ஹாய் தோழமைகளே,

புத்தாண்டு மற்றும் மகளிர் தின நல்வாழ்த்துகள்.

ஒரு சிறிய இடைவேளைக்குப் பிறகு உங்களைச் சந்திப்பதில் ஆகச் சிறந்த மகிழ்ச்சி. ‘உன்னை அறிந்தால்’ தொடரில் நாம் வாழ்க்கைக் கல்வியைப் பற்றி நிறைய பேசினோம். அதில் மிகவும் முக்கியமான ஒரு சவால் ‘உணர்வுகளைச் சரியாகக் கையாள்வதுஉணர்வுசார் நுண்ணறிவு (EQ)’ அதைப் பற்றி விரிவாக இந்தத் தொடரில் விவாதிப்போம்.

உணர்வு சார் நுண்ணறிவு என்பது,  ‘உணர்வுகளை உணரும் ஆற்றல், சிந்தனையை ஊக்குவிக்கும் வண்ணம் உணர்வை ஒருங்கிணைத்தல், உணர்வுகளைப் புரிந்து கொள்ளுதல் மற்றும் தனிப்பட்ட நபரின் வளர்ச்சியை முன்னேற்றும் வகையில் அவற்றைச் சீரமைப்பது.’

இதைப் பற்றி ஆரம்பக் காலத்தில் நிறைய ஆராய்ச்சியாளர்கள் பேசி இருந்தாலும் EQ வை பிரபலபடுத்தயது டேனியல் கோல்மேன் எழுதிய ‘Emotional intelligence why it can matter more than IQ’ என்கிற புத்தகம்தான். இன்று EQ பற்றி எழுதும் / பேசும்  எவரும் இவர் வழிகாட்டுதலை மேற்கோள் காட்டாமல் இருக்க முடியாது.

நான் மிகச்சிறந்த அறிவாளி, மிக நல்ல வேளையில் இருக்கிறேன் / வெற்றிகரமான வியாபாரத்தை நடத்துகிறேன், எனக்கு இந்த EQ எல்லாம் தெரியாது, எதற்குத் தெரிய வேண்டும் என்று நீங்கள் நினைக்கலாம்.

வாழ்க்கையின் உயரத்திற்கு EQ வைப் பற்றித் தெரியாமலே செல்வது வேண்டுமானால் சாத்தியப்படலாம். ஆனால், அதைத் தக்க வைத்துக்கொள்ள, அனுபவிக்க, நிறைவான வாழ்க்கை வாழ EQ மிகவும் இன்றியமையாதது. இப்போதெல்லாம் தலைமைப் பண்பு தேவைப்படும் வேலைகளுக்கும் EQ ஓர் அவசிய பண்பாகப் பார்க்கப்படுகிறது.

மிகவும் வெற்றிகரமான, வசதிக்குக் குறைச்சல் இல்லாத நடிகைகள் பலர் அவர்கள் தொழில் உச்சத்தில் இருந்த போதே வாழ்வை முடித்துக் கொண்ட சோகத்தை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். சராசரி மனிதனின் கவலைகள் ஏதுமில்லாத, நினைத்த வாழ்க்கையை வாழ வசதி இருந்தவர்கள் வாழ்வை முடித்துக்கொள்ள நினைத்தது ஏன்?

மிகவும் கஷ்டப்பட்டு உழைத்து IIT போன்ற பெரிய கல்வி நிறுவனங்களில் இடம் கிடைத்தும் சில சூழல்களால் தற்கொலையைத் தேடிக்கொண்ட குழந்தைகளைப் பற்றிப் படிக்கிறோம். நிச்சயமாக அவர்களின் அறிவு சராசரிக்கும் உயர்ந்தது, கடின முயற்சி இல்லாவிடில் அவர்கள் அந்தக் கல்வி நிறுவனத்தில் இடம்பிடித்திருக்க முடியாது. ஆனாலும் ஏன் இந்த முடிவு ?

எத்தனையோ குழந்தைகள் 10 / 12 தேர்வு முடிவுகள் வரும்போது தோற்றுவிடுவோம் என்கிற பயத்திலோ தோற்றுவிட்டாலோ வீட்டை விட்டு வெளியேறுவதையும் அல்லது தவறான முடிவைத் தேடிக்கொள்வதையும் ஒவ்வொரு வருடமும் பார்க்கிறோம்.

கேரளாவில் ஒரு மருத்துவர் வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்டபோது, ஒரு மருத்துவர் ஏன் இது போன்ற முடிவெடுத்தார் என நம்மில் பலருக்கு அதிர்ச்சி.

சமீபத்தில் பெங்களூருவைச் சேர்ந்த ஒரு பெண் சிஇஓ தனது 4 வயது குழந்தையைக் கொன்ற குற்றத்திற்காக கோவாவில் கைது செய்யப்பட்டார். நினைத்தாலே பதற வைக்கும் செயலைச் செய்தவருக்கு எந்த அளவு மன அழுத்தம் இருந்திருக்கும் என ஊகிக்க முடிகிறது.

