அய்யா வழியை அறிய, அகிலத்திரட்டை நான் முன்னிறுத்துவதற்கான காரணம், அய்யா வழி இயங்குவதே அகிலத்திரட்டு அம்மானை என்ற புத்தகத்தை அஸ்திவாரமாகக் கொண்டு என்பதால்தான்! அகிலத்திரட்டு அம்மானை என்பது அய்யா வைகுண்டரின் வாழ்நாள் ஆவணம் என்பேன்.
‘பறையன் புலையன் பகல்வரான் போகுமிடம்
மறையொத்த சாணார் வந்தால் பிழை எனவே முக்காலி கட்டி முதுகில் மிகத்தான் அடித்து
மிக்கான பொன்பணங்கள் வேண்டினான் மாபாவி’1*
(தமிழ்நாட்டிலும் நாடார்கள் பொதுக்கிணற்றில் தண்ணீர் எடுக்கக்கூடாது என கமுதி, கல்லூரணி ஆகிய ஊர்களில் கட்டுப்பாடுகள் இருந்ததை எதிர்த்து, அவர்கள் வழக்குத் தொடர்ந்ததும், கீழமை நீதிமன்றங்களில் தோற்று, உயர்நீதிமன்றத்தை நாடியதும் வரலாறு. பார்ப்பனரிடமிருந்து 36 அடி தொலைவிலும், நாயரிடமிருந்து 12 அடி தொலைவிலும் நாடார்கள் நிற்கவேண்டும், அதைத் தாண்டி நெருங்கக்கூடாது என்பது திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் நாடார்களுக்கு இருந்த ‘தீட்டுத் தொலைவு’ என சாமுவேல் மட்டீர் பதிவு செய்திருக்கிறார்.)
என்ற அகிலத்திரட்டின் வரிகள் ஆழமாகக் கூர்ந்து கவனிக்க வேண்டிய வரிகளாகும். பறையர், புலையர், பகல்வரான் போன்ற சாதியினர் செல்கின்ற இடத்திற்குச் சாணார்கள் வந்தால், அது தவறு என்று சொல்லி, சாணார்களின் முதுகில் முக்காலி கட்டி அடித்தார்கள். வரியாகவும், அபராதமாகவும் பொன்னும் பணமும் கேட்டார்கள் என்பது மேற்சொன்ன வரிகளின் பொருளாகும்.
முத்துக்குட்டி என்னும் அய்யா வைகுண்டர் வாழ்ந்த காலகட்டத்தில் சாணார்* (நாடார்) சாதியினர் நடத்தப்பட்ட விதத்தை எடுத்துரைக்கின்றன அகிலத்திரட்டின் இவ்வரிகள். அதாவது பறையர்கள், புலையர்கள், புதிரை வண்ணார்கள் போன்றோருக்கு நிகராகவோ, அல்லது அவர்களை விடவும் தாழ்வாகவோதான், நாடார் சாதியினர் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ஆட்சியில் நடத்தப்பட்டிருக்கிறார்கள் என்பதை இவ்வரிகளின் மூலம் அறிய முடிகிறது.
*இந்த சொல் பயன்பாட்டில் எழுத்தாளருக்கோ, பதிப்பாளருக்கோ உடன்பாடு இல்லை. பண்டைய தரவுகளில் உள்ள சொற்கள் அன்றைய வழக்கில் அவ்வாறே கையாளப்பட்டுள்ளன.
இதில் ‘பகல்வரான்’ என்றுக் குறிப்பிடப்பட்டிருப்பது, கண்ணால் பார்த்தாலே தீட்டு என்று ஆதிக்க வர்க்கம் வரையறை விதித்ததால், பகல் நேரங்களில் வெளியே வருவதற்கு தடை விதிக்கப்படிருந்த புதிரை வண்ணார் சாதியாக இருக்கலாம்.
பகல் வரான் = பகலில் வெளியே வராதவன்.
