பத்து நாட்களுக்குப் பிறகு கழிவறைக்குத் தனியாகச் சென்றேன். இன்றும் நடக்க சிரமமாகத்தான் இருந்தது. எனினும் மெல்ல மெல்ல கால்களை ஊன்றி நடந்தேன். நானே என்னைச் சுத்தம் செய்து கொள்ளவும் போகிறேன். என்னுடைய நாப்கினை நானே மாற்றிக் கொண்டேன்.
பெற்றத் தாயாக இருந்தாலும் என்னை அவர் சுத்தம் செய்யும் போது சற்று சங்கடமாகத்தான் இருந்தது.
பிரசவம் முடிந்து பத்து நாட்களுக்குப் பிறகு நானே நடந்து வந்துவிட்டேன் என்கிற நிம்மதியில் கழிவறையில் அமர்ந்ததும் வெளியே குழந்தை அழும் சத்தம். மனம் படபடத்தது. வேக வேகமாக வெளியே வந்தேன்.
பால் கொடுக்க அமர்ந்தேன். வலது புறம் பால் கொடுக்கத்தான் வசதியாக இருந்தது இடது புறம் கொடுக்க யாராவது ஒருவர் உதவி தேவைப்பட்டது. சரி வலது புறம் பால் கொடுக்கலாம் என்றால் நேற்று அவள் பால் குடிக்கும் பொழுது பதிந்த பல் முளைக்காத ஈறின் வலியால் அந்தப் பக்கமும் கொடுக்க முடியாமல் வலியில் கத்தினேன்.
“பச்ச புள்ளை பால் குடிக்குறது உனக்கு வலிக்குதா?” என்று கேட்டார் அம்மா.
அவர் கேட்பது சரிதான். ஆனால் உண்மையிலேயே எனக்கு வலிக்கிறதே.
இடது புறம் பால் கொடுக்க குழந்தையைத் தாங்கிப் பிடித்து என் அருகில் நின்றார் அம்மா. நான் தூக்கிப் பால் கொடுக்கும் வாட்டம் எனக்கு வரவில்லை. குனிந்தால் தையல் வலி. அடியில் உதிரப்போக்கின் வலி.
கோபத்தில் கத்தினேன் நான் பெற்ற மகளுக்காக என்னைப் பெற்ற தாயிடம். என்ன மாதிரியான நிலை இது!
உடல்நிலை சரியில்லாத நேரத்தில் மனநிலையும் என் கைமீறிப் போனது.
பிரசவம் முடிந்து கண் விழித்து பார்த்தபோது உடம்பே மரத்துப் போய் மயக்க உணர்வில் இருந்தேன். அடுத்த நாள் கண் விழித்தபோது கீழ் முதுகில், வயிற்றில், பிறப்புறுப்பில் தாங்கவே முடியாத வலி. கத்தக்கூடத் தெம்பு இல்லாமல் படுத்தே இருந்தேன்.
என் குழந்தையைத் தூக்கிக்கூட என்னால் பார்க்க முடியவில்லை. என்னைத் தூக்கி அமர வைக்கவே இரண்டு பேர் தேவைப்பட்டார்கள்.
கையில் நரம்பு ஊசியில் மருந்து சென்று கொண்டிருந்தது. இடது கையில் ரத்த அழுத்தம் பார்க்கும் கருவி சொருகப்பட்டிருந்தது. அடியில் இருந்து டியூப் வழியாகச் சிறுநீர் கசிந்து கொண்டிருந்தது. உதிரம் சேர வயிற்றில் ஏதோ கட்டப்பட்டிருந்தது. என் உடல் என் கட்டுப்பாடற்று என்னென்னவோ ஆகிக் கொண்டிருந்தது.
இரண்டாம் நாள் காலை கீழே வைக்க முயன்றேன். அடிவயிற்று தையலில் இன்னும் யாரோ குத்துவது போல் வலி வாட்டி எடுத்தது. மறுபடியும் படுத்துக் கொண்டேன்.
சிறிது நேரம் கழித்து மீண்டும் நடக்க முயன்றேன் இரண்டு எட்டுக்கு மேல் வைக்க முடியவில்லை.
