எது வீரம்?

குழந்தை வினோத்துக்கு ஒரு வயது ஆகும்போது, சாமியாராவதற்காக வீட்டைவிட்டு ஓடிப் போகிறான் சவுந்தரியின் கணவன் பிரபு. காதல் கல்யாணம். அதனால் பெற்றோரிடமும் சென்று நிற்க வழியில்லை. ஆனாலும், சமூகத்தின் அழிச்சாட்டியங்களைத் தாண்டி, பதிமூன்று ஆண்டுகளாக நேர்மையுடனும் துணிவுடனும் தன் ஒரே மகனை வளர்க்க கம்பீரமாக உழைத்து வாழ்கிறாள் சவுந்தரி. இவ்வளவுதான் பூ விற்கும் சவுந்தரியின் வாழ்க்கை வரலாறு. இவ்வளவுதான் என்று நாம் சர்வசாதாரணமாக சொல்லிவிட்டாலும் அது ஒன்றும் அத்தனை சுலபமானதல்ல.

ஆதி காலம் தொட்டு, பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியல் சீண்டல் என்கிற வன்கொடுமையைத் தாண்டிவராத பெண்கள் இப்பூவுலகில் இருக்க சாத்தியமே இல்லை. அது செய்கையாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. வார்த்தை, ஜாடை என எந்த விதத்திலாவது இந்த பாலியல் சீண்டலை பெண்கள் கடந்தே வந்திருப்பார்கள். கடந்து கொண்டிருப்பார்கள். இனியும் கடப்பார்கள்.

இதில் படித்த பெண், படிக்காத பெண், ஏழை, பணம் படைத்தவள், மாற்றுத்திறனாளி என்ற எந்த வித்தியாசமும் இல்லை. அதிலும் கணவனை இழந்தவர்கள், கணவனை பிரிந்தவர்கள் போன்ற பெண்களின் நிலைமையை சொல்லவே வேண்டியதில்லை. எந்நேரமும் மேலே பாய காத்திருக்கும் ஓநாய்களுக்கு மத்தியில்தான் இப்பெண்களின் வாழ்க்கையே.

இந்த விஷயங்களைக் கடந்து தன் பிள்ளைகளுக்காக, பெற்றோருக்காக என உழைத்து மாளும் ஒவ்வொரு பெண்ணும் இந்த சமுதாயத்தின் நாயகிகள்தாம். சவுந்தரி கதையில் வரும் சவுந்தரியும் அந்த வகையில் முக்கியமான கதாநாயகிதான்.

உணவின்றி உண்ணாமை பட்டினி. அறுசுவை உணவு கைத்தொடும் தொலைவிலிருந்தும் உண்ண மறுப்பதுதான் உண்ணாவிரதம். ஓர் ஆண் சாமியாராகப் போய் ஆசிரமத்தில் அமர்ந்துகொள்வதில் என்ன பெரிதாக சவால்கள் இருந்துவிடப் போகின்றன? பெண்ணுக்குத்தானே அத்தனை சவால்களும்.

பிரபு அவளிடமிருந்து விலகியபோது சவுந்தரிக்கு வயது இருபத்தொன்று மட்டுமே முடிந்திருந்தது. எஸ்டிடி பூத், லேப், ஜெராக்ஸ் சென்டர், மாநில அரசு அலுவலகத்தில் என்எம்ஆர் டைப்பிஸ்ட் என வரிசையாக நிறைய பாதைகள் திறந்த பிறகும் அவளே அதை மூடி கொண்டதற்குக் காரணம் ஆண்களின் கைநீளம் என சொல்லித் தெரியவேண்டுமா என்ன?

அவள் கணவன் பிரபுவோ, இனிமையான தன்னுடைய இல்லற வாழ்க்கையை அவனே வெறுத்து ஒதுக்கிப்போனான். சவுந்தரி தன் இல்லறத்தை ஒருபோதும் வெறுக்கவும் இல்லை; ஒதுக்கவும் இல்லை. ஆனால், மகனையே தன் உலகமாக்கிக் கொண்டு தன் ஆசைகளிலிருந்து தன்னை வெளிக்கொண்டுவந்து தனக்குத் தானே தீட்சை அளித்துக்கொண்டு அவள் துறவறம் மேற்கொள்ள வேண்டி இருந்தது.

பாகுபலி படத்தில் ‘எது வீரம்?’ என கதாநாயகன் கேட்பது போல, உண்மையில் எது துறவறம்? இளவயது மனைவியையும் பச்சிளங்குழந்தையையும் நடுரோட்டில் தவிக்கவிட்டுவிட்டுப் போவதா துறவறம்? அதற்கு என்ன பெரிதாக தைரியம் வேண்டி இருக்கிறது? புலன்களை அடக்கி, மனதை கல்லாக்கி அனைத்தையும் துறந்து எண்ணம் முழுதும் பிள்ளையை நிரப்பி, உழைப்பை உடலில் நிரப்பிக்கொண்டு ஓடும் சவுந்தரி போன்றவர்கள்தாம் உண்மையான துறவிகள். இதுதான் உண்மையில் துறவறம். இதுதான் உண்மையில் வீரம்.

Kalaiselvi
கலைச்செல்வி

சிறுகதை: சவுந்தரி
தொகுப்பு: சித்ராவுக்கு ஆங்கிலம் தெரியாது
ஆசிரியர்: கலைச்செல்வி
வாசக சாலை வெளியீடு

சவுந்தரி கதையை இங்கே படிக்கலாம்

திலகவதியின் வதம் சிறுகதை பற்றிய கட்டுரையை இங்கே படிக்கலாம்

கட்டுரையாளர்:

ஸ்ரீதேவி மோகன்

ஏழு ஆண்டுகால பத்திரிகையாளரான ஸ்ரீதேவி மோகன், குமுதம், தினகரன் உள்ளிட்ட இதழ்களில் பணியாற்றியிருக்கிறார். 2015ம் ஆண்டு மலேசியாவில் நடைபெற்ற ஒன்பதாம் உலகத் தமிழ் மாநாட்டில் கலந்துகொண்டு ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்துள்ளார். 2018-ம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற ‘தமிழ் இலக்கியத்தில் மதம், சமூகம்’ பற்றிய சர்வதேச மாநாட்டில் பங்கேற்று ஆய்வுக்கட்டுரை அளித்துள்ளார். எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரி மற்றும் திருவையாறு ஐயா கல்விக்கழகம் இணைந்து நடத்திய எட்டாவவது தமிழ் மாநாட்டில் ஆய்வறிக்கை சமர்ப்பித்துள்ளார்.