உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில், மக்களாட்சி முறையில் நடைபெறும் தேர்தலில் மக்கள் தொகையில் சரிபாதி இருக்கக் கூடிய பெண்களின் அரசியல் பங்கேற்பும் சம அளவில் இருக்க வேண்டும். ஆனால், இந்தியா சுதந்திரம் அடைந்து 78 ஆண்டுகள் கடந்தும் அரசியலில் கணிசமான அளவைக்கூடப் பெண்களால் இன்னும் பெற முடியவில்லை. 2023 செப்டம்பர் 18 முதல் 22ஆம் தேதிவரை இந்திய நாடாளுமன்றத்தில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தொடரில் மக்களவையிலும் மாநில சட்டப்பேரவைகளிலும் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா 27 ஆண்டுகளுக்குப் பிறகு நிறைவேறியது. பெரும்பான்மையான உறுப்பினர்கள், கட்சிகள் இந்த மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்து வாக்களித்த நிலையில் மஜ்லிஸ் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி, இம்தியாஸ் ஜலீல் ஆகியோர் எதிராக வாக்களித்தது குறிப்பிடத்தக்கது.

அதற்கான காரணங்களாக ஓவைசி நாடாளுமன்றத்தில் பேசிய விஷயங்கள் முக்கியத்துவம் பெறுகிறது. “இந்தியாவில் பிற்படுத்தப்பட்ட மக்கள் 50 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளனர். ஆனால், மக்களவையில் அவர்களின் பிரதிநிதித்துவம் 22% மட்டுமே. இந்தியாவில் 14 சதவீதமாக உள்ள முஸ்லிம் மக்கள் தொகையில் பெண்கள் 7 சதவீதம். அவர்களின் மக்களவை பிரதிநிதித்துவம் 0.7% மட்டுமே. மக்களவை மற்றும் சட்டமன்றங்களில் பெண்களுக்குப் பிரதிநிதித்துவம் வழங்குவதை நோக்கமாகக் கொண்ட இந்த மசோதாவில் பிரதிநிதித்துவம் குறைவாக உள்ள பிற்படுத்தப்பட்ட மற்றும் முஸ்லிம் பெண்களுக்கான இட ஒதுக்கீடு வழங்காதது ஏன் என்கிற கேள்வியையும், இந்த அரசு ’சாவர்ண’ பெண்களின் பிரதிநிதித்துவத்தை உயர்த்துவதற்கே முயற்சிக்கிறது” என்றும் விமர்சித்தார்.

1992ஆம் ஆண்டு பி.வி.நரசிம்மராவ் ஆட்சியில் அரசியல் சாசனத்தின் 73 மற்றும் 74வது திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் பெண்களுக்கு உள்ளாட்சித் தேர்தல்களில் மூன்றில் ஒரு பங்கு இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டது. மேலும் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினப் பெண்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டது.1993ஆம் ஆண்டு இந்தச் சட்டம் அமலுக்கு வந்தது. 1994 ஏப்ரல் 24ஆம் தேதிக்குள் பஞ்சாயத்து ராஜ்ஜியம் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்றும் அதனைத் தொடர்ந்து தேர்தல் நடத்த வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து முதல் மாநிலமாகத் தேர்தலை நடத்தியது மத்தியப் பிரதேசம். அன்றைக்குத் தமிழகத்தின் ஆளும் கட்சியாக இருந்த அதிமுக அவசர அவசரமாகச் சட்டத்தை இயற்றியது. ஆனால் தேர்தலை நடத்தவில்லை. இதனால் அனைத்துக் கட்சிகளின் தேர்தல் அறிக்கையிலும் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என்கிற வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. 1996ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்ததும் தேர்தலை நடத்தியது. 

அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை உயர்த்திய நவீன் பட்நாயக், இந்தியாவிற்கும் திராவிட கட்சிகளுக்கும் முன்மாதிரியாகத் திகழ்ந்தது அரசியல் நடவடிக்கை. பிஜூ ஜனதா கட்சியின் தலைவர் நவீன் பட்நாயக் முதல் முறையாக 1992இல் உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீட்டை வழங்கினார். இதில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினப் பெண்களுக்கும் உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டது. ’தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் சமூக நிலையை  மேம்படுத்தும் வரை வளர்ச்சிக்கு எந்த ஒரு மதிப்பும் இல்லை’ என்று ஒரு முறைப் பெண்களின் முன்னேற்றம் குறித்து நவீன் பட்நாயக் கூறினார். 

இந்தியாவில் உள்ளாட்சித் தேர்தல்களில் பெண்களுக்காக 33 சதவீதமாக இருந்த இட ஒதுக்கீட்டை 2011ஆம் ஆண்டு முதல்முறையாக 50 சதவீதமாக உயர்த்தி மீண்டும் இந்தியாவிற்கு முன்மாதிரியான சட்டத்தைக் கொண்டுவந்தது நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம்.  தற்போது பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் தகவலின் படி 20 மாநிலங்கள் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை 33 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக உயர்த்தியுள்ளது. தமிழகத்தில் 2016இல்தான் பெண்களுக்கு உள்ளாட்சித் தேர்தலில் 50 சதவீத இட ஒதுக்கீடு கொண்டுவரப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதாதளம் 2018ஆம் ஆண்டு ஒடிசா சட்டமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் முன்மாதிரியான சட்டத்தை இயற்றியது. இது 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கான உத்தியாகவே எதிர்க்கட்சிகளால் கூறப்பட்டது. ஆனால் அத்தகைய உத்தியை மற்ற மாநில அரசியல் கட்சிகளால் ஏன் செய்ய முடியவில்லை என்பது கேள்வியாகவே இருக்கிறது.

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல்களில் 1996இல் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்ட போதும்,  2016இல் 50 சதவீதமாக உயர்த்திய போதும் இது அரசியல் நோக்கத்திற்காக, பெண்களின் வாக்கு வங்கியை மையப்படுத்திக் கொண்டு வரப்பட்டது என இரு திராவிட கட்சிகளும் வார்த்தை மோதலில் ஈடுபட்டன. பின்னர் தங்களது ஆட்சியில்தான் கொண்டுவரப்பட்டது என்று தம்பட்டமும் அடித்துக்கொண்டன. பெண்களின் வாக்குகளைக் கவர நலத்திட்டங்களை மட்டுமே மாறி மாறி அறிவித்துக்கொண்ட கட்சிகள் பெண்களை அதிகாரமிக்க சட்டமியற்றும் பொறுப்புகளில் அமரவைப்பதில் மட்டும் ஏனோ சுணக்கம் காட்டுகின்றன.  

கிடப்பிலிருந்து எடுக்கப்பட்ட 33% இட ஒதுக்கீடு மசோதா: 

சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா 26 வருடங்களுக்குப் பின்னரே கொண்டுவரப்பட்டிருக்கிறது. 2023ஆம் ஆண்டு புதிய நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடரில்  பெரும்பான்மையான ஆதரவுடன் நிறைவேறியது. முதல் முறையாக இந்த மசோதா 1996ஆம் ஆண்டு செப்டம்பர் 12 அன்று தேவகெளடா அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது.  சரத் யாதவ் போன்ற சில நாடாளுமன்ற உறுப்பினர்களின் எதிர்ப்பினால்  இந்த மசோதா 1996ஆம் ஆண்டு டிசம்பர் 9 அன்று கீதா முகர்ஜி தலைமையிலான நாடாளுமன்ற தேர்வுக் குழுவுக்கு மசோதா அனுப்பப்பட்டது. அந்தக் குழுவின் சில பரிந்துரைகள் மட்டும் இந்த மசோதாவில் சேர்க்கப்பட்டன. மக்களவை கலைக்கப்பட்டதால் இந்த மசோதா காலாவதியானது. மீண்டும் 1998ஆம் ஆண்டு அடல் பிகாரி வாஜ்பாய் பிரதமராக இருந்த போது மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டது. போதிய ஆதரவு இல்லாததால் காலாவதியானது. மீண்டும் 1999, 2002, 2003 ஆகிய ஆண்டுகளில் அறிமுகப்படுத்தப்பட்டும் மசோதா நிறைவேறாமல் போனது.

