என்னை மறந்து, எல்லாம் மறந்து ஒரு தொலைதூரப் பயணம். ‘நான் இல்லை என்றால் என் குடும்பம் இல்லை’ என்ற அகந்தை துறந்து, ஒரு தொலைதூர பயணம்.

அப்படி என்ன பயணத்தில் இருக்கிறது? பயணத்தில்தான் நாம் நம்மைப் பற்றி நாம் நினைத்துப் பார்க்க ஒரு இடம் கிடைக்கிறது. எனக்கு உலக அதிசயங்களை நேரில் பார்க்க ஆசை. “அதில் என்ன ஆசை உனக்கு?” என்று கேட்டால், “பார்த்தால் மட்டும்தானே அதில் உள்ள அதிசயம் புரியும் நமக்கு?” என்பதே என் பதில்.

முதல் முறை தாஜ்மஹாலை நேரில் பார்த்த போதுதான் புரிந்தது, அது எத்தனை அழகானது என்று.

பயணம் என்பது நாம் பார்க்கும் மனிதர்கள், அவர்களின் சமூகம், வாழ்வியல், கலை, கலாசாரம் என்று பல தரப்பட்ட மக்களை பற்றிய ஒரு புரிதல், ஒரு தேடல். சமூக அக்கறை கொண்டு செல்லும் பயணம் வேறு, சுய அக்கறை கொண்டு செல்லும் பயணம் வேறு. இவ்வாறான இரு வகைப் பயணங்களுமே அதிகம் தேவைப்படுகின்றது, குறிப்பாக பெண்களுக்கு.

வேலைக்குச் செல்லும் பெண்கள், வீட்டில் இருக்கும் பெண்கள் இருவருமே ஓரு வட்டத்திற்குள்தான் வாழ்ந்து வருகின்றனர். மனதுக்கு சிறு மாற்றம் தேவைப்படும்போதெல்லாம் பெண்கள் சிறு பயணமாவது சென்று வர வேண்டும். வாகனங்களை ஓட்டும் பெண்களுக்கு பயணிப்பது எளிது. நீங்கள் நினைத்தால் எங்கு வேண்டுமென்றாலும் எளிதாகச் செல்ல முடியும். வாகனம் ஓட்டத் தெரியாத பெண்கள் பொது அல்லது தனியார் போக்குவரத்து சேவைகளை துணிவுடன் பயன்படுத்திக் கொள்ளலாம், விரைவில் வாகனங்களையும் ஓட்ட பழகிக் கொள்ளலாம். அது நம் பயணத்துக்கு உதவும்.

பயணத்தில் எத்தனை ஆனந்தம்! தனியாக செல்லும் ஒரு பேருந்து பயணம், தொலைதூரம் செல்லும் ஒரு இரயில் பயணம், மேகத்தை துளைத்து செல்லும் ஒரு விமானப் பயணம், கடலையே கலக்கும் ஒரு கப்பல் பயணம். எல்லா பயணங்களும் ஒரு கதை சொல்லும், நான் சென்ற ஒரு அழகான பயணம் இன்று நினைத்தாலும் இனிமை பொங்கும் ஒரு டால்பின் பயணம்.

ஒரு நீண்ட இரயில் பயணத்துக்கு பிறகு, ஜெகன்நாதர் தரிசனம் பார்த்து,  ஒடிசா கடற்கரையில் மணலில் நடந்து, கடல் நீரில் நனைந்து, கடற்கரையை ஒட்டிய கடைகளை கால் வலிக்கக் கடந்தோம். இருளைக் கழித்து, கிழக்கு சூரியனுடம் சேர்ந்து விழித்து, ஆவல் மிகுதியால் விரைவாக சிலிகா ஏரியை நோக்கி நகர்ந்தோம். பூரியில் இருந்து சிலிகா ஏரிக்கு பயண நேரம் மூன்று மணி நேரம் ஆகும். விரைவாகச் சென்றால் அதிகப் படியான டால்பின்களை பார்க்க முடியும் என்று ஓட்டுனர் சொன்ன காரணத்தால், விரைவாக காரில் சென்றோம்.

பின் இருக்கையில் நானும் என் இணையரும் அமர்ந்துக்  கொண்டோம். ஆசிரியர் பணி மறந்து அவருக்கும், வீட்டு வாசலைத் தாண்டிய எனக்கும் மூன்று மணி நேர பயணம். எதை பார்த்தாலும் அழகாய்த் தோன்றும் மனநிலையில், பார்ப்பது எல்லாம் அழகாய் இருந்தால் எப்படி இருக்கும்? ஒடிசா அத்தனை அழகு.  

