உலக உணவு தினம் இவ்வாண்டு, ‘மேம்பட்ட வாழ்வையும் எதிர்காலத்தையும் தரும் உணவுக்குரிய உரிமை’ ( Right to foods for a better life and future) என்ற சொலவத்தைத் (slogan) தாங்கி வருகிறது.
உணவு என்பது எல்லோருக்குமானது. நல்ல சத்தான உணவு எல்லோர் கைகளிலும் சாதி, மத, பால் பேதமின்றி கிடைக்கப்பெற வேண்டும். நமது வயல்களிலும் சந்தைகளிலும் மேசைகளிலும் பன்முகத்தன்மையுடனான ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள், அனைத்து மக்களின் நலனுக்காகவும் அவர்களைச் சென்றடைய வேண்டும்.
இத்தருணத்தில் காசாவில் பட்டினியால் இறந்து போன உயிர்களை நினைவு கூராமல் இருக்க முடியவில்லை. உணவும் தண்ணீரும் மின்சாரமும் இன்றி மக்களை இஸ்ரேல் கொடுமைப்படுத்தி வருகிறது என்று கூறுவேன். ஒவ்வொரு போரிலும் கலவரத்திலும், அது முடிவுற்ற பின்னரும் தவிப்பது என்னவோ இளம் பிஞ்சுகள்தான். உலகம் முழுவதும் பரவிக் காணப்படும் உணவுக்கான போராட்டம், வலிமிகுந்த வரலாறாக நீடிக்கிறது.
ஒடுக்குமுறைகளிலே, குறிப்பாக இலைமறைகாயாக இழையோடும் பாலின ஒடுக்குமுறையை உற்று நோக்குவோம். இன்றும்கூட வீடுகளில் பெண்கள் கடைசியாக உணவருந்துகிறார்கள். கணவன், குழந்தைகள், தாய், தந்தை, மாமியார், மாமனார் என்று அனைவருக்கும் பரிமாறிய பின்னரே, வீட்டில் உண்ண வேண்டிய சூழ்நிலை காலம் தொட்டு வரும் வழக்கமாக இருக்கிறது. இன்று, இந்நிலை பல வீடுகளில் மாறினாலும், ‘உணவு பரிமாறல்’ பெண்களின் வேலைதான் என்ற எண்ணப்பாடு இன்னும் அப்படியேதான் பரவிக்கிடக்கிறது.
லண்டனுக்கு இடம் பெயர்ந்து சில வருடங்களுக்குப் பின்னர், ஒரு முறை உறவினர் ஒருவரின் விழா ஒன்றில் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. என் முன்னாள் துணையோ, நண்பர்களோடு மது அருந்திக் கொண்டிந்தார். எனக்கோ பசி வயிற்றைக் கிள்ள ஆரம்பிக்க, ‘சாப்பிடலாம், வாருங்கள்’ என அழைத்தேன். அவரோ, ‘இல்லை, பிறகு பார்க்கலாம்’ என இருந்து விட்டார். தனியாகவே, உணவு வரிசையில் நின்று சாப்பாடு தட்டை பெற்றுக் கொண்டு மேசைக்கு செல்லும்முன் உறவுக்கார பெண்மணி ஒருவர், “முதலில் உங்கள் கணவருக்கு பரிமாறி விட்டுத்தான் நீங்கள் உண்ண வேண்டும்”, என்றார். கடுப்பில், என்ன சொல்வது என்று தெரியாமல், எதுவும் சொல்லாமலே திரும்பி வந்துவிட்டேன். ஒவ்வொரு வாய் உண்ணும் போதும், கோபத்தோடு மனதிற்குள் திட்டி தீர்த்தேன்.