இதையடுத்து 2008 ஆம் ஆண்டு இந்த மசோதா நாடாளுமன்ற நிலைக்குழுவுக்குப் பரிந்துரைக்கப்பட்டது. பின்னர் மன்மோகன்சிங்  அமைச்சரவை 2010ஆம் ஆண்டு பிப்ரவரி 25ம் தேதி மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தது.  எனவே மார்ச் 9ஆம் தேதி மாநிலங்களவையில் நிறைவேறியது. ஆனால், மக்களவையில் நிறைவேறாமல் போனது. 

மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு பாஜகவின் தேர்தல் வாக்குறுதியாக இருந்தது. 2014ஆம் ஆண்டிலிருந்து ஆட்சியில் இருந்த மோடி தலைமையிலான அரசு மசோதா தொடர்பாக ஒரு கல்லையும் நகர்த்துவதாக இல்லை. ஆனால் காஷ்மீர் சிறப்புரிமை ரத்து, ராமர் கோயில் கட்டுவது, CAA போன்றவற்றில் அக்கறை காட்டிய அரசுக்கு மகளிர் இட ஒதுக்கீடு மசோதா  மறந்தே போனது. திடீர் நினைவு வந்தது போல புதிய நாடாளுமன்றத்தின் முதல் மசோதாவை நிறைவேற்றியது. ஆனால் அதை அமல்படுத்துவதற்கான காலம் சொல்லப்படவில்லை. 2024 மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு எல்லை நிர்ணயம் செய்யப்பட்ட பிறகே இந்த மசோதா நிறைவேற்றப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறி இருக்கிறார்.   

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா விவாதத்திற்கு வந்த போது ’பாதி முடியைக் கத்தரித்துக்கொண்ட பெண்கள் (bob cut) எங்களது பிரச்னைகளைப் பேசுவார்களா?’ என்று சரத் யாதவ் கேள்வி எழுப்பினார். அவை அப்போது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது. அத்தகைய எதிர்ப்பு எழுந்ததற்கான காரணங்களாகச் சொல்லப்பட்டவை, மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவில் உள் ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதே. இதே கருத்தை வலியுறுத்தி லாலு பிரசாத் யாதவ் போன்றோர் இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். சரத் யாதவின் பேச்சுக்குப் பல்வேறு எதிர்ப்புகள் எழுந்தன. இப்படியான வாதங்களால் இழுத்தடிக்கப்பட்டது மகளிர் இட ஒதுக்கீடு மசோதா. 

பெண்களின் பிரதிநிதித்துவம்

உலகின் சரிபாதி மக்கள் தொகை கொண்ட பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவம் இன்னும் கணிசமான எண்ணிக்கையை எட்டவில்லை. வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளில் பெண்களின் பிரதிநிதித்துவம் வரலாற்றுரீதியாக ஒடுக்கப்பட்ட நிலையிலேயே உள்ளது. 19ஆம் நூற்றாண்டில் பெண்ணிய, சீர்திருத்த இயக்கங்களால் பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவம் குறித்த குரல் எழுப்பப்பட்டது. பெண்களின் அரசியல் வெளி குறித்த கேள்வி பண்பாட்டுத் தளங்களிலும் பிரதிநிதிகளின் எண்ணிக்கை குறித்த கேள்வி அரசியல் தளத்திலும் எழத் தொடங்கியது. 

இந்தியாவின் அண்டை நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவம் குறைந்த அளவிலேயே உள்ளது. முதல் நாடாளுமன்ற மக்களவையில்  5 சதவீதமாக இருந்த பெண்களின் பிரதிநிதித்துவம் 2019 மக்களவை தேர்தலில் 15 சதவீதமாக உயர்ந்தது. இதுவே அதிக பெண் உறுப்பினர்களைக் கொண்ட மக்களவையாக இருந்தது. ஆனால், தற்போதைய 2024ஆம் ஆண்டு 18வது மக்களவைத் தேர்தலில் பெண்களின் பிரதிநிதித்துவம் 13 சதவீதமாகக் குறைந்திருக்கிறது.