செல்லும் வழியெல்லாம் அழகு, பல கிராமங்களைக் கடக்கும்போது தாண்டிச்செல்லவே மனம் இல்லை. பார்க்கும் திசை எல்லாம் பச்சைப் பசுமை; அதைத்தாண்டி தூரத்தில் கடலின் நீலம். காட்சியில் கரைந்து போயின கண்கள். பேசிக் கொள்ள எதுவும் இல்லை இருவருக்கும். மனம் அமைதியில் ஆழ்ந்தது. இதற்குத்தான் ஒரு பயணம் தேவைப்பட்டது.

“சிலிகா ஏரிக்கு போக இன்னும் ஐங்து கிலோமீட்டர்தான் இருக்கு” என்று ஓட்டுனர் சொன்னதும், உற்சாகம் மிகுந்தது. “எப்படியாவது டால்பினைப் பார்க்கணும், எனக்கு அத மட்டும் பார்க்கணும்” என்று அவர் கூறும் போது அத்தனை ஆர்வம் கண்களில் தெரிந்தது.

சிலிகா ஏரியை நெருங்க நெருங்க, பறவைகளின் ஓசை காதுகளுக்கு இனிமை சேர்த்தது. கடலும், ஏரியும் மிக அருகில் தெரிந்தன. ஓட்டுனர் படகு சவாரிக்கு செல்லும் இடத்தில் நிறுத்தினார். படகில் ஒரு மணி நேரம் பயணித்தால் மட்டுமே டால்பின்களைப் பார்க்க முடியும், திரும்பி வருவதற்கும் ஒரு மணி நேரம் தேவை. இரண்டு மணி நேர படகுப் பயணம் என்பதால் தேநீர் குடித்துவிட்டு படகை நோக்கிச் சென்றோம்.

வழியில் தொப்பிக் கடை ஒன்றில் கடைக்காரர் வழிமறித்து தொப்பியை நீட்டினார், திரும்ப வரும்போது ஐந்து ரூபாய் தந்தால் போதும் என்றார். பிறகுதான் புரிந்தது, இரண்டு மணி நேரத்துக்கு மட்டும் வாடகை தொப்பி!

சிலரின் சேவை சிறியதாக இருந்தாலும், தக்க சமயத்தில் செய்யும் உதவி சாலச் சிறந்தது. ஆம், சூரியனின் கடுமையான வெப்பத்தில் இருந்து எங்கள் தலையைக் காத்தது ஐந்து ரூபாய் வாடகைத் தொப்பி.

ஆடிக்கொண்டு இருந்த படகை, ஒரு கையில் பிடித்துக் கொண்டு, நானும் ஆடிக்கொண்டே, மறுகையால் இணையரின் கையை பற்றிக் கொண்டு படகில் ஏறினேன். படகில் சன்னல் இல்லை, இருந்தாலும் நீருக்கு அருகில் இருந்தது என்னுடைய இருக்கைதான்… ஏரிநீரில் விளையாடும் வாய்ப்பு! எங்கள் படகு, நீரை விலக்கி, டால்பினைத் தேடிப் பயணித்தது.

https://www.deccanchronicle.com/nation/in-other-news/310823/aqua-life-hit-by-unregulated-movement-of-mechanized-boats-in-chilika-l.html

சிலிகா ஏரி, ஆசியாவின் மிகப்பெரிய உவர்நீர் ஏரி; உலகின் இரண்டாவது மிகப்பெரிய ஏரி. இந்த ஏரியில்  பல தீவுகள் உள்ளன. இங்கு அழகிய பூச்செடிகள், பறவைகள், நீர்வாழ் உயிரினங்கள் நிறைந்துள்ளன. சிலிகா ஏரி  மிக சிறந்த மீன்பிடி தளமாகவும் இருப்பதால், பல மீனவ குடும்பங்களுக்கு வாழ்வாதரமாகவும் உள்ளது. மேலும் ஐராவதி டால்பின்கள், பாட்டில்நோஸ் டால்பின்கள் இங்கு வாழ்ந்து வருவதால், டால்பின் சுற்றுலா உள்ளூர்வாசிகளுக்கு மாற்று வருமானமாக உள்ளது.