ஆனால், இதெல்லாம் கண நேர உணர்வின் உச்சத்தில் எடுக்கும் முடிவுகள், அந்தக் கணத்தைத் தாண்டிவிட்டால் இந்த எண்ணத்தின் தாக்கம் குறையும்.

கோபத்தில் மனைவியை அடித்துக் கொன்ற கணவர் என்று செய்தி பார்க்கிறோம். இதற்கெல்லாம் அந்த நேரத்து உணர்வின் உச்சத்தைக் கையாள முடியாமல் போவதே காரணம்.

தத்துவ மேதை அரிஸ்டாட்டிலின் கூற்றுபடி,

யார் வேண்டுமானாலும் கோபப்படலாம், அது மிக சுலபம். ஆனால், சரியான நபரிடம், சரியான நேரத்தில், சரியான காரணத்திற்காகச் சரியாக அதை வெளிப்படுத்துவது கடினம்.’

இதை நாம் தினசரி வாழ்வில் உணர்ந்திருப்போம். பல நேரம் கோபத்தின் உச்சியில் வார்த்தைகளைக் கொட்டிவிட்டுப் பின் அப்படிப் பேசாமல் இருந்திருக்கலாமோ எனப் பல முறை மறுகியிருப்போம்.

சிறிய வயதில் படித்த ஒரு கதை நினைவுக்கு வருகிறது.

தந்தையின் புதிய காரில் ஏதோ கிறுக்கிய சிறுவனை, தந்தை கோப மிகுதியால் தண்டிக்க அவனுக்கு விரல்கள் உடைந்துவிட்டன. கோபம் குறைந்த பின் குற்ற உணர்ச்சியில் தத்தளித்த தந்தை, சிறுவன் என்ன கிறுக்கினான் எனக் காணச் சென்றார்.‘World’s best father’ எனக் கிறுக்கி இருந்தான். அவர் குற்ற உணர்ச்சி வாழ்நாள் முழுக்க நீடித்திருக்கும் எனச் சொல்லவே தேவையில்லை. அந்த ஒரு நிமிடம் நிதானித்திருக்கலாம்.

கோபம் மட்டுமல்ல ஒவ்வோர் உணர்வுமே சரியான விதத்தில் வெளிப்படும்போதுதான் வேண்டிய பலனைத் தரும். இல்லையெனில் நாம் இந்தச் சமுதாயத்தில் இருந்து விலகி நிற்போம் அல்லது சமுதாயம் நம்மை விலக்கிவிடும்.

ஒரு சமூக அநீதியைக் காணும் அரசன், தீர்வு காண முயல்கிறான். கவிஞன், அந்தக் கோபத்தைக் கவிதையாக வெளிபடுத்துகிறான். ஓவியன், ஓவியமாக. எழுத்தாளர் தன் எண்ணத்தை எழுத்தில் பதிவு செய்கிறார். இதுவும் கோபத்தை வெளிபடுத்தும் முறைதான், இதனாலும் நிச்சயம் சமூக மாற்றம் வரும். ஆனால், இவையெல்லாம் ஆரோக்கியமான முறை.

எந்த உணர்வும் அது மகிழ்ச்சி, துக்கம், கோபம், பயம் எதுவாகினும் அதன் அளவு கூடும்போது அது நமது நடவடிக்கைகளைப் பாதிக்கிறது. அப்போது நாம் அதை வெளிப்படுத்தும் வழி பின்னாளில் நம்மை வருந்த வைக்கலாம் அல்லது மாற்ற முடியாத இழப்பை உண்டு பண்ணலாம். அந்தந்த நேரத்து உணர்வைச் சரியாகக் கையாள்வதின் மூலம் இதைத் தவிர்க்க முடியும்.

காதலன் திரைப்படத்தில் நாயகனுக்கு அவரின் அப்பா ஓர் அறிவுரை கூறுவார். மகிழ்ச்சியோ துக்கமோ கோபமோ உள்ளுக்குள் தோன்றும்போது ஒரு 1 நிமிடம் அமைதியாக இருந்து பின்னர் வெளிபடுத்துவது நல்லது.

இதுதான் EQ வில் பாலபாடம் எனலாம். எல்லா உணர்வுகளும் ஒரு விருந்தாளி போலதான், வருவதைப் போலவே போகவும் செய்யும். இடைப்பட்ட நேரத்தில் எந்தச் சேதாரமும் நடவாமல் இருக்க நாம் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றுதான், அந்த peak point கடக்கும் வரை அமைதியாக இருப்பது.