மூன்றாவது நாள்தான் கொஞ்ச தூரம் நடக்க முயன்றேன். அதுவும் ஒருவர் என்னுடன் கையைப் பிடித்துக் கொண்டும் என் யூரின் பேகைத் தூக்கிக் கொண்டும் உடன் வர வேண்டும்.
யூரின் டியூபைக் கழற்றச் சொல்லி நீக்கினோம். அது இன்னும் கொடுமையாக இருந்தது. இரண்டு நாட்களாக என்னை அறியாமல் கசிந்து கொண்டிருந்த சிறுநீர் இப்பொழுது நானே முயலும்போது வலித்தது. இந்த வலியில் இருந்து இரண்டு, மூன்று நாட்களில் வெளிவர மார்பில் வலித்தது.
பரிசோதித்த மருத்துவர் மார்பில் பால் சுரப்பு அதிகமாகி குழந்தைச் சரியாகப் பால் குடிக்காததால் கணத்து உள்ளது என்றார்.
நானும் என் மகளைப் பால் குடிக்க வைக்க முயன்றேன். அவளோ பாலை உறிஞ்சிக் குடிக்கவே இல்லை. பால் பவுடரைத்தான் கலந்து சங்கடையில் கொடுத்தார்கள்.
”இப்படியே குழந்தை பால் குடிக்காமல் இருந்தா கட்டி கட்டிக்கும். அப்புறம் கிழிச்சிதான் எடுக்கணும்” என்றார் அம்மா.
எனக்கோ பயம் தலைக்கேறியது. இருபுறமும் சுடு தண்ணீர் ஒத்தடம் கொடுத்தார்கள். அந்த நேரத்தில் வலி குறைவது போல் இருந்தது. மீண்டும் மீண்டும் கணத்து வலித்தது. நெஞ்சைப் போட்டு யாரோ அழுத்துவது போல் இருந்தது. பின் பாலைப் பீய்ச்சி எடுத்து வலியைக் குறைத்தார்கள். அது தந்த வலியோ அதற்கு மேல் இருந்தது.
இப்படியே இரண்டு நாட்கள் முயன்று குழந்தையையும் பால் குடிக்கப் பழக்கியதில் கொஞ்சம் கொஞ்சமாக வலி குறைந்தது.
பத்து நாட்களாக அடுத்து அடுத்து என ஒவ்வொரு வலியாகச் சந்தித்து வந்து கொண்டிருந்ததால் இப்போது மனநிலையில் மாற்றங்கள் நிகழ்ந்தன.
“நான் மட்டும் ஏன் இவ்ளோ வலியை அனுபவித்துக் கொண்டு இருக்கிறேன்?” என்கிற கேள்வி என்னைப் பெரிதும் பாதித்தது.
என்ன எதிர்பார்த்து இந்தக் கேள்வியை எழுப்பினேன்? அனுதாபம் வேண்டியா இல்லை, இதுற்கெல்லாம் அர்த்தம் வேண்டியா!
இந்த வலிகளை எல்லாம் தாண்டித்தான் பிள்ளையைப் பெற்று வளர்க்கிறோம் என்பதை அனைவரும் உணர்கிறார்களா? எனக்கே ஒரு பெண்ணாகக் குழந்தை பேறுக்குப் பின் இவ்வளவு வலி இருப்பது முன்பே தெரியாதே.
எல்லாம் குழந்தைக்காகத்தான் எனப் புரிந்தாலும் அதையும் தாண்டி பல கேள்விகள் உள்ளுக்குள் எழுந்து கொண்டே இருக்கின்றன.
“புள்ளை பச்ச பச்சையா பாத்ரூம் போறா, அம்மாவ கீரைலாம் சாப்பிட வேணாம் சொல்லங்க.”
“தலைக்குத் தண்ணி ஊத்திட்டுப் பால் குடுத்தியா, குழந்தைக்குச் சளி பிடிச்சிருக்கு.”
