‘முதலாம் ஆண்டு வெற்றி நாள். பெண்களுக்காகப் பெண்களால் என்ற தாரக மந்திரம் கொண்டு, பொருளாதார விடுதலைதான் பெண்களுக்கு உண்மையாகவே விடுதலையைப் பெற்றுத் தரும் என்று உணர்ந்து கவிதா தொடங்கிய ஆரி தையல் பயிற்சியகம் இன்று, நாற்பதுக்கும் மேற்பட்ட மாணவிகளுக்குப் பயிற்சி அளித்து உள்ளது.
பெண்கள் உடைகள் தைத்தும், திருமணம் மற்றும் திருவிழா நேரம் போடும் சட்டைகளுக்கு ஆரி வேலைப்பாடுகள் செய்தும், வாடிக்கையாளர்கள் மகிழும்படி தன் பயணத்தைத் தொடர்ந்து வருகிறார். மேலும் வளர வாழ்த்துகள்.’
இப்படி ஒரு பதிவுதான் இந்தக் கட்டுரையை எழுதத் தூண்டியது. பதிவைப் போட்டவர் கவிதாவின் கணவர் பப்பு. ‘மனதில் உள்ள காதலியே மனைவியாக வரும்போது’ என்பது போலப் பிடித்த துறையைக் கெட்டியாகப் பிடித்து முன்னேறத்துடிக்கும் ஒரு பெண்ணின் கதை இது.
பெயர் கவிதா. பெயருக்கேற்றார்போல் செல்லமாய் கவிதையாய் பெற்றோரால் வளர்க்கப்பட்டவர். உள்ளூரிலேயே படித்த இயற்பியல் பட்டதாரி. சிறு வயது முதலே கைவேலைகள் செய்வதில் பெரும் ஆர்வம் கொண்டவர். கிராமத்தில் கிடைத்த பொருள்களை வைத்துத் தையல் வேலை, நூல் வேலை போன்றவற்றைப் பொழுதுபோக்காக ஆனால் மிகவும் ஆர்வத்துடன் செய்து இருக்கிறார்.
திருமணம் நடைபெறுகிறது. தன் வீட்டில் கிடைத்த அதே நேசமும் அன்பும் ஒருங்கே கிடைக்கும் கணவரின் வீடு. ஒரே தெரு என்பதால், பிறந்த ஊர் புகுந்த ஊர் என உள்ளத்தைக் குழப்பிக் கொள்ளத் தேவையில்லாத குடும்ப அமைப்பு. நிறைவான வாழ்க்கை.
கணவர் மஸ்கட்டில் பணி புரிந்ததால் வெளிநாட்டு வாழ்க்கை. இதற்கிடையில் இரட்டைப் பிள்ளைகள். இருவரின் பராமரிப்பு, வீட்டு வேலை, குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்தல் எனக் காலம் ஓடுகிறது. சிறு வயதிலிருந்தே கற்ற தையலைக் கொண்டு அருகிலிருந்த நண்பர்களுக்குச் சட்டை தைத்துக் கொடுக்கிறார். இணையம் மூலம் புதுப்புது நுட்பங்களையும் கற்கிறார்.
இன்றும் நாள்தோறும் ஒருமுறையாவது நினைத்துக் கொள்ளும் அளவுக்கு இனிமையானது மஸ்கட் வாழ்க்கை என்கிறார். ஆகாய விமானத்தை எப்போதாவது அண்ணாந்து மட்டுமே பார்க்கக் கூடிய ஊரிலிருந்து விமானத்தில் சென்றவருக்குப் புதிய ஊரும் சொர்க்கமாகத் தெரிய, அவரது தகவமைத்துக் கொள்ளும் திறனே காரணம். தமிழ் வழியில் கற்கும் பலரும் பயப்படும் ஆங்கிலத்தைப் பிள்ளைகளுக்கு இணையாகப் பயன்படுத்தும் அளவுக்கான திறனை, மஸ்கட் கொடுத்து இருக்கிறது.
பிள்ளைகளைப் பள்ளி/ டியூசன் கொண்டு விடுதல், லூலு அங்காடி செல்லுதல், மஸ்கட் கடற்கரையில் நடைப்பயிற்சி என உண்மையில் ரசித்து வாழ்ந்த நாள்கள் அவை என்கிறார் கவிதா.