பெண்களின் அரசியல் பங்கேற்பில் கட்சிகளின் பங்கு முக்கியமானது. எனவே கட்சிகள் தங்களுடைய மொத்த வேட்பாளர் எண்ணிக்கையில் பெண்களுக்கு எவ்வளவு இடங்களை வழங்கி இருக்கிறது என்பதைக் கவனப்படுத்த வேண்டியிருக்கிறது. தேசியக் கட்சிகளான பாஜக, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அதிக பெண் வேட்பாளர்களை நிறுத்தியிருக்கின்றன. பாஜக மொத்தம் உள்ள 446 வேட்பாளர்களில் 69 பேர் பெண்கள், அதாவது 15.47 சதவீதம். இதில் வெற்றி பெண் வேட்பாளர்கள் 31. காங்கிரஸின் 328 வேட்பாளர்களில் 45பேர் பெண்கள் இது 13 சதவீதம். இதில் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் வேட்பாளர்கள் 13. தேசியக் கட்சிகளைவிட மாநிலக் கட்சிகளே அதிக பெண் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளன. தேசியக் கட்சிகள் 20 சதவீதத்துக்கும் குறைவான பெண்களை வேட்பாளர்களாக நிறுத்தியிருக்கின்றன.

கட்சிவாரியாகப் பெண்களின் பிரதித்துவம் 

நாம் தமிழர் கட்சி (50%), லோக் ஜனசக்தி கட்சி (ராம்விலாஸ்) (40%), நேஷனலிஸ்ட் காங்கிரஸ் கட்சி (40%), ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா (33%), பிஜு ஜனதா தளம் (33%), ராஷ்டிரிய ஜனதா தளம் (29%), திரிணாமுல் காங்கிரஸ் (25%), சமாஜ்வாடி (20%) போன்ற கட்சிகள் 18வது மக்களவை தேர்தலில் பெண்களுக்கு 20% அதிகமான இடங்களை 2024 மக்களவை தேர்தலில் வழங்கியிருக்கின்றன. 

கடந்த 2019 தேர்தலில் போட்டியிட்ட ஆண் வேட்பாளர்கள் 7,322, பெண் வேட்பாளர்கள் 726. இதில் வெற்றி பெற்ற பெண் வேட்பாளர்கள் 78. தற்போதைய 18வது மக்களவை தேர்தலில் போட்டியிட்ட 8,360 வேட்பாளர்களில், பெண் வேட்பாளர்கள் 796. இதில் மக்களவைக்குச் செல்லும் வாய்ப்பு பெற்றவர்கள் 73. அதாவது 13 சதவீதம். கடந்த தேர்தலைவிடக் குறைவான பிரதிநிதித்துவத்தையே பெண்கள் பெற்றிருக்கின்றனர். ஆனால், தேர்தலில் வேட்பாளர்களாகப் பெண்களின் பங்கேற்பு என்பது முதல் தேர்தலிலிருந்து அதிகரித்தே வந்திருக்கிறது. 1952இல் நடந்த முதல் மக்களவை தேர்தலில் 43ஆக இருந்த பெண் வேட்பாளரின் எண்ணிக்கை 2024 தேர்தலில் 796ஆக உயர்ந்திருக்கிறது. இப்படியாக அதிகரித்த பெண்களின் எண்ணிக்கை 1998, 1999 தேர்தலில் சரிவைச் சந்தித்தது.

தமிழகத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம்

18ஆவது மக்களவைக்குத் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் போட்டியிட்ட 950 வேட்பாளர்களில் ஆண் வேட்பாளர்கள் 874, பெண் வேட்பாளர்கள் 76. கடந்த மக்களவை தேர்தலில் இந்த எண்ணிக்கை 67. இதுவரை நடந்த 18 மக்களவை தேர்தலில் தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மொத்த மக்களவை பெண் உறுப்பினர்கள் 22. இதில் தலித் பெண் பிரதிநிதிகள் மொத்தம் 7.