ஒரு சில வருடங்களுக்கு முன் உணவகம் ஒன்றுக்கு தனியே காபி குடிக்கப் போயிருந்தேன். யன்னலோர இருக்கை கிடைக்க, சூடான பானம் அருந்தி பொழுதை கழிப்பது என்னவோ ஆனந்தம் தான். அதை சமூக வலைத்தளம் ஒன்றில் புகைப்படத்துடன் பதிவிட, “இன்னும் இவ்வளவு காலம்தான் தனியே இருக்கப்போகிறீர்கள்?” என்ற தொனியில் ஒருவர் பின்னூட்டம் இட்டார். மணமாகாத பெண்கள் அல்லது தனித்து வாழும் பெண்கள் வேலை வெட்டி இல்லாமல், ஏதோ சலிப்புடன் வாழ்வதாக தாமே நினைத்து கொள்கிறார்கள். திருமணமான பெண்களுக்கெல்லாம் தனியே உணவகம் செல்ல நேரமில்லை அல்லது செல்லக்கூடாது, சென்றால் மதிப்பு இல்லை, மரியாதை இல்லை, அது இல்லை, இது இல்லை என தாமாகவே சில வரையறைகளை தமது உலகத்துக்குள் வைத்துள்ளார்கள்! அவர்களின் மாய உலகம் அது.
உண்மையில் பெண்களும் எல்லோரயும் போல் தன்னந்தனியே கையில் புத்தகமோ, பத்திரிகையோ வைத்துக் கொண்டு, வயிறார உணவோ பானமோ அருந்தி மகிழ்வார்கள். அவ்வளவு ஏன், யன்னலின் வழியாக வெளியுலகை மட்டும் ரசித்த படியே உணவையும் ரசிப்பார்கள்.
இன்னொரு முறை உணவகம் ஒன்றில் பகல் உணவு உண்பதற்காக சென்றபோதும் ஒரு சிலரின் பார்வைகள் விநோதமாகவே இருந்தது. இருந்தும், அவர்களை சட்டை செய்யாமல் சோறு, கறி, மீன், பொரியல் என்று சாப்பிட்டு அசத்தி விட்டேன். “தனியாக சென்று சாப்பிட ஒரு மாதிரி இல்லையா?” என்று ஒரு சில கேள்விகள் வராமல் இல்லை. “பசி எடுத்தது, சாப்பிட்டேன். அதற்காக ஒருவரை துணைக்கு அழைக்க முடியுமா?” என்று கேட்டேன். “என்ன இருந்தாலும் பெண் பிள்ளை…” என்று இழுப்பார்கள். ஆக மொத்தத்தில் பெண்களுக்கு வீட்டிலும் சரி வெளியிலும் சரி, விரும்பிய படி விரும்பிய நேரத்தில் உணவு உண்பதற்கான முழு சுதந்திரம் கிடையாது.
இது போதாது என, ‘உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு’ என்று ஔவையாரும் சொல்லி வைத்து விட்டார். உடல் பருமன் பற்றி, அதுவும் குறிப்பாக பெண்கள் சற்று பருமனாக இருந்தால், அதை சுட்டிக்காட்டியும் விமர்சித்தும் பேசுவார்கள். ‘அறிவுரை’ என்ற பெயரில் பொது வெளியில் ஒருவரின் உடல் எடை பற்றிய விமர்சனம் அவசியமா?
உண்மையான கரிசனையும் அக்கறையும் இருப்பவர்கள், தனிப்பட்ட ரீதியில் தொடர்புகொண்டு பேசுவதோடு தனித்துவமான உடல் நிலை பற்றி தெரிந்து கொள்வார்கள். அது வேறு, ஆனால் சபை பண்பாடு இன்றி, குறிப்பாக பெண்களின் உடல் பருமன் பற்றி பேசுவது தேவையற்ற ஆணி!
பொதுவிலே பெண்கள் ஆண்களை விட எடை இழப்பது கடினம். மருத்துவ அறிவியல் கூறுவது – பெண்களின் தசை அடர்த்தி (muscle mass) குறைவாக இருக்கும் பட்சத்தில், உடல் கொழுப்புக்களும் அதிகமாக இருக்கும். இதனால் வளர்சிதை மாற்று வீதம் (metabolic rate )ஆண்களை விட குறைவாக இருக்கும். அதாவது உடல் கலோரிகள் செலவிடப்படுவது ஆண்களைவிட பெண்களுக்குக் குறைவாக காணப்படுகிறது.