‘அவ்வப்போது நண்பர்கள்,மற்றும் உறவுகளைச் சந்திப்பது, ஈத், ரம்ஜான் விடுமுறைகளில் இந்தியக் குடும்பங்களுடன் இணைந்து நெடுந்தூரம் பயணிப்பது, ஆளுக்கொரு வகை உணவு சமைத்து கூட்டாக அமர்ந்து பகிர்ந்து உண்பது; இரவு நேரங்களில் கடற்கரைகளில் நள்ளிரவில் உரையாடுவது, அவ்வப்போது பார்பிக்கியூ, பீச் அருகே அரேபிய இளைஞர்கள் செய்யும் ஷவர்மா, கிரில் சிக்கன், சிக்கன் திக்கா போன்ற அரேபிய உணவுகளை வாங்கிச் சாப்பிடுவது என மறக்க விரும்பாத வாழ்வு மஸ்கட் நாள்கள்’ எனத் தனது வாழ்க்கையை நினைவு கூறுகிறார்.
பிள்ளைகள் கல்லூரி சேர வேண்டிய காலம்; ஊர் வர வேண்டும் என்ற சூழ்நிலை… பிள்ளைகள் கல்லூரி விடுதியில் தங்கிப் படிக்க, இப்போது தையல் இயந்திரம்தான் துணை.
கணவர் ஊரில் தொடங்கிய தொழிலுக்குப் பக்கபலமாக பின்னால் அமைதியாக இருக்கிறார். கொரானா எல்லோர் வாழ்விலும் விளையாடியதுபோல இவர்கள் தொழிலிலும் விளையாடியது என்றாலும், அதிலிருந்தும் மீண்டு எழுந்து வந்து இருக்கிறார்கள். வாழ்க்கை இதமாகவே செல்கிறது.
இந்தப் புள்ளியில் தனக்கென ஏதாவது செய்ய வேண்டும் என்ற உந்துதல் வந்து இருக்கிறது. BSc BEd படித்தவர் என்பதால், அருகில் இருக்கும் தனியார்ப் பள்ளிகளுக்கு வேலை தேடிச் செல்கிறார். ஆனால் அவர்கள் கொடுப்பதாகக் கூறிய சம்பளம் மிகக் குறைவு.
நமது ஆர்வத்தையே தொழிலாக மாற்றினால் என்ன என்ற எண்ணம் அப்போதுதான் வந்து இருக்கிறது. ஆனால் அதற்கு முறையான படிப்பும் அதற்கேற்ற பயிற்சியும் வேண்டுமே! அருகில் இருக்கும் நகரத்துக்குச் சென்று ஆரி வேலைப்பாடு கற்கிறார். உழைப்பு, பயிற்சி மூலம் அதைத் திறம்படச் செய்யும் ஆற்றலும் பெறுகிறார். அப்போது வயது நாற்பத்தைந்து. கற்பதற்கு வயது ஒரு தடை அல்ல என நிரூபிக்கிறார்.
நமக்குக் கிடைக்காத தையல், ஆரி பயிற்சியை நம் ஊர்ப் பெண்கள் இடையே ஏன் எடுத்துச் செல்லக் கூடாது என்ற எண்ணத்தில் பயிற்சி நிலையம் ஒன்றைத் தனது ஊரில் தொடங்குகிறார்.
அவர் எள் என்றதும் எண்ணெய்யாய் உதவும் குடும்பம். தொழிலைத் தொடங்க எண்ணியதும், தம்பி மனைவி மெர்லின், தானும் இணைந்து ஆரி வேலை செய்து தருவதாக உத்வேகம் அளிக்கிறார். வீட்டின் அருகே இருந்த பூண்டு குடோன் சுத்தம் செய்யப்பட்டு, பயிற்சி அளிக்க மூன்று தையல் இயந்திரங்கள் தவணை முறையில் வாங்கப்பட்டன. அதற்கான முன்பணம் மிகச் சொற்பமானது, இனி நீ கடையைக் கவனித்துக் கொள், சமையல் என் பொறுப்பு என்று கடை தொடங்கிய நாள் முதல் இன்றுவரை, தன் சமையல் மூலம் பெண்ணுக்குப் பெண்தான் பேருதவி என மாமியார் ஜான்சி ராணி தன் பங்குக்கு உதவ வந்தார்.
தொடங்கியதும், பேஸ்புக், வாட்சப் ஸ்டேடஸ், ஒரு அறிமுக நோட்டீஸ் எனச் சிறு விளம்பரம் கொடுக்க, முதல் மாதமே ஏழு பேர் தையல், ஆரி கற்க வர, பெண்கள் குரல் சேர்த்து ஒலிக்கத் தொடங்கியது. இன்று வரை அந்த ஒலி கூடியே வருகிறது.