தமிழகச் சட்டமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் என்பது 5 சதவீதம் மட்டுமே. தமிழக மக்கள் தொகையில் சரிபாதி எண்ணிக்கையில் இருக்கக்கூடிய பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவமானது மிகக் குறைந்த அளவில் இருப்பது சமூக நீதியைப் பேசி வரும் திராவிட கட்சிகளின் தோல்வியாகவே பார்க்க முடிகிறது. தற்போதைய சட்டமன்றத்தில் 12 பெண் பிரதிநிதிகளே உள்ளனர். 1991ஆம் ஆண்டு அமைந்த 10வது சட்டமன்றமே அதிக பெண் உறுப்பினர்களைக் (32) கொண்ட சட்டமன்றமாக உள்ளது, அதாவது (13.6%). 1952 முதல் மக்களவை தேர்தலில் 20 ஆக இருந்த  தமிழகப் பெண் வேட்பாளர்களின் எண்ணிக்கை 2021 சட்டமன்றத் தேர்தலில் 413 ஆக உயர்ந்திருக்கிறது. தமிழகத்தில் ஆண் (3,08,38,473) வாக்காளர்களைக் காட்டிலும் 10 லட்சம் அதிகரித்து, பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை (3,18,28,727) ஆக இருக்கிறது. வாக்காளர்களாகவும் வேட்பாளர்களாகவும் உயர்ந்த பெண்களின் எண்ணிக்கை. சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றம் பிரதிநிதித்துவத்தில் மட்டும் குறைந்த அளவிலேயே உள்ளது.

இந்தியாவில் சட்டமியற்றும் அதிகாரமிக்கப் பொறுப்புகளில் பெண்களின் எண்ணிக்கை மிகக் குறைந்த அளவில் உள்ளது. அதன் எண்ணிக்கை உயர்த்தப்பட வேண்டும் என்பது அரசியலில் பாலினச் சமத்துவத்திற்கான தேவையை உணர்த்துகிறது. பாலினச் சமத்துவத்தை உயர்த்துவதற்குச் சட்டமன்றம், நாடாளுமன்றம் மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களில் சட்டரீதியாக இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதை அனைவரும் வலியுறுத்தி வருகின்றனர். எனவே,  அரசியலில் பெண்களின் சமநிலையைக் கொண்டுவர முதலில் பண்பாட்டு ரீதியில் பெண்களை ஒடுக்கும் கருத்துநிலைகளைத் தகர்க்க வேண்டும். இல்லையெனில் நீதியரசர் சந்துருவின் சாதிய வன்முறைகளைத் தடுப்பதற்கான வழிகாட்டுதல் அமைப்புக்கு ’இட ஒதுக்கீட்டுக்கு’ எதிராக அனுப்பப்பட்ட கல்லூரி மாணவர்களின் கடிதங்களை ஒத்ததாகவே அரசியலில் பெண்களுக்கான இட ஒதுக்கீடும் பார்க்கப்படும்.

எனவே முதலில் பெண்களைப் பண்பாட்டு ரீதியாக ஒடுக்கும் கருத்துநிலைக்கு எதிராக, ’பெண்கள் சக்தி வந்தனம் மசோதா என்று அழைக்கின்றனர். முதலில் எங்களுக்கு வந்தனம் தெரிவிப்பதை நிறுத்துங்கள். நாங்கள் அதை ஒருபோதும் விரும்பவில்லை. எங்களை வழிபட வேண்டும் என நாங்கள் விரும்பவில்லை. எங்களைத் தாயாகவோ சகோதரியாகவோ அழைக்க வேண்டாம். எங்களைச் சமமாக நடத்துங்கள் போதும். உங்களுக்கு உள்ள அதே உரிமை எங்களுக்கும் உள்ளது. இந்த நாடு எங்களுடையது. இந்த நாடாளுமன்றம் எங்களுடையது. இங்கு இருப்பதற்கு எங்களுக்குச் சம உரிமை உள்ளது’ என நாடாளுமன்றத்தில் கூறிய தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியின் குரல் கவனிக்கத்தக்கது.

