெண்கள் அதிக அளவிற்கு வேலைக்கு வந்தாலும், பணி உயர்வு அவர்களுக்கு மறுக்கப்படுகிறது என்பதே. பணிக்குச் செல்லும் பெண்கள், அது எந்த பணியாயினும், எதிர்கொள்வதில் அதிக சிக்கல்கள் உள்ளன.
கட்டுமானப் பணிகளில் ஈடுபடும் பெண்கள் மிகக் குறைவு. அப்படி ஈடுபடும் பெண்களுக்கு என்று தனி கழிப்பறைகூடக் கிடையாது. ஆண்கள் கழிப்பறையைத்தான் உபயோகிக்க வேண்டும். இதுவே பெண்களுக்கு ஒரு பெரிய தடைகல்தான். பணி நேர்காணலில், ஒரு ஆண், ஒரு பெண் சம அளவிற்கு தகுதி பெற்றிருந்தாலும், அந்த வாய்ப்பு பெரும்பாலும் ஆண்களுக்கே வழங்கப்படுகிறது. காரணம், அந்தப் பெண் எதிர்காலத்தில் மகப்பேறு விடுமுறை எடுக்கும் வாய்ப்பு இருப்பதினால்… இப்படி எல்லா துறைகளிலும் ஏற்றத் தாழ்வுகளைச் சந்தித்துதான் பெண்கள் சாதிக்கிறார்கள்.
பின்தங்கிய நாடான ஆஃப்கானிஸ்தானின் தலிபான் அரசு, பெண்கள் அழகு நிலையங்களை மூட ஆணை பிறப்பித்தது. பெண்கள் எழுதிய நூல்களுக்கும் அங்கே தடை. வளர்ந்த நாடுகளிலோ இன்றும் தரையை சுத்தம் செய்ய, அடுப்படியைச் சுத்தம் செய்ய, குழந்தைகளுக்கு மதிய உணவு தயார் செய்ய என்று வரும் விளம்பரங்களில் பெண்கள்தான் முன்னிலைப்படுத்தப்படுகிறார்கள். உலகின் வல்லரசான அமெரிக்காவில், இன்றும் கருக்கலைப்பு உரிமைக்காக, பெண்கள் போராடிக்கொண்டிருக்கிறார்கள்.

வளர்ந்த நாடுகளில் பெண்களின் நிலை இதுவென்றால், இந்தியாவில் கேட்கவே வேண்டாம். நூறு வருடங்களுக்கு முன் பெண்கள் எதற்காகவெல்லாம் போராடினார்களோ, அதிலிருந்து எவ்வளவு தூரம் முன்னேறி இருக்கிறார்கள் என்பதே கேள்விக்குறி. அன்றைய காலகட்டத்தைவிட இப்போது பெண்கள் கல்வியிலும் வேலைவாய்ப்புகளிலும் பெருமளவிற்கு முன்னேறி இருக்கிறார்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. ஆனால் அவை பெண் விடுதலையில் வருமா என்பதுதான் கேள்விக்குறி. இன்றளவும் எந்தத் துறை கல்வி, எந்தத் துறை வேலை என்பதை அநேக பெண்களின் வீடுகளில் இருப்பவர்கள்தான் முடிவெடுக்கிறார்கள். பெண் விடுதலை என்பது சுய சிந்தனையில் பிறக்கும் அறிவிலிருந்து மேற்கொள்ளப்படும் செயல். கடந்த நூறு ஆண்டுகளில் அறிவியல் வளர்ச்சி அடைந்த அளவிற்குகூட, பெண் விடுதலை வளர்ச்சி அடையவில்லை என்பதே நிதர்சனம்.
ஒரு தேசம் எவ்வளவு முன்னேறி இருக்கிறது என்பதை அந்த நாட்டு பெண்களின் முன்னேற்றத்தை வைத்தே அளவிட வேண்டும் என்று அம்பேத்கர் சொல்வார். அந்த அளவுகோள் கொண்டுபார்த்தால், உலகில் எந்த நாடுமே இன்னும் முன்னேறவில்லை என்றுதான் சொல்லவேண்டும்.
தொடரும்…
படைப்பாளர்

சுமதி விஜயகுமார்
பொதுச் செயலாளர், பெரியார் அம்பேத்கர் சிந்தனை வட்டம், ஆஸ்திரேலியா