அகிலத்திரட்டு அம்மானை முழுவதுமே நாடார் மக்களுக்கான நியாயம் கேட்டல் படலமே நிரம்பி வழிகிறது என்பது மறுக்கவியலாத உண்மை. எல்லா சந்தர்ப்பங்களிலும் அகிலத்திரட்டு சாணார் மக்களை விட்டுக்கொடுக்காமல் பேசுகிறது, சில இடங்களில் நியாயம் இல்லாவிட்டாலும் வக்காலத்து வாங்குகிறது. என்றாலும் பிற சாதிகளையும் அரவணைக்கிறது, என்பதை இதுவரை பார்த்த அத்தியாயங்களில் உணர்ந்திருப்போம்.
அகிலத்திரட்டு வாசிப்பின் பயணத்தில் நான் கண்டறிந்த இன்னொரு செய்தியையும் இவ்விடத்தில் கூற வேண்டியது அவசியம் என்று கருதுகிறேன்.
ஆரம்பத்தில் நாடார் சாதி மக்களின் தொன்மக்கதையைச் சொல்லி நாடார் சாதியின் அருமை பெருமைகளை, பாராட்டும் அகிலத்திரட்டு, அய்யா வைகுண்டர் விஞ்ஞை பெற்ற பிறகு, தவமிருக்கும் காலத்தில், மற்ற சாதி மக்களையும் அரவணைத்துக் கொள்கின்றது என்பதையும் பார்த்தோம் அல்லவா?
அகிலத்திரட்டின் கூற்றுப்படி, முத்துக்குட்டி என்னும் அய்யா வைகுண்டர், தவமிருக்கும் போதுதான், அவரைப் பார்க்க, பல்வேறு பகுதிகளிலிருந்தும், சாதி மத பேதமின்றி மக்கள் வந்திருக்கின்றார்கள். அப்போதுதான் அய்யா வைகுண்டரின் புகழ், தமிழ் நாட்டின் தென் மாவட்டங்களில் விரிந்து பரவுகின்றது. முத்துக்குட்டி என்ற ஒருவன் ஆங்கிலேயக் கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சியை அழிக்கவே, தான் பிறந்ததாகப் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கின்றான் என்று ஆங்கிலேய ஆட்சியருக்குத் தகவல் செல்லும் அளவுக்கு, அய்யா வைகுண்டரின் புகழ் பரவுகின்றது. முத்துக்குட்டியும் அவரது சீடர்களும் தேசத்துரோகச் செயல்களில் ஈடுபடுவதாக, சந்தேகித்த ஆங்கிலேய அரசு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையின் முடிவு அறிக்கை திருவிதாங்கூர் மகாராஜாவுக்கு அனுப்பப்பட்டது.2*
ஒரு காலகட்டத்தில் மற்றைய தென்னிந்திய மாநிலங்கள் அனைத்தும் நாயக்கர்களின் நேரடி ஆட்சிக்குக் கீழ் உட்பட்டிருந்த போதிலும், திருவிதாங்கூர் மட்டும், நாயக்க மன்னருக்கு கப்பம் கட்டுகின்ற, சுதந்திர சமஸ்தானமாக இயங்கியது. கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ஒரு பகுதியாக இருந்தது.3* வேறு காலகட்டத்தில் மற்ற தென்னிந்திய மாநிலங்கள் ஆங்கிலேயர்களின் நேரடி ஆட்சியின் கீழ் இயங்கியபோதும், திருவிதாங்கூர் சமஸ்தானம் ஆங்கிலேயர்களுடன் வியாபார உடன்படிக்கை செய்து கொண்ட, சுதந்திர சமஸ்தானமாக இயங்கியது.
ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனியுடன் திருவிதாங்கூர் அரசாங்கம் செய்து கொண்ட வியாபார மற்றும் ராணுவ உடன்படிக்கையின் வழியாகவே ஆட்சி அதிகார முடிவுகள் எடுக்கப்பட்டன4*. இந்நிலையில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் சனாதன ஆட்சியாளர்களையும், ஆங்கிலேயரின் ஆதிக்க ஆட்சியாளர்களையும் ‘நீசர்கள்’ என்று விமர்சனம் செய்த அய்யா வைகுண்டர், திருவிதாங்கூர் அரசாங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதில் வியப்பேதும் இல்லை. கைது செய்யப்பட்ட முத்துக்குட்டியை அரசு அதிகாரிகள் பல விதங்களில் கொடுமைகள் செய்ததாக அகிலத்திரட்டு குறிப்பிடுகிறது. 5*
முத்துக்குட்டி என்னும் அய்யா வைகுண்டர் கைது செய்யப்பட்ட விதம் மற்றும் அவருக்குக் கொடுக்கப்பட்ட தண்டனைகள் வரலாற்று நிகழ்வுகளோடு பொருந்துகின்றனவா என்பதை இனி வரும் அத்தியாயங்களில் விவரிப்போம்.
சிறையிலிருந்து அய்யா வைகுண்டர் எவ்வாறு விடுதலை ஆனார் என்பதைக் காண்பதே இந்த அத்தியாயத்துக்கு அவசியம்.
“அருப்பான நீசன் அவன் சில நாள் சென்றதன் பின்
என்ன விசாரம் இப்பேயனுக்கு எனவே
தன்னே இருந்து தான் நினைக்கும் வேளையிலே
முன்னே ஒரு யுகத்தில் மூவரிய நாராயணர்க்கு
அன்னம் ஒரு பாலும் அருந்த மிகக் கொடுத்து
ஆயர் குடியில் அவதரித்த கோமானில்
தூய ஒரு கோனும் துணிந்து அங்கு எழுந்திருந்து
பக்தியுள்ள நாராணரை பாராவது இளக்க
உத்தரித்துக் கோனும் உலகம் அதை ஆளுகின்ற
மன்னவன் முன்பில் வந்து நின்று அங்கே ஏது உரைப்பான்
தன்னதியமான தலைவனே கேட்டருளும்
நம்முட இராச்சியத்தில் ஞங்களுட தன்னினத்தில்
எம்முடைய ஆளாய் இருக்கின்ற இச்சாணான்
சாணானின் நல்ல தன்மை வெகுமானம் உள்ளோன்
கோணா மனதுடையோன் குணமுடைய நல்லவன் காண்
நேர்மை ஒழுங்கு உள்ளோன் நேர் சொல் ஒருவர் காண்
ஓர்மை யுடையோன் உபகாரக்காரன் இவன்
ஆனதால் எங்களுக்காய் அரசே நீர் தாம்(ன்) உருகி
ஈனம் இலாது எமக்காய் இரங்கும் எனத் தொழுதான்”6*
மேற்சொன்ன அகிலத்திரட்டு வரிகளில், அருப்பு என்ற வார்த்தைக்கு ‘துக்கம்’ என்ற பொருளே பொருத்தமாகத் தெரிகிறது. ஏனென்றால் ‘முத்துக்குட்டியை சிறைபிடித்த நீசன், பல கொடுமையான தண்டனைகளை அவருக்கு வழங்கியும், முத்துக்குட்டியை நீசனால் எதுவும் செய்ய முடியவில்லை’ என்ற பொருள் படும்படியான செய்யுள்களைத் தொடர்ந்து, மேற்சொன்ன வரி வருவதால், ‘தன் தோல்வியால் நீசன் துக்கமானான்’ என்றே பொருள் பெறுகிறது.