இந்நிலையில் சச்சார் கமிட்டி சுட்டிக் காட்டியது போலப் பாலினம், கல்வி, பொருளாதாரம், மற்றும் அரசியல் எனப் பல்வேறு தளங்களில் பின்தங்கிய நிலையில் உள்ள இந்திய முஸ்லிம்கள் மற்றும் பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவமும் இங்கு முக்கியமாகக் கருத வேண்டியிருக்கிறது.

முஸ்லிம்களின் அரசியல் பிரதிநிதித்துவம்

2011ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்திய மக்கள் தொகையில் 14 சதவீதமாக இருக்கக்கூடிய முஸ்லிம்களின் அரசியல் பிரதிநிதித்துவம் என்பது மிகச் சொற்ப அளவிலேயே உள்ளது. 2024ஆம் ஆண்டு மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட மொத்த முஸ்லிம் பிரதிநிதிகள் 24 (4.4%). கடந்த மக்களவையில் இந்த எண்ணிக்கை 27(4.9%) ஆக இருந்தது. கடந்த தேர்தலைக் காட்டிலும் இந்தத் தேர்தலில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் சரிவையே சந்தித்துள்ளது. 24 உறுப்பினர்களில் 21 உறுப்பினர்கள் INDIA கூட்டணியிலிருந்து  சென்றிருக்கின்றனர். முஸ்லிம் பிரதிநிதிகளைக் கொண்ட கட்சிகள்: காங்கிரஸ் (7), திரிணாமுல் காங்கிரஸ் (5), சமாஜ்வாடி (4), முஸ்லிம் லீக் (3), J&K நேஷ்னல் காங்கிரஸ் (3), AIMEIM (1) மற்றும் சுயேட்சை(2).

தொடர்ந்து இரண்டு முறை ஆட்சியிலிருந்த பாஜக தனது 430 வேட்பாளர்களில் ஒரே ஒரு முஸ்லிம் வேட்பாளருக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கியிருக்கிறது. மேலும் மக்களவையில் ஒரு முஸ்லிம் உறுப்பினரும் இல்லாத கட்சியாக பாஜக இருக்கிறது. 1990களுக்குப் பிறகு பாஜகவின் எழுச்சியும், முஸ்லிம் பிரதிநிதிகளின் வீழ்ச்சியும் தற்செயலானதாக மட்டுமே பார்க்க முடியாது. 1980ஆம் ஆண்டு 7வது மக்களவையே முஸ்லிம் உறுப்பினர்களை (49) அதிகம் கொண்ட மக்களவையாக உள்ளது. இதுவரை முஸ்லிம் உறுப்பினர்களின் எண்ணிக்கை 10 சதவீதத்தைக்கூட எட்டியதில்லை. தற்போதைய மக்களவையில் சமாஜ்வாடி 11% உறுப்பினர்களையும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 17% முஸ்லிம் உறுப்பினர்களுக்கும் வாய்ப்பு வழங்கிருக்கிறது. முஸ்லிம்களின் மக்கள் தொகைக்கேற்ப அவர்களது பிரதிநிதித்துவம்  78ஆக இருக்க வேண்டும். ஆனால் தற்போதைய மக்களவையில் வெறும் (4.4%) மட்டுமே. 