சிலிகா ஏரியின் அழகு எங்களை ரசிக்க வைத்தது. படகு நீரை விலக்கும் சத்தமும், படகின் எஞ்சின் சத்தமும் எங்களின் சிரிப்பு சத்ததை விடக் குறைவாகவே இருந்தது. மனது லேசானது போல் இருந்தது. இரண்டு மாறுப்பட்ட  வண்ணங்களில் ஏரி நீர் இருந்தது. படகு செல்லச் செல்ல கரை மறைந்தது, கடல் அருகில் வந்தது. திரும்பும் பக்கம் எல்லாம் தண்ணீர். தூரத்தில் தெரியும் பச்சைப் பசுமையான தீவுகள், அவ்வபோது பறக்கும் கொக்கு, அங்கங்கே குதித்து துள்ளும் மீன்கள், சிறு சிறு துளியாய் என்னை நனைத்துச் செல்லும் ஏரிநீர். இயற்கையின் மடியில் மயங்கிய தருணங்கள். பயணத்தில் எத்தனை இன்பம்.

ஒரு மணி நேரப் பயணம் முடிந்தது. படகு ஒரு இடத்தில் நிறுத்தப்பட்டது. நாங்கள் காத்து இருந்தோம். எங்களைச் சுற்றி நீர், எந்த பக்கம் டால்பின் வரும்… படகு ஒட்டுனர் “இதோ” என்று கைகாட்டும் இடத்தில், நாங்கள் பார்க்கும்போது டால்பின் இல்லை. இரண்டு, மூன்று முறை ஏமாற்றம். கண்களை இமைக்காமல் சுற்றி சுற்றிப் பார்த்தோம்.

என்னவர் பார்த்துவிட்டார், “இங்க பாருமா, அங்க பாருமா… இதோ வருது, என்னோட கைக்கு நேர பாரு, அதோ, இதோ”, என்று சிறு பிள்ளை போன்று அமைதியான இடத்தில் அவர் சத்தமாகக் கத்தும்போது, ஆண், முனைவர், கல்லூரி ஆசிரியர்,  என்ற முகமூடிகள் உடைந்து, உள்ளார்ந்த மகிழ்ச்சி பொங்கியது, அவர் விழிகளில் தெரிந்தது. சிறு பயணம் மனிதனை ஒரு நிமிடம் தன்னிலை மறக்கச் செய்கின்றது.

என் கண்கள் டால்பினைத் தேடின. மூக்கும், வாலும் நீருக்கு அடியில், வழு வழுவென உடல் பகுதி மட்டும் மேலே தெரிந்தது. கண்களை இமைக்காமல் பார்த்தேன். இப்போது மூக்கு வெளியில், மீண்டும் உடல், ஒரு துள்ளல். டால்பின்! நானும் பார்த்து விட்டேன். “இங்க பாரு மா நம்ம படகு பக்கத்துல துள்ளுது”. நான் பார்க்கும் முன்பே மறைந்தது. ஆனால் மீண்டும் எனக்காக வந்ததுபோல் வெளியே மூக்கை நீட்டியது. எத்தனை அழகு! ஏரி, கடல், இரண்டும் இணையும் இடம். அதில் நாங்கள் பார்க்க வந்த டால்பின்கள். கூட்டம், கூட்டமாக எத்தனை சீராக நீந்திச் செல்லும் டால்பின்கள். கையில் அள்ளி கொஞ்ச வேண்டும் போல் இருந்தது… நீரில் பாய்ந்து டால்பின்களுடன் நீந்த வேண்டும்போல் தோன்றியது. அத்தனை அழகு.

டால்பின்களைப் பார்த்த மகிழ்ச்சியுடன், விடை பெற முடியாமல் விடை பெற்று படகைத் திருப்பினோம். வழியில் ஒரு தீவில் நிறுத்தி, சிவப்பு நண்டுகள், சிப்பி, சில நீல, சிவப்பு கற்களை காண்பித்த பிறகு, கரையில் படகை நிறுத்தினார் ஓட்டுனர். நாங்கள் மீண்டும் காரில் ஏறி பூரி இரயில் நிலையத்தை அடைந்தோம்.

டால்பின்களைத் தேடித் தொடங்கிய சிறு பயணம், எங்களை மகிழவைத்தது. வணிகமயமான இந்த உலகில், இயந்திர வாழ்க்கை வாழும் நாம் அவ்வபோது மேற்கொள்ளும் இவ்வாறான பயணங்கள் நம்மை உயிர்ப்பிக்கும். எங்களின் இந்த பயணம் எங்களைக் குழந்தைகளாகவே மாற்றியது.

 படைப்பாளர்:

எம்.கே. வனிதா

உயிர்வேதியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். பல ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்கிறார். தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராகப் பணியாற்றியிருக்கிறார். பட்டிமன்றங்களிலும் பேசி வருகிறார். ஹெர் ஸ்டோரி எழுத்தாளர்.