கர்ப்பகாலமும் (Pregnancy), பெரிமெனோபாஸ் (Perimenopause) மற்றும் மெனோபாஸ் (Menopause) போன்ற உடல்நிலை மாற்றங்களால் பெண்களின் உடலில் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படுகின்றன. இது ஒவ்வொரு பெண்ணுக்கும் வேறுபடும். எல்லா பெண்களின் உடல்வாகும் ஒரே மாதிரியானது இல்லை. பரம்பரைக் கூறுகள், தனிப்பட்ட வாழ்வில் ஏற்படும் மன அழுத்தங்கள், உடல்வாகு என்று பல விடயங்களால் ஒவ்வொரு பெண்ணின் உடல் எடை இழக்கும் தன்மை வேறுபடும்.
ஆரோக்கியமான உணவு, ஊட்டச்சத்து, உடற்பயிற்சி போன்றவை உடல் பருமனை குறைக்க ஏதுவாக இருந்தாலும், எல்லா பெண்களுக்கும் அது கைகொடுப்பதில்லை. குறைந்தபட்சம் குறிக்கப்பட்ட கால எல்லை அல்லது வயது எல்லைகளில் உடல் பருமனை கட்டுப்படுத்துவது கடினமானதாகத்தான் இருக்கும் .
உடல்நலனுடன் (Healthy) இருப்பதும் உடற்கட்டுடன் (Fit) இருப்பதும் ஒன்றுதான் என்று பெரும்பாலான மக்கள் நம்புகிறார்கள். உண்மையில், அவை உடல் இருப்பின் இரு வேறு தனி நிலைகள். நீங்கள் உடற்கட்டுடன் இருக்கலாம், அதனால் நீங்கள் மிகவும் ஆரோக்கியமாக இருப்பதாகக் கொள்ள முடியாது. நீங்கள் மிகவும் ஆரோக்கியமாக இருக்கலாம், ஆயினும் நீங்கள் உடற்கட்டுடன் இருக்கிறீர்கள் என கூறிவிட முடியாது. நல்ல உடல்நலனுடனுடனும் அதே வேளை உடற்கட்டுடனும் (Being healthy and Being Fit) என்ற சமநிலையைப் பெற முயற்சிப்பது நம் லட்சியங்களாக இருப்பினும், அது கடினமான ஒரு லட்சியப்பயணம் என்றுதான் நான் சொல்லுவேன்.
நல்ல உடல்நலனுடன் இருத்தல் ( Being Healthy) என்பது உலக சுகாதார அமைப்பால் முழுமையான உடல், மன மற்றும் சமூக நல்வாழ்வின் நிலை என வரையறுக்கப்பட்டுள்ளது. நோய் இல்லாமை, நீண்ட ஆயுள், வாழ்க்கைத் தரம், வலியிலிருந்து விடுதலை, நோய் எதிர்ப்பு சக்தி போன்றவை இதில் அடங்கும். மனநலம் பேணுவது என்பது இங்கு முக்கியமாகும். மறுபுறம், உடற்கட்டு (fitness) என்பது, உடல் செயல்பாடுகளைச் செய்யும் திறனுடன் தொடர்புடையது. உடற்கட்டு பல கூறுகளால் ஆனது. Stamina என்று சொல்லப்படும் உடலின் ஆற்றல் பயன்பாடு, தசை வலிமை, மூட்டுகளின் இயங்குதன்மை, உடல்சமநிலை, ஒரு வேலையை செய்வதற்கான வேகம் மற்றும் அதற்காக பிரயோகிக்கப்படும் விசை, அசைவுகளை குறிப்பிட்ட வகையில் கட்டுபடுத்தும் தன்மை ஆகிய விடயங்கள் உடல்தகுதியை தீர்மானிக்கின்றன.