அவ்வாறு துக்கமான நீசன், சில நாள்களுக்கு பிறகு, ‘இந்த பேயனுக்கு என்ன விசாரணை செய்வது?’ என்று நினைத்தான். அப்போது, முன்னொரு யுகத்தில் நாராயணருக்கு பாலும் சோறும் கொடுத்த, ஆயர் குலத்தில் பிறந்தவனான கோன் ஒருவன் துணிந்து எழுந்திருந்து, மன்னன் முன்னால் நின்று ஏது பேசுகிறான் என்றால்,
‘தன்னதியமான தலைவனே, நமது ராஜ்ஜியத்தில் எங்களுடைய இனத்தில், எங்களுடைய ஆளாக இருக்கின்ற இந்த சாணான்*, சாணானின்* நல்ல குணங்கள் கொண்ட சாணான்* ஆவான். கோணாத மனம் கொண்டவன், நல்ல குணமுடையவன். நேர்மையும் ஒழுக்கமும் உள்ளவன், நேருக்கு நேர் பேசும் குணம் கொண்டவன். ஞாபக சக்தி உடையவன், (ஓர்மை = ஞாபகம், உபகாரம் = உதவி) உதவி செய்யும் குணம் கொண்டவன். எனவே எங்களுக்காக அரசே, இவன் மீது இரக்கம் கொள்ளுங்கள்! என்று வணங்கினான்’ என்ற மேற்கூறிய பாடலில் பொருளுக்குள், அறியப்படும் ‘ஆயர் குடியில் அவதரித்த கோன்’ என்பவர் அய்யா வைகுண்டரின் சம காலத்தில் வாழ்ந்த, வைகுண்டரின் நண்பராக அறியப்படும் பூவண்டர் ஆவார். பூவண்டர் அகிலத்திரட்டில் போகண்டர் என்று சொல்லப்படுகிறார்.7*
பூவண்டர் பிறப்பால் இடையர் குலத்தை சேர்ந்தவர் என்பதைக் கூற வேண்டியது ஆய்வுக்கு அவசியம் என்பதால் குறிப்பிடுகிறேன். பூவண்டர், முத்துக்குட்டி என்னும் அய்யா வைகுண்டருக்கு தானமாகக் கொடுத்த நிலத்திலேயே, இப்போது அய்யா வைகுண்டரின் தலைமைப்பதியான சுவாமி தோப்பு அமைந்துள்ளது. ஆரம்பத்தில் பூவண்டருக்கு சொந்தமான நிலம் பூவண்டர் தோப்பு என்று அழைக்கப்பட்டது. அய்யா வைகுண்டரின் மறைவுக்குப் பிறகு, சுவாமி தோப்பு என்று வழங்கப்பட்டது. ஆனால் இச்செய்தி அகிலத்திரட்டு அம்மானையில் கூறப்படவில்லை. சுவாமி தோப்பு பதியிலும் பூவண்டர் பற்றிய நினைவுச் சின்னம் எதுவும் தற்போது இல்லை. 8*
‘முன்னொரு யுகத்தில் பாலும் அன்னமும் கொடுத்த ஆயர் குடி’ என்ற வாக்கியம், மகாபாரதக் கதையில் வருகின்ற கிருஷ்ணன் கதாபாத்திரத்தைக் குறிப்பதாக உள்ளது.
மேற்சொன்ன பாடல் வரிகளைத் தொடர்ந்து வரும் அகிலத்திரட்டின் வரிகளும் இந்த அத்தியாயத்துக்கு தேவையானது, அது…
‘அப்போது தாசன் அவன் மனதுதான் இளகி
இப்போது இவனை யாமனுப்பி விட்டிடுவோம்
விட்டால் அவனும் மேலும் இருக்கும் முறை
கட்டாகச் சொல்லி கைச்சீட்டு எழுதி வைத்து
போகச் சொல்லென்று போகண்டனார்க்கு உரைக்க
அகம் மகிழ்ந்து மாயன் மறுத்து ஏது சொல்வார்
என்ன விதமாய் எழுதி வைக்கும் வாசகங்கள்
மன்னவனே சொல்லும் என மாறி அவன் தொழுதான்
அப்போது அரசன் எல்லோரும் கேள்க்க
இப்போது இவன் இனத்தில் எத்தனை பேர்க்கு ஆனாலும்
ஒப்போடு உறவாய் ஒத்திருந்து வாழ்வதல்லால்
சர்ப்பம் போலொத்த சகல சாதி தனக்கும்
உத்தரவு என்றது உபாயமாய் சொல்லாமல்
மற்றுமொரு சாதிகளை வாவென்று உரையாமல்
தன்னொரு சாதி தன்னோடு இருப்பதல்லாமல்
பின்னொரு சாதி பிதனம் வைத்து பாராமல்
இனத்தொடு சேர்ந்து இருப்பேனாம் என்று சொல்லி
கனத்தோடு அவனும் கைச்சீட்டு எழுதி வைத்து
பின் அவன் எல்லையிலே போகச் சொல்லென்று உரைத்தான்’9*
இவ்வரிகள் சொல்வதாவது,
திருவிதாங்கூர் அரசன் மனமிளகி, “இப்போது இவனை (அய்யா வைகுண்டர் என்னும் முத்துக்குட்டியை) நான் விடுவித்தால், பிறகு அவன் செயல்படும் முறைகள் பற்றி எழுதி, கையொப்பம் இட்டுத் தர வேண்டும்” என்று சொல்ல, போகண்டர் (பூவண்டர்), “எந்த விதமாக வாசகங்களை எழுத வேண்டும்?” என்று கேட்டார்.