தமிழகத்தில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம்

தமிழக மக்கள் தொகையில் 5 சதவீதமாக இருக்கக் கூடிய முஸ்லிம்களின் அரசியல் பிரதிநிதித்துவம் தொடர்ந்து சொற்ப எண்ணிக்கையிலேயே உள்ளது. 2021ஆம் ஆண்டு நடந்த தமிழகச் சட்டமன்றத்தில் முஸ்லிம் உறுப்பினர்களின் எண்ணிக்கை 8. திமுக (6), விசிக (1), காங்கிரஸ் (1). மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவஹிருல்லா மற்றும் பொதுச்செயலாளர் அப்துல் சமத் ஆகியோர் திமுகவின் சின்னத்தில் நின்று வெற்றி பெற்றனர். 1989ஆம் ஆண்டு நடைபெற்ற 9வது சட்டமன்றமே 11 முஸ்லிம் உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றமாக இருக்கிறது. இதையடுத்து 1996இல் (10). இதுவே அதிக முஸ்லிம் பிரதிநிதிகளைக் கொண்ட சட்டமன்றமாகும். தமிழகத்தில் உள்ள முஸ்லிம் மக்கள் தொகைக்கேற்ப அவர்களின் பிரதிநிதித்துவம் 14 முதல் 15வது இருக்க வேண்டும். அனைத்துத் தேர்தல்களிலும் கட்சி வேட்பாளர்களைக் காட்டிலும் சுயேட்சைகளாக நிற்கும் வேட்பாளர்களின் எண்ணிக்கையே அதிகம். 1970களில் இருந்த முஸ்லிம்களின் அரசியல் எழுச்சி சட்டமன்றத்தில் அவர்களுக்கான பிரதிநிதித்துவப்படுத்தியது. ஆனால் 1990களுக்கு பிறகு முஸ்லிம் அரசியல் கட்சிகளின் வலிமை குன்றத் தொடங்கியது. இதனால் அவர்களின் பிரதிநிதித்துவம் சரிவைச் சந்தித்தது. 

1971இல் முஸ்லிம் லீக் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் 6. ஆனால் தற்போதைய (2021) சட்டமன்றத்தில் அவர்களின் பிரதிநிதித்துவம் விழுங்கப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது. முஸ்லிம் சிறுபான்மையினரின் வாக்குகளை மாறி மாறி பெற்று வந்த திராவிடக் கட்சிகள், அவர்களின் பிரதிநிதித்துவத்தில் கவனம் செலுத்தி இருக்கிறதா என்கிற கேள்வியை எழுப்ப வேண்டி இருக்கிறது. ஏனெனில் 2019 மற்றும் 2024இல் நடந்த மக்களவை தேர்தலில் திமுக ஒரு முஸ்லிம் பிரதிநிதியையும் அனுப்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

ஆட்சி அதிகாரத்தில் பங்குபெற்ற முஸ்லிம் கட்சிகள் இதுவரை ஒரு முஸ்லிம் பெண்ணுக்கும் வாய்ப்பு வழங்கியதில்லை. 1991ஆம் ஆண்டு 10வது தமிழகச் சட்டமன்றத்தில் முதல் முதலாக இரண்டு பெண்களுக்கு வாய்ப்பு கிடைத்தது. சேப்பாக்கம் தொகுதியில் காங்கிரஸ் சார்பாகப் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜீனத்ஷெரிஃபுதின் மற்றும் அரவக்குறிச்சி தொகுதியில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற மரியமுல் ஆசியா ஆகியோர்.  அதன் பிறகு 2006இல் திருவல்லிக்கேணி தொகுதியில் அதிமுக வேட்பாளர் பதர் செயித். இதன் பிறகு 2016ஆம் ஆண்டு வாணியம்பாடி தொகுதியில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற நிலோஃபர் ஆகியோர் குறிப்பிடத்தக்கது. அவர் ஜெயலலிதா அமைச்சரவையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராகவும் இருந்தார். எனவே முதல் முஸ்லிம் பெண் அமைச்சரும் ஆவார். நிலோஃபருக்கு அடுத்த தேர்தலில் அதிமுகவிலிருந்து வாய்ப்பு கிடைக்கவில்லை. இதுவரை தமிழகச் சட்டமன்றத்தில் நுழைய நான்கு முஸ்லிம் பெண்களுக்கே வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதில் மூன்று பேர் அதிமுகவிலிருந்தும், ஒருவர் காங்கிரஸ் கட்சியின் பிரதிநிதியும் ஆவர். மக்களவைக்கு ஒரு முஸ்லிம் பெண் பிரதிநிதியும் தமிழகத்திலிருந்து செல்லவில்லை.