ஆக மொத்ததில் தீவிரமான உடற்பயிற்சிகள் செய்து உடல் எடையை சீராக தக்க வைத்து பேணும் ஒருவர், இதய நோயாளியாகவோ அல்லது வேறு ஏதும் நோயின் தாக்கதிற்குட்பட்டவராகவும் இருக்கக்கூடும். இதற்கு மாறாக ஒருவர் சற்று பருமனாக இருக்கலாம், ஆனால் வழமையாக வரும் நீரிழிவு, இரத்த அழுத்தம், மாரடைப்பு, சிறுநீரக நோய்கள் என்று இல்லாமல் ஆரோக்கியமாக இருப்பார்கள்.
நல்ல உணவு, மன நலனைத் தரும். ஆரோக்கியமான மனநலம் தன்னையும் தன்னை சுற்றி இருப்பவர்களையும் மகிழ்வாக வைத்திருக்கும். குழந்தைகளையும் பெற்றெடுத்து, சுமத்தப்பட்ட வீட்டு வேலைகளையும் செய்து, உடல் களைக்கும் பெண்ணுக்கு வலிமை தரும் சத்துணவு அதிகம் தேவையில்லையா? என்ன வகையான உணவு உண்கிறோம், மாப்பொருளும் புரதமும் காய்கறிகளும் சரியான விகிதத்தில் எடுத்துக் கொள்கிறோமா என்ற கவனத்தை செயற்படுத்த, வீட்டுப் பணி செய்யும் பெண்களுக்கு போதியளவு நேரம் தேவை. சமையல் வேலைகளில் மட்டுமல்ல, உணவு தயாரிப்புக்கு தேவையான பாத்திரங்கள், மளிகை பொருள்கள், காய்கள், பழங்கள் என்று சகல பொருள்களை சந்தையில் வாங்குவது, வீட்டில் பத்திரப்படுத்துவது, காபி தூள் முதல் பால்மா வரை தீர்ந்து விடுவதற்கு முன்பே நேரத்துடன் வாங்கி வைப்பது என்று பெரும்பாலும் பெண்களே நினைவு வைத்துச் செய்கிறார்கள். ஆண்கள் சந்தைக்குச் செல்வதில்லையா என்று நீங்கள் கேட்கலாம், ஆமாம் போகிறார்கள்தான். ஆனால் வாங்க வேண்டிய பொருள்களுக்கான பட்டியலை தயாரிப்பது பெண்கள்தான்.
வீட்டில் இருப்பு முகாமைத்துவம் (Stock Management) பண்ணுவது பெண்களே! தினசரி மூன்று வேளைக்கும் என்ன சமைப்பது, அதற்கு தேவையான பொருள்கள் சேகரிப்பது, திட்டமிடுவது என்று சதா சிந்தித்து கொண்டே இருப்பார்கள். இவர்களின் நேரமும் மூளைகளின் உழைப்பும் கணக்கில் எடுக்கப்படுகிறதா? இதைத்தான் எமோஷனல் உழைப்பு (Emotional Labour) என்று கூறுவார்கள்.
1980களிலிருந்து சமூகவியலாளர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த சொல், ஊதியமற்ற வேலைகளின் பகிர்தலின் சமமின்மை பற்றி விவரிப்பதற்காக பெண்ணிய பொருளாதார வல்லுநர்களால் (Feminist economists) பயன்படுத்தப்பட்டது. இது பற்றி தொடர்ந்து பேசலாம் தோழமைகளே…
படைப்பாளர்
அஞ்சனா
பத்திரிகைத் துறையில் பட்டயப் படிப்பு முடித்து ஊடகவியலாளராக இலங்கையிலும், இங்கிலாந்து சட்டத் துறையிலும் பணியாற்றியுள்ளார். தற்போது கணக்கியல் துறையில் பணியாற்றிவரும் இவர், MSc. Public Policy பயின்று வருகிறார். லண்டனில் புத்தக விமர்சனங்கள் மற்றும் பெண்ணிய செயற்பாடுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்.
சிறப்பு 💐
👍🙂 nice