குழந்தையின் உடல் நிலையில் சிறு மாற்றம் வந்தாலும் அதற்குக் காரணம் தாய் எனச் சுற்றத்தார்கள் காதுபட என்னைச் சாடினர்கள்
பத்து நாட்களில் என் கணவர் வேலையில் இணைந்தார். வேலை முடிந்த பின் குழந்தையைக் கவனித்துக் கொள்ள வந்தார். இயல்பு வாழ்க்கைக்கும் திரும்பி விட்டார் அப்பாவாகவும் இருந்தார். ஆனால் என்னைப் பார்த்துக் கேட்கிறார்கள், ஆறு மாதங்கள்தான் குழந்தைப்பேறு விடுமுறையா… இன்னும் நீட்டிக்கலாமே என்று.
குழந்தை அழுதால் நான்தான் மொத்த பொறுப்பு என்று என்னிடம் கொடுத்து விடுகிறார்கள். குழந்தைக்கு எப்போது தலைக்குத் தண்ணீர் ஊற்ற வேண்டும், எப்போது கோயிலுக்குச் செல்ல வேண்டும், எப்போது எப்படிப் பேர் வைக்க வேண்டும் என்பதை வீட்டில் உள்ளவர்கள் முடிவு செய்து வந்தார்கள். உரிமைகளில் மட்டும் எல்லோருடைய பங்கும் இருந்தன.
ஏன் மனதை இவ்வளவு குழப்பிக் கொள்ள வேண்டும்? எல்லோர் வீட்டிலும் இப்படித்தானே நடக்கிறது. அதையெல்லாம் ஏற்றுக்கொண்டு மகிழ்ச்சியாகக் குழந்தையை வளர்க்கலாமே எனத் தோன்றினாலும் சூழல் அப்படித்தான் இருக்கிறதா?
ஒருபக்கம் பாலாய்ப் போன ஹார்மோன்கள் வேறு. கர்ப்பமாக இருக்கும்போது உச்சத்தில் இருந்த ஹார்மோன்கள் எல்லாம் சரியுமாம். உடலில் பல வேதியியல் மாற்றங்கள் நிகழுமாம். சின்ன விஷயமே பெரிதாகத் தோன்றுமாம். இதையெல்லாம் புரிந்து கொண்டு நம்மைச் சுற்றியுள்ளவர்கள் புதிய தாயை இன்னும்கூட நல்ல முறையில் கவனித்துக் கொள்ளலாம் தானே? குழந்தை பிறந்த பின் ஏன் தாய்க்குத் தரும் கவனிப்பும் சரிந்து விடுகிறது?
தாங்க முடியாத வலிகளைத் தாங்கிக் கொண்டிருக்கும்போது மனதையும் வலிக்க வைக்கிறார்கள். எங்களின் எண்ணங்களை அறிந்து எங்களை மகிழ்விக்கப் பெரிதாக யாரும் முயல்வதில்லையே ஏன்?
அந்த நாட்களில் எங்களுக்கும் பல ஆசைகள், ஏக்கங்கள் இருக்கின்றனவே, அதை யாரும் காது கொடுத்து கேட்பதில்லையே.
விருப்பு வெறுப்புகளைப் பற்றி நாம் பேசுவோமா?
(தொடரும்)
படைப்பாளர்:
ரேவதி பாலாஜி
சேலம் மாவட்டத்தில் பிறந்து வளர்ந்தேன். தற்சமயம் ஈரோட்டில் வங்கிப் பணியாற்றி வருகிறேன். சிறு வயதில் இருந்தே தமிழ் மீதும் புத்தக வாசிப்பின் மீதும் பெரும் ஆர்வம் கொண்டேன். கடந்த சில ஆண்டுகளாக வாழ்க்கை ஏற்படுத்துகிற தாக்கங்களைக் கதைகளாகவும் கட்டுரைகளாகவும் பதிவு செய்து வருகிறேன். மைவிகடன் இணைய தளத்தில் நாற்பதிற்கும் மேற்பட்ட கட்டுரைகள் எழுதியுள்ளேன். கடந்து ஆண்டு சஹானா இணைய இதழ் நடத்திய நாவல் 2023-24 போட்டியில் பங்கேற்று முதல் பரிசு பெற்றுள்ளேன். அதில் ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் என்கிற தலைப்பில் நான் எழுதிய நாவல் புத்தகமாகவும் வெளிவர உள்ளது.