இப்படியாக முஸ்லிம்களின் பிரதிநிதித்துவமும், குறிப்பாக முஸ்லிம் பெண்களின் பிரதிநிதித்துவம் ஆய்வு தளங்களிலும், அரசியல் தளங்களிலும் பேசுபொருளாகி இருக்கிறது. வர்ணாசிரம படிநிலையில் பார்ப்பன பெண்களே சூத்திரர்களாகத்தான் கருதப்படுகிறார்கள். எனவே பார்ப்பனப் பெண்களுக்கு அரசியல் உரிமை கிடைக்க வேண்டும் என்பதும் சமூகவிடுதலைக்கான ஒரு பகுதியாகவே பார்க்க முடிகிறது. ஆண்கள் அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் போது ஏன் இத்தகைய கேள்விகள் எழுப்பப்படவில்லை என்பதும், அதே வேலையில் சமூகப் பொருளாதார ரீதியில் பின்தங்கி இருக்கிற முஸ்லிம் பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தில் அரசுகள் அக்கறை கொள்ளாமல், அவர்களின் முன்னேற்றம் குறித்து வெறுமனே பேசி வருவதெல்லாம் ஏமாற்று வேலையே அன்றிவேறில்லை.

பெண்களுக்கு வழங்கப்பட்ட 33 சதவீத இட ஒதுக்கீடும் மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் எல்லை நிர்ணயம் செய்யப்பட்ட பிறகே  வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. எனவே அடுத்த தேர்தலிலும் இந்தச் சட்டம் அமல்படுத்தப்படுமா என்பது சந்தேகமே. அவசர அவசரமாகக் கொண்டுவரப்பட்ட இந்த மசோதா ஒரு கண் துடைப்பாகவே பார்க்க வேண்டி இருக்கிறது. எனவே கட்சிப் பொறுப்புகளிலும், கட்சியின் வேட்பாளர் பட்டியலிலும் பெண்களின் பங்கேற்பை உறுதி செய்ய வேண்டியது கட்சிகளின் கடமையாகும். கட்சிகளில் கொடுக்கப்படும் இட ஒதுக்கீடும் பெண்களின் அரசியல் பங்கேற்பில் அதிக மாற்றத்தை ஏற்படுத்தியதற்கான முன்னுதாரணங்கள் உள்ளன. இந்தியாவில் திரிணாமுல் காங்கிரஸ், பிஜு ஜனதா தளம் போன்றவை இத்தகைய முன்னெடுப்பை எடுத்துச் சாதித்திருக்கின்றன. அத்தகைய முன்னெடுப்புகளை மற்ற கட்சிகள் செயல்படுத்த வேண்டும்.

முன்னரே குறிப்பிட்டது போலப் பெண்களின் அரசியல் பங்கேற்பிற்குப் பின்னால் இருக்கக்கூடிய பண்பாட்டு இடையூறுகளைக் கேள்வி கேட்காமல், அடையாளப்படுத்தாமல், கட்டுடைக்காமல் முழுமையான தீர்வைப் பெற முடியாது. எனவே பாலின, பொருளாதார, ஆதிக்கக் கருத்தாக்கங்கள் களைவதற்கான பண்பாட்டு முன்னெடுப்புகளை அரசியல் கட்சிகள், இயக்கங்கள் செயல்படுத்த வேண்டும். பாலினச் சமத்துவம் என்பது பெண்களுக்கானது மட்டுமல்ல சமூக நீதி சமூகம் அமைவதற்கே.

படைப்பாளர்:

மை. மாபூபீ

சென்னைப் பல்கலைக்கழகம் இதழியல் மற்றும் தொடர்பில் துறையில் முனைவர்பட்ட மாணவி. அரசியல், சமூகம் பெண்ணியம் சார்ந்த கட்டுரைகளை எழுதிவருகிறார். தீக்கதிர் நாளிதழ், கீற்று, Thenewslite போன்ற இணையதளங்களில் கட்டுரைகள் வெளிவந்திருக்கின்றன.