கோபம், துக்கம் சரி, மகிழ்ச்சி கூடவா என நீங்கள் கேட்பது புரிகிறது. ஆம் மகிழ்ச்சியும் அளவு மீறும் போது ஆபத்தானதே.

நிறைய இதிகாசங்களில் அரக்கர்கள் அசுர தவம் செய்து இறைவனை மகிழ்விப்பர். அவரும் மகிழ்ந்து வேண்டிய வரம் தருவதாக வாக்களித்துப் பின் சிக்கலில் மாட்டிக்கொள்வர். அவர் கடவுள் தானே வரம் குடுத்தால் பின்னால் பிரச்னை வரலாம் என்று அவருக்குத் தெரியாதா என உங்களுக்குத் தோன்றலாம், நானும் அப்படித்தான் முதலில் நினைத்தேன்.

ஆனால், இது உண்மையில் நடந்ததா, இல்லையா என்று யோசிப்பதைவிட அது தரும் பாடத்தை மனதில் ஏற்றிக்கொள்ளலாம். கடவுளே ஆனாலும் மிகவும் மகிழ்ந்திருக்கும்போது யாருக்கும் வரமளிக்காதது நலம். பின் சாதரண மனிதர்களான நாம்?

பயமும் ஒரு தீவிர உணர்வு. பய உணர்வு மேலோங்கும் போது பதற்றத்தில் அறிவு வேலை செய்வதில்லை. அந்த ஆபத்தில் இருந்த தப்ப வேண்டுமென உடலில் உள்ள சக்தி முழுக்க உதவிக்கு வந்தாலும் மூளை செயல்படாவிடில் தப்புவது கடினம்.

கிராமத்தில் நிறைய பாம்புக்கடி மரணங்களைக் கேள்விப்பட்டு இருப்போம். அதில் பல நிஜமான பாம்பு கடித்திருக்காது. வேறு பூச்சியோ முள்ளோ காயப்படுத்தி இருந்தாலும் அது பாம்பு கடித்தது என எண்ணும் போதே நம் உடலில் அந்த ரசாயனங்கள் சுரந்து மரணம் நிகழ்கிறது. நிஜமான பாம்புக்கடிக்குக்கூடக் குறிப்பிட்ட கால கெடுவிற்கு முன்னதாக மருந்து கொடுத்து விட்டால் பிழைக்கலாம். ஆனால், பயம் தரும் விளைவு அதிகம்.

அதேபோல நன்றி உணர்வும் ஒரு தீவிர உணர்வு.

ராமாயணத்தில் கைகேயி போரில் வெற்றி பெற உதவியதற்கு, தசரதன் பொன்னும் பொருளும் தந்திருக்கலாம் நாட்டின் சிறு பகுதியைக்கூடத் தந்திருக்கலாம். ஆனால், எப்போதும் expiry ஆகாத இரண்டு வரம், அதுவும் என்னவென்றே தெரியாமல் அதை நிறைவேற்றுவதாக வரமளித்ததுதான் பின்னாளில் தசரதனின் உயிரைக் குடித்தது.

இது அத்தனையும் நமக்குச் சொல்லும் பாடம் ஒன்றுதான், உணர்ச்சி மிகும்போது அதை அமைதியாகக் கடப்பதும் அதை நம் நன்மைக்குப் பயன்படுத்துவதும்தான்.

EQ என்பது உணர்வைக் கட்டுப்படுத்துவது மட்டுமல்ல, நாம் ஒரு விஷயத்தைப் பார்க்கும் முறையையே மாற்றுவது. அதன் பல படிகளில் ஒரு படிதான் கட்டுக்கடங்காத உணர்வுகளால் வரும் பின்விளைவுகளைத் தெரிந்துகொண்டு எச்சரிக்கையாக இருப்பது.

இனி வரும் வாரங்களில் அதை விரிவாகக் காண்போம்

படைப்பாளர்:

யாமினி

வாழ்க்கைக் கல்வி மற்றும் மென்திறன் பயிற்சியாளர், இயற்கை விரும்பி, நெகிழி ஒழிப்பு ஆர்வலர், திடக் கழிவு மேலாண்மை பயிற்சியாளர். பயிலரங்குகள் நடத்துகிறார். உறவு மேலாண்மை தனிபட்ட ஆலோசகர். குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு விழிப்புணர்வை உருவாக்குவதின் மூலமே நாட்டின் நலம், இயற்கை வளம், சரிவிகித சமுதாயத்தை அடைய முடியுமென்று தீவிர நம்பிக்கை உள்ளவர். எல்லாச் சூழ்நிலைகளிலும் வாழ்தலைக் கொண்டாடுபவர்.

’உன்னை அறிந்தால்…’ என்கிற தலைப்பில் ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய தொடர், ஹெர் ஸ்டோரிஸ் வெளியீட்டில் புத்தகமாக வெளிவந்து, வரவேற்பைப் பெற்று இருக்கிறது.