“இப்போது, இவன் (முத்துக்குட்டி), இவனுடைய சாதியில் (சாணார்* சாதியில்) எத்தனை பேர்க்கானாலும், ஒப்போடு உறவாய், ஒத்திருந்து வாழட்டும். அல்லாமல், பாம்பு போல், சகலமான சாதிகளுக்கும் உத்தரவு சொல்லக் கூடாது.” (இதில் உத்தரவு என்பது அய்யா வைகுண்டர் மக்களுக்கு சொல்லிய அறிவுரைகளாகும். ஆன்மீக நம்பிக்கை கொண்டவர்களால், இது அருள் வாக்கு என்று குறிப்பிடப்படுகிறது). “மற்ற சாதிகளை ‘வா’ என்று அழைக்கக்கூடாது. ‘மற்ற சாதிகள் மீது அக்கறை வைத்துப் பார்க்காமல், தன் சாதியோடு மட்டும் சேர்ந்து இருப்பானாம்’ என்று எழுதிக் கொடுத்து விட்டு, அவனை (முத்துக்குட்டியை) அவனுடைய எல்லைக்குப் போகச் சொல்லு” என்று போகண்டரிடம் அரசர் சொன்னார். இதில் கூறப்படும் அரசர் முத்துக்குட்டியின் சமகாலத்தில் திருவிதாங்கூர் மன்னராக வாழ்ந்த சுவாதித் திருநாள் மகாராஜா ஆவார்.
அதாவது, முத்துக்குட்டி என்னும் அய்யா வைகுண்டர், தன் சாதியான நாடார் சாதி மக்களுக்கு மட்டுமே அறிவுரை (அருள் வாக்கு) சொல்லலாம். மற்ற சாதியினருக்கு அறிவுரை (அருள் வாக்கு) சொல்லக்கூடாது என்ற நிபந்தனையுடன் முத்துக்குட்டியை விடுதலை செய்ய திருவிதாங்கூர் அரசாங்கம் தயாரானது என்றுரைக்கின்றது அகிலத்திரட்டு.
இன்னும் தெளிவாகக் கூற வேண்டுமானால், முத்துக்குட்டி என்னும் அய்யா வைகுண்டர் தன்னுடைய நாடார் சாதிக்கு மட்டுமே தலைவனாக இருப்பதில் திருவிதாங்கூர் அரசிற்கு யாதொரு பிரச்சினையும் இல்லை. முத்துக்குட்டி என்ற தனி மனிதன், எல்லா சாதிகளையும் ஒன்றாக ஒரே தளத்தில் இணைப்பதையே திருவிதாங்கூர் அரசாங்கம் எதிர்த்திருக்கிறது. எனில் ‘சாதி தாண்டிய மனித குல ஒற்றுமையை உருவாக்க முயற்சி செய்ததே அய்யா வைகுண்டர் செய்த தேசத்துரோக குற்றமாகும்’ என்பதே அன்றைய அரசின் நிலைப்பாடாக இருந்திருக்கிறது.
தங்கள் நிபந்தனைக்கு சம்மதித்து எழுதிக் கொடுத்தால், திருவிதாங்கூர் அரசாங்கம் முத்துக்குட்டியை விடுதலை செய்ய ஒப்புக் கொண்டதானது, கிட்டத்தட்ட இன்றைய காவல் நிலையங்களில் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுப்பதற்கு ஒப்பு என்று கொள்ளலாம்.
முத்துக்குட்டி என்னும் அய்யா வைகுண்டர் திருவிதாங்கூர் அரசாணையை ஏற்று நிபந்தனைக் கடிதம் எழுதிக் கொடுத்தாரா? அதனைத் தொடர்ந்து, அய்யா வைகுண்டர் தன் சாதி மக்களைத் தவிர்த்து மற்ற சாதி மக்களை அரவணைத்தாரா? இல்லையா?
இக்கேள்விகளுக்கான பதில்கள் அய்யா வைகுண்டரின் சாதி பற்றிய நிலைப்பாட்டை அறிய மிகவும் அவசியமானதாகும்.
தொடரும்…
- பொ.முத்துக்குட்டி சாமியவர்களால் இயற்றப்பட்டு, தங்கையா அவர்களால் அச்சிலேற்றப்பட்ட அகிலத்திரட்டு அம்மானை, நான்காம் பதிப்பு, 1963 ஆம் ஆண்டு, பக்கம் எண் – 114.
- THE TINNEVELY MISSION OF THE CHURCH MISSIONARY SOCIETY, REV. GEORGE PETTITT, 1850, PAGE NO : 288
- ‘தமிழக நாடார்கள், ஒரு சமுதாய மாற்றத்தில் அரசியல் பண்பாடு’, இராபர்ட்.எல்.ஹார்டுகிரேவ், தமிழாக்கம்: எஸ்,டி.ஜெய பாண்டியன், முதல் பதிப்பு: 2019, பக்கம் எண் : 19.
- திருவிதாங்கூர் அரசாட்சி, [கிபி 1800 முதல் 1956 வரையிலும்] சமூக நீதியும் விடுதலையும், முனைவர் ஜெ.விஜயரத்னகுமார்Ph.D, ஐயாக்குட்டி ஜெயக்குமார், Reference from William logan op.cit part.I.No.XII, IBID, பக்கம் எண் – 17 முதல் 24 வரை.
- பொ.முத்துக்குட்டி சாமியவர்களால் இயற்றப்பட்டு, தங்கையா அவர்களால் அச்சிலேற்றப்பட்ட அகிலத்திரட்டு அம்மானை, நான்காம் பதிப்பு, 1963 ஆம் ஆண்டு, பக்கம் எண் – 266 முதல் 272 வரை.
- பொ.முத்துக்குட்டி சாமியவர்களால் இயற்றப்பட்டு, தங்கையா அவர்களால் அச்சிலேற்றப்பட்ட அகிலத்திரட்டு அம்மானை, நான்காம் பதிப்பு, 1963 ஆம் ஆண்டு, பக்கம் எண் – 273
- அகிலத்திரட்டு அம்மானை (மூலம் ஏட்டுப் பிரதி) மூலமும் உரையும், உரையாசிரியர் நா.விவேகானந்தன், இரண்டாம் பதிப்பு 2006, பாகம் இரண்டு, பக்கம் எண் – 232, 233.
- அய்யா வைகுண்டரின் தென்பாண்டிநாட்டு வருகை, கலந்தபனை வெ.செந்திவேலு, சூரங்குடி ஆ. இன்பக்கூத்தன், முதற்பதிப்பு ஆகஸ்ட் 2011, பக்கம் எண் XV.
- பொ.முத்துக்குட்டி சாமியவர்களால் இயற்றப்பட்டு, தங்கையா அவர்களால் அச்சிலேற்றப்பட்ட அகிலத்திரட்டு அம்மானை, நான்காம் பதிப்பு, 1963 ஆம் ஆண்டு, பக்கம் எண் – 274.