கவிதா இவ்வாறு கூறுகிறார், “பிள்ளைகள் அம்மாவின் புதிய வருமானத்தில் பங்கு வாங்கி மகிழ்ந்தார்கள். அவர்களின் வகுப்பு தோழியர், அவர்கள் அம்மாக்களின் உடைகளைத் தைக்க வாங்கி வந்து தந்து, என்னைச் சுறுசுறுப்பாக்கினார்கள். மணப்பெண்ணுக்கு ஆரி வேலைப்பாடு கொண்ட சட்டை தைத்ததன் மூலம் முதல் முறை இருபதாயிரம் வாங்கினேன். அப்போது, ‘கவிதா நீ வெற்றி பெற்று விடுவாய்’, என்று என் தோள்களை நானே தட்டிக் கொடுத்துக் கொண்டேன். இது கர்வம் இல்லை; தன்னம்பிக்கை என உணர ஆரம்பித்தேன். வாழ்க்கை அழகாகவும், பொருள் பொதிந்ததாகவும் தெரியத் தொடங்கியது.
தையல் செய்து கொடுப்பது என்பது வழக்கமான ஒன்று. தையல் பயிற்சி கொடுத்து உளநிறைவாக என்னிடம் வந்து கற்பவர்கள் வாழ்வில் அடுத்த கட்டத்துக்குச் செல்ல எப்படி உதவப் போகிறேன் என்று உள்ளத்தில் பல கேள்விகள் எழுந்தன. கணவரின் உற்சாகமூட்டும் குணம், என் தன்னம்பிக்கை எல்லாம் என்னை இலக்கை நோக்கிப் பயணப்பட வைத்தன.”
இப்போது பல மாணவர்கள் வருகிறார்கள். பள்ளி ஆசிரியராக வேண்டிச் சென்றவர், இன்று வேறு துறையில் ஆசிரியராக இருக்கிறார். ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியைகள்கூட இவரிடம் கற்கிறார்கள். இதைத் தெரிந்ததும் ஒரு அண்ணன், ‘நம்மை எல்லாம் தலையில் குட்டித்தானே பாடம் சொல்லிக் கொடுத்தார்கள். திருப்பிக் கொடுப்பதற்கான வாய்ப்பு’ என்றார். இதைக் கேலியாகத் தான், யாரும் எந்த நிலைக்கும் செல்லலாம் என்பதற்காகச் சொல்கிறேன்.
ஒரு ஆண்டை நிறைவு செய்துள்ளது அவரது ஆரி தையல் பயிற்சியகம், “பொருளாதார விடுதலைதான் பெண்களுக்குப் பொருளாதார விடுதலையைப் பெற்றுத் தரும் என்று உணர்ந்த நாட்கள் இவை,” என்கிறார் கவிதா.
குடும்பத்தின் ஒத்துழைப்பு இல்லாமல் இருந்தால் கவிதா என்ன செய்து இருப்பார் என அவரின் கணவர் பப்புவிடம் கேட்டேன். “அந்தப் பேச்சுக்கே இடமில்லை, பிள்ளைகள் பள்ளி செல்லும் வயதில் பி. எட். படிக்க ஆர்வம் கொண்டார், என் தந்தை காலையில் விட்டு விட்டு மாலையில் கூட்டிவிட்டுக் கொண்டு வந்து விடுவார், மருமகளாக அல்ல ஒரு மகளாகத்தான் இன்று வரை பார்க்கப் படுகிறார். நான், பிள்ளைகள்… என எங்கள் ஆதரவு எப்போதும் அவருக்கு உண்டு.”
அதைப்போலத்தான் பெண்களும் குடும்பம் என்ற நுகத்தடிக்குள் தான் இருக்கிறார்கள். அவர்களாகவே கூட உள்ளேயே இருக்கலாம். மறுப்பதற்கில்லை, அதிலிருந்து வெளியில் வந்து இருப்பவர்களை எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். ஆனாலும் அவர்களில் பல பெண்கள் போராடித்தான் நுகத்தடியிலிருந்து வெளியில் வந்து இருக்கிறார்கள் என்பதே உண்மை.
ஒரு தம்பி என்னுடன் ஒரு விவாதம் செய்தார். அப்போது “என்னுடைய மனைவியிடம் நான் சொல்லிக் கொண்டு இருப்பது இது தான் – ‘என்னைச் சார்ந்து இருக்காதே. நாளை எனக்கு என்ன வேண்டும் என்றாலும் நடக்கலாம். உனக்கும் ஒரு வருமானம் தேவை என்று’. அதனால்தான் பெண்களை ஆண்கள் அடக்குகிறார்கள் என்று சொல்வதைக் கடுமையாக எதிர்க்கிறேன். தனக்குப் பிறகுத் தன் குடும்பத்தின் நிலை என்ன ஆகுமோ என்று நித்தமும் எண்ணுபவன் ஆண் 💪💪💪.” இந்த அடையாளம் அவர் போட்டு இருந்தது தான். அதனால் அப்படியே வைத்து இருக்கிறேன்.
அவருக்கு நான் இவ்வாறு பதில் சொன்னேன். “ஆண் ஏற்கனவே வேலைக்குப் போய்க்கொண்டு இருப்பவர் என்பதால், அவருக்கு அந்த அனுபவம் இருக்கும். புதிதாக வேலைக்குப் போகும் பெண்ணுக்கு அந்த அனுபவம் கிடையாது. எனவே மனைவி வேலைக்குப் போக வேண்டுமென்றால், இருவரும் ஒரே நேரம் எழுந்து வீட்டு வேலைகளைச் செய்து ஒரே நேரம் தூங்குவதாக இருக்கவேண்டும். அப்படி இல்லை என்றால் தூங்குவதற்குக் கூட நேரமில்லாமல், மனைவிக்கு உடல்நலக்குறைவுதான் ஏற்படும். பின் வேலைக்குப் போகும் எண்ணம் போய்விடும். கொஞ்ச நாளாவது வெளியில் சாப்பிடலாம். நறுக்கிய காய்கறிகள், துருவிய தேங்காய் வாங்கலாம். சனி ஞாயிறு பெரும்பான்மையான வேலைகளை முடித்து வைக்கலாம். வேலைக்கு ஆள் வைக்கலாம். தொடக்கக் காலத்தைச் சமாளித்துவிட்டால் பிறகு எளிது தான். இதற்கெல்லாம் உத்தரவாதம் கொடுத்தால்தான், குடும்பமே உலகம் என இருக்கும் உங்கள் மனைவி போல இருப்பவர்கள், வெளி வேலைக்குப் போக முடியும்.”
இதற்கு அந்தத் தம்பியிடம் இருந்து பதிலே இல்லை. இவர்களைப் போன்றவர்கள், முதலிலேயே நாம் சும்மா இருந்துவிட்டால் மனைவி எப்படியும் வீட்டையும் வெளி வேலையையும் சமாளிப்பார். கேட்டால் அவர் செய்யவில்லையா? இவர் செய்யவில்லையா? உனக்கு மட்டும் ஏன் முடியாது? எனப் பழியை மனைவி மீது போட்டுவிட்டு, அவரைக் குற்ற உணர்ச்சியில் தள்ளிவிட்டு விட்டுத் தப்பிக்கொள்ளலாம் என நினைப்பவர்கள். நாம் வேலை செய்யப் பழகினால், மனைவி காலம் மட்டும் செய்யச் சொல்லுவார் என நினைப்பவர்கள். சமூகம் அவர்களை அப்படித்தான் வளர்த்து இருக்கிறது.
ஆண்களுக்குக் கிடைக்கும் ஒத்துழைப்பு பெண்களுக்கும் கிடைக்க வேண்டும். அதற்கு ‘நான் வீட்டிற்குப் பொறுப்பு’ என ஜான்சி ராணி அம்மா முன்வருவது போல குடும்பம் முன்வர வேண்டும்; கணவன் முன்வரவேண்டும். மருமகள் வந்துதான் அடுப்பைப் பற்றவைக்க வேண்டும் என இருக்கும் குடும்பங்கள் பல உண்டு. ஆமை ஓட்டைச் சுமந்து செல்வது போலப் பெண் என்றால் வீட்டைச் சுமந்துதான் செல்ல வேண்டுமா? அதைக் குடும்பம் பகிரக்கூடாதா? ஓராயிரம் கவிதாக்கள் வருவார்களே!
இதில் ஒன்றை நாம் புரிந்துகொள்ள வேண்டும். கவிதாவுக்கு இங்கு இல்லாதது என எதுவுமில்லை. அன்பு, அரவணைப்பு, பணம் என எல்லாமும் நிறைவாகக் கிடைக்கிறது. அதன்பிறகும் அவர் இந்த வயதில் இந்த முடிவை எடுக்கிறார் என்றால், அது கொடுக்கும் சுகம்தான் என்ன? அதை அனுபவித்தால்தான் புரியும் என்கிறார். அதைச் சுவைக்க விரும்புவோர்… என்ன கிளம்பிவிட்டீர்களா?
படைப்பாளர்
பாரதி திலகர்
தீவிர வாசிப்பாளர், பயணக் காதலர்; தொன்மை மேல் பெரும் ஆர்வம் கொண்டவர். அயல்நாட்டில் வசித்து வந்தாலும் மண்ணின் வாசம் மறவாமல் கட்டுரைகள் எழுதிவருகிறார். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய கட்டுரைகள், ‘பூப்பறிக்க வருகிறோம்’ என்கிற புத்தகமாக, ஹெர் ஸ்டோரிஸில் வெளிவந்திருக்கிறது.
அருமை அக்கா.. வாழ்த்